Saturday, April 5, 2014

ஆறாம் திணை - 80

ஆறாம் திணை - 80
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ம.செ.,
''நம் குழந்தைகள், நமக்கு முன்னர் மரணம் அடையும் கொடூரமான தலைமுறைகள் உருவாகிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது!’ என்று கருத்தரங்கில் கேட்ட ஒரு வரி, என்னை திகீர் என்று உலுக்கியது. யோசித்துப் பார்த்தால்... ஆம், உண்மைதான் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை என் தோழனாக இருந்த நண்பன், புற்று நோயுடனான போராட்டத்தில் வலுவற்று வீழ்ந்தபோது, 'சாகிற வயசாடா இது..? ஒரு இடத்துல நிக்காம ஓடியாடிக்கிட்டு இருந்தியே. சிகரெட், குடினு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையேடா உனக்கு! நான் இருக்க நீ ஏண்டா இவ்ளோ சீக்கிரம் போகணும்?’ என்று அவனுடைய அம்மா கதறியது, இன்னும் மனதை அழுத்திக்கொண்டே இருக்கிறது.
சர்க்கரை, மாரடைப்பு, புற்று ஆகியவை இளைஞர் கூட்டத்தைத் தறிகெட்ட வேகத்தில் சிதைத்துக் கொண்டி ருக்கின்றன. அதன் வீரியத்தைத் தீவிர மாக்குகின்றன மன அழுத்தம், பணிச்சுமை, சமூக ஒப்பீடு நிர்பந்தம். இப்படி வாழ்வியல் நோய்க் கூட்டப் பிடியில் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தொலைப்பதில் இருந்து தப்பிக்க, ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே தொலைதூரத்தில் தெரியும் சிறு ஒளிக்கீற்று!  
காமாலை முதலான நோய்க்கிருமியின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரலைத் தேற்றி, அந்தக் கிருமிக்கான எதிர் மருந்தாகவும் சித்த மருத்துவர் கீழாநெல்லியைக் கொடுப்பார். அதே போல் சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு அமிக்காசின் எனும் எதிர் நுண்ணியிரி மருந்தை நவீன மருத்துவர் கொடுக்கக்கூடும். விபத்தில் ஏற்பட்ட சாதாரண எலும்பு முறிவை நவீன மருத்துவர் மாவுக்கட்டோ அல்லது அவசரம்/தீவிரம் பொறுத்து அறுவை சிகிச்சையோ செய்வார். அதனையே பாரம்பரிய வர்ம மருத்துவர் வர்ம ஒடிவுமுறிவு சிகிச்சை செய்தும் குணப்படுத்துவார். ஆனால், இங்கெல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்சை அதிகம் தேவைப்படுவது இல்லை.
அதே சமயத்தில் ரத்த சர்க்கரை வியாதி, புற்றுநோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பை நிகழ்த்தக்கூடிய ரத்தக்கொதிப்பு, கொழுப்பு நோய்களில் ஒரு மருந்தோ, ஒரு சிகிச்சை முறையோ மட்டும்கொண்டு முழுமை யாகக் குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
சரியான உணவு, உடற்பயிற்சி, யோகா, வாழ்வியல், மனமகிழ்ச்சி, சரியான மருத்துவம் இப்படி எல்லாம் ஒருங்கிணைந்த சிகிச்சை மட்டுமே அப்படியான சூழ்நிலைகளில் பயனளிக்கக்கூடும்.
ருத்துவர் சாஹே, 1980- களிலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மயூராசனம், அர்த்தமச் யேந்திராசனம், ஹம்சாசனம், வக்ராசனம், தனுராசனம் முதலான யோகாசனங்கள் பயன் அளிப்பதைச் சரியான ஆய்வுகள் மூலம் நிரூபித்து, மருத்துவப் பத்திரிகைகளில் பதிப்பித்தார். அதேபோல், நம் ஊர் வேங்கைப்பட்டையின் Pterostilbene எனும் ரசாயனமும், வெந்தயத்தின் கரையும் நார்ச்சத்தும், ஆரம்ப நிலை சர்க்கரை நோய் முழுமையான சர்க்கரை நோயாக மாறுவதைத் தடுப்பதிலும் தாமதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன.
இதேபோல நம் ஊர் கடலழிஞ்சிலை, அமெரிக்க ஒஹியோ பல்கலைக்கழகம் ஆய்வுசெய்து சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும் அதன் பயன்பாடுகளை சமீபத்தில் காப்புரிமை செய்துவைத்திருக்கிறது. இன்னும் திரிபலா, கொன்றை, நாவல், சிறுகுறிஞ்சான், மருதம்பட்டை, வில்வம்... என நம் நாட்டு மூலிகைகளும், நாம் அன்றாடம் சாப்பிடும் கறிவேப்பிலை, லவங்கப்பட்டை, கோவைக்காய், பாகற்காய், கத்திரியின் விதை முதலான பல உணவுக் காய்கறிகளும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை பல பல்கலைக்கழக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.  
உலகின் மற்ற நாடுகளில் இந்த உணவோ பாரம்பரியப் புரிதலோ, சிகிச்சையோ மிக மிகக் குறைவு. ஆனால், அங்கும் இந்த முறைகள் இப்போது நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. கீமோ எடுக்கும் நோயாளி, 'தாய்ச்சி யோகா’ செய்கிறார்; தொடு சிகிச்சை மேற்கொள்கிறார்; நன்கு ஆராயப்பட்ட தாவர மருந்துகள் எடுக்கிறார். ஆனால், இவை அனைத்தும் ஆண்டாண்டு காலமாக இங்கு இருந்தும், இன்னும் சர்க்கரை முதலான வாழ்வியல் நோய்களில் ஒருங்கிணைந்த சிகிச்சைத் திட்டம் வழக்கில் இல்லை.
நவீன மருத்துவர் ஒருவரிடம் செல்லும் இந்த நோயாளி கொஞ்சம் தைரியத்துடன், 'சார் நான் கூடவே இந்த வைத்தியம் எடுக்கலாமா சார்?’ எனக் கேட்டால் பல நேரங்களில், 'எனக்கு இதைப் பத்தியெல்லாம் தெரியாது’, 'ஏன் அதையும் இதையும் குழப்பிக்கிறீங்க? அப்புறம் ஏதாச்சும் தொந்தரவு வந்தா, என்னைக் கேட்கக் கூடாது’ என்ற பயமுறுத்தல் பதில்களேதான் பெரும்பாலும் வரும்.
அதேசமயம், இலை, காய்கறி, மூலிகை மட்டுமே உடலில் முழுவதும் வியாபித்துவிட்ட சர்க்கரை நோயைப் பூரணமாகக் குணமாக்கிவிடும் சாத்தியமும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகமிக அவசியமாகிறது.
இதைச் சாத்தியப்படுத்த பாரம்பரிய மருத்துவப் பயன், தெளிவு, அதில் சமீபமாக நடந்தேறியிருக்கும் ஆய்வு பற்றி எல்லாம் அறிந்த நவீன மருத்துவரும், அறம் மீறாத நவீன மருத்துவத்தின் தேர்ந்த பயனும் அவசியமும் புரிந்த பாரம்பரிய சித்த - ஆயுர்வேத மருத்துவரும் ஒரே மேசையில் அமர்ந்து பரிந்துரைக்க வேண்டும். இதுதான் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முழுமுதல் தேவை!
முதலில் எந்தச் சிகிச்சை, பின்னர் எந்தச் சிகிச்சை, எவ்வளவு நேர இடைவெளியில் மருந்துகளை ஒருங்கிணைக்கையில் மருந்துகளின் Bioavailability  மாறாது கொடுக்க வேண்டும் என்ற காய்ப்பு உவப்பு இல்லாத கலந்துரையாடல் வேண்டும். எந்த ஆசனங்களை/மூச்சுப்பயிற்சியைச் செய்ய வேண்டும்? உயிருக்கு ஆபத்தான நிலையிருப்பின் உடனடியாக எந்தச் சிகிச்சை அவசியம்? நாட்பட்டு முழுமையாக அவர் நலமாக, எந்தெந்த உணவும் மருந்தும் உட்கொள்ள வேண்டும் என்பதை பல தரப்பு மருத்துவர்களும் கலந்து தீர்மானிக்க வேண்டும்.  'என்னால் முடிஞ்சது அவ்வளவுதான். நீ எங்கேயாவது போய் பார்த்துக்கோ...’ என நகர்த்திவிடும் மனோபாவத்தை ஒழிக்க வேண்டும்.
'எல்லாப் பேரழிவிலும் பிரகாசமான வாய்ப்பு ஒன்று உண்டு’ எனச் சொல்லும் வணிகச் சித்தாந்தங்களின்படி பணக்காரர்களுக்காக மட்டும் ஒருங்கிணைந்த மருத்துவத்தைப் பேச்சு அளவில் பல அடுக்குமாடி கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், ஒவ்வொரு கிராமப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் ஒரே கட்டடத்தின் முன்னும் பின்னும் அரசின் அத்தனை துறை மருத்துவர்களும் பணியில் இருக்க, பல இடங்களில் அவர்களிடையே குறைந்தபட்ச ஒருங்கிணைப்புகூட இல்லாததுதான் வேதனையான விஷயம்.
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!’ என்று பெருமை தரும் பெருவாரியான பல்லுயிரிய மண்டலங்கள் இங்கு உண்டு. 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?’ என்ற உலகின் தொன்மையான அனுபவத்தையும் தன்னுள்கொண்ட உலகின் வழக்கிலுள்ள ஒரே செம்மொழியும் இங்குதான் உண்டு. சகமனிதரைத் தோள்சேர்க்க மறுக்கும் சாதியமும், இருப்பவனுக்கு மட்டும்தான் இவ்வுலகம் எனும் பன்னாட்டு வணிகப்படியும் இதனை தெரியாதவண்ணம் இத்தனை காலம் நம் கண்களை மறைத்து நின்றன. கொஞ்சம் விழிப்பும் முனைப்பும் மட்டும் இருந்தால், உலகின் மருத்துவக் கூரையாக உயர்ந்து நிற்க, இங்கு கொட்டிக்கிடக்கும் பாரம்பரிய உணவும் மருந்தும் வாழ்வியலும் ஒருங்கிணைந்தால் போதும்!
- பரிமாறுவேன்...
- Vikatan

No comments:

Post a Comment