Tuesday, May 12, 2015

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா நடத்திய ஆட்சி பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்...

- vikatan article

சுப்பிரமணியன் சுவாமி முதல் நீதிபதி குமாரசாமி வரை பல திடுக்கிடும் திருப்பங்களைக்கொண்ட வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஆங்கில இலக்கிய வரலாற்றில் வெளி வந்த அரசியல் நாவல்களைப் போல விறுவிறுப்பானது.
இந்த விறுவிறுப்பின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் சுப்பிரமணியன் சுவாமி. ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் அறிவித்த நாள், குளவிக் கூட்டில் கைவைத்த கதையாக முடிந்தது. அவர் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டார். எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் என்ற அந்த மரண வினாடிகள் இதோ...

ஸ்கூப்...

1995, ஏப்ரல் 1-ம் தேதி... முட்டாள்கள் தினம்... ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சில பத்திரிகையாளர்களை சென்னை சாந்தோமில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்து இருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தி ஏதாவது இருக்கும் என்று நினைத்துத்தான், பத்திரிகையாளர்களும் அங்கு போய் இருந்தனர். சரியாக 11.30 மணிக்கு பத்திரிகையாளர்களிடம் பேசத் தொடங்கிய சுவாமி ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, ஆளுநர் சென்னா ரெட்டி எனக்கு அனுமதி அளித்துவிட்டார்’’ என்று சொன்னார். ‘‘சுவாமி சொல்வது சாதாரண தகவல் அல்ல. அகில இந்திய அளவில் ஸ்கூப் நியூஸ். இந்திய அரசியலில் புயலைக் கிளப்பப் போகும் செய்தி’’ என்பது விவரம் தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே புரிந்தது. ஆனால், சுவாமி சொல்வதை நம்பவும் முடிய வில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
‘‘முட்டாள்கள் தினத்தன்று சுவாமி நம்மை அழைத்து ஏதோ வேடிக்கை காட்டுகிறார்’’ என்றே அவர்களில் சிலர் நினைத்தனர். ஆனால், ஆளுநர் கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை கொடுத்து, தான் சொன்னது வேடிக்கைக்காக அல்ல. உண்மையிலேயே ஜெயலலிதா மீது வழக்குத் தொடர ஆளுநர் தனக்கு அனுமதி அளித்துவிட்டார் என்பதை சுவாமி உறுதி செய்தார். அதன் பிறகு பற்றிக் கொண்டது தமிழகம். பதைபதைத்துப் போனது போயஸ் கார்டன். நிதானம் இழந்தனர் அ.தி.மு.க. தொண்டர்கள். 18 ஆண்டு காலம் பல நீதிமன்றங்களை இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கின் தொடக்கம் இப்படித்தான் தொடங்கியது. இந்த நேரத்தில், 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா நடத்திய ஆட்சி பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்...
1991-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து சந்தித்தன. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி, பெரும்புதூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியாகி இருந்தார். அந்தக் கோர மரணம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அனுதாப அலையை இந்தியா முழுவதிலும் உருவாக்கி வைத்திருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா, ராஜீவ் அனுதாப அலையின் வேகத்தில் அமோகமாக வெற்றி பெற்றுக் கரையேறினார். தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா முதல் முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒரு மாநிலத்தின் உச்சக்கட்ட அதிகாரம்... செல்வாக்கை அடைந்துவிட்ட ஜெயலலிதாவிற்கு தான் என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? எதற்கு செய்கிறோம்? என்ற எந்தப்புரிதலும் இல்லாமல் போனது. ஏனோதானோவென்று நிர்வாகத்தை நடத்தினார். அதிகாரமிக்க முதல்வராக ஜெயலலிதாவும், அவருக்குப் பின்னால் இருந்து அதிகாரம் செலுத்தும் நிழல் முதலமைச்சராக சசிகலாவும் செயல்பட்டனர். சசிகலா தவிர்த்து, அவருடைய ரத்த உறவுகள், தூரத்து உறவுகள், உறவுகளின் உறவுகள் என ஆளுக்கொரு அதிகார மையங்களாகச் செயல்பட்டனர். இவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், பகுதி, வட்டம், ஒன்றியம் என்று அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தமிழகத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தனர். ஜெயலலிதாவும் சசிகலாவும் கண்ணில் பட்ட கட்டடங்களை எல்லாம் தங்களின் சொத்துக்களாக மாற்றிக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு சொத்துக்களை விற்க மறுத்தவர்கள், ஆட்டோவில் ஆள் அனுப்பி மிரட்டப்பட்டனர். குண்டர்களால் தாக்கப்பட்டனர். போலீஸ்காரர்களை வைத்து பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கப்பட்டனர். சொத்துக்கள் வைத்திருக்கும் அனைவரும், எப்போது நம்முடைய வீட்டிற்கு ஆட்டோ வருமோ என்று அஞ்சி அஞ்சி நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தனர். உணவுப் பொருள் விநியோகம், குடிநீர், மருத்துவம், சுகாதாரம், போலீஸ், பொதுப்பணித்துறை என அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் குடியேறின.
தமிழகத்தின் இருண்ட காலம், தமிழகத்தின் கற்காலம் என்று ஜெயலலிதாவின் அன்றைய ஆட்சியை எதிர்க் கட்சிகள் மேடைகளில் வர்ணித்தன. அந்த நேரத்தில்தான், ஜெயலலிதா மீது வழக்குத் தொடர தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அன்றைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டிருந்தார். ஒரு அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர வேண்டுமானால் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. அதனால், சுவாமி ஆளுநரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அதில் நீண்ட நாள்களாக கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தார். இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுவாமியின் கோரிக்கையில் கவர்னர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று நாள் குறித்தது. இந்த சூழ்நிலையில்தான் ஆளுநர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார். அந்த அனுமதிக் கடிதத்தைத்தான் சுவாமி, ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டு பரபரப்பைப் பற்ற வைத்தார். இப்படித்தான் தொடங்கியது சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் அத்தியாயம்.
சுவாமி அனுமதி கொடுக்கும் கடிதத்தை எழுதுவதற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே, ஆளுநர் சென்னா ரெட்டியின் மனக்கணக்குகள், மத்திய நரசிம்மராவ் அரசுடன் அவர் நடத்திய ஆலோசனைகள், அதன்பிறகும் அவர் மனதில் அலையடித்தக் குழப்பங்கள் என்று ராஜ்பவன் ஒருவிதமான அசாதாரண சூழ்நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. அதேசமயம் ஆத்திரம், கொந்தளிப்பு, பயம் என்று போயஸ் கார்டன் மிகுந்த படபடப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த திக்... திக்... நிமிடங்கள்.

ராஜ்பவன் டைரி குறிப்பு!

 மார்ச் 25 முதல் ஏப்ரல் 2... மார்ச் 25, சனிக்கிழமை மாலை 4 மணி...
கிண்டியில் உள்ள ராஜ்பவனில் புள்ளிமான்கள் துள்ளி ஓடும் சத்தம் தெளிவாகக் கேட்கக்கூடிய நிசப்தம். ஆளுநர் சென்னா ரெட்டி தன் ‘ஸ்டடி’ அறையில் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி கொடுத்த ஊழல் புகார் அடங்கிய ‘பைண்ட்’ வால்யூம்களை மறுபடியும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு, சுவாமிக்கு அனுமதியளிக்கும் ‘டிராஃப்ட்’ உத்தரவில் கையெழுத்திடுகிறார். மார்ச் 30, வியாழக்கிழமை: பிற்பகல் 2 மணி...
 மார்ச் 30, வியாழக்கிழமை: பிற்பகல் 2 மணி...
சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பி தாக்கப்பட்ட தகவல் அடங்கிய முழு அறிக்கை ஆளுநருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. ‘‘எதிர்க் கட்சித் தலைவருக்கே இந்தக் கதியா?’’ என்று நொந்துகொள்கிறார் சென்னா ரெட்டி. சுவாமி கொடுத்த மனு மீது முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் மே மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தும், சில காரணங்களுக்காக விரைவாக முடிவு எடுத்துவிட்டார். அனுமதி உத்தரவின் ‘Fair Copy’யை வரவழைத்து சரிபார்க்கிறார் சென்னாரெட்டி.
 மார்ச் 31, வெள்ளிக்கிழமை: காலை 10 மணி...
சென்னா ரெட்டி தன் செயலாளர் ஷீலா ப்ரியாவிடம் ‘‘சுவாமியைச் சென்னையிலேயே இருக்கச் சொல்லுங்கள். எங்கேயும் போகவேண்டாம். ராஜ்பவனிலிருந்து சிறப்புக் கடிதம் ஒன்று பர்சனலாக டெலிவரி செய்யப்படும்’’ என்று கூறச் சொல்கிறார். ஷீலாவும் சுவாமியிடம் விவரத்தைக் கூறுகிறார். இதற்கிடையில், டெல்லியிலிருந்து பிரதமர் அலுவலகத்திலிருந்தும் உள்துறை அமைச்சகத்திலிருந்தும் ஆளுநருக்கு டெலிபோன்கால்கள். பிரதமர் ஆந்திராவுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டாரா என்று சென்னா ரெட்டி விசாரிக்கிறார். இரவு ஏழு மணி சுமாருக்கு அம்பாஸடர் காரில் சுவாமியின் சாந்தோம் வீட்டுக்கு ஒப்புதல் கடிதம் ஓர் அலுவலர் மூலம் கொடுத்தனுப்பப்பட்டது.
 ஏப்ரல் 1, சனிக்கிழமை: காலை 10.30 மணி...
சுப்பிரமணியம் சுவாமியின் சாந்தோம் பங்களா ‘களை’ கட்டியிருக்கிறது. முதலில் முன்னாள் அமைச்சர் ராசாராம் வந்தார். அவரைத் தொடர்ந்து தரன் எம்.பி., ஜனதா கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிருபர்கள், இருபது போட்டோகிராபர்கள், தூர்தர்ஷன் உட்பட ஐந்து டெலிவிஷன் காமிரா யூனிட்டுகள் ‘கான்ஃப்ரன்ஸ் ஹாலை‘ அடைத்துக் கொண்டிருந்தன. எதைப் பற்றி ‘பிரஸ் மீட்’ என்று நிருபர்கள் மத்தியில் ஏகப்பட்ட விவாதங்கள்.
 காலை 11 மணி:
சந்திரலேகா பின்தொடர சுவாமி வருகிறார், கையில் பெரிய ப்ரீப்கேஸ். ‘‘பெட்டிக்குள் என்ன ஜெயலலிதாவா, சசிகலாவா?’’ என்று நிருபர்கள் கேட்கிறார்கள். சுவாமியும் சிரித்துக்கொண்டே, ‘‘இன்னும் அந்த சைஸில் பெட்டி தயாரிக்கப்படவில்லை’’ என்று ஜோக் அடிக்கிறார். அனைவரது முகத்திலும் டென்ஷன். சுவாமி தன் உரையைத் துவக்குகிறார். பின்டிராப் சைலன்ஸ் வெளியே ஏகப்பட்ட போலீஸ்.
 பகல் 11.30 மணி:
ராஜ்பவனில் செக்யூரிட்டி பலப்படுத்தப்படுகிறது. மெயின் கேட் இழுத்துப் பூட்டப்படுகிறது. சுவாமியின் பிரஸ் மீட் தொடங்கிவிட்டது என்ற விவரம் சென்னா ரெட்டியிடம் தெரிவிக்கப்பட்டது. யுகாதி பண்டிகையை கவர்னர் தன் குடும்பத்துடன் கொண்டாடுகிறார். பஞ்சாங்கம் படித்துக் கொண்டிருக்கும் பண்டிதர் ‘‘புது வருடம் எல்லா நலன்களையும் மக்களுக்குப் பயக்கும். நாடு சுபிட்சம் அடையும். எதிரிகள் காணாமல் போவார்கள்’’ என்று தெலுங்கில் உரக்கப் படிக்கிறார். இதை ஆளுநர் உள்ளூர ரசித்து மெல்லியதாகச் சிரிக்கிறார்.
 12.30 மணி:
போயஸ் தோட்டத்தில் ‘டல் அடிக்கிறது. கவர்னர் சுவாமிக்குக் கொடுத்த அனுமதி கடிதத்தின் ‘காப்பி’ முதல்வர் பார்வைக்கு வைக்கப்படுகிறது. முதல்வர் அவசரமாகத் தலைமைச் செயலர், டி.ஜி.பி., சசிகலா ஆகியோருடன் தனித்தனியாக விவாதிக்கிறார். முதல்வரின் இணைச் செயலர் ஜவஹர்பாபு விமான கம்பெனிக்கு போன் செய்து மூன்று டிக்கெட்டுகளை அன்று மாலை டெல்லி செல்லும் விமானத்தில் ரிசர்வ் செய்கிறார்.
 1 மணி:
பிரஸ்மீட் முடிந்த கையோடு சுவாமியும் சந்திரலேகாவும் ராஜ்பவன் சென்று சென்னா ரெட்டியைச் சந்தித்து ‘யுகாதி வாழ்த்துக்களை’த் தெரிவித்து, அனுமதி அளித்ததற்கு நன்றி கூறுகிறார்கள். கவர்னர் புன்னகையோடு ‘‘இனி எல்லாம் உங்கள் கையில்’’ என்கிறார். சுவாமிக்கும் சந்திரலேகாவுக்கும் யுகாதி இனிப்புகளை கவர்னர் வழங்குகிறார்.
 4 மணி:
பத்திரிகையாளர் சோ, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுப்பிரமணியம் சுவாமியை அவரது சாந்தோம் இல்லத்தில் சந்திக்கிறார்கள்.
 5 மணி:
டெல்லி செல்லும் விமானத்தில் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், பொதுத்துறைச் செயலர் பாலகிருஷ்ணன், சசிகலாவின் தம்பி சுதாகர் ஆகியோர் பயணமானார்கள்.
 இரவு 7 மணி:
பிரதமரின் மகன் பிரபாகர் ராவ் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். காத்திருந்த தமிழக உளவுத் துறை போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை வேகமாக விமான நிலையத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இளைப்பாறி பிறகு போயஸ் தோட்டம் செல்கிறார் பிரபாகர் ராவ்.
 ஏப்ரல் 2, ஞாயிற்றுக்கிழமை: காலை 10 மணி:
இந்தியாவின் சிறந்த வழக்கறிஞர்களான கே.கே.வேணுகோபால், கே.பராசரன், ராம்ஜெத்மலானி ஆகியோரை டெல்லியில் சந்தித்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் வழக்கை எடுத்து நடத்தும்படி கேட்கிறார் தமிழகத் தலைமைச் செயலாளர். அவர்கள் ‘சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தள்ளுபடியாகிவிட்டால் முதல்வருக்கு அவமானம். ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கேஸை நடத்தி ‘ஏதாவது செய்ய முடியுமா?’ என்று வேண்டுமானால் பார்க்கலாம்’ என ஆலோசனை கூறுகிறார்கள்.
 மாலை 5 மணி:
ஆளுநரின் கொடும்பாவி தென்மாவட்டங்களில் எரிக்கப்படுவதாக ராஜ்பவனுக்கு தகவல்கள் வருகின்றன. ஆளுநரிடம் ஏ.டி.சி சென்று ‘‘எல்லா இடங்களிலும் கொடும்பாவி கொளுத்துகிறார்கள்... இந்த நிலையில்...’’ என்று இழுத்தபோது. சிலிர்த்தெழுந்த ரெட்டி ‘‘என் டூர் புரோக்ராமில் எந்தவித மாற்றமும் இல்லை. எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை’’ என்று கூறி ஏ.டி.சியை முறைத்தார்.

“ஜெயலலிதா பதவி விலக மறுத்தால்” சுப்பிரமணியம் சுவாமி பேட்டி

ஆளுநர் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்ட சுப்பிரமணியன் சுவாமி, ஜூனியர் விகடன் இதழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.. அதில், ‘‘இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் முதலமைச்சர் மீது ஊழல் குற்றங்களை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல் முறை. ஜெயலலிதா மட்டும் சரியாக ஒத்துழைத்தால் மூன்றே மாதத்தில் வழக்கை முடித்துவிடலாம் என்றார். அந்தப் பேட்டி,
 ‘‘ஏப்ரல் முதல் தேதி வரையில் மக்கள் உங்களை ‘சீரியஸ்’ ஆக எடுத்துக் கொள்ளவில்லை. பத்திரிகையாளர்களும் உங்கள் ‘பிரஸ் மீட்’டை பொழுதுபோக்காகவே மதித்தார்கள். இப்போது இந்தத் திடீர் திருப்பத்துக்குக் காரணம் என்ன?’’
‘‘தமிழகத்தில் எனக்கு எதிராக அ.தி.மு.க மட்டும் இல்லை. இடதுசாரிகள், பாரதிய ஜனதா, தி.முக., ம.தி.முக., ஏன் சில காங்கிரஸ்காரர்கள், தமிழக உளவுத்துறை ஐ.ஜி., எல்.டி.டி.ஈ யின் பாதாளம் வரை பாயும் பணம் என்று பலர் பல்வேறு வழிகளில் என்னை இதுநாள் வரை ஒடுக்கப் பார்த்தார்கள். என்னை மிரட்டியும் பணிய வைக்க முடியாது; பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது! அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்தவன் நான். இப்போதுதான் மக்கள் என்னை உணரத் தொடங்கி உள்ளனர். ‘மக்கள் முதலில் நல்ல அரசியல்வாதியை அசட்டை செய்வார்கள். பிறகு கிண்டல் செய்வார்கள்; பிறகு அவர்களைக் கண்டு பயப்படுவார்கள். பிறகுதான் நன்கு தெரிந்து பின்தொடருவார்கள்’ என்று காந்தி 40 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.’’
 ‘‘ஒரு வேளை ஒவ்வொரு தடவையும் ‘கெடு’ கொடுத்துக் கொண்டே வந்து ஜெயலலிதா அரசை ஒன்றும் செய்ய முடியாமல் போனதால், மக்கள் மத்தியில் உங்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படாதா?’’
‘‘தி.மு.க அரசை உடனடியாக நான் கலைத்ததற்குக் காரணம் அப்போது நான் மத்திய அமைச்சராக இருந்தேன். ராமகிருஷ்ண ஹெக்டேயை கர்நாடக முதல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க நான் காரணமாக இருந்தேன். இப்போது அதைப் பற்றி யார் பேசுகிறார்கள். சிறிது காலம் கஷ்டங்களை அனுபவித்தால்தான் மக்களுக்கு என் நடவடிக்கையின் முக்கியத்துவம் புரியும். மேலும், நான் சட்டபூர்வமாக இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டு ஜெயலலிதாவை அகற்றப் பார்க்கிறேன். இதற்குக் காலதாமதம் ஆகும்.’’
 ‘‘ஆளுநர் உத்தரவு தர ஏன் சுமார் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டார். அவருக்கு ஏதாவது கட்டாயங்கள் இருந்தனவா?’’
‘‘காலதாமதம் ஆனது உண்மைதான். என் ‘கேஸ்’ மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நான் சென்னா ரெட்டியைச் சந்தேகப்படவில்லை- அவரை யாரும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. ஆனாலும், நான் டெல்லியில் உச்ச நீதிமன்றம் சென்று அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வகை செய்தேன். அதற்கு கவர்னர் விளக்கம் அளிக்கையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரலாமா என்பதை முடிவு செய்ய மே மாதம் 31-ம் தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், மார்ச் 25-ம் தேதியே அனுமதி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டார்.’’
 ‘‘ஊழல் புகார்களை அள்ளி வீசுவது தமிழக அரசியல் வாதிகளுக்கு புதியதல்ல; தி.மு.க மீது சர்க்காரியா கமிஷன் போடப்பட்டது. எம்.ஜி.ஆர். மீது ஏகப்பட்ட புகார்கள். ஆனால், மக்கள் இவற்றை ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளவில்லையே!’’
‘‘யார் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு ஊழல் அரசியல்வாதி மற்றொரு ஊழல் அரசியல்வாதியைக் குற்றம் சாட்டுவதைத்தான் தமிழக மக்கள் இதுநாள்வரை பார்த்து வந்தார்கள். ஆனால், என்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஜெயலலிதா மீதான புகார்களை ஆதாரத்துடன் அல்லவா கொடுத்திருக்கிறேன்.’’
 ‘‘சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கோர்ட்டில் நிரூபணம் ஆகாத வரையில் ஜெயலலிதா சட்டத்தின் முன்பு நிரபராதிதானே. ஏன் அவரைப் பதவி விலகும்படி கூறுகிறீர்கள்!’’
‘‘இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு முதல்வர் மீது ஆளுநர் லஞ்ச ஊழல் குற்றங்களைப் பற்றி விசாரிக்க அனுமதி கொடுத்தது இதுவே முதல் முறையாகும். இப்போது சட்டத்தின் முன்பு ஜெயலலிதா குற்றவாளி. நான் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் அங்கீகாரம் பெறுகிறேன். எல்லாமே தன் சுண்டுவிரலின்கீழ் வைத்திருக்கும்போது ஜெயலலிதாவை எப்படி விசாரிக்க முடியும்! சாட்சியங்கள் என்னவாகும்? அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யார் முன்வருவார்கள்? போலீஸையும் உள்துறையையும் கையில் வைத்திருக்கும் முதல்வரை யார் எதிர்ப்பார்கள்?’’
 ‘‘உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?’’
‘‘இதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதியின் முன்பு முதலில் நான் ஒரு புகார் மனு தர வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ யார் வேண்டுமானாலும் அமைக்கலாம். தமிழக அரசு இதைச் செய்யும் என்று நினைக்க முடியுமா? ஆகவே, மத்திய அரசுதான் நியமிக்க வேண்டும். ஜெயலலிதா பதவி விலக மறுத்தால், சிறப்பு நீதிமன்றம் புது டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துவேன். இது ஜெயலலிதாவை அடிக்கடி டெல்லிக்கு இழுத்தடிக்க வசதியாக இருக்கும். விசாரணையின் முழுப்பொறுப்பும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும். எனக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள். ஜெயலலிதா முதலில் ‘பெயில்’ வாங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அவர் மீது வாரண்ட் தரப்படும். ஆனால், முதல் நாள் அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். பிறகு வேண்டுமானால் அவர் வழக்கறிஞர் வைத்து வாதாடலாம். அவர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ய வேண்டியது அவசியம். நான் கொடுத்த ஆவணங்களும் சி.பி.ஐ கண்டுபிடித்த ரெக்கார்டுகளும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ‘டே டு டே’ முறையில் தினமும் தொடரும்.’’
சுவாமி உற்சாகமாக இப்படிப் பத்திரிகைகளுக்குப் பேட்டிகளைத் தட்டிக் கொண்டிருந்த நேரத்தில் போயஸ் கார்டனில் நிம்மதி தொலைத்து தூக்கமின்றித் தவிக்கத் தொடங்கினார் ஜெயலலிதா. அன்றைய போயஸ் கார்டன் காட்சிகள்...

போயஸ் கார்டன் காட்சிகள்

ஆளுநர் மாளிகையில் இருந்து, ஜெயலலிதாவிற்கு அந்தக் கடிதத்தின் நகல் 1995, ஏப்ரல் 1-ம் தேதி, சரியாக பகல் 12.30 மணிக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை படித்து ஆத்திரம்... இயலாமை... வெறுப்பு... என்று நிதானம் இழந்த நிலையில் பதற்றத்தின் உச்சத்திற்குப் போன ஜெயலலிதா, அப்போது தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கே.வை விளாசித் தள்ளினார். ‘‘நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம். வெளியே போங்கள். நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்காவது போகிறேன்’’ என்று கத்தினார். அப்போது ஏற்பட்ட டென்ஷன் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வெளியாகும் கடைசி நாள் வரை தீரவில்லை. அதுதான் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும், அழிந்துபோன எல்.டி.டி.ஈ. இயக்கத்தால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று மனுசெய்து கொண்டிருந்தார். டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பராசரன், ராம் ஜெத்மலானி, கபில்சிபல் ஆகியோருடன் ஆளுநரின் உத்தரவுக்கு தடை வாங்க முடியுமா? என்று ஆலோசனை நடத்தினார்.
அத்துடன் பல இடங்களில் ஆலோசனை கேட்கத் தொடங்கினார். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பராசரன், ராம் ஜெத்மலானி, கபில் சிபல் என எல்லோரிடமும் பேசினார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்று கேட்டார். எடுத்த எடுப்பில், உச்ச நீதிமன்றம் வர வேண்டாம். முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றனர். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்ட ஜெயலலிதா, கவர்னரின் அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போகிறேன். இதில் இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.
பொறுமையாகக் கேட்ட ஆர்.வி. ‘‘இது மிகப்பெரிய விபரீதமாகப் போகும். வழக்குத் தொடுத்தால் அது பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகும். அதனால் உங்களுக்கு ஊழல்வாதி என்ற இமேஜ் ஏற்படும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக, இப்போதே உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொருவரை முதல்வராக அமரச் செய்துவிட்டு, நீங்கள் வழக்கை எதிர் கொள்ளுங்கள். அதனால், உங்கள் இமேஜ் பெரியளவில் உயரும். நீங்கள் ராஜினாமா செய்தால், உங்களை உரிய மரியாதையுடன் வரவேற்று, உங்கள் ராஜினாமா கடிதத்தை கவர்னர் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு நான் பொறுப்பு. அங்கு உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படாது என்றும் என்னால் உறுதியளிக்க முடியும்’’ என்றார். ஆனால், ஜெயலலிதா அதைச் செய்யவில்லை. மாறாக நீதிமன்றம் போகவே முடிவெடுத்தார்.

கலைஞர் கொடுத்த கனமான மனு!

ஏப்ரல் 15, 1995-ல் தி.மு.க. சார்பில், தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன என்று சொல்லி 539 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தி.மு.க. சார்பில், கருணாநிதி, அன்பழகன், முரசொலி மாறன் ஆகியோர் கவர்னரிடம் கொண்டுபோய் கொடுத்தனர். ஏற்கெனவே பீஷ்ம நாராயண் சிங் ஆளுநராக இருந்தபோது, 18 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை அவரிடம் தி.மு.க தந்தது. பீஷ்ம நாராயண் சிங் அதை வாங்கிக் கொண்டாரே தவிர, அதில் எந்த நடவடிகையும் எடுக்கவில்லை. ஆனால், சென்னா ரெட்டி நிச்சயம் அனுமதி தருவார் என்ற நம்பிக்கையில் அப்போது தந்த பதினெட்டுக் குற்றச்சாட்டுகளுடன் புதியதாகப் பத்து ஊழல்களைச் சேர்த்து 28 குற்றச்சாட்டுகளாக ஆளுநரிடம் அளித்தார் கலைஞர்.
‘முந்தைய கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் அனுமதி மறுத்த அதே குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த வந்த கவர்னர் எப்படி அனுமதி தர முடியும்..?’’ என்ற கேள்வி முன்கூட்டியே எழுந்தது. அதற்குப் பதிலாக 1986-ல் நடைபெற்ற ஒரு வழக்கை குறிப்பிட்டு அந்த வழக்கில் ‘பின்னால் பதவிக்கு வந்த ஒருவர் முன்னால் பதவியில் இருந்தவர் எடுத்த முடிவுகளுக்கு மாறான முடிவு எடுக்கச் சட்டத் தடை எதுவுமில்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பதை தங்கள் மகஜரிலேயே குறிப்பிட்டு இருந்தது தி.மு.க.!
குற்றப்பட்டியலில் உள்ள மிக விஷயம் முதலமைச்சரின் சொத்து சம்பந்தப்பட்டது. ‘1990-91-ம் ஆண்டு கணக்குப்படி ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 1.89 கோடி. ஆனால், 91-92 ஆண்டு் கணக்குப்படி 2.60 கோடி என்றும் முதல்வரின் சொத்து மதிப்பு வருமான வரித்துறைக்குத் தரப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கும் முதல்வரின் சொத்துக்களும் வருமானமும் இத்தனை விரைவாக உயர்ந்திருப்பது எப்படி?’’ என்பதுதான் குற்றச்சாட்டுப் பட்டியல் மனுவில் இருந்த முக்கிய விஷயம். இந்த மனுவை ஆளுநரிடம் அளிக்கக் கலைஞர் வந்தபோது முரசொலி மாறன், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசுவாமி ஆகியோரும் உடன் வந்தனர். அதன்பின் அறிவாலயத்தில் பிரஸ்மீட் நடந்தது.
‘‘டெல்லியில் அரசியல் நிலைமை சரியில்லை போல் தெரிகிறதே... அப்படியிருக்கும்போது முதல்வர் மீது வழக்குத் தொடர உங்களுக்கு எப்படி அனுமதி கிடைக்கும்?’’ என்று ஒரு நிருபர் கேட்க, ‘‘அனுமதி தருவதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி தந்தால் போதும் என்றுதான் ஆளுநரிடம் கேட்டிருக்கிறோம். நிறைய ஆதாரங்களைத் தந்திருக்கிறோம். இன்னும் ஆதாரங்கள் தேவை என்றால்கூடத் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம்!’’ என்றார் கருணாநிதி.
இவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கொரு அறிக்கையை கவர்னரைச் சந்தித்துக் கொடுத்தனர்.

நீதிமன்றத்தின் முதல் படிக்கட்டு...

கவர்னர் உத்தரவுக்கு தடைகோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு, 1995, ஏப்ரல் 6-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. சிம்பிளான கதர் வேட்டி, சட்டைக்கு மேலே மெல்லிய பட்டு ஜரிகை போட்ட அங்கவஸ்திரம் மினுமினுக்க சந்திரலேகா சகிதம் சரியாக 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. எந்தவித டென்ஷனும் இன்றி ரொம்ப கூலாக இருந்தார். அவருடைய பாதுகாப்புப் படை வீரர்கள் அவரைச் சுற்றி ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் வளையம் அமைத்து நின்றுகொண்டனர். முதல்வர் சார்பில் வழக்கறிஞர்கள் ஜீனசேனன், அய்யாத்துரை உடன்வர மூத்த வழக்கறிஞர் பராசரன் வந்தார். கூடவே கட்டுக்கட்டாக புத்தகங்களை சுமந்தபடி ஆட்கள் வந்தனர்! நீதிமன்றத்துக்கு உள்ளே சந்திரலேகாவுடன் சுவாமி நுழைந்தபோதும், பிறகு வெளியேறியபோதும் உள்நாட்டு வெளிநாட்டு டி.வி காமிராக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டன. உயர் நீதிமன்றத்தில் இருந்த பெரும்பாலான வக்கீல்கள் அங்குகூடி நின்றுவிட்டனர். வழக்கு எப்படி நடக்கிறது என்று பார்க்கிற ஆவல் அத்தனை பேர் முகத்திலும் பொங்கியது. இதுதவிர, சுவாமியுடன் வந்திருந்த பல பிரமுகர்களும் நீதிமன்ற அறையை அடைத்தபடி நின்றனர். ஒரு வழக்கறிஞர் முரசொலி பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டு ‘‘கலைஞர் இதில் சில பாயின்டுகளை எழுதியிருக்கிறார். சுவாமிக்கு இந்த பாயிண்டுகள் வாதாட உதவும்!’’ என்று நெரிசலில் முன்னேறிப் போய் சுவாமியிடம் கொடுத்தார். அவரும் புன்னகையுடன் அந்த முரசொலியை வாங்கித் தனது ஃபைலில் வைத்துக் கொண்டார்.
வாதாடும் வக்கீல்களுக்கு ஒதுக்கப்படும் நீண்ட மேசை முன்னால் வந்து அமர்ந்த சுவாமி, வழக்கு சம்பந்தமான தஸ்தாவேஜுகளில் உள்ள முக்கியமான வார்த்தைகளை ரோஸ் நிற பேனாவால் நிதானமாக கோடிட்டுக் கொண்டார். 25-வது வழக்காக ஜெயலலிதாவின் வழக்கு வந்தது. துவக்கத்திலேயே சுவாமி ‘‘கவர்னர் தந்த அனுமதிக்கு தடைகேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாக பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டு இங்கு வந்திருக்கிறோம். எங்களுக்குக் கொடுக்க வேண்டிய நகல்களை இங்கேயே வழங்கலாம்’ நான் வாதாடத் தயார்...’’ என்றார்.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார் வழக்கறிஞர் பராசரன். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சட்ட பாயின்டுகளை மேற்கோள்காட்டிப் பேசிக் கொண்டேயிருந்தார் பராசரன். சுவாமி சிரித்தமுகத்துடன் வாதத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
‘‘முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடர சுவாமிக்கு கவர்னர் அனுமதி அளித்த செய்தி கூட முதல்வருக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை...!’’ என்று பராசரன் சொன்னபோது குறுக்கிட்டார் சுவாமி, ‘‘சரி... கவர்னர் உங்களுக்குத் தெரிவிக்காதபோது நீங்கள் எப்படித் தடை கேட்டு கோர்ட்டுக்கு வந்திருக்கிறீர்கள்...?’’ என்று கேட்டார். கண்கள் சிவக்க கோபமாகிப் போன பராசரன், சுவாமியை நோக்கி, ‘‘நீங்கள்தான் துண்டுப் பிரசுரம் போல கவர்னரின் அனுமதிக் கடிதத்தை விநியோகித்திருக்கிறீர்களே...!’’ என்று சொன்னவர்.... ‘‘வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்களைக் கூட்டிவைத்துக் கருத்துச் சொல்வது சுப்பிரமணியம் சுவாமிக்கு வழக்கமாகிப் போய்விட்டது! அது வழக்கு நடைமுறையைப் பாதிக்கும்.! எனவே, சுவாமி இனி அதைத் தவிர்க்க வேண்டும்...!’’ என்று சொன்னார்.
பராசரன் இப்படிச் சொன்னவுடன் எழுந்து அதை மறுத்தார் சுவாமி. ‘‘என்னிடம் அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன!’’ என்று பராசரன் பதில் தந்ததும் உட்கார்ந்துவிட்டார்.
‘‘முதல்வர் மீது சுப்பிரமணியம் சுவாமி கிரிமினல் வழக்குப் போட அனுமதியளித்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காழ்ப்பு உணர்ச்சிதான் இதற்குக் காரணம்..!’’ என்று பராசரன் சொல்ல உடனடியாக பதில் தந்தார் சுவாமி.
‘‘கடந்த 1994-ம் வருடம் டிசம்பர் மாதம் கவர்னரின் அனுமதியில்லாது அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியமைத்தது தவறு! இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது!’ என்று கூறி தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்குக்காக ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில் ‘எனக்கும் கவர்னருக்கும் எந்தவித பனிப்போரும் அரசியல் பிரச்னைகளும் இதுநாள் வரை இல்லை!’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது இப்போது திடீரென கவர்னருக்கு உள்நோக்கம் உள்ளது என்று சொல்வது எப்படி...?’’ என்று வினா எழுப்பினார் சுவாமி. இப்படி சுவாமி ஒவ்வொரு முறையும் மடக்கிக் கேட்கும்போது கூடியிருந்த வழக்கறிஞர்களெல்லாம் பலத்த சிரிப்பொலி எழுப்பினார்கள். பராசரன் இந்தச் சிரிப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நீதிமன்றத்தை அமைதிப்படுத்தினார் நீதிபதி!
‘‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடர தி.மு.க தரப்பில் கவர்னரிடம் அனுமதி கேட்டபோது, அப்போதைய கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் அனுமதியளிக்கவில்லை! அதன்பிறகு ஏற்கெனவே தி.மு.க சார்பில் முதல்வர் ஜெயலலிதா மீது தொடர்ந்த கிரிமினல் வழக்கும், ஆளுநர் அனுமதியளிக்காததால் தள்ளுபடி செய்யப் பட்டது! ஒரு காரணத்துக்காக ஏற்கெனவே இருந்த ஆளுநர் அனுமதி வழங்காதபோது, அதே காரணத்துக்கு மற்றொரு ஆளுநர் அனுமதி வழங்கியது தவறு!’’ என்று பராசரன் சொல்ல, ரொம்ப காஷுவலாகக் குறிக்கிட்ட சுவாமி, ‘‘பழைய ஆளுநர் அனுமதி மறுத்தது சரி! புதிய கவர்னர் அனுமதி அளித்தது தவறு என்றால் என்ன அர்த்தம்! இவர்களுக்கு வேண்டியவர் செய்தால் சரி... வேண்டாதவர் செய்தால் தவறு என்பதுதானே! அனுமதி அளிக்கவோ, மறுக்கவோ ஆளுநருக்கு உரிமையிருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். வழக்குப் போட்டவர் அதிகாரம் படைத்தவராக இருக்கலாம். பணம் படைத்தவராக இருக்கலாம். அதற்காக நீதிமன்றம் அவருக்கு ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக்கூடாது!’’ என்றார் சுவாமி. அடுத்து சுவாமி பேச வந்தபோது வழக்கறிஞர் பராசரன் பற்றி வேடிக்கையாக இப்படி ஆரம்பித்தார். ‘‘வழக்காடுவதற்காக இந்தியாவிலேயே அதிக பணம் வாங்கும் ஒரே வழக்கறிஞர் பராசரன்தான். அதனால்தான் நான் அவரை வழக்கறிஞராக வைத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு நானே வாதாடுகிறேன். மூத்த பெரும் வழக்கறிஞர், ஒரு நாளைக்கு நாட்டின் ஒரு மூலையில் இருப்பவர், அடுத்த நாள் காலை மற்றொரு மூலைக்கு வந்து வாதாடிக் கொண்டிருப்பார்...’’ என்று சொல்லி நிறுத்த...
உடனே பராசரன் ‘‘நான் அதிகமாக ஆசைப்படுவதில்லை. சில வழக்குகளில் நான் பணம் வாங்காமலும் ஆஜராகி இருக்கிறேன்...! சில வழக்குகளில் நாங்கள் வாங்கும் பணத்தில் பாதித் தொகையைப் புத்தகத்துக்கே செலவழிக்கிறோம். ஒரு வழக்கில் நான் ஆஜரானபோது, அதற்குத் தேவையான விவரங்களைக்கொண்ட ஒரு புத்தகத்தின் விலை 14,000 ரூபாய்!’’ என்றார் சாதாரணமாக!
உடனே சுவாமி ‘‘ஏன் நீங்கள் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில் அந்தப் புத்தகத்தை அச்சிட்டிருந்தால் சீப்பாகக் கிடைத்திருக்குமே’’ என்று படுகாஷுவலாக சொல்லிவிட்டு நீதிபதியைப் பார்க்க... நீதிமன்றமே சிரித்து விட்டது. (நீதிபதி உட்பட)
பராசரன் சீரியஸாகிவிட்டார் ‘‘இதைப்போல ஜோக் அடிப்பது கூடாது. இது நீதிமன்றம்!’’ என சத்தம் போட்டார். ஒரு சில நிமிடம் நிசப்தம். தொடர்ந்து சுவாமி விஷயத்துக்கு வந்தார். ‘‘மாதத்துக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் வாங்குபவர் நமது முதல்வர். இன்றைக்கு ஒரு ரூபாயின் மதிப்பு என்பதே இருபத்தைந்து பைசாவுக்கும் குறைவு. அப்படியிருக்க... ஒரு வழக்குக்குப் பல லட்ச ரூபாய் வாங்கும் பராசரனை தனக்காக வாதாட நியமித்திருக்கிறார். இதிலிருந்து அவர் தவறு செய்திருப்பாரா... இல்லையா? என்பதை யூகித்துக் கொள்ளலாம்!’’ என்று சொல்லிப் புன்னகைத்தார் சுவாமி.
பராசரன் இடையில் எழுந்து ஏதோ சத்தம் போட சுவாமி புன்னகையைத் தொடர்ந்தபடியே பேச்சையும் தொடர்ந்தார்.
‘‘இதற்கு முன்பு தொடரப்பட்ட வழக்குகளில் முதல்வர் ஜெயலலிதா தரப்பினர் ‘ஹிஸ் எக்ஸலன்ஸி’ என்ற மரியாதைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி ஆளுநரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த முறை பெட்டிஷனில் இந்த வார்த்தை குறிப்பிடாமல் விடப்பட்டு இருக்கிறது. இதிலிருந்தே ஆளுநர் மீது இவர்கள் வைத்திருக்கும் மரியாதை தெரியவருகிறது. நான், 1993-ம் வருடமே முதல்வர் மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு ஆளுநரிடம் மனுச் செய்து இருந்தேன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்துத்தான் எனக்கு அவர் அனுமதி அளித்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, அவர் நன்கு ஆராய்ந்த பிறகுதான் எனக்கு அனுமதி அளித்துள்ளார் என்பது. இதில் எந்தவித தவறான எண்ணமும் இல்லை. அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ள இந்தப் பிரச்னையில், நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது...’’ என்று சொல்லி தன் வாதத்தை முடித்துக் கொண்டார் சுவாமி. ஆளுநரின் சார்பாக வந்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் வழக்குத் தொடர ஆளுநர் அனுமதித்தது சட்ட ரீதியானதுதான் என்று சில விதிகளை மேற்கோள் காட்டினார். கூர்மையாக எல்லா வாதங்களையும் கவனித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல், ‘‘இந்த வழக்கில் அரசியல் சட்டப்பிரச்னை இருக்கிறது. ஆகவே, டிவிஷன் பென்ச்சுக்கு இந்த வழக்கை அனுப்புகிறேன்...’’ எனச் சொல்லி அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்!
நீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்த அ.தி.மு.க.வினர் கொந்தளித்தனர். அதையடுத்து திரும்பிய பக்கம் எல்லாம் சுப்பிரமணியம் சுவாமி மீதும் ஆளுநர் சென்னா ரெட்டி மீதும் தாக்குதல் நடந்தது.

அராஜக கும்பலும் அசராத சுவாமியும்...!

1995, ஏப்ரல் 8, சென்னை ‘‘ஜெ.ஜெயலலிதான்னா ஜெயில் ஜெயலலிதான்னு அர்த்தம். ஆட்சி மாறின அடுத்த நிமிஷம் அவாளை உள்ளே தள்ளுவேன்...’’ தன்னைச் சூழ்ந்து அடைகாத்த மாதிரி பாதுகாப்புத் தந்து கொண்டிருந்த போலீஸாருக்கு மத்தியில் நின்றுகொண்டு ஆவேசமாய் அந்தக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் சுப்பிரமணியம் சுவாமி. கற்களும் சோடா பாட்டில்களும் பறக்க மேடையெதிரே கலவரக் கோலமாய் கிடந்தது. மொத்த அலங்கோலத்தையும் சுவாமியின் ஆட்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
சுவாமிக்கு எதிராக ஆளும் கட்சி வன்முறையைப் பிரயோகிப்பது இது முதன்முறையல்ல. இருந்தாலும் இந்த முறை நடந்தது உச்சகட்ட வெறியாட்டம். ஜெயலலிதாவின் மீது ஊழல் வழக்குத் தொடர சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆளுநர் அனுமதி அளித்த பிறகு நடக்கிற முதல் கூட்டம் என்பதால்தான் இத்தனை பதற்றம். அந்தச் சனிக்கிழமை கூட்டம் நடந்த தி.நகர் காலை முதலே ‘பிஸி’யாகத்தான் இருந்தது. ஒரு பக்கம் கூட்ட மேடைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன!
‘‘காலை முதல் அடிக்கடி ஆட்டோக்கள் சீறிக் கொண்டு வந்து நிற்க திமுதிமுவென ஆட்கள் இறங்கினார்கள். கிரேடு கிரேடாய் சோடா பாட்டில்கள், இரும்புக் கம்பிகள், கருங்கற்கள் என்று விதவிதமான ஆயுதங்கள் இறக்கப்பட்டன. பக்கத்துக் குடிசைகளில் அவற்றைப் பத்திரப்படுத்திவிட்டு வெளியே வந்தனர்!’’. இவற்றையெல்லாம் எதிர்பார்த்துத் தயாராக வந்திருந்த ஜனதா கட்சியினர் கையில் ஸ்டில் போட்டோ காமிரா, வீடியோ காமிரா எடுத்துக்கொண்டு பார்க்கிற காட்சிகளை முன்னெச்சரிக்கையாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்! கூட்டம் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே நாம் சென்றுவிட்டோம். ‘‘சுவாமி புதுசாக என்ன சொல்லப் போகிறார்..’’ என்ற ஆர்வத்தில் திரண்ட கூட்டத்துக்குள் திமுதிமுவென ஒரு பெரிய பெண்கள் படையே வந்து மேடைக்கு முன்னராக இடம்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தது. ‘‘இன்னைக்குக் கலாட்டா நிச்சயம்...’’ என்று பக்கத்திலிருந்த ஒரு நிருபர் கிசுகிசுத்தார். ‘‘இதே பெண்கள் பட்டாளம்தான் முன்பொருமுறை கோர்ட்டில் சுவாமி வந்தபோது துணிச்சலாக சேலையை வரிந்து கட்டிக்கொண்டு அசிங்கமாக ஆடிக்காட்டியது’’ என்று நம்மிடம் கவலையுடன் சொன்னார் ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர்.
எழுந்து மேடைக்குப் பின்பக்கமாய் நடந்து கவனிக்க ஆரம்பித்தோம். ஏழெட்டுப் பேர் கொண்ட கும்பல் ஒன்றிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தனர் போலீஸ்காரர்கள். ‘‘ஆள் தெரியாம எங்களோடு மோதாத. அண்ணன்தான் அனுப்பிச்சிருக்காரு. புரியுதா...’’ என்று ஒரு கும்பல் மிரட்டிக் கொண்டிருக்க, படாதபாடுபட்டுத் தடுத்தது போலீஸ். ‘இதெல்லாம் சரியில்லே...’’ அதட்ட முயன்ற ஒரு இன்ஸ்பெக்டரை ‘‘டாய்... நீ தி.மு.க காரன்தானே..’’ என்று பதிலுக்கு மிரட்ட, அவர் நகர்ந்துவிட்டார்.
அதே நேரத்தில் அந்தப் பக்கமிருந்த பெட்டிக்கடை, டீக்கடை என்று ஒவ்வொன்றிலும் தழும்பு முகங்களோடு கும்பல் கும்பலாய் நின்றுகொண்டு ‘‘ழ்ழ்... ழ்ழேய்...’ என்ற போதையில் புலம்ப ஆரம்பித்தனர்.
கூட்டம் துவங்குவதற்கு முன் பொதுமக்களை உற்சாகப்படுத்த நடந்த நடன நிகழ்ச்சியில் ‘ச்சோளிகே பீச்சே க்யா ஹே...’ என்று பாடல்கள் கலக்க, விசில் பறந்தது.
இரவு ஒன்பது மணி இருக்கும். தென்சென்னைத் தொகுதி எம்.பியான தரன், சந்திரலேகா ஆகியோருடன் சுப்பிரமணியம் சுவாமி மேடைக்கு வந்தார். கூட்டம் துவங்கியது. சென்னைச் சேர்ந்த ஜனதா கட்சிப் பிரமுகர் ஒருவர் பேச ஆரம்பித்தார். அதுவரை அமைதியாயிருந்த முன்வரிசைப் பெண்கள் மெல்லக் கூட்டத்திலிருந்து வெளியேறினர். மேடைக்கு இடப்புறம் செல்லும் சாலையில் நின்றிருந்த போலீஸ் வாகனங்களுக்குப் பின்புறமாகப் போனார்கள். பார்த்துக் கொண்டிருந்தோம். 10 நிமிடம்கூட கடந்திருக்காது. அந்தப் பெண்கள் தங்களது மடியில் கருங்கற்களைக் கட்டிக்கொண்டு திரும்பக் கூட்டத்துக்குள் வந்து உட்கார்ந்துகொண்டார்கள். இதைக் கவனித்த ஜனதா பிரமுகர்கள் சிலர் சுவாமி காதில் ஏதோ சொல்ல... அவர் சிரித்தபடியே பதிலுக்கு ஏதோ சொன்னார். சந்திரலேகா பேச வந்தார். ‘‘ஜெயலலிதா’’ என்று பெயரை உச்சரித்ததும் ஆங்காரமாய் எழுந்தது முன்வரிசைப் பெண்கள் கும்பல். இந்தச் சலசலப்பைப் பொருட்படுத்தாது ‘‘ஜெயலலிதாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டக்கூடிய சக்தி எங்கள் தலைவருக்கு உண்டு’’ என்று சந்திரலேகா சொன்னதுதான் தாமதம்.... ‘டமடம‘வென மேடை மீது கற்கள் வீசப்பட்டன. அதிர்ந்து போய்க் கூட்டம் சிதறத் துவங்க... எல்லாப் பக்கமும் பதட்டம்! அமளிக்கிடையில் காஷுவலாகச் சேலையைத் தூக்கி மிகமிக அருவருப்பான நெளிவு சுளிவுகளுடன் ஆட ஆரம்பித்தனர் அந்த முன்வரிசைப் பெண்கள்! அவர்கள் வாயிலிருந்து தெறித்த கமென்ட்களால் காது கூசியது. அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த கூலிப் பட்டாளம் கற்களையும் சோடா பாட்டில்களையும் திராவக பல்புகளையும் சுழற்றியடிக்க மேடையில் சிலீர் சிலீர் என்று கண்ணாடித் துகள்கள் சிதறி விழுந்தன!
செய்வதறியாது சிறிது நேரம் திகைத்து நின்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீஸார் சுதாரித்துக் கொண்டு மேடைக்குத் தாவினர். யார்? எங்கே இருக்கிறார்கள்? என்ன நடக்கிறது? என்று புரியாமல் களேபரம். கல்வீச்சால் அடிபட்டு ரத்தம் சொட்டத் துவங்கிய சிலரை அள்ளிக்கொண்டு சிலர் ஓட... சிலர் துரத்த.... அந்த ஏரியாவே போர்க்களம் போல் ஆகிவிட்டது. மேடையில் இருந்த சந்திரலேகா, சுப்பிரமணியம் சுவாமி, தரன் எம்.பி ஆகியோரைச் சூழ்ந்துகொண்டு அப்படியே மேடையில் உட்கார வைத்து சேர்கள்... துண்டுகள்... என்று கையில் கிடைத்ததை எல்லாம் வைத்துத் தடுத்து சோடா பாட்டில்களும் கற்களும் சுவாமி, சந்திரலேகா ஆகியோர் மீது படாதபடி தாங்கிக்கொண்டனர் ஜனதா கட்சித் தொண்டர்கள்.
இவ்வளவு கலாட்டாக்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த வன்முறைக் கும்பலைச் சுற்றி நின்றிருந்த தமிழகப் போலீஸார் நடப்பவற்றையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பலர் ஒதுங்கி ஓரம்போய் நின்றுவிட்டார்கள்.
மேடையில் இருந்த தொண்டர்கள் உயிருக்குப் பயந்து மைக் மூலம் ‘‘போலீஸாரைக் கேட்டுக் கொள்கிறோம்... கலகம் செய்கிறவர்களை விரட்டுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்க, தமிழக போலீஸார் அதைச் சட்டை செய்வதாய் இல்லை.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சிலர் மேடையைவிட்டு இறங்கிவந்து சென்னை நகரக் காவல் துறை இணை ஆணையர் ராதாகிருஷ்ண ராஜாவிடம் கூட்டத்தை கலைக்கும்படி கெஞ்சினர். ‘அட்லீஸ்ட் தடியடிக்காவது உத்தரவிடுங்கள்’ என்று கேட்டனர். அவர் தன் உதடுகளைப் பிரிக்கவேயில்லை. வெறுத்துப்போன மத்திய போலீஸார் மேடைக்குத் திரும்பிவிட்டனர். ‘ஜாயின்ட் கமிஷனர் ராதாகிருஷ்ண ராஜா மேடைக்கு வரவும்’ என மைக் மூலம் மேடையிலிருந்து அழைப்பு வந்தபோதும்கூட, அவர் தன்னுடைய ஜீப்புக்குப் பின்னால் போய் நின்று கொண்டார். மேடைப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
கூட்டத்திலிருந்து செருப்புகளும், சோடா பாட்டில்களும் தொடர்ந்து மேடைக்கு வந்துகொண்டே இருக்கவே, பொறுமை இழந்த ஜனதா தொண்டர்கள், ‘‘பேசுங்க அம்மா பேசுங்க அம்மா.. நாங்க இருக்கோம்’’ என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டனர். நடப்பவற்றையெல்லாம் ரிசர்வ் போலீஸ் தடுப்புக்கு மத்தியில் இருந்தபடி தனது உலகப் பிரசித்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுவாமி, சந்திரலேகாவைப் பேசும்படி சைகை காட்டினார். சந்திரலேகா மீண்டும் பேசத் துவங்கினார். அவரது குரல் மட்டுமே வெளியில் கேட்க, உருவத்தை முழுவதுமாக மத்திய போலீஸாரும் தொண்டர்களும் மறைத்து நின்றனர்.
‘‘சசிகலாவைப் பற்றிச் சொன்னால் ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வருகிறது? இந்த ஜெயலலிதா யார்? டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதாவுக்கு முன்னோடிதானே! ‘வைரம்’ படத்தில் நடித்த ஜெயலலிதா தமிழகத்தை ஆட்சி செய்யும்போது தமிழ்ப் பண்பாடு எப்படி இருக்கும்? இங்கே போலீஸார் வன்முறைக் கும்பலுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த ஆட்சி போனபிறகு, கமிஷனர் ராஜகோபாலன் கூடத் தப்பிவிடுவார். ஆனால், ஜாயின்ட் கமிஷனர் ராதாகிருஷ்ண ராஜா... நீதான் மாட்டிக்குவே. மத்திய அரசின் சி.பி.ஐ, மற்றும் ஐ.பி போன்ற துறைகளின் அதிகாரிகள் இங்கே உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவே கூட அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்படலாம்!’’ என்று ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆக்ரோஷமாகப் பேசினார் சந்திரலேகா. இதைக்கேட்ட பிறகு அந்த வன்முறைக் கும்பலின் ஆக்ரோஷம் இன்னும் அதிகரித்தது. ஏக டென்ஷனாகச் சந்திரலேகாவை கேவலமான வார்த்தைகளால் வர்ணனை செய்தனர்.
பேச நினைத்ததை முழுக்கப் பேசி முடித்த பிறகுதான் சந்திரலேகா அமர்ந்தார். வியர்வையும் புழுக்கமும் தாளாமல் முகத்தை அங்கவஸ்திரத்தால் துடைத்தபடியே... ‘மைக்’கை வாங்கினார் சுவாமி.
மத்திய போலீஸாரின் அரணுக்குள் இருந்தபடியே பேசத் துவங்கினார்...
‘‘சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு வெட்கமேயில்லை. ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கிறார். மந்திரிகளும் விழுந்து கிடக்கிறார்கள். ஆனால், அந்த ஜெயலலிதாவே என் கால்ல விழுந்தவதான். யார்... யார்... இங்கே வந்து கலாட்டா பண்றீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்களையெல்லாம் வீடியோவும் போட்டோவும் கூட எடுத்து வெச்சிருக்கேன். ஆட்சி மாறின அடுத்த நிமிஷமே அவளையும் உள்ளே தள்ளுவேன். உங்களையும் தேடிப் பிடிச்சு உள்ளே தள்ளுவேன்’’ என்று பேச... ஏற்கெனவே வெறியில் இருந்த வன்முறையாளர்கள் தொண்டை கிழியக் கத்தியபடி பாட்டில் மற்றும் கல்வீச்சை இரண்டு மடங்காக்கினார்கள்.
‘‘அடிங்கடா அவனை! நம்ம அம்மாவையே உள்ளே தள்ளுவானாமே!’’ என்று அலறிக்கொண்டே பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்குக்குள் பாய்ந்த ஒரு கும்பல் ‘பெட்ரோல் கொடுடா! மேடையோட அவனையும் அவளையும் எரிச்சிடறோம்’ என்று பங்கில் இருந்தவரை மிரட்டி கேன்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வந்தது.
அமைதியாக இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸார், கலவரக்கும்பல் பெட்ரோல் கேனைக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்து நடுங்கிவிட்டனர். அதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், தலைதெறிக்க ஓடிப்போய் அந்தக் கும்பலைத் தடுத்து, மாறி மாறிக் கையெடுத்துக் கும்பிட்ட படியே அந்த பெட்ரோல் பங்க்கின் வெளியே அழைத்து வந்தனர்.
இன்னும் சில போலீஸார் மேடையேறி, ‘சீக்கிரம் மீட்டிங்கை முடிச்சுடுங்க எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கோங்க’’ என்று கெஞ்சியது. அவர்களை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு மேலும் சிறிது பேசி முடித்துவிட்டுத்தான் தன்னுடைய பாதுகாப்பு வேனில் ஏறினார் சுவாமி. அந்தச் சிறிய வேனுக்குள் மேடையில் இருந்த அவ்வளவு பேரும் ஏறிவிட, இடம் இல்லாததால் தொண்டர்கள் வேனின் மேலும் ஏறிக்கொள்ள மத்திய பாதுகாப்பு படை படைசூழ சுவாமியும் சந்திரலேகாவும் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.
‘‘இந்தப் பொதுக்கூட்டத்தைச் சிதறடிக்க அனுப்பப்பட்ட பெரும்பாலான பெண்கள் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்’ சுவாமி மீது கத்தி வீசுவது அல்லது மேடையோடு கொளுத்துவது இதுதான் அந்தப் பெண்களுக்குச் சொல்லப்பட்ட திட்டம்! அளவுக்கதிகமான மத்திய ரிசர்வ் போலீஸார் ஆயுதங்களோடு வந்திருந்ததால் அந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது!’’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜனதா கட்சியினர். ‘‘என்னிக்கு இருந்தாலும் சரி... நாங்க அவன் உயிரை எடுக்காம விடமாட்டோம்’’ என்று உரக்கச் சவால் விட்டபடியே அந்தக் கும்பல் ஆற அமரக் கலைந்து சென்றது!
 ஆளும் கட்சியினர் மத்தியில் சிக்கிய ஆளுநர்!
ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆளுநர் அனுமதி தந்துவிட்ட பிறகு நடப்பவற்றை நாடறியும்! அதில் முக்கிய பகுதிதான் ஆளுநரே வன்முறைக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட சம்பவம்!
ஏப்ரல் ஒன்பதாம் தேதி... விழுப்புரம் வாசவி கல்யாண மண்டபத்தில் அ.திமு.க செயல்வீரர்கள் கூட்டம் ஒன்று திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசப்பட்ட முக்கியமான ஒரே விஷயம் ஆளுநரின் புதுவை விசிட் பற்றியது. புதுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநர் சென்னா ரெட்டி சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக காரில் செல்ல விருக்கிறார் என்ற விவரம் தெரிந்த பிறகு கூட்டப்பட்ட நிகழ்ச்சி அது. கூட்டத்தில் அமைச்சர்கள் ஜனார்தனன், ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பரபரப்பாகப் பேசியிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளரான எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் இந்தக் கூட்டத்தை விறுவிறுப்பாக நடத்தினார். ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டுவது என்று முடிவானது. ‘‘ஒரு விஷயம் மட்டும் நினைவிருக்கட்டும். இது வழக்கமான கறுப்புக்கொடி போராட்டம் இல்லை. இது ‘‘வேறமாதிரி’’ செய்ய வேண்டிய விஷயம்!’’ என்றே வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ இதில் கலந்துகொள்ளாமலிருப்பது நல்லது. அவர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளுக்குப் போய்விடட்டும். அதே சமயம் இங்கே போராட்டம் நடக்கட்டும்.’ என்றும் முடிவு செய்யப்பட்டது. ரத்தத்தின் ரத்தங்கள் ஜோராய்க் கைதட்ட கூட்டம் முடிவடைந்திருக்கிறது. அன்று மாலை செயல்வீரர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் என்று பத்திரிகைகளுக்குத் தரப்பட்ட லிஸ்ட்டில் வழக்கு அனுமதி நகல் எரிப்பு, கண்டன ஊர்வலம், முதல்வர் மீது முழு நம்பிக்கை தெரிவிப்பது என்று மட்டும் இருந்தது. முக்கியமான கறுப்புக்கொடி ‘புரோக்கிராம்’ இல்லை. ஆனால், கறுப்புக்கொடி போராட்ட திட்டம் பற்றித் தெரிய வந்ததும் தர்மசங்கடம் அடைந்தது போலீஸ்!
10-ம் தேதி அதிகாலையில் மாவட்ட கலெக்டர் அசோக்குமார் குப்தா அவசரக் கூட்டம் போட்டு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசினார். ‘ஆளுநர் வருகையின்போது அசம்பாவிதம் ஏதும் நேரக் கூடாது’ என்று ஒரே வரியில் உத்தரவு போட்டுவிட்டு நகர்ந்து கொண்டார் கலெக்டர். உடனடியாக விழுப்புரம் எஸ்.பி.யும் பிற டி.எஸ்.பி.க்களும் திண்டிவனம் வந்துவிட்டனர். ரிசர்வ் போலீஸ் படையும் வரவழைக்கப்பட்டது. இன்னொருபுறம் அ.தி.மு.கவினர் பக்காவாய்த் தங்கள் வேலைகளை நடத்திக் கொண்டிருந்தனர். திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே ரயில்வே கோடௌன் ஒன்று இருக்கிறது. சவுக்குக் கட்டைகள், காலி பாட்டில்கள், பழைய செருப்புகள், கற்கள் என்று கொண்டுவந்து குவித்து... ஒரு மினி ஆயுதக் கிடங்கே அங்கு தயாராயிருந்தது. கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பலரது கைகளில் உருட்டுத் தடிகள்! நுனியில் ஒப்புக்கு ஒரு கறுப்புக்கொடி அல்லது கட்சிக் கொடி. கரை வேட்டிகளுக்கு மத்தியில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்த, முகத்தில் முரட்டுத் தனம் நிறைந்த ஒரு அதிரடிக் கும்பலும் இருந்தது. அவர்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று போலீஸ் மத்தியிலே பேசிக்கொண்டார்கள்.
திண்டிவனம் வழியாகப் போகும் போதெல்லாம் வீராணம் கெஸ்ட் ஹவுஸில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வது ஆளுநரின் வழக்கம். இந்த முறை மொத்த கெஸ்ட் ஹவுஸும் அ.தி.மு.க.வினரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. நான்கு மணியிருக்கும்.... கவர்னரின் கார் திண்டிவனம் எல்லையைத் தொட்டபோது போலீஸ் தடையை மீறி சாலையின் குறுக்கே அதிரடியாக உட்கார்ந்து விட்டனர். நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. போதாததற்கு செக்போஸ்டை இழுத்து ரோட்டை மூடிவிட்டு, ‘‘இனி நம்மளை மீறி கவர்னர் ஐயா எப்படிப் போறாருன்னு பார்க்கலாம்!’’ என்று கிண்டலுடன் எக்காளமிட்டது ஒரு கும்பல். போலீஸ் பதற்றத்துடன் ஓடி செக்போஸ்ட் தடையை நீக்கியது. போலீஸ் திணறிக் கொண்டிருக்கும் சூழலிலேயே அந்தக் கும்பல் இருந்த இடத்துக்கு அருகே ஆளுநரின் கார் வந்துவிட்டது. அடுத்த 20 நிமிடம் சரமாரியான ரகளை! என்ன நடக்கிறது என்பது எவருக்குமே புரியாத ரீதியில் வன்முறைக் காட்சிகள் அரங்கேறின. முட்டை, தக்காளி, செருப்பு, கற்கள் என்று விதவிதமான பொருட்கள் ஆளுநரின் காரைத் தாக்க... கார் நின்றது! நடப்பவற்றை மொத்த போலீஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கொந்தளித்து விட்டார் ஆளுநர். அவருடைய செக்யூரிட்டி அதிகாரிகள் இரண்டு பேர் இறங்கி ஓடிவர... அதில் ஒருவரது மார் மீது ஒரு கல் முழுவேகத்தில் மோதியது. அலறியபடி அப்படியே ரோட்டில் உட்கார்ந்து விட்டார் அதிகாரி. மற்ற செக்யூரிட்டி அதிகாரிகள் நாலாபுறமும் காரைச் சூழ்ந்துகொண்டு அடைகாக்க... அவர்களுக்கும் அடி உதை விழுந்தது. கோபத்தின் உச்சியிலிருந்த ஆளுநர் காருக்குள் இருந்தபடியே, ‘எஸ்.பி.யை அழைத்தார். ஆனால், எஸ்.பி. முயன்றும் கும்பலை விலக்கிக்கொண்டு வரமுடியவில்லை.
திண்டிவனம் சப் கலெக்டர் ராஜேஷ் லக்கானி பதறியபடி ஓடிவந்து ஆளுநரிடம் ஏதோ பேசிவிட்டுத் திரும்பினார். சில நிமிடங்கள் கழித்து வந்த எஸ்.பி. ஆளுநரிடம் ஏதோ சொல்லப்போக... அவருக்கு செமடோஸ் விழுந்தது. முகம் வெளிறிப்போய் திரும்பிய எஸ்.பி., உரத்த குரலில் உத்தரவிட்ட பிறகுதான், போலீஸ் அரை மனதுடன் லேசான தடியடி பிரயோகித்தது. மொத்தத்தில், இருபத்தெட்டு நிமிடம் ஆளுநரின் கார் நடுரோட்டில் அ.தி.மு.க.வினரின் பிடியில் சிக்கிக் கிடந்தது. முட்டையும் தக்காளிச் சிதறல்களும் காரிலும் ரோட்டிலும் வடிந்து ஒழுகியபடி இருக்க, கிடைத்த இடைவெளியில் ஆளுநரின் கார் புறப்பட்டுப் புதுவை ராஜ்நிவாஸ் நோக்கிப் பறந்தது.
நடந்த சம்பவங்களைப் படமெடுத்துக் கொண்டிருந்த தினப் பத்திரிகை புகைப்படக்காரர்களில் ஒருவரது காமிராவை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பறித்துக் கொண்டு போய்விட்டார். அந்தப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஆளுநர் தங்கியிருந்த புதுவை ராஜ்நிவாஸுக்குத் தொலைபேசி பறந்தது. அந்த ஃபிலிம் சுருள் ஆளுநருக்கு அவசியம் தேவை என்ற ரீதியில் சமாதானம் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த காமிராவை உடனடியாகத் திருப்பியனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது. படச்சுருள் உடனடியாக பிரிண்ட் போடப்பட்டு கவர்னருக்குத் தரப்பட... அதை ஒரு முறை பார்த்த கவர்னர், திருப்தியுடன் ‘‘இது போதும் எனக்கு’’ என்றார்.

கிண்டி நொண்டி ஒழிக... அனல் கக்கிய பொதுக்கூட்டம்!

‘ஆளுநரின் அநீதியை எதிர்த்தும், தமிழக அரசின் பட்ஜெட்டை விளக்கியும் சென்னையில் பேரணிப் பொதுக்கூட்டம்’. 10-ம் தேதி தி.நகர் உஸ்மான் ரோட்டில் கிளம்பிய இந்த ஊர்வலத்தில் பெரும்பாலும் அமைச்சர் இந்திரகுமாரியின் தொகுதியிலிருந்துதான் பெண்கள் வந்திருந்தார்கள். ‘கிண்டி நொண்டி சென்னா ரெட்டி ஒழிக’ என்று இந்திரகுமாரியே தொடங்கி வைத்த முதல் கோஷமே நிருபர்களையும் பொதுமக்களையும் அதிரச் செய்தது. அதைத் தொடர்ந்து சுவாமியையும் சந்திரலேகாவையும் இணைத்து இந்திரகுமாரியும் அவருடன் வந்த மகளிர் அணியினரும் எழுப்பிய கோஷங்கள் எழுத முடியாதவை.
எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராததால் கோபத்தில் இருந்த இந்திரகுமாரி, ஊர்வலத்தை நிறுத்தி நிறுத்தி... நத்தை வேகத்தில் நகர்த்தச் சொல்லிக் கட்டளை போட்டுக் கொண்டிருந்தார். இந்த அவசரகோல ஊர்வலம் முடிந்த பின்.... வடபழனியில் பொதுக்கூட்டம்!
அமைச்சர் ரகுபதி இப்படிப் பேசினார்: ‘‘ராமாயணக் கூனி... மகாபாரத சகுனி, மனோன்மணீயக் குடிலன் ஆகிய அத்தனை வில்லன்களையும் ஒன்று சேர்த்த ஜீவன்தான் சென்னா ரெட்டி. டெல்லி பாதுஷா கிண்டிக்கு அனுப்பிய நொண்டிக் குதிரைதான் சென்னா ரெட்டி.’’
அடுத்து கண்ணப்பன். அவருடைய பேச்சுதான் கூட்டத்தின் ஹைலைட். ‘‘ஆறு ஆண்டு காலம் தேர்தலில் நிற்கக்கூடாதென தடை செய்யப்பட்ட சென்னாரெட்டி... அரிஜனங்களுக்கு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்த சென்னா ரெட்டி... எங்கள் முதல்வரைப் பற்றிப் பழி பேசக்கூடாது. புரட்சித்தலைவி தேர்தலில் நிற்கத் தடை வந்தால் நாட்டில் எங்குமே தேர்தல் நடக்க முடியாமல் செய்து விடுவோம்!’’ என்று கண்ணப்பன் சொன்னபோது, மகளிர் அணி பெண்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்த செய்தி கிடைத்த பிறகும்கூட அமைச்சர் இந்திரகுமாரி தலைமையில் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டமாக அ.தி.மு.க.வினர் ஊர்வலம் போனது, பொதுமக்களை வெறுப்படையச் செய்தது. மொரார்ஜியின் மரணம் பற்றி பேரணி ஆரம்பித்தபோது தங்களுக்குத் தெரியாது என்றும், பொதுக்கூட்டம் துவங்கிய சமயத்தில் விஷயம் தெரியவந்ததால், மொரார்ஜி மரணத்துக்கு மேடையிலேயே இரங்கல் தெரிவித்ததாகவும் பத்திரிகைகளில் விளக்கம் அளித்தார் இந்திரகுமாரி!

துடைப்பம், முட்டை சகிதம் தாண்டவமாடிய அ.தி.மு.க... திகைத்துப்போன நீதிமன்றம்

ஏப்ரல்-20, 1995! சுவாமியின் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளலாமா என்பது பற்றி டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடந்த இறுதி தினம்! நீதிமன்றத்துக்கு வருகிற சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்துப் பெரும் கலாட்டா செய்ய வேண்டும் என்ற வெறியோடு ஆளும் கட்சிப் பட்டாளம் நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டது. அழுகிய முட்டைகள், கற்கள், அறுந்த செருப்புகள், உருட்டுக்கட்டைகள், திராவக பல்புகள், சைக்கிள் செயின்கள் என்று சகலவிதமான ஆயுதங்களோடும் ஆண்கள் திரண்டனர். மகளிர் அணி என்ற பெயரில், கூட்டப்பட்டு இருந்த பெண்களின் கூடைகளில் துடப்பக்கட்டைகள் இருந்தன! புடவை முந்தானையில் கற்களையும் கட்டிக்கொண்டு வந்து இருந்தனர். ஆண்களின் வேட்டி ஓரத்திலும், பெண்களின் புடவை பார்டர்களிலும் அ.தி.மு.க வண்ணம் கண்ணைப் பறித்தது! காலை எட்டு மணிவாக்கிலேயே இந்தப் பரபரப்பு. மணி ஒன்பது! மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் ஏ.கே.47 உட்பட விதவிதமான துப்பாக்கிச் சகிதம் ‘நீதிமன்றத்துக்கு வந்து இறங்கியபோதுதான் அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பு! அதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் சுவாமிக்குப் பாதுகாப்பு வளையமாக நிற்கும் நோக்கத்துடன் தி.மு.க தரப்பிலிருந்தும் சிலர் வந்து இறங்குவதைக்கண்டு கோபத்தில் கொந்தளித்துக் கூச்சலிட்டனர் அ.தி.மு.க.வினர். நீதிமன்ற வளாகத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸுக்குப் பக்கத்தில் காரில் வந்திறங்கி உள்ளே செல்வதுதான் சுவாமிக்கு வாடிக்கை! இது தெரிந்து முன்னெச்சரிக்கையாக போஸ்ட் ஆபீஸுக்கு அருகில் உள்ள மரங்களுக்குப் பக்கத்திலேயே காத்திருந்தார்கள் அ.தி.மு.க வினர்.
சரியாக 9.47 மணி. திடீரென இன்னொரு பக்கமாய் காரில் வந்திறங்கி நீதிமன்ற வராண்டாவில் சுவாமி நடந்து போய்க் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அதிர்ந்து அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தியது கூட்டம். அவர்களை வழிமறித்து நின்ற தி.மு.க.வினர் மீது கல்மழை பொழிய....எதிர்த்தரப்பிலிருந்தும் கற்கள் விறுவிறுவெனத் திரும்பி வந்தன. உள்ளே விசாரணை தொடங்கி விவாதங்கள் பரபரப்பாக நடைபெற ஆரம்பித்தன.! மணி பதினொன்று பத்து இருக்கும். கேஸ் டிஸ்மிஸ் ஆகிடுச்சு... என்று யாரோ புரளியைக் கிளப்பிவிட்டுப் போய்விட அ.தி.மு.க.காரர்களிடம் ஆங்காரக் கொந்தளிப்பு உருவானது! மீண்டும் கல்வீச்சு ஆரம்பமானது! கூடவே, முட்டைகளும் துடப்பக்கட்டைகளும் நீதிமன்றக் கட்டடத்தின் மேல் மோதி மோதி விழுந்தன. நீதிமன்ற வளாகத்துக்குள் கற்கள் நிறையப் பறந்தன. ஊழியர்கள் சிலரின் மண்டைகளைப் பதம் பார்த்தன. அலுவலகங்களைச் சாத்திக்கொண்டு ஊழியர்கள் பாதுகாப்புத் தேடி ஓட்டமெடுத்தார்கள். கண்மண் தெரியாத அந்தக் கும்பலின் ஆர்ப்பரிப்புக்கு நடுவே சிக்கிய சில பெண் ஊழியர்கள் அலறிக்கொண்டு இங்குமங்கும் அல்லாடியது வேதனை.
இந்த அராஜகப் போரின் உச்சகட்டமாக ஒரு சிலர் தாறுமாறாக எறிந்த கற்கள்... நீதிபதி அப்துல் ஹாதியின் (கோர்ட்) ஹாலுக்குள்ளேயே வந்து அவர் டேபிள் மீது விழ, அவர் நடத்திக் கொண்டிருந்த விசாரணையை பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்து போய்விட்டார். கல்லெறி கலாட்டாக்கள் போலீஸாருக்கு ரொம்பவும் பழகிவிட்டதால் அவர்கள் சமீபகாலமாகத் தாங்கள் கடைப்பிடிக்கும் அதேபாணியில் யப்பா....! சும்மா போங்கப்பா என்று கெஞ்சலாய்க் கேட்டுக்கொண்டு நின்றிருந்தனர். நீதிமன்றத்தின் மாடியில் நின்றிருந்த மகளிர் அணியினர்... டேய்...! சுப்ரமணியம் சுவாமி உனக்கு இதுதாண்டா பதிலடி என்று புடவையை உயர்த்திக்காட்டி, அரை நிர்வாண டான்ஸைத் துவங்க சுற்றியிருந்த வக்கீல்களும் போலீஸாருமே பயந்து அங்கிருந்து ஓடவேண்டிய நிலைமை. மதியம் ஒரு மணி... சுவாமி சாப்பிடுவதற்காக வெளியே வருவார். அப்போது ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவரது கார் நிறுத்தப்பட்டிருந்த வாயிலுக்கு அருகில் அ.தி.மு.க.வினர் கூடினார்கள். மதிய உணவை நீதிமன்றத்துக்கே கொண்டு வரச் சொல்லி ஹாலிலேயே அமர்ந்து சந்திரலேகாவோடு சேர்ந்து சாப்பிட்டார் சுவாமி. பாரிமுனைப் பகுதியில் ஆங்காங்கே அ.தி.மு.க வினரும், தி.மு.க.வினரும் கடுமையாக மோதிக்கொண்டார்கள்.! மோதலின்போது ஒரு சிலர் கற்களை எறிய பல கடைகளின் கதவுகள் சாத்திக் கொண்டன.
மதியம் இரண்டேகால் மணி! மீண்டும் நீதிமன்றத்தில் விவாதம் தொடங்கியது! இதற்கிடையே பிரியாணிப் பொட்டலங்கள் அந்தக் கும்பலுக்கு சப்ளை செய்யப்பட... சாப்பிட்டத் தெம்புடன் மீண்டும் உள்ளே புகுந்தார்கள. நாலரை மணி வரை அவ்வப்போது கற்களை மட்டும் அங்குமிங்கும் வீசிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.
கல்வீச்சையும் கலாட்டாவையும் படமெடுத்த பல போட்டோகிராபர்களில் தினமணி புகைப்படக்காரர் கண்ணனும் ஒருவர். பதுங்கிப் பதுங்கி படமெடுத்தாலும் இவர் மட்டும் எப்படியோ அந்தக் கும்பலின் கண்களை உறுத்திவிட்டார். அவ்வளவுதான் அவரை விரட்டியது கும்பல். அவர்களிடம் கண்ணன் சிக்கிய சில நிமிடங்களில் மணிக்கட்டு எலும்பு முறிந்ததோடு, கேமரா லென்ஸும் தூள்தூளானது! அதோடு அந்தக் கலவரங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த ஐ விட்னஸ், ஜெயின் டி.வி. பிரதிநிதிகளையும் அவ்வப்போது விரட்டித் தூர நிற்க வைத்தனர் அ.தி.முகவினர்.
இந்தப் பரபரப்பினூடே சென்னை மாநகர கமிஷனர் ராஜகோபாலன் காரில் கோர்ட் உள்ளே வந்து லேசாக இறக்கப்பட்ட கார் கண்ணாடி இடுக்கு வழியே போலீஸ் அதிகாரிகளுக்கு ஏதோ உத்தரவிட்டுவிட்டு உடனே கிளம்பினார்.
மதுரையில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனை இன்டர்நேஷனல் பறையா என ஆங்கிலத்தில் சுவாமி குறிப்பிட்டு, தாழ்த்தப்பட்ட இன மக்களை அவர் கேவலப்படுத்திவிட்டார் என்று சொல்லிப் பதிவான ஒரு வழக்கில் சுவாமியைக் கைது செய்ய மதுரை போலீசார் வந்து நிற்பது அப்போதுதான் அ.தி.மு.க.வினருக்கே தெரிந்தது.
ஹோ வென உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.!
சுப்பிரமணியம் சுவாமியைக் கைது செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தனர் போலீஸார். சுப்பிரமணியம் சுவாமியை சமூக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் தயாராக இருக்கும் விஷயம் நீதிமன்றத்திற்குள் வாதாடிக் கொண்டிருந்த சுவாமிக்கு தெரிவிக்கப்பட்டது.
முகம் கறுத்துப்போன சுவாமி உடனே சந்திரலேகாவிடமும் கவர்னரின் வழக்கறிஞர் ஜி.ராமசுவாமியிடமும் கலந்து பேசினார். வழக்கறிஞர் ஜி.ராமசுவாமியின் யோசனைப்படி நீதிபதி சீனிவாசனிடமே, வெளியில் தன்னைக் கைது செய்ய போலீசார் காத்திருக்கும் விவரத்தைச் சொன்னார். என்னைக் கொல்லவும் சதி நடக்கிறது! எனக்கு இந்த நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடமே கேட்டார் சுவாமி.
அதற்கெல்லாம் இந்த நீதிமன்றச் சட்டத்தில் எந்த அளவுக்கு இடமுள்ளது என்று தெரியவில்லை! உயிருக்கு ஆபத்து என்றால் முறைப்படி கோர்ட்டில் விண்ணப்பித்து பாதுகாப்புக் கேளுங்கள் என்றார் நீதிபதி சீனீவாசன். மேலும் கைது சம்பந்தமாக என்ன செய்யலாம் என்று அரசு வழக்கறிஞர்தான் சொல்ல வேண்டும் என்றார்.
என்ன பிரச்னையில் கைது செய்கிறார்களென்றே எனக்குத் தெரியாது என்று கையை விரித்தார் அரசு வழக்கறிஞர் முத்துக்குமார சுவாமி. நீதிபதி சீனீவாசன் குறுக்கிட்டு, நாளை காலை 11 மணி வரை சுப்பிரமணியம் சுவாமிக்கு நேரம் தரலாம். அதற்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். அதோடு இந்த கோர்ட்டுக்கு முறையாக அப்ளிகேஷன் ஒன்றையும் சுப்பிரமணியம் சுவாமி கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீதிபதி சுப்பிரமணியத்துடன் சேர்ந்து நீதிபதி சீனீவாசனும் கிளம்பிவிட்டார்.
கோர்ட் கலைந்தது! அரசு வழக்கறிஞர், பரசுராமன் கவர்னரின் வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன் ஜி.ராமசுவாமி எல்லோரும் போய்விட்டார்கள். அதன் பிறகு கோர்ட் அப்ளிகேஷன் ஒன்றை சுவாமி தனது வழக்கறிஞர் வெங்கட்ராமனை வைத்து நிரப்பிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். வெளியில் வந்த சுவாமியுடன் பாதுகாப்பாக கூடவே, நடந்து வந்த தமிழக போலீசார் வழக்கமான பாதையை மாற்றி வேறு வழியாக மாடியில் இருந்து கீழேயிறங்கி நீதிபதிகள் செல்லும் சிறப்பு வழியில் சுப்பிரமணியன் சுவாமியை அழைத்துச் சென்றனர். அ.தி.மு.க.வினரிடமிருந்து தன்னைக் காப்பாற்றத்தான் வேறு வழியாக அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்திருந்த சுவாமிக்கு வெளியில் காத்திருந்தது அதிர்ச்சி. தனது வேனில் ஏறிக் கிளம்பிய சுவாமி, மெயின் கேட் அருகே நிறுத்தப்பட்டார். அங்கே தயாராக நின்று கொண்டிருந்த கூடுதல் டி.ஜி.பி தேவாரம், சென்னை நகர இணை கமிஷனர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் சுப்பிரமணியம் சுவாமியை வழிமறித்து நிறுத்தினர்.
வேனிலிருந்த சுப்பிரமணியம் சுவாமியிடம் சென்ற போலீஸ் அதிகாரி சவானி, உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம். ஒத்துழைப்புக் கொடுத்து எங்களுடன் வாருங்கள் என்று பணிவாகக் கேட்டார். நாளை காலை பதினோரு மணி வரை நீதிபதியிடம் அவகாசம் வாங்கியிருக்கிறேன். அதற்குள் முன்ஜாமீன் பெற்றுவிடுவேன்! அதற்குள் பெறவில்லையென்றால் காலை 11 மணிக்கு என் வீட்டில் வந்து கைது செய்து கொள்ளுங்கள்! நான் எங்கும் ஓடிப்போய் விடமாட்டேன் என்று சுவாமி சொல்ல, சவானி குழப்பத்துடன் தேவாரத்திடம் ஏதோ சொன்னார். அடுத்து தேவாரமும் சவானியும் வலுக்கட்டாயமாக கைதுசெய்ய முயற்சித்தார்கள்.
அதுவரை பொறுமை காத்த வழக்கறிஞர் வெங்கட்ராமன், 'நீதிபதியிடமே அனுமதி வாங்கியாச்சுன்னு சொல்றோம். கேட்காம தகறாறு பண்றியே... உன் சட்டையில் சவானிங்கிற நேம் போர்டு இல்லாமப் பண்ணிடுவோம் தெரியுமில்லே. காக்கிச் சட்டையைக் கழட்ட வெச்சுக் கூண்டுல ஏத்திக் கம்பி எண்ண வெச்சுடுவேன். கோர்ட்டையே அவமதிச்சீங்கன்னு கேஸ் போடுவேன். மீறி தைரியம் இருந்தா சுவாமியை அரஸ்ட் பண்ணு பார்ப்போம்' என்று கூச்சலிட்டார். சவானியும் தேவாரமும் அவசர அவசரமாக வயர்லெஸ் மைக் மூலம் டி.ஜிபி. அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டார்கள். டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து வந்த செய்தியை அடுத்து சுவாமி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்குமிங்கும் காரில் அலைந்தபடியே பார்த்துக்கொண்டிருந்த கமிஷனர் ராஜகோபாலன் கடைசி வரை காரிலிருந்து இறங்காமலே அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டேயிருந்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சுவாமி வேறு வழியாகப் போய்விட்டதால் ஏமாந்து போன அ.தி.மு.க.வினர் விரக்தியில் மீண்டும் கொஞ்ச நேரம் அங்குமிங்கும் கல்லெறி நடத்திவிட்டு வெறுப்புடன் கலைந்து சென்றார்கள்.
தடைகளை மீறி உள்ளே நுழைந்த சீட்டு சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்ய போலீஸ் படை கிளம்பி விட்டது என்ற தகவல் காலையிலேயே காங்கிரஸ் வட்டாரத்தில் பலருக்குத் தெரிந்தது. வாழப்பாடி அணியில் உள்ள பத்திரிகை செய்தி தொடர்பாளர் கிள்ளிவளவனுக்கு இதுபற்றிய முழு விவரங்களும் வந்தது. கோர்ட்டில் வாதாடிக்கொண்டிருந்த சுவாமிக்கு இந்த விவரம் தெரியுமா? என விசாரித்துப் பார்த்தார் கிள்ளிவளவன்.
கைது செய்ய போலீஸ் வரும் செய்தி சுவாமிக்கு தெரியக்கூடாது என்பதற்காக போலீஸ் திட்டமிட்டு சில காரியங்கள் செய்திருப்பது அப்போதுதான் புரிந்தது. கோர்ட்டுக்கு வெளியே அ.தி.மு.க.வினர் செய்த கலாட்டாவையே ஒரு காரணமாகக் காட்டி சுவாமி வாதாடிக்கொண்டிருந்த கோர்ட் ஹாலுக்கு உள்ளே இருந்து வெளியிலோ, வெளியிலிருந்து உள்ளேயோ ஆட்கள் செல்ல முடியாதபடி தடுத்தது போலீஸ். சுவாமிக்கு வேண்டிய சிலர் இந்த கைது விஷயத்தைச் சொல்ல கோர்ட் ஹாலுக்கு செல்ல முயன்றபோது, போலீஸ் மடக்கப் பார்த்தது. இந்த விவரம் அறிந்ததும், சாமர்த்தியம் உள்ள இருவரை கோர்ட்டுக்கு உடனடியாக அனுப்பினார் கிள்ளிவளவன். உங்களை கைது செய்ய வெளியே போலீஸ் காத்திருக்கிறது. உஷார் என்ற வார்த்தைகள் அடங்கிய சீட்டு அந்த இருவரிடம் இருந்தது. மோப்பம் பிடித்த சி.ஐ.டி. போலீஸார் தங்களை நெருங்கி வருவதற்குள் வாழப்பாடி அணியைச் சேர்ந்த செல்லமுத்து என்ற வழக்கறிஞரிடம் சீட்டை ஒப்படைத்துவிட்டு திரும்பிவிட்டனர் இருவரும். போலீஸ் கட்டுக்காவலை மீறி செல்லமுத்து அந்தச் சீட்டை எப்படியோ கோர்ட்டுக்குள் கொண்டு சென்று சுவாமியிடம் ஒப்படைத்தார். உடனே சுவாமி உஷாராகி ‘வாரண்ட்’டிலிருந்து தப்ப நீதிபதியின் ஸ்பெஷல் அனுமதி பெற்றார்.
சூறாவளி உருவாக்கிய அந்தச் சொல் சுப்பிரமணியம் சுவாமி ஆதிதிராவிடர்களைப் பற்றி இழிவாகப் பேசினார் என்று அவர் மீது வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய முனைந்தது அ.தி.மு.க. அரசாங்கம். அதற்கு காரணம், எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரனைக் கண்டனம் செய்து சில மாதங்களுக்கு முன்பு சுவாமி, விடுத்த அறிக்கையில், பிரபாகரனை ‘இன்டர்நேஷனல் பறையா’ என்று சாடியிருந்தார். இதற்கு சுவாமி சொல்லும் விளக்கம், அந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘பகிஷ்கரிக்கப்பட்டவன்’ என்று தான் அர்த்தமே தவிர, ஆதிதிராவிடர்களைக் குறிக்கும் வார்த்தை அல்ல. டைம் நியூஸ்வீக், இந்தியா டுடே போன்ற பல்வேறு ஆங்கிலப் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இந்த ஆங்கில வார்த்தை வெகுகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவில் லிபர்டிஸ் சட்டத்தில் ஆதிதிராவிடர்களையோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களையோ பார்த்து அந்த ஆட்சேபமான வார்த்தைச் சொன்னால்தான் தண்டனை என்று இருக்கிறதேன்றி, வேறு அர்த்தம் தொனிக்கும் இந்த ஆங்கில வார்த்தையை ஆதி திராவிடர்களுக்குச் சம்பந்தமேயில்லாத இடத்தில் பயன்படுத்தினால் தண்டனை என்று கூறவில்லை என்பது.
‘லீகல் தெசாரஸ்’ உள்பட உலகப் புகழ்ப் பெற்ற ஆங்கில அகராதிகளில், இந்தச் சொல்லுக்கு ஓடிப்போனவன், நாடுகடத்தப்பட்டவன், வன்முறையாளன் என்றுதான் அர்த்தங்கள் இருக்கின்றன. இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னை இவ்விஷயத்தில் முதலில் எதிர்த்துக் குரல் கொடுத்தவர் நகைமுகன். இந்த நகைமுகன் என்.எஸ்.ஏவில் தேசத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவர். எல்.டி.டி.ஈ யின் ஆதரவாளர் என்கிறார் சுவாமி. ஜெயலலிதா சொல்லித்தான் எதிர்த்தார் நகைமுகன். இதற்கு காரணம் ஜெயலலிதாவின் எல்.டி.டி.ஈ ஆதரவுதான். ஜெயலலிதா ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் ஏராளம். வாச்சாத்தி கற்பழிப்பு சம்பவம், அண்ணாமலை நகரில் பத்மினி கற்பழிப்பு, ஆதி திரராவிடர்களுக்கு ஒதுக்க வேண்டிய பஞ்சமி நிலங்களை ஆளும் கட்சியினருக்கு ஒதுக்கியது. இதைத் தட்டிக்கேட்ட ஆதிதிராவிடர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது போன்ற செய்கைகள் செய்தது யார் என்று கேள்வி எழுப்பினார் சுவாமி.
இதைவிடப் பெரிய கொடுமை ஆதிதிராவிடரான மத்திய அமைச்சர் அருணாசலம் ஜெயலலிதா செல்லும் விமானத்தில் ஏறிவிட்டார் என்பதற்காக அவரை இழிவுபடுத்திப் பேசி விமானத்திலிருந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளியவர்தானே இந்த ஜெயலலிதா என்பது சுவாமியின் வாதம். சுவாமிக்குத் தான் கைது செய்யப்படலாம் என்று புதன்கிழமை இரவே தெரிந்துவிட்டது. ஒரு விருந்தில் கலந்துகொண்ட அவர் என்னை கைது செய்தால், தன்னுடன் இருக்கும் இருபது சி.ஆர்.பி.எஃப் படையினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். நான் மத்திய அமைச்சருக்குச் சமமான பதவியில் இருப்பதால் எப்படி மத்திய அரசைக் கேட்காமல் கைது செய்கிறார்கள் பார்ப்போம் என்று கண் சிமிட்டியபடியே கூறினார்.

சுவாமியின் எஸ்கேப்! பரபரப்புக் காட்சிகள்...

உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சின் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற கவலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பாசிட்டிவ்வாக எந்தத் தகவலும் வரவில்லை. ரொம்பவே டல்லாகிப்போய் இருந்தார். நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று சொல்லிருக்கிறார். அப்போது அருகில் இருந்தவர் அமைச்சர் எஸ்.டி.எஸ். திடுக்கிட்டுப்போய் ஏதும் சொல்ல வாய் வராமல் குழப்பத்துடன் வெளியே வந்திருக்கிறார். வந்தவருக்கு மிகச் சரியான தருணத்தில் நகைமுகன் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கை கண்ணில் பட்டது. பொறி தட்டியவராக அதை எடுத்துக்கொண்டு முதல்வரிடமே ஓடினாராம் எஸ்.டி.எஸ். 'இதோ பாருங்கள்... விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி இன்டர் நேஷனல் பறையா என்று ஒருமுறை சொல்லியிருக்கிறாராம் சுவாமி. அதைக் கண்டித்து வெளியான அறிக்கை இது. சுவமியை நிலை தடுமாற வைக்க இது உதவும் என்று சொல்லி முதல்வரை உற்சாகப்படுத்த முயன்றார் எஸ்.டி.எஸ்
காரியங்கள் மின்னல் வேகத்தில் நடந்தன. ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாக சுவாமி மீது சென்னையில் ஒரு போலீஸ் கம்ப்ளெயின்ட் பதிவானது. சற்றே நிதானம் அடைந்து யோசித்தபோது சுவாமி குறிப்பிட்ட அந்த வார்த்தையைச் சொன்ன பிரஸ்மீட் நடந்தது மதுரை என்பதால் புகாரை அங்கே மாற்றிவிடுவதுதான் சரி எனச் சொல்லப்பட்டது. உடனடியாக புகார் மதுரைக்கு மாற்றப்பட்டு அங்கே பதிவானது. குறிப்பிட்ட இந்தப் புகாருக்கு ஆளான ஒருவரைக் கைது செய்ய கோர்ட் வாரன்ட் தேவையில்லை என்பதுதான் முக்கியமான பாயின்ட். புகாரை மதுரையில் பதிவு செய்வதன் மூலம் உடனடியாக சுவாமியைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டுசென்றுவிடலாம் எனத் திட்டம் தீட்டப்பட்டது. இந்த விவரங்கள் காதுக்கு வந்ததுமே போலீஸ் அதிகாரிகள் மூவர் கலவரம் அடைந்து விட்டனர். சுவாமியை ஓர் அளவுக்கு மேல் சீண்டிப் பார்ப்பது ஆபத்தானது என்று இம்மூவரும் அபிப்ராயப்பட்டார்கள். அதிலும் சுவாமியைக் கைது செய்வதன் மூலம் பெரும் அரசியல் பூகம்பமே வெடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். தனித்தனியே அந்த மூன்று அதிகாரிகளின் சிந்தனையும் வேகமாக ஓடியது. இதையடுத்து, சுவாமியின் கைது நடவடிக்கைகள் பிசுபிசித்துப் போனதற்கு இந்த அதிகாரிகள்தான் முக்கிய காரணம்.
வாழப்பாடியாரின் பிரிவைச் சேர்ந்த கிள்ளிவளவன் மூலம் சுவாமிக்குத் தகவல் வந்து சேருவதற்கு சற்று முன்பே இந்த மூன்று அதிகாரிகளிடமிருந்தும் தனித்தனியே தகவல்கள் கோர்ட்டுக்கு வந்துவிட்டன. மூவரில் ஒரு அதிகாரி நம்பிக்கைக்கு உரிய ஆள் மூலம் ஒரு தகவலை கோர்ட்டுக்குச் சொல்லி அனுப்பினார். மதுரை கமிஷனர் வெங்கட கிருஷ்ணன் விமானம் மூலம் சென்னைக்கு வந்துவிட்டார்.
சற்று நேரத்துக்கெல்லம் இன்னொரு அதிகாரியிடமிருந்து சீட்டு வந்துவிட்டது. சுவாமி கைதாகப் போகிறார் அவரை மதுரைக்கு கூட்டிச் செல்வதே திட்டம். மதுரையில் உள்ள சிறைச் சாலையில் அடைக்க கூடும், அங்குள்ள கைதேர்ந்த சில எல்.டி.டி.ஈ ஆதரவுக் கைதிகள் மூலம் சிறைக்குள் சுவாமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னது அந்தத் தகவல்.
இரண்டாம் தகவல் வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூன்றாவது உயர் போலீஸ் அதிகாரியின் ஆள் கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து சந்திரலேகாவிடம் ஒரு தகவலைச் சமர்ப்பித்தார். அதில் சுவாமி கைதுக்காக மதுரை போலீஸ் தயாராக நிற்கிறது. எக்காரணம் கொண்டும் போலீஸ் ஜீப்பில் ஏறவேண்டாம், எழும்பூர் கமிஷனர் ஆபீஸுக்குக் கொண்டுச் செல்வதாகச் சொல்லி விட்டு மதுரைக்குச் சென்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று இருந்தது. இந்த விஷயங்கள் வந்து சேரும் போதெல்லாம் நீதிபதிகளை நோக்கி விறுவிறுப்பாக தன் வாதங்களை வைத்துக் கொண்டிருந்தார் சுவாமி. திடுக்கிடும் இந்தத் தகவல்களை உடனே தெரிவிக்கலாம் என்றால், இடையில் குறுக்கிடவும் முடியவில்லை. விஷயத்தைக் கேட்டு வைத்துக் கொண்டார் சந்திரலேகா. இறுதியில் சுவாமி தன் வாதத்தை முடிக்க, தகவல்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட்டன.
சரிதான்... ஒருசில விநாடிகள் ஸ்தம்பித்து நின்றார் சுவாமி. தான் ஏதாவது ஒரு காரணம் காட்டி கைது செய்யப்படலாம் என்பது கடந்த சில நாட்களாகவே அவர் எதிர்பார்த்ததுதான். கைதுக்குக் காரணம் இந்த ரூபத்தில் வரும் என்பதுகூட முன்னிரண்டு நாட்களாகவே முக்கிய வட்டாரங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயம்தான். ஆனால், இத்தனை விரைவாக இதெல்லாம் நடக்கும் என்பது சுவாமி எதிர்பாராதது. தன்னைக் கைது செய்து எங்காவது போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்று பெரும் விபத்தில் சிக்கவைக்கத் திட்டங்கள் இருப்பதாக சுவாமி சொல்லிக் கொண்டுதான் இருந்தாராம். தப்பி ஓடினார் சுட்டோம் என்றுகூடச் சொல்லிவிடுவார்கள் என்று தனக்கு மிக நெருங்கிய சிலரிடம் சுவாமி சொன்னாராம். அதனால்தான் கைது செய்ய ஆள் வந்துவிட்டது என்று தெரிந்ததும் சட்டெனச் சுதாரித்துக் கொண்டார். சுவாமி உடனடியாக நீதிபதியிடம் சொல்லி மறுநாள் காலை பதினோரு மணி வரை டயம் வாங்கிக்கொண்டார்.
ஒருபுறம் நீதிபதி கேட்ட சில ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருந்தபோதே சுவாமியின் மனதில் மளமளவெனத் திட்டங்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. சந்திரலேகாவிடம் சில உத்தரவுகள் பிறப்பித்தார். கோர்ட்டுக்கு வெளியெ ஒருபுறம் அ.தி.மு.க.வினரும் மறுபுறம் போலீஸாரும் சுவாமியை எதிர்த்துப் பரபரப்புடன் காத்திருக்க... சந்திரலேகா அனுப்பிய ஒரு ஆள் கிளம்பி கோர்ட்டுக்கு வெளியில் வந்தார்..!
அடுத்ததாக சென்னையிலிருந்து பம்பாய்க்குச் செல்லும் முதல் விமானம் எது என்று பார்த்து சுப்பிரமணி என்ற பெயரில் ஒரே ஒரு டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்பது அவருக்கு உத்தரவு. இண்டியன் ஏர் லைன்ஸ் விமானத்தில் காதும்காதும் வைத்ததுபோல டிக்கெட் வாங்கி முடித்தார் அந்த நபர். கையோடு பம்பாயில் உள்ள சுவாமியின் நெருங்கிய நண்பருக்கு போன் செய்து அங்கிருந்து டெல்லி செல்வதற்கும் டிக்கெட் புக் செய்யச் சொல்லிவிட்டார்.
கோர்ட்டை விட்டு வெளியில் வந்த சுவாமியை காத்திருந்த தேவாரமும் சவானியும் மடக்க மீசையை முறுக்கியபடி நின்றிருந்த தேவாரத்தைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட சுவாமி, அட சந்தனக் கடத்தல் வீரப்பன் இங்கு வந்திருக்கிறாரா என்று ஜோக் அடித்தாராம். பிறகு தான் நீதிபதியிடம் விசேஷ அனுமதி வாங்கியிருப்பதைச் சொல்லி போலீஸ் வளையத்திலிருந்து தப்பிய சுவாமி நேரே ராஜ் பவன் போய்விட்டார்.
சுவாமியை வரவேற்ற கவர்னர் அவரை நிறைய பாராட்டினார். எமர்ஜென்ஸி நேரத்தில் நீங்கள் பார்த்ததைவிட மோசமான அனுபவங்கள். இப்போது தமிழ்நாட்டில் எதிர்க் கட்சியே இல்லையோ என்கிற அளவுக்கு நிலைமைகள் கட்டுமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆள்பலத்தையோ பணபலத்தையோ வைத்து இந்த அரசாங்கத்தைச் சமாளிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். கூர்மையான சட்ட அறிவும் தந்திரமும்தான் ஜெயிக்க முடியும் என நான் நம்புகிறேன் என்று அந்த டென்ஷனான சூழ்நிலையிலும் சொன்னார் கவர்னர்.
பிரதமரிடமிருந்து கடந்த வாரத்தில் கவர்னருக்கு வந்த இரண்டு கடிதங்கள்தான் அதற்குக் முக்கிய காரணம். அதில் ஒரு கடிதத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீங்கள் செய்கிற எதிலும் மத்திய அரசு குறுக்கிடாது என்றும், இன்னொரு கடிதத்தில், திண்டிவனத்தில் கவர்னர் மீது நடந்த தாக்குதல் பற்றிக் குறிப்பிட்டு, இனி உங்களுக்கு எந்தப் பங்கமும் வராதபடி பார்த்துக்கொள்வது எங்கள் பொறுப்பு என்றும் அக்கறையோடு கூறியிருந்தாராம் பிரதமர். கிட்டத்தட்ட இது பச்சைக்கொடிதானே. அந்த தெம்புடன் இருந்த கவர்னருக்கு சுவாமியைக் கைது செய்ய தமிழக அரசு செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியே பிறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சுவாமியுடன் முக்கியமான சில விஷயங்களைப் பேசி சில யோசனைகளையும் சொன்னார் கவர்னர். அங்கிருந்து நேரே பாபநாசம் சிவன் சாலையில் உள்ள தனது கட்சி ஆபீஸுக்கு வந்த சுவாமி, சில நிருபர்களைச் சந்தித்தார். சுவாமியைப் பின்தொடர்ந்து கொண்டிருந்த ரகசிய போலீஸார் மீண்டும் அவர் ராஜ்பவனுக்குக் கிளம்பிச்செல்வது கண்டு குழம்பினார்கள். சுவாமி எப்போது ராஜ் பவனிலிருந்து வெளியில் வந்தார். எப்படி விமான நிலைத்துக்குள் நுழைந்தார் என்றே யாருக்கும் தெரியாது. சுவாமி விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் ஜெயலலிதாவுக்குத் தகவல் வந்தது. சுவாமி சென்னையைவிட்டே எஸ்கேப் ஆகிறார் என்று தகவல் போனதும் கொதித்துவிட்டார் முதல்வர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜகோபாலனை லைனில் அழைத்தார். கமிஷனர் பதவியிலிருந்து ராஜகோபாலன் திடீரென தூக்கப்பட்டு வைகுந்த் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட மர்மம் இங்கேதான் தொடங்கியது.
முதல்வர் அழைத்ததுமே அவருடன் போனில் பேசினார் கமிஷனர். உடனடியாக சுவாமியைத் தடுக்க வேண்டும் என்ன செய்வீர்களோ தெரியாது என்றார். சரி என்று சொல்லி போனை வைத்துவிட்டார் கமிஷனர். சென்னை நகர போலீஸாரும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் வெங்கடகிருஷ்ணனும் விமான நிலையம் சென்றபோது மும்பை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 5ஜி ஸீட்டில் ஏறி அமர்ந்துவிட்டிருந்தார் சுவாமி. விமானநிலைய அதிகாரிகள் இந்த போலீஸ் அதிகாரிகளைத் தடுத்துவிட்டனர். விமானத்தில் ஏறி உட்கார்ந்துவிட்ட ஒருவரை கைதுசெய்ய வேண்டுமானால் அதற்கு பன்னாட்டு விமானநிலைய குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ஒரு கடிதம் எழுதித்தாருங்கள் என்று கேட்டனர். இவர்கள் மறுக்க இருதரப்புக்கும் அதுவே பெரிய சண்டையாக மாறியது. இதனால் அரை மணி நேரம் தாமதப்பட்ட விமானம், கடைசியில் சுவாமியைச் சுமந்து கொண்டு வானில் ஏறிப் பறப்பதை ஏமாற்றத்துடன் பார்த்தனர் நம் போலீஸ் அதிகாரிகள்.
அவர்கள் ஆத்திரம் எல்லாம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டெபுடி கமிஷனர் மணி மீது திரும்பியது. என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இத்தனை நேரம் விமான நிலையத்துக்கு உள்ளே நுழையும் போதே சுவாமியைத் தடுத்துப் பிடிக்க வேண்டியதுதானே என்று இவர்கள் சீற, பதிலுக்கு மணியும் சீண்டிக் காட்டினார். இவ்வளவு நேரம் சென்னை நகர எல்லைக்குள் சுற்றிக்கொண்டிருந்த சுவாமியைப் பிடிக்காமல் கோட்டைவிட்ட நீங்கள் என்னை வந்து அதட்டுவது என்ன நியாயம் என்றார் மணி. அங்கே இன்னொரு சண்டை.
சுவாமி வெற்றிகரமாக மும்பை சென்றுவிட்டார் என்று போயஸ் தோட்டத்துக்குச் செய்தி போனதும் முதல்வர் திகைத்துப் போய்விட்டாராம். மீண்டும் சென்னை நகர கமிஷனரை அழைத்தார். செமடோஸ். கவலைப்பட வேண்டியதில்லை. சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வைத்து இந்தியாவில் அவர் எங்கே போனாலும் கைது செய்துவிட முடியும் என்று கமிஷனர் சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட ஜெயலலிதா, மெட்ராஸுக்குள்ளே இருந்தபோதே அவரைப் பிடிக்க முடியாத நீங்கள் இதைச் சொல்கிறீர்கள் என்றார். இரவு இது நடந்த அரை அணி நேரத்துக்கெல்லாம் நாளிதழ்களுக்கு ஃபேக்ஸ் செய்தி வந்தது. ராஜகோபாலன் சென்னை நகர கமிஷனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வைகுந்த் நியமிக்கப்பட்டதாக.
அதே தினம் காலைதான் ஆர்.வி.யுடன் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. சுவாமி கோர்ட்டுக்கு வந்திருப்பதையும் அ.தி.மு.க.வினர் கோர்ட்டைச் சுற்றி நின்று கலாட்டாவில் ஈடுபட்டிருப்பதையும் பற்றி ஆர்.வி.யிடம் சொன்னவர், இதெல்லாம் எங்கு கொண்டு போய்விடும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதற்கெனவே காத்திருந்தது போல் ஆர்.வி நீண்டதொரு லெக்சர் கொடுத்து விட்டாராம்.
ஏற்கனவே உங்களிடம் நான் சொன்னபடி உடனே ராஜினாமா செய்துவிடுங்கள். சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க வினர் நடத்துகிற கலாட்டாக்கள் எல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்றால், அதை மக்கள் ரசிக்கமாட்டார்கள். இந்தக் கலவரங்கள் எல்லாமே உங்களை மீறி தொண்டர்கள்தானாகச் செய்கிற விஷயங்கள் என்றும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கட்சி உங்கள் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதாகிவிடும். அதுவும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. விவகாரங்கள் மேலும் வளராமல் இருக்க நீங்கள் உடனே ராஜினாமா செய்யுங்கள். தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதுதான் ஆர்.வி.யின் அட்வைஸ்.

Monday, May 11, 2015

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?

- nanayam vikatan article

பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.
 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?
‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.
 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.
 எப்போது சேரலாம்?
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.
பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.
 என்ன வேண்டும்?
இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.
 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
 பிரீமியம் செலுத்துதல்!
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 
இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.
மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.
ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.
 ரெனீவல் செய்வது!
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.
 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
 எவ்வளவு க்ளெய்ம்?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.
விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.
சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். 
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
 எப்போது காலாவதி?
கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.
பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.
பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு 
165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.
எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!
மு.சா.கெளதமன்