Friday, February 7, 2014

''சரத் தவறை உணர்ந்து திரும்பி வந்துவிடுவார்!'' சரத் மனைவி பேட்டி Vikatan

புது மாப்பிள்ளை’ என்று சினிமா வட்டாரத்தில் சரத்குமார் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்...
'நடிகை நக்மாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்’ என்று தமிழக முதல்வருக்கு இவர் மனைவி சாயாதேவி கடிதம் எழுதியதாகச் செய்திகள். 'சரத்குமாரிடம் இருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துவிட்டார்’ என்றும் பேச்சு. இது தவிர, விதவிதமான வதந்திகள் - சரத்குமாரின் குடும்ப வாழ்க்கைபற்றி!
சரத்தின் கொட்டிவாக்கம் பங்களாவில் இருந்து பிரிந்து வந்து, தன் இரண்டு மகள்களுடன் சாயா தேவி தனியே வசிக்கிறார். மறைக்க முயன்றாலும் முடியாத மென்சோகம் இழையோட சற்று சங்கடமாகச் சிரிக்கிறார் சாயா. இளையமகள் பூஜா எங்கோ வெளியில் சென்றிருக்க... மூத்த மகள் வரலட்சுமி, ஹாலின் மூலையில் அமர்ந்து கம்ப்யூட்டர் கேமில் லயித்து இருந்தார்!
''வருகிற செய்திகளில் எந்த அளவு உண்மை?''
''அவரைப்பற்றி இப்படிச் செய்திகள் வருவது இது முதல் தடவை இல்லையே! அது நிஜமோ பொய்யோ - அது அந்தப் பெண்ணுக்கும் அவளால் காதலிக்கப்படுகிற ஆணுக்கும் மத்தியில் இருக்கிற ஒரு பர்சனல் விஷயம். அதைப்பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன்? சரத் போன்ற ஒரு ஆணிடம் பெண்களுக்குக் கவர்ச்சியும் காதலும் உண்டாவது இயல்புதான். அதேபோல், ஒரே சமயத்தில் நூறு பெண்களைக் காதலிக்கிற உரிமை அவருக்கும் இருக்கிறது. ஒரு நடிகருக்குப் பெண்களின் நட்பு இருப்பது தவிர்க்க முடியாதது கூட. ஆனால், சரத் விஷயத்தில் இதெல்லாம் வெறும் வதந்திகளாகவே இருந்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை!''
''கணவரை விட்டுப் பிரிந்து வந்து வாழ்கிற அளவுக்கு கடைசியாக என்ன நடந்தது?''
''பழைய விஷயங்களைப்பற்றிப் பேசவேண்டாமே. நானும் என் இரு குழந்தைகளும் சரத்தை விட்டுத் தனியாக வந்திருக்கிறோம் என்பது உண்மைதான். இதைப் பிரிவு என்று சொல்ல முடியாது. இல்லறத் தில் ஒரு சின்ன இடைவேளை! இந்த இடைவேளை சரத்துக்கு மட்டுமல்ல... எனக்கும்கூடத் தேவை தான்னு தோணுது. குழந்தைகளும் அப்பா நீண்ட நாட்களுக்கு வெளியூருக்கு ஷூட்டிங் போயிருப்ப தாகத்தான் 'ஃபீல்’ பண்றாங்க!''
''சினி ஃபீல்டைப் பொறுத்த வரை டைவர்ஸ், மறு கல்யாணம் எல்லாம் சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. உங்கள் சொந்த வாழ்க்கை யிலும் இதெல்லாம் நடந்துவிடும் என்ற அச்சம் இருக்கிறதா?''
''ஒரு கணவனோ அல்லது மனைவியோ விவாகரத்து கேட்பது என்பது, ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் பிரிய நினைப்பது மட்டுமே என்ற அளவோடு நான் அர்த்தம் கொடுக்க மாட்டேன். அடுத்த திருமணத்துக்குத் தனது லைஃப் பார்ட்னரிடம் பர்மிஷன் கேட்பதற்குப் பெயர்தான் விவாகரத்து. ஆகவே, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நான் வழக்கு போட்டதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. அவரும் அந்த அளவுக்குப் போக மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தனித் தனி வீட்டில் இருப்பதால் சரத் எனது கணவர் இல்லை என்றோ, நான் அவருக்கு மனைவி இல்லை என்றோ அர்த்தமாகிவிடுமா? இந்த இடை வெளியில் இருந்துகொண்டே... அவரை நான் மனதாரக் காதலிக்கிறேன். ஒருவேளை, ஏதாவது காரணங்களால் எங்கள் உறவில் விரிசல் வந்தாலும் சரத், நான் என்றைக்கும் மதிக்கும் நண்பராகத்தான் இருப்பார்!''
''நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக நடிகர் கள், தங்களது சில சொந்த விருப்பங்களைத் தியாகம் செய்யவும் வேண்டி இருக்கிறது. உங்கள் கணவர் அப்படிச் செய்யக்கூடியவர்தானா?''
''அப்படி டிமாண்ட் செய்யும் உரிமை ரசிகர் களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். மனோ தத்துவம் தெரிந்தவள் என்கிற முறையில் சொல்கிறேன், 'இதைச் செய்யக் கூடாது - இதைத் தான் செய்யணும்’னு எந்த ஒரு மனிதனையும் இன்னொருவர் டிக்டேட் செய்வது நியாயம் இல்லை. கணவராக இருந்தாலும்கூட, அவரோட தனி மனித சுதந்திரத்தில் மனைவி தலையிடுவது தப்புதான்! ஆகவே, நான் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அவருக்கு விதிக்க முடியாது. எல்லாத்துக்கும் மேலாக, சரத் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வார்!''
''அப்படியானால், முதல்வரிடம் 'கணவரை மீட்டுத் தாருங்கள்’ என்று நீங்கள் முறையிட்டதாக வரும் செய்திகள்?''
''நான் அப்படிச் செய்யவில்லை! சரத் ஒரு Magnificent நடிகர் மட்டும் இல்லை... மிக அபூர்வமான மனிதர்! என்னைப் பிரிந்து இருப்பது மட்டும்தான் அவர் செய்த தவறு. அந்தத் தவறை உணர்ந்து நிச்சயம் திரும்பி வந்துவிடுவார். நான் அவருடன் சேர்ந்துவிடுவேன். அந்த நாளுக்காகத்தான் நானும் என் குழந்தைகளும் காத்திருக்கிறோம்!'' - மீண்டும் இடைவெளி விட்டவர், சற்றுத் தொலைவில் இருந்த மகளைப் பார்த்தார். குரலை மிகவும் தணித்துக் கொண்டவராகப் பேசினார்.
''உங்களிடம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்... நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். தயவுசெய்து தவறாக ஏதும் எழுதி, எங்கள் உறவைக் காயப் படுத்திவிடாதீர்கள். நானும் குழந்தைகளும் இங்கே சந்தோஷமாக இருக்கிறோம்... நாங்கள் இங்கே கஷ்டப்படுவதாக மட்டும் எழுதிவிடாதீர்கள், ப்ளீஸ்!'' - உதடுகளைக் கடித்துத் தன்னை அமைதிப் படுத்த முயன்றார். இறுதியாக,
''வேண்டிய அளவு கடவுள் எனக்குப் பணம் கொடுத்திருக்கார்... எல்லா வசதியும் எங்கிட்ட இருக்கு. சுத்தி இருக்கிறவங்களுக்கு முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணணும். உலகத்தில் எத்தனையோ பேர், எவ்வளவு விதமான பிரச்னைகளோட இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் உதவி செய்ய யார் இருக்காங்க, சொல்லுங்க?''- குரல் கம்முகிறது. சாயாதேவியின் கண்கள் பனிக்கின்றன!

- Vikatan

No comments:

Post a Comment