Wednesday, May 14, 2014

உணவு யுத்தம்! - 5

உணவு விதிகள்
 என்ன சாப்பிடுவது என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எதிர்நின்று பயமுறுத்துகிறது.
லோ கொலஸ்ட்ரால், ஹை புரோட்டீன், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், பாலிபினைல், ஃபோலிக் ஆசிட், குட் கொலஸ்ட்ரால் என்று ஏதேதோ சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறார்கள்.
போன வாரம் வரை நல்லெண்ணெய் சாப்பிட வேண்டாம் என்று சொன்ன டாக்டர், இந்த வாரம் சூரியகாந்தி எண்ணெய் வேண்டாம்; நல்லெண்ணெய் சாப்பிடுங்கள் என்கிறார். ஒரு டாக்டர் வேர்க்கடலையை விரும்பி சாப்பிடுங்கள் என்கிறார். மற்றவரோ, வேர்க்கடலையைக் கண்ணால்கூட பார்க்கக் கூடாது என்கிறார்.
ஊடகங்கள் ஒருபக்கம் விதவிதமாக சமைத்துச் சாப்பிடுங்கள் என்கிறது. மறுபக்கம் எதைச் சாப்பிடுவதாக இருந்தாலும் இதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் என்று சொல்லிப் பயமுறுத்துகிறது.
என் வீட்டில் காகங்களுக்குச் சாப்பாடு வைப்பது வழக்கம். அதனால் காகங்களின் இயல்பை நெருக்கமாக அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. சென்னை காகங்கள் விநோதமானவை. இவை இட்லி, தோசை, சோறு போன்ற எதையும் சாப்பிடுவது இல்லை. நூடுல்ஸ், சிப்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை மட்டுமே சாப்பிடுகின்றன. பலமுறை தட்டில் சோற்றை வைத்து கா... கா... என அழைத்தாலும் நெருங்கி வந்து நுகர்ந்துகூட பார்ப்பது இல்லை. இதற்கு மாறாக எண்ணெய் பலகாரங்கள் எதை வைத்தாலும் உடனே பறந்துவந்து சாப்பிடுகின்றன. காகங்கள் கூடவா சென்னையில் துரித உணவுகளுக்குப் பழகிவிட்டன என்று ஆதங்கமாகவே இருக்கிறது.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவே போதுமானது என்கிறது தேரையர் எழுதிய பதார்த்த குண சிந்தாமணி. இது 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மருத்துவ நூல். மூன்று வேளை உணவு தேவை என்றால், முதல் உணவை சூரிய உதயத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள் சாப்பிட வேண்டும். இரண்டாவது உணவைச் சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி  நேரத்துக்குள்ளும் மூன்றாவது வேளை உணவைச் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்துக்குள்ளும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறது இந்த நூல்.
பதார்த்த குண சிந்தாமணி, ஓர் அரிய மருத்துவ நூல். வாழ்வியலுக்கு வழிகாட்டும் இந்தப் புத்தகத்தில் தண்ணீரின் வகை, காய்கறிகளில் என்ன சாப்பிடலாம், ஏன் சாப்பிட வேண்டும், எப்போது எப்படி உறங்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதோடு உணவின் வகைகள், பழங்களின் வகைகள், உலோக வகைகள், உடலுறவு கொள்வதற்கான நேரம், மனநிலை என சகலமும் ஆராயப்பட்டுள்ளது. உணவு முறைகளைப் பற்றிய நமது பராம்பரிய அறிவு இதுவரை தனித்து தொகுக்கப்படவில்லை. உணவு குறித்து ஆங்கிலத்தில் வெளியாகும் புத்தகங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை மரபான தமிழ் நூல்களுக்கு நாம் தருவது இல்லை.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை நோய் வந்தால்... தேவைப்படும் பத்தியமோ, விலக்க வேண்டிய உணவுகளைத் தவிர்த்தோ சாப்பிடுவார்கள். இன்று நோய்வந்துவிடப் போகிறதே எனப் பயந்து பயந்து சாப்பிடுகிறோம். ஒன்றாம் வகுப்பில் படிக்கும் மாணவன்கூட கண்ணாடி அணிந்திருக்கிறான். சரிவிகித உணவு கிடைக்கவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.
மறுபக்கம் 10-ல் ஐந்து பள்ளிச் சிறுவர்கள் அதிக உடல் பருமன் கொண்டிருக்கிறார்கள். நாலு வயது பையனை டயட் இருக்கச் சொல்லி வீட்டில் மிரட்டுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்னொரு பக்கம் என்ன சாப்பிட்டால் ஞாபக சக்தி வளரும், எது சாப்பிட்டால் மெல்லிடை உருவாகும், எந்த உணவு உயரமாக வளரவைக்கும் என மருத்துவரை நாடிப் போய் கேட்கும் அவலம். மறுபக்கம் சக்கை உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, வீட்டு உணவு என்றாலே ஓடி ஒளியும் பிராயத்துப் பிள்ளைகள். சாப்பாட்டுப் பிரச்னை எல்லோரையும் பாடாய்படுத்துகிறது. நின்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தால் அன்றைய வேலை கெட்டுவிடும் என்று, ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு ஓட ஆரம்பிக்கிறார்கள்.
சாப்பிடுகிறவருக்கு இவ்வளவு சிக்கல் என்றால், சமைப்பவருக்கு இதைவிட சிக்கல். சமைத்த உணவில் பாதி வீணாகிறது அல்லது ஃபிரிஜ்ஜில் வைத்து ஒரு வாரம் சாப்பிட வேண்டியிருக்கிறது. பசிக்கு சாப்பிடுகிறவர்களைவிடவும், சாப்பிடுகிற நேரம் வந்துவிட்டது என்பதற்காகச் சாப்பிடுகிறவர்கள், இன்று அதிகமாகியிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் உணவைப் பெரிதாக நினைப்பது இல்லை.
தனியாகச் சாப்பிடுவதுதான் உடல்நலக் கேட்டில் முதல் பிரச்னை. தனியாகச் சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுகிறோம் என்கிறது உணவு அறிக்கை. ஆகவே, கூடி ஒன்றாகச் சாப்பிடுவதே நல்லது. உணவு வீணாகிறதே என்று நினைத்தால், வயிறு வீணாகிவிடும். இல்லத்தரசிகளில் பலர் மிச்சம் இருக்கிற உணவை எல்லாம் சாப்பிட்டு உடலைப் பருமனாக்கிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
இரண்டுவிதமான உணவு வகைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நவீன உணவு. அதில் அதிகம் துரிதவகை உணவுகள், செயற்கை சுவையூட்டிகளால் தயாரிக்கப்பட்டது. நார்ச்சத்து வைட்டமின் குறைவு, அதிக சர்க்கரை - உப்பு சேர்க்கப்பட்டது. இதனால் உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
மற்றொன்று நமது மூதாதையர் காலம் தொட்டு உண்ணப்பட்டு வரும் பாரம்பரிய உணவு. இது ஊருக்கு ஊர், சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது. இதில் விதவிதமான சுவைகள், ருசிகள் கிடையாது. ஆனால், உடல்நலத்தை மேம்படுத்தக்கூடியது. இந்த உணவு வகைகள் பருவகால மாறுதல்களுக்கு ஏற்ப உடலைச் சீர்செய்யக் கூடியது.
உள்ளூர் காய்கறிகள், இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவது. புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள், சிறு தானியங்கள், காய்கறிகள் பழங்கள் அதிகம் சேர்க்கப்படுபவை. இவை தலைமுறையாகச் சாப்பிடப்படுவதால் கெடுதல் செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்த இரண்டில் எதை நாம் தேர்வுசெய்வது என்பதை நாம் முடிவு செய்வதற்கு பதிலாக சந்தை முடிவு செய்கிறது. பகட்டான விளம்பரங்களும் போலி வாக்குறுதிகளும் கவர்ச்சியான பாக்கெட்டுகளும் மேற்கத்திய உணவே சிறந்தது என்று நம்மிடம் திணிக்கின்றன. இதுதான் இன்றுள்ள முக்கியப் பிரச்னை.
பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள், சமண மதத்தில் உள்ள தீவிர சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள், மரத்தில் இருந்து தானே உதிரும் பழங்களை மட்டுமே உண்பார்கள். பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை சாப்பிட மாட்டார்கள்.
பச்சைக் காய்கறிகள் கொண்ட சாலட் உண்பது உலகெங்கும் நடைமுறையில் உள்ளது, சாலட் என்பது பிரெஞ்சு சொல்லில் இருந்து உருவானது, இதன் லத்தீன் மூலம் சாலடா, அதாவது உப்பிடப்பட்டது, 14-ம் நூற்றாண்டில் இந்த சொல் உருவாக்கப்பட்டது. காய்கறிகளை நறுக்கி அதில் உப்பும் வினிகரும் சேர்த்து தருவதால் அது சாலட் என அழைக்கப்படுகிறது.
கிரேக்கர்களும் ரோமானியர்களும் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சாலடுகளாகத் தயாரித்து சாப்பிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். 19-ம் நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் க்ரீன் சாலட் சாப்பிடுவது புகழ்பெறத் தொடங்கியது. தேவையான காய்கறிகளை உடனடியாகத் துண்டுகளாக்கி சாலட் தயாரிப்பது போய், முன்னதாகவே துண்டிக்கப்பட்டு சுவையூட்டப்பட்ட ரெடிமேட் சாலடுகள் இப்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவியல் அறிஞர் மைக்கேல் போலன் உணவு விதிகள் என்ற புத்தகம் எழுதியிருக்கிறார். நாம் எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான விதிகளை அவர் எளிமையாக வரையறை செய்திருக்கிறார். போலனின் வரையறைகளில் பல நாமும் பின்பற்ற வேண்டியதே.
போலன் 64 விதிகளை வரையறை செய்கிறார், அதில் 10 கட்டளைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்.
ஒன்று... உணவுப் பொருட்கள் வாங்க கடைக்குப் போகும்போது, உங்கள் தாத்தா அல்லது பாட்டியை கடைக்கு அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் எதையெல்லாம் சாப்பிட அருகதை அற்றது என்று ஒதுக்குகிறார்களோ, அவற்றை வாங்காதீர்கள். டப்பாவில் அடைத்த தயிரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரசாயனப் பொருள் கலந்த ரெடிமேட் உணவை ஒதுக்கிவிடுவார்கள். பிளாஸ்டிக் பாக்கெட்டில் தயார் நிலையில் உள்ள சப்பாத்தியை ஒருபோதும் அவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஏன் அவர்கள் இந்த துரித உணவுகளை ஒதுக்குகிறார்கள் என்றால், அனுபவத்தில் சரியான உணவு எது என்பதை கண்டறிந்திருக்கிறார் என்பதால்தான். ஆகவே உங்கள் பாட்டியோ, தாத்தாவோ உங்களுக்கு சிபாரிசு செய்யாத எல்லா உணவுகளையும் தவிர்த்துவிடுங்கள், இதுவே உணவைத் தேர்வுசெய்வதில் முதல் படி.
இரண்டாவது விதி... உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவற்காகவே உருவாக்கப்பட்ட உணவு என்று பெரிதாக விளம்பரம் செய்யப்படும் உணவுகளைத் தேர்வுசெய்ய வேண்டாம். பெரும்பாலும் அவர்கள் இதை வெறும் விளம்பர உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். போட்டி நிறுவனங்களைவிட தாங்கள் சிறந்தவர்கள் என்று காட்டுவதற்காகவே, அதிக விட்டமின், கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஃபைபர் உள்ளது என பொய்யாக விளம்பரம் செய்கிறார்கள்.
மூன்றாவது விதி... சிப்ஸ், நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை ஒதுக்கி அதற்குப் பதிலாக பழங்கள், கொட்டைகள், பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகுங்கள்.
நான்காவது விதி... இயந்திரங்களால் சமைக்கப்படும் உணவுகளை ஒதுக்குங்கள். மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் உள்ள கவனமும் ருசியும் அக்கறையும் ஒருபோதும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் உணவுகளில் இருக்காது. ஆகவே, இயந்திரங்கள் உருவாக்கும் உணவு வகைகளை ஒதுக்குங்கள்.
ஐந்தாவது விதி... அந்தந்தப் பருவ காலங்களில் விளைகின்ற பழங்கள், காய்கறிகள், கீரைகளை உண்ணுங்கள். எல்லாக் காலத்திலும் மாம்பழம் கிடைக்கிறது என்பது ஏமாற்று. அது உடல்நலத்துக்கு கெடுதல் செய்யும்.
ஆறாவது விதி... நான்கு காலில் உள்ள விலங்குகளை உண்பது செரிமானம் செய்ய நேரமாகும். ஆகவே, குறைவாக உண்ண வேண்டும். பறவைகளின் இறைச்சி சாப்பிடக்கூடியது. ஆனால், அளவோடு அறிந்து சாப்பிட வேண்டும். ஒற்றைக் கால் கொண்ட தாவரங்களில் இருந்து வரும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிறது சீனப் பழமொழி. இது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று.
ஏழாவது விதி... இயற்கையாக விளையக்கூடிய தானியங்கள், காய்கறிகள், அரிசியைத் தேர்வுசெய்து சாப்பிடுங்கள். ரசாயன உரமிடப்பட்ட காய்கறிகளில் அதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.
எட்டாவது விதி... உப்பும் சர்க்கரையும் அதிகம் சேர்க்காத உணவாக தேர்வு செய்யுங்கள். இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒன்பதாவது விதி... செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றை குடியுங்கள்.
10-வது விதி... மருத்துவருக்குப் பணம் கொடுப்பதைவிட பலசரக்குக் கடைக்காரருக்கு கொடுக்கலாம் என்றொரு ஆங்கில பழமொழி உள்ளது. ஆகவே, தேவையான உணவுப்பொருட்களை தரம் அறிந்து தேடிப்பார்த்து வாங்க வேண்டும். அதற்கு சோம்பேறித்தனம் கொண்டால், மருத்துவரைத் தேட வேண்டிய அவசியம் வந்துவிடும். விவசாயியிடம் இருந்து நேரடியாக உணவுப்பொருட்களை பெற முடிந்தால் மிகவும் நல்லது.
போலனின் இந்த விதிகள் அவரது கண்டுபிடிப்பு இல்லை. இது பல்வேறு உணவுப் பண்பாட்டில் முன்பு பின்பற்றப்பட்டவைதான்.

- Vikatan

Monday, May 12, 2014

உணவு யுத்தம்! 4

உயிர் குடிக்கும் டீ!

நூடுல்ஸ் மற்றும் சீன உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவ தன் மூலம் ரத்த அழுத்தம், நுரையீரல் ஒவ்வாமை, சரும நோய்கள், கிட்னி பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் உருவாகின்றன. அதற்கு முக்கியக் காரணம் மோனோசோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி. இதன் காரணமாக நமது சுவை அரும்புகள் பாதிக்கப்படுகின்றன. சீன உணவு களைத் திரும்பத் திரும்ப சாப்பிடச் செய்வதற்கே இந்தச் சுவையூட்டி பயன்படுத்தபடுகிறது.
சீன உணவில் அதிகம் உப்பும் கொழுப்பும் இருக்கின்றன. அது நமது அன்றாட தேவையைப்போல மூன்று மடங்கு அதிகமானது. நூடுல்ஸில் உலரவைத்த கோழிக்கறி, காய்கறிகள் உள்ளன. அவற்றைப் பதப்படுத்துவதற்காக செயற்கை ரசாயனப் பொடிகள் பயன்படுத்தபடுகின்றன. இவை உடலுக்குக் கெடுதல் செய்யக் கூடியவை.
நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வாக்ஸ் தடவப்படுகிறது. சுவையூட்ட அதிக அளவு சோடியம் கலக்கப்படுகிறது. செயற்கை நிறமூட்டி, சுவையூட்டியான propylene glycol போன்ற வேதிப்பொருட்கள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன.
மலேசியாவில் ஆண்டுக்கு 1,210 மில்லியன் நூடுல்ஸ் பாக்கெட்கள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இதன் மோசமான பின்விளைவுகள் காரணமாக சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 13,000. அங்கே துரித உணவுப் பழக்கம் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆறு பேர் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே உடனடி நூடுல்ஸை தவிருங்கள் என்கிறது மலேசிய உணவு தர நிறுவனத்தின் அறிக்கை.
சீனாவில் இருந்து உலகுக்கு அறிமுகமான முதல் உணவு தேநீர். தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்களே. ஆரம்ப காலங்களில் தேநீரில் உப்பு சேர்த்து குடித்து வந்தனர். சீனாவில் தேயிலைகளை அரைத்து மூட்டுவலிக்கு பத்து போடுவார்களாம்.
சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் குடிப்பதற்காக வைத்திருந்த சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்துவந்து விழவும், அதைக் குடித்த மன்னர் புதிய பானமாக இருக்கிறதே என டீயை சிறப்பு பானமாக அறிமுகம் செய்தார் என ஒரு கதை சொல்கிறார்கள்.
இங்கிலாந்துக்குத் தேநீர் 1650-களில்தான் அறிமுகமானது. விலையுயர்ந்த, பிரபுக்களின் பானம் என்று அறிமுகமாகி, பிறகு அடிதட்டு மக்களும் குடிக்கும் பானமாக உருமாறியது. ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசு தேயிலையை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்தது.
பண்டமாற்று செய்ய சீனாவுக்குத் தேவையான பொருள் ஆங்கிலேயரிடம் எதுவும் இல்லாததால், அபின் எனும் போதை மருந்தை இந்தியாவின் கங்கை சமவெளியில் விளைவித்து, அதைக் கப்பலில் ஏற்றி சீனாவுக்கு விற்றது கிழக்கிந்திய கம்பெனி. அபினுக்கு ஈடான தேயிலை விற்கப்பட்டது.
இந்தியாவில் தேநீர் அறிமுகமான நாட்களில் அது இலவசமாகத் தரப்பட்டு டீ குடிக்கும் பழக்கம் உருவான பிறகு, தேநீருக்கு காசு வசூலிக்கப்பட்டது. இதைப்பற்றி கி.ராஜநாராயணன் கரிசல்காட்டு கடுதாசியில் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
சீனர்கள் மருத்துவ மூலிகையாகவே தேயிலையை முதலில் அறிந்திருந்தனர். பௌத்த துறவிகள் மூலமாக கி.மு 800-களில் ஜப்பானுக்குத் தேயிலை பரவியது. அங்கிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, ஃபிரான்ஸ் நாடுகளில் பரவியது. 18-ம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குத் தேயிலை பரவியது. இன்று உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஒயிட் டீ, பிளாக் டீ, ஜாஸ்மின் டீ, ஒலங் டீ, ஹெர்பல் டீ என 1,000-க்கும் மேற்பட்ட ரகங்கள் இருக்கின்றன.
தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் புத்துணர்வு தரக்கூடியது என்கிறார்கள். குறிப்பாக கெமோமில் தேநீர், க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இதை ஜப்பானியர்கள் விரும்பி அருந்துகிறார்கள். தேநீரில் எலுமிச்சையைச் சேர்த்து பருகும் லெமன் டீ பழக்கத்தை அறிமுகம் செய்தவர்கள் ரஷ்யர்கள்.
கேத்ரின் என்பவர்தான் தேநீர் குடித்த  இங்கிலாந்தின் முதல் மகாராணி. 18-ம் நூற்றாண்டில் லண்டனில் புகழ்பெற்றிருந்த காபி கிளப்களில் பெண்களுக்கு இடம் கிடையாது. ஆகவே வீட்டில் மாலை நேரங்களில் டீ பார்ட்டி தரும் வழக்கம் உருவானது. இதற்காக அழகான தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1750-களில் தான் சாசருடன் கூடிய டீ கோப்பைகள் தயாரிக்கப்பட்டன.
தொழில்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் மாலையில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் தேநீர், பிஸ்கட், ரொட்டித்துண்டு உண்ணும் வழக்கத்தைக் கைக்கொண்டனர். இந்த டீ சாப்பிடும் மேஜை உயரமாக இருந்த காரணத்தால் இது ஹை டீ என அழைக்கப்பட்டது.
ஒககூரா எழுதிய 'தேநீர் கலை’ என்ற நூல் தேநீரின் வரலாற்றையும் பருகும் விதத்தைப் பற்றியும் அழகாக எடுத்துச் சொல்கிறது. தேநீர் கலை என்பது ஒரு தத்துவம். அழகுணர்ச்சியும் உடல்நலமும் புத்துணர்வும் ஒன்று சேர்ந்த கலை அது. சரியான தேயிலையைத் தேர்வு செய்வதில்தான் நல்ல தேநீர் தயாரிப்பு துவங்குகிறது. ஆகவே தேயிலையைத் தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். டீ தயாரிப்பதில் 300-க்கும் மேற்பட்ட முறைகள் உண்டு. தயாரிக்கப்பட்ட தேநீரை எந்தக் கோப்பையில் ஊற்றுவது என்பது முக்கியமானது. சீனர்களின் பீங்கான் பாத்திரங்கள் டீ குடிப்பதற்கு என்றே தனித்து உருவாக்கபடுகின்றன. இதில் 'நீலநிறமான குவளைகளே டீ குடிப்பதற்குச் சிறந்தவை’ என்கிறார் ஒககூரா.
ஜப்பானில் தேநீர் தயாரிக்க 24 வகையான பொருட்கள் தேவைப்படுகின்றன. இதில் தேநீர் தயாரிக்கப்படும் தண்ணீர், மலை ஊற்றுகளில் அல்லது சுனைகளில் கிடைத்த தூய்மையான தண்ணீராக இருக்க வேண்டியது அவசியம்.
தண்ணீரைக் கொதிக்க விடும்போது மீன்களின் கண்கள் விழிப்பதைப்போல சிறிய கொப்பளங்கள் தோன்றும். அது முதல் நிலை, அதே தண்ணீர் மேலும் கொதித்து கோலி உருண்டைகளை தரையில் உருட்டிவிட்டது போல பெரியதாக மாறும். அது இரண்டாம் நிலை. நீராவியுடன் அது கொதிக்கத் துவங்கும். அதுவே மூன்றாம் நிலை. அந்த நிலைக்கு தண்ணீர் வந்த பிறகே அதை தேநீர் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும்.
தேயிலையை மிருதுவாகப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் தேயிலையைப் போட்டு கொதிக்கவிட்டு நன்கு கொதித்த பிறகு அதன் மீது குளிர்ந்த தண்ணீரைத் தெளித்து அதைத் தணிக்க வேண்டும். அப்படி தயாரிக்கப்பட்ட தேநீரை அழகிய குவளைகளில் பரிமாற வேண்டும். சூடான தேநீரைக் குடித்தவுடன் தனிமை பறந்து போய்விடும். சிறகு முளைத்துப் பறப்பது போன்ற அனுபவம் உண்டாகும். மனதைத் தூய்மைப்படுத்தும்’ என்கிறார் ஒககூரா.
தேநீர் கலையை உலகம் முழுவதும் பிரபலம் ஆக்கியது ஜென் பௌத்தம்.
இன்று இந்தியாவில் 83 சதவிகிதம் பேர் டீ குடிக்கிறார்கள். ஆகவே, அதை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். இத்தனை பேரும் நல்ல டீயைத் தான் குடிக்கிறார்களா எனக் கேட்டால், 'இல்லை’ என்றுதான் சொல்வேன். 90 சதவிகிதம் பேர் மோசமான, கலப்பட தேயிலையால் உருவாக்கப்பட்ட டீயைத் தான் குடிக்கிறார்கள். தலைவலிக்கு டீ குடிக்கப்போய் வயிற்றுவலியை உண்டாக்கிக் கொள்கிறார்கள்.
தேயிலைத்தூளில் இலவம்பஞ்சு காயை அரைத்துக் கலப்பது, முந்திரிக்கொட்டை தோலைப் பொடியாக்கிச் சேர்ப்பது, மஞ்சனத்தி இலை, குதிரைச் சாணம், மரத்தூள், தேங்காய் நார் ஆகியவற்றை அரைத்துக் கலப்பது என... விதவிதமாகக் கலப்படம் செய்கிறார்கள், இந்தத் தேநீரை தினமும் மூன்றோ நான்கோ குடிப்பதால் குடல், கல்லீரல் பாதிப்படையும். குடல் புண் உண்டாகும். அல்சர், மூட்டுவலி, கிட்னி பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய்கூட உண்டாகலாம்.
உணவுப்பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். ஆனால், நடைபாதை சீன உணவகங்களிலும் கலப்பட தேயிலை தயாரிப்பதிலும் கட்டுப்பாடோ கண்காணிப்போ இல்லை. கள்ளச்சந்தை டீத்தூள் ஒருபுறம் ஆக்கிரமிக்கிறது என்றால், நூடுல்ஸ் சந்தை மறுபக்கம் குழந்தைகளைத் தனது பிடிக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது.
100 கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் பல்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1,943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கிட்னி பாதிப்பு எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் செய்யாத ஆவியில் வேகும் அருமையான உணவு இடியாப்பம். அதை சாப்பிடுவதற்கு நமக்கு விருப்பமே இல்லை. ஆனால் இரண்டு நிமிஷ நூடுல்ஸ் சாப்பிடத் துடிக்கிறோம். தொலைக்காட்சி வழியாக ஒருநாளில் குறைந்தபட்சம் 230 உணவு விளம்பரங்களைக் குழந்தைகள் பார்க்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உணவு நிறுவனங்கள் சந்தைப் போட்டிக்காகப் புதுப்புது ரக நூடுல்ஸ்களை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த உணவில் இருப்பதாக அவர்கள் கூறும் வைட்டமின், உப்பு, கொழுப்பு எல்லாவற்றின் அளவும் பொய்யானவை. இந்தப் பொய்களை நாம் ஆராய்ந்து பார்ப்பது இல்லை.
உங்கள் குழந்தைகளின் நலனில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இரண்டு நிமிட துரித உணவுகளை விலக்கி சரியான, சத்தான, உணவை அவர்களுக்கு அளியுங்கள். இரண்டு நிமிட உணவை சாப்பிடுகிறவர்கள் ஐந்து நிமிடத்தில் நோயாளி ஆகிவிடுவார்கள் என்பதே நிஜம்.
- Vikatan

உணவு யுத்தம்! - 3

நூடுல்ஸ் ராஜ்ஜியம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஹாங்காங் சென்றிருந்தேன். அங்குள்ள உணவு வளாகம் ஒன்றுக்கு நண்பர் அழைத்துக்கொண்டு போயிருந்தார். ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு அங்காடிகள். ஒவ்வொன்றிலும் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடும் மனிதர்கள். விதவிதமான உணவு வகைகள். உயிருள்ள மீன்களைத் தொட்டியில் விட்டிருக்கிறார்கள். கண்முன்னே பிடித்து சமைத்துத் தருகிறார்கள்.

பொறித்த முழுப்பன்றி அப்படியே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. கம்பியில் குத்தப்பட்ட கோழி இறைச்சி, அவித்த வாத்து முட்டைகள், நண்டு, இறால், மாட்டிறைச்சி எனக் கலவையான மணம். நிதானமாக அரட்டை அடித்தபடியே சாப்பிடுகிற முகங்களைப் பார்த்தபடியே நடந்தேன்.
ஒருவர் மேஜையில்கூட குடிப்பதற்குத் தண்ணீர் கிடையாது. சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் வெளிநாட்டவர்களுக்குக் கிடையாது. ஒயினோ, பழச்சாறோ, குளிர்பானங்களோதான் குடிக்கிறார்கள். நமக்குத்தான் தண்ணீர் அருகில் இல்லாமல் சாப்பிட முடியாது.
இரண்டு மூன்று உணவுகள் ஒன்றுசேர்ந்த காம்போ முறைகள்தான் அங்கு பிரபலம். தனியாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவது விலை அதிகம் என்றார்கள். என்ன சாப்பிடுவது எனப் புரியாமல் தேடியபோது நண்பர் கேட்டார்... 'சீன உணவுகள் சாப்பிடுவீர்கள்தானே’ என்று!
'சாப்பிட்டிருக்கிறேன்’ என்றேன்.
இருவரும் ஒரு சீன உணவகத்தில் அமர்ந்து சாப்பாடு ஆர்டர் செய்தோம். நமது ஊரில் கிடைக்கும் சீன உணவுகள் தானே என நினைத்தேன். ஆனால், அதே பெயர்கள் கொண்ட வேறு உணவு வந்தது. எப்படி எனக் கேட்டபோது, 'இந்தியாவில் கிடைக்கும் சீன உணவுகள் இந்தியர்களுக்கு என்றே தயாரிக்கபடுவது, அது நிஜமான சீன உணவு இல்லை’ என்றார்.
பரிமாறப்பட்ட சீன உணவை என்னால் சாப்பிட முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது. நமது கொழுக்கட்டை போலவே ஜியாவ்ஜி என்று சீனர்கள் தயாரிக்கிறார்கள். அது வேகவைத்த உணவு.
உள்ளே மீனோ, கறியோ, இனிப்போ இருக்கும். 'குடும்ப விருந்தில் இந்தக் கொழுக்கட்டை ஒன்றில் நாணயம் வைத்து விடுவார்கள். யாருக்கு இந்தக் கொழுக்கட்டை கிடைக்கிறதோ அவர் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுவார்’ என்றார். நான் இனிப்பு ஜியாவ்ஜி, பச்சைக் காய்கறிகளும் பழங்களும் மட்டும் சாப்பிட்டேன்.
நண்பர் சிரித்தபடியே சொன்னார். 'எங்கள் கிராமத்தில் நூடுல்ஸ் சாப்பிடாத குழந்தைகளே கிடையாது. வெள்ளைக்காரனால்கூட எங்கள் கிராமத்து மக்களை பிரெட் ஜாம் சாப்பிட வைக்க முடியவில்லை. ஆனால், சீன உணவுகள் எளிதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் உணவுப் பழக்கத்தை சீன உணவு வகைகள் புரட்டிப்போட்டுள்ளன. சில்லி சிக்கன், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், கோபி மஞ்சூரியன் மட்டுமே விற்கும் தள்ளுவண்டி கடைகள் இல்லாத ஊர்களே இல்லை. வீட்டிலேயே நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் என தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சீனச் சுவைதான் இன்று சிறுவர்களுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. கடவுளுக்கு மட்டும்தான் நூடுல்ஸ் படைக்கவில்லை. மற்ற எல்லோருக்கும் நூடுல்ஸ் பிடித்திருக்கிறது’ என்று சிரித்தபடி சொன்னார்.
அவர் சொன்னது உண்மை. தமிழகத்தின் கடைக்கோடி வரை நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் பரவிட்டது. துரித உணவு என்பதாலும், விலை மலிவு என்பதாலும், சுவை புதிதாக இருப்பதாலும் அதை பெருவாரியான மக்கள் சாப்பிடுகிறார்கள்.
சீன உணவு வகைகள் இந்தியாவில் மட்டுல்ல; உலகெங்கும் பெரும் சந்தையை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் கனடாவிலும்கூட சீன உணவு வகைகளுக்குப் பெரும் கிராக்கி உருவாகி உள்ளது.
சீனர்கள் எந்த நாட்டுக்குப் புலம் பெயர்ந்து போனாலும் அங்கே சைனா டவுன் ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அங்கே ஒரு பௌத்த கோயில், சீன அங்காடிகள், சீன உணவுக் கடைகள் உருவாகிவிடும். தங்களின் விழாக்களைக் கொண்டாடுவார்கள். இசை, ஓவியம், கலை, உணவு, மொழி ஆகியவற்றை எந்த நாட்டுக்குச் சென்றாலும் சீனர்கள் மறப்பதே இல்லை.
ஆனால், தமிழ் மக்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் உடனடியாக தங்களின் சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டுவிடுகிறார்கள்... அல்லது மறந்துவிடுகிறார்கள். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சைனா டவுன் இருக்கிறது. ஆனால், தமிழர்கள் வாழும் எத்தனை நாடுகளில் தமிழ் டவுன் இருக்கிறது? இந்த விஷயத்தில் ஈழத் தமிழ் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் தமிழ் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் வளர்த்து எடுக்கவும் பெருமுயற்சி எடுத்துவருகிறார்கள்.
சீன உணவு எப்படி உலகெங்கும் பரவியது? ஒன்று ரயில் பாதை அமைப்பதற்கும், கட்டுமானப் பணிகளுக்கும், கூலித்தொழிலாளர்களாகப் பல்லாயிரம் சீனர்கள் கனடா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்கள். இன்னொரு பக்கம் சீன வணிகர்கள் வியாபாரம் செய்வதற்காக உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார்கள். சோழ அரசுடன் சீனா வணிகத் தொடர்பு கொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து யுவான்சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்கள் இந்தியாவுக்கு வந்து போயிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற யாத்ரீகர் வழியாக சீன உணவு அறிமுகமாகியிருக்கக் கூடும். இவை தவிர கடலோடிகள், பட்டு வணிகர்கள், சீனாவுக்கு அபின் விற்பனைக்காக பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட பரிவர்த்தனைகள் வழியாக சீன உணவுகள் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம்.
தமிழகத்தில் நாம் உண்ணுகிற நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் போன்றவை அசலான சீன உணவு கிடையாது. இது சீன உணவின் செய்முறையில் அமைந்த இந்திய உணவு. மரபான சீன உணவுகளின் சுவை பெரிதும் மாறுபட்டது. இந்தியாவுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சீன உணவுகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இவைதான் இங்குள்ள சீன உணவகங்களில் விற்கப்படவும் செய்கிறது. ஒருவேளை யாராவது சீனர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சீன உணவுகளை சாப்பிட்டால் அவர்களுக்கு இந்த சுவை புதியதாக இருக்கும். இவை சந்தை உருவாக்கிய சீன உணவுகள்.  இந்தியாவில் ஆண்டுதோறும் 4,500 கோடி ரூபாய்களுக்கு நூடுல்ஸ் விற்கப்படுகின்றன.
அசலான சீன உணவு என்பது எது? சீனா மிகப்பெரிய நாடு. அதன் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒருவகை உணவு பிரபலம். உணவை கடைகளில் வைத்து விற்பனை செய்கிற பழக்கம் சீனாவில் இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளிலே இருந்திருக்கிறது. சந்தைகளில் விதவிதமான உணவு வகைகள் எப்படி விற்கப்பட்டன என்பதைப் பற்றி சீன இலக்கியத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.
சீனாவின் முக்கிய உணவு அரிசி. வட சீனாவில் அதிகம் கோதுமை விளைகிறது. ஆனாலும், அவர்கள் அரிசியைத்தான் தங்களின் முக்கிய உணவாகக் கொண்டிருக்கிறார்கள். கோதுமையில் இருந்து நூடுல்ஸ் தயாரித்து உண்கிறார்கள். அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் நூடுல்ஸ்களும் உண்ணப்படுகின்றன. சீனாவில் ஹான் அரசு காலத்தில்தான் முதன்முறையாக நூடுல்ஸ் சமைக்கப்பட்டது என்கிறார்கள். இல்லை ஏழாம் நூற்றாண்டில் பாஸ்தாவை ரோமாபுரிக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் என்று நிறைய ஆதாரங்களைத் தருகிறார்கள் இத்தாலியர்கள். இந்த சண்டை இன்றும் ஓயவில்லை.
உணவை மருந்தாகக் கருதுவது சீனர்களின் பழக்கம். அதுதான் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ஆதாரம். ஆகவே மூலிகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களின் பண்பாடு. காய்கறிகள், பழங்கள், அவித்த உணவு வகைகள், மீன், பன்றி, வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சி - இவையே சீனர்களின் ஆரம்பகால உணவு வகைகள். தெற்கு சீனாவில் நாய்க்கறி உண்பதும், வட சீனாவில் பாம்பும் பூனையும் சாப்பிடுகிற பழக்கமும் இருந்திருக்கிறது.
ஒன்றாகக் கூடி உண்பதில் சீனர்கள் விருப்பம் கொண்டவர்கள். சாப்ஸ்டிக் மூலம் சாப்பிடும்போது கிண்ணத்தில் குச்சி மோதி ஓசை உண்டாகக் கூடாது. அது சமையல் சரியில்லை என்பதன் அடையாளம். அத்துடன் பிச்சைக்காரன் மட்டும்தான் உணவு கிண்ணத்தில் சப்தமிடுவான். ஆகவே, சாப்பிடும்போது குச்சிகளால் கிண்ணத்தைத் தட்டுதல் கூடாது. இதற்கு மாறாக சூப்பை சப்தமாக உறிஞ்சிக் குடிப்பதோ, உஷ் உஷ் என நூடுல்ஸை சூடாக இழுத்துச் சாப்பிடுவதோ சந்தோஷத்தின் அடையாளமாகக் கொள்கிறார்கள்.
மார்கோ போலோவின் மூலமே ஐரோப்பாவுக்கு சீன உணவுகள் அறிமுகமாகியிருக்கின்றன. அதன் பிறகு 16-ம் நூற்றாண்டு வணிகர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் மூலம் சீன உணவு பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. சர்க்கரையைக் குறிக்கும் சீனி என்ற சொல் சீனர்கள்  வழி அறிமுகமானதே.
ஆதிகாலத்தில் சீனர்கள் சோளமும், அரிசியும், சோயாவில் செய்த சாற்றையும் சாப்பிடுவதை விருப்பமாகக் கொண்டிருந்தார்கள். சீன முட்டைக்கோஸ், மூங்கில் குருத்து, தாமரை தண்டுகள், வெங்காயம் இவற்றை ஆசையாக சீனர்கள் சாப்பிடுவார்கள். அவர்களின் சாப்பாட்டு மேஜை வட்ட வடிவமானது. ஆங்கிலேயர்களைப்போல  செவ்வக மேஜையோ, நடுநாயகமாக விருந்து தருபவர் அமர்வதோ அங்கே கிடையாது.
தாமரை இலைகளில்தான் உணவைப் பரிமாறுவார்கள்.  சூப் மற்றும் உணவைப் பரிமாற மரக்கலன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீனர்கள் முட்டை சாப்பிடுவதை அதிகம் விருப்பக் கூடியவர்கள். ஒருவர் குறைந்தபட்சம் ஒருநாளில் 8-ல் இருந்து 10 முட்டைகளை சாப்பிட்டுவிடுவார். குழந்தை பிறந்தால் முட்டையில் செய்யப்படும் விசேஷ உணவுதான் விருந்தினர்களுக்குப் பரிமாறப்படும். முட்டை என்பது இனவிருத்தியின் அடையாளம் என்பது அவர்களின் எண்ணம்.
இதுபோலவே மகிழ்ச்சியின் அடையாளம் என்பதற்காக வாத்து, செல்வ வளம் பெருக வேண்டும் என்பதன் அடையாளமாக பொறித்த முழு மீன், நீண்ட ஆயுளின் அடையாளமாக நூடுல்ஸ், குழந்தைகள் பெற்று பெருகி வாழுங்கள் என்பதன் அடையாளமாக ரொட்டியில் எள், சீரகம் போன்றவற்றைக் கலந்து சாப்பிடுவதையும் மரபாகக் கொண்டிருக்கிறார்கள்.
பன்றி மாமிசம்தான் அவர்களின் முக்கிய உணவு. பொறித்த பன்றியை விருந்தில் பரிமாறுவது சந்தோஷத்தின் அடையாளம். தேநீரில் முட்டையை வேகவைத்து சாப்பிடுகிற பழக்கம் அவர்களுக்கு உண்டு. சோயா, புரோட்டீன் நிரம்பியது என்பதால் சோயா சாற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்தியாவின் முதல் சீன உணவகம் கல்கத்தாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த உணவகம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவர்கள் கல்கத்தாவில் வசித்த சீனர்கள். 18-ம் நூற்றாண்டில் தாங் ஆசிங் என்ற வணிகர் கல்கத்தா அருகில் ஒரு சர்க்கரை ஆலையை உருவாக்கினார். இதில் பணியாற்றுவதற்காக ஆயிரக்கணக்கான சீனர்களை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் ஒரு முகாம் போல ஒன்றாகத் தங்கினார்கள். ஆசிங் மறைந்த பிறகு சீனர்கள் தாங்களே கரும்பாலையை ஏற்று நடத்தினார்கள்.  அவர்கள் மூலம்தான் கல்கத்தாவில் சீன உணவகம் ஆரம்பிக்கப்பட்டது.
சிக்கன் மஞ்சூரியன் எனும் சீன உணவு மும்பையில் சமையற்காரராகப் பணியாற்றிய நெல்சன் வாங் என்ற  சீன சமையற்காரர் வழியாகத்தான் அறிமுகமானது. அது பின்னாளில் உலக நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை சிறையில் அடைக்கபட்டிருந்த சீனக் கைதிகள் சிலர் தப்பியோடி விட்டார்கள் என்ற தகவலை மெட்ராஸ் கெஜட்டியர் கூறுகிறது. ஊட்டியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை அமைப்பதற்காக சீனக் கைதிகளை அழைத்துக்கொண்டு போனார்கள். அவர்கள் அங்குள்ள தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார் எட்கர் தர்ஸ்டன்.
இந்தியாவின் பெருநகரங்களில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக சீன உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அது பட்டிதொட்டி வரை பரவிவிட்டதற்கு முக்கியக் காரணம் ஊடகங்கள். தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் விளம்பரத்தின் மூலம் சீன உணவு சந்தையைப் பரவலாக்கின.
உடனடி நூடுல்ஸை அறிமுகம் செய்தது ஜப்பான். மோமோபுகுகா அந்தோ என்பவர் 1958-ல் உடனடி நூடுல்ஸ் அறிமுகம் செய்தார். 1971-ல் கப் நூடுல்ஸ் நிசான் உணவகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 95 பில்லியன் உடனடி நூடுல்ஸ் உண்ணப்படுகிறது. இதில் 42 பில்லியன் நூடுல்ஸ் சீனாவில் மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், நம்மவர்கள் இன்னும் நூடுல்ஸை எப்படிச் சாப்பிடுவது என்பதை பழகிக்கொள்ளவில்லை!

- VIkatan

உணவு யுத்தம்! - 2

மரண விலாஸ்!
 உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்க்கை ஆரோக்கியமாக இல்லை. சாப்பிடும்​போதே இதை உணர முடிகிறது!
விவசாயிகள் ரசாயன உரம், கடன் சுமை, தண்ணீர் பிரச்னை என ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 2002 முதல் 2006-ம் ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,500 என்கிறது ஒரு புள்ளி விவரம். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பன்னாட்டு நிறுவனங்களின் துரித உணவு வகைகள் பட்டிதொட்டி வரை அறிமுகமாகி நம் உடலைச் சீர்கெடுத்து நோயாளி​யாக மாற்றிவருகின்றன. இந்தி​யர்கள் ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்களை உண்பதற்குச் செலவிடுகிறார்கள். ஆனால், மருந்துக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று கணக்கெடுக்க முடியுமா?
நண்பர்களே... இன்று இந்தியாவெங்கும் நடப்பது உணவு அரசியல். அதன் ஒரு அங்கம்தான் நமது உணவு முறைகளின் மாற்றம். இது திட்டமிட்டு நடக்கும் ஒரு வணிகத் தந்திரம். இந்த மோசடி வலையில் கோடான கோடி மக்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
இத்தாலியர்களின் உணவான ஸ்பெகட்டி சென்னையில் சாப்பிடக் கிடைக்கிறது. ஆனால், உளுந்தங்களி சாப்பிட வேண்டும் என்றால், ஒரு கடையும் கிடையாது. இதே ரீதியில் போனால், நாளை தமிழ் உணவுகள் பெயரளவில் வெறும் சொற்களாக மட்டுமே மிஞ்சிப்போகவும் கூடும்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு நேர்ப்பேச்சில் சொன்னது நினைவுக்கு வருகிறது. சாப்பாட்டை பொருத்த மட்டில் கீழே போகப்போகத்​தான் ருசி. அவர் கீழே என்று சொன்னது, அடித்தட்டு வாழ்க்கையை. அதன் பொருள் 6,000 ரூபாய் கொடுத்துச் சாப்பிடும் உணவைவிட கையேந்தி பவன்களில் கிடைக்கும் உணவுக்கு ருசி அதிகம். இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
ஏழை எளிய மனிதர்கள், இருப்பதைக் கொண்டு சமைப்பதில் உருவாகும் ருசி நிகரற்றது. இன்று நாம் பசிக்கு சாப்பிடுவதற்குப் பதிலாக, ருசிக்கு சாப்பிடப் பழகிவிட்டோம். அதிலும் தினம் ஒரு மாறுபட்ட ருசி தேவைப்படுகிறது. பசி, ருசி அறியாது என்பார்கள். இன்று ருசி பணத்தையோ, உடல்நலக் கேட்டையோ அறிவதே இல்லை. உடலைக் கெடுக்கும் என்று அறிந்தே சக்கை உணவுகளைத் தேடிச் சென்று சாப்பிடுவது முட்டாள்தனமா இல்லை திமிரா? இளந்தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.
பன்னாட்டு உணவகம் தந்த அனுபவம் ஒருவிதம் என்றால், மறுபக்கம் ஹைவே மோட்டல்ஸ் எனப்படும் சாலையோர உணவகம் தந்த கசப்பான அனுபவம் மறக்கவே முடியாதது.
சாலையோர மோட்டல்களில் சிக்கி, பணத்தைப் பறிகொடுக் காத ஒருவர்கூட தமிழகத்தில் இருக்க முடியாது. நிச்சயம் ஏதாவது ஒரு பயணத்தில் தனது பாக்கெட்டில் இருந்து நூறோ, இருநூறோ இழந்திருப்பார். குடும்பத்துடன் பயணம் போகிறவர்கள் பயப்படுவது சாலை விபத்துகளை நினைத்து இல்லை... ஹைவே உணவகங்களின் கொள்ளையை நினைத்துதான்.
25 ஆண்டுகள் முன்பு வரை லாரிகளில் வருபவர்கள்தான் இரவில் இதுபோன்ற சாலையோர உணவங்களில்  சாப்பிடுவார்கள். நெடுந்தூர பேருந்து நள்ளிரவில் தேநீர் கடைகளில்தான் நிற்கும்.
மோட்டார் ஹோட்டல் என்பதே மோட்டலாக மாறியது. 1925-ம் ஆண்டு ஆர்தர் ஹெய்ன்மென் அமெரிக்காவில் முதல் மோட்டலைத் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின் பிறகே அமெரிக்காவில் சாலையோர மோட்டல்கள் அதிகமாக துவங்கின.
ஒடிசாவிலும் கொல்கத்தாவிலும் அரசே சாலையோரங்களில் மோட்டல்களை நடத்துகின்றன. சுகாதாரமான கழிப்பறை, நியாய விலை உணவகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்... என இவை நீண்ட தூரப் பயணிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தேன். இரவு உணவகம் ஒன்றில் நிறுத்தினோம். திறந்தவெளி கழிப்பறை, அருகிலே கொசு மொய்க்கும் சமையல்கூடம், அழுக்கான சாம்பார் வாளி, கழுவப்படாத டம்ளர்கள், காது கிழியும் குத்துப் பாடல்... சாப்பிட உட்காரவே தயக்கமாக இருந்தது.
பரோட்டா, சப்பாத்தி, தோசை மூன்று மட்டுமே இருப்பதாகச் சொன்னார்கள். தோசைக்கு சட்னி, சாம்பார் கிடையாது. குருமா வாங்கிக்கொள்ள வேண்டும். அது 75 ரூபாய். தோசை 100 ரூபாய். 'தோசைக்கு யார் குருமா வைத்து சாப்பிடுவார்கள்?’ என்றேன். 'இஷ்டம் இருந்தா சாப்பிடுங்கள்’ என்றார்கள்.
பசிக்கு ஏதாவது பழம் வாங்கி சாப்பிடலாம் என நினைத்து வெளியே வந்தால், பழக்கடையில் ஒரு வாழைப்பழம் 15 ரூபாய். பெயர் தெரியாத ஒரு பிஸ்கட் பாக்கெட்டின் விலை 50 ரூபாய்.  ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் 80  ரூபாய்.
ஹோட்டல் வாசலில் ஒரு கிராமத்துப் பெண் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். 'ஒத்தை தோசை 100 ரூபாயா? பகல் கொள்ளையா இருக்கு. ஒரு கிலோ இட்லி அரிசி 25 ரூபாய். ஒரு கிலோ உளுந்து 61 ரூபாய். மாவு ஆட்டுற செலவு, எண்ணெய் எல்லாம் சேர்த்தாகூட ஒரு தோசை விலை 20 ரூபாய்க்கு மேல வராது. வியாபாரம் பண்ணுறவன் 30 ரூவான்னு வித்துட்டு போ. 100 ரூபாய்னு அநியாயம் பண்ணாதப்பா. இந்த துட்டு உடம்புல ஒட்டாது’ என்று சாபமிட்டார்.
அந்த அம்மாவின் கோபத்தை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஒருவர், 'தோசை ஒரே புளிப்பு. ரப்பர் மாதிரி இருக்கு. கிழங்கு மாவு கலந்து இருக்காங்க’ என்றார். 'ஹெல்த் இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய வேண்டியதுதானே?’ என்றதும், 'இது கட்சிக்காரங்க கடை’ என சுவரில் மாட்டப்பட்ட புகைப்படத்தைக் காட்டினார். இதிலுமா கட்சி?
'சாப்பாட்டு விஷயத்துலகூட கட்சி வெச்சிருக்கிறது தமிழர்கள்தான்’ என்று ஒரு சொற்பொழிவில் எம்.ஆர்.ராதா கேலி செய்வார். தோசை வரை கட்சி ஆக்ரமித்திருக்கிறது.
ஃபிரான்ஸ் நாட்டில் வேகவைத்த இறைச்சியை விற்பது 1765-ம் ஆண்டு வரை தடைசெய்யப்பட்டிருந்தது. மீறி விற்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொலிஞ்சர் என்பவர் பொறித்த இறைச்சியை விற்பனை செய்கிறார் எனக் கைதுசெய்யப்பட்டு அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதில் அவர் வெற்றிபெற்ற பிறகே ஃபிரான்ஸில் இறைச்சி உணவுகள்  விற்கப்பட்டன.
அந்தக் காலங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் களைப்பாறிச் செல்வதற்காகவே வழியில் சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதில் இலவசமாகச் சாப்பாடு போட்டார்கள். விஜயநகரப் பேரரசின் காலத்தில்தான் வழிப்போக்கர்களுக்குச் சோறு விற்கப்படும் கடைகள் தொடங்கப்பட்டன என்கிறார் தமிழ் அறிஞர் தொ.பரமசிவன்.  அவரது, 'அறியப்படாத தமிழகம்’ என்ற நூலில் தமிழ் மக்களின் உணவு முறைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர்தம் உணவுப் பழக்கவழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச் சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்தி முறை, பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.
'சமைத்தல்’ என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அடுப்பில் ஏற்றிச் சமைப்பது 'அடுதல்’ எனப்படும். சமையல் செய்யப்படும் இடம் அட்டில் அல்லது அடுக்களை. நீரிலிட்டு அவித்தல், அவித்து வேகவைத்தல், வறுத்து அவித்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயில் இட்டுப் பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.
நகர்ப்புறமயமாதல், தொடர்புச் சாதனங்​களின் விளம்பரத் தன்மை, பொருளியல் வளர்ச்சி, பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குள் தமிழர்களின் உணவு முறை மிகப்பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது என்பது தொ.பரமசிவன் அவர்களின் ஆதங்கம்.
ஒரு நாளைக்கு நெடுஞ்சாலையில் ஆயிரமாயிரம் கார்கள் போய்வருகின்றன. எங்கும் முறையான கழிப்பறை கிடையாது. குடிநீர் கிடையாது. உணவகம் கிடையாது. முதலுதவி மருத்துவமனைகள் கிடையாது. ஆனால், டோல்கேட் வசூல் மட்டும் முறையாக நடக்கிறது. அடிப்படை வசதிகள் பற்றி யாரும் எந்தப் புகாரும் தெரிவிப்பது இல்லை... தெரிவித்தால் கண்டுகொள்வதும் இல்லை.
சாலையோர கடைகளில் மாமிசம் சுவையாக இருப்பதற்காகவும் உடனடியாக வேக வேண்டும் என்பதற்காகவும் பாரசிடமால் மாத்திரைகளைக் கலக்குகிறார்கள் என்கிறார்கள். சாலையோர உணவகங்களில் தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை மற்றும் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது.
இந்தக் கொடுமை போதாது என்று சமீப காலமாக நெடுஞ்சாலை எங்கும் கும்பகோணம் காபி கடைகள் பத்து அடிக்கு ஒன்றாக முளைத்திருக்கின்றன. இந்தக் கடைகளுக்கும் கும்பகோணத்தின் ஃபில்டர் காபிக்கும் ஒரு ஸ்நானப்பிராப்தியும் கிடையாது. ஏமாற்றுவதற்கு ஒரு பெயர்தானே வேண்டும். எல்லா கடைகளிலும் சொல்லிவைத்தாற்போல செம்பு டபரா, டம்ளர் செட், அதில் பாயசத்தில் காபி தூளைப் போட்டுக் கலக்கியதுபோல ஒரு காபி. பாவம் மக்கள்... இந்தக் கண்றாவியைக் குடித்துவிட்டு வாயை மூடிக்கொண்டு பயணம் செய்கிறார்கள்.
நெடுஞ்சாலை உணவுக் கொள்ளையைப் போல ஊர் அறிந்த மோசடி எதுவுமே இல்லை. ஸ்குவாட் அமைத்து எதை எதையோ அதிரடியாக சோதனை செய்கிறார்களே... அப்படி ஒரு பறக்கும் படை அமைத்து உணவகங்களை சோதனை செய்து தரமற்ற கடைகளை மூடலாம்.
ஒரு பக்கம் பன்னாட்டு உணவங்கள் நம் மக்களை கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் உள்ளுர்வாசிகள் தரமற்ற உணவைத் தந்து மக்களைத் துரத்தியடிக்கிறார்கள். காசு இல்லாமல் உணவுக்குக் கஷ்டப்பட்ட நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்று மக்களிடம் ஓரளவுக்குக் காசு இருக்கிறது. ஆனால், தரமான உணவு கிடைக்காமல் அல்லாடும் நிலை உருவாகியிருக்கிறது.
சமீபத்தில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சாலையோர உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராமல் நுழைந்து, வரிசையில் நின்று தனக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டு மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார். உணவுக்கு அவர் தந்த கட்டணம் வெறும் 21 யுவான். அந்தப் பணத்தில் பெரிய ஹோட்டலில் ஒரு பாட்டில் தண்ணீர்கூட வாங்க முடியாது. நாட்டின் ஜனாதிபதி உணவகத்துக்கு வந்தபோதும், கடையில் ஒரு பரபரப்பும் இல்லை. மக்கள் இயல்பாக அவரோடு இணைந்து சாப்பிட்டுப் போனார்கள்.
நமது அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களை ஒருமுறை ஹைவே மோட்டலுக்குச் சென்று மக்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும்... அது எவ்வளவு பெரிய கொடுமை என்று.
சாலையோர மோட்டல்களை மரண விலாஸ் என்பார் எனது நண்பர். அதைவிட சிறந்த பெயர் இருக்க முடியாதுதானே?

- VIkatan

ரியல் எஸ்டேட் ஹாட் ஸ்பாட்ஸ்! முதலீட்டுக்கேற்ற முக்கிய இடங்கள்...

ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க மந்தநிலைதான் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் எனில், மெட்ரோ நகரங்களில் கடந்த ஓராண்டில் ரியல் எஸ்டேட் விலை 20-30% வீழ்ச்சி கண்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்படவில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் போடப்பட்ட லே-அவுட்களில் மனைகள், மறுவிற்பனை விலை இல்லாமல் மந்தநிலையில் காணப்படுகிறது.
புதிய லே-அவுட்களில் மனை விலை, பழைய லே-அவுட் மறுவிற்பனை விலையைவிடக் குறைவாகப் பல இடங்களில் காணப்படுகிறது. அந்த வகையில் மனையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பது பலரின் பரிந்துரையாக இருக்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீட்டில் லாபம் பார்க்க வேண்டும் எனில், சில அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, குறுகிய காலத் தேவைக்கு உள்ள தொகையை மனை முதலீட்டில் போடக் கூடாது. அதாவது, இந்தப் பணம் இன்னும் 10-15 ஆண்டு களுக்குத் தேவையில்லை என்கிற சூழலில்தான் மனையை முதலீட்டு நோக்கிலோ, பிற்காலத்தில் வீடு கட்டும் நோக்கத்திலோ வாங்க வேண்டும்.
மேலும், இடைப்பட்ட காலத்தில் எதிர்பாராதவிதமாக மனை விலை இறங்கினால் கவலைப்படக் கூடாது. காரணம், ரியல் எஸ்டேட் என்பது நீண்ட காலத்தில்தான் லாபம் தரும். ஆனால், குறுகியகாலத்தில் விலை இறக்கத்தைச் சந்திக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயமாக இருக்கிறது.
ரியல் எஸ்டேட் நிலவரம் பொதுவாகவே சுணக்கமாக இருப்பதால், மனை விலையை பேரம்பேசி விலையைக் குறைக்க முடியும். அதுவும், மொத்த பணமும் தயாராக வைத்திருக்கும் நிலையில் விலையில் கணிசமாகப் பேரம் பேச முடியும்.
இனி, தமிழகம் முழுக்க மனை முதலீட்டுக்கு ஏற்ற முக்கிய இடங்களைக்  தந்துள்ளோம்.
சென்னை புறநகர்!
சென்னை நகருக்குள் ஒரு கிரவுண்ட் (2,400 சதுர அடி) மனை, சாதாரணமாக ஒரு கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது. அந்த வகையில் இங்கு மனை வாங்குவது என்பது நடுத்தர மக்களால் இயலாத காரியம். மேலும், சென்னையை ஒட்டிய பகுதிகளில் காலி மனைகள் இல்லை என்றே சொல்லலாம். எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிவருகின்றன.
முதலீட்டு நோக்கில் மனை வாங்குவது என்றால், சென்னையிலிருந்து 50 - 100 கி.மீ போனால்தான் முடியும் என்கிற நிலை காணப்படுகிறது.
படப்பை - காஞ்சிபுரம்!
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் படப்பை முதலீட்டுக்கு மனை வாங்க ஏற்ற இடமாக இருக்கிறது. இதன் அருகில் அமைந்திருக்கும் ஒரகடம் தொழிற்பேட்டை  இதன் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது.
சென்னை- செங்கல்பட்டு சாலைகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிக எண்ணிக்கை யில் வர ஆரம்பித்திருப்பதால் அங்கு மனை விலை ஏற்கெனவே எகிறிக் கிடக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் வருகிறதா, இல்லையா, எந்தப் பகுதியில் வருகிறது என்பது இன்னும் முடிவாகாத நிலையில் இருப்பதால் இங்கு ரியல் எஸ்டேட் முதலீடு ரிஸ்க் ஆனதாக இருக்கிறது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு குடியிருக்க பலரும் விரும்பு கிறார்கள். அந்த வகையில் இங்கு மனை முதலீட்டுக்கு எப்போதும் ஓரளவுக்கு டிமாண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போதைய நிலையில், செவிலிமேடு - ஓரிக்கை சாலை, காஞ்சிபுரம் - பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஆகிய மூன்று பகுதிகளில் முதலீட்டு நோக்கில் மனை வாங்கிப்போடலாம் என்கிறார்கள்.
செவிலிமேடு - ஓரிக்கை சாலை, ஆற்று ஓரம் அமைந்திருப்பது, 15-20 அடியில் நிலத்தடி நீர் கிடைப்பது. பள்ளிக்கூட வசதி,
காஞ்சியிலிருந்து 3 கி.மீ தொலைவு, நகர எல்லைக்குள் அமைந்திருப்பது போன்றவை கவர்ச்சிகரமான அம்சங்களாக இருக்கின்றன.
காஞ்சிபுரம் - பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலையில் காஞ்சியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள நத்தப்பேட்டை, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் காஞ்சியிலிருந்து 5 - 6 கி.மீட்டரிலுள்ள சிம்மசமுத்திரம், சிறுகாவேரிபாக்கம், அம்பி பை-பாஸ் சாலை போன்றவையும் முதலீட்டுக்கு ஏற்ற பகுதிகளாக உள்ளன.
மேலே சொல்லப்பட்ட பகுதிகளில் மனை வாங்கிப்போட்டால் 3-5 ஆண்டுகளில் விலை இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர்!
ரியால்டிகாம்பஸ் டாட் காம் நிறுவனத் தின் நிறுவனர் சங்கர ஸ்ரீனிவாசனுடன் கோவை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்துப் பேசி னோம். ''கடந்த சில ஆண்டுகளாக கோவையில் முதலீடு செய்யும் என்.ஆர்.ஐ களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், மனை விலை என்பது கடந்த ஓராண்டாகப் பெரிய அளவில் உயரவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் ரியல் எஸ்டேட் சூடுபிடிக்க வாய்ப்பு அதிகம். விலை குறைவாக இருக்கும்போது மனை வாங்குவது லாபகரமாக இருக்கும்'' என்றார்.
திருச்சி!
தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியில் இப்போது ரியல் எஸ்டேட் ஹாட் ஸ்பாட்கள் என மதுரை ரோடு மற்றும் சென்னை ரோடு பகுதிகளைத்தான் குறிப்பிட வேண்டும். மதுரை சாலையில் பஞ்சத்தூர், நாகமங்கலம் போன்றவை முதலீட்டுக்கு ஏற்ற பகுதிகளாக இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் அரசு நிறுவனங்கள், ஐ.டி பூங்காக்கள் வந்துகொண்டிருப்பது விலை ஏற்றத்துக்குக் காரணங்களாக இருக்கின்றது.
சென்னை சாலையில் சமயபுரம் டோல்கேட் வரை லே-அவுட்கள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. இங்கு மெடிக்கல் மற்றும் இன்ஜினீயரிங் கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் வந்துகொண்டிருக்கின்றன.
நடுத்தர மக்களின் குடியிருப்பு தேவைகளைப் பூர்த்திசெய்யும் இடங்களாக வயலூர் சாலை, திருவானைக் கோவில் பகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் வழியில் முதலீட்டு நோக்கில் வாங்கிப்போடுவது பலனளிக்கும் என்கின்றனர்.
மதுரை!
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் சாலையில் அதிக எண்ணிக்கையில் புதிதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடங்கள் வந்துகொண்டிருப்பதால், இந்தப் பகுதியில் மனை முதலீடு அதிகரித்து வருகிறது. போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், கோயில்கள் வந்திருப்பதால் புதூர் முதல் அழகர்கோவில் சாலை பகுதியில் குடியிருப்பு இடங்களுக்குத் தேவை கூடியிருக்கிறது.
மருத்துவமனை, பள்ளிக்கூட வசதி ஏற்பட்டுவரும் மாட்டுத்தாவணி - அருப்புக்கோட்டை ரிங் ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட வளர்ச்சி ஏற்பட்டுவரும் அவனியாபுரம் - ஏர்போர்ட் சாலையிலும் மனை முதலீடு அதிகரித்து வருகிறது.
 திருநெல்வேலி!
நெல்லை புறநகர்களில் மனை வாங்குவது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப புது லே-அவுட்களும் வந்துகொண்டிருக் கின்றன. ஏற்கெனவே போடப்பட்ட கே.டி.சி நகர், பெருமாள்புரத்திலும் மனை மறுவிற்பனை நடந்துவருகிறது. பேட்டை திருப்பணி கரிசல்குளம், திருமால் நகர் பகுதியையட்டி திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம் சாலைகளை இணைக்கும் ரிங் ரோடு வரவிருப்பதால் இந்தப் பகுதியில் வீட்டு மனைகளுக்கு புது டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது.
ரெட்டியார்பட்டி ஆல் நகரில் மனைகளை வாங்கிப்போட்டால் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள். இந்தப் பகுதியில் நான்குவழிச் சாலை போகிறது என்பதால் இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.
தகவல் தொழில்நுட்ப பூங்காக் களுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்த வசந்தம் நகர், முல்லை நகர், நாங்குநேரி-பூம்புகாரில் மனைகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இங்கு ஐ.டி நிறுவனங்கள் முழு அளவில் இயங்க ஆரம்பிக்கவில்லை என்பதால், இந்தக் குறைந்த விலை. நிறுவனங்கள் வந்துவிட்டால் முதலீட்டில் கணிசமான லாபம் பார்க்க முடியும்.
தூத்துக்குடி!
தூத்துக்குடி நகரத்தில் ரியல் எஸ்டேட் விலை சென்னைக்கு இணையாக இருக்கிறது. அந்த வகையில் முதலீட்டு மனைகள் என்கிறபோது புறநகர்களைத்தான் நாடவேண்டி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம், தேரிரோடு, புதியம்புத்தூர் பகுதிகள்தான் வீடு மற்றும் தொழில் செய்வதற்காக விற்கப்படுவதும் வாங்கப்படுவதுமான பகுதியாக இருந்துவருகிறது. கதிர்வேல் நகர், பாரதிநகர், அன்னை தெரசா நகர், பால்பாண்டிநகர் போன்ற புதிதாக உருவாகிவரும் நகர்களைக் குறிப்பிடலாம். இவை, தூத்துக்குடி மாநகராட்சியின் பகுதிகளாக இருப்பது கூடுதல் சிறப்பு.  தூத்துக்குடியிலிருந்து கொஞ்சம் அவுட்டர் பகுதிகளான புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம், தங்கமாள்புரம், சக்கமாள்புரம், தேரி ரோடு பகுதிகளில் 50 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரையிலும் விலை இருந்துவருகிறது.
இந்தப் பகுதியில் போக்குவரத்து வசதியும் தண்ணீர் வசதியும் ஓரளவு நன்றாக இருக்கிறது. நகருக்குள் வாடகைக்குக் குடியிருந்து வருபவர்கள் புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தைத் தேர்வு செய்து வருகிறார்கள். இங்குள்ள புதியம்புத்தூர் பகுதியும் மனை முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது.
 சேலம்!
மனை  வாங்குபவர்களுக்கு ஏற்ற இடங்களாக இருப்பது சேலத்தின் வட மேற்கில் உள்ள சேலம் - ஓமலூர் மெயின் ரோடு, சேலத்தின் வடகிழக்கில் உள்ள அயோத்தியாபட்டணம் முதல் குப்பனூர் வரையில் உள்ள பகுதிகள், சேலத்தின் தென்மேற்கே உள்ள பழைய சூரமங்கலம் பகுதிகள்தான்.
ஓசூர்!
மக்கள் வசிக்கும் பகுதிகள் விரிவடைந்து வருவதால் ஓசூரில் நிலவரம் நன்றாகவே உள்ளது. இரண்டு ஏக்கர் கிடைத்தால்கூட மனைகளைப் பிரித்து விற்பனை செய்யும் சின்ன புரமோட்டர்கள் அதிகரித்துள்ளனர். ஓசூர் புறவழிச்சாலை மற்றும் டொயோட்டா நிறுவனம் இங்கு ஓர் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது என்கிற பேச்சு உள்ளது.ஓசூரின் நான்கு பக்கமும் விரிவடைந்தாலும் ஓசூரை பொறுத்தவரை ஆல்டைம் ஃபேவரைட் ஏரியா என்றால் மத்திகிரி செல்லும் வழிதான். சென்ற வருடத்தைவிட 5 - 10 சதவிகிதம் வரை ரியல் எஸ்டேட் வளர்ச்சி உள்ளது. அதேசமயம், வழிகாட்டி மதிப்பைவிட சந்தை மதிப்பு மிகக் குறைவாக இருப்பது பெரிய தேக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி!
கடந்த ஒரு வருடமாகவே இங்கு ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லை. இங்குள்ள பல முக்கிய அரசு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள பட்டுவாடா இல்லை என்பதால் இப்போது நிலைமை படு டல்லாக இருக்கிறதாம்.
தவிர, வீடு கட்ட விரும்பும் நபர்களுக்கு அரசு கொடுத்த கடனுதவியும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளதாம். இதனால், ரியல் எஸ்டேட்டில் பெரும் தேக்கம் நிலவி வருகிறது. கடலூர் மற்றும் விழுப்புரம், திண்டிவனம் வழியில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வளர்ச்சி இல்லை என்பதால் ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையில் உள்ளது.
இப்போதிருக்கும் பொருளாதார மந்தநிலை  மாறும்போது, கடனுக்குக்கான வட்டி விகிதம்  குறையும். அப்போது மனை விலை வேகமாக உயர அதிக வாய்ப்புண்டு.
அந்த வகையில், முதலீடு மற்றும் சொந்தத் தேவைக்காக மனை வாங்குபவர்களுக்கு இது சரியான நேரம்!
தொகுப்பு: நீரை.மகேந்திரன், பி.ஆண்டனிராஜ், வீ.கே.ரமேஷ்,
எஸ்.சரவணப்பெருமாள்.

முக்கிய குறிப்பு: இங்கே தரப்பட்டிருக்கும் மனை விலை என்பது தோராயமானதே. மனை அமைந்திருக்கும் இடம், அடிப்படை வசதிகளைப் பொறுத்து விலை மாறுபடும்.

- Vikatan