Saturday, February 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! 21

24.6.1975-ம் நாள் அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இந்திராவுக்கு எதிரான பெரிய கூட்டம் திரட்டப்படுவதாகத் தகவல் பரவியதும், டெல்லி லெப்டினென்ட் கவர்னருக்கு இந்திராவின் மூளையாகச் செயல்பட்ட ஆர்.கே.தவானிடம் இருந்து ஒரு தகவல் போனது.
 ''இந்தக் கூட்டம் முடிந்ததுமே எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைதுசெய்துவிடுங்கள்'' என்பதுதான் அது. பிரதமர் இல்லத்துக்கு உளவுத் துறையின் எஸ்.பி. வந்திருப்பதாகவும், யார் யாரைக் கைதுசெய்யலாம் என்ற பட்டியலை தயார் செய்துகொண்டு இருப்பதாகவும் ஆர்.கே.தவான் கூறினார். ''இந்தப் பட்டியலை பிரதமர் பார்த்தார். சில பெயர்களை அடித்தார். சில பெயர்களை சேர்த்துள்ளார்'' என்றும் தவான் கூறினார். ''ஆனால், இறுதிப் பட்டியலை நான் பார்க்கவில்லை'' என்று பின்னர் தவான் கூறினார். இறுதிப் பட்டியலை இந்திராவும் சஞ்சயும் தயார் செய்தார்கள்.
ராம்லீலா மைதானத்தில் பேரணி முடிந்து காந்தி அறக்கட்டளை கூட்டத்துக்கு வந்ததுமே ஜே.பி. கைதுசெய்யப்பட்டார். அப்போது நள்ளிரவு 2.30 மணி. அங்கிருந்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அரியானா மாநில அரசு விருந்தினர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். அதே நேரத்தில், மொரார்ஜி தேசாயும் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டு, ஜே.பி. வைக்கப்பட்டிருந்த அதே மாளிகைக்கு அழைத்துவரப்பட்டார். இருவரும் வேறுவேறு அறைகளில் வைக்கப்பட்டார்கள்.
ஜனசங்கத்தின் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள். நானாஜி தேஷ்முக், இந்தத் தகவலை அறிந்து தப்பிவிட்டார். சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அசோக் மேத்தா, மது தண்டவதே ஆகியோருடன் மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிர்மயி பாசுவும் கைதானார். இந்த ஜோதிர்மயி பாசுதான், சஞ்சய் காந்தியின் கார் கம்பெனி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியவர். இவ்வளவு பேரை கைதுசெய்தவர்கள், இந்திரா மீது வழக்கு போட்ட ராஜ் நாராயணனை விட்டுவைப்பார்களா? அவரும் கைதானார்.
இந்தக் கைது நடவடிக்கை காங்கிரஸில் இருந்த 'இளம் துருக்கியர்’களான சந்திரசேகர், ராம்தன், கிருஷ்ணகாந்த் போன்றவர்களுக்குத் தெரியவந்தது. ஜே.பி. எங்கே இருக்கிறார் என்று அந்த நள்ளிரவில் தேடியவர்கள் இந்த மூவரும். ராம்லீலா மைதானத்தில் இருந்து காந்தி அறக்கட்டளை கட்டத்துக்குத் தானே ஜே.பி. போனார் என்பதை உணர்ந்த அவர்கள் மூவரும் காந்தி அறக்கட்டளை வளாகத்துக்கு வந்தார்கள். அவர்களையும் சஞ்சய் காந்தியின் போலீஸ் கைதுசெய்து அரியானா அழைத்துச் சென்றது. டெல்லியில் மட்டுமல்ல; இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் இந்த கைது நடவடிக்கை பரவியது.
ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா முழுக்க 677 பேர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே உள்நாட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி (மிசா) கைதுசெய்யப்பட்டார்கள். யாரைக் கைதுசெய்தாலும் விசாரணையே, இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை வைக்கலாம் என்பதுதான் இந்த சட்டத்தின் முக்கியமான ஷரத்து. 1971-ல் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் கடத்தல்காரர்கள்தான் இந்தச் சட்டத்தின்படி அதிக அளவில் கைதானார்கள். உணவுப் பொருள் கடத்தல் அப்போது அதிகம் நடந்து வந்ததால் இந்தக் கைதுகள் அதிகம் நடந்தது. உணவுக்கடத்தல்காரர்கள் பொதுமக்களுக்கு எதிரானவர்கள் என்ற அடிப்படையில் இந்தக் கைதுகள் நடந்தன. அதே சட்டத்தை, அரசியல் தலைவர்கள் மீதும் பயன்படுத்தினார்கள். இந்திராவுக்கு எதிரானவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்ட யாருமே ஜாமின் கேட்க முடியாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் ஸ்பெஷல் என்பதால் அதனை இந்திராவும் சஞ்சய்யும் பயன்படுத்தினார்கள்!
தலைவர்கள் கைதுக்குப் பிறகு பத்திரிகைகளின் குரல்வளையை நெரிக்கத் தொடங்கினார்கள்!
இந்தியாவின் முக்கிய செய்தி நிறுவனங்கள் இருந்த பகுதி பகதுர்ஷா மார்க். அங்கு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் இருந்தால்தானே பத்திரிகைகளை அச்சிட முடியும்? மூலாதாரத்தில் கைவைக்கும் மூளை சஞ்சய் காந்தியுடையது. இந்திராவுக்கு எதிராக அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வந்ததில் இருந்த அதுபற்றி எழுதிய பத்திரிகைக்காரர்கள் யார் என்ற பட்டியலும் தயார் ஆனது. அவர்களைக் கைதுசெய்ய சஞ்சய் உத்தரவு போட்டார்.
அன்று செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர், பிற்காலத்தில் பிரதமர் ஆன ஐ.கே.குஜ்ரால். செய்தியாளர்களைக் கைதுசெய்யும் பட்டியல் அவரிடம் தரப்பட்டது. ஆனால், அதனை ஐ.கே.குஜ்ரால் ஏற்கவில்லை. உடனே அவரிடம் இருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டது.
மின்தடை இல்லாத பகுதியில் இயங்கி வந்த செய்தி நிறுவனங்கள் தங்களது நாளிதழ்களை வெளியில்விட்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மேன், தி டிரிப்யூன் போன்றவை வெளியானது. டிரிப்யூன் இதழ்களை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்து எரித்தார்கள். இதைத் தொடர்ந்து  பத்திரிகை தணிக்கை முறை உடனடியாக அமலானது. எந்தச் செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும் அதனை மத்திய அரசு அதிகாரி ஒருவர், பார்த்து 'சரி’ என்று சொன்னால் மட்டும்தான்  வெளியிடலாம். அவர் வெளியிடக் கூடாது என்றால் அதனை வெளியிடவே கூடாது. அதாவது காங்கிரஸ் அரசு, இந்திரா, இந்திரா மீதான வழக்குகள், இந்திராவுக்கு எதிரான போராட்டங்கள், கைது நடவடிக்கைகள், விமர்சனங்கள் எதையுமே வெளியிடக் கூடாது என்பதுதான் இந்தத் தணிக்கை நடவடிக்கையின் ஒரே குறிக்கோள் இந்த நடவடிக்கையை அகில இந்திய அளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மேன் இதழ்கள் கடுமையாக எதிர்த்தன. மதர்லேண்ட் (டெல்லி) தருண் பாரத் (லக்னோ) ஆகியவை மீது அடக்குமுறை பாய்ச்சப்பட்டது. மதர்லேண்ட் ஆசிரியர் மல்கானி, கைதுசெய்யப்பட்டார். லண்டன் இதழான டெல்லி டெலிகிராப் செய்தியாளர் பீட்டர்சிங், நியூஸ்வீக் செய்தியாளர் (அமெரிக்கா) லாரென்ஸ் ஜிக்சின்ஸ் ஆகிய இருவரும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆனாலும் அடக்குமுறைக்கு எதிராக பல இதழ்கள் எழுதின. புதிய புதிய பெயர்களில் இதழ்கள் வெளிவந்துகொண்டே இருந்தன. தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி இருந்தது. 1976 ஜனவரி 30-ம் தேதி அந்த ஆட்சி கலைக்கப்பட்ட பிறகுதான் அடக்குமுறை கோரத்தாண்டவம் அதிகமானது. பத்திரிகை தணிக்கையும் அதன் பிறகே தமிழகத்தில் தொடங்கியது.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அதிபர் கோயங்கா பட்ட கஷ்டத்தை உணர்ந்தாலே, அன்றைய இந்திய இதழியலின் சூழ்நிலை புரியும். இதோ கோயங்கா சொல்கிறார்:
''1975 ஜூன் 26-ம் தேதி அதிகாரப்பூர்வமாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டாலும் தில்லியிலுள்ள எனது வெளியீட்டு நிறுவனங்களுக்கு அதற்கு முந்தைய நாள் 25-ம் தேதி நள்ளிரவே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. எனது தில்லி அலுவலகம் அமைந்திருந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. எனவே 26-ம் தேதி காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளிவரவில்லை.
எனக்கும் எனது இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் இருண்ட காலம் துவங்கியது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் இருண்ட காலம் என்பதை அது நிரூபித்தது. நாட்டின் அத்தியாவசிய மதிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. அதுவரை இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் அற்பத்தனமானதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் மட்டுமே இருந்தன. ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு பகையாக மாறியது. நெருக்கடி காலத்தின்போது இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு வகை தொல்லைகள் குறித்துப் பலரும் அறிந்திருந்தனர். ஆனால் வெளியே தெரிந்த விஷயங்கள் விரல் நுனி அளவுதான்.
நெருக்கடி நிலைக்காலம் என்பது எனது வாழ்க்கையின் இருண்ட காலம். நான் அரை நூற்றாண்டாக தீவிர ஈடுபாடு கொண்டிருந்த இந்த நாட்டுக்கும் இருண்ட காலம்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பத்திரிகைத் தணிக்கை முறை திணிக்கப்பட்டது. குடிமக்களது உரிமைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் மத்திய அரசு, அதாவது ஆளுங்கட்சியின் பார்வை 1975-ம் ஆண்டு ஜூலை மூன்றாவது வாரத்தில் என் மீது திரும்பியது....'' என்று சொல்லிவிட்டு கோயங்கா சொல்லும் தகவல்கள்தான் அதிர்ச்சிக்குரியவை.
கோயங்கா என்ன சாதாரணமான ஆளா? அவர் பத்திரிகை நிறுவனர் மட்டுமல்ல, அவருக்கு 50 ஆண்டுகால பொதுவாழ்க்கை உண்டு. நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். 1926-ல் அன்றைய மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தவர். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். 1952-ல் சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட் அல்லாத காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு உதவியவர். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைகின்றவரை தன்னை காங்கிரஸ் கட்சியுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர். காங்கிரஸ் கட்சி, இந்திராவின் தனிப்பட்ட சொத்தாக மாறிவருவதை உணர்ந்து கண்டித்தவர் கோயங்கா. அதனாலேயே இந்திராவின் எதிரியாகக் கருதப்பட்டார். சுதந்திரமான, யார் தலையீடும் இல்லாத, அதிகார வர்க்கம் செல்வாக்கு செலுத்த முடியாத பத்திரிகை நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று நினைத்தார். ஆனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடும்படி கோயங்காவை கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதனாலேயே வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி கோயங்காவின் நிறுவனங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. 1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டின்படி, எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் அரசு நியமிக்கும் இரண்டு இயக்குநர்கள் இரண்டு ஆண்டுக்கு இருப்பார்கள் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. பங்குதாரர்களுக்கே தெரியாமல் இயக்குநர்களை நியமிக்கும் தந்திரம் இது என்று கோயங்கா இதனைக் கடுமையாக எதிர்த்தார்.
'1969 முதல் பத்திரிகைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அரசின் பல்வேறு முயற்சிகள், எனது எதிர்ப்பு காரணமாக ஓரளவே வெற்றிபெற்றன. எனது வர்த்தகத் திறனுக்கும் எனது சக்திக்கும் மீறியே இதற்காக நான் செலவிட வேண்டியதாயிற்று. ஆளுங்கட்சியுடனான எதிர்ப்பைக் கைவிடும்படி எனது நண்பர்கள் எனக்கு ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் நான் கைவிடவில்லை. வாழ்க்கையின் அத்தியாவசியமான சில மரியாதைகளுடன் சமரசம் செய்துகொள்ள நான் பழகவில்லை. எனது வர்த்தகம் மற்றும் உடமைகள் பறிபோனாலும் அத்தியாவசியமான மதிப்புகளைக் காப்பாற்றுவதற்காகப் போராடப் பயிற்சி பெற்றவன் நான்'' என்று சொல்லிக்கொண்ட கோயங்காவை எமர்ஜென்சியில் சும்மா விடுவார்களா?

- Vikatan

No comments:

Post a Comment