Wednesday, April 30, 2014

உணவு யுத்தம்! - 1

 
'இட்லி சாப்பிடத்தான் லாயக்கு!’
 சாப்பாட்டுக்கு முன் இரண்டு சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்..!
எனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள பன்னாட்டு உணவகம் ஒன்றுக்குப் போயிருந்தேன். விடுமுறை நாள் என்பதால் காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிட உட்கார்ந்தோம். மெனு கார்டு கைக்கு வந்தது. புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
எனக்குத் தெரிந்த ஒரு உணவின் பெயர்கூட அதில் இல்லை. ஸ்பெகட்டி, சரமுரா, அல் பஸ்தோ, க்ரோகுயிட், பேகெட் என மாத்திரைப் பெயர்களைப்போல உணவின் பெயர்கள் பயமுறுத்தின. இதில் எந்த உணவைச் சாப்பிடுவது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது பிள்ளைகள் அவர்களாக சில உணவுகளைத் தேர்வு செய்தனர்.
அதில் ஒன்று, இத்தாலிய உணவு. மற்றொன்று, சீன உணவு. கூடவே பெயர் உச்சரிக்க முடியாத நான்கு ஐந்து உணவு வகைகள். இதை எல்லாம் எங்கே சாப்பிடப் பழகினார்கள்? யார் இவர்களுக்கு அறிமுகம் செய்தனர்? என்னைப் போலவே அன்றாடம் வீட்டில் இட்லியும் பொங்கலும் சோறும் சாம்பாரும்தானே சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு இதையெல்லாம் யார் அறிமுகப்படுத்தியது என்று வியப்போடு அவர்களைப் பார்த்தபடி, 'எப்படித் தேர்வு செய்தீர்கள்?’ என்று கேட்டேன். 'டி.வி. விளம்பரத்தில் காட்டுவார்கள்’ என்றனர். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை டி.வி. முடிவு செய்கிறது. இதுதான் காலக்கொடுமை.
உணவு வரும்வரை மெனு கார்டு எப்படி அறிமுகமானது என்பதைப் பற்றிப் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ''மெனு எனும் உணவுப் பட்டியலை அறிமுகம் செய்து வைத்தவர்கள் சீனர்கள். அந்தக் காலத்தில் சீன வணிகர்கள் பயண வழியில் உணவகங்களுக்கு வரும்போது அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து தங்களின் விருப்ப உணவைத் தேர்வு செய்வார்கள். அதற்காக நீண்ட உணவுப் பட்டியல் தரப்பட்டது.
மெனு என்ற சொல் பிரெஞ்சுகாரர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள Minutes. இதன் பொருள், 'சிறிய பட்டியல்’ என்பதாகும். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உணவுப் பட்டியல் ஃபிரான்ஸில் அறிமுகமானது.
உணவுப் பட்டியல் அறிமுகம் ஆவதற்கு முன்பாக உணவின் பெயர்களை ஒரு கரும்பலகையில் எழுதிப் போட்டிருப்பார்கள். இன்றும்கூட சிறிய உணவகங்களில் கரும் பலகைகளில்தானே உணவுப் பட்டியல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அது ஃபிரெஞ்சு நாட்டு மரபு. விரும்பிய சுவைக்கேற்ப பட்டியலில் உள்ள உணவைத் தேர்வு செய்தவன் பெயர்  la carte.
ரெஸ்டாரென்ட் என்பதும் ஃபிரெஞ்சு சொல்லே. ஃபிரெஞ்சு புரட்சியின் பிறகே ஃபிரான்ஸில் நிறைய உணவகங்கள் உருவாக ஆரம்பித்தன. சமையல்காரரை செஃப் என அழைக்கிறோம், இல்லையா? Chefde cuisine  என்ற ஃபிரெஞ்சு சொல்லில் இருந்தே அது உருவாகியது. அதன் பொருள் சமையலறையின் தலைவர் என்பதாகும்.
சூப், பிரதான உணவு, ஐஸ்கிரீம் அல்லது ஜூஸ், இனிப்பு வகைகள் கொண்ட மூன்றடுக்கு உணவு வகைகள் ரோமானியர்கள் அறிமுகம் செய்தவை. அது இன்று உலகெங்கும் பரவி 'திரி கோர்ஸ் மீல்’ எனப்படுகிறது,  மூன்றடுக்கு மட்டும் இல்லை. 21 அடுக்கு உணவு சாப்பிடுகிற பழக்கமும் விருந்தில் இருக்கிறது. ஒருவர் இதைச் சாப்பிட்டு முடிக்க குறைந்தபட்சம் மூன்றரை மணி நேரமாகும்.
பசி தூண்டக் கூடிய சூப்பை, உணவின் தொடக்கமாகக்கொள்வதை வழக்கமாக்கியவர்கள் ரோமானியர்கள். அதிலும் முட்டை ஊற்றிய சூப், பச்சைக் காய்கறிகள், அனைவரும் பகிர்ந்து குடிக்கும் மதுபானம் என அவர்கள் உணவு ஆரம்பிக்கும். இறுதியில் பழங்கள் சாப்பிடுவதோடு முடியும். ஃபிரெஞ்சு மற்றும் ரோமானியர்களின் உணவுப் பழக்கம்தான் இன்று உலகெங்கும் அதிகம் பரவியிருக்கிறது. இப்படியாக நமது சாப்பாட்டுக்குப் பின்னும்கூட அறியப்படாத வரலாறு இருக்கிறது'' என்று நான் சொன்னேன்.
நாங்கள் கேட்ட உணவு வந்தது. அதில் பலவும் வெண்ணை சேர்க்கப்பட்டவை. சோயா சாற்றின் மணம் வேறு. இனிப்பும் புளிப்புமான சுவை. எனக்கு அதில் கையளவுகூடச் சாப்பிட முடியவில்லை.
'தோசை கிடைக்குமா’ எனக் கேட்டேன். 'இட்லி, தோசை போன்ற எந்த உணவும் கிடையாது’ என்றார்கள். 'பன்னாட்டு உணவில் தமிழ்நாட்டு உணவுகளுக்கு இடம் கிடையாதா?’ என்று கேட்டபோது, 'இங்கே யாரும் அதைச் சாப்பிட வருவதில்லை’ என்ற பதில் கிடைத்தது.
பிள்ளைகளிடம் உணவு எப்படி இருக்கிறது என்று கேட்டேன். 'இப்போதுதான் நாங்களும் முதன்முறையாக சாப்பிடுகிறோம். என்னவோ போல இருக்கிறது’ என்றார்கள். அதற்கு அர்த்தம், பிடித்திருக்கவும் இல்லை; பிடிக்காமல் போகவும் இல்லை.
பசி பொறுக்க முடியாமல் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் மெனு கார்டை 10 முறை புரட்டிப் பார்த்துவிட்டேன். எதையும் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.  இங்கே சாப்பிடுகிறவர்களில் பெரும்பகுதி தமிழ் மக்கள், மத்தியதர வர்க்கத்து மனிதர்கள். இதை எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை மாறுபட்ட சுவைக்காக வந்து சாப்பிடுகிறார்களோ என்று சமாதானம் செய்துகொண்டேன்.
சென்னைக்கு நான் வந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பாதி உலகைச் சுற்றிவந்துவிட்டேன். ஆனால், மனதுக்குள் உள்ள கிராமவாசி அப்படியேதான் இருக்கிறான். வீட்டில் அறிமுகமான சுவை, எந்த வயதானாலும் எவ்வளவு ஊர் சுற்றினாலும் மாறிவிடாது தானே என நினைத்தபடியே பசித்த வயிறுடன் பில்லுக்குக் காத்திருந்தேன்.
நான்கு பேர் சாப்பிட்ட இரவு உணவுக்கு 6,500 ரூபாய். அந்த பில்லை உற்றுப் பார்த்தபடி இருந்தேன். கணக்குப் பார்க்காதே என்பதுபோல பிள்ளைகள் திரும்பிப் பார்த்தார்கள். உணவகத்தில் பில்லை சரிபார்ப்பது அநாகரிகமான செயல் என இந்தத் தலைமுறையினர் ஏன் நினைக்கிறார்கள்? உரிய பணத்தைத்தான் தருகிறோமோ எனத் தெரிந்துகொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? பில்லை நான் பார்த்தேன். 5,700 ரூபாய் உணவுக்கு பில். அவர்கள் உணவு பரிமாறியதற்கு, உணவகத்துக்கு வந்து சாப்பிட்டதற்கான சேவை வரி 600 ரூபாய். இந்த பில்லுக்கு டிப்ஸ் 200 ரூபாய் வைக்க வேண்டும். 6,500 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு. அடித்தட்டுக் குடும்பம் ஒன்று ஒரு மாதம் சாப்பிடுவதற்கான தொகை இது. உணவின் பெயரால் நடக்கும் கொள்ளையை ஏன் அனுமதிக்கிறேன் என்று மனசாட்சி கேட்டுக் கொண்டேயிருந்தது.
மகிழ்ச்சியைக் கொண்டாட சாப்பிடுவதைத் தவிர வேறு எதையும் அறிந்திராதவர்கள் நாம். இப்படித்தானே செலவு செய்தாக வேண்டும்?
வீட்டுக்குப் போய் பழைய சோறும் தயிரும் ஊறுகாயும் சாப்பிட வேண்டும் என்று பசி இழுத்துக்கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து சோறும் தயிரும் சாப்பிட்டபோது பிள்ளைகள், 'உங்களை எல்லாம் பன்னாட்டு உணவகத்துக்கு அழைத்துப் போனது வீண். நீங்கள் இட்லி சாப்பிடத்தான் லாயக்கு’ என்று கேலிசெய்து சிரித்தார்கள்.
இட்லி சாப்பிடுகிற மனிதன் ஏன் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான். இட்லி, சோறு, களி, கம்பங்கூழ், குதிரைவாலிச் சோறு என்று அவரவர் வாழ்விடத்தில் கிடைத்த உணவுகள் ஏன் இன்று பரிகசிக்கப்படும் உணவாக மாறிப்போய்விட்டன?
சோறு என்ற சொல்லை சென்னையில் பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. ரைஸ் என்றுதான் கேட்கிறார்கள். சாப்பிடுகிற சோறை சொல்வதற்கு கூசுகிற மனிதனை எப்படிப் புரிந்துகொள்வது? சோறு என்பதற்கு அடிசில், கூழ், அழினி, அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் தமிழில் உள்ளன.
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்கிறோம். கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் மூன்று வேறு சொற்களைக் கூறுகிறது பிங்கல நிகண்டு. ஊன் சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, மெல்லடை, கும்மாயம், ஊன்துவை அடிசில், புளியங்கூழ் என பழந்தமிழ் மக்கள் சாப்பிட்ட உணவுகள் என்னவென்றுகூட இன்றைய தமிழருக்குத் தெரியாது.
இட்லி சாப்பிடுவதால் உள்ள நன்மை இளந்தலைமுறைக்குத் தெரியாது. அது ஆவியில் வேகும் எளிமையான உணவு. அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் கிடைக்கின்றன.
திசுக்களைப் புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் 10 மடங்கும் அதிகரிக்கின்றன. உலகின் மிகச்சிறந்த காலை உணவில் இட்லி சிறந்த ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இட்லி எங்கிருந்து வந்தது? இந்தோனேஷியாவில் இருந்து என்கிறார் உணவு ஆராய்ச்சியாளர் கே.டி.ஆச்சா. பழந்தமிழ் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்பைக் காணமுடிவது இல்லை. கன்னடத்தில்தான் இட்லி செய்யும் முறை பற்றிய குறிப்பு முதலில் கிடைத்துள்ளது. கன்னடத்தில் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட லோகபகரா என்ற நூலில் இட்லி பற்றிய செய்தி காணப்படுகிறது. 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தமிழ்நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கக் கூடும் என்பது யூகம். அந்த நாட்களில் மோரில் உளுந்தை ஊறவைத்து அரைத்திருக்கிறார்கள்.
இட்லி சாப்பிடுகிற போட்டி ஒரு காலத்தில் திருவிழாக்களில் மிகவும் பிரபலம். இன்று கடைகளில் உடனடி இட்லி, தோசை மாவு விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் சில நிறுவனங்கள் மாவு புளித்துப் போகாமல் இருக்க போரிக் ஆசிட் மற்றும் ஆரூட் மாவு கலக்கிறார்கள். அது உடல்நலத்துக்குக் கெடுதி. காஞ்சிபுரம் இட்லி, ராமசேரி இட்லி... என 30-க்கும் மேற்பட்ட இட்லி விதங்கள் இருக்கின்றன. ஆனாலும், இட்லி என்றால் இளக்காரமாகதான் இருக்கிறது.
நகர வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது... எல்லா மாற்றங்களுக்கும் உடனடியாகப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே. அதில் முக்கியமானது உணவு!
கிராமத்தில் என் 10 வயதில் சாப்பிட்ட ஒரு உணவுகூட இன்று இல்லை. மாநகரில் அதே பெயரில் அதேபோல உணவு கிடைக்கிறது. ஆனால், அது பார்க்க வெண்பொங்கல் போல இருக்கிறது. வாயில் வைத்தால் குமட்டுகிறது. தண்ணீர் மாறிவிட்டது. நிலம் சீர்கெட்டுவிட்டது. செயற்கை உரமிட்ட தானியங்கள், காய்கறிகள், மோசமான எண்ணெய், அவசரமான உணவு தயாரிப்பு என எல்லாமும் தலைகீழாகிவிட்டது. சமைப்பது என்பது வேலையில்லை, அக்கறை. அதை பெண் மட்டும் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இணைந்து சாப்பிடுவதுபோல இருவருமே சமைக்கலாம் தானே?
உணவுப் பழக்கம் தானாக மாறவில்லை. அதைத் திட்டமிட்டு மாற்றுகிறார்கள். உணவுச் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிப்பதற்காக புதிய உணவு ரகங்களை அதன் நன்மை தீமை பற்றி எவ்விதமான கவலையும் இன்றி விற்றுத் தள்ளுகிறார்கள். காலனி ஆதிக்கம் தொடங்கிவைத்த இந்த மோசடி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
இன்று உணவு வெறும் சாப்பாட்டு விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சந்தை, கோடி கோடியாகப் பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக் களம். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அமெரிக்காவில் உட்கார்ந்து தீர்மானிக்கிறான். உணவு குறித்து விதவிதமான பொய்களைப் பரப்புகிறார்கள்.  நகரம், கிராமம் என, பேதமில்லாமல் ஜங்க் ஃபுட் எனப்படும் சக்கை உணவுகள் ஆக்கிரமித்துவிட்டன.
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் ஏமாற்றப்படுகிறோம்.
- VIkatan

Thursday, April 17, 2014

வாக்களிப்பது எப்படி?

'ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ... கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.
ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...
வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
அடையாள அட்டை!
18 வயது பூர்த்தி அடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்கு அளிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம். ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். சில காரணங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடியின் காரணமாக வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது. அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். இடம் பெயர்ந்து இன்னொரு தொகுதிக்குப் போய், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் பழைய வாக்காளர் அட்டையை ஆவணமாகக் காட்டலாம்.
வாக்காளர் சீட்டு!
'எங்கே வாக்களிப்பது?’ என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி... போன்ற விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டை அரசியல் கட்சியினரும் தருவார்கள். வாக்காளர் அடையாள அட்டையோ அல்லது வாக்காளர் சீட்டோ அல்லது அரசியல் கட்சிகள் தரும் 'டோர் ஸ்லிப்’போ... ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கலாம். இந்த மூன்றும் உங்களிடம் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்கள் நிச்சயம் வாக்களிக்க முடியும். உங்கள் புகைப்படத்துடன் கூடிய அரசு ஆவணங்களான பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்க முடியும்.
தேர்தல் அலுவலர்களால் விநியோகிக்கப்படாத வாக்காளர் சீட்டுகள், தேர்தல் தினத்தில் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சீட்டுகளை வழங்குவதற்காக வாக்குச்சாவடியிலேயே உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் அங்கே சென்று பெற்றுக்கொள்ளலாம். தவிர, நமக்கு ஏற்படுகிற சந்தேகங்களையும் அங்கே நிவர்த்தி செய்வார்கள்.
எங்கே வாக்குச்சாவடி?
மக்கள் அதிக தூரம் அலைய அவசியம் இல்லாமல், முடிந்தவரை அருகில் உள்ள இடங்களில்தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள்தான் வாக்களிப்பார்கள் என்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஇருக்காது. கடந்த தேர்தலைவிட இப்போது கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது என்பதை எஸ்.எம்.எஸ். மூலமும் தேடலாம். epic என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, சிறு இடைவெளிவிட்டு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவுசெய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உங்கள் வாக்குச்சாவடி குறித்த விவரம் பதிலாக வந்து விழும். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்களிக்கலாம்.
மின்னணு இயந்திரம்!
கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஐந்து மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி முன்பு இருக்கும். பேலட் யூனிட் வாக்காளர்கள் வாக்களிப்ப தற்கான மறைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும். கன்ட்ரோல் யூனிட் பகுதியில் இருக்கும் பட்டனை தேர்தல் அலுவலர் அழுத்திய பிறகுதான் பேலட் யூனிட்டில் உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய முடியும்.
வாக்குச்சாவடி நடைமுறைகள்!
வாக்குச்சாவடிக்குள் நீங்கள் நுழைந்ததும் முதலில் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையையோ, வாக்காளர் சீட்டையோ அல்லது பூத் சிலிப்பையோ காண்பிக்க வேண்டும். இவை இல்லாதபட்சத்தில் தேர்தல் கமிஷன் அறிவித்த ஆவணங்களில் ஒன்றைக் காட்டலாம். அந்த அலுவலர் தன்னிடம் வைத்திருக்கும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பார். பெயரையும் பதிவு எண்ணையும் உரக்கப் படித்துவிட்டு, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மீது ஒரு கோடு போடுவார். உங்கள் பெயரைச் சொல்லும்போது அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜென்ட்கள், தங்கள் வசம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் அதைச் சரிபார்த்துக்கொள்வார்கள்.
இந்தச் சரிபார்த்தல் முடிந்த பிறகுதான் நீங்கள் இரண்டாவது அலுவலரிடம் செல்ல முடியும். இரண்டாவது அலுவலர் உங்கள் இடது கை ஆள்காட்டி விரலின் மீது மையை அடையாளமாக இடுவார். அதோடு அவரிடம் இருக்கும் படிவத்தில் உங்கள் வாக்கு எண்ணை எழுதி அதில் உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொள்வார். கையெழுத்து போட முடியாதவர்களிடம் இடது கை கட்டைவிரல் ரேகையைப் பதிவு செய்வார். உங்களிடம் சீட்டு ஒன்றை வழங்குவார். அதை எடுத்துக்கொண்டு மூன்றாவது அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அதைப் பெற்றுக்கொண்டு தன் முன்பு இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள 'பேலட்’ என ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பட்டனை அழுத்துவார். அதன் பிறகு நீங்கள் ஓட்டு போடும் மறைவிடத்துக்குச் செல்லவேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட்டில் வரிசையாக வேட்பாளரின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு எதிராக உள்ள நீல நிற பட்டனை அழுத்தவேண்டும். உடனே அந்த வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள சிவப்பு நிற விளக்கு எரியும். அதோடு 'பீப்’ என்ற ஒலியும் கேட்கும். அதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அறிகுறி. ஒலி எழுப்பிய உடனேயே மூன்றாவது தேர்தல் அலுவலரின் முன்பு இருக்கும் கட்டுப்பாட்டு கருவியில் எரிந்துகொண்டிருக்கும் 'பிஸி’ விளக்கு அணைந்துவிடும்.
பார்வைத்திறனற்ற வாக்காளர்கள், துணைக்கு ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். மற்ற யாரும் வாக்களிக்கும் இடத்துக்கு கூடுதல் நபர்களை அழைத்துச் செல்ல முடியாது. அதேபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது.
உங்கள் வாக்குகளை இன்னொருவர் போட்டுவிட்டால்..?
காலையிலேயே சென்று வாக்களித்துவிடுவது நல்லது. பிற்பகலில் சென்றால், உங்கள் வாக்கை வேறு யாராவது பதிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை அப்படி உங்கள் வாக்கை வேறு யாரோ போட்டுவிட்டாலும், ஒரு வாக்காளராக உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும். 'நான் இந்த வாக்குச்சாவடியின் வாக்காளர்தான்’ என்பதற்கான ஆவணத்தை வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் காட்ட வேண்டும். அந்த அதிகாரி உங்களிடம் கேள்விகள் கேட்டு சான்றுகளைச் சரிபார்ப்பார். ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் கருதினால், உங்களுக்கு 'ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு’ தருவார். அது அச்சடிக்கப்பட்ட வாக்குச்சீட்டு. அதில் பழைய முறைப்படி முத்திரை குத்தி வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களித்த வாக்கு சீட்டை மடித்து ஓர் உறையில் போட்டு தேர்தல் அதிகாரி சீல் வைத்துவிடுவார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் நூலிழையில் இருந்தால், இந்த ஆய்வுக்குரிய வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
'யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’!
'எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’ என்பதைத் தெரிவிக்கும் வசதி, இதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இல்லை. 49(O) என்ற பிரிவின் கீழ் அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும். இது ரகசியமானது இல்லை என்பதால் கணிசமானோர் இந்தப் பிரிவின் கீழ் வாக்களிக்கத் தயாராக இருந்தும், இதைப் பயன்படுத்த அஞ்சினார்கள். இந்த முறை வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டு விட்டது. இப்போது இதன் பெயர் நோட்டா (NOTA - None Of The Above). வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இந்த 'நோட்டா’ பட்டன் இருக்கும். NOTA என்று ஆங்கிலத்திலும், 'மேற்காணும் நபர்களில் எவரும் இல்லை’ என்று தமிழிலும் எழுதப்பட்டிருக்கும்.  
உறுதிச் சீட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வசதி இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அச்சிடும் கருவி வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். வாக்களித்து முடித்த உடனேயே அதில் இருந்து ஒரு சிறிய துண்டுச்சீட்டு வெளியில் வரும். அதில் வரிசை எண், நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை இருக்கும். அதுதான் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதற்கான ஆதாரம். அதன் பிறகு அந்த ரசீது இயந்திரத்துக்குள் மறுபடியும் சென்றுவிடும். ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மத்திய சென்னை தொகுதியில் மட்டுமே இந்தத் தேர்தலில் அறிமுகம் ஆகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் உங்கள் விரல் முனையில்! சுமார் 120 கோடிக்கும் அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் பிரமாண்டமான ஜனநாயக நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆளுமைகளை நாம் தேர்வு செய்கிறோம். அந்தப் பணியின் நேர்மை கருதி வாக்களிக்கும் முன்பு நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தியா நடைபோட வேண்டிய திசையை நம் விரல்கள்தான் தீர்மானிக்கும்!

- Vikatan

Tuesday, April 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 39

1. பணம் லஞ்சம் வாங்குவதைப் பற்றி யோசித்தாலே அனைவர் மனக்கண் முன் நிழலாடும் காட்சி, பங்காரு லட்சுமணன் பணம் வாங்கி தன்னுடைய மேஜை டிராயரைத் திறந்து வைப்பதுதான்!

2001 காலகட்டத்தில் பி.ஜே.பி-யின் தலைவராக இருந்தவர் பங்காரு லட்சுமணன். 'தெஹல்கா’ என்ற வலைதளம் இதனைப் படம் பிடித்தது. இந்திய அரசியல்வாதிகளுக்கும் ஆயுத விற்பனை செய்பவர்களுக்கும் இடையில் பேரங்கள் நடைபெறுவதையும் லஞ்சப் பணம் கைமாறுவதையும் அது படம் பிடித்தது. பங்காரு லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தரப்பட்டது. அவர் அதை வாங்கி தன்னுடைய மேஜை டிராயரில் வைக்கிறார். இந்தக் காட்சி 13.3.2001 அன்று தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது. இதேபோல் ஜெயா ஜெட்லியும் மாட்டினார். பி.ஜே.பி. அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய சக கட்சியாக அன்று இருந்தது ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சி. அதன் தலைவராக இருந்தவர்தான் ஜெயா ஜெட்லி. வாஜ்பாய் அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜெயா ஜெட்லி பேரம் பேசுவதாகவும் இறுதியில் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாகவும் அந்தக் காட்சிகள் காட்டப்பட்டன. இந்தக் காட்சிகளில் எந்தக் காட்சிப்படுத்துதலும் இல்லை, அவை அனைத்தும் உண்மையானவை என பச்சையாகத் தெரிந்தால் பதவி விலகல் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்தன. இதைத் தொடர்ந்து பங்காரு லட்சுமணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் பதவி விலகினார்கள். அதே நேரத்தில் தெஹல்கா வலைதளத்தின் ஊழியர்கள் அரசாங்கத்தால் பழி வாங்கப்பட்டார்கள்.
2. 'பிரதமர் உடந்தையாக இருந்து நடந்துள்ள அரசு கஜானாவின் மிகப்பெரிய கொள்ளை’ என்ற தலைப்பில் 'நியூ ராஜ்’ இதழ் (1999 ஜூலை 16-24) செய்தி வெளியிட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் 'தாத்தா’ அதுதான்.
செல்போன் தொலைபேசி உரிமையாளர்கள், அடிப்படைத் தொலைபேசி வசதி செய்து தருவோர் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் 1999-ல் வகுக்கப்பட்டன. லைசென்ஸ் கட்டணம் செலுத்துவது, வருமானத்தில் ஒரு பங்கை அளிப்பது - இந்த இரண்டில் ஒன்றை அந்த தனியார் தொலைபேசி உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளின்போது ஆறு மாதங்களுக்கான லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தார்கள். இதனால் அரசு வருவாயில் ரூ. 3800 கோடி ரூபாய் (1999-ல் பண மதிப்பை வைத்து கணக்குப் போட வேண்டும்!) இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
''நான்கு மாநகரங்களில் செல்போன் தொலைபேசியை இயக்குகிற எட்டு தனியார் கம்பெனிகளின் நன்மைக்காக செய்யப்பட்ட சலுகை இது'' என்று குற்றம்சாட்டினார்கள்.
''இப்போது நாம் வைத்துக்கொண்டு இருக்கும் தொலைத்தொடர்புக் கொள்கை தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதாகவும் அரசுக்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது'' என்று இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஜக்மோகன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாததைக் கடுமையாகக் கண்டித்தார் அமைச்சர் ஜக்மோகன்.
1994-ல் செல்போன் பயன்பாடு வந்தது. பகிரங்க டெண்டர் வந்தது. கூடுதல் தொகை கேட்டவருக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன. ஒரு மாநகரத்தில் இரண்டு கம்பெனிகள் இயங்கலாம் என்பது விதி. முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணமும் அடுத்தடுத்த ஏழு ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணமும் செலுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்தவில்லை. இந்தியாவின் தலைமைத் தணிக்கை அதிகாரி, கண்டன அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பினார். ஆனால், அந்த நிறுவனங்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் தேவகவுடாதான் முதலில் கிளப்பினார். அதன் பிறகு, இரண்டு பொதுநல மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 'எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்று இந்த நிறுவனங்கள் அரசை அணுகியது. ஒரு நிறுவனம் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளின் கணவரைப் பிடித்தது. இன்னொரு நிறுவனம் ஆந்திராவில் பிரபலமான சாமியாரைப் பிடித்தது. மற்றொரு நிறுவனம் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியைப் பிடித்தது. காரியங்கள் நகர ஆரம்பித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தலைமையில் தொலைத் தொடர்புக் குழு போடப்பட்டது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஜக்மோகன். அவருக்கு இந்தக் குழுவும் பிடிக்கவில்லை. குழு அமைக்கப்பட்ட நோக்கமும் பிடிக்கவில்லை. 'லைசென்ஸ் கட்டணத்தில் பாக்கி உள்ளதால், 20 சதவிகிதத்தை செலுத்தினால் போதும்’ என்று இந்தக் குழு ஆலோசனை சொன்னது. ஆனால், இதை அட்டர்னி ஜெனரல் சோலி சோரங்ஜி ஏற்க மறுத்துவிட்டார். பாக்கி தொகையை முழுமையாகத்தான் வசூல் செய்ய வேண்டும் என்றார். அமைச்சர் ஜக்மோகன். அவர் தனது கோப்பில் 11 விதமான கேள்விகளை எழுப்பினார்.
'சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப்பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ள நிலையில், அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெறவில்லை என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? நஷ்டம் அடைந்திருந்தால் அவர்களில் ஒருவர்கூட ஏன் லைசென்ஸைத் திருப்பித்தரவில்லை? பலரும் புதிய லைசென்ஸை கேட்டுக் கேட்டு வாங்கியது ஏன்?’ என்று பகிரங்கமாக எழுதினார் அமைச்சர் ஜக்மோகன்.
20 சதவிகிதம் செலுத்தினால் போதும் என்று அரசு சொன்னது அல்லவா? அந்த 20 சதவிகிதத்தைக்கூட உடனடியாக செலுத்த சில நிறுவனங்கள் முன்வரவில்லை. அதன் லைசென்ஸ்களை ஜக்மோகன் ரத்து செய்தார். ஜக்மோகனை எப்படியாவது இந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் முயற்சித்தன. ஜக்மோகன், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். தொலைத் தொடர்புத் துறையை அன்றைய பிரதமர் வாஜ்பாய் தன் வசம் வைத்துக்கொண்டார். தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு, இங்கிலாந்தில் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்றிருந்த அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி வரவழைக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டு... லைசென்ஸ் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. நிதி அமைச்சகத்தின் துணை அறிக்கை மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்த்தது. அன்று செய்யப்பட்ட சிறிய ஓட்டைதான் அடுத்தடுத்த பல பெரிய ஊழல் பிரளயங்களுக்குக் காரணம்.
3. தொலைத்தொடர்பு துறை என்பது இன்று உலகில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. டெலிகாம் நெட்வொர்க்கில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடு என்று இந்தியா சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு இதில் வர்த்தகம் உள்ளது. அதே அளவுக்கு ஊழலும் உள்ளது.
1994-ல் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் நுழைவு ஏற்பட்டது. 1995-ல் தொலைத் தொடர்பு வட்டங்களின் போட்டி ஏல முறையில் வழங்கப்பட்டது. ஆனால், 2001-ல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று அது ஆக்கப்பட்டது. பயன்பாடு அதிகமாக இருக்கும் பொருள்களுக்கு ஏல முறைதான் சரியானது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் FCFS எனப்படும் First Come First Served  என்ற அளவுகோல் தனக்கு வேண்டியவர்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தரும் தந்திரம். 1993-ல் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், 'அரிய வளமான காற்றாலைகள் அல்லது ஸ்பெக்ட்ரத்தை அதிகப்படியான வாடிக்கையாளர்களிடையே விநியோகிக்கும் போது திசிதிஷி என்பது தன்னிச்சையானதாகவும் நடுநிலை அற்றதாகவும், நியாயப்படுத்த இயலாததாகவும் இருக்கும். போட்டியை ஊக்குவிக்கும் ஒப்பந்தப் புள்ளிகோரும் ஏல முறையே நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்'' என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் பி.ஜே.பி. அரசு முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று தீர்மானித்து எல்லாத் தவறுகளுக்கும் அடித்தளம் வகுத்தது.
4. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் பி.ஜே.பி. ஆட்சியில்தான் தொடங்கியது. பங்கு விற்பனைக்கு என்றே தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். 'நவீன இந்தியாவின் திருக் கோயில்கள்’ என்று பிரதமர் நேருவால் மகுடம் சூட்டப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை, 'அவை ரத்தம் ஒழுகும் குடல் புண்கள்’ என்று அமைச்சர் அருண்ஷோரி வர்ணித்தார். 1991-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,36,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத் துறை பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் மாற்றுக் கருத்து இல்லை.
5. இந்த வரிசையில் யூனிட் ட்ரஸ்ட், டெலிகாம், பிரட் கம்பெனி, பால்கோ, வி.எஸ்.என்.எல். சென்டூர், மொரீஷியஸ் பாதை... போன்ற பல்வேறு விவகாரங்களில் உள்ள சர்ச்சைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கிளப்பி வந்தார்கள். இத்தகைய தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாகத்தான் 2004-ல் பி.ஜே.பி. மாபெரும் தோல்வியைத் தழுவியது. பி.ஜே.பி-க்கு மக்கள் இந்த தண்டனையை மனத்தில் வைத்து செயல்படும் ஆட்சியாக காங்கிரஸ் இல்லாமல் போனதுதான் கடந்த 10 ஆண்டுகால கஷ்டங்கள்!

- Vikatan

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 38

மக்களை நாட்டுப்பற்று என்ற மகுடிக்கு மயக்கினால் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று காங்கிரஸ் நினைத்ததைப்போல, மக்களை மதப்பற்றுக்குள் இழுத்துப் போய்விட்டால் தாங்கள் எது செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று கண்டுபிடித்தது பி.ஜே.பி.

மதத்தை விட்டு வெகுதூரத்தில் அரசியல் இருக்க வேண்டும். ஆனால், மதத்தையே அரசியலுக்குள் கொண்டுவந்தது பி.ஜே.பி. இது தங்களுடைய கட்சியை வளர்க்கத் தேவையான அஸ்திரமாக அந்தக் கட்சி பயன்படுத்தியது. ஆனால், காலங்காலமாக சகோதர சகோதரிகளாகப் பழகியும் பிணைந்தும் வாழ்ந்து வந்த கோடானு கோடி இந்து - முஸ்லிம் மக்களுக்குள் பேதம் விளைவிக்கக் காரணமானது. இந்த செயல்பாடுகள் காரணமாகத்தான் பி.ஜே.பி. வளர்ந்தது. இன்னொரு பக்கம் நாட்டின் அமைதி தேய்ந்தது.
1990 செப்டம்பர் 25-ம் நாள் அன்று குஜராத் சோமநாதபுரத்தின் பிரதான ஆலயத்தில் இருந்து தன்னுடைய ரத யாத்திரையை லால் கிஷன் அத்வானி ஆரம்பித்தார். இன்றைக்கு எந்த நரேந்திர மோடி தன்னை ஓவர்டேக் செய்கிறார் என்று அத்வானி அலறுகிறாரோ, அவரே அன்று வாஜ்பாயை முந்துவதற்கு இப்படி ஒரு காரியத்தைக் கையில் எடுத்தார். 6000 மைல் ரத யாத்திரை அது. இந்தியாவின் எட்டு மாநிலங்களை அது தொட்டு அயோத்தியை அடைய வேண்டும். அந்த ரத யாத்திரை எந்த மாநிலத்துக்குள் நுழைந்தாலும் பதற்றம் பற்றிக்கொண்டது. 'ஆண்மை கொண்ட இந்துவே அணிதிரள்’ என்று அழைத்தார்கள். 'அன்பே கடவுள்’ என்று சொல்லப்பட்ட பூமியில் ஆயுதம் ஏந்திய தொண்டர்கள் அணிவகுக்க வைக்கப்பட்டார்கள். 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டு’ என்பதுதான் அத்வானியின் ஒரே லட்சியமாக இருந்தது. அன்று அத்வானியின் ரத யாத்திரையை குஜராத்தில் வழிநடத்தியவர்தான் நரேந்திர மோடி. அன்று அவர் சாதாரணத் தொண்டர்.
அயோத்திக்குள் அத்வானியுடன் தொண்டர்கள் போனால் மிகப் பெரிய களேபரம் ஆகிவிடும் என்று பயந்த அன்றைய பிரதமர் வி.பி.சிங் இதைத் தடுப்பதற்கு முயற்சித்தார். அன்றைய வி.பி.சிங் ஆட்சியே பி.ஜே.பி. தயவில்தான் இருந்தது. தன்னுடைய பதவி நிலைக்க வேண்டும் என்று வி.பி.சிங் நினைத்திருந்தால் அத்வானி எதை உடைத்தால் என்ன என்று வி.பி.சிங் விட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ், பி.ஜே.பி. தலைவர் அத்வானி இருவருடனும் வி.பி.சிங் பேசினார். இருவரும் ரத யாத்திரையை நிறுத்த சம்மதிக்கவில்லை.
பிரச்னைக்குரிய பாபர் மசூதி இடத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்வது, பிரச்னை இல்லாத இடத்தை ராமஜென்ம பூமி யஞ்ய சமிதியிடம் ஒப்படைப்பது என்ற சமாதானத் திட்டத்தை பிரதமர் வி.பி.சிங் வகுத்தார். இதனை பி.ஜே.பி., வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி ஜும்மா மஜ்ஜித் ஷாகி இமாமும் ஏற்கவில்லை. அரசியல் கட்சிகளிடம் இருந்து இந்தப் பிரச்னையை நகர்த்தி வந்துவிட வேண்டும் என்று வி.பி.சிங் துடித்தார். எனவே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். பி.ஜே.பி. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது ஆச்சர்யம் அல்ல. ஆனால், இன்று மதவாதத்துக்கு எதிராகப் பிறப்பெடுத்தவர்கள்போலப் பேசும் காங்கிரஸ் கட்சியும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவது என்று வி.பி.சிங் முடிவெடுத்தார். அக்டோபர் 22-ம் தேதி பாட்னா சென்றது ரத யாத்திரை. 'இது நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து’ என்று சொல்லி அத்வானியைக் கைது செய்ய வி.பி.சிங் உத்தரவிட்டார். உடன டியாக வி.பி.சிங் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை பி.ஜே.பி. வாபஸ் வாங்கியது.
1992 டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று வி.ஹெச்.பி. அறிவிப்பு செய்தது. இதில் பங்கெடுக்கப் போவதாக அத்வானியும் அறிவித்தார். நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் வர வேண்டும் என்று அத்வானி அறிவித்தார். இந்தியா அதுவரை காப்பாற்றி வைத்திருந்த மதநல்லிணக்கத்தை குலைத்து, எதிர்கால அமைதியையும் உருக்குலைத்து நாசப்படுத்தும் நாளாக அது மாறிப்போனது.
டிசம்பர் 5-ம் தேதி லக்னோவில் இருந்து அத்வானி, அயோத்திக்கு வந்தார். சிவசேனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் மோரிஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினாய் கட்டியார், அத்வானி ஆகிய மூவரும் ஆலோசனை நடத்தினார்கள். பாபர் மசூதியைச் சுற்றி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தின் எல்லையில் இருந்து இரும்புக் குழாய்கள் டிசம்பர் 6-ம் தேதி காலை 8.15 மணிக்குப் பிடுங்கப்பட்டது. அந்த இடத்துக்கு 10.15 மணிக்கு வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் வந்தனர். 11.30 மணிக்கு மசூதியை சுற்றி இருந்த இடத்துக்குள் கரசேவகர்கள் நுழைந்து பூஜைகள் நடத்தினார்கள். 11.50 மணிக்கு வலதுபுற கோபுரத்தின் மீது ஒருவர் ஏறிவிட்டார். அதன் பிறகு ஒவ்வொருவராக ஏற ஆரம்பித்தார்கள். அப்போதுதான் பைசாபாத்தில் இருந்து அதிரடிப்படை 2 கி.மீ. தள்ளி வந்துகொண்டு இருந்தது. தடுக்க யாருமே இல்லாத நிலையில் தகர்ப்பு முடிந்தது. மாலையில் ராமர் சிலை நிறுவப்பட்டு, பூஜைகள் நடந்தது. அப்போதும் அதிரடிப்படையோ, ராணுவமோ வரவில்லை. டிசம்பர் 7-ம் தேதி காலையில் கரசேவகர்கள் அந்த இடத்தைவிட்டு அமைதியாக வெளியேறினார்கள். எல்லோரும் அயோத்தியை விட்டு வெளியேறிய பிறகு சாவகாசமாக டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குத்தான் போலீஸ் படையின் நான்கு பிரிவுகள் அயோத்திக்குள் நுழைந்தது. அப்போது ஒன்றிரண்டு பேர்தான் அங்கு இருந்தார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தது போலீஸ். 4.15 மணிக்குத்தான் ராணுவம் வந்து அந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது.
பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் அயோத்திக்குள் வரப்போவது தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்துக்கொண்டு இருந்தது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு. டிசம்பர் 6-ம் தேதி மதியம் 2 மணிக்கு மசூதி இடிக்கப்படுகிறது என்றால் டிசம்பர் 8-ம் தேதி அதிகாலை 4 மணிக்குத்தான் அந்த இடத்துக்கு ராணுவமே வருகிறது. சினிமா போலீஸைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்.
''கரசேவகர்களை பெரிய அளவில் பிரச்னைக்குரிய இடத்தில் திரளவிடுவது ஆபத்து; பிறகு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்; இன்னொருப் பிரிவினர் மசூதியைத் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பிரிவினரை நாங்கள் அடையாளம் காணமுடியவில்லை'' என்று மத்திய உளவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நவம்பர் 15-ம் தேதியே எச்சரிக்கை செய்துவிட்டது. டிசம்பர் 6-ம் தேதி கரசேவை நடத்தப்போகிறோம் என்று அக்டோபர் 30-ம் தேதியே வி.ஹெச்.பி-யும் அறிவித்துவிட்டது.
''வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அவரது கருத்தும் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியும். எனவே நாங்கள் அவருக்கு ஆலோசனைகள் கூறினோம். இப்போது நரசிம்ம ராவ் கருத்து என்னவென்றே எங்களுக்குத் தெரியவில்லை. எனவே உளவுத் துறை அறிக்கையை மட்டும் அப்படியே பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டோம் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் சொன்னார்கள்.
நிலைப்பாடுகளே எடுக்காமல் இரண்டு பக்க அநியாயங்களையும் கண்மூடி வேடிக்கை பார்ப்பதுதான் காங்கிரஸின் வழக்கமாக இருந்தது. அதுவே பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து இந்தியாவின் தலைநகராம் டெல்லி முதல் தென்பகுதி முக்கிய நகரான ஹைதராபாத் வரை கலவரம். இதில் 1200-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. இதில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. அத்தோடு சேர்த்து இஸ்லாமிக் சேவக் சங், ஜமய்த்-இ-இஸ்லாம்-ஈ ஹிந்த் எனும் முஸ்லிம் அமைப்புகளும் தடை செய்யப்பட்டன.
''இந்தியாவை இந்து நாடாக்கும் கனவு விரைவில் நனவாகப் போகிறது. புதிய ராமர் கோயிலை ராமஜென்ம பூமியில் கட்டுவோம். இதுதான் துவக்கம்’ என்று வி.ஹெச்.பி. தலைவர் அறிவித்தார். 'இந்தப் பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்புகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துமே தவிர எங்களைக் கட்டுப்படுத்தாது’ என்று அசோக் சிங்கால் சொன்னார். உ.பி. முதல்வராக இருந்த கல்யாண் சிங், 'நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ராமஜென்ம பூமி பிரச்னை நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டது’ என்றார். வினாய் கட்டியார் இன்னும் ஒருபடி மேலே போனார். 'பலம்தான் எனக்குத் தெரிந்த சட்டம். பலம் மேலோங்கும்போது சட்டம் அமைதியாகிவிடும்’ என்று அறைகூவல் விடுத்தார்.
இதுதான் பி.ஜே.பி-யை வளர்த்தது. 1989-ல் 85 எம்.பி-களை வைத்திருந்த பி.ஜே.பி. 1991 நாடாளுமன்றத் தேர்தலில் 119 இடங்களை கைப்பற்றியது. 89 தேர்தலில் ஜனதா தளத்து டன் கூட்டணி. ஆனால் 91 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு இந்த வெற்றி உ.பி-யில் மொத்தமுள்ள 85 இடங்களில் 51 இடங்களை பி.ஜே.பி. பிடித்தது. 96 தேர்தலில் 161 எம்.பி-களை வென்றார்கள். கூட்டணி கட்சிகளோடு சேர்த்தால் 201. பெரும்பான்மையை நிரூபிக்கும் பலம் இல்லை என்பதால் ஆட்சி தொடரவில்லை. 98 தேர்தலில் 182 இடங்களை பி.ஜே.பி. பிடித்தது. ஆட்சி அமைத்தது. 99-ல் கவிழ்ந்தாலும் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிதான். 2004 வரை பி.ஜே.பி. கட்சி தொடர்ந்தது.
சுத்தமானவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் ஆட்சியும் அசுத்தமாகவே இருந்தது

- Vikatan

புதிய வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு?

இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 23 கோடி. தமிழகத்திலோ 12 லட்சம். முதன்முறையாக வாக்குச்சாவடி வரிசையில் வந்து நிற்கும் இந்த புதிய வாக்காளர்களின் மனநிலை என்ன? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் முறை விரல் பதிக்கப்போகிறவர்களை மட்டுமே குறிவைத்து கருத்துக் கணிப்பை நடத்தியது ஜூனியர் விகடன். 5,744 பெண்கள் உட்பட மொத்தம் 11,763 இளைஞர்களிடம் சர்வே படிவங்களைப் பூர்த்திசெய்து வாங்கினோம்.

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயில், இளம் வாக்காளர்களின் பல்ஸ் ரிப்போர்ட் இது.
ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களில், விலைவாசி உயர்வைத்தான் மக்கள் பிரதான பிரச்னையாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், புதிய வாக்காளர்கள் அதிகம் வெறுப்பது லஞ்சம் ஊழலைத்தான்!
'எதை மனதில் வைத்து ஓட்டுப் போடுவீர்கள்?’ என்ற கேள்விக்கு 'பிரதம வேட்பாளர்’ என்பதுதான் அதிக ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. இது ஒரு முக்கியமான நிலைப்பாடாக உள்ளது.
'மத்திய காங்கிரஸ் ஆட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?’ என்ற கேள்விக்கு 'மிக மோசம்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம். மோசம் என்று சொன்னவர்களது எண்ணிக்கையையும் சேர்த்தால் இவர்களுக்கு காங்கிரஸ் அரசு மீதான கோபத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
இளைஞர்களிடையே சமீப காலமாக வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆம் ஆத்மி பற்றிய கேள்விகளையும் சர்வேயில் இணைத்திருந்தோம். ஆனால், ஆம் ஆத்மியின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு, 'அதுவும் மற்ற கட்சிகளைப்போலத்தான்’ என்று 50 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.
'ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போடுவீர்களா?’ என்ற கேள்விக்கு, அதிகம் பேர் 'முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னார்கள்.
நரேந்திர மோடிதான் நல்லாட்சி தருவார் என 36 சதவிகிதம் பேர் சொன்னார்கள். அதற்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதா இருக்கிறார்.
'உங்கள் ஓட்டு யாருக்கு?’ என்ற முக்கியமான கேள்விக்கு பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் வரவேற்பு அதிகம். 31 சதவிகிதம் பேர் பி.ஜே.பி. கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாக கருத்துச் சொன்னார்கள். அதற்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. இடம்பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில்தான் தி.மு.க. இருக்கிறது.
'நோட்டாவுக்கு உங்கள் ஆதரவு உண்டா?’ என்ற கேள்விக்கு, 'முடிவு எடுக்கவில்லை’ என்று 40 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 32 சதவிகிதம் பேர் 'உண்டு’ என்று சொன்னார்கள்.
இன்றைய இளைஞர்கள் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளுக்கு எதிராக இருப்பதையும் இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதைப் பார்த்து வாக்களிக்கத் தயாராகி வருவதையும் இந்தக் கருத்துக் கணிப்பு மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.


- Vikatan

ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான்.
சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத் தரும் ஆப்ஸ்கள் வரை பல ஆப்ஸ்கள்  ஆஃப் மார்க்கெட்டில் இலவசமாகவும், சிறிய கட்டணத்துடனும் கிடைக்கின்றன. இவையெல்லாம் பாதுகாப்பானவை தானா, இதில் உள்ள போலிகளை எப்படி கண்டுபிடிப்பது, போலிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பது போன்ற கேள்விகளுடன் பி.கே.ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
''ஸ்மார்ட் போன்களின் விலையும் குறைந்துவருவதால் அதன் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அதன் மீதான விழிப்பு உணர்வு இருக்கிறதா என்றால், இல்லை.
ஸ்மார்ட் போன்கள் கணினியைப் பின்னுக்குத் தள்ளி அது செய்யும் வேலைகளில் பெரும்பாலானவைகளைத் தானே செய்கின்றன. இந்தநிலையில் மோசடி கும்பல்களின் பார்வை கணினி களிடமிருந்து ஸ்மார்ட் போன்களின் பக்கம் இப்போது திரும்பி இருக்கிறது.
இதற்கோர் உதாரணம், சில ஆண்டுகளுக்குமுன், கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மார்க்கெட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களில் டிராய்டுட்ரீம் (DroidDream) என்னும் டிரோஜன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் உள்ள அப்ளிகேஷன்களை இயக்கியவுடன், போனில் அதன் உரிமையாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெற்றுவிடுகிறது.
இதன்மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகேஷன்களை எளிதாக டவுண்லோடு செய்கிறது. இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் நீக்கியது.
சீனாவில், இந்தவகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தன.  அந்தச் சமயத்தில் வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தது. 'மொபைல் போனுக்கான ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யும் போது அது  பாதுகாப்பானதுதானா என்று கண்டறியுங்கள்’ என்பதே அந்த கோரிக்கை.
உத்தரவாதம் இல்லை!
நீங்கள் எந்த ஆப்ஸை எதிலிருந்து டவுண்லோடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆண்ட்ராய்டு போனில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஒரு அப்ளிகேஷனை கூகுள் பிளேயில் இருந்து டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது. கூகுள் பிளே அல்லாத வேறு தளங்களின் மூலம் டவுண்லோடு செய்தால் அது பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
டிசேபிள் செய்வது அவசியம்!
கூகுள் பிளேயில் இருந்து நீங்கள் டவுண்லோடு செய்யும் ஆப்ஸ்களின்  பாதுகாப்பு கூகுள் பிளேயால் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு வேறு தளங்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்ய விரும்பவில்லை எனில், Settings > Security / Settings > Applications பகுதியில் Unknown sources என்பதை டிசேபிள் செய்திருக்க வேண்டும்.
ரிவியூ  படியுங்கள்!
கூகுள் பிளேயிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் டவுண்லோடு செய்துகொள்ளலாமா எனில், அது பாதுகாப்பானதல்ல. சில சமயங்களில் புதிய அப்ளிகேஷன் ஒன்றை டவுண்லோடு செய்வது நம் பாதுகாப்புக்குப் பிரச்னையாக அமையலாம். எனவே, அதிகமாக டவுண்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனை தேர்வு செய்வது புத்திசாலித்தனம். அதோடு ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனை  பயன்படுத்தும்முன் அதை பயன்படுத்தி யவர்களின் கருத்தை கூகுள் பிளேயில் படிப்பதும் அவசியம்.
நிறுவனத்தின் பெயரை கவனி!
முக்கியமானதொரு ஆப்ஸை டவுண்லோடு செய்யவேண்டும் எனில், அது குறிப்பிட்ட நிறுவனம்தான் வெளியிட்டுள்ளதா என்பதை அறிந்துகொண்டு டவுண்லோடு செய்வது நல்லது. ஆப்ஸ்களின்  பெயருக்கு கீழே அதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் இருக்கும். நிறுவனத்தின் பெயரை இணையத்தில் தேடுவதன் மூலம் அதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களின் கீழே அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் இருக்கும்.
படிக்காமல் அனுமதி தரக்கூடாது!
அப்ளிகேஷன் ஒன்றினை டவுண்லோடு செய்வது என்று முடிவு செய்தபின் நீங்கள் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், ''permissions'' எல்லா அப்ளிகேஷன்களும் இதைக் கேட்கும். இணையத்தை எப்போது அக்சஸ் செய்யவேண்டும் என்று அனுமதி கேட்டபின், அந்த
அப்ளிகேஷன் இணையம் சார்ந்த சேவையைத் தரும் அல்லது உங்களுக்கு நிறைய விளம்பரங் களைக் காட்டும். இதேபோல, நீங்கள் இருக்கும் இடம், போன் கால்/மெசேஜ் போன்றவற்றைச் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், சோஷியல் நெட்வொர்க் நண்பர்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போட்டோ எடுக்கும் பெர்மிஷன் என்று பல செயல்களைச் செய்ய உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.
இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, 'போன்கால்/மெசேஜ் போன்றவற்றை அக்சஸ் செய்யும் பெர்மிஷன், போன் காண்டாக்ட்களை அக்சஸ் செய்யும் பெர்மிஷன்'. ஏனெனில், எல்லா அப்ளிகேஷன்களும் அக்சஸ் செய்யும்பட்சத்தில் உங்கள்
பாதுகாப்புக் கேள்விக்குறியாகும். எனவே, குறிப்பிட்ட அப்ளிகேஷன் எந்த மாதிரியான பெர்மிஷன்களைக் கேட்கிறது, அது நிஜமாகவே தேவையானதுதானா என்று தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.
அப்டேட் கவனம்!
ஆரம்பத்தில் சில பெர்மிஷன்களை மட்டும் கேட்டுவிட்டு, நீங்கள் ஆப்ஸ்களை அப்டேட் செய்யும்போது புதிய பெர்மிஷன்களைக் கேட்கும் அப்ளிகேஷன்களும் உள்ளன. எனவே, அப்டேட் செய்யும்போதும் இதைக் கவனிப்பது அவசியம். சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற்போதைய ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந்தாலும், எந்த நேரமும் ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகள் நமக்குத் துணை இருக்காது. பல நேரங்களில் நம் சமயோசிதப் புத்திசாலித்தனம்தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்'' என்றார் பிரபு கிருஷ்ணா.
ஆப்ஸ்களை எப்படி வைரஸ்கள் தாக்குகின்றன, அதிலிருந்து எந்த மாதிரியான தகவல்கள் திருடப்படும், வரும்முன் காப்பது எப்படி என்ற கேள்விகளுடன் அப்ளிகேஷன் டெவலெப்மென்ட் நிறுவன வட்டாரத்தில் பேசினோம். அவர்கள் சொன்ன விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...
ஆப்ஸ் வைரஸ்கள் உஷார்!
இன்றைய நிலையில் தகவல் திருடுபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத் திகழ்கின்றன வைரஸ்கள். ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுகின்றன. ஸ்மார்ட்போன் செயல்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்கும் அப்ளிகேஷன் களைப் போலியாகத் தயாரிக்கும் மோசடி கும்பல், அதைக் குறிவைத்து      தாக்குவதுபோலவே வைரஸ்களையும் உற்பத்தி செய்து உலாவவிடுகிறது. இந்தவகை வைரஸ்கள், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது.
தகவல் திருடன்!
ஒரிஜினல் குறியீடுகள் கொண்ட ஆப்ஸ்களாக இருந்தால் அது உட்புகுந்த வைரஸால் பாதிக்கப்படுவதில்லை. போலியான அப்ளிகேஷன்களாக இருந்து அதைப் பயனாளர்,  ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்தும்போது,  கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகள் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன. இ-மெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள ஃபைல்கள் அதே பெயரில், புதிய ஃபைல்களைப் பதிக்கிறது. இதனால் எந்தச் சோதனைக்கும் முதலில் உள்ள ஒரிஜினல் ஃபைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு ஃபைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது. அதுமட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.
வரும்முன் காப்பது!
அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற இணையதளங்களுக்கான இணைப்பை அவசரப்பட்டு கிளிக் செய்துவிடக் கூடாது. நம்பகத்தன்மையான மொபைல் ஆன்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதையும் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோடு செய்யக்கூடாது. முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்தபின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்லோடு செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற மிகவும் நம்பகத்தன்மையான ஆஃப் மார்க்கெட்டில் மட்டுமே தேவையான அப்ளிகேஷன்களையே பயன்படுத் தினால், உங்கள் தனிப்பட்ட தகவல் களுக்கு எந்த பங்கமும் வராது!
- Vikatan

Saturday, April 5, 2014

நரேந்திர மோடி: காத்திருக்கும் இன்னும் சில சவால்கள்! - 2

நரேந்திர மோடி அடுத்த இந்திய பிரதமராகப் பதவியேற்கும் பட்சத்தில் அவர் கட்டாயம் சந்தித்தாகவேண்டிய சவால்கள் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். அவர் சந்திக்கவேண்டிய மேலும் சில சவால்கள் பற்றி இந்த இதழில் சொல்கிறோம்.
மானியச் சுமை!
எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப்போதுதான் சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும்,  இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசாங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிறது.
உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக மத்திய அரசாங்கம் செலவு செய்யும் தொகை ஆண்டொன்றுக்கு 85,000 கோடி ரூபாய்; 2004-05-ல் 76,096 கோடி ரூபாயாக இருந்த விவசாய மானியம், 2010-2011-ல் 1,42,254 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதுபோக, உணவு பாதுகாப்புத் திட்டத்துக்காக வழங்கப்படும் மானியம் 75,000 கோடி ரூபாய் என மானியச் செலவு மட்டுமே ஓர் ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்குமேல் செல்கிறது. (பார்க்க, 30-ம் பக்கத்திலுள்ள அட்டவணை!)  
அரசின் இந்த மானியச் சுமையைக் குறைக்க வேண்டுமெனில், எதற்கு எவ்வளவு மானியம் தந்தால்போதும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு கண்டுபிடிக்கும் முறையை மோடி உருவாக்க வேண்டும். இன்றைக்கு விவசாயத்துக்கு தரப்படும் மானியமானது பணக்கார விவசாயிகளுக்கும், செயற்கை உரங்களைத் தயாரிக்கும் உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்குமே அதிகம் செல்கிறது.  டீசல் போன்ற எரிபொருட்களுக்குத் தரப்படும் மானியத்தினால், சாதாரண மக்கள் அடையும் நன்மையைவிட, அவற்றை அதிகம் பயன்படுத்தும் செல்வந்தர்களே நிறைய நன்மை பெறுகின்றனர்.
இந்த மானியத் தொகையைக் குறைத்தால், மக்களின் ஆதரவை மோடி இழக்கவேண்டியிருக்கும். குறைக்கவில்லை எனில், அரசு அந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் மோடி என்ன செய்யப் போகிறார்?    
பல்வேறு சீர்திருத்தங்கள்!
நம் பொருளாதாரம் 2000-க்குப் பிறகு அதிவேகமாக வளரக் காரணம், 1991-க்குப்பின் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களே! ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் எந்தச் சீர்திருத்தங்களும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.
தொழில் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதன் மூலம் அந்நிய முதலீட்டை பெருமளவில் பெற முடியும். தொழிலாளர் பிரச்னையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் மூலம் இன்னும் அதிக நிறுவனங்களை தொழில் தொடங்கவைக்க முடியும். இன்ஷூரன்ஸ் துறையில், நிதித் துறையில், ரீடெயில் துறையில் எனப் பல துறைகளில் முக்கியமான பல சீர்திருத்தங்கள் கிடப்பிலேயே இருப்பதால், பொருளாதாரம் வளர முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.  
இந்தச் சீர்திருத்தங்களை கொண்டுவர மோடி கடுமையான எதிர்ப்பை சந்திக்கவேண்டியிருக்கும். இந்த எதிர்ப்பை மோடி எப்படி சமாளிக்கப் போகிறார்?
ஊழல்!
காங்கிரஸ் ஆட்சியின் முதல்பாதியில் பொருளாதார வளர்ச்சியானது ஓரளவுக்கு இருந்தாலும், அந்த ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட முக்கிய காரணம், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நடந்த பல ஊழல்கள்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்து, அதுகுறித்த வழக்கு இன்றளவும் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்து, இதுகுறித்து சிபிஐ இன்றும் விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரே அடிபட்டது பெரிய அதிர்ச்சி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல், ஆதர்ஷ் வீடு கட்டித் தரும் திட்டத்தில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான ஊழல் தகவல்களே இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்படச் செய்தது.
எனினும், மோடி ஆட்சிக்கு வந்தால், இந்த ஊழல் பூதத்தை எப்படி ஒழித்துக்கட்டப் போகிறார் என்பது முக்கியமான விஷயம். காரணம், காங்கிரஸில் சில ஊழல்வாதிகள் இருப்பதுபோல, பா.ஜ.க.வில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. லோக் ஆயுக்தாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளான எடியூரப்பா பா.ஜ.க.வில்தான் இருக்கிறார். பெல்லாரியில் இரும்புத் தாதுவினை இஷ்டத்துக்கு வாரி விற்ற ரெட்டி சகோதரர்களுக்கு பா.ஜ.க.வின் ஆதரவு இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. குஜராத்தில்கூட லோக் ஆயுக்தா இதுவரை சரியாகச் செயல்படவில்லை என்கிற புகாரும் உண்டு. ஆக, ஊழல் என்கிற ஓட்டையை சரிசெய்யாதவரை வளர்ச்சி என்கிற கப்பல் மூழ்கவே செய்யும். ஆனால், இந்த ஊழல் ஓட்டையை அடைக்க மோடி என்ன செய்யப் போகிறார்?  
உள்கட்டமைப்பு!
சாலை வசதிகள் தொடங்கி, மின்சக்தி உற்பத்தி செய்வதுவரை உள்கட்டமைப்பு என்கிற தலைப்பில் வரும் விஷயங்கள் பலப்பல. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காண வேண்டுமெனில், உள்கட்டமைப்புக்குத் தேவையான அடிப்படை வேலைகளை நாம் செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் எந்தவகையிலும் வளர்ச்சி பெறவில்லை. போதிய நிதி வசதி இல்லை, சாலை அமைப்பதற்கான இடத்தைப் பெறுவதில் சிக்கல் எனப் பல பிரச்னைகளில் சரியான முடிவு எடுக்காததினால், கெட்ட பெயரையே சம்பாதித்து இருக்கிறது காங்கிரஸ். மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது, துறைமுகங்களைக் கட்டுவது, அணை கட்டுவது போன்ற பல விஷயங்களை அதிக அளவில் செய்வதற்கான பணம் நம்மிடம் இல்லை.
என்றாலும், குஜராத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் வளர்ந்திருப்பதாகச் சொல்லப்படுவதால், இந்தியா முழுக்கவும் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு  மோடி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், இதைச் செய்து முடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
வேலைவாய்ப்பு!
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கடந்த பத்து ஆண்டுகளில், குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மிகவும் குறைந்துள்ளதாகத் திட்ட கமிஷன் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2010, 2011-ம் ஆண்டு களில் வேலைவாய்ப்பின்மை 10.2% உயர்ந்துள்ளது. 2001 முதல் 2005 வரையில் 1.20 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், 2005 - 2010-ல் உருவாக்கப்பட்ட வேலை வெறும் 60 லட்சம் மட்டுமே. (பார்க்க 31-ம் பக்கத்தில் உள்ள அட்டவனை!) இதுபோதாது என்று 2012 - 2017 வரையிலான காலத்தில் புதிதாக 6.30 கோடிபேரும் இன்னும் 15 ஆண்டுகளில் 18.3 கோடிபேரும் புதிதாக வேலைவாய்ப்பைத் தேடி வரப்போகிறார்களாம். இத்தனை பேருக்கும் வேலை தருகிற புதிய திட்டங்களைத் தீட்டினால் மட்டுமே, இந்தியா வல்லரசாக மாறும் வாய்ப்பு உருவாகும். ஆனால், இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது மோடியின் முன் உள்ள இன்னொரு பெரிய சவால்!
இந்தச் சவால்களையெல்லாம் மோடி எப்படி சந்திக்கப்போகிறார் என்பதில்தான் அவரது  எதிர்காலம் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமும் இருக்கிறது!

''முதலில், வளர்ச்சியடையாத பொருளாதாரமாக இருக்கும் நம்முடைய பொருளாதாரத்தை வளர்ச்சியடையக்கூடிய பொருளாதாரமாக மாற்றவேண்டும். இரண்டாவது, ஜிஎஸ்டியை கொண்டுவர வேண்டும். அதை அமல்படுத்தினால்தான் அடுத்தகட்டத்துக்கு நம்மால் போக முடியும். காங்கிரஸ் அரசாங்கம் இதை அமல்படுத்த யோசித்தபோது அதை எதிர்த்தார் மோடி. இப்போது அவரே அமல்படுத்த நினைத்தால் அவருக்கும் எதிர்ப்பு வரும். அந்த எதிர்ப்பை அவர் சமாளித்தால்தான், அவரால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை செய்ய முடியும்.
மோடி, தொழில் அதிபர்களின் நலன்களுக்காகத்தான் பாடுபடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அங்கு சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொழில்துறையில் பல பாதகங்கள் இருந்தாலும், சராசரி மனிதனுடைய வாழ்க்கைத்தரம் குஜராத்தைவிட பலமடங்கு மேம்பட்டதாக உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால், முதலாளிகளுக்காக பாடுபடாமல், சாதாரண மனிதர்களுக்காகப் பாடுபட வேண்டும்.  
அரசாங்கத்திடம் போதிய நிதி வசதி இல்லை என்கிறார்கள். ஆனால், நம்மிடம் உள்ள இயற்கை வளங்களான இரும்பு, காப்பர் இவற்றை ஒழுங்கான விலைக்கு விற்றாலே வருடத்துக்கு 70 ஆயிரம் கோடி வரை அரசாங்கத்துக்கு கூடுதல் வருமானம் வரும். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற இயற்கை வளங்களை மிகக் குறைந்த விலைக்குத் தந்துவிட்டு, அரசாங்கம் பற்றாக்குறைகளை வைத்திருக்கிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்குகிறோம். அதற்கு வட்டி கட்டுகிறோம். இதனால்தான் நிதிப் பற்றாக்குறை என்னும் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறோம்.  
15 நிறுவனங்களின் வளர்ச்சியைத்தான் குஜராத்தின் வளர்ச்சியாகக் காட்டுகிறார்கள். கெமிக்கல் இண்டஸ்ட்ரியை ஆரம்பத்தில் திறந்துவிட்டார்கள். சுற்றுப்புற சீர்கேடுகள் குறித்து கண்டுகொள்ளவே இல்லை. இப்போது அதில் கறார்காட்ட, கெமிக்கல் இன்டஸ்ட்ரியின் வளர்ச்சி குறைந்து வருகிறது. இரண்டாம்கட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சீரானதாக இல்லை. என்றைக்கு வேண்டுமானாலும் மூடிவிடலாம் என்பதே அங்குள்ள நிலைமை. எனவே, தொழில்துறை வளர்ச்சிக்கு குஜராத் மாடல் என்பதெல்லாம் சரியானதல்ல.''
- Vikatan

நரேந்திர மோடி... காத்திருக்கும் சவால்கள்! ஏ.ஆர்.குமார் - 1

தேர்தல் கணிப்புகள் அப்படியே நடந்துவிடக்கூடியவை அல்ல என்றாலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பல கணிப்புகள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்கின்றன. பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனியாக (அல்லது சில கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்) ஆட்சி அமைத்தால், நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
நூறு புதிய நகரங்களை உருவாக்குவேன்; இந்தியாவின் நான்கு திசைகளையும் புல்லட் ரயில் மூலம் இணைப்பேன்; ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களை தொடங்குவேன் என பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார் மோடி. இதை எல்லாம் அவர் செய்வாரோ, இல்லையோ... அவர் பிரதமரானால், குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்ததுபோல, இந்தியப் பொருளாதாரத்தையும் அதிவேகத்தில் முன்னேற்றம் காண வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் நிறையவே இருக்கிறது.
மக்களின் இந்த எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேற்றிவிடக்கூடியதுதானா? உலகப் பொருளாதாரம் என்கிற சிக்கலான வலையில் சிக்கியிருக்கும் நம்மால் தனித்து செயல்பட்டு, அதிவேக வளர்ச்சி காண்பது சாத்தியமா? இன்றைய காங்கிரஸ் ஆட்சி, அடுத்துவரும் ஆட்சிக்கு பல பொருளாதாரப் பிரச்னைகளை உருவாக்கிவிட்டுச் செல்லும்போது, அதிலிருந்து மீண்டு, வேகமான வளர்ச்சியை நாடு அடைய வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் முக்கியமானவை. மோடி பிரதமரானால் பொருளாதார ரீதியில் சந்தித்தாக வேண்டிய சவால்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வோம்.
1. ஜி.டி.பி. வளர்ச்சி!
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிதான் ஜிடிபி வளர்ச்சியாகும். விவசாயம், தொழில் துறை, சேவைத் துறை ஆகிய முப்பெரும் துறைகளின் மொத்த உற்பத்தி மதிப்பே ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த மூன்று துறைகளிலும் உள்ள முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?
நம் விவசாயத் துறையில் மிகப் பெரிய பிரச்னை, நீராதாரம். மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்கும் நீராதாரத்தை விடுவித்து, விவசாயத்துக்குத் தட்டுப்பாடு இல்லாமல் நீர் கிடைக்கச் செய்வதற்கான திட்டங்களை மோடி தீட்ட வேண்டும். குஜராத்தில் நர்மதா அணை கட்டியதுபோல, இந்தியா முழுக்க பல பெரிய அணைகளைக் கட்ட வேண்டும். இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தவிர, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து மிகப் பெரிய எதிர்ப்பும் கிளம்பும். நீராதாரப் பிரச்னைக்கு முதலில் முடிவு கண்டால் மட்டுமே, விவசாயம் தொடர்பான அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு கண்டு, குஜராத்தில் 10 சதவிகிதத்துக்கு  மேல் விவசாய வளர்ச்சி கண்டதுபோல, இந்திய அளவிலும் காண முடியும்.
அடுத்து, தொழில் துறை. 2006-07-ல் தொழில் துறையின் வளர்ச்சி கடந்த 15 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு 12.17 சதவிகிதமாக இருந்தது. இதுவே 2012-13-ல் 0.96 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இன்னும் குறைந்து, 2013-14-ல் 0.65 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு தொழில் துறையின் முக்கியமான பிரச்னைகள் பல. போதிய முதலீடு இல்லை; வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், கடன் வாங்க முடியவில்லை; ஏற்றுமதி ஆர்டர் அதிகம் இல்லாத இந்த சமயத்தில், உள்ளூரிலும் பொருட்களுக்கான தேவை குறைவாக இருப்பது; மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால், விலையும் அதிகமாக இருக்கிறது. போதிய அளவு மின்சாரம் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தொழில் கொள்கையில் ஆயிரம் ஓட்டை.
மேலும், சிசிஐ (Cabinet Committee on Investments)கடந்த 15 மாதங்களில் மொத்தம் 83 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில், வெறும் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்லி இருக்கிறது. நிலுவையில் உள்ள திட்டங்களில் 25% மட்டுமே மத்திய அரசின் கட்டுபாட்டுக்குள் வருகிறது. மீதமுள்ளவை சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி, தேவை போன்ற காரணங்களால் தாமதமாகி வருகின்றன.  நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நம் நாட்டுக்குள் வராததும் முக்கிய காரணம்.
இந்தப் பிரச்னைகள் எல்லாமே ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிடக்கூடியவை அல்ல. இவற்றை எல்லாம் சரிசெய்தால் மட்டுமே மோடியால், தொழில்துறை வளர்ச்சியில் சாதிக்க முடியும்.
மூன்றாவதாக, சேவைத் துறை. 2005-லிருந்து 2011 வரை சுமார் 10 சதவிகித வளர்ச்சி அடைந்த சேவைத் துறை, 2012-13-ல் 6.96 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. சேவைத் துறையில் முக்கிய பங்களிப்பது, ஐ.டி நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் வளர்ச்சியானது வெளிநாட்டுப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மத்திய அரசாங்கமானது ஐ.டி. துறை நிறுவனங்களுக்கு ஓரளவுக்கு மட்டுமே உதவ முடியும். தவிர, இந்தத் துறையின் வளர்ச்சி தற்போது ஓரளவு நன்றாகவே இருக்கிறது. எனவே, மத்திய அரசினால் இந்தத் துறைக்கு எந்த வகையில் இன்னும் உதவ முடியும் என்பது முக்கியமான கேள்வி!
இந்த மூன்று விஷயங்களிலும் உள்ள முட்டுக்கட்டைகளுக்கு மோடி எப்படி முடிவு காணப்போகிறார் என்பது அவர் முன் இருக்கும் மிகப் பெரிய சவால்!
2. நடப்புக் கணக்கு பற்றாக்குறை!
ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான், இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை. நம் ஏற்றுமதி 1000 கோடி ரூபாய்;  இறக்குமதி 500 கோடி ரூபாய் எனில், நம்மிடம் 500 கோடி ரூபாய் மீதமிருக்கும். இது பாசிட்டிவ்-ஆன விஷயம். ஆனால், நம் பிரச்னையோ ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருப்பதே. இதனால், நம்மிடம் இருக்கும் வெளிநாட்டுப் பணமான டாலரையும் யூரோவையும் விற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் விளைவாக நமது ரூபாயின் மதிப்பு சரிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலை தந்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை கணிசமாக குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  
எக்கச்சக்கமான வெளிநாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வந்ததாலும், நம் ஏற்றுமதி இறக்குமதியைவிட அதிகமாக இருந்ததாலும், 2000-04 வரையிலான நான்கு ஆண்டுகளில் நம் நடப்புக் கணக்கு பற்றாக்குறை சுமார் 2.3% வரை ப்ளஸ்-ல் இருந்தது. 2006 முதல் சரியத் தொடங்கிய இது, 2013-ல் 4.6 சதவிகிதத்துக்கு மேல் சென்று, நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கடையாக மாறி, நந்திபோல நடுவில் வந்து நிற்கிறது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறையை நாம் கணிசமாகக் குறைக்க வேண்டுமெனில் ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும். இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வெளிநாடுகளில் தேவை குறைவாக இருப்பதால், ஏற்றுமதியை ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
சரி, இறக்குமதியையாவது குறைக்கலாம் என்றால், அதுவும் முடியாது என்பதே நிதர்சனம். காரணம், நம் இறக்குமதியில் பெரும்பங்கு வகிப்பது தங்கமும் கச்சா எண்ணெயும். தங்கத்தின் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டிருப்பதால், அதன் இறக்குமதி தற்போது குறிப்பிட்டுச் சொல்கிற அளவு குறைந்திருக்கிறது. எனினும், இந்த வரிகள் நீக்கப்பட்டால் மீண்டும் தங்க இறக்குமதி  கணிசமாக அதிகரிக்கும்.  
அதேபோல, கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யவில்லை எனில், இங்கு எந்த வண்டியும் ஓடாது. வண்டிகள் ஓடவில்லையெனில், பொருளாதாரம் முன்னேறாது. எனவே, நடப்புக் கணக்கு பற்றாக்குறை பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது இரண்டாவது பெரிய சவால்!  
3. பணவீக்கம்!
விலைவாசி உயர்வைத்தான் பொருளாதார பாஷையில் பணவீக்கம் என்கிறோம். இந்த பணவீக்கம் என்பது சாப்பாட்டில் சேர்க்கும் உப்பு மாதிரி. சாப்பாட்டில் உப்பு இருந்தால்தான் உணவு சுவைக்கும். பணவீக்கம் ஓரளவுக்கு இருந்தால்தான், பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். இதனால் அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் விலை அபரிமிதமாக உயராமல் இருக்கும்.  
ஆனால், சாப்பாட்டில் உப்பானது அளவுக்கு மிஞ்சி இருந்தால், அதை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிற மாதிரி, பணவீக்கம் அளவுக்கு மிஞ்சி இருந்தால், மக்களால் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். அப்படியே வாங்க வேண்டும் எனில், கையில் இருக்கும் காசையெல்லாம் தரவேண்டிய நிலை உருவாகும். இதனால் மக்களின் சேமிப்பு குறையும். சேமிப்பு குறைந்தால், கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். கடனைத் திரும்பத் தரமுடியவில்லை எனில், பொருளாதாரம் திவாலாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தைத் தாண்டிச் சென்று, நம்மை எல்லாம் பயமுறுத்திய நுகர்வோர் பணவீக்க குறியீடு (CPI), 2013 பிப்ரவரியில் 8.79 சதவிகிதத்தை அடைந்து, 2014 பிப்ரவரியில் 8.10 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த பணவீக்கத்தை சுமார் 5 சதவிகிதத்துக்குள் மோடி கொண்டுவந்தால் மட்டுமே மக்களின் சேமிப்பைப் பெருக்கி, மிகப்பெரிய வளர்ச்சியைக் காண வைக்க முடியும்.
பணவீக்கத்தினைக் குறைக்க பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டும். மக்களின் வருமானத்தைப் பெருக்க வேண்டும். முக்கியமாக, கச்சா எண்ணெயின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மூன்று முக்கியமான விஷயங்களில் முதலிரண்டு விஷயங்களைச் செய்வதற்கே மோடி மிகவும் கஷ்டப்பட வேண்டும். (கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவது மோடியின் கையில்  இல்லை. அதை உற்பத்தி செய்யும் நாடுகளே அதன் விலையை நிர்ணயம் செய்யும்!) இந்த மூன்று விஷயங்களிலும் காங்கிரஸ் அரசாங்கம் உருப்படியாக எதுவும் செய்யத் தவறியதால்தான் இப்போது மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறது. அந்த நிலை தனக்கு வராமல் பார்த்துக்கொள்வது மோடியின் முன்பு இருக்கும் மூன்றாவது பெரிய சவால்!  
4. வட்டி விகிதம்!
பணவீக்கத்தை ஒரு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது, அதைச் செய்ய வேண்டிய வேலையை  ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்கிறது. வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி முயற்சி செய்கிறது. கடனுக்கான வட்டியை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுத்து, பொருட்களின் விலை உயராமல்  பார்த்துக் கொள்கிறது.
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி அதிகமாக இருப்பதால், மக்களிடம் இருக்கும் பணம், வங்கி லாக்கருக்குள் முடங்குகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணம் கிடைக்காமல் திண்டாடுகின்றன. கடனுக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி உயர்த்திவிடுவதால், தொழில் நிறுவனங்களால் அதிக வட்டியில் கடன் வாங்க முடிவதில்லை. அப்படியே வாங்கினாலும் கிடைக்கும் லாபமெல்லாம் வட்டி கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது.
நம் நாட்டில் உள்ள நடைமுறையின்படி, கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்படியோ அல்லது குறைக்கும்படியோ மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக  கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவுக்கும் இடையே நடந்த பனிப்போர் எல்லோருக்கும் தெரியும். இப்போதிருக்கும் கவர்னர் ரகுராம் ராஜனும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்பவர் அல்ல. எனவே, இந்த பிரச்னைக்கு மோடி எப்படி தீர்வுகாணப் போகிறார் என்பது அவர்முன் உள்ள நான்காவது பெரிய சவால்.  
உள்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான தட்டுப்பாடு கடுமையாக இருக்கும்போது, வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினைப் பெறவேண்டிய கட்டாயம் ஒரு அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது. 1991-ல் தாராளமயமாக்கல் அறிமுகமானபிறகு ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டுக்குள்வரும் அந்நிய  முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதே காலகட்டத்தில் சீனா பெற்ற அந்நிய முதலீட்டுடன் ஒப்பிட்டால், பத்தில் இரண்டு பங்கு அளவுகூட நம்மால் அந்நிய முதலீட்டைப் பெற முடியவில்லை.
மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நிய முதலீட்டை குஜராத்தில் கொண்டுவந்து குவித்ததுபோல, இந்திய அளவிலும் குவித்தால் மட்டுமே தொழில்துறை அதிவேகமாக வளர்ச்சி காணத் தொடங்கும். ஆனால், அந்நிய முதலீடு நம் நாட்டுக்குள் வந்து குவிய வேண்டும் எனில், நமது தொழில் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரு மாநில அளவில் இந்த மாற்றங்களை எளிதாகச் செய்துவிட முடியும். ஆனால், அதையே இந்திய அளவில் செய்யும்போது, பல பிரச்னைகள் வரும்.
உதாரணமாக, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால், வணிகர்களின் வெறுப்புக்கு மோடி ஆளாக வேண்டியிருக்கும். இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு காணப் போகிறார் என்பது மோடி முன் உள்ள ஐந்தாவது சவால்!
(சவால்கள் தொடரும்)

வளர்ச்சியே தாரக மந்திரம்! 

எம்.ஆர்.வெங்கடேஷ், ஆடிட்டர் மற்றும் பொருளாதார நிபுணர்
''மற்ற அரசியல் தலைவர்கள் தங்களது அறிக்கையில் இலவசம் என்ற விஷயத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், மோடி இலவசம் என்கிற வார்த்தையை அறியாதவராக இருக்கிறார்.
மற்றத் தலைவர்களைப் போல் எழுச்சி, கிளர்ச்சி என்று பேசாமல் வளர்ச்சியையே தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படுகிறார். கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை விஷயத்தில் மிகத் தெளிவாகத் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
குஜராத்தில் ஊழல் என்பதே கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம். ஊழல் குஜராத்தில் இல்லை என்று என்னால் சொல்லிவிட முடியாது. ஆனால், நம் நாட்டில் முதலமைச்சர்களை, அமைச்சர்களைப் பார்க்கவேண்டும் என்றாலே கத்தை கத்தையாக பணத்தைத் தரவேண்டும் என்கிற நிலை குஜராத்தில் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
மஹாராஷ்டிராவில் விவசாயத் தற்கொலைகள் அதிகம். ஆனால், குஜராத்தில் விவசாயத் தற்கொலை குறைவு. பல்வேறு ஆறுகளுக்கு இடையே இருந்த 10 ஆயிரம் செக் டேம்களை 1.50 லட்சம் செக் டேம்களாக மோடி உயர்த்தியதால், அங்கு விவசாயத்துக்குத் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை.  
மோடி இளைஞர்களின் ஆதரவை பெரிய அளவில் பெற்றிருக்கிறார். தன்னுடைய சிந்தனைகள் அவர்களைப் போய்ச் சேரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதனாலேயே தொழில்நுட்பத்தின் மூலம் தனது சிந்தனைகளை கொண்டுபோய் சேர்க்கிறார்.  
அரசாங்கத்தின் வேலை, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. இதை மோடி அரசு மிகச் சிறப்பாகச் செய்துவருகிறது. எதிர்காலத்தில் மோடியின் இலக்கும் அதுவாகவே இருக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் இலக்கு வைத்து, அந்த இலக்குக்குத் திறமையான, நம்பகத்தன்மையான ஆட்களை நியமித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார் மோடி!''
- செ.கார்த்திகேயன்

சந்திக்கவேண்டிய சவால்கள் பல!

பேராசிரியர் ஆர்.சீனுவாசன், சென்னைப் பல்கலைக்கழகம்
''மோடி தனக்கு பலமான அடை யாளமாகக் காட்டுவது குஜராத் மாநிலம் கண்டிருக்கும் வளர்ச்சியைத்தான். ஒரு மாநிலத்துக்கென வகுக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகளும், திட்டங்களும் வேறு; ஒரு நாட்டுக்கு வகுக்கப்படும் திட்டங்களும், கொள்கைகளும் வேறு என்பதை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
குஜராத் மாநிலத்தில் உள்ளது போன்ற வசதிகள் இந்தியா முழுவதும் அமைக்கப்படும்; சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்; புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என பல பிரமாண்டமான விஷயங்களை மோடி தொடர்ந்து சொல்லி வருகிறார். இது சாத்தியமில்லாதது. ஒரு நகரம் என்பது அங்கு உருவாகும் வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் போன்றவற்றை பொறுத்தே உருவாகும். சில வருடங்களுக்குமுன் வேலூர் அவ்வளவு பெரிய நகரமாக பேசப்படவில்லை ஆனால், ஆறுவழிச் சாலை போடப்பட்டபிறகு அது தானாகவே பெரிய நகரமாக வளர்ந்துவிட்டது. எனவே, நகரங்களை உருவாக்கும்போது சரியான திட்டமிடல் அவசியம். இதற்கு அவர் சொல்லும் திட்டங்களை எப்படி செயல்படுத்தப்போகிறார் என்பதே முக்கியமான விஷயம்.  
இந்திய மக்கள் தொகையில் 18-19 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3 கோடி என்கிற அளவில் உள்ளதால் இளைஞர்களின் சமூக அக்கறைக்கும் எண்ணங்களுக்கும் தீனிபோடும் தலைவர் வேண்டும் என்ற கருத்தும் வலுப்பட்டுள்ளது. மேலும், பெரியவர்கள் முதல் பெண்கள் வரை ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டுவரவே விரும்புகிறார்கள்.
தற்போதைய அரசின் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துபோனதால், மோடிக்கு வலுவான போட்டி இல்லை என்ற சூழல் உருவாகி இருந்தாலும், அவர் பக்கமும் குறைகள் இருப்பதால் மக்கள் யாரைத் தேர்வு செய்வது என்று குழம்பிப் போயிருக்கின்றனர்.
ஒருவேளை மோடி பிரதமராவார் என்று வைத்துக்கொண்டால், கிராமங்களுக்குச் சென்று டீ கடை திறப்பு விழா செய்யாமல், மக்கள் நலனுக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். அவருக்கு நிறையவே சவால்கள் காத்திருக்கின்றன. இந்த சவால்களைத் தாண்டி வருவதில்தான் அவரது வெற்றி இருக்கிறது!''
- ச.ஸ்ரீராம்
- VIkatan