Wednesday, October 7, 2015

800சிசியில் ஒரு மினி எஸ்யுவி...வந்துவிட்டது க்விட்!

- Motor Vikatan Article

கேம் சேஞ்சர்ஸ் - ரெனோ க்விட்தொகுப்பு: சார்லஸ்
‘இந்தியாவில் புதிய யுகத்தைத் துவக்குகிறோம்’ எனச் சொல்லி, க்விட் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெனோ. சுமார் 30 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக இருப்பது, மாருதியின் 800சிசி கார்கள்தான். 3 - 5 லட்சம் ரூபாய்க்குள் கார் வாங்குபவர்கள்தான் இந்தியாவில் அதிகம். அந்த மார்க்கெட்டுக்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் அழிவு இல்லை என்பதுதான் ஆல்ட்டோவின் வெற்றி சொல்லும் செய்தி.
மாருதியின் போட்டியாளரான ஹூண்டாய் இந்தியாவுக்குள் நுழையும்போது, ‘1,000 சிசிக்குக் குறைவான கார்களைத் தயாரிக்க மாட்டோம். எங்கள் கார்கள் பவர்ஃபுல்லாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்’ என்றார்கள். ஆனால், ஆல்ட்டோ கார்களின் அசாத்திய விற்பனை, ஹூண்டாயைக் கீழே இறங்கி வரவைத்தது. இயான் எனும் 800சிசி காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இந்த கார் விற்பனைக்கு வந்தபோது, ‘இது கேம் சேஞ்சராக இருக்கும்’ என்றது ஹூண்டாய். ஆல்ட்டோவைவிட உண்மையிலேயே ஸ்டைலான காராக இருந்தாலும், மாருதியின் நம்பகத்தன்மையைப் பெற முடியாததால், இயான் போட்டியில் இருந்து விலகி ஒதுங்கியது.
இந்தியாவில் மஹிந்திராவுடன் கூட்டணி அமைத்து லோகன் எனும் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது ரெனோ. லோகன் விற்பனையில் முந்தினாலும், மஹிந்திரா - ரெனோ இடையே நிகழ்ந்த பங்குபிரிப்புப் பிரச்னையால், லோகன் மார்க்கெட்டை இழந்தது. லோகனை மஹிந்திராவிடமே விட்டுக்கொடுத்துவிட்டு, தன்னுடைய உலகளாவிய கூட்டாளியான நிஸானுடன் இணைந்து சென்னையில் தொழிற்சாலை துவக்கியது ரெனோ. ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரகடத்தில் துவங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இருந்து, நிஸானின் மைக்ரா 2010-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. ரெனோவின் முதல் காராக ஃப்ளூயன்ஸ் 2011-ம் ஆண்டுதான் வெளிவந்தது. இதற்கு அடுத்து கோலியோஸ் விற்பனைக்கு வந்தது. ஆனால், இந்த இரண்டு கார்களுமே சென்னையில் தயாரிக்கப்படாத கார்கள் என்பதால், விலை அதிகமாக இருந்தன. அதனால், ரெனோ-நிஸான் ஒப்பந்தத்தின் அடிப்படையில்  நிஸான் மைக்ரா மற்றும் சன்னி கார்களை பல்ஸ், ஸ்காலா என்று பெயர் மாற்றி விற்பனை செய்யத் துவங்கியது ரெனோ. இதுவும் மார்க்கெட்டில் எடுபடவில்லை.
இதனால், 2012 ஜூலையில் முழுக்க முழுக்க சென்னையில் தயாரிக்கப்பட்ட டஸ்ட்டர் காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது ரெனோ. 8 - 12 லட்சம் ரூபாய்க்குள் வெளிவந்த மினி எஸ்யுவி காரான டஸ்ட்டர், மார்க்கெட்டில் செம ஹிட்! ரெனோ இந்தியாவில் விற்பனையைத் துவக்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் பார்த்தது, இந்த காரில்தான். டஸ்ட்டரின் வெற்றியை அப்படியே மினி ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் பெறத் திட்டம் போட்டுக் களத்தில் இறங்கிய ரெனோ, இப்போது க்விட் காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. மினி டஸ்ட்டராகவே விற்பனைக்கு வந்திருக்கும் க்விட்  எப்படி இருக்கிறது?
டிஸைன்
டஸ்ட்டர், க்விட் இரண்டு கார்களையும் அருகருகே நிற்க வைக்கும்போதே, இரண்டு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே டிஸைனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது புரிந்துவிடும். ரெனோ க்விட் காரை மினி எஸ்யுவி என்றோ, க்ராஸ்ஓவர் என்றோ அழைக்கவில்லை. அப்படிச் சொன்னால்... அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்களை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதால், எஸ்யுவி டிஸைனில் இருந்து உருவாக்கப்பட்ட ஹேட்ச்பேக் கார் என்று சொல்கிறது ரெனோ.
முன்பக்க வீல் ஆர்ச், மிரட்டும் க்ரில், பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ், பனி விளக்குக்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமான இடம் என பார்க்க எஸ்யுவி போலவே இருக்கிறது க்விட். எஸ்யுவி போல இருக்க வேண்டும் என்பதற்காக, காரின் பக்கவாட்டிலும், முன்பக்கத்திலும் கறுப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தாண்டி காருக்கு எஸ்யுவி லுக் கொடுக்கும் முக்கியமான விஷயம், க்விட்டின் கிரவுண்ட் கிளியரன்ஸ். மாருதி ஆல்ட்டோவைவிட 20 மிமீ அதிகமாக, அதாவது 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கிறது க்விட். 13 இன்ச் டயர்கள்தான். ஆனால் காரை நேரில் பார்க்கும்போது, மிக சிறியது போலத் தெரியவில்லை.
பட்ஜெட் கார் என்பதால், எங்கெல்லாம் செலவைக் குறைக்க முடியும் எனப் பார்த்துக் கடுமையாக உழைத்திருப்பது, காரை உற்றுக் கவனிக்கும்போது புரிகிறது. காரை ‘டோ’ செய்வதற்கான ஹூக் காரின் முன்பக்கத்தில் இருப்பதோடு, வீல்களில் நான்கு நட்டுகளுக்குப் பதிலாக மூன்று நட்டுகளும் அதற்கு பிளாஸ்டிக் மூடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க விண்ட் ஸ்கிரீனில் ஒற்றை வைப்பர், பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்வதற்கு மேனுவல் அட்ஜஸ்ட் என 3 லட்சம் ரூபாய் காருக்கான அத்தனை சிக்கனங்களையும் இதில் பார்க்க முடிகிறது. காரின் கதவுகளை வேகமாக மூடும்போதே, இது எவ்வளவு எடை குறைவான கார் என்பது புரிந்துவிடும். ஆல்ட்டோ, இயான் கார்களைவிட கிட்டத்தட்ட 50 - 60 கிலோ எடை குறைவான, வெறும் 660 கிலோ எடை மட்டுமே கொண்ட கார், ரெனோ க்விட். ‘எடை குறைவாக இருப்பதால், எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. இது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவுள்ள இந்திய அரசின் புதிய பாதுகாப்புச் சோதனைகளையும் வெற்றியுடன் கடக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என்கிறது ரெனோ.
உள்ளே!
இந்த செக்மென்ட்டிலேயே இந்த காரில்தான் இருக்கிறது என்று சொல்வது போல, க்விட்டில் சில முக்கியமான சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது ரெனோ. அதில், முதலில் இருப்பது டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர். பார்ப்பதற்கு அழகாக மட்டும் அல்ல, துல்லியமாகவும் இருக்கிறது. ஆனால், ஆர்பிஎம் அளவைக் காட்டும் டேக்கோ மீட்டர் இல்லை. ‘இவ்வளவு சின்ன காருக்கு இவ்வளவு பெரிய ஸ்டீயரிங் வீலா’ என்பதுபோலப் பெரிதாக இருக்கிறது. வழக்கமாக சின்ன கார்களில் இருப்பதுபோல, ரிவர்ஸ் கியர் ஐந்தாவது கியருக்குக் கீழே இல்லை. முதல் கியருக்கு அருகில் முன்பக்கம் தள்ளி மாற்றுவதுபோல வடிமைக்கப்பட்டுள்ளது.
 இதை Dogleg ரிவர்ஸ் கியர் என்பார்கள். இது பெரிய விஷயம் இல்லை என்றாலும், மாருதி கார்களை ஓட்டிப் பழகியவர்களுக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். மற்ற ரெனோ கார்களில் இருப்பதுபோல இல்லாமல், மாருதி கார்களில் இருப்பதுபோல இண்டிகேட்டர் ஸ்டாக் இடதுபக்கத்திலும், வைப்பர் ஸ்டாக் வலதுபக்கத்திலும் இருக்கின்றன.  மிக முக்கியமான சிறப்பம்சம், டஸ்ட்டரில் இருப்பதுபோன்ற ஜிபிஎஸ் வசதியுடன்கூடிய டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த டச் ஸ்கிரீனுக்குப் பதிலாக பின்பக்க பவர் விண்டோஸ், இரண்டு வைப்பர்கள், உள்ளுக்குள் இருந்தபடியே பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஏபிஎஸ் பிரேக் போன்ற முக்கியமான வசதிகளை ரெனோ கொடுத்திருக்கலாம். டச் ஸ்கிரீன் தேவைப்படுபவர்கள், அதை வெளிமார்க்கெட்டில் இருந்தே வாங்கிப் பொருத்திக் கொள்வார்களே!
டஸ்ட்டர்போல இல்லாமல் காருக்குள் தண்ணீர், ஜூஸ் பாட்டில்கள் வைக்க அதிக இடம் இருக்கின்றன. இரண்டு க்ளோவ் பாக்ஸ்கள் இருப்பதால், முக்கியமான பேப்பர் மற்றும் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், சீட்டுக்கு இடையில் வைக்கப்பட்டு இருக்கும் கப் ஹோல்டர்களில், பாட்டில்கள் வைக்கும் அளவுக்கு இடம் இல்லை.
ஆல்ட்டோ, இயான் போன்ற 800சிசி கார்களில் இருந்து க்விட் வித்தியாசப்படும் முக்கிய இடம், இடவசதிதான். 2,422 மிமீ வீல்பேஸ் கொண்ட க்விட் காரில் கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார, அதிக இடம் இருக்கிறது. இருக்கைகள் உயரமாக இருப்பதால் வெளிச்சாலையை நன்றாகப் பார்த்து ஓட்ட முடிகிறது. பின் இருக்கைகளில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு இடம் இருக்கிறது. டிக்கியில் 300 லிட்டர் கொள்ளளவுகொண்ட இடம் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. இது, மற்ற 800சிசி கார்களைக் காட்டிலும் மிக அதிகம். ஆனால், 28 லிட்டர் பெட்ரோல் டேங்க் என்பது மிகவும் குறைவு.
இன்ஜின்
799 சிசி, 3 சிலிண்டர், ஆல் அலுமினியம் இன்ஜினைக் கொண்டிருக்கிறது க்விட். இந்தியாவுக்குப் புதுவரவான இந்த இன்ஜின், அதிகபட்சமாக 53.26bhp சக்தியை வெளிப் படுத்துகிறது. இதன் டார்க் 7.34kgm.  பவர், டார்க்கில் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இணையாகவே இருந்தாலும் ரெனோ சொல்லும் மைலேஜ் மிரட்டுகிறது. ‘லிட்டருக்கு 25.17 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது ரெனோ. எடை குறைவாக இருப்பதால், இந்த மைலேஜ் சாத்தியமானது என்கிறது. ஆனால், இதை முழுமையாக டெஸ்ட் செய்தபிறகே உறுதிப்படுத்த முடியும்.
3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், காரை ஸ்டார்ட் செய்ததுமே அதிர்வுகளையும், அதிகப்படியான இன்ஜின் சத்தத்தையும் உணர முடிகிறது. ஆனால், இது ஆக்ஸிலரேட்டரை மிதிக்க ஆரம்பித்ததும் மறைகிறது. முதல் கியரில் மாற்றியதுமே தூக்கிப்போடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அடுத்தடுத்த கியர்களை மாற்றி வேகம் பிடிக்க ஆரம்பித்ததும்தான், இன்ஜின் ஸ்மூத்தாக இயங்க ஆரம்பிக்கிறது. அதிகப்படியான டார்க் 4,386 ஆர்பிஎம்-ல்தான் எட்டுகிறது என்றாலும், 80 சதவிகித டார்க்கை 1,200 ஆர்பிஎம்-லேயே கடக்க முடிகிறது. இதனால் நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் ஓட்டுவது ஈஸியாக இருக்கிறது. அதிகமாக ஆக்ஸிலரேட்டரை மிதிக்க வேண்டியது இல்லை. அதனால், மைலேஜ் அதிகம் கிடைக்கும்.
காரின் பெர்ஃபாமென்ஸை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, பவர் டெலிவரி சீராக இல்லை என்பதை உணர முடிகிறது. முதல் மற்றும் இரண்டாவது கியர்களுக்கு இடையே இடைவெளி குறைவாக இருக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கியருக்கான இடைவெளி மிக அதிகம். 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், இன்ஜினில் ஏற்படும் கரகர சத்தம் காருக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஐந்தாவது கியரில் வேகமாகப் பறக்கலாம் என நினைக்கும்போது, சத்தம் மட்டுமே அதிகமாக கேட்கிறதே தவிர, பவர் சட்டெனக் குறைந்துவிடுகிறது. 800சிசி கார் என்பதால் இந்த பெர்ஃபாமென்ஸ் குறைபாடுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கையாளுமை
ரெனோ கார்களில் ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை, எப்போதுமே சிறப்பாக இருக்கும். டஸ்ட்டரை ஓட்டியவர்களுக்கு இது புரியும். சின்ன கார் என்றாலும், அதே ஓட்டுதல் தரம் க்விட்டிலும் தொடர்வதுதான் பெரிய ப்ளஸ். மேடு பள்ளங்களை ஈஸியாகக் கடக்கிறது ரெனோவின் சஸ்பென்ஷன். இதனால் காருக்குள் அதிகப்படியான அலுங்கல் குலுங்கல்கள் இல்லை. எடை குறைவான கார்தான் என்றாலும் அதிக வேகங்களில் செல்லும்போது ஸ்டெபிலிட்டியும் சிறப்பாகவே இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், பாடி ரோல் இல்லை என்பதுதான். அதாவது, வளைவுகளில் வளைத்துத் திருப்பி ஓட்டும்போது, காருக்குள் இருப்பவர்களுக்கும் வளைந்து நெளிவார்கள். இதற்குப் பெயர்தான் பாடி ரோல். சில கார்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். ஆனால், ரெனோ க்விட்டில் பாடி ரோல் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
எலெக்ட்ரிக் அசிஸ்ட் கொண்ட பவர் ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக இருக்கிறது. இது, நகருக்குள் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு ஈஸியாக, ஜாலியாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது பயமாக இருக்கிறது. யு-டர்ன் எடுப்பது ஈஸியாக இல்லை. ஸ்டீயரிங்கைப் பலமுறை வளைத்துத் திருப்ப வேண்டியிருக்கிறது.
முதல் தீர்ப்பு
மாருதி எவ்வளவு காலம்தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது? மாருதியைத் தாண்டி அந்த விலையில் வேறு போட்டியாளர்களிடம் இருந்து கார்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கே ஒரு இடைவெளி இருக்கிறது என்பதைப் புரிந்து, அதற்கான காராக க்விட்டைக் கொண்டுவந்திருக்கும் ரெனோவின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அதேசமயம், மாருதி - மக்களிடம் 30 ஆண்டுகளாக வளர்த்திருக்கும் நம்பிக்கையை, சர்வீஸ் தரத்தை வெறும் மூன்றே ஆண்டுகளான ரெனோவால் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே! 
 
கார்  ஸ்டைலாக இருக்கிறது; அதிக இடம் இருக்கிறது; மைலேஜ் அதிகம் கிடைக்கும் என ப்ளஸ்கள் இருந்தாலும் பெர்ஃபாமென்ஸ் சுமார் ரகம்தான். மேலும், ஏற்கெனவே சொன்னதுபோல முதல் கார் வாடிக்கையாளர்கள் யாரும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த முடிவில் கார் வாங்குவது இல்லை. மனைவி, அப்பா, அண்ணண், உறவினர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லாரையுமே கேட்டு, குழப்பமாகி பிறகு தெளிவாகித்தான் கார் வாங்குகிறார்கள். மாருதியைத் தாண்டி தன் பக்கம் ஒரு வாடிக்கையாளரை வர வைக்க ரெனோ அதிகம் மெனக்கெட வேண்டும். அதைச் செய்தால் மட்டுமே ரெனோ க்விட், மார்க்கெட் லீடராக முதல் இடம் பிடிக்கும்.

1 comment:

  1. Casino Roll
    With 텍사스 홀덤 룰 a progressive jackpot payout of nearly $1 billion, the Casino Roll casino is one of the most 탱글다희 정지 reputable and 마블 슬롯 innovative casinos in the 페이백먹튀 world, with thousands  Rating: 3.7 · ‎9 votes

    ReplyDelete