Thursday, March 24, 2016

உணவின்றி அமையாது உலகு - 3

- vikatan

உணவின்றி அமையாது உலகு - 3

நாம் உட்கொள்ளும் உணவு, செரிமானம் ஆகி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாக மாற்றப்பட்டு உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உண்பதற்கு முன்பு, வெறும் பொருளாகக் காட்சிஅளித்த உணவு, உட்கொண்டதும் நம் உடலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறுகிறது. இவ்வளவு முக்கியமான உணவுக்கு, நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

உணவை அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு அணுகி இருந்தோமானால், ரசாயனக் கலப்படம் வரை வந்திருக்க மாட்டோம். இன்னொருவர் சாப்பிடும் உணவின் மீதான அலட்சியம் மற்றும் லாபவெறிக்காக, நஞ்சுகளைக் கலக்கும் அளவுக்குக் கலப்படம் பெருகியிருக்காது.

உணவுக் கலப்படம் என்பது ஏதோ இப்போது திடீரென உருவான விஷயம் இல்லை. உணவுப் பொருட்களை விற்கும் பழக்கம் தொடங்கிய காலத்திலேயே, கலப்படமும் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் காலத்து கலப்படத்துக்கும் நவீன காலத்துக் கலப்படத்துக்கும் மிக முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது.

விலை உயர்ந்த உணவுப்பொருளோடு, விலை குறைந்த உணவுப் பொருளைக் கலப்படம் செய்வார்கள். தேயிலைப் பொடியில் புளியங்கொட்டையை அரைத்துக்  கலப்பது போன்றவைதான் அந்தக் காலத்துக் கலப்படங்கள்.

ஆனால், இப்போது கலப்படம் என்பது பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. விற்கும் உணவுப் பொருளோடு எதை வேண்டுமானாலும் கலந்துவிடலாம். கலக்கப்படும் பொருள் உணவுப் பொருளாக இருக்க வேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை; அதைச் சாப்பிடும் மனிதர்களின் உடல்நலம் பற்றியும் கவலை இல்லை; கலப்படத்தின் நோக்கம்,  வியாபாரமும் அதீத லாபமும் மட்டும்தான்.

உலகின் எல்லா தொழில்களிலும் அறம் குறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உணவுத் துறையிலும், மருத்துவத் துறையிலும் அறம் குறைந்துவிட்டால், என்ன நடக்கும்? மனிதர்கள் அனைவரும் நோயாளிகளாக மாற்றப்படுவார்கள். இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இதழில், தலைக்குத் தேய்ப்பதில் இருந்து சமையலில் பயன்படுத்துவது வரை நாம் பயன்படுத்தும் மிக முக்கியமான பொருளான தேங்காய் எண்ணெயில் செய்யப்படும் கலப்படத்தைப் பார்ப்போம்.

தேங்காய் எண்ணெயைக் குளிர்ச்சிக்காகத் தலைக்குப் பயன்படுத்துகிறோம். இதன் மருத்துவக் குணங்களுக்காக சமையலில் பயன்படுத்துகிறோம். இந்தத் தேங்காய் எண்ணெய் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

‘இதென்ன வேடிக்கையான கேள்வியாக இருக்கிறது? தேங்காயில் இருந்துதான் தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறார்கள்’ என்று நீங்கள் பதில் சொன்னால், உங்களுக்கு இன்னொரு கேள்வி. அப்படி என்றால், தேங்காய் விலை கூடும்போது எல்லாம் தேங்காய் எண்ணெய் விலையும்கூட வேண்டுமே. அப்படிக் கூடுகிறதா? இல்லை. அதற்குப் பதிலாக பெட்ரோலியப் பொருட்களின் விலை கூடும்போது, தேங்காய் எண்ணெயின் விலையும் கூடுகிறது.

பெட்ரோலுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு? வைத்தியர் மோகனன் ஆய்வுகள் தேங்காய் எண்ணெய் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன. பூமியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயில் இருந்து வெள்ளை பெட்ரோல், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்ட பிறகு, எஞ்சும் கழிவுதான் லிக்யூட் பாரஃபின் (Liquid paraffin) . இது கலங்கலான எண்ணெய் போன்ற திரவம். இதை, ‘மினரல் ஆயில்’ என்றும், ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்தத் திரவத்தை பிளீச்சிங் கெமிக்கல் கொண்டு நிறமற்றதாக மாற்றுகிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்தால், ஏதோ ஒரு எண்ணெய் மாதிரி நமக்குத் தெரியும். அதனுடன், தேங்காய் எண்ணெயின் செயற்கை மணம் (ஃப்ளேவர் எசென்ஸ்) கலந்தால், தேங்காய் எண்ணெய் ரெடி. அந்தக் காலத்து கொழும்புத் தேங்காய் எண்ணெய் போல மணமும் தூய்மையும் நம்மை ஈர்ப்பதாக இருக்கும். இது செயற்கை எண்ணெய் என்பதும், ரசாயனத்தால் உருவாக்கப்பட்டது என்பதும், இதற்கும் தேங்காய்க்கும் தொடர்பு இல்லை என்பதும் நமக்குத் தெரியாது. டப்பாவில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான எண்ணெய்களில் இந்த லிக்யுட் பாரஃபின் கலப்பு இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்... குளிர்ச்சிக்காகத் தலையில் தேய்க்கும் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக, மண்ணெண்ணெயைத் தேய்த்தால் உடல் என்ன ஆகும்? அதைப் பயன்படுத்தி சமையல் செய்தால், குடல் என்ன ஆகும்?

முன்பு தேங்காய் எண்ணெயில் வடை சுட்டு, அது மிச்சமாகிப் போனால் என்ன ஆகும் நினைவிருக்கிறதா? ஊசிப்போகும். அதாவது, வடைக்குள்ளிருந்து நூல் நூலாக பூஞ்சை பிடித்துப்போகும். இப்போது, அப்படிப் பார்க்க முடிகிறதா? உயிர்ச்சத்துள்ள எண்ணெயில் இருந்துதான், இப்படிப் பூஞ்சை வளரும்.இந்த செயற்கை எண்ணெயில் இருந்து வளராது. குளிர் காலங்களில் தூய தேங்காய் எண்ணெய் உறைந்துபோகும். இந்த ரசாயன எண்ணெய் உறைந்துபோவது இல்லை. இவற்றை மட்டும் அளவுகோல்களாக வைத்து ரசாயன எண்ணெய்களைக் கண்டுபிடித்துவிட முடியாது.

பல கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளிலேயே மினரல் ஆயில் சேர்க்கப்பட்டிருப்பதை லேபிளில் தெரிவிக்கிறார்கள். இன்னும், பல கம்பெனிகள் தூய எண்ணெய் மட்டுமே இருப்பதாகச் சத்தியம் செய்கிறார்கள். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான எண்ணெய்களை ஆய்வு செய்த வைத்தியர் மோகனன், தர நிர்ணய ஆய்வுக்கூடங்கள் மூலம் ரசாயனக் கலப்பை உறுதி செய்திருக்கிறார்.

இது தேங்காய் எண்ணெயோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. செயற்கை மணம் எந்தப் பொருளுக்கு எல்லாம் கிடைக்குமோ, அத்தனை பொருட்களும் ரசாயனத்தன்மையோடு தயாரிக்கப்படுகின்றன. நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில், நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள், பெட்ரோலிய ரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. எல்லா எண்ணெய்களும் எப்படித் தயாராகின்றன என்று தொடர்ந்து பார்க்கலாம்.

- பயணம் தொடரும்.

எண்ணெய் அறிந்தால்

பொதுவாக, உணவில் எண்ணெய் பயன்படுத்துவது எந்த அளவுக்கு நல்லது? ‘உணவுப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயைச் செரிக்கும்திறன் நம் தோலுக்கு மட்டுமே உண்டு’ என்கிறது, இயற்கை மருத்துவம். அதனால்தான் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற மரபுவழி மருத்துவங்களில் எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்து, சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தன. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், வாரம் தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்ததும் இதனால்தான். உடல் செரிக்க வேண்டிய எண்ணெயை, குடலுக்குக் கொடுத்தோமானால் என்ன ஆகும்? செரிமானத்தில் எஞ்சும் கழிவுகளில், பிசுபிசுப்பான அமிலத்தன்மையுள்ள கழிவுகள் உடலில் சேர்வதற்குக் காரணமாக அமையும். எனவே, முடிந்த அளவு எண்ணெயின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது.

நேரடியாக எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் சத்துக்களை, எண்ணெய்ப் பயன்பாடு இல்லாமலேயே பெறுவதற்காக, நம் முன்னோர்கள் ஒரு டெக்னிக் வைத்திருந்தார்கள். எண்ணெய்த்தன்மை உள்ள உணவுப் பொருட்களை நேரடியாகச் சாப்பிடுவதுதான் அந்த முறை. உதாரணமாக, தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறுவதற்காக, தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது. இப்படிச் சாப்பிடும்போது, உணவுப் பொருட்களில் இருக்கும் எண்ணெய்த்தன்மையை உடலே ஜீரணம் மூலம் பெற்றுக் கொள்ளும்.

சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு மிகவும் சிறந்தவை. உலகில் பெரும்பாலான நாடுகளில் மரபாகப் பயன்படுத்தப்பட்டு வந்த தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை, அமெரிக்காவின் சோயா எண்ணெய் பிரசாரம் பின்னுக்குத் தள்ளியது. அந்தந்த நாடுகளில் வழக்கத்திலிருந்த எண்ணெய் பயன்பாடு மாறி, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக ரீஃபைண்ட் ஆயில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது

- vikatan

உணவின்றி அமையாது உலகு!

Vikatan document

உணவின்றி அமையாது உலகு!

ர் அறிஞர் குழந்தைகளின் மனோபாவம் பற்றி அறிவதற்காக அவர்களின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஏதாவது வரைந்து தருமாறு கேட்டாராம். குழந்தைகள் வரைந்து தந்த விதவிதமான ஓவியங்களில் ஓர் ஒற்றுமையைக் கண்டு வியந்தார்.

அது என்ன ஒற்றுமை தெரியுமா? ஒரு வட்டத்தை முதலில் வரைந்துகொள்ளும் குழந்தை கள் அதைச் சுற்றி இன்னும் சில வட்டங்களையோ கோடுகளையோ கிழித்து ஓவியமாக மாற்றியிருந்தார்கள். குழந்தைகளைப் பற்றி அறிவதற்கான அவருடைய ஆய்வு கடைசியில் எதில் முடிந்தது தெரியுமா? வயிற்றில்தான்.

எல்லாக் குழந்தைகளும் வரையத் தொடங்கிய முதல் வட்டம் நம்முடைய வயிறுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏனென்றால், குழந்தைகள் தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதும் சரி, வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் சரி வயிற்றை மையமாகக்கொண்டுதான் நம் சிந்தனைகள் தோன்றுகின்றனவாம்.

வாழ்க்கையின் மையமே வயிறுதான் என்பதைக் குழந்தைகள் எவ்வளவு அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நமக்கும் இந்த உண்மை தெரியும்தான். ஆனால், சகல உயிரினங்|களிலும் வயிற்றைக் கெடுத்துக்கொள்வதில் முன்னிலை வகிப்பது மனிதர்கள் மட்டும்தான். எல்லா உயிரினங்களும் தன் தேவைக்குச் சாப்பிடுகின்றன. நாம் பசிக்கும் சாப்பிடுகிறோம்; ருசிக்கும் சாப்பிடுகிறோம்.

ருசிக்குச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், ருசிக்குச் சாப்பிடும்போது அளவைத் தாறுமாறாக மீறுகிறோம். அளவை மீறுவதோடு நிறுத்திக்கொள்வது இல்லை. ருசிக்காகப்  பசியையும் மதிப்பது இல்லை. சரி, இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

எது இயற்கையான ருசி, எது செயற்கையான ருசி என்ற பிரிவினையே இல்லாமல், நாக்குக்கு நன்றாக இருக்கிறது எனும் ஒரே காரணத்துக்காக நச்சுக்களைக்கூட சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். செயற்கையான சுவையை முன்னிறுத்தி, நம் உணவுகளில் கூடுதல் சுவைக்காக ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன.

உணவுக் கலப்படம் குறித்து நாம் அறிந்துகொள்வதற்கு முன்னால், கேரளா வரை ஒரு பயணம் போய்வர வேண்டும். ஏனென்றால், தென் இந்தியாவில் உணவுக் கலப்படம் குறித்த விழிப்புஉணர்வு வேகமாகப் பரவிய இடம் கேரளா. உணவின் தன்மை பற்றி இரு மலையாளிகள் பேசிக்கொள்ளும்போது, ‘இவர் பெரிய மோகனன் வைத்தியர். உணவைப் பற்றி பேச வந்துட்டார்’ என்கிற சொல்லாடலை நாம் கேட்க முடியும். அந்த அளவுக்கு உணவு பற்றிய விழிப்புஉணர்வுப் பணியில் செயல்பாட்டாளராக இருப்பவர் மோகனன் வைத்தியர்.

கேரளா, ஆலப்புழாவில் இருக்கும் மோகனன் வைத்தியர், ஆயுர்வேத மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாத்தாவிடம் பயின்ற மருத்துவம் ஒருபுறம் இருந்தாலும், இவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்படவில்லை. இந்தியா முழுவதும் தொழில் தொடர்பாக பயணம் மேற்கொண்ட மோகனன், பிற்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்துக்குத் திரும்புவது என முடிவு செய்தார்.

தாத்தாவிடம் பயின்றபடி, மூட்டு வலிக்கான தைலம் ஒன்றைத் தயாரித்து, ஒரு நோயாளிக்குக் கொடுத்திருக்கிறார். சிறுவயதில், தன் தாத்தா காலத்தில், அப்பா காலத்தில் தயாரிக்கப்பட்ட அதே தைலம் இப்போது தயாரிக்கப்பட்டபோது, அதன் ஆற்றல் குறைந்திருப்பதை உணர்ந்தார். தயாரிப்பு முறைகள், மூலப்பொருட்கள் என எல்லாம் சரியாக இருந்தும் வலி குறைக்கும் தன்மை மட்டும் குறைந்து போயிருப்பதைக் கண்டார் மோகனன் வைத்தியர்.

மனித உடலின் தன்மை மாறியிருக்கிறதா? அல்லது தான் தயாரித்த மருந்தின் தன்மை மாறியிருக்கிறதா என ஆராய்ந்தார். சில ஆண்டுகள் முயற்சிக்குப் பின் ஓர் உண்மை அவருக்குப் புரிந்தது. அதாவது,  மூலப்பொருட்களிலேயே கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு மருந்தைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் எண்ணெய், தேன், பால் போன்ற அடிப்படைப் பொருட்களின் தன்மை கலப்படத்தால் மாறியிருப்பதைக் கண்டுகொண்ட வைத்தியர் மோகனன், எந்தெந்த பொருட்களில் என்னென்ன விதமான கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்ற ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வு போகும் பாதை அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்தது. நாம் அன்றாட உணவுக்காக வீட்டுச் சமையல் அறையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள், மிக மோசமான ரசாயனக் கலப்படங்களால் தயாராக்கப்பட்டவை எனும் உண்மை அவரைப் புரட்டிப்போட்டது.

இப்போது அவர் உணவு குறித்த விழிப்புஉணர்வை,  பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று விளக்குகிறார்.

அவர் கிளினிக்குக்கு முதன் முதலாகச் செல்லும் நோயாளி, ஒரு முழு நாளை அதற்காகச் செலவிட வேண்டும். நோயாளி குறித்த நேரத்துக்கு வந்தவுடன், உணவுக் கலப்படம் குறித்த தன் விளக்கத்தைக் கூறுகிறார். பிறகு, அவருடைய பெட்டியைத் திறந்து ரசாயனங்களக் கலந்து, நாம் கேட்கிற உணவுப் பொருட்களைத் தயாரித்துக் காட்டுவார். அதுவும், நாம் கேட்கிற கம்பெனியின் பொருளைப் போன்றே! பால் முதல் தேங்காய் எண்ணெய் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பு என்று அவர் தயாரித்துக்காட்டும் பொருட்களைப் பார்க்க நமக்கே பயமாக இருக்கும்.

வைத்தியருடைய தயாரிப்பைப் பார்த்த பின்பு, எந்த உணவுப் பொருளைப் பார்த்தாலும், இது உண்மையானதா அல்லது ரசாயனத் தயாரிப்பா என எழும் சந்தேகத்தை நம்மால் தவிர்க்க முடியாது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் யாரும் அவர் தயாரித்துக்காட்டுகிற பொருட்களைப் பயன்படுத்த மாட்டார்கள். ‘யூடியூப்’ போன்ற சமூக வலைதளங்களிலும் அவருடைய உரைகள், செய்முறைகள் மலையாளத்தில் கிடைக்கின்றன.

தன்னிடம் வரும் நோயாளிகள் பற்றி மோகனன் வைத்தியர் சொல்லும் விஷயம் இன்னும் அதிர்ச்சியானது. “பெரும்பாலான நோயாளிகளுக்கு நான் சொல்லும் உணவுகளை நிறுத்தியவுடன், அவர்களுடைய நோய்கள் குணமாகிவிடுகின்றன. அவர்களுக்குத் தனியாக சிகிச்சை எல்லாம் தேவை இல்லை. உணவை மட்டும் சரி செய்தாலே போதும்.” இதுதான் அவர் தரும் செய்தி.

இன்று ஏற்படும் எல்லா நோய்களுக்கும் என்ன காரணம்? என ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், முதல் இடத்தில் நம் நவீன உணவுகளை வைத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்.

‘ரசாயனம், ரசாயனம் என்று கூறுகிறீர்களே? அப்படி என்ன உணவுகளைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம்?’ என நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள்... பழைய சாப்பாட்டு வரலாறுகளை மாற்றி எழுதிய நவீன உணவுகள் பற்றிப் பார்ப்போம்.

- பயணம் தொடரும்

படம்: ம.நவீன்

புற்றுநோய் ஆபத்து!

இன்று, உலகையே அச்சுறுத்தும் நோயாக இருப்பது புற்றுநோய்தான். முன்பு, யாராவது ஓரிருவருக்குத்தான் புற்றுநோய் இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது புகை, மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவருக்குக்கூட புற்றுநோய் வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், நம் உணவுகளின் ரசாயனக் கலப்படம்தான். ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்தின் சமையலறையில் உள்ள பொருட்களில், பெரும்பாலானவை ரசாயனக் கலப்பு உள்ளவைதான். இவை போதாது என்று, பாக்கெட் உணவுகள் வேறு.

மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும்!

மஞ்சள் தூளை நாம் பேச்சுவழக்கில் ‘மஞ்சப்பொடி’ என்போம் இல்லையா? அது உண்மையாகிவிட்டது என்கிறார் மோகனன் வைத்தியர். மஞ்சள் கிழங்கை உலர்த்தி, அரைத்துப் பெறப்படுவதுதான் மஞ்சள் தூள். ஆனால், இப்போது நமக்குக் கடைகளில் கிடைப்பது மஞ்சப்பொடிதான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? வேறு ஒன்றும் இல்லை. மஞ்சள் தூள், மஞ்சள் கிழங்கிலிருந்தும், மஞ்சப்பொடி வெறும் நிறம் தரும் ரசாயனத்திலிருந்தும் வருகின்றன. உணவுகளில் நிறம் கூட்டுவதற்குப் பல்வேறு வண்ணப்பொடிகள் இருக்கின்றன. அதில், மஞ்சள் நிறம் தரும் ரசாயனக் கலவையைக் கலந்து தயாரிக்கப்படுவைதான் இன்று உள்ள பெரும்பாலான மஞ்சள் பொடிகள். இவை உணவுப்பொருள் அல்ல. வெறும் செயற்கை நிறம் தரும் பொருள்.

செயற்கை மிளகாய்ப்பொடி!

மிளகாயைக் காயவைத்து, அரைத்துச் செய்யும் மிளகாய்ப் பொடிக்குப் பதிலாக, அதிக காரத்தைத் தரும் ரசாயனப் பொருளைக் கலந்து, செயற்கை சிவப்பு நிறமும் கலந்து தயாரிக்கிறார்கள். மிளகாய்த் தூள். நல்ல மிளகாய்ப்பொடியைக் கண்டுபிடிக்கும் டெக்னிக்காக அதன் நிறமும் காரமும் சொல்லப்படும். இவை இரண்டையுமே செயற்கை ரசாயனங்களால் கொண்டுவர முடியும் என்பதுதான் அதிர்ச்சி!

- vikatan document

உணவின்றி அமையாது உலகு!

- vikatan document

உணவின்றி அமையாது உலகு!

அ.உமர் பாரூக், அக்கு ஹீலர்

உணவு / சாப்பாட்டுச் சரித்திரம்

ணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி  ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்! 

உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன் தோன்றியது உணவுதான். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.  நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும்,  உணவைச் சமைத்துச் சாப்பிடும் முறையைக் கற்றுக்கொண்டான். ஓர் இடத்தில் குடியேறி நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, விவசாயத்தைக் கற்றுக்கொண்டான். வரலாறு முழுக்க நடந்த பல போர்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் உணவும் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. உணவின் வரலாறு என்பது உண்மையில் மனிதகுல வரலாறே! 

‘உணவு’ என்ற சொல்லின் மீது, பிற மக்களுக்கு இல்லாத கூடுதல் பற்று தமிழர்களுக்கு இருக்கிறது.  தமிழில் உணவு என்ற சொல்லை ‘அறுசுவை உணவு’ என முன்னொட்டு சேர்த்தே பயன்படுத்துவோம். உணவு எப்படிப்பட்டது, எதனால் ஆனது என்பவற்றை இந்தச் சொல் குறிக்கிறது.

‘உணவு’ எனும் சொல் நம் வழக்கத்தில் உடல்நலத்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் சுவாசிப்பதும் உறங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தவிர்க்க முடியாதது சாப்பிடுவது. அதனால்தான், நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்று உணவிலேயே உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையைப் போற்றினர். உயிரின் ஊறுபாடு தொடங்குவது உணவின் மாறுபாட்டால்தான். என்ன நோய்க்கு, என்ன உணவு சாப்பிடலாம் என்பதில் தொடங்கி, எந்தெந்த உணவு வகைகள் யார் யாருக்குப் பொருந்தாது என்பது வரை மிக விரிவான உணவுக் கோட்பாடுகள் தமிழ் மரபில் உள்ளன.

‘அமெரிக்கக்காரன் மின்சாரம் கண்டுபிடிச்சான், சீனாக்காரன் பேப்பரைக் கண்டுபிடிச்சான்... தமிழன் சாப்பாட்டைக் கண்டுபிடிச்சான்’ என வேடிக்கையாகச் சொல்வார்கள். சரி, விஷயத்துக்கு வந்துவிடலாம். உணவைப் பற்றி இவ்வளவு அறிந்த, மூத்தகுடிகளான நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஏதும் அறியாதவர்களாக, உலகின் ஆகப்பெரிய நோயாளிக்கூட்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறோம்.

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நமது விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனை ஒழுங்குபடுத்தவும் ஆங்கிலேய அரசின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து அகஸ்டஸ் வால்கர் என்பவர் அனுப்பப்பட்டார். இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு “இந்தியர்களிடம் இருந்து நீர் மேலாண்மையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் அவர்களுக்குக் கற்றுத்தர நம்மிடம் எதுவும் இல்லை” என்றார். ஆனால், நம்முடைய இன்றைய நிலை தலைகீழானது. உணவு உற்பத்தியில் மட்டும் அல்லாமல், அவற்றைச் சமைப்பது முதல் சாப்பிடுவது வரை அனைத்தும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. விதை நெல்லை எடுத்து, பயிர் விதைக்கும் காலம் போய், விதைத்தன்மையே இல்லாத பயிர் ரகங்கள் வந்துவிட்டன. ரசாயனக்கலவையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை, கூடுதல் நஞ்சுகளைக் கலந்து டப்பாவில் அடைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாமும் எந்த பிரக்ஞையும் இல்லாமல், அதை க்யூவில் நின்று வாங்கி, உண்கிறோம். இன்ஸ்டன்ட் சமையல் மூலம் கூடுதல் விஷத்தன்மையை  உணவில் ஏற்றிக்கொண்டே ஆரோக்கிய வாழ்வுக்கு ஆலோசனை கேட்பவர்களாக மாறி இருக்கிறோம்.

சுழலும் இந்தப் பூமிப்பந்தின் மைய அச்சாகத் திகழ்வது உணவுதான். உணவென்னும் முதுகெலும்பை மனிதர்கள் இழந்துவிட்டால் உடல் நலம் எப்படி நிமிர்ந்து நிற்கும்? ‘லாபம்’ என்ற ஒற்றைச் சொல் உலகத்தின் விளை நிலங்களையும் நம் உணவு வகைகளையும் தின்று செரித்துக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்த நவீன உலகில் பின்னோக்கித் திரும்புவது சாத்தியம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், மரபுவழி அறிவோடு நவீனத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும்தானே!

நம் இன்றைய உணவுகளை, நமது மரபான உணவு அறிவின் வழி நின்று, நவீன அறிவியலின் துணையோடு ஆராய்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொடங்கலாமா? எடுங்கள் உங்கள் தினசரி மெனுவை... ஒவ்வொரு உணவாக பகுத்துப் பார்க்கலாம்.

- பயணம் தொடரும்

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்...

மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பம் மற்றும் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பையும்,  அக்குபஞ்சரில் பட்டயம், அக்குபஞ்சர் மருத்துவ பட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். உணவு, உடல், மருத்துவம் குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதிவருகிறார். இதுவரை 20 நூல்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களில் சில மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர்’ கல்வி நிறுவனத்தின் முதல்வராகவும், தமிழ்ப் பல்கலைக்கழக அக்குபங்சர் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். பொதுமக்களுக்கான ‘வீட்டுக்கொரு மருத்துவர்’ பயிற்சியைத் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் இவரது கல்வி நிறுவனம் நடத்திவருகிறது

- vikatan document