Friday, February 7, 2014

சாஸ்திரியின் மரணத்தில் மர்மம்?!

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை யைப் பற்றிய புத்தகம்: டேஸ் வித் லால் பகதூர் சாஸ்த்ரி: க்ளிம் ஸெஸ் ஃப்ரம் தி லாஸ்ட் செவன் இயர்ஸ் (Days with Lal Bahadur Shastri: Glimpses from the last seven years.)ஆசிரியர்: ராஜேஷ்வர் பிரசாத் ஐ.ஏ.எஸ். இவர் லால்பகதூர் சாஸ்திரியின் கடைசி ஏழு ஆண்டுகளுக்கு அவருடைய சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவர். சாஸ்திரியின் குடும்பத்தோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர்.
எளிமையான மனிதர். அன்புமயமான குடும்பத் தலைவர். அபூர்வமான அரசியல்வாதி. நேர்மையும் அரசியல் உறுதியும் கொண்ட ஆட்சியாளர் என்று சாஸ்திரியின் பல பரிமாணங் களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. ''இப்படியும் ஓர் அரசியல்வாதி நமது தேசத்தில் இருந்திருக்கிறார்...'' என்று சிலிர்ப்போடு நம் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படும் அளவுக்குச் சிறப் பானதொரு நூலைத் தந்திருக்கும் ராஜேஷ்வர் பிரசாத், கூடவே 'லால்பகதூரின் மரணம் இயற்கையானதுதானா?'' என்கிற முக்கியமான கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பி இருக் கிறார்.
''இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 1965-ம் ஆண்டு நடந்த யுத்தத்துக்குப் பிறகு ஏற்படவிருந்த மிக முக்கியமான ஒப்பந்தத்துக்காக, தாஷ்கண்டுக்கு அப்போதைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி கிளம்பினார். இதய நோய் உள்ள கணவரைத் தனியே வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பாத அவரது மனைவி லலிதா, 'நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றார். 'அரசாங்கச் செலவில், அரசு வேலையாக நான் தாஷ்கண்ட் போகிறேன். கூடவே உன்னையும் அழைத்துக் கொண்டுபோனால், நான் நாட்டுக்காகப் போகிறேன் என்று மக்கள் நினைப்பார்களா அல்லது சுகத்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும் போகிறேன் என்று நினைப்பார்களா?’ என்று சாஸ்திரி கேட்டதும்; அந்த எண்ணத்தைக் கைவிட்டார் லலிதா சாஸ்திரி. அதைப் போலவே மகனையும் தவிர்த்தார் சாஸ்திரிஜி!
1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி... நாள் முழுதும் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ரஷ்ய, இந்திய அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், 'நாளை காலை 8 மணிக்கு அமைச்சர்களும் உயரதிகாரிகளும் ஒன்றுகூட வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்த அறிவிப்பு அன்று மாலை 4 மணிக்கு வெளியானபோது, எல்லோருமே மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள். அதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் கோசிஜின் கொடுத்த வரவேற்புக்குப் போய்விட்டு, சாஸ்திரிஜி தான் தங்கியிருந்த இடத்துக்கு இரவுதான் வந்தார். 'வரவேற்பில் நிறைய சாப்பிட்டுவிட்டேனோ என்னவோ... வயிறு கனமாக இருக்கிறது’ என்று சொல்லி இருக் கிறார். பிரதமரின் நம்பிக்கைக்கும் அவர் உடல்நலத்தில் மிகுந்த அக்கறையும் காட்டும் ஊழியர் ராம்நாத் வற்புறுத்தி இரண்டு பிரட் டோஸ்ட்டுகளும் அரை டம்ளர் பாலும் சாப்பிடவைத்தார்.
அதற்குப் பிறகு, இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தாரோடு தொலைபேசியில் பேசினார் சாஸ்திரிஜி. பின்னர், தனது அறைக்குச் சென்ற சாஸ்திரிஜி, அங்கே கொஞ்ச நேரம் உலவியபடி இருந்திருக் கிறார்.
நள்ளிரவு... நேரம் 1.20 மணி. சாஸ்திரிஜியின் உதவியாளர் எம்.எம்.என்.ஷர்மா தனது அறைக் கதவு தட்டப்படுவதைக் கேட்டுக் கதவைத் திறந்தார். வெளியே தன் மார்பைப் பிடித்தபடி வலியால் துடித்துக்கொண்டே சாஸ்திரிஜி, 'டாக்டர் சாகிப் எங்கே?’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் டாக்டரை அழைத்து வந்து, சாஸ்திரிஜிக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. சாஸ்திரிஜி அமரராகும்போது மணி 1.32. அதற்குப் பிறகுதான் ரஷ்யாவின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அங்கு வந்திருக்கிறார் கள்.
சாஸ்திரிஜிக்கு நெருக்கமாக இருந்த யாரும் அதை ஓர் இயற்கையான முடிவு என்று நம்பத் தயாராக இல்லை. சாஸ்திரி ஜியின் மரணத்தில் இன்னும் தீர்க்கப்படாத எத்தனையோ சந்தேகங்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்...
 தாஷ்கண்டுக்கு சாஸ்திரிஜி போனதும், ஒரு டூரிஸ்ட் ஹாஸ்டல் கட்டடத்தில் தங்கு வதற்குத்தான் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்கேற்ப, அந்தக் கட்டடத்தில் எல்லாவிதமான சிறப்பு மருத்துவ வசதிகளுடன் ரஷ்யாவின் சிறந்த மருத்துவ நிபுணர்களும் இருந்தார்கள். ஆனால், சாஸ்திரிஜி தாஷ்கண்ட் வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால், பிரதமர் தங்கும் இடம் டூரிஸ்ட் ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்து இரண்டு, மூன்று பர்லாங் தூரத்தில் தனிமையாக உள்ள வேறொரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. சாஸ்திரிஜியின் பர்சனல் டாக்டரைத் தவிர, இந்தப் புது இடத்தில் மருத்துவ நிபுணர்களோ, வசதிகளோ கிடையாது. இந்த இடமாற்றத்தை நமது இந்தியப் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை அதிகாரி எதிர்த்தும், அதை மீறி ஏன் செய்தார்கள்?
சாஸ்திரிஜி தங்கியிருந்த கட்டடத்தில், அவருடைய டெலிபோனில் ஒரு எக்ஸ்ட்ரா வசதி இருந்தது. சாஸ்திரிஜி டெலிபோன் ரிசீவரைக் கையில் எடுத்தாலே அவரது உதவியாளர்கள் இருக்கும் அறையில் மணி ஒலிக்கும்படியான வசதி அது. பொதுவாக, அந்த டெலிபோன், பெட்ரூமில் படுக்கைக்குப் பக்கத்தில்தான்வைக்கப் பட்டு இருக்கும். ஆனால், சம்பவம் நடந்த அன்று அந்த டெலிபோன் சாஸ்திரிஜியின் பெட்ரூமில் இல்லை. மாறாக, அது அங்கிருந்து மாற்றப்பட்டு, வரவேற்பறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்தது.
சாஸ்திரிஜி தாஷ்கண்ட் வருவதற்கு முன்னாலேயே, தேவைப்பட்டால் அவருக்கு உதவுவதற்காக இதய நிபுணர்கள் குழு ஒன்றை தாஷ்கண்ட் நகருக்கு வரவழைத்து இருந்தது ரஷ்ய அரசு. ஆனால், தாஷ்கண்ட் போய்ச் சேர்ந்ததும் இந்தியத் தரப்பில் இருந்து யாரும் அந்த நிபுணர்களோடு ஏன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை?
 ஒவ்வொரு நாள் காலையும் பிரதமரை மெடிக்கல் செக்கப் செய்வது வழக்கம். சம்பவம் நடந்த அன்று மட்டும் ஏன் செக்கப் நடைபெற வில்லை?
பிரதமரின் பர்சனல் டாக்டரிடம் உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் சம்பவம் நடந்த அன்று இருந்தனவா என்பது தெரிய வில்லை.
 அமரராவதற்குச் சற்று முன் தனது படுக்கைக் குப் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்க் ஒன்றை சாஸ்திரிஜி சுட்டிக்காட்டினார். அதற்குள் வெந்நீர் இருந்தது. அவர் குடிக்க நீர் கேட்பதாக நினைத்து, பிளாஸ்க்கை எடுக்க முயற்சித்த போது, அந்த பிளாஸ்க்கை வேண்டாம் என்பதுபோல சைகை செய்திருக்கிறார் சாஸ்திரி. சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து, அவர் கடைசியாக இருந்த இடத் தைப் பார்க்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்ப, அவர்களோடு நானும் புறப்பட்டுப் போனேன். தாஷ்கண் டில் அவர் தங்கியிருந்த அறையில் எதையும் கலைக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள் - சாஸ்திரிஜி உபயோகித்த சோப்பு, துண்டு உட்பட. ஆனால், ஒரே ஒரு பொருள் மட்டும் காணாமல் போயிருந்தது. அது - சாஸ்திரியால் சுட்டிக்காட்டப்பட்ட அந்த பிளாஸ்க்.
சாஸ்திரிஜியின் மரணத்துக்குப் பின்ன ணியாகப் பெரிய சதிவலை இருந்ததா இல்லையா என்பதெல்லாம் உறுதியாகச் சொல்ல முடியாதவை. ஆனால், எல்லாமே ஆராய்ச்சிக்கு உரிய விஷயங்கள். நம்மால் ஒன்றை நிச்சயமாகச் சொல்ல முடியும். அவரது மரணத்துக்குப் பின்னணியில் மிக மோசமான அலட்சியம் இருந்திருக்கிறது. கொஞ்சம் முன்னெச்சரிக்கை யோடும் கவனத் தோடும் செயல் பட்டு இருந்தால் அவரைக் கண்டிப் பாகக் காப்பாற்றி இருக்க முடியும்'' - இப்படி மிகவும் மனம் நொந்து தன் மன வேதனையைக் கொட்டியிருக்கிறார் உதவியாளர் ராஜேஷ்வர் பிரசாத். சாஸ்திரியைப் பற்றிய வேறு சுவையான சம்பவங்கள் சிலவற்றைப் புத்தக ஆசிரியர் கூறுகிறார்...
 சாஸ்திரிஜி உள்துறை அமைச்சராக இருந்தபோது கல்கத்தாவுக்குப் போயிருந் தோம். கல்கத்தாவிலிருந்து புது டெல்லிக்குக் கிளம்பும் அடுத்த விமானத்தில் உடனடி யாகப் புறப்பட வேண்டிய கட்டாயம் சாஸ்திரிஜிக்கு. கல்கத்தாவின் வாகன நெரிசல்மிக்க சாலைகளைத் தாண்டி, குறித்த நேரத்தில் விமான நிலையத்துக்குப் போக முடியாத நிலைமை. அப்போது சாஸ்திரிஜியைக் கல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் அணுகி, 'உங்களது காருக்கு முன்னால், சைரன் பொருத்திய ஒரு பைலட் காரை அனுப்பிவைக்கிறேன். சைரன் ஒலியோடு மிக வேகமாகப் போய் விமானத் தைப் பிடித்துவிடலாம்’ என்று சொல்ல... கமிஷனரின் இந்த யோசனையைக் கேட்ட சாஸ்திரிஜி, 'சத்தமாக சைரன் ஒலி எழுப்பிக்கொண்டே நான் பயணம் செய்தால் சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் என்னை என்ன நினைப் பார்கள்? விமானத்தைப் பிடிக்க முடியா விட்டாலும் பரவாயில்லை. நான் மக்களிடம் இருந்து விலகிப்போகும் இந்த பந்தாவுக்கு உடன்பட மாட்டேன்’ என்று நிராகரித்து விட்டார்.
 இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் முழு அதிகாரத்தோடு வீற்றிருந்த சாஸ்திரிஜி அமரர் ஆகும்போது அவருக்கு என்று சொந்த மாக ஒரு வீடு இல்லை... ஓர் அங்குல நிலமும் இல்லை. அவரது குடும்பத்துக்கு அவர் விட்டுச்சென்றது ஒரு கார் வாங்கியதற்கான கடனைத்தான்.
 1965-ம் ஆண்டு செங்கோட்டையில் பிரதம மந்திரியாக தேசியக் கொடி ஏற்றினார் சாஸ்திரிஜி. அடுத்த ஆண்டு ஆட்சி மாறி 1966-ம் ஆண்டின் சுதந்திர தின விழாவுக்கு அவரது குடும்பத்தைத் தேடி ஓர் அழைப் பிதழ்கூடப் போகவில்லை.
டெல்லி ஜன்பத் 10-ம் நம்பர் வீட்டில், மறைந்த சாஸ்திரிஜியின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வாசல் கதவுக்கு அருகில் மக்கள் கூட்டம் அலைமோதி, வரிசை கலைந்து, அதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அங்கு காவல் பொறுப்பில் இருந்த ஊழியரை அழைத்து ''ஏன் இப்படிக் குழப்பம்? என்று கேட்டோம்.
அவர் சொன்னார், 'சார், நான் என்ன பண்ண முடியும்? வரிசையில் ஒழுங்கா போங்க என்று எல்லோரையும் நான் கெஞ்சிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், வருபவர்களில் பலர், 'நான் யார் தெரியுமா? எனக்கு அவரைத் தெரியும்... இவரைத் தெரியும்’ என்று சொல்லிக் கொண்டே என்னைத் தாண்டிப்போகிறார் கள். ஒருவரும் என்னை மதிக்கவில்லை. என்னைப் போன்ற சாதாரண ஊழியனை யும் மதிப்பதற்கு ஒருவர் இருந்தார். அவரும் இப்போது போய்விட்டார்... நான் என்ன செய்யட்டும்’ என்றார் அந்த ஊழியர் அழுதபடியே.
அந்த ஊழியரின் வார்த்தைகளைத்தான் சாஸ்திரிஜிக்குக் கிடைத்த மிக உன்னதமான புகழஞ்சலியாக இன்றும் நான் கருதுகிறேன்’ என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கிறார் ராஜேஷ்வர் பிரசாத். 

- Vikatan

No comments:

Post a Comment