Friday, February 7, 2014

நடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்! 09.11.1975

டிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங்களாகிவிட்டன.  இந்த 1975... அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. அவரைப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அந்தக் காலம் எப்படி, இந்தக் காலம் எப்படி? சாவித்திரி சொல்கிறார்.
 நான் நடிக்க வந்தபோது...
''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்தனை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த புதுசுலயே நான் எட்டுப் படங்கள்ல நடிச்சேன். சேர்ந்தாற் போல எட்டுப் படங்களில் ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கிறது அப்போது எல்லாம் பெரிய காரியம். அதோட அப்போ வந்த எட்டுப் படங்களும் இப்போ வர்ற 40 படங்களுக்குச் சமம்... எல்லாவிதத்திலும்தான்!''
மூணு மாதம் ரிகர்சல்!
''நான் நடிச்ச படங்களில் எல்லாம் கதைதான் பிரதானம். முழுக்கக் கதை வசனம் எழுதிடுவாங்க. பிறகு, எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஆபீஸுக்கு வரச் சொல்லி இரண்டு, மூணு மாசம் ரிகர்சலில் இருப்போம்.
இப்போ உள்ள நிலைமை? திடீர் புதுமுகங்கள் நாற்காலியைக் கையோடு கொண்டுவந்து மூலையில் போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியது. இன்னும் சில பேர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பதுபோலக் கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு 'படிப்பது’. யாராவது, எதாவது கேட்டால், 'எங்களுக்கு எந்தவித வம்பும் தேவையில்லை’ என்று 'ஸ்டாக் பதில்’ ஒன்றைச் சொல்லிவிடுவது!''
எங்களுக்குக் கற்றுத்தருகிறார்கள்!
''அப்போதெல்லாம் ரிகர்சல் பண்ணிட்டுத்தான் செட்டுக்குள் நுழைவாங்க. இதனால், எல்லோருடைய போர்ஷனும் எல்லோருக்கும் மனப்பாடமாக இருக்கும்.
இப்போ?
எல்லாமே 'ஆர்ட்டிஃபிஷியல்’. நடிப்பு முக்கியமாப் படலை. ஒவ்வொரு சீனுக்கும் என்ன ஹேர் ஸ்டைல், என்ன டிரெஸ் சேஞ்ச் பண்றதுங்கிறதுதான் முக்கியமான விஷயமாப்போயிடுச்சு.
முன்பெல்லாம் புதுமுகம்னு வந்தா, முதல்ல ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்துடுவாங்க. ரிகர்சல் பண்ணிக்கிட்டு ரெடியா இருக்கணும்.
இப்போ வந்திருக்கிற 'திடீர்’ ஆர்ட்டிஸ்ட்டுகள் மேக்கப் போட்டுக்கிட்டு நேரே செட்டுக்கு வந்துடுறாங்க. உள்ளே நுழையும்போதே 'ஷாட் ரெடியா?’னு கேட்டுட்டே நுழையறாங்க. எங்களைப் போன்ற அனுபவம் உள்ள பெரிய நட்சத்திரங்கள் அமர்ந்திருந்தால், ஒரு மரியாதை கூடக் கிடையாது. சிலர் எங்களுக்கே 'இப்படி டயலாக் சொல்லுங்க... அப்படி டயலாக் சொல்லுங்க’னு கத்துத்தர்றாங்க!''
தொழிலில் அக்கறை இல்லை!
''நான் சிவாஜி அண்ணனோடு நடிக்கும்போது 'யார் ஸ்டுடியோவில் முதலில் இருப்பது’ என்று எங்களுக்குள் போட்டி இருக்கும். அப்படித் தொழில்ல அக்கறைகொண்ட நட்சத்திரங்களை இப்ப படவுலகில் விரல்விட்டுத்தான் எண்ண வேண்டி இருக்கு.
அந்தக் காலத்துல தயாரிப்பாளர், டைரக் டர்னா எவ்வளவு நடுக்கம் தெரியுமா? கேமரா மேன் நிக்கச் சொன்னார்னா, அவர் 'உட்காரு’னு சொல்ற வரைக்கும் நாங்க உட்கார மாட்டோம். ஆனா, இப்போ இருக்கிற புதுமுகங்கள், 'கேமரா லைட் நம் மீது விழும்போது எழுந்து நின்றுகொள்ளலாம்’ என்று உட்கார்ந்துவிடுகிறார்கள்.
ஐஸ் பாக்ஸ் முன்னே, நடிகை பின்னே!
இப்போ புதுமுகங்கள் கார்ல வந்தா, உடனே கார்லருந்து இறங்கி வர மாட்டாங்க. முதல்ல ஐஸ் பாக்ஸ் வரும். அடுத்தது மேக்கப் பாக்ஸ் வரும். அதுக்கு அடுத்தது நாற்காலி வரும். இதெல்லாம் வந்த பிறகுதான், ஆர்ட்டிஸ்ட் மெதுவாக இறங்கிவருவார்.
எங்களுக்கென்று தனியாக நாற்காலி  கொண்டுவரும் பழக்கத்தை முதன்முதலில் ஆரம்பித்தவர்களே நானும் நாகேஸ்வரராவும்தான். தயாரிப்பாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்றுதான் இதை ஆரம் பித்தோம். இப்படித் தனியாக நாற்காலி கொண்டுவருவதற்கு நாங்கள் முதலில் எப்படிப் பயந்திருக்கிறோம் தெரியுமா? இப்போதோ எல்லாமே சர்வ அலட்சியமாக இருக்கிறது!''
நல்ல விஷயங்களே இல்லையா?
முன்பெல்லாம் நாங்கள் நடிக்கும்போது, செட்டுக்கு வெளியே எல்லோருமாகச் சேர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டு இருப்போம். ஆனால், 'ஷாட் ரெடி’ என்றதும் அந்த மூடுக்கு வந்து விடுவோம். இவர்களுக்கு ஷாட்டுக்கு முன்பே அந்த 'மூடு’க்கு வரத் தெரியாது. அழுகிற சீன்கள் வந்தால்கூடப் பெரிய கொண்டை போட்டுக்கிட்டு, அமர்க்களமா டிரெஸ்பண்ணிக் கிட்டு வந்து நிக்கறது... டைரக்டர் 'ரிகர்சல் பாருங்கம்மா’னு சொன்னா, 'அதெல்லாம் டேக்கிலே பார்த்துக்கறேன் சார்’னு சொல்றது... டேக் எடுக்கும்போது டயலாக் சொல்லத் தெரியாம முழிக்கிறது... டைரக்டரைப் பார்த்து, 'அடுத்த தடவை கரெக்டா சொல்றேன் சார்’னு அசடு வழியறது... இதைத்தான் இப்போ வர்ற புதுமுகங்கள் செஞ்சுட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல இவங்க எங்களுக்கு டயலாக் சொல்லித் தர்றாங்களாம்!''
தியேட்டரில் படம் பார்ப்பேன்!
''சாதாரணமாக நான் தியேட்டர்களில் படம் பார்ப்பதைத்தான் விரும்புவேன். ஏனென்றால், அப்போதுதான் ரசிகர்களுடைய உண்மையான கருத்துக்களை அறிந்துகொள்ள முடியும். யாராவது தனியாகப் படம் போட்டுக்காட்டினால், நான் போவது ரொம்பவும் அரிது. அப்படிப் பார்க்கப் போனால், ஒரு சீன் நல்லாயில்லேன்னா 'என்னங்க இது... இந்த சீனை இப்படி எடுத்திருக்கீங்களே’னு வெளிப்படையாகக் கேட்டுவிடுவேன். சில பேர் இதை விரும்ப மாட்டாங்க. இதனாலேயே நான் போறதில்லை. நான் நடிச்ச படங்களைப் பார்க்கிறபோது, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்புப் பண்ணியிருக்கேன்னும் பார்ப்பேன்.
இப்போ இருக்கிற சில ஆர்ட்டிஸ்ட்டுகள் 'ஆஹா, என்னமா நாம நடிச்சிருக்கோம்’னு தங்களைத் தாங்களே பாராட்டிக்கிறாங்க!''
வதந்திகள் கிளம்பும் இடம்!
''ஒரு காலத்துல நான் குண்டா இருந்தேன். அது என்னுடைய ரசிகர்களுக்குப் பிடிக்கல. வாஸ்தவம்தான். அதை நானும் ஒப்புக்கிறேன். பிறகு, நடுவுல ஜான்டிஸ்ல படுத்து இளைச்சுப் போயிட்டேன். இப்போ 'ஃப்ளூ’ வந்து ரொம்ப இளைச்சுப் போயிருக்கேன். இளைச்சுப்போனா லும், 'சாவித்திரிக்கு என்னமோ வியாதி’னு ஒரு வதந்தி.
இந்த மாதிரி வதந்திகள் கிளம்பற இடம் எது தெரியுமா? பாண்டி பஜார். ரொம்ப மோசமான இடம். சினிமாவில் சான்ஸ் கிடைக்காத சில பேர்வழிகள் இங்கே அரட்டை அடித்துக்கொண்டு கிளப்பிவிடுகிற சங்கதிகள்தான் வதந்திகளாக உருவாகின்றன!''
உத்தரவுகள் போட்டதில்லை.
''நான் ஒரு படத்தில் நடிச்சிட்டு இருந்தபோது, ஒரு புதுமுகத்தை என்னோடு நடிக்கிறதுக்கு அழைச்சிட்டு வந்தாங்க. இதைக் கேள்விப்பட்ட என் பெரியப்பா, 'புதுமுகமா, வேண்டாம். நிறைய டேக் எடுக்க வேண்டி இருக்கும். இதை நீ ஏத்துக்காதே’ என்று என்னிடம் சொன்னார். 'பெரியப்பா! நானும் ஒரு காலத்தில் புதுமுகமா இருந்தவதான்... ஞாபகம் வெச்சுக் குங்க’னு பெரியப்பாகிட்ட சொல்லி, பிறகு அந்தப் புதுமுகத்துக்கும் தைரியம் கொடுத்தேன். யாருக்கும் கெடுதல் செய்யணும்கிற எண்ணம் எனக்குக் கிடையாது.
எங்க காலத்துல 'இந்த ஆர்ட்டிஸ்ட்டைப் போடு, அந்த ஆர்ட்டிஸ்ட் வேண்டாம்’ என்ற உத்தரவுகள் எல்லாம் இருந்தது இல்லை. இப்போ சொல்லவே வேண்டாம்.
என்ன தைரியம்?
இப்போ வர்ற படங்களுக்கு கதாநாயகிகள் 'கிளாமரா’ இருந்தாப் போதும். ஜீன்ஸ், பெல்பாட்டம், மினி ஸ்கர்ட் எல்லாம் போட்டாப் போதும். நான் நடிச்ச வரை பாவாடை, தாவணி, புடவை இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும். அதான் எங்க லிமிட்!
ஒருநாள் திடீர்னு தயாரிப்பாளர் ஒருத்தர், 'ஸ்டன்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறேன். நடிக்கிறீங்களா?’னு கேட்டார். நானே முன் கோபக்காரி... எனக்குக் கோபம் வரக் கேட்கவா வேண்டும்? என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்? இந்த மாதிரி ரோலுக்கு விஜயலலிதா, ஜோதிலட்சுமி இருக்காங்க... போட்டுக்கங்க’னு சொல்லி, ஒரு கப் காபி கொடுத்து அனுப்பிவைத்தேன்!''

- Vikatan Article

No comments:

Post a Comment