Wednesday, June 22, 2016

தோற்றவர்களின் கதை - 2

தோற்றவர்களின் கதை - 2

- vikatan DOC

சுசி திருஞானம்தொடர்

ங்கிலாந்து ராணியைவிடப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணி அவர். எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் அவர். 

ஆனால், ஒரு காலத்தில் கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகையில் வாழ்க்கை நடத்திய பெண் அவர். மிகவும் அவமானகரமான, அடுக்கடுக்கான தோல்விகளால் புடம்போடப்பட்ட மனிதர் அவர்.

அவரது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்கள் 40 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. 75-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கதைகள் வாசிக்கப்படுகின்றன. எழுத்துலகில் மட்டுமல்ல... திரையுலகிலும் ஹாரி பாட்டர் படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. இன்று, ஜே.கே.ரவுலிங் பற்றி தெரியாதவர்கள் உலகில் குறைவு.அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறினார்: “நாம் தோல்விகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதில்லை. நான் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து நொந்துபோயிருந்த நேரத்தில், வாழ்க்கையில் ஓரளவு வெற்றி பெற்ற யாராவது என்னிடம் வந்து, ‘நீ பல தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.” 

இங்கிலாந்து நாட்டில் 1965-ம் ஆண்டில் பிறந்த ஜே.கே.ரவுலிங், சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார் . அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். 1982-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிய ஜே.கே.ரவுலிங், தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போன ஜே.கே.ரவுலிங், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. மிகப் பெரிய எழுத்தாளர்களின் வரிசையில், தன்னைக் கருதிய ஜே.கே.ரவுலிங், தன்னை முழுநேர எழுத்தாளராகவே மனதுக்குள் கற்பனை செய்து வந்திருந்தார். தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர்.

வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அப்போது கொடுங்கோலாட்சி நடந்த நாடுகளில் இருந்து தப்ப முயன்றவர்களும், தப்பி வந்தவர்களும் எழுதும் அதிர்ச்சிகரமான கடிதங்களைப் படித்துக் குறிப்பெடுத்து வந்தார். மனிதர்கள் எத்தனை மோசமான சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தார். அவர் எழுதிய நாவல்களில் இடம்பெற்ற சில அதீதச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வேலையில் அவர் சந்தித்த அனுபவங்கள் அடிப்படையிலானவை. 

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. மந்திரஜாலப் பள்ளி ஒன்றில் படிக்கும் ஹாரி என்ற சிறுவனைப் பற்றிய காட்சிக் கதைச் சித்திரம் அது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார். 

அவர் தனது பிரமாண்டமான ஹாரிபாட்டர் நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு ஜே.கே.ரவுலிங்கின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை. 

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். 

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மற்ற குழந்தைகள் நிறைய விளையாட்டுப் பொருட்களோடு உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்கும் போதெல்லாம், தன் குழந்தைக்கு எதுவுமே தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது மனதை வலிக்கச் செய்தது. ஏமாற்றங்களும், சுய பச்சாதாபமும் அவரது மனநிலையைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. அவரது குழந்தைக்கு ஒரு சிறிய விளையாட்டுப் பொம்மையை சமூகநலத் துறை ஊழியர் ஒருவர் இலவசமாக வழங்கியபோது, அதனைப் பிடுங்கி குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு அவர் மன அழுத்தத்தில் இருந்தார். 

மன அழுத்தத்தின் உச்சத்தில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு எழுந்ததாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் மன அழுத்தம் குறைந்ததாகவும் அவர் பின்னாட்களில் தெரிவித்து உள்ளார். வறுமையுடன் போராட்டம் ஒருபுறம் இருக்க... துரத்தியடித்த கணவர்,  
ஜே.கே.ரவுலிங்கையும் குழந்தையையும் தேடி இங்கிலாந்து வந்துவிட்டார். போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட அவரால் பெரும் தொந்தரவுகள். அவரிடம் இருந்து மணவிலக்கு பெற ஜே.கே.ரவுலிங் பெரும்பாடு படவேண்டியிருந்தது. 

இத்தனைச் சோதனைகளுக்கு இடையிலும், ஜே.கே.ரவுலிங்கை நம்பிக்கை இழக்காமல் வைத்திருந்தது, அவரது எழுத்துப் பணி மட்டுமே. குழந்தையை எடுத்து வெளியில் சுற்றிவிட்டு, அந்தக் குழந்தை தூங்கும் நேரமெல்லாம் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டார். பூங்காவிலோ, காப்பி கடையிலோ, வீட்டிலோ, வீதியிலோ, எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதித் தள்ளினார்.

“வீடில்லாமல், பணம் இல்லாமல், கணவர் இல்லாமல், கைக்குழந்தையுடன் வாழ்ந்த அந்த நாட்களில் எனது வாழ்க்கை இருள்மயமானதாக இருந்தன. தோல்விகள் என்னைச் சூழ்ந்து நின்றன. அந்தத் தோல்விகள், என்னிடம் இருந்த தேவையற்றவை அனைத்தையும் பறித்து எறிந்து விட்டன. எதை எனது வாழ்க்கையின் தவப் பணியாக நினைத்தேனோ, அதில் மட்டுமே எனது முழு சக்தியையும் ஒன்றுகுவிக்கும்படி, தோல்விகள் என்னை விரட்டின”  என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஜே.கே.ரவுலிங்.

தனது முழு சக்தியையும் திரட்டி ஹாரிபாட்டர் முதல் பாகத்தை எழுதி முடித்தார் ஜே.கே.ரவுலிங். தனக்கு முழு திருப்தி ஏற்படும்வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது ஹாரிபாட்டர் நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த அந்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார் ஜே.கே.ரவுலிங். 

ஹாரிபாட்டர் நாவலின் பிரதியை ப்ளூம்ஸ்பரி பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார். 

ஜே.கே.ரவுலிங்கை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரிபாட்டர் நாவல்கள். தொடர் தோல்விகளைத் தாங்கிக்கொண்டு மனம் தளராமல் உழைத்த ஜே.கே.ரவுலிங்குக்கு வெற்றி மேல் வெற்றி. 

ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.” 

(இன்னும் வெல்வோம்)

Tuesday, June 14, 2016

தோற்றவர்களின் கதை - 1

- vikatan document


தோற்றவர்களின் கதை - 1

சுசி திருஞானம்தொடர்

வமானகரமான படுதோல்விகளைச் சந்தித்த ‘தோல்வியின் சிகரங்கள்’ பற்றி எழுதப் போகிறேன். எல்லா உடைமைகளையும் இழந்தபோதும், எல்லா உறவுகளாலும் பரிகசிக்கப்பட்டபோதும், இலக்கை நோக்கி அசராமல் உழைத்தவர்களின் கதைகளை இங்கே விவரிக்க இருக்கிறேன்.

இவர்களின் பிரமாண்டமான வெற்றியைப் பற்றி மட்டும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், தோல்வி என்ற உலைக்கூடத்தில் இவர்கள் வாங்கிய மரண அடிகள், ரண வேதனைகள், கேவலங்கள் பற்றி யாரும் அதிகம் பேசியது இல்லை. தம்மீது வீசப்பட்ட தோல்விக் கற்களை ஒன்றுகுவித்து, படிக்கட்டுகளாக எப்படி இவர்கள் மாற்றினார்கள் என்பதை மட்டுமே இங்கே விவரிக்க இருக்கிறேன்.

ஹோண்டாவின் வெற்றிப் பயணம்!

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா. “தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்​டக்காரன்” என்று கேலி பேசினர் அவனது நண்பர்கள். 

அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா. தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.” 

டொயோட்டா கம்பெனிக்கு பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார். 

ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் டொயோட்டா கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “அருமை” என்று பாராட்டி ஏற்றுக்​கொண்டது. தயாரிப்புக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.  அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமென்ட்கூட கிடைக்க​வில்லை. 

“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு” - அப்பா. 

“வாழ்க்கை முழுவதுமா ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாய்?” - உயிர் நண்பன். 

தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது. 

கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்​டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்​களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்​சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.  

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா.    இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஹோண்டா தனது அப்போதைய நிலைமை பற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்... இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டா​வுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய​போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.  அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.

‘‘அதேபோன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர்.  ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: “வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

(இன்னும் வெல்வோம்)

சுசி திருஞானம்: ஊடகத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ‘கிட்ஸ் புன்னகை’, ‘ஜீனியஸ் புன்னகை’ கல்வி மாத இதழ்களின் ஆசிரியர். சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். 

‘என்.டி.டி.வி - விஜய் செய்திகள்’, ‘சன் நியூஸ்’ சேனல் ஆகியவற்றின் முன்னாள் செய்தி ஆசிரியர். ‘வெற்றியின் அறிவியல்’, ‘நேர நிர்வாகம்’, ‘உனக்குள் ஒரு மேதை’ ஆகிய நூல்களை எழுதியவர். ஆக்கபூர்வமான ஊடகவியலாளர் என்று டாக்டர் அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்

- vikatan article