Tuesday, April 15, 2014

புதிய வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு?

இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 23 கோடி. தமிழகத்திலோ 12 லட்சம். முதன்முறையாக வாக்குச்சாவடி வரிசையில் வந்து நிற்கும் இந்த புதிய வாக்காளர்களின் மனநிலை என்ன? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் முறை விரல் பதிக்கப்போகிறவர்களை மட்டுமே குறிவைத்து கருத்துக் கணிப்பை நடத்தியது ஜூனியர் விகடன். 5,744 பெண்கள் உட்பட மொத்தம் 11,763 இளைஞர்களிடம் சர்வே படிவங்களைப் பூர்த்திசெய்து வாங்கினோம்.

தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட சர்வேயில், இளம் வாக்காளர்களின் பல்ஸ் ரிப்போர்ட் இது.
ஏற்கெனவே எடுக்கப்பட்ட சர்வேக்களில், விலைவாசி உயர்வைத்தான் மக்கள் பிரதான பிரச்னையாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால், புதிய வாக்காளர்கள் அதிகம் வெறுப்பது லஞ்சம் ஊழலைத்தான்!
'எதை மனதில் வைத்து ஓட்டுப் போடுவீர்கள்?’ என்ற கேள்விக்கு 'பிரதம வேட்பாளர்’ என்பதுதான் அதிக ஓட்டுகளைப் பெற்றிருக்கிறது. இது ஒரு முக்கியமான நிலைப்பாடாக உள்ளது.
'மத்திய காங்கிரஸ் ஆட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?’ என்ற கேள்விக்கு 'மிக மோசம்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம். மோசம் என்று சொன்னவர்களது எண்ணிக்கையையும் சேர்த்தால் இவர்களுக்கு காங்கிரஸ் அரசு மீதான கோபத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
இளைஞர்களிடையே சமீப காலமாக வரவேற்பைப் பெற்றிருக்கும் ஆம் ஆத்மி பற்றிய கேள்விகளையும் சர்வேயில் இணைத்திருந்தோம். ஆனால், ஆம் ஆத்மியின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு, 'அதுவும் மற்ற கட்சிகளைப்போலத்தான்’ என்று 50 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.
'ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போடுவீர்களா?’ என்ற கேள்விக்கு, அதிகம் பேர் 'முடிவு எடுக்கவில்லை’ என்று சொன்னார்கள்.
நரேந்திர மோடிதான் நல்லாட்சி தருவார் என 36 சதவிகிதம் பேர் சொன்னார்கள். அதற்கு அடுத்த இடத்தில் ஜெயலலிதா இருக்கிறார்.
'உங்கள் ஓட்டு யாருக்கு?’ என்ற முக்கியமான கேள்விக்கு பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் வரவேற்பு அதிகம். 31 சதவிகிதம் பேர் பி.ஜே.பி. கூட்டணிக்கு வாக்களிக்கப்போவதாக கருத்துச் சொன்னார்கள். அதற்கு அடுத்த இடத்தில் அ.தி.மு.க. இடம்பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில்தான் தி.மு.க. இருக்கிறது.
'நோட்டாவுக்கு உங்கள் ஆதரவு உண்டா?’ என்ற கேள்விக்கு, 'முடிவு எடுக்கவில்லை’ என்று 40 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். 32 சதவிகிதம் பேர் 'உண்டு’ என்று சொன்னார்கள்.
இன்றைய இளைஞர்கள் லஞ்சம், ஊழல் போன்ற முறைகேடுகளுக்கு எதிராக இருப்பதையும் இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதைப் பார்த்து வாக்களிக்கத் தயாராகி வருவதையும் இந்தக் கருத்துக் கணிப்பு மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.


- Vikatan

No comments:

Post a Comment