Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை!- 36

இந்திரா படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்தியை பிரதமர் ஆக வேண்டாம் என்று தடுத்தவர்-

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு இத்தாலிக்குப் போய்விடலாம் என்று யோசித்தவர்-
தன்னுடைய குழந்தைகளை அரசியல் வாசனை இல்லாமல் வளர்க்க வேண்டும் என்று நினைத்தவர்-
எத்தனையோ பேர் வந்து நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னபோது, அதனை மறுத்தவர்_ என்றெல்லாம் தன்னுடைய இமேஜைக் கட்டமைத்துவந்த சோனியா, மெள்ள மெள்ள அரசியலுக்குள் தன்னை நகர்த்திகொண்டு வந்தார் என்பதுதான் உண்மை!
1991 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி காரணமாக பிரதமர் ஆனவர் நரசிம்ம ராவ். அவருக்கும் சோனியாவுக்கும் அதற்கு முன் அறிமுகம் இருந்தது இல்லை. இந்திராவின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டவர் என்ற அடிப்படையில் லேசான அறிமுகம் மட்டும்தான் இருந்தது. ராஜீவ் காந்தி நினைவு மைய அறக்கட்டளை அமைத்து அதனைக் கவனித்துக்கொண்டு இருக்கப்போவதாகச் சொன்ன சோனியா, தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத நரசிம்ம ராவை அந்த அறக்கட்டளைக்குள் கொண்டுவந்தார். தன்னுடைய நிழலைக் கூடச் சந்தேகப்படக் கூடிய ராவுக்கு சோனியா ஏன் நமக்கு மகுடம் சூட்டுகிறார் என்பது புரியவில்லை. தன்னைச் சுற்றி ஏராளமான அரசியல் எதிரிகள் இருக்கும் நிலையில் இந்திரா குடும்பத்தின் ஆதரவு தனக்கு அவசியம் என்பதால் அந்தப் பொறுப்பை ராவ் ஏற்றுக்கொண்டார். இந்த அறக்கட்டளையின் கூட்டம் சோனியா குடியிருந்த 10, ஜன்பத் வீட்டில்தான் நடந்தது. ஒரு தனியார் அறக்கட்டளையில் பிரதமர் பதவியில் இருப்பவர் இடம்பெறலாமா என்ற சர்ச்சை நடந்துகொண்டு இருக்கும்போதுதான், இந்தக் கூட்டம் சோனியா வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சோனியாவின் வீட்டில் நடக்கும் தனியார் அறக்கட்டளைக் கூட்டத்துக்கு பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் போகலாமா என்ற சந்தேகக் கேள்வியை நரசிம்ம ராவைச் சுற்றி இருப்பவர்களே கிளப்பினார்கள். ராஜீவ் காந்தியின் அலுவலகம் இருந்த 7, ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் அதனை நடத்தலாம், அங்கு பிரதமர் போனால் தவறு இல்லை என்றும் சொன்னார்கள். சோனியாவின் நட்புதான் முக்கியம் என்பதை உணர்ந்த ராவ்... 10, ஜன்பத் வீட்டுக்குப் போக முடிவெடுத்தார். இது சோனியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி. காங்கிரஸ் கட்சிக்கு சோனியா வீசிய முதல் தூண்டில் அதுதான். அதில் ராவ் சிக்கினார்.
இதற்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டாமா?
ராவ் ஆட்சியின் நிதி அமைச்சராக வந்து உட்காருகிறார் மன்மோகன் சிங். அதுவரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் அவர். சோனியாவின் நட்பைத் தொடருவதற்கான முன்னோட்டமாக ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளைக்கு 100 கோடி ரூபாய் நிதியை ராவ், சிங் ஆகிய இருவரும் சேர்ந்து ஒதுக்கினார்கள். ஒரு தனியார் அறக்கட்டளைக்கு அரசாங்கப் பணம் 100 கோடி ரூபாய் தூக்கித் தரப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ராஜீவ் நண்பர்களான எம்.பி-க்கள் அவர்களை விமர்சித்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ராவ், மன்மோகன் ஆகிய இருவரும் திணறினார்கள். எதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்தோம் என்பதை நியாயப்படுத்தி அவர்களால் ஒரு காரணமும் சொல்ல முடியவில்லை. சோனியாவுக்கும் விளக்கம் தர இயலவில்லை. மன்மோகனை அழைத்து, 'இந்தப் பணத்தை தர முடியாத நிலைமையில் இருக்கிறோம்’ என்பதைச் சொல்லிவிட்டு வரச் சொன்னார் ராவ். 'தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் பணத்தைத் தருவது பெரும் சர்ச்சை ஆகிவிட்டது. இது ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தும்போல் இருக்கிறது. எனவே, எங்களால் தர முடியவில்லை’ என்பதைச் சொல்லிவிட்டு வந்தார். 'எத்தனையோ பேரைக் காப்பாற்றும் நரசிம்ம ராவால் இதனைச் செய்து தர முடியாதா?’ என்ற வருத்தம் சோனியாவுக்கு ஏற்பட்டது. 'அறக்கட்டளைக்கு என்ன நோக்கத்துக்காகப் பணம் தர முன்வந்தீர்களோ... அதே நலத்திட்டங்களுக்கு இந்தத் தொகையைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும்’ என்று கிண்டலாக ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துவிட்டு சோனியா அமைதியாக இருந்தார்.
ஆனால், அவரது உதவியாளராகவும் பாதுகாவலராகவும் இருந்த ஜார்ஜ் அமைதியாக இல்லை. சோனியாவையும் சும்மா விடவில்லை. அவருக்கு அரசியல் ஆசை தலைதூக்கியது. நாம் பார்த்து வந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக, எம்.பி-க்களாக இருக்க, தான் மட்டும் இன்னும் பாதுகாவலர் என்று அறியப்படுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைக்கு போவதற்குத் திட்டமிட்டார். எந்த மாநிலத்தில் இடம் காலியாகிறது என்று பார்த்தார். கர்நாடகாவில் ஒரு இடம் காலியாவது தெரிந்தது. அந்த இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த மார்க்ரெட் ஆல்வா குறிவைத்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸார் எதிர்ப்பு கிளப்பினார்கள். ஜார்ஜ், கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவின் முக்கியத் தலைவரான கே.கருணாகரனும் ஜார்ஜுக்கு ஆதரவு காட்டினார். ஆனால் ஜார்ஜுக்கு பதவி தருவதில் ராவ் தயக்கம் காட்டினார். சோனியா அரசியலுக்குள் நுழைவதற்கான அஸ்திரம் இது என்று ராவ் நினைத்தார். ராஜீவ் காலத்தில் முக்கியமான அதிகார மையமாக இருந்தவர் ஜார்ஜ் என்பது ராவுக்குத் தெரியும். அதனால்தான் கட்டையைப் போட்டார். இப்படிச் செய்வதாலேயே சோனியா எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தால் சிக்கல் ஆகுமே என்றும் ராவ் யோசித்தார். அதனால் சோனியாவைப் போய் பார்த்தார். ஜார்ஜுக்குத் தரலாமா என்று கேட்டார். கட்சி விதிப்படி முடிவெடுங்கள் என்றார் சோனியா. பெரிய மனிதர்கள் அப்படித்தானே சொல்வார்கள். 'கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ், கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது சரியல்ல’ என்று சொல்லி மார்க்ரெட் ஆல்வாவைத் தேர்வுசெய்தார் ராவ். இது சோனியா மனதில் நெருடல் ஏற்படுத்தியது. ஜார்ஜ் வெளிப்படையாக தனது அஸ்திரத்தை எடுக்க ஆரம்பித்தார். இதற்குப் பிறகுதான் ராவ் எதிர்ப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து சோனியாவை சந்திக்க வைக்க ஜார்ஜ் ஏற்பாடு செய்தார். ஒரு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் மாலை வேளைகளில் சோனியாவை அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். ராவ் எதிரிகள் தங்களது புலம்பலைப் பதிவுசெய்யும் இடமாக சோனியா வீடு மாறியது. இவர்கள் அனைவருமே, சோனியாவை அரசியலுக்கு வரச் சொன்னார்கள், காங்கிரஸ் தலைமையை ஏற்கச் சொன்னார்கள். 'பிரதமராக ராவ் இருக்கட்டும், நீங்கள் கட்சித் தலைவராக இருங்கள்’ என்றார்கள். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டார். பதில் எதுவும் சொல்லவில்லை. காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சோனியாவின் முதல் அஸ்திரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வெளியானது. இந்திய மக்களின் மதச்சார்பின்மைத் தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும் மிகப்பெரிய களங்கம் ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு 1992 டிசம்பர் 6-ம் தேதி நடந்தது. அப்போது, பாபர் மசூதி இடிப்பைக் கடுமையாகக் கண்டித்து சோனியாவின் முதல் அறிக்கை வெளியானது. 'இந்த அநியாயத்தை நான் தட்டிகேட்கவில்லை என்றால், அது காந்தி, நேரு, ராஜீவ் ஆகிய மூவரும் கட்டிக் காத்துவந்த மதச்சார்பின்மைக்குச் செய்யும் துரோகம்’ என்று சோனியா அறிக்கை வெளியிட்டார். பாபர் மசூதி இடிப்பைவிட, பிரதமர் நரசிம்ம ராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த அறிக்கைதான். அதுவரை சோனியாவை சந்தித்து ஆலோசனைகள் கேட்டுவந்த ராவ், அதன் பிறகு அந்த நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டார். இடைவெளி அதிகம் ஆனது. சோனியாவைச் சந்தித்தால் அரசாங்க லாபங்களை அடைய முடியாது என்று நினைத்தவர்கள் சோனியாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், ராஜீவ் அறக்கட்டளைக்கு அரசுத் துறைகள் தந்துவந்த உதவிகள் அனைத்தும் தடங்கல் இல்லாமல் கிடைத்துவந்தன. ராவ் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பறிக்க சோனியா அணியினர் திட்டமிட்டனர். அவர்கள் கையில் அர்ஜுன் சிங் மாட்டினார். 'ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற முழக்கத்தை அர்ஜுன் சிங் கிளப்பினார். அப்போது கட்சித் தலைவர், பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் இருந்தார் ராவ். 94-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் அர்ஜுன் சிங் இதனை விவாதப் பொருளாக்கினார். இதில் பல களேபரங்கள் நடந்தன. அனைத்துக்கும் சோனியா ஆசீர்வாதம் உண்டு என்று சொல்லப்பட்டது. இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்தே அர்ஜுன் சிங் விலகினார். கட்சியை விட்டும் விலகினார். அப்போதும் அவரை ஆதரித்து கருத்துச் சொல்லாமல் அமைதியாக இருந்தார் சோனியா.
1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் நாள் ராஜீவ் பிறந்த நாள் விழா அமேதி தொகுதியில் நடந்தது. அப்போது நடந்த காட்சியை சோனியாவின் வரலாற்றை எழுதிய ரஷீத் கித்வாய் விவரிக்கிறார்.
''சேலையால் தலையை மூடிக்கொண்டு பிரியங்கா பின்தொடர அவர் மேடைப்படிகளில் ஏறியபோது, 'சோனியா, தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோஷம் வானைப் பிளந்தது. சோனியா பதற்றத்தில் இருந்தார். ஆனால், பிரியங்கா நம்பிக்கையின் சின்னமாக கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். 'அம்மா, கூட்டத்தைப் பாருங்கள். அவர்களைப் பார்த்து உங்களுக்கு கையசைக்கத் தோன்றவில்லையா?’ என்று சோனியாவின் தோள்களைத் தொட்டுத் திருப்பிக் கூறினார்.
தமது ஏழு நிமிட உரையின்போது மக்களைப் பார்த்து, தம் வேதனையைப் பகிர்ந்துகொள்ளும்படி வேண்டினார். 'ஒரு முன்னாள் பிரதமரின் கொலையை விசாரிக்கவே இத்தனை தாமதம் ஆகுமானால், ஒரு சாதாரண குடிமகனின் கதி என்னவாகும்?’ என்று விசாரணையின் தாமதத்தை மேஜையைத் தட்டி உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார். 'என் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று பேசினார். அரசு அமைப்பின் சதி பற்றி அவர் குறியாகக் கொண்டாலும், அப்போது பிளவுபட்டு பின்னடைவில் இருந்த காங்கிரஸ் கோஷ்டிகள் இதை பிரதமர் ராவுக்கு எதிரான தாக்குதல் என்றே கருதினார்கள்'' என்று எழுதி இருக்கிறார்.
அன்றே சோனியா தலைவராக ஆகிவிட்டார். அதனை எதிர்க்கும் நிலையில் நரசிம்ம ராவ் இல்லை. அரசியல் வியூகங்களை வகுத்து, தான் என்ன செய்கிறோம் என்பதை எந்த இடத்திலும் எதிராளி தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு திரைமறைவு அரசியல் நடத்துவதில் தேர்ந்த ராவ், சோனியாவைப் பார்த்து பயந்ததற்கு காரணம்... அவரது ஆட்சியின் எல்லாப் பக்கங்களும் ஊழல்மயமாகி கேன்சரைப்போல அரிக்க ஆரம்பித்து இருந்ததுதான். ஒரு ஆட்சி முழுமைக்கும் ஊழல்மயமாக ஆக முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்த நரசிம்ம ராவ் ஆட்சி. உதாரணமாகக் காட்ட வேண்டுமானால், இன்றைய மன்மோகன் ஆட்சியின் 'தாய்’ ஆட்சி அது. ஆம், அந்த ஆட்சியில்தானே மன்மோகன் சிங்கும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்!
- Vikatan

No comments:

Post a Comment