Wednesday, March 23, 2016

இது மல்லையாக்களின் தேசம்!


- vikatan post

இது மல்லையாக்களின் தேசம்!

காட்சி - 1


தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலன்,  2011-ம் ஆண்டில் ஒரு தனியார் வங்கியிடம் இருந்து 3.8 லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கினார். கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியும் வந்தார். இதுவரை 4.11 லட்ச ரூபாய் திரும்பக் கட்டியிருந்தாலும் இன்னும் 1.30 லட்ச ரூபாய் மீதம் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகப் பணமுடை. அதனால் பணத்தைக் கட்ட இயலவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென போலீஸுடன் ஊருக்குள் நுழைந்த தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள், விவசாயி பாலனை வழிமறித்து கடன் தொகையைக் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். `இப்படி திடுதிப்புன்னு வந்து நின்னா எப்படிங்க?’ என அவர் கேட்க, எதிர்பாராதவிதமாக அவரை நடுரோட்டில் வைத்து ஊரார் பார்க்க அடித்து இழுத்துச் சென்றது போலீஸ். அவருடைய டிராக்டரையும் பறிமுதல்செய்து எடுத்துச் சென்றனர். 

காட்சி - 2 

டிசம்பர் 18-ம் தேதி, தன் 60-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா. இதற்காக மூன்று நாட்கள் கோவாவில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பல இசைக் கலைஞர்களும் நடன மங்கைகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் டாப் அரசியல்வாதிகளும் மீடியா பிரபலங்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில்தான், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏமாற்றிய ‘டிஃபால்ட்டர்’ என விஜய் மல்லையாவை அறிவித்திருந்தது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்ள வில்லை. கடந்து மூன்று மாதங்களாக அவர் இந்தியாவில் இருந்தபோதிலும், அவரை யாரும் நெருங்கக்கூட முடியவில்லை. இப்போது `அவர் அப்பவே லண்டனுக்குப் போயிட்டாரே?’ எனக் கையை விரிக்கிறது சி.பி.ஐ.
காட்சி - 3

மார்ச் 2015-ம் ஆண்டுடன் முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள்,  52,242 கோடி ரூபாய் வாராக் கடனை கணக்கில் இருந்து நீக்கியுள்ளன. அதாவது இந்தக் கடன் இனிமேல் வரவே வராது என்று அர்த்தம். இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு மட்டும் 21,313 கோடி ரூபாய். 6,587 கோடி ரூபாய் வாராக் கடனுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த இடத்திலும், 3,131 கோடி ரூபாயுடன் ஐ.ஓ.பி வங்கி அடுத்த இடத்திலும் இருக்கின்றன. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத `மாபெரும் கடன்கார ஏழை(?)களின்’ பட்டியலை ஆர்.பி.ஐ-யிடம் கேட்டபோது ‘எங்களிடம் அந்தத் தகவல் இல்லை’ என்று சொல்லி கைவிரித்திருக்கிறது. 

இந்த மூன்று காட்சிகளுக்கு ஒரு தொடர்பும் நீதியும் இருக்கின்றன. தொடர்பு - இந்தியாவில் நிறையப் பேர் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். நீதி - கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் உல்லாசமாக இருக்கலாம்; 

லட்சக்கணக்கில் கடன் வாங்கினால் அடிபட்டுச் சாகவேண்டியிருக்கும்.  

விஜய் மல்லையா... இன்று நேற்று அல்ல. அவரது ஆரம்பமே நிதி நிறுவன மோசடிதான். 1990-களில் மெக்டோவல் க்ரஸ்ட் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினார் மல்லையா. பொதுத்துறை வங்கிகளைவிட அதிக வட்டி தருவதாகக் கூறி நிதி வசூல் செய்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தனது சாராய கம்பெனியான யுனைட்டெட் பிரீவரிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு, முந்தைய மெக்டோவல் நிறுவனத்தின் பெயரை மாற்றி கோல்மால் செய்ய... அது பிரச்னையாகி, மல்லையா மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த வழக்கு இப்போது வரை நடைபெற்றுவருகிறது. 

அதன் பிறகு ஏராளமான வங்கிகளில் வகைதொகை இல்லாமல் கடன் வாங்கியிருக்கும் மல்லையா, மொத்தம் 17 பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 7,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். அது வட்டியுடன் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாயைத் தொடுகிறது. இந்தப் பிரமாண்டமான தொகையை அவர் இப்போது அல்ல... 2012-ம் ஆண்டில் இருந்தே திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்துவருகிறார். அவரிடம் இருந்து கடன் தொகையை மீட்பதற்காக, மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் ஒன்றிணைந்து மும்பையில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். 2012-ம் ஆண்டில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு மல்லையாவும் அழைக்கப் பட்டிருந்தார்.  ஆனால் அவர், தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், வருவதற்கு நேரம் இல்லை என்றும் கூறி, வரவே இல்லை. இவ்வளவுதான் அவர் வங்கிகளை மதிக்கும் லட்சணம்.
அவர் மோசடிக்காரர் என அறிவித்த வங்கிகள், கடனை வாங்கிவிட பின்னால் அலையோ அலை என அலைந்துகொண்டிருக்கிற இந்த நிலைமையில்கூட விஜய் மல்லையா ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். வங்கிப் பிரச்னை உச்சத்தில் இருந்த மார்ச் 1-ம் தேதிகூட அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். ஆனால் `மார்ச் 2-ம் தேதி வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்' எனச் சொல்கிறது சி.பி.ஐ.  
நீதிமன்றமும் வங்கிகளும் அவரிடம் இருந்து கடனை வசூலிக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் மல்லையா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? பல கோடி ரூபாய்க்கு குதிரை வாங்கினார். ஐ.பி.எல் போட்டிகளுக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்துக்கொண்டிருந்தார். கோவா கடற்கரையில் பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தார். கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடிக்கொண்டிருந்தபோது அவர் லட்சத் தீவுகளில் ஒரு தீவை வாங்கி, அதில் சொகுசு பங்களா கட்டி திறப்பு விழா நடத்தினார். நம் அரசு அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மல்லையா வாழும் இதே நாட்டில்தான் கடன் தொல்லை காரணமாக 2014-ம் ஆண்டில் 6,710 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்கள். (தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆய்வறிக்கை-2014).

நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு ஏன் இத்தனை கோடிகள் கடனாகக் கொட்டித் தரப்பட்டது? பதில் இல்லை. மூடப்பட்ட நிறுவனத்தின் கடனை ஏன் இதுவரை வசூலிக்கவில்லை? பதில் இல்லை. மல்லையா மீது ஏன் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை, ஏன் அவர் கைதுசெய்யப்படவில்லை? பதில் இல்லை. இது ஒரே ஒரு மல்லையாவின் கதை அல்ல. இந்தியாவில் இதுபோல் ஆயிரம் மல்லையாக்கள் அப்பாவி மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு அர்த்தராத்திரி பார்ட்டிகளில் பிஸியாக இருக்கிறார்கள். 

இவர்களில் பலரும் நாடாளுமன்ற இன்னாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லகடபடி ராஜகோபால்... விசாகப்பட்டினம் முன்னாள் எம்.பி-யான  இவர்தான் இந்தியாவின் மிகப் பெரிய கடன்காரர். இவர் நம்முடைய வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்த வேண்டிய தொகை 34 ஆயிரம் கோடி ரூபாய். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கிறார் ஒய்.எஸ்.சௌத்ரி (அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்). இவர் தற்போது மொரீஷியஸ் வங்கி ஒன்றில் 106 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களில் 73 சதவிகிதம் பேர் இதுவரை திருப்பி அடைக்கவில்லை.  

வீட்டுக்கடன் கட்டுகிறவர்களுக்குத் தெரியும், திருப்பிச் செலுத்தாத மூன்றாவது தவணை என்பது மரண தண்டனைக்கு ஒப்பானது. 91-வது நாளில் இருந்து உளவியல் தண்டனைகள் தொடங்கும். 121-வது நாளில் உங்கள் வீட்டு வாசலில் கும்பல் கும்பலாக வங்கி ஆட்கள் வந்து நிற்பார்கள். 

151-வது நாளில் மிரட்டல்கள் வரும். உங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து மானத்தை வாங்குவார்கள். இவை எல்லாம் சாதாரண நடுத்தர வர்க்கத்துக்கு. ஆனால் மல்லையா போன்றோர் 9,000 கோடி கடன் இருந்தாலும் அதைப் பற்றி கவலையே படுவது இல்லை. ஏனெனில், மல்லையாக்களைக் காப்பாற்ற எப்போதும் மீட்பர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதிகார மையங்களின் தரகர்களாகவும் இருக்கிறார்கள்!

No comments:

Post a Comment