Thursday, February 20, 2014

ஆறாம் திணை - 76

'காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும்
எங்கள் கூட்டம்’ 
எனப் பல்லுயிர் ஓம்பி வாழ்ந்த கூட்டம் நாம். சிக்கிமுக்கியை உரசித் தீயைப் பற்றவைத்ததில் தொடங்கி, கதிர்வீச்சை அணுக்களில் மோதவிட்டு உருவாக்கப்படும் நியூட்ரினோ துகள் வரை நம் சொகுசுகளுக்காகச் சிதைக்கப்படும் பல்லுயிரியம் சொல்லிமாளாதது. 'எனக்கு உதவாத ஒன்று இந்த உலகில் எதற்கு வேண்டும்?’ என்ற இறுமாப்பு, வேறு எந்த இனத்துக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. தனக்கு வேண்டியதை மட்டும், தனித்துப் பயிரிட்டுச் செழுமையாக வளர்த்துக்கொள்ளும் நவீன விவசாயக் கலையில் மண்ணையும், மரத்தையும், புழு - பூச்சியையும் ரசாயனங்களால் மனிதன் சிதைப்பது நமக்குத் தெரியும். தெரியாதது... களை என்ற பெயரில் முளைக்கும்போதே நாம் நசுக்கவோ பிடுங்கி எறியவோ செய்வது விஷச் செடிகளை அல்ல... பல உயிர் காக்கும் மூலிகைகளை. விளைவிக்கப்படும் தாவரத்தின்வளர்ச்சியை, அதன் கனிகளின், தானியத்தின் அளவைப் பாதிக்கும் களையை முளையிலேயே கிள்ளி எறிவதில் என்ன தவறு? என்ற கேள்விதான், 'ANTHROPOCENTRISM’ என்ற மனிதனை மட்டும் மையப்படுத்தி வாழும் வாழ்வின் உச்சம்!
'உனக்குத் தேவையானவற்றை விதை; அல்லது தூவிச் செல். அதன் பின் விளைந்து நிற்கும் உனக்குத் தேவையான பொருளை மட்டும் அறுவடை செய்துகொள்... அதுவரை மண்ணை இடையூறு செய்யாமல் விலகி நில்’ என்பதுதான் உலகின் முதல் இயற்கை விஞ்ஞானி மசானா ஃபுகாகோவின் சித்தாந்தம். உருவாக்கப்படும் அல்லது பெருகும் உணவுத் தேவைக்கு எனச் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டுப்போன இந்தச் சித்தாந்தத்தில் தொலைந்துவருவது பல்லுயிரியமும், நம் உடல் நலம் காக்கும் மூலிகைக் கூட்டமும்தான்.
மூலிகை என்றதும் பலரும் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி பெறப்படும் குலேபகாவலி மலரோ என்ற கற்பனைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். உண்மை அப்படி அல்ல. வயல் வரப்பு ஓரத்தில் களையென ஒடுக்கப்படும் தாவரங்களில் பல மூலிகைகள். நெல் வரப்பு ஓரமாக கணுக்களில் முட்களுடனும் இளஞ்சிவப்பு நிறமுடைய பூக்களுடன் இருக்கும் நீர்முள்ளிச் செடி, இன்று களையாகப் பிடுங்கி எறியப்படும் முக்கியமானத் தாவரம். இதன் உலர்ந்த செடியை ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமாக்கிக் குடித்தால், இதய நோயிலும், சிறுநீரக நோயிலும், கல்லடைப்பிலும், நாளங்களின் வலுக்குறைவிலும் கால்பாதத்தில் வரும் நீர்தேக்கமுடன்கூடிய வீக்கத்துக்கு அற்புதமான மருந்து. நாள்பட்ட சிறுநீரக நோயிலும் நாள்பட்ட ருமட்டாய்டு மூட்டுவலிக்கும்கூட இதன் பயனை உணர்த்தி இருக்கிறது சித்த மருத்துவம்.
'எங்க கம்பெனி உரம், கரிசலாங்கண்ணியைக்கூட அழிக்கும்’ என்று வரும் விளம்பரங்களைப் பார்த்தபோது  வேதனையாக இருந்தது. 'தேகராஜன்’ என சித்தர்கள் செல்லமாகக் குறிப்பிட்ட கரிசலாங்கண்ணி மூலிகை, அற்புதமான ஒரு கற்ப மருந்து. சித்தர்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட அன்றைய போகரும், இன்றைய வள்ளலாரும் கொண்டாடிய மூலிகை அது. காமாலையிலும் ஈரல் சிர்ரோசிஸ் நோயிலும் ஈரலைப் பாதுகாப்பதில் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
பருப்பு இல்லாமல்கூட இன்று கல்யாணம் நடக்கலாம். ஆனால், கரிசாலை இல்லாமல் கூந்தல் தைலம் செய்ய முடியாது. 'கையில் ரொம்ப நேரம் வெச்சிருக்காதீங்க... உள்ளங்கையில் முடி வளர்ந்திரும்’ என்று அதீதமாக விளம்பரப்படுத்தப்படும் பெருவாரி கூந்தல் தைலங்கள் கரிசாலையால்தான் தயாரிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் ரெண்டு லிட்டர் கரிசாலைச்சாறு மட்டும் சேர்த்து, தண்ணீர் போகுமட்டும் காய்ச்சி எடுக்கப்படும் தைலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும், கார்கூந்தல் வளர்க்கும்.
விஷ்ணுகிரந்தி, சத்தம் இல்லாமல் வரப்பு ஓரத்தில் வளரும் மிகச் சிறப்பான மூலிகை. காய்ச்சல், இருமல் முதல், பெண்களுக்கு சினைமுட்டையைச் சீராக்குவது வரை சாத்தியப்படுத்தும் விஷ்ணுகிரந்தி, சித்த மருத்துவம் போற்றி வணங்கும் முக்கிய மலர்களில் ஒன்றைத் தரும் தாவரமும்கூட. வரப்பில் நடக்கும்போது நறுக்கென காலில் குத்தும் நெருஞ்சில் எனும் மூலிகை, ஒரு 'காதல் காப்பான்’! ஆண்களின் விந்தணு மிகக் குறைவாக இருப்பதற்கு, செர்டோலி செல்களின் அழிவு ஒரு முக்கியமானக் காரணம் என்கிறது நவீன மருத்துவப் புரிதல். அந்தச் செல்களை மீட்டு எடுத்து விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கூட்ட உதவும் இந்த நெருஞ்சில். வரப்பில் எலிகளின் எண்ணிக்கை எக்குத்தப்பாகப் பெருகுவதற்கு, நெருஞ்சிப்பழம் சாப்பிட்ட ஆண் எலிகளின் அட்டகாசம்தான் காரணம் என்கிறது ஆராய்ச்சி!
இன்னும் களையென அடையாளப்படுத்தப்பட்ட சிவகரந்தை, சிறுசெருப்படை, கீழாநெல்லி, விராலி, கத்தாழை, நிலக்கடம்பு என வயலில் நெல்செடி வேளாண்மைக்கு முன்னும் பின்னும் இடையிலும் வரும் பல தாவரங்களின் பயன்பாட்டை உலகமே உற்றுத் தேடிக்கொண்டிருக்கிறது. அதன் மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு, அதன் வேதியியல் கட்டமைப்பு விருப்பப்படி பிரித்து மேயப்பட்டு, காப்புரிமையுடன், அதிக விலையுடன் அதே குடியானவனுக்கு மிக அவசியமான நோய்க்காலத்தில் மறுக்கப்படும் அவலம் நடக்கும். களையென ஒடுக்கப்பட்டவற்றைப் பாதுகாப்பாகச் சேகரித்து, மருத்துவ மனைக்கும் மருந்துசெய் நிறுவனங்களுக்கும் விவசாயக் கூட்டமைப்பின் மூலம் விநியோகிக்கும் கட்டமைப்பை அரசு உருவாக்குவதுகூட விவசாயியின் கண்ணீரைத் துடைத்து ஆசுவாசப்படுத்தும் ஒரு நல்முயற்சியாக இருக்கும். செய்வார்களா?

- Vikatan

No comments:

Post a Comment