Tuesday, February 25, 2014

தண்ணீர்..தண்ணீர்... மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்கள்...2

'காதலின் அருமை, பிரிவில்
மனைவியின் அருமை, மறைவில்
நீரின் அருமை அறிவாய், கோடையிலே...’
சத்திய வார்த்தைகளை சந்தமாக்கி வைத்திருக்கிறார், கவிஞர் வைரமுத்து. பருவநிலை மாற்றத்தில் உயிரினப் பன்மயம் பலத்த அடி வாங்கிக் கிடக்கும் சூழலில், ஆண்டின் அத்தனை நாட்களுமே கோடையாகத்தான் இருக்கின்றன. கோடை வருவதற்கு முன்னரே ஓடைகள் வற்றிவிட்டன. கிணறுகள் வெறும் கிடங்குகளாகவும், குளங்களில் குரும்பாடுகள் மேய்ந்து கொண்டும், ஆறுகளில் லாரிகள் ஓடிக்கொண்டும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், 'வரலாறு காணாத வறட்சி'யில் தமிழகம் சிக்கி பல ஆண்டுகளாக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சரிதான். இந்த வறட்சியை வரவழைத்ததில் நமக்கும் பங்குண்டுதானே? நமது தவறுகளை, நாம்தானே சரி செய்ய வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பதுதானே முறை. 'வறட்சி... வறட்சி’ என விரக்தியில் வீறிடுவதை விட, அதை விரட்டும் வழிமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்றல்ல. தங்கள் செயல் மூலமாக சாத்தியப்படுத்திக் காட்டியிருகிறார்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை பகுதியைச் சேர்ந்த சாமான்ய மக்கள்.
தொப்பியசாமி மலையின் மேற்குப் பகுதியில், காப்புக்காடுகளுக்கு கீழ், செம்மண் சரளை பூமியில் அமைந்திருக்கிறது இந்தப்பகுதி. மலையில் கிடைக்கும் மழைத் தண்ணீர், ஓடைகள் வழியாக... வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, வாணிக்கரை, கூம்பூர் வழியாக ஈசநத்தம் சென்று குடகனாற்றில் கலந்து, அங்கிருந்து அமராவதி ஆற்றில் ஐக்கியமாகி, காவேரியில் கலந்து கடலில் சேர்கிறது. தரைமட்டத்தில் இருந்து, 360 மீட்டர் மேடான பகுதி என்பதாலும், பெய்யும் மழைநீர் உடனே ஓடி விடுவதாலும், வானம் பார்த்த வெள்ளாமைதான் சாத்தியமாக இருந்தது. ஒரு கட்டத்தில், மழையில்லாமல் மானாவாரி வெள்ளாமைக்கும் வழியில்லாமல், பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்கு பயணப்பட்டனர் இவ்வூர் மக்கள். இந்நிலையில், 2010-ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலாரின் பார்வை, இந்தப் பகுதி மீது விழுந்தது. அதன் பிறகுதான், அந்த மாபெரும் மாற்றம் நடந்தேறியது. 'இந்த மண்ணில் இனி எதுவும் விளையாது’ என எண்ணி வெளியூருக்குச் சென்றவர்கள், ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது.
இது எப்படி சாத்தியமாயிற்று..?
திட்டத்தை செயல்படுத்திய மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் விரிவாக்க அலுவலரும் உதவிப் பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேளுங்களேன்..!
''இது ரொம்ப வளமான பகுதி, ஆனா, ஏன் வறட்சியா இருக்குனு கலெக்டர் (வள்ளலார்) எங்களை விசாரிச்சதோட, அந்தப் பகுதியைப் பத்தின அத்தனை தகவல்களையும் திரட்டச் சொன்னாரு. நாங்களும் பழைய வரைப்படங்களையும் அந்தப்பகுதியில இருந்த வயசானவங்ககிட்டயும் விசாரிச்சு நிறைய தகவல்களைத் திரட்டினோம். அதோட, கூகுள் மேப்ல பாத்தப்போ, அந்தப் பகுதியில ஏழு குளங்கள் இருந்ததைக் கண்டுபிடிச்சோம். ஆனா, அங்க முதல் குளமும், ஏழாவது குளமும் மட்டும்தான் கொஞ்சமா இருந்துச்சு. மத்த குளங்கள் இருந்த அடையாளமே இல்ல. அந்தப் பகுதியில தண்ணியில்லாததால விவசாயமே இல்லை. ஆடு, மாடு வளர்க்கக்கூட தண்ணியில்லாததாலதான் வெளியூர்களுக்கு வேலை தேடிப் போக ஆரம்பிச்சாங்க.
அந்தப்பகுதியில முதல்ல நீராதாரத்தைப் பெருக்கணும்னு முடிவு செஞ்சு, குளங்களைப் புனரமைக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 'வேண்டாத வேலை’னு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாத்த ஊர்மக்கள், நாங்க ஒரு குளத்தைத் தயார் செஞ்சதும், ஆர்வமா களத்துல இறங்கிட்டாங்க. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும் இதுல ஈடுபடுத்தி ஏழு குளங்களையும் புதுப்பிச்சோம். ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கு தண்ணி போற மாதிரி, 21 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்களை சரி செஞ்சோம். இதெல்லாம் செஞ்சி முடிக்கவும்... ஒரு மழை பெய்யவும் சரியா இருந்துச்சு. கிணறுகள்லயும், போர்வெல்லயும் தண்ணி ஊறிச்சு. மானாவாரி விவசாயத்துக்குக்கூட வழியில்லாம இருந்த நிலத்துல, இறவை விவசாயம் செழிக்க ஆரம்பிச்சது.
2011-ம் வருஷ ஆரம்பத்துல 18 ஹெக்டேர் நிலத்துல விவசாயம் நடந்துச்சு. இதைக் கேள்விப்பட்டு வெளியூர்களுக்கு வேலைக்குப் போன 21 குடும்பங்கள் ஊர் திரும்பினாங்க. அதே வருஷம் ஜூன் மாசம் 31 ஹெக்டேர்ல கடலை, தக்காளி, வெங்காயம்...னு விவசாயம் ஜோரா நடந்துச்சு. கால்நடைகளும் அதிகமாச்சு. இந்த மூணு வருஷத்துல அந்தப் பகுதியில மூணு நாட்கள் மட்டுமே மழை கிடைச்சுருக்கு. இருந்தாலும், இன்னமும் அங்க விவசாயம் நடக்குது. இவ்வளவு நாளும், மண்ணோட ஈரப்பதம் காக்கப்பட்டு வர்றதுக்கு காரணம் குளங்களை இணைச்சதுதான்'' என்கிறார். பிரிட்டோ.
குளங்கள் இணைப்புத் திட்டத்தின் முதல் தளமான கிழக்கு மெத்தைப்பட்டி கிராமத் துக்குச் சென்றோம். மழையில்லாமல் மொத்தப் பகுதியும் காய்ந்து போய் கிடந் தாலும், சில இடங்களில் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது, விவசாயம். ஆலமரத் துக்குக் கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த திருமலைசாமியிடம் பேசினோம்.
''கலெக்டர் ஐயா, குளங்களை சரி செஞ்சு கொடுத்த பிறகு வெள்ளாமை நல்லா இருந்துச்சு. ஆனா, தொடர்ந்து மூணு வருஷமா மழையில்லாததால பல போர்வெல் கிணறுகள்ல தண்ணி கீழ போயிடுச்சு. இருந்தாலும், சிலர் இன்னும் செழும்பா வெள்ளாமை பாத்துட்டுதான் இருக்காங்க'' என்று கைகாட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தங்கராஜ், ''ஒரு காலத்துல வெள்ளாமை செய்ய முடியாம காடா இருந்த பூமிங்க. 1950-கள்ல எங்க முப்பாட்டன் பாப்பா நாயக்கர்தான் இதை விவசாய பூமியா மாத்துனாரு. அதுக்கு முன்ன வரை, மலையில பெய்ஞ்ச மழைத்தண்ணி ஒரே ஓட்டமா கீழ ஓடிப் போயிட்டு இருந்துச்சு. எங்க பாட்டன், மலையில இருந்து வாய்க்கால் வெட்டி, ஊர்ப் பக்கமா தண்ணியைக் கொண்டு வந்தாரு. அப்படிக் கொண்டு வந்தவரு, குறிப்பிட்ட இடைவெளிகள்ல சின்னச்சின்னதா குளங்களை வெட்டினாரு. அங்கங்க கிணறுகளையும் வெட்டி, கிணத்துக்கு மேல் பக்கமா மண்ணைக் கொட்டி கரை எடுத்தாரு. அதனால பெய்ற மழைத் தண்ணி கரையில தேங்க ஆரம்பிச்சது. கிணத்துல தண்ணி கொறையாம இருந்துச்சு. எங்க காலத்துல அதை முறையா பராமரிக்காம விட்டதுல, வாய்க்கா தூந்துப் போயி, தண்ணி வராம குளங்கள் அழிஞ்சுப் போச்சு. குளங்களை சரி பண்ணி கொடுத்த உடனே ஒரு மழை கிடைக்கவும், கிணறுகள்ல தண்ணி வந்துச்சு. மறுபடியும் விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம்'' என்கிறார் குரலில் உற்சாகத்தைத் தேக்கியவராக.
இந்த கடும் வறட்சியிலும் வெங்காயம் அறுவடை முடித்து, அடுத்த விவசாயத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த பாப்ப நாயக்கர், ''என் வயலுக்கு மேல இருக்கற ஓட்டைமடை குளம் மழைத்தண்ணியால நிறைஞ்ச, ஒரே நாள்ல என் கிணத்துல தண்ணி மேல வந்துடுச்சு. வெங்காயம், தக்காளி...னு போட்டு எடுத்தேன். ஊர் உலகத்துல தக்காளி வரத்து குறையற நேரத்துல எங்க பகுதியில தக்காளி சக்கைப்போடு போடும். அதனால, இயல்பாவே நல்ல விலை கிடைக்கும். இப்ப வெங்காயம் போட்டு எடுத்துட்டேன். முருங்கையும் என் வயல்ல இருக்கு. இந்த பஞ்ச காலத்துலயும், நான் நஞ்சை விவசாயம் பண்றேன்னா அதுக்கு காரணம் இந்த குளம்தான்'' என்றவர்,
''தண்ணி இருந்தாலும், பல நேரங்கள்ல கரன்ட் இருக்குறதில்ல. அதனால நிலத்துல ஒரு மூலையில, பள்ளம் தோண்டி, களிமண்ணைக் கொட்டி, தொட்டி மாதிரி கட்டி வெச்சிருக்கேன். கரன்ட் இருக்கும்போது, அதுல தண்ணியை நிரப்பிக்குவேன். தேவைப்படும்போது, தொட்டியில இருந்து வாய்க்கா வழியா பாசனம் செஞ்சுக்குவேன். இந்தக் கரையில 50 வாழைக இருக்கு. அது மூலமா ஒரு வருமானம் கிடைக்குது'' என்று தான் பயன்படுத்தி பலன் பார்த்து வரும் தொழில்நுட்பம் ஒன்றை பேச்சின் போக்கிலேயே நம்மிடம் பதிய வைத்தார்!
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ, தன் பேச்சினூடே... தண்ணீர் சேமிக்க மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், குளங்களைப் பராமரிக்கும் முறைகள், போர்வெல் போடும்போது கவனிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். ஒவ்வொன்றும் 'அடடா’ ரகம்.
அவை, அடுத்த இதழில்...

- Vikatan

மூலிகை வனம் -2

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில், அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்துகொள்வோம்...
'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.
புல் வகைகளின் அரசன்!
அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!
'அருகன்' என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம்.
இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். 'அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை 'விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை 'பால வாகடம்' என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குருமருந்து' எனவும் அழைக்கிறார்கள்.
அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்!
காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது.
இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். 'பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!
தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.  
கிரீன் பிளட்..!
அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... ஆரோக்கியமாய் வாழ்வோம்.
- வலம் வருவோம்...

- Vikatan

Sunday, February 23, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 25

ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட தலைவர்கள் சித்ரவதைச் சிறையில் இருந்தனர். பெரிய நாளிதழ்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டு இருந்தன. வட இந்தியாவே இந்திரா, சஞ்சய், சுக்லா வட்டாரத்தால் வறுத்தெடுக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம் தனித் தீவாக இருந்தது. இங்கு காங்கிரஸ் ஆட்சி இல்லாதது மட்டுமல்ல, கருணாநிதி முதல்வராகவும் இருந்தார். அவசரநிலைப் பிரகடனத்தை ஆரம்பகட்டத்திலேயே எதிர்ப்பது என்று துணிந்து முடிவெடுத்தார் அவர்.

''உலகத்தின் மிகப் புகழ்வாய்ந்த மாபெரும் ஜனநாயக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியத் திருநாட்டில், அண்மைக் காலமாக ஆளும் காங்கிரஸார் கடைப்பிடிக்கும் போக்கும், பிரதமர் இந்திரா காந்தியார் அவர்கள் நடைமுறைப்படுத்தும் காரியங்களும், ஜனநாயக ஒளியை அறவே அழித்து நாட்டை சர்வாதிகாரப் பேரிருளில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்து வருவது கண்டு தி.மு.க. செயற்குழு தனது வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறது...
உண்மையின் உருவம் மறைக்கப்பட்டு பொய்யின் நிழலில் நின்றுகொண்டு எதிர்க்கட்சிகளை அடக்குவதற்குத் திட்டம் தயாரித்து, அந்தத் திட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான போலி காரணங்களைத் தேடி அலைந்து, வீண் அபவாதங்களை வாரியிறைத்து, எடுத்ததற்கெல்லாம் சதி, வெளிநாட்டுத் தொடர்பு, பிற்போக்குவாதிகள் என்ற சொற்கணைகளைப் பொழிந்து, காலாகாலத்துக்கும் இந்திய மக்களுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் திருமதி இந்திரா காந்தி நேற்றைய தினம் (26.6.1970) அதிகாலையில் சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்...
சதி நடத்துவோர், வன்முறையில் ஈடுபடுவோர், தகாத வார்த்தையில் பேசுவோர், எழுதுவோர் தண்டிக்கப்பட ஏற்கெனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமலுக்கு வருவது தேவைதானா? ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக்குடையின்கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா?'' - இப்படி ஒரு தீர்மானத்தைப் போடும் துணிச்சல் அன்றைய தி.மு.க-வுக்கு இருந்தது. அன்று முதலமைச்சர் நாற்காலியில் இருந்த கருணாநிதிக்கும் இருந்தது. இப்படி ஒரு தீர்மானம் வேறு எந்தக் கட்சியிடம் இருந்தும் அன்றைய இந்தியாவில் வரவில்லை.
அன்றைய தினம் மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி சென்னையில் இருந்தார். ''தி.மு.க. தீட்டியிருக்கும் தீர்மானத்தை வாழ்த்துவதற்குத்தான் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. நம்மைவிட்டுப் பிரிந்து சென்ற தலைவர்களான காந்திஜி, ராஜாஜி, அண்ணா ஆகியோரின் வருந்தும் இதயங்களை டாக்டர் கருணாநிதி நிச்சயம் மகிழ்வுற வைத்திருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் குரலாகவும் தமிழ்நாடு ஆகியிருக்கும் இந்த நேரம்போல், பாதித் தமிழனாக இருக்கும் என்னுடைய பெருமை இதற்கு முன் வேறு எப்போதும் என்றும் உயர்ந்திருக்கவில்லை'' என்று அறிக்கைவிட்டார். காந்தியின் மகனுக்கும் ராஜாஜியின் மகளுக்கும் பிறந்தவர் ராஜ்மோகன் காந்தி. அதனால்தான் தன்னை பாதித்தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டார்.
அப்போது சோழிங்கநல்லூரில் பேசிய பெருந்தலைவர் காமராஜர், எமர்ஜென்சி குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியும் அன்றைய கல்வி அமைச்சர் நெடுஞ்செழியனும் காமராஜரைச் சந்தித்தார்கள். அப்போது காமராஜர் கண் கலங்கினார். 'தேசம் போச்சு, தேசம் போச்சு’ என்று அவர் சொன்னார். 'இந்த சர்வாதிகாரத்தை நீங்கள்தான் தடுக்க வேண்டும். நீங்கள் சம்மதித்தால் உடனே நாங்கள் அமைச்சரவையை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம்’ என்று கருணாநிதி சொல்ல... 'இந்தியாவிலேயே இப்போது தமிழகத்தில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். அதனால் பொறுமையாக இருங்கள்’ என்று காமராஜர் சொன்னார். இதற்கு அடுத்த சில நாட்களிலேயே காமராஜர் இறந்தும் போனார்.  
சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் கூட்டி, எமர்ஜென்சியை திரும்பப்பெற முழக்கமிட்டார்கள். நாடாளுமன்றத்தில் எமர்ஜென்சிக்கு ஆதரவாகத் தீர்மானம் வந்தபோது, தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. எந்நேரமும் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்தது. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று கருணாநிதியும் தினமும் பேசிவந்தார். நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இந்திரா, 'இந்தியாவில் கட்டுப்பாடு இல்லாத இரண்டு தீவுகள் இருக்கின்றன’ என்று சொன்னார். ஒன்று, தி.மு.க. ஆண்டு வந்த தமிழகம். இன்னொன்று, ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி செலுத்திவந்த குஜராத். அங்கு முதல்வராக பாபுபாய் படேல் இருந்தார்.
வட சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு விழா 20.1.76 அன்று நடந்தது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் குஜராத் முதல்வர் பாபுபாய் படேலையும் அழைத்திருந்தார்கள். இது காங்கிரஸ் அரசுக்கு கடுமையான கோபத்தைக் கொடுத்தது. அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவா, 'ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்ததுபோல தி.மு.க-வையும் தடைசெய்ய வேண்டும்’ என்று பம்பாயில் பயமுறுத்தினார். அதில் இருந்து 10-வது நாள் ஜனவரி 31-ம் தேதி மாலையில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 15-ம் தேதி திறப்பு விழாவுக்கு காத்திருந்தது வள்ளுவர் கோட்டம். கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு 75 அடி சிலை அமைக்கும் அறிவிப்பு அப்போதுதான் வெளியிடப்பட்டு இருந்தது. அனைத்துக்கும் தடைபோடும் விதமாக ஆட்சி கலைக்கப்பட்டது.
ஆட்சி கலைக்கப்பட்ட அன்றைய தினமே கருணாநிதி வீட்டில் இருந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாவலர்கள் சென்றுவிட்டார்கள். கோபாலபுரம் வீட்டுக்குள் கைது நோக்கத்தோடு காவலர்கள் நுழைந்தனர்.
'என்னைக் கைதுசெய்ய வந்துள்ளீர்களா?’ என்று கருணாநிதி கேட்டார். 'இல்லை, உங்கள் மகனைக் கைதுசெய்ய வந்துள்ளோம்’ என்றார்கள். 'அவர் இங்கு இல்லை. வெளியூர் போயிருக்கிறார்’ என்றார் கருணாநிதி. 'வீட்டுக்குள் சென்று சோதனை போட்டுப் பார்க்கலாமா?’ என்றார்கள் காவலர்கள். உள்ளே செல்ல கருணாநிதி அனுமதித்தார். உண்மையில் ஸ்டாலின் அங்கு அப்போது இல்லை. வெறுங்கையோடு திரும்பினார்கள் காவலர்கள். ஆட்சிபோன இரண்டு மணி நேரத்தில் முதலமைச்சராக இருந்தவர் வீட்டில்தான் இந்தக் காட்சி. மறுநாள் ஸ்டாலின் வந்ததும், கருணாநிதியே ஐ.ஜி-க்கு தகவல் சொன்னார். உடனே காவலர்கள் வந்து அவரைக் கைதுசெய்தனர். மறுநாள் முரசொலி மாறன் கைதுசெய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தி.மு.க-வினர் கைதானார்கள். மூன்றே நாளில் பல ஆயிரம் பேரைக் கைதுசெய்தார்கள். அன்று பத்திரிகை தணிக்கை இருந்ததால், கைதானவர்கள் பட்டியலை பத்திரிகையில் வெளியிட முடியாது. கருணாநிதி தந்திரமாக ஒரு காரியத்தைச் செய்தார்.
பிப்ரவரி 3-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம். கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு கட்சிக்காரர்கள் மலர் வளையம் வைப்பது வழக்கம். கைதானவர்கள் பட்டியலை முழுமையாக வெளியிட்டு, 'அண்ணா சதுக்கத்துக்கு மலர்வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’ என்று கருணாநிதி தலைப்பிட்டார். கருணாநிதி மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருக்கின்றன என்று துண்டு பிரசுரங்களை அச்சடித்து வெளியிட்டார்கள். அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டதாகவும், அதில் மொத்தம் 54 புகார்கள் இருப்பதாகவும், அதில் கருணாநிதி மீது 27 புகார்கள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஓம் மேத்தா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பழைய காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்பினரும் கைதுசெய்யப்பட்டார்கள். பத்திரிகை தணிக்கை காரணமாக அனைத்துச் செய்திகளும் அடக்கப்பட்டன. 'இனி கருணாநிதி என்ற பெயரால் எழுதக் கூடாது’ என்று சொல்லப்பட்டதால், 'கரிகாலன் பதில்கள்’ என்று கருணாநிதி எழுத ஆரம்பித்தார். பேய், பூதம் போன்ற மூடநம்பிக்கை பற்றி கருணாநிதி எழுதிய கேள்வியைத் தடைசெய்தார்கள். 'இது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கிறது’ என்று காரணம் சொல்லப்பட்டது.
ஒரு மாதம் கழிந்திருக்கும். மத்தியச் சிறைக்கு கருணாநிதி செல்கிறார். ஸ்டாலினையும் முரசொலி மாறனையும் மட்டுமே பார்க்க அனுமதி தரப்படுகிறது.
'அடித்தார்களாமே?’ என்று கருணாநிதி கேட்க, 'இல்லை’ என்று ஸ்டாலின் சொன்னார். சுற்றிலும் போலீஸ்காரர்கள் இருந்ததால் ஸ்டாலின் உண்மையைச் சொல்ல முடியவில்லை. அடித்தார்கள் என்று சொல்லியிருந்தால், மறுநாளும் அடி விழுந்திருக்கும். இப்போது இடிக்கப்பட்டு மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கும் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருட்டு அறையில் அப்போது நடந்த காட்சிகள், இப்போது நினைத்தாலும் ரத்தம் உறைய வைக்கும்!

- Vikatan

Friday, February 21, 2014

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் ! பசுமைப் போராளி எழுதும் தொடர் (1 -5)

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் !
பசுமைப் போராளி எழுதும் பரபர தொடர்

நதி, தன் வரலாறு கூறும் கதையைப் போன்றதுதான் நம் வாழ்க்கையும். எங்கோ பிறந்து, எங்கெங்கோ வளர்ந்து, எங்கோ போய் முடிகிற தண்ணீரின் போக்கைப் போல இந்த வாழ்க்கை, சுற்றிச் சுழற்றுகிறது. கனவிலும் நினையாத ஊருக்கு நம்மைக் கிளம்பச் சொல்கிறது. வரைபடத்திலும் பார்த்திராத ஊரில், நம்மை வாழச் சொல்கிறது. திரும்பிப் பார்க்கிற போதெல்லாம் வாழ்க்கையின் வழித்தடங்கள் அழகியச் சித்திரங்களாகவும், ஆச்சரியப்படத்தக்க விசித்திரங்களாகவும் நமக்குள் விரிகின்றன.
புத்தன் என்றால், எப்படி போதி மரத்தடியும், துக்கம் நேர்ந்த வீடும் தவிர்க்க முடியாத நினைவுகளாகத் தலைதூக்குகிறதோ... அதைப்போலத்தான் நம் வழித்தடங்களும். 'எனது வாழ்க்கை’ என்கிற இரண்டு வார்த்தைகள், என்னை இழுத்துச் சென்ற தூரம் அதிகம். என் நினைவுகளின் வழிப்பயணத்தில் உங்களையும் விரல் பிடித்து அழைத்துச் செல்கிறேன்.
1966...
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையம்...
மாதாந்திர ஆய்வுக் கூட்டம்...
''செலவைக் கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த உழவர்க்குப் பயன்படாது'' என்று சீறலாகப் பேசும் பண்ணை மேலாளர், அதற்கான காரணங்களை விளக்கிப் பேசுகிறார்.
எல்லோரும் ஆமோதித்து தலை ஆட்டுகின்றனர்.
''அப்படியானால், இந்த உண்மையை ஆண்டு அறிக்கையில் எழுத வேண்டும்; ஆராய்ச்சி முறைகள் மாற்றப்படவேண்டும்'' என்று மேலும் அழுத்தம் கொடுக்கிறார் மேலாளர்.
அந்த ஆதங்கத்தைப் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்டு அறிக்கையில் அதை எழுதுவதற்கு மட்டும் யாருமே இசைந்து கொடுக்கவில்லை.
''கோவில்பட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை கோவில்பட்டியில் முடிவு செய்யவில்லை. கோவையில் முடிவு செய்வார்கள்; அல்லது டெல்லியில் முடிவு செய்வார்கள்; அல்லது அமெரிக்காவில் முடிவு செய்வார்கள். 'நமது ஆராய்ச்சி சரியில்லை' என்று நாமே எழுதிவிட்டால், இந்த நிலையத்தை மட்டும் இழுத்து மூடுவார்கள். நாம் எல்லாரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய நேரிடும்!''  
என்பதுதான் அதற்கான காரணமாக அங்கிருந்தவர்களால் முன் வைக்கப்படுகிறது.
இந்த வார்த்தைகள், அந்த பண்ணை மேலாளரை மனதளவில் நொறுக்கிப் போடுகிறது. 'எதற்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்கிற துளியளவு அக்கறைகூட இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து, வாழ்நாள் முழுவதும் பொய்யையே கட்டி அழப்போகின்ற அந்தக் கூட்டத்தில், நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்கு சமரசம் ஆகிறோமோ... அப்போதுதான் தீமையின் திசையில் நாம் கால் வைக்கத் தொடங்குகிறோம்' என்று மனதுக்குள் மருகுகிறார்!
மறுநாள், தன்னுடைய நேரடி உயர்அதிகாரியான மீனாட்சி முன்பாக போய் உட்காருகிறார் பண்ணை மேலாளர். எந்தச் சூழலிலும் முகம் சுளிக்காதவர் மீனாட்சி. ஆனால், அன்றைய தினம், 'நான் என் வேலையை விடப்போகிறேன்' என்று பண்ணை மேலாளர் சொன்னதும்... அதிர்ச்சி அடைந்தவராக நிமிர்கிறார்.
''வெளியில போய் என்ன செய்வீங்க?''
''உறவினர்கள், நண்பர்கள் நிலங்களில் வேலை செய்வேன்''
''உங்கள் அப்பா செலவிலேயே ஆளாகிவிட்டீர்களா?''
''இல்லையில்லை... எனது கல்விக்காக அரசு செலவிட்டிருக்கிறது. அதற்காக, உழவர்களுக்குக் கேடு செய்யும் பணியைத் தொடர வேண்டுமா?''
''அப்படிச் சொல்லவில்லை. உங்களுடைய அறிவு, விரிந்து பரந்த வட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் கருத்து.''
''அது எப்படி சாத்தியப்படும்?'’
''அவசரப்பட்டு தெருவில் போய் நிற்காதீர்கள். வாய்ப்பு தேடிவரும், காத்திருங்கள்...''
அந்தப் பண்ணை மேலாளரின் கோபத்தையும் ஆதங்கத்தையும் மீனாட்சியின் வார்த்தைகள் அமைதிப்படுத்துகின்றன. மீனாட்சி சொன்ன வாய்ப்புக்காக மேலும் மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறார்.
1969... மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விடைபெறும் அந்த பண்ணை மேலாளர், 'பறவையின் விடுதலைக்குச் சமமான விடுபடல்' என்று துள்ளித் திரிந்து வெளியேறுகிறார்.
அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
அந்த மேலாளர், நான்தான் என்பது என் நெஞ்சுக்கு நெருக்கமான பலருக்கும் தெரியும். ஆனால்...?
கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நான் கற்றுக் கொண்டவை எவை... கண்டு பொங்கியவை எவை... மேலாளர் பணியை உதற வைத்தவை எவையெவை? என்பதெல்லாம், அவர்கள் அத்தனை பேருக்கும் தெரியாத சங்கதி!
இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்ல, இன்னும் பற்பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள... கோவில்பட்டியில் இன்னும் சில காலம் என்னோடு உங்களைக் கைபிடித்து அழைத்துச் சென்றே ஆகவேண்டும்.
கோவில்பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில், தொடர் வண்டி நிலையத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் அமைந்திருக்கும் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்துக்கு, ஒராண்டு முன்பே விவசாய மாணவனாக சென்றிருக்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பயின்றபோது, கல்விச் சுற்றுலாவாக இரண்டு நாட்கள், அந்த ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி சுற்றிப் பார்த்திருக்கிறேன்.
நாங்கள் சென்றிருந்தபோது அங்கே கடுமையான வெயில். 'இங்கே வேலை கிடைச்சா, அடுத்த நாளே லீவு போட்டுட்டு ஊருக்குப் போயிடணும்’ என வெயிலின் உக்கிரத்தை என்னோடு வந்திருந்தவர்கள் கிண்டலாகப் பேசி சிரித்தார்கள். நானும் சேர்ந்தே சிரித்தேன். உச்சிவெயில் அந்தச் சிரிப்பை உள்வாங்கி வைத்திருந்ததோ என்னவோ... என்னை அப்படியே நினைவில் வைத்திருந்து, கோவில்பட்டியிலேயே எனக்கான வேலைக்கு வித்திட்டது. படிப்பை முடித்த கையோடு, 1963-ம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அங்கே வேலையில் சேர்ந்தேன்!
கோவில்பட்டி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், வெள்ளையர்களால் 1901-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பியச் சந்தையில் பருத்திக்கு நல்ல மதிப்பு இருந்தது. பருத்தி இழையின் நீளம், ஒரு அங்குலத்துக்கும் கூடுதலாக இருந்தால், விலையும் கூடுதலாகக் கிடைக்கும். அதற்காகவே நிறுவப்பட்ட நிலையம்தான் இது. ஆனால், 1950-க்குப் பிறகு புஞ்சை தானியப் பயிர் அனைத்துக்குமான ஆராய்ச்சி நிலையமாக இது மேம்படுத்தப்பட்டுவிட்டது. நான் கருங்கண்ணி பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில், துணை விஞ்ஞானி.
வெளியூர் என்றாலே தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சரியான இடம் தேடுவதுதானே முதல் வேலை. அந்த விதத்தில் எனக்கு நல்ல கொடுப்பினை. காளாம்பட்டி சீனிவாசன் என்கிற கிடைத்தற்கு அரிய நண்பர்... விடுதியில் தங்குவதற்கும், உணவகத்தில் கணக்கு வைப்பதற்கும் உதவினார்.
பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி டி.எஸ். ஆரோன், பொறுமையும் திறமையும் மிக்கவர். எல்லாருக்கும் முன்பாக நிலத்தில் நிற்பார்; மற்றவர்கள் நிழலுக்கு வந்த பின்பும் பருத்திச் செடிகளோடு உறவாடிக்கொண்டு இருப்பார். செடிகளின் மீதான சிநேகம் அவரை அந்தளவுக்கு வேலையில் லயிக்க வைத்திருந்தது. அவரது கையில் கட்டி இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கடிகாரத்தின் மேல்புறக் கண்ணாடி, கோடையில் வெடித்துக் கிடக்கும் ஏரிபோல சிதைந்துகிடக்கும். அந்தக் கடிகாரத்தின் நினைவுகூட இன்னும் என்னுள் நீக்கமற நிறைந்திருக்கிறது. நம்முடைய ஆத்மார்த்தமான உழைப்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதையும், ஆராய்ச்சி நுட்பத்தையும் எனக்குக் கற்பித்தவர் ஆரோன்.
ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்த பண்ணை, 15 ஏக்கர் செம்மண் பூமி. அங்கு நீர்வசதி உண்டு. இறவைப் பயிர் ஆராய்ச்சி (குறிப்பாக மிளகாய்) மட்டுமே இங்கு நடைபெற்றது. முக்கியமான ஆராய்ச்சிகள், பெய்யும் மழைநீரை நம்பியே இருந்தன. இதற்கான நிலம், கரிசல் மண் பூமி. அப்பண்ணை மேலும் மூன்று கல் வடக்கில் இருந்தது.
மனமகிழ்ச்சிக்கு என்றே ஒரு மன்றம் ஊருக்குள் இருந்தது. வேளாண் விஞ்ஞானிகளும் பஞ்சாலையில் பணியாற்றும் ஊழியர்களும் மாலையில் ஒன்று கூடும் இடம் அது. பலவிதமான விளையாட்டுகளும் அங்கு நடக்கும். தகவல் பரிமாற்றத்துக்கும் கேலிப் பேச்சுக்கும் குறைவு இருக்காது. இந்தக் கலகலப்புகளுக்கு நடுவே ஒரு நாள்... மூத்த விஞ்ஞானி, ராபின்சன் ஒரு கேள்வி எழுப்பினார்.
''நான்கு பருவங்கள் தெரியுமா?''
''தெரியுமே! கோடைக் காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம்''
- இது எனது பதில்.
ராபின்சன் தொடர்ந்தார்.
''அதை எல்லாம் மறந்துவிடு! கோவில்பட்டியில் மூன்று பருவங்கள் மட்டுமே உண்டு! அவை என்ன?
''ஹாட் (Hot), ஹாட்டர் (Hotter), ஹாட்டஸ்ட் (Hottest).. அதாவது... வெப்பக் காலம், கோடைக் காலம், கடும்கோடைக் காலம்.''
கோவில்பட்டியின் நிலைமை இப்படித்தான் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மழை நாட்கள் குறைவு. பெய்யும் மழையும் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொட்டித் தீர்த்துவிடும். மழைநீரை ஏரி, குளங்களில் சேமித்து காலத்தைக் கழிப்பார்கள் மக்கள். பெண்களும், குழந்தைகளும் பஞ்சாலையிலும் தீப்பெட்டித் தொழிலிலும் கடலை மிட்டாய் ஆலைகளிலும் பிழைப்புக்காகத் தஞ்சம் அடைந்திருப்பார்கள். கடின வாழ்க்கைக்குக் கடன்பட்டவர்களைப் போல் இயங்கியது அவர்களுடைய ஒவ்வொரு நாளும்.
ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்யும் மழைநீரையும் உறிஞ்சி வைத்து கொண்ட கரிசல் மண் பூமி, நம்நாட்டு பருத்திக்குப் பொருத்தமானது. வறட்சி தாங்கவும் பூச்சிநோய் தாக்குதலை எதிர்க்கவும் பழகிப்போன பருத்தியைத்தான் 'கருங்கண்ணிப் பருத்தி’ என்பார்கள். ஆடுகளை கிடை மறித்தும், மாட்டு எருவை நிலத்தில் பரப்பியும், கம்பையும்... பருத்தியையும் மாற்றி மாற்றி பயிர்செய்தும் சிறப்பான விளைச்சல் எடுக்கும் பக்குவத்தை சமுதாயம் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றிக் கொடுத்திருந்தது. இதைவிடப் பெரிதாகச் செய்துவிடப் போவதாகத்தான் விஞ்ஞானிகள் அங்கே களம் இறங்கி இருந்தார்கள். ஆனால், அப்படி ஒன்றும் சாதித்து விடவில்லை என்பதுதான் பச்சையான உண்மை.
இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக, பண்ணையில் என்னைப் போல வேலையில் இருந்தவர்களில் சிலரின் அறிவுப் பரப்பை ஆராய்ச்சி செய்தாலே போதும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக... முக்கியமான பணியில் இருந்த அந்த நபரை உங்களுக்குச் சொல்லலாம். செய்தித்தாள்களில் 'எட்டு கோள்கள் ஒன்றுகூடப் போகின்றன... அதனால் பூமி அழியப் போகிறது!' என்கிற வதந்தி அந்த நாட்களில் ஏக பிரபலம். பூமி அழியப் போவதாக ஒரு நாளைக் குறிப்பிட்டு ஓராண்டு முன்பாகவே அந்த வதந்தி பரப்பப்பட்டிருந்தது.
சரியாக அந்த நாளில் தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள அவர் முடிவு செய்தார். விடுப்பு எடுத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார். கதவு உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. மதியம் ஆனதும் சன்னல் வழியாகப் பண்ணையாளை அழைத்துப் பணம் கொடுத்து உணவு வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டார். மறுநாள், காலையில் நாங்கள் எல்லோரும் அவர் கண்முன்னே நன்றாக நடமாடிக் கொண்டிருந்ததை அதிர்ச்சியோடுதான் பார்த்தார்- உலகம் அழியாமல் போனதில் அவருக்கு ஏக வருத்தம்!
ஆராய்ச்சி நிலையத்தில் அந்த விஞ்ஞானி நடத்திய இந்தக் கூத்தை, மற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பலகாலமாக சொல்லிச் சிரிப்பது உண்டு. வேளாண் துறையில் இதுபோல பல 'ஞானக்கூத்தர்கள்' உண்டு. இவர்கள் பற்றிய செய்திகளே... கரிசல்காட்டுப் பண்ணையில், மக்களுக்குக் களைப்பு நீக்கும் மருந்து!


koவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் எனக்கு வாய்த்த நண்பர்களில் இருவர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் க.சு.சுப்பையா தாவரவியலில் அறிவாழம் உள்ளவர். இலக்கியப் பரிமாற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். சுப்பையா குடும்ப நண்பராகவும் ஆனார்.
நுண்ணறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்களை முடக்குவதற்கு... மேற்பதவிகளில் இருந்தவர்கள் அயராது பாடுபடுவார்கள்; பலவித வித்தைகளையும் கட்டவிழ்த்து விடுவார்கள். இதிகாச காலம்தொட்டு, இன்றையக் காலம் வரை மேற்பதவிக்காரர்களின் குணம் மாறாது இருப்பது ஆச்சரியம்தான்!
மேற்பதவிக்காரர்களின் கட்டுப்பாடுகள் பிடிக்காதவர்கள், ஒருகட்டத்தில் சலிப்படைந்து வெளியேறுவார்கள். இப்படி வெளியேறியவர்களில் க.சு.சுப்பையாவும் ஒருவர். பின்னாளில் 'ஸ்பிக்' ரசாயன உரக் கம்பெனியின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சுப்பையாவை, தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றின்போது சமீபத்தில் பார்த்தேன். உடல் நலிவுற்ற நிலையில் இருந்தார்.
இன்னொரு நண்பர்... 'ஸ்டோர் காப்பாளர்' சங்கரன். மிக எளிமையானவர். அதுவே அவரது வலிமையும்கூட! அவர் சினந்து நான் பார்த்ததே இல்லை. விதைகள் விளைபொருட்கள், இடுபொருட்கள், கருவிகள் அனைத்தும் இவர் பொறுப்பில் இருந்தன. ஆதலால் எல்லாரையும் சந்திக்கும் அவசியம் இவருக்கு இருந்தது. கோவில்பட்டியைச் சேர்ந்தவர். வெளி செல்வாக்கும் உண்டு. யாராக இருந்தாலும், இவரிடம் ஏதாவது உதவி பெற்றிருப்பார்கள். எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரதி விழா நிகழ்வுகளுக்கு என்னை அழைத்துச் சென்றவர்.
பாரதி விழாவின்போது நா.வானமாமலை, நல்லக்கண்ணு, பாலதண்டாயுதம், குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி போன்றவர்களோடு நெருக்கமாக இருக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அதுவே... பாரதியுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 'பாரத சமுதாயம், ஒப்பில்லாத சமுதாயமாகவும்... உலகத்துக்கு ஒரு புதுமையாகவும் விளங்க வேண்டும்' என்கிற உணர்ச்சித் தீ, அப்போதுதான் என்னையும் பற்றிக் கொண்டது.
'நேர் படப் பேசு, நையப் புடை’ என்கிற பாரதி சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர்களில் பருத்திப் பிரிவு விஞ்ஞானி ராஜகோபாலின் தந்தையும் ஒருவர். மாவட்ட அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கோயில்களுக்குப் போவதில்லை. வீட்டிலேயே கடவுள் படங்களை வைத்து வழிபடுபவர். அவர் ஒரு முறை கூறிய சொல், வாழ்நாள் முழுவதும் என்னோடு பயணிக்கிறது.
‘YIELDING TO INJUSTICE AND MISUSE OF POWER ARE NOTHING BUT MORAL PROSTITUTION.’
'அநீதிக்கு விட்டுக் கொடுப்பதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், மனதளவில் விபசாரம் செய்வதைத் தவிர வேறில்லை' வாழ்க்கையின் இலக்கணத்தைச் சொன்ன வார்த்தைகள் இவை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அநாகரிகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைகளின் சத்தியமான உண்மை நெஞ்சை அறைகிறது.
கோவில்பட்டி வந்த ஆறு மாதத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்தேறின. பண்ணைக்குள்ளேயே எனக்கு வீடு ஒதுக்கப்பட்டுவிட்டது. திருமணம் முடித்து மனைவி சாவித்திரியை அழைத்து வந்துவிட்டேன். பருத்தி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்த என்னை, 'மேலாளர்' பதவி கொடுத்து, கரிசல் காட்டுப் பண்ணைக்கு மாற்றி விட்டார்கள்.
உடனடியாக எனக்கு இருந்த கடமைகள் இரண்டு. ஒன்று, வேலியாக வளர்ந்திருந்த சீமைக் கருவேல் மரங்களை வேரோடு பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டும். இரண்டு, 158 ஏக்கர் நிலத்துக்கும் முள்கம்பி வேலி போட வேண்டும்!
சீமைக் கருவேல் வேலியை அப்புறப்படுத்த வேண்டிய முடிவு எப்படி வந்தது?
'வேலியே பயிரை மேய்ந்த கதை' என்பதற்கு ஆதார சம்பவம் அது.
வேலியில் இருந்து 12 மீட்டர் தூரத்துக்குப் பருத்திச் செடி வளர்ச்சி குன்றி இருந்தது. வேலியில் இருந்து 1 மீட்டர் தூரம் தள்ளி 60 சென்டி மீட்டர் அகலம் மற்றும் ஆழத்துக்குப் பள்ளம் தோண்டினார்கள். குறுக்கிட்ட சீமைக்கருவேல் வேர்களை எல்லாம் வெட்டி வீசினார்கள். அடுத்தப் பருவத்தில் இருந்து பருத்திச் செடி நன்றாக வளர்ந்து பூத்துக் காய்த்தது. இந்த வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு, மீண்டும் பருத்திச் செடி வளர்ச்சி குன்றியது. நிலத்தை அகழ்ந்து பார்த்த போது ஓர் உண்மை புரிந்தது. சீமைக் கருவேல் மரம்... தனது வேரை, வெட்டப்பட்ட பள்ளத்துக்குக் கீழே அனுப்பியது. பிறகு, வேரானது மேல் எழுந்து நீண்டு பயிரை மேய்ந்தது. சீமைக் கருவேல் வேரில் சுரக்கும் நச்சு, பயிர்ச் செடிகளின் சாரத்தைச் சப்பி எடுத்துவிடுகிறது. இந்த உண்மை தெரிந்த பிறகே வேலிக் கருவேல் மரங்களை அப்புறப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
வேலிக்காக சீமைக்கருவேல் வளர்த்தது போலவே... சிந்தனை மட்டத்தில் ஒரு நச்சுமரம் வளர்க்கப்பட்டது. 'அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள ஆராய்ச்சியும் நடைமுறையும் இந்தியாவில் புகுத்தப்பட்டால், இங்கு விளைச்சல் பெருகும், பஞ்சம் அகலும்' என்ற பிழையான கருத்து அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளின் முழக்கமாக இருந்தது. இதற்கேற்ப ஆராய்ச்சிகளும் பயிர் வகைகளும் மாற்றப்பட்டன.
கோவில்பட்டி வட்டார உழவர்கள் எதைப் பயிரிட வேண்டும் என்பதை டெல்லியில் முடிவு செய்தார்கள். அமெரிக்க எண்ணெய் கம்பெனி ராக்பெல்லர் நிறுவனமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் கைகோத்தபடி புதிய ஒட்டுரகச் சோளம் (C.S.H), ஒட்டுரகக் கம்பு (HB) விதைகளை உண்டு பண்ணி, கோவில்பட்டிக்கு அனுப்பினார்கள். அவற்றுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், பூஞ்சணக் கொல்லி நஞ்சுகளைப் பரிந்துரை செய்தார்கள்.
நடப்பில் இருந்த விதைக்கும், டெல்லி இறக்குமதி செய்த விதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நடப்பில் இருந்தவை... பொறுக்கு விதை முறையில் தனித்தேர்வு (Pure Line Selection) செய்யப்பட்டவை.
நம் மூதாதையர் சில ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்த முறைதான் இந்த பொறுக்கு விதை முறை. விளைந்துள்ள ஒரு நிலத்தில் இறங்கி, நன்கு விளைந்துள்ள சில கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளை உதிர்த்து சேமித்து வைத்து, தனி நிலத்தில் விதைப்பார்கள். அதில் விளையும் சிறந்த கதிர்களை மீண்டும் கொய்வார்கள்; சேமிப்பார்கள். இப்படி மீண்டும் செய்வதன் மூலம் பெறுவதே பொறுக்கு விதைகள். கோவில்பட்டி 2 வெள்ளைச் சோளம், கே.1 (கோவில்பட்டி) மிளகாய், கே.1 கம்பு, கே.2 ராகி எல்லாம் இப்படித் தேர்வு செய்யப்பட்டவையே. டெல்லி அனுப்பிய சோளமும், கம்பும் அப்படிப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட இரண்டு செடிகளின் மகரந்தத்தையும் சூலையும் ஒட்டுக் கட்டித் தயாரிக்கப்பட்டவை.
பொறுக்கு விதையில் இருந்து விளைந்தவற்றிலிருந்து திரும்பத் திரும்ப விதை எடுக்கமுடியும். ஒட்டு விதையில் அப்படி செய்தால்... பகுதி செடிகளில் கதிர் வராது, அல்லது கதிரில் மணி பிடிக்காது.
பாரம்பரிய விதைகளை விதைப்பதற்கு என்று ஒரு பருவம் உண்டு. ஒட்டு விதைகளுக்கு அத்தகையக் கட்டுப்பாடு கிடையாது. பாரம்பரிய விதைக்கு ஆட்டு எரு, மாட்டு எரு, பிண்ணாக்கு போதுமானது. ஒட்டு விதைகளுக்கு ரசாயன உரம் தேவை.
பாரம்பரிய விதைகள் உயர்ந்த தரம் உள்ளவை. ஒட்டு விதைகள் கூடுதல் விளைச்சலுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டவை. அவை, 'அமோக விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties) என்று பெயர் சூட்டப்பட்டவை. ஆனால், வானம் பார்த்த பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும் அமோகமாக விளையாதது மட்டும் அல்ல; அதனால் வந்த பக்க விளைவுகளும் பாதகமாகவே இருந்தன!

வானம் பார்த்த கோவில்பட்டி பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் (High Yielding Varieties) என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும்... பக்க விளைவுகளையே அதிகமாக விளைவித்தன!
சி.எஸ்.எச் (கோஆர்டினேட்டட் சொர்கம் ஹைபிரீட்) சோள வகைக்கு, குட்டையான செடிகள், நீண்ட கதிர்கள் உண்டு. ஆனால், கதிரில் இருந்து மணியைப் பிரித்தெடுப்பது துன்பம் மிகுந்ததாக இருந்தது. கதிர்களைக் களத்தில் பரப்பி, மாடுகளைப் பிணைத்துச் சுற்றவிடும்போது... தானியம் தனியே பிரியாமல் உமியுடன் சேர்ந்தே விழுந்தது. தானியம் வெள்ளைச் சோளம் போலவோ... செஞ்சோளம் போலவோ... ருசியாக இல்லை. ரசாயன உரம் போட்டு, பூச்சிக்கொல்லியும் தெளித்ததால் கசக்கவும் செய்தது. உழவர்கள், பலமுனைகளிலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள்.
எச்.பி (ஹைபிரீட் பஜ்ரா) கம்புப் பயிர்... குட்டையாகவும் கிளைவிட்டும் புதர் போலவும் வளர்ந்தது. கதிர் வரும்போது பூஞ்சை நோய் தாக்கியது... கரிப்பூட்டை நோய் வந்து தானியம் கரியாகிக் கொட்டியது. உழவர்கள் தொடர்ந்து, இழப்பை சந்தித்தார்கள்.
இப்படி அனைத்திலும் பேரிழப்பு என்பது தொடர் தாக்குதலாக வடிவெடுத்தது ஒருபக்கமிருக்க... பாரம்பரிய புஞ்சை தானிய விதைகள் (சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, பனிவரகு) எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தன-மறுபக்கத்தில்.
கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மாதம் ஒருமுறை ஆய்வுக்குழுக் கூட்டம் (ரிசர்ச் கவுன்சில்) கூடும். சாதனைகள் மற்றும் முன்னேற்றம் அலசப்படும். பண்ணை நிர்வாகியாக இருந்த காரணத்தால், இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும் என்னுடைய விரல்முனையில் இருந்தன. பண்ணைக்குள் வந்த உழவர்களைக் கூட்டிச் சென்று அனைத்தையும் விளக்கினேன். ஆனாலும், எங்களது கண்டுபிடிப்புகள் பண்ணையின் வேலிக்கு வெளியே போகவில்லை. காரணத்தைக் கண்டறிய மனம் துடித்தது.
அறுபது ஆண்டுகால மழையளவு கை வசம் இருந்தது. எடுத்து மேசை மீது விரித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தேன். ஓர் உண்மை பளிச்சிட்டது. எல்லா வருடங்களிலும் மழை சீராகப் பெய்வது இல்லை. சராசரியாக நான்கு ஆண்டுகளில் ஓராண்டு வானம் பொய்த்துவிடுகிறது. அது எந்த ஆண்டு என்று முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதால், அந்த ஆண்டு உழுவதும் விதைப்பதுமே இழப்பாகிவிடும்.
அரசு, செய்வது ஆராய்ச்சி. அது 'மழை குறைவு’ அல்லது 'காலத்தில் பெய்யவில்லை’ என்று எழுதி கணக்கை முடிப்பதற்காகவே நடத்தப்படும் ஆராய்ச்சி! அது வெற்றி பெற்றாலும்... பெறாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என் போன்ற அதிகாரிகளுக்கு. ஆனால், வயல்காட்டில் ஒவ்வொரு உழவரும் தினம் தினம் நடத்திக் கொண்டிருப்பது... 'வாழ்வா, சாவா?' போராட்டம்!
கோவில்பட்டி பண்ணையில் ஏழு இணை காங்கேயம் மாடுகள் இருந்தன. அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி வைத்து நேரத்தில் வேலைகளைச் செய்து முடிப்போம்!
ஆனால், எல்லா உழவர்களுக்கும் இது சாத்தியமா...?
பண்ணையில் டிராக்டர்கள், வாகனங்கள், இயந்திரக் கலப்பைகள், மூட்டை மூட்டையாக உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தேவையான அளவுக்கு கூலியாட்கள்... என்று எது கேட்டாலும் அந்த நிமிடமே கிடைக்கும்!
அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத உழவர்களுக்கெல்லாம் இது சாத்தியமா?
இங்கே, 'நானொரு விவசாயி' என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் 70, 80 சதவிகிதத்தினரின் நிலை... முளைத்த விதை, 'பிழைத்துக் கொள்ளும்' என்கிற நம்பிக்கை வந்த பிறகு... மனைவி, அம்மா ஆகியோரின் கழுத்தில் காதில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது பல காலமாக! அதன் பிறகுதான் சாகுபடி செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்!
'வானம் பார்த்த பூமியில் நிச்சயமற்ற வேளாண்மை. மழை குறைந்த ஆண்டுகளில், ரசாயன உரம் எதிர்விளைவையே உண்டு பண்ணும். அதனால் பணச்செலவு மிகுந்த இந்த சாகுபடி, உழவர்களை எப்படிக் காப்பாற்றும்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நினைவலைகள் சொந்த ஊர்ப்பக்கம் தாவியோடி, சின்ன வயது ஞாபகங்களைக் கீறிவிட்டன.
கரிசல்காட்டு கோவில்பட்டி பூமிக்கும்... காவிரி பாயும் சோழமண்டல பூமிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு?! தூத்துக்குடி மாவட்டத்தில், கோடைப் பருவத்தில் வெடித்துப் பிளக்கும் கரிசல் மண் பூமி, மீண்டும் பச்சை போர்த்திக் கொள்வதற்கு வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால், காவிரியின் தயவால்... சோழமண்டலம் முழுக்கவே பசுமைதான் பெரும்பாலும்!
குடகு மலையில் அருவியாய்ப் பிறந்து, நடந்து வரும் பாதையில் கரையின் இரு கரைகளிலும் கா(காடு) விரிந்து கிடந்ததால் 'காவிரி' எனப் பெயர் பெற்றது. குளித்தலை வரும்போது அகன்ற காவிரியாய் விரிந்து, திருச்சிக்கு மேற்கில் இருபது கல் தொலைவில் 'முக்கொம்பு' எனும் இடத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டாகப் பிரிந்து, திருவரங்கத்தைத் தீவாகச் சூழ்கிறது இந்த நதி. திருச்சி நகரின் வடஎல்லையாகப் பாயும் காவிரி, அங்கிருந்து 16 கிலோ மீட்டரில் (கல்லணையில்) மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.
வடக்குப் பிரிவு 'காவிரி’ எனவும், தெற்குப்பிரிவு 'வெண்ணாறு’ என்றும் அழைக்கப்படுகின்றன. கல்லணையில் இருந்து கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது, 'இளங்காடு’. இங்கு வசித்து வந்த கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள். ஆறாவதாகப் பிறந்த நான், 'நம்மாழ்வார்’ என்று பெயர் சூட்டப்பட்டேன். 'விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் சூட்டப்பட்டது’ என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.
இளங்காடு, ஆயிரம் தலைக்கட்டுகள் கொண்ட பேரூர். தெற்குத்தெருவில் இருந்த நாட்டு ஓடு வேய்ந்த சுற்றுக்கட்டு வீட்டில்தான் நாங்கள் மூன்று (பங்காளி) குடும்பங்களாக கூட்டாக வாழ்ந்தோம்.
வெளிப்புற வாயில்களுக்கு மட்டும் கதவுகள் இருந்தன. உள்பிரிவுகளுக்கு கதவுகள் கிடையாது. தெற்குப் பார்த்த உயரமான திண்ணையுடைய அந்த வீட்டுக்கு முன்பாக ஒரு பூவரச மரம். களிமண்ணால் மெழுகப்பட்டிருந்த வீட்டின் தரையை அன்றாடம் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மெழுகுவார்கள்.
அ... ஆ... என்பதையெல்லாம் அண்ணன், பாலகிருட்டிணன் கைப்பிடித்து எழுதிக் கற்றுக் கொடுத்தது இப்போதும் மறக்கவில்லை. இப்படி 'மறக்க முடியாத' பட்டியல் மிக நீளம்... 'மேழிப்பால்' குடித்தது உட்பட!

ற்றில் நீர் வருவதற்கு முன்பாக, ஒரு நல்ல நாள் பார்த்து சிறுவர், பெரியவர், நண்பர், சுற்றம் அனைவரும் கூடி  நல்லேர் பூட்டுவார்கள். இளங்காடு, வெண்ணாற்றின் கிளை வாய்க்கால் தென்கரை அருகே இருந்த எங்கள் நிலத்திலும், இப்படி நல்லேர் பூட்டினார்கள்!
 மாடுகளைக் குளிப்பாட்டி கலப்பை, நுகத்தடிக்கு சந்தனம், குங்குமம் பூசி இருந்தார்கள். புதிய தேங்காய் நார்க்கயிறு கொண்டு ஏர் பூட்டினார்கள். தேர்ச்சி பெற்ற ஐந்து பேர்... ஏர் பின்னால் அதட்டிக் கொண்டே நடந்தார்கள். மாடுகள் வேகமாக நடந்தன. காய்ந்து கிடந்த பூமி கட்டி முட்டியாகப் பெயர்ந்து விழுந்தது.
நான்கு, ஐந்து விளா (சுற்று) வந்த பிறகு... ஏர்கள் நின்றன. மேழி (கைப்பிடி) பிடித்திருந்தவர்கள், 'மேழிப்பால் குடிக்கிறவங்கள்லாம் வாங்க' என்று சத்தம் கொடுத்தார்கள். முதல் முறையாக மேழி பிடிப்பவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ''நம்மை, (நம்மாழ்வார் என்பதன் சுருக்கமாம்) இப்படி ஓடி வா'' என்று முன்னேர்க்காரர் கையசைத்துக் கூப்பிட்டார். கட்டி முட்டிகளில் தட்டுத்தடுமாறி, ஏரின் பின்னே போய் நின்றேன்.
மேழி மீது வலது கையை வைக்கச் சொன்ன ஏரோட்டி, கையை வைத்ததும் அவரது முரட்டுக் கரத்தை மேலே வைத்து மேழியோடு இறுகப் பற்றி 'ஹை' என்று மாடுகளை அதட்டினார். மாடு வேகத்துக்கு என்னால் நடக்க முடியவில்லை... நிற்கவும் வழி இல்லை. எனக்குப் பின்னாலும் ஒரு ஏர் வந்து கொண்டிருந்தது. வலி ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் வருத்த, 'தத்தக்க, பித்தக்க’ என்று நடந்தேன். ஏர் ஒரு வளையம் வந்து நின்றபோது... கையை விடுவித்தார். விரல்களைப் பார்த்தேன். சிவந்திருந்தன. கூடவே எரிச்சலும் இருந்தது. எரிச்சலைத் தணிக்க, விரலை வாயில் வைத்து சப்பினேன். பார்த்தவர்கள், ''அதோ, நம்மை மேழிப்பால் குடிக்கிறான்'' என்று கேலி பேசிச் சிரித்தார்கள்.
ஆற்றில் தண்ணீர் வரும் முன்பாக, வீட்டின் பின்புறம் சேமிக்கப்பட்டிருந்த மாட்டு எருவைக் கட்டை வண்டியில் ஏற்றி வயல்களுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். குப்பை ஏற்றிய வண்டியில் ஏறி சவாரி செய்வதே தனி ஆனந்தம்தான். வயலில் எருவை இறக்கிய பிறகு, வீடு திரும்பும்போது, சிறுவர்களை முன்னால் உட்கார வைத்து மாடுகளின் கயிறுகளைக் கையில் கொடுப்பார்கள். வீடு திரும்பும்போது மாடு பாதையில் நடைபோடுவதில் எந்தத் தடையும் இருக்காது. ஆனாலும், அவற்றை வேகமாக ஓட வைப்பது, வேகமாக நடக்கும் மாட்டைக் கட்டுப்படுத்துவது, திருப்பங்களில் செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பது, எதிர்வரும் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்குவது... எனப்பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தது, அந்த மாதிரியான மாட்டு வண்டிப் பயணம்தான்.
ஊருக்குத் தென்கோடியில், 'பிள்ளை முழுங்கிக்குளம்’ இருந்தது. குளத்தில் நீர் நிரம்பி வழியும் சமயத்தில் இரண்டு மூன்று குழந்தைகள் தவறி விழுந்து இறந்து போனதால், இப்படியரு பெயர். கோடையில் நீர் வற்றிய பிறகு குளத்தில் வண்டலை எடுத்து வண்டியில் ஏற்றி வயலில் சேர்ப்பார்கள். இறந்துபோன நண்டு, நத்தை, மீன், கிளிஞ்சல் அனைத்தும் காவிரித் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த வண்டலுடன் சேர்ந்து, பயிர் வளர்க்கும் உரமாகப் பயன்பட்டன.
ஆண்டுதோறும் வண்டல் அள்ளியதால் குளமும் ஆழம் குறையாமல் இருந்தது. குளத்தில் வாளை, விரால், கெண்டை, கெளுத்தி, விலாங்கு, ஆரா, குறவை எனப் பலவகை மீன்களும் இருக்கும்.
குளம் வற்றும் முன்பாக, குளத்தை இரண்டு, மூன்றாகப் பிரித்து, மண்வெட்டி கொண்டு வரப்பு அமைப்பார்கள். பிறகு, இறைப்பெட்டி கொண்டு தண்ணீரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்கு ஏற்றுவார்கள். இறைப்பெட்டி சேமித்த நீரை ஒருவர் இறவை மரம் கொண்டு இன்னும் கொஞ்சம் மேட்டுக்கு ஏற்றுவார். இறவை மரம் மூலம் இறைத்துக் கொட்டப்படும் தண்ணீர், சிறு வாய்க்கால் மூலமாக பாத்திகளில் பாயும். தென்னை மட்டையைச் சீராகச் சீவி, மட்டப் பலகையாக்கி பாத்தியை சமப்படுத்தி விதைப்பார்கள்.
இதுபோன்ற நிகழ்வு நடந்த ஒரு நாளில், என் சின்னஞ்சிறு கைகளில் நெல் விதையைக் கொட்டி பாத்தியில் விதைக்கச் சொன்னார் அப்பா. அன்று நாற்றங்கால் விதைப்பைத் தொடங்கி வைத்தபோது 'நம்மை’க்கு வயது நான்கு!
தஞ்சாவூர் பெரிய கோயிலைச் சிறியதாகச் செதுக்கியது போல் தோற்றம் கொண்ட ஒரு சிவன் கோயில், இளங்காட்டின் மையப் பகுதியில் அமைந்திருந்தது. நான் படித்த பள்ளிக்கூடம், கோயில் அருகே அமைந்திருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை. முதல் நிகழ்வு ஒரு விபத்து.
பள்ளியில் மாலை நேரத்தில் வழக்கம்போல் விளையாட்டு மணி அடித்தது. மாணவர்கள் கலைத்து விடப்பட்ட குளவிகள் போல அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தோம். உற்சாக மிகுதியில் முன்னே வந்து கொண்டிருந்த மாடுகளை யாரும் கண்டு கொள்ளவில்லை.
-இன்னும் பேசுவேன்...

- Pasumai Vikatan

Thursday, February 20, 2014

மூலிகை வனம்

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்க, இயற்கையே உருவாக்கிக் கொடுத்த அருமருந்துகள்தான் மூலிகைகள். பூமி முழுக்க அந்தந்தப் பகுதியின் தட்பவெப்பம், தாக்கும் நோய்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப, இயற்கையின் ஏற்பாட்டில் அந்தந்தப் பகுதியில் மட்டுமே சிறப்பாக விளைந்து கொண்டிருக்கின்றன இந்த மூலிகைகள். இப்படி இயற்கையே அனைத்துக்கும் அற்புதத் தீர்வுகளை நம்முடனேயே பிறக்க வைத்திருக்கிறது. ஆனால், மனிதனின் ஆசையும், வேகமும் இயற்கை மீதான புரிதல்களைத் தடுத்துவிட, வேறு எதையோ நோக்கி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், உண்மை புரிந்து மூலிகைகளின் பக்கம் கவனத்தைத் திருப்பும்போது... அவற்றைப் பறிப்பதற்குக்கூட தெம்பில்லாமல் சுருண்டு போய்விடுகிறோம்... வயது காரணமாக!
மூலிகைகள், மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. ஆடு, மாடு, நாய், பூனை, கோழி இன்ன பிற ஜீவராசிகளுக்கும் சேர்த்தேதான் படைக்கப்பட்டுள்ளன. தேவை என்று வரும்போது, காடு, மலை என அவற்றுக்காக அலையக் கூடாது என்பதற்காகவே... புறக்கடை, வாய்க்கால், வரப்பு, சுடுகாடு, தெருவோரங்கள்... எனக் காணும் இடங்களில்எல்லாம் மலிந்து கிடக்கின்றன மூலிகைகள். நோயோடும், ரூபாய் நோட்டோடும் மருத்துவமனை நோக்கி ஓடும் நோயாளிகளைப் பார்த்து, 'உனக்கான தீர்வு நான்தான். உனது காலடியிலேயே இருக்கிறேன்’ என அழைக்கின்றன. ஆனால், காலடியில் கிடக்கும் காயகல்பங்களான மூலிகைகளை விட்டுவிட்டு, மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் காத்திருந்து, வந்த நோயை விரட்டுவதற்கு பதிலாக, இலவச இணைப்பாக இன்னும் சில நோய்களையும் சேர்த்துக் கொண்டு வீடு திரும்புகிறோம்!
மூலிகைகளே முதலுதவிப் பெட்டிகள்!
பொங்கல் பண்டிகையின்போது வீடுகளுக்கு வெள்ளையடித்து, 'காப்புக் கட்டுதல்’ என்ற சடங்கை நடத்துவது வழக்கம். ஆவாரை, கார்த்திகைப்பூ என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்று மூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி, வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள். ஏன் தெரியுமா? அதுதான் அந்தக் காலத்தில் முதலுதவிப் பெட்டி. ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு குணமுடையது. ஆபத்து நேரங்களில் அங்கிங்கு அலையாமல் சட்டென எடுத்துப் பயன்படுத்தவே 'காப்புக் கட்டு’ என்ற பெயரில் பழக்கப்படுத்தினார்கள். காலப்போக்கில் அது வெறும் சடங்காகிப் போனது... நம் துரதிர்ஷ்டம். அப்படி மறந்து போன மூலிகைகள் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்காகவே இங்கே மலர்கிறது 'மூலிகை வனம்’ என்ற புதிய தொடர். இதழ்தோறும் ஒவ்வொரு மூலிகையின் மணம் உங்கள் நாசிகளை வருடும்.
இனி, செலவில்லாத மருந்து, உங்கள் இல்லத்திலேயே...
ஆவாரை!
புராணங்களில் சொல்வதுபோல் ஏழு கடல், ஏழு மலைகளுக்கு அப்பால் கிடைப்பதல்ல மூலிகைகள். சாதாரணமாக, நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மஞ்சள் நிறப் பூக்களுடன் புன்னகைப்பவை... ஆவாரை. வறண்ட நிலத்தில் தான் வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களை நீக்கி நீண்ட ஆயுளை கொடுக்கும் அற்புத மூலிகை ஆவாரை. இந்தச் செடி இருக்கும் இடங்கள்தான், உண்மையில் ஆரோக்கிய மையங்கள். இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலையும் மனித மனதுக்கு, செலவில்லாமல் கையருகே கிடைக்கும் இதன் அருமை தெரிவதில்லை. மனித சமுதாயத்துக்கு ஆவாரை அள்ளி அள்ளித் தரும் பலன்கள் சொல்லி மாளாது.
புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல்!
கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள், வெயிலின் சூட்டைத் தவிர்க்க, ஆவாரம் இலைகளை தலையில் வைத்துக் கட்டிக் கொள்வார்கள். இக்காட்சியை இன்றைக்கும் பார்க்கலாம். சூட்டிலிருந்து உடலைக் காத்து குளிர்ச்சியை அளிப்பதில் ஆவாரையின் பங்கு அலாதியானது. உலகை உலுக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் இரண்டுக்கும் எதிரான ஆற்றல் கொண்டது, ஆவாரை. அதனால்தான் உலகின் பல நாடுகளில் கேன்சருக்கான சின்னங்களில் ஆவாரம் பூ இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக, 'கனடா கேன்சர் சொசைட்டி’ சின்னத்தில்இதைத் தெளிவாகப் பார்க்கலாம். உலகின் பல நாடுகளில் விளையும் ஆவாரையைவிட, நம் மண்ணில் விளையும் ஆவாரைக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள்.  
ஆவாரை நீர்!
இன்றைக்கு தேநீர் அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை. அதனால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்தப் பலனும் இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். ஆனால், அதைவிட ருசியான, மிகமிக செலவு குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப் பாருங்கள். பிறகு, அதை மட்டும்தான் பருகுவீர்கள். கையளவு ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால்... உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம்.
'கிரீன் டீ’ என்ற பெயரில் இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட, ஆயிரம் மடங்கு அற்புதமானது, ஆவாரை நீர். இது மட்டுமல்ல... ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேறுவதை உணர முடியும். தலை முடி வளர, உடலை மினுமினுப்பாக்க, உடல் துர்நாற்றத்தைத் துரத்த... என அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, 'சகலநோய் தீர்க்கும் சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்.
இவ்வளவு அற்புதங்களைச் செய்வதால்தான் 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டோ’ எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள்.
இனி, ஆவாரையை ஆராதிப்போம்.
 - வலம் வருவோம்...

 கிலோ 10 ரூபாய்!
மூலிகைச் செடிகளை வாங்கி விற்பனை செய்து வரும் விருதுநகரைச் சேர்ந்த கருப்பையா, ''கிராமங்கள்ல காடுகள்ல தானா முளைச்சிருக்கிற ஆவாரம் பூவை பறிச்சுட்டு வந்து விக்குறத, சிலரு தொழிலா செய்றாக. காய்ஞ்ச ஆவாரம் பூவை, போன வருஷம் கிலோ 20 ரூபாய்னு வாங்கினோம். இப்ப மழையில்லாததால ரொம்ப பேரு இந்தத் தொழில்ல இறங்கிட்டாங்க. அதனால, வரத்து அதிகமா இருக்கு. கிலோ 10 ரூபாய்க்கு வாங்குறோம். இதை, குளியல் பொடி செய்றதுக்கும், சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கவும் வாங்கிட்டுப் போறாங்க'' என்கிறார்.
சர்க்கரை கட்டுக்குள் வரும்!
ஆவாரையின் மகத்துவத்தைப் பேசிய கோயம்புத்தூரைச் சேர்ந்த சுவாமி சுந்தரானந்தர், ''பூ, காய், இலை, பட்டை, வேர் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை 'ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்கிறார்கள். இவற்றை சம அளவு எடுத்து, பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால்... நீரிழிவு, உடல் சோர்வு, நா வறட்சி, தூக்கமின்மை போன்ற பல நோய்கள் குணமாகும். ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் காயவைத்து, பொடியாக்கி, கஷாயம் செய்து அருந்தி வந்தால்... சர்க்கரை கட்டுக்குள் வரும். ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகிய நான்கையும் சமஅளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்கு கீழே பூசி வந்தால்... நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால்பகுதி உணர்ச்சி பெறும்' என்றார்.

- Vikatan

ஆறாம் திணை - 76

'காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும்
எங்கள் கூட்டம்’ 
எனப் பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த கூட்டம் நாம். சிக்கிமுக்கியை உரசித் தீயைப் பற்றவைத்ததில் தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கப்படும் நியூட்ரினோ துகள் வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கப்படும் பல்லுயிரியம் சொல்லிமாளாதது. 'எனக்கு உதவாத ஒன்று இந்த உலகில் எதற்கு வேண்டும்?’ என்ற இறுமாப்பு, வேறு எந்த இனத்துக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு வேண்டியதை மட்டும், தனித்துப் பயிரிட்டுச் செழுமையாக வளர்த்துக்கொள்ளும் நவீன விவசாயக் கலையில் மண்ணையும், மரத்தையும், புழு - பூச்சியையும் ரசாயனங்களால் மனிதன் சிதைப்பது நமக்குத் தெரியும். தெரியாதது... களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை. விளைவிக்கப்படும் தாவரத்தின்வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு? என்ற கேள்விதான், 'ANTHROPOCENTRISM’ என்ற மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்!
'உனக்குத் தேவையானவற்றை விதை; அல்லது தூவிச் செல். அதன் பின் விளைந்து நிற்கும் உனக்குத் தேவையான பொருளை மட்டும் அறுவடை செய்துகொள்... அதுவரை மண்ணை இடையூறு செய்யாமல் விலகி நில்’ என்பதுதான் உலகின் முதல் இயற்கை விஞ்ஞானி மசானா ஃபுகாகோவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது பெருகும் உணவுத் தேவைக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்போன இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான்.
மூலிகை என்றதும் பலரும் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி பெறப்படும் குலேபகாவலி மலரோ என்ற கற்பனைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். உண்மை அப்படி அல்ல. வயல் வரப்பு ஓரத்தில் களையென ஒடுக்கப்படும் தாவரங்களில் பல மூலிகைகள். நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடன் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமானத் தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால், இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக்குறைவிலும் கால்பாதத்தில் வரும் நீர்தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோயிலும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதன் பயனை உணர்த்தி இருக்கிறது சித்த மருத்துவம்.
'எங்க கம்பெனி உரம், கரிசலாங்கண்ணியைக்கூட அழிக்கும்’ என்று வரும் விளம்பரங்களைப் பார்த்தபோது  வேதனையாக இருந்தது. 'தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணி மூலிகை, அற்புதமான ஒரு கற்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. காமாலையிலும் ஈரல் சிர்ரோசிஸ் நோயிலும் ஈரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
பருப்பு இல்லாமல்கூட இன்று கல்யாணம் நடக்கலாம். ஆனால், கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. 'கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திரும்’ என்று அதீதமாக விளம்பரப்படுத்தப்படும் பெருவாரி கூந்தல் தைலங்கள் கரிசாலையால்தான் தயாரிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் ரெண்டு லிட்டர் கரிசாலைச்சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகுமட்டும் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார்கூந்தல் வளர்க்கும்.
விஷ்ணுகிரந்தி, சத்தம் இல்லாமல் வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை. காய்ச்சல், இருமல் முதல், பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட. வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் நெருஞ்சில் எனும் மூலிகை, ஒரு 'காதல் காப்பான்’! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் அழிவு ஒரு முக்கியமானக் காரணம் என்கிறது நவீன மருத்துவப் புரிதல். அந்தச் செல்களை மீட்டு எடுத்து விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஆராய்ச்சி!
இன்னும் களையென அடையாளப்படுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கத்தாழை, நிலக்கடம்பு என வயலில் நெல்செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வரும் பல தாவரங்களின் பயன்பாட்டை உலகமே உற்றுத் தேடிக்கொண்டிருக்கிறது. அதன் மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு, அதன் வேதியியல் கட்டமைப்பு விருப்பப்படி பிரித்து மேயப்பட்டு, காப்புரிமையுடன், அதிக விலையுடன் அதே குடியானவனுக்கு மிக அவசியமான நோய்க்காலத்தில் மறுக்கப்படும் அவலம் நடக்கும். களையென ஒடுக்கப்பட்டவற்றைப் பாதுகாப்பாகச் சேகரித்து, மருத்துவ மனைக்கும் மருந்துசெய் நிறுவனங்களுக்கும் விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகிக்கும் கட்டமைப்பை அரசு உருவாக்குவதுகூட விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் ஒரு நல்முயற்சியாக இருக்கும். செய்வார்களா?

- Vikatan

Wednesday, February 19, 2014

நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா? - Vikatan

நீங்க கின்னஸ் சாதனை பண்ண நாங்கதான் கிடைச்சோமா?
''தானாக கொடுப்பது தானம். அதையே கட்டாயப்படுத்தி, மிரட்டி வாங்கினால் அதற்கு பேரென்ன...?'' இப்படித்தான் கேட்கிறார்கள் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கின்னஸ் ரெக்கார்டு’ மெகா ரத்த தான முகாமில் கலந்துகொண்டவர்கள்.

ரத்தம் கொடுக்க வரும்போது ஒன்றும், ரத்தம் கொடுத்த பின்பு இன்னொன்றுமாக பார்கோடு அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை கைகளில் ஒட்டிவிடுகிறார்கள். இதைக் கணினியில் காட்டினால் அது கின்னஸ் சாதனைக்குப் பதிவாகிறது. இதுவரை அரியானாவில் 43,752 பேர் கொடுத்த ரத்த தானம்தான் சாதனையாக உள்ளது. அதை பீட் செய்யத்தான் இவர்கள் 50 ஆயிரம் என்ற டார்கெட்டை வைத்தார்களாம்.
''தமிழக முதல்வரின் கவனத்தைக் கவரவேண்டும் என்பதற்காக அதிரடியாக எதையாவது செய்யவேண்டும் என்று அந்தக் கட்சிப் புள்ளிகள் நினைப்பது தப்பில்லை. அதற்காக அடுத்தவன் உதிரத்தையா எடுப்பது? தமிழகத்தில் இன்று ரத்த தானத்திலிருந்து உடல் உறுப்பு தானம் வரைக்கும் மக்களிடம் நல்ல விழிப்பு உணர்வும் உதவும் குணமும் ஏற்பட்டுள்ளன. ரத்த தான கழகம், அமைப்புகள் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். முன்பெல்லாம் ரத்தத்தைப் பணம் கொடுத்து வாங்கிய நிலை போய் ஒரு போன் செய்தால் ஏகப்பட்ட தன்னார்வலர்கள் ரத்தம் கொடுக்கத் தயாராக வந்து நிற்கிறார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில், தங்கள் தலைவியின் பிறந்தநாளை கின்னஸ் சாதனை ஆக்கவேண்டி ரத்த தானம் போன்ற உன்னத சேவையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளார் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி'' என்ற குற்றச்சாட்டை, சில சமூக ஆர்வலர்கள்  தெரிவித்தனர்.  
சேலத்தைச் சேர்ந்த சில ஓட்டுநர், நடத்துநர்கள், ''எங்க பெயரோ, புகைப்படங்களோ வரக்கூடாது. வந்தால் எங்க வேலையை தொலைத்துவிடுவார்கள்'' என்ற நிபந்தனையோடு பேசினார்கள், ''உடல்நிலை சரியில்லாமல் இப்போதுதான் டியூட்டியில் ஜாயின் பண்ணினேன். கட்டாயம் ரத்தம் கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. சேலம் மாவட்டம் முழுவதும் இந்த கணேஷ் காலேஜில்தான் ரத்தம் கொடுக்கிறோம். இதுமட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களிடம் அது கொடுப்போம்... இது கொடுப்போம் என்று ஆசைகாட்டி அவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். கூட்ட நெரிசல் அதிகமா இருக்கு. இந்தக் கும்பலில் சிக்கி கீழே விழுந்து ஒரு டிரைவரின் கால் முறிஞ்சுடுச்சு. அவருடைய கால்கள் என்ன ஆனது என்றுகூட பார்க்காமல் அவரிடமிருந்து ரத்தம் எடுப்பதைத்தான் பார்க்கிறாங்க. ரத்தம் கொடுத்ததும் சற்று சோர்வாக இருப்பதற்கு ஜூஸ், பிஸ்கெட் கொடுப்பாங்க. ஆனால் அதை எதையும் இங்கு கொடுக்கவில்லை. எங்க எல்லோரையும் கட்டாயப்படுத்தி இங்கு வரச்சொன்னாங்க'' என்று ஆதங்கப்பட்டார்கள்.
சேலம் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க. தொ.மு.ச. பொதுச் செயலாளர் பெருமாள், ''தொழிற்சங்க பொறுப்பாளர்களும் கழக அதிகாரிகளும் முதல்வர் பிறந்தநாளுக்கு கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகக் கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தமாக ரத்தத்தை எடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே எங்கள் ரத்தத்தை இந்த அரசு உறிஞ்சிவிட்டது. இப்போது நேரடியாகவும் உறிஞ்சியிருக்காங்க. ரத்தம் தர மறுத்தால் இடம் மாற்றுவோம், வருகைப் பதிவேட்டில் லீவு போடுவோம், ரூட் மாற்றி விடுவோம் என மிரட்டித்தான் ரத்தம் கொடுக்க வைத்திருக்கிறார்கள். நாங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணிகளைச் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க முடியும். உழைத்து உழைத்து ரத்தமே இல்லாத எங்களைக் கட்டாயப்படுத்தி ரத்தம் எடுத்தால் எப்படி பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு செல்ல முடியும்?'' என்றார்.
மதுரையில் இதுபற்றி நம்மிடம் பேசிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், ''வருகிற 24-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்ததினம் வருகிறது. அம்மாவை எப்படி அட்ராக்ட் பண்ணுவது என்பதில் தமிழக அமைச்சர்களுக்குள் பலத்த போட்டி நடக்கிறது. மண்சோறு சாப்பிடுவது, அலகு குத்துவது, தீ மிதிப்பது எல்லாம் ரொம்ப பழைய ஸ்டைல் என்பதால், இப்போது புது முயற்சியில் இறங்கிவிட்டனர்.
சிலர் விளையாட்டுப் போட்டிகள், அன்னதானம், மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். செல்லூர் ராஜு போன்றவர்கள் ஆன்மிகத்தில் இறங்கி, அம்மா பிரதமராவதற்கு மகாயாகம் நடத்துவதாக சீன் காட்டுகிறார்கள். ஆனால், எங்கள் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியோ வேறு மாதிரியாக யோசித்தார். அதன் எதிரொலிதான் இந்த மெகா ரத்த தான முகாம். இதற்காக கடந்த சில மாதங்களாக அதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழகத்திலுள்ள 10 போக்குவரத்து கோட்டங்களில் மெகா ரத்த தானம் நடத்துவதென்று முடிவு செய்தனர்.
ஒவ்வொரு போக்குவரத்துக் கழகக் கிளைக்கும் கோட்ட மேலாளரிடமிருந்தும் கடிதங்கள் அனுப்பட்டன. போக்குவரத்துக் கழக ஊழியர் ஒவ்வொருவரும் கட்டாயம் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டனர். அதிலும் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும், நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆர்டர் போடப்பட்டது. அதற்கு சலுகையாக இரண்டு நாள் விடுமுறையுடன் செலவுக்குப் பணமும் தருவதாகவும் சொன்னார்கள்.
இது மட்டுமில்லாமல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கு பெர்மிட், எஃப்.சி. எடுக்க வருகிறவர்கள், டிரைவிங் லைசென்ஸ் வாங்க வருகிறவர்கள், வாகனங்கள் பயன்படுத்தும் தனியார் பள்ளி, கல்லூரிகள் தங்கள் மாணவர்களையும் அனுப்பி வைக்கவேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக பல ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எந்த பேப்பரும் தராமல், ரத்தம் கொடுத்த ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே கொடுக்கப்படும் என்று ஓரலாக அறிவித்தார்கள்'' என்றார்.
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் கல்லூரி மாணவர்கள் புதுப்பட ரிலீஸுக்கு வந்ததுபோல விசிலும் அரட்டையுமாக காலை ஏழு மணியிலிருந்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். ''ரத்தம் கொடுக்க இவ்வளவு ஆர்வமா?'' என்று, ஒரு மாணவரிடம் கேட்டதற்கு, ''அட போங்க சார். லீவே விடாத எங்க காலேஜ்காரங்களையே லீவு கொடுக்க வெச்சிருக்காங்க. இதோ ரத்தம் கொடுத்துட்டு, செலவுக்கு தர்ர பணத்துல ரெண்டு ஷோ பார்க்க வாய்ப்பு கிடைச்சிருக்கே. அதான் ஜாலியா இருக்கோம்'' என்றார்.
பல இடங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலிருந்தும் எடுத்து வந்த பெட்டுகளையும் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தினார்கள். இதில் ரத்தம் கொடுத்த சிலருக்கு மயக்கம் வந்ததாகவும், அவர்கள் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பேசிக்கொண்டார்கள்.
ராமநாதபுர மாவட்ட சி.ஐ.டி.யூ. நிர்வாகி ஒருவர், ''போக்குவரத்து தொழிலாளர்களின் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் இருக்கின்றன. ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியப் பலன்களைக் கொடுக்காமல் இருக்கிறார்கள். அனைத்து பிராஞ்சுகளிலும் ஆள்பற்றாக்குறை உள்ளது. தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகத்துக்கும் அவர்களின் பி.எஃப்-க்கும் நிதி ஒதுக்குங்கள் என்று நீண்டகாலமாகக் கூறிவருகிறோம். அதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அமைச்சர் இப்படி தேவையற்ற விழாவை நடத்துகிறார். சமீபத்தில்தான் முதல்வர் பசும்பொன் வந்ததற்காக அனைத்து டெப்போக்களிலிருந்தும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் அனுப்பப்பட்டன. அப்போதும் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றனர். இப்போதும் அதுபோல் செய்கின்றனர். இதனால் பல ஊர்களிலும் இரண்டு நாட்களாக பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை. நல்லவேளை ரத்த தானம் மட்டும் நடத்த ஆசைப்பட்டார் அமைச்சர், கிட்னி தானம் என்று சிந்தித்திருந்தால் தொழிலாளர்களின் கதி என்னவாகியிருக்கும்'' என்று அதிர்ச்சி கூட்டினார்.
சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல் நபராக ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். மற்ற ஒன்பது நகரங்களிலும் நடக்கும் முகாம்கள் அனைத்தும் சென்னையிலிருந்தே பார்க்கும்வகையில் தொடர்பு செய்யப்பட்டிருந்தது. ரத்தம் கொடுக்க, கொடுக்க கின்னஸ் நிர்வாகிகளின் கம்ப்யூட்டரில் கவுன்டிங் ஓடிக்கொண்டிருந்தது. இதை கின்னஸ் நிறுவனத்தின் நிர்வாகி லூசியா கண்காணித்தார். சென்னையில் மட்டும் 42 ரத்ததான வங்கிகள் ரத்தத்தைச் சேகரித்தன.
டாக்டர்களிடம் விசாரித்தபோது, ''ஒட்டுமொத்தமாக இவ்வளவு பேர் ரத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அரசு ரத்த வங்கியில் இவ்வளவு ரத்தத்தை சேமித்துவைக்கப் போதிய வசதிகள் இல்லை. இவ்வளவு ரத்தத்தை பாதுகாப்பது கடினம்'' என்றார்கள்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''ரத்த தானம் குறித்த விழிப்பு உணர்வை போக்குவரத்துத் துறை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் முதல்வர் பிறந்தநாளை ஒட்டி ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமினால் பஸ் சேவையிலும் வருவாயிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை'' என்றனர்.
இதுபற்றி அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விளக்கம் கேட்க பல முறை முயற்சித்தும் 'வழக்கம்போல்’ முடியவில்லை. அதிலும் அவர் சாதனை படைக்க விரும்புகிறார் போலும்!  
- வீ.கே.ரமேஷ்,செ.சல்மான், எஸ்.மகேஷ்
  படங்கள்: எம். விஜயகுமார், வி.சதீஸ்குமார்

- Vikatan