Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 31

'வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிட்டார் இந்திரா’ - என்று அடல்பிஹாரி வாஜ்பாயால் 1977-ல் சொல்லப்பட்ட இந்திரா, 1980-ல் இந்தியாவின் பிரதமர் ஆனார். ஜனதா கட்சியின் 'பிரதம’ பிதாமகர்களின் கோஷ்டிப்பூசல்கள் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல... இந்திராவின் துணிச்சலான நடவடிக்கைகளும் சேர்ந்தே கொடுத்த வெற்றி இது. உள்குத்துகளில் இந்தத் தலைவர்கள் மூழ்கி இருக்கும்போது, மக்களுக்குள் நேரடியாக வர ஆரம்பித்தார் இந்திரா.

பீகார் மாநிலம் பெல்ச்சி கிராமத்தில் உயர் சாதிக்காரர்கள் சேர்ந்து தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். 1977 மே 27-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் பெல்ச்சி கிராமத்துக்குச் செல்ல இந்திரா திட்டமிட்டார். எந்த சாலை வசதியும் இல்லாத ஊர் அது. பாதி தூரம் கார். மீதி தூரம் ஜீப். அதுவும் போக முடியாத இடத்தில் டிராக்டர். அது நின்று போனதும் யானை... என்று வாகனத்தை மாற்றி மாற்றி பெல்ச்சி போய்ச் சேர்ந்தார். இது அவரது இமேஜைக் கூட்டியது. 'உங்களுக்கு நாங்கள் ஓட்டுப் போடவில்லை. ஆனால், நீங்கள்தான் எங்களுக்காக வந்திருக்கிறீர்கள்’ என்று அந்த மக்கள் வணங்கினார்கள். அங்கிருந்து லக்னோ போய் தன்னுடைய ரேபரேலி தொகுதிக்கு ரயிலில் போனார். இந்திராவுடன் அப்போது சென்ற பத்திரிகையாளர் ஒருவர், அவருக்கு தரப்பட்ட மரியாதையைப் பார்த்து, 'பத்தே நிமிடங்களில் அந்த மக்கள் இந்திராவை மன்னிக்கத் தயாராகிவிட்டார்கள்’ என்று எழுதினார். இந்த வரவேற்பைப் பார்த்து ஊர் ஊராகப் போக ஆரம்பித்தார் இந்திரா. அதனால்தான் எங்கோ பிறந்த இந்திரா, தென்முனைக்கு வந்து சிக்மகளூர் (கர்நாடகா) தொகுதியில் வெல்ல முடிந்தது. ஆட்சியில் இல்லாத இந்தக் காலத்தில் இந்திரா அலைந்ததைப்போல யாரும் அலைந்திருக்க முடியாது. அதுதான் அவரை மீண்டும் ஆட்சியில் கொண்டுவந்து அமர்த்தியது.
1980 ஜனவரி 3 முதல் 6 வரை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 529 இடங்களில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ், 353 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றி அடைந்தது. அதுவரை ஆட்சியில் இருந்த ஜனதா கட்சி 432 இடங்களில் போட்டியிட்டு, 31 இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. உ.பி-யில் மொத்தம் இருந்த 85 தொகுதிகளில், 51 தொகுதிகளை இந்திரா பிடித்தார். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அனைத்து இடங்களையும் பிடித்தார். தமிழகத்தில் அப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து இந்திரா போட்டியிட்டார். மொத்தம் இருந்த 39 தொகுதிகளில், இந்தக் கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது.
ரேபரேலி தொகுதியில் இந்திராவும், அமேதி தொகுதியில் சஞ்சய்யும் அமோக வெற்றிபெற்றார்கள். இந்த மாபெரும் வெற்றி இந்திராவின் கண்ணை மறைத்ததுதான் காலக்கொடுமை. மூன்றாண்டு கால அரசியல் நெருக்கடியில் இருந்து அவர்  எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே பதவிப் பிரமாணம் எடுத்தபோதும் நிரூபித்தார்.
சஞ்சய் கைகாட்டிய அனைவரையும் அமைச்சர் ஆக்கினார். மூத்த உறுப்பினர்கள் முடக்கப்பட்டார்கள். ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை எல்லாம் மத்திய ஜனதா ஆட்சி கலைத்ததைப்போல, ஜனதா ஆளும் மாநிலங்களை எல்லாம் கலைக்க இந்திரா கையெழுத்திட்டார். உ.பி., ம.பி., பீகார், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஒரிசா,
பஞ்சாப் ஆகிய எட்டு மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அப்போது தி.மு.க-வுடன் அதிக நெருக்கமாவதுபோல காட்டிக்கொண்ட இந்திரா, அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியையும் தமிழகத்தில் கலைத்தார். கலைக்கப்பட்ட இந்த மாநிலங்களில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்திராவின் நோக்கமும் அதுதானே! ஆனால், அது தமிழகத்தில் செல்லுபடி ஆகவில்லை. 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 37 இடங்களை ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு கொடுத்த தமிழ்நாட்டு மக்கள், மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியை படுதோல்வி அடையவைத்து, எம்.ஜி.ஆருக்கு மீண்டும் மகுடம் சூட்டினார்கள்.
இந்த எட்டு மாநிலத் தேர்தல் வெற்றி சஞ்சய் காந்தியின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. அதனால், அவர் கைகாட்டியவர்கள் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்கள். தேசிய அளவில் சஞ்சய்க்கு பதவி தர வேண்டும் என்ற நெருக்கடி இந்திராவுக்கே தரப்பட்டது. இதனை ஏற்று கட்சியின் தேசியப் பொதுச்செயலாளராக சஞ்சய் காந்தியை நியமித்தார் இந்திரா. இதன் பிறகு தன்னுடைய பழைய அதிரடிகளை சஞ்சய் மீண்டும் தொடங்கினார். ஆனால், காலம் வேறு மாதிரி யோசித்தது. 1980-ம் ஆண்டு ஜூன் 13-ம் நாள் கட்சியின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்ட சஞ்சய், அந்தப் பதவியில் பத்து நாட்கள்கூட இருக்கவில்லை. ஜூன் 23-ம் தேதி விமான விபத்தில் காலமானார்.
பிட்ஸ் எஸ்-2 ஏ என்ற ஒற்றை இயந்திர விமானம் அது. வழக்கம்போல் அன்று காலை 8 மணிக்கு பொழுதுபோக்குப் பயணத்தை சஞ்சய் தொடங்கினார். வானத்தில் மூன்று முறை வட்டமிட்டது. நான்காவது முறை கட்டுப்பாட்டை இழந்தது. தன்னுடைய வீட்டில் இருந்து மிகமிகக் குறுகிய தூரத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. அவரோடு பயணித்த துணை விமானி சபாஷ் சக்சேனாவும் உயிரிழந்தார். அப்போது இந்திராவுக்கு வயது 63. ஆடிப்போனார். யாரை தன்னுடைய வாரிசாக நினைத்து வளர்த்து வந்தாரோ, கடந்த ஐந்தாண்டு காலமாக யார் பேச்சைக் கேட்டுச் செயல்பட்டு வந்தாரோ, அந்த சஞ்சய் 33 வயதில் உயிரிழந்தது இந்திராவை நிலைகுலைய வைத்தது. சஞ்சய் - மேனகா தம்பதியினருக்கு வருண் பிறந்து மூன்று மாதம்தான் ஆகியிருந்தது. நான்கு நாட்கள் கழித்துத்தான் வீட்டை விட்டு வெளியில் வந்தார் இந்திரா.
அரசியல் வாரிசான சஞ்சய் இறந்துபோனார். அடுத்து? அந்த இடத்தை அவரது மனைவி மேனகா குறிவைத்தார். ஆனால், மேனகாவைக் கொண்டுவர இந்திராவுக்கு விருப்பம் இல்லை. சஞ்சய் நண்பர்கள் வட்டாரத்தில் மேனகா பிரபலமாகியிருந்தார். 'மேனகாதான் தகுதியானவர். அவர் ஒரு துர்காதேவி’ என்று குஷ்வந்த் சிங் எழுதினார். அவரை இப்படி எழுதவைத்ததே மேனகாதான் என்று இந்திரா சந்தேகப்பட்டார். சஞ்சய்க்கு யாரெல்லாம் நெருக்கமோ... அவர்களை எல்லாம் அங்கிருந்து அப்புறப்படுத்த இந்திரா முடிவெடுத்தார்.
சஞ்சய் காந்தியின் வலதுகரமாகத் திகழ்ந்த அக்பர் அகமது பற்றி ஒரு சம்பவம் சொல்வார்கள். இந்திரா வீட்டுக்குள் அவர் எப்போதும் வரலாம், எப்போதும் போகலாம். சஞ்சய் அவருக்கு அந்தளவுக்கு இடம் கொடுத்திருந்தார். சஞ்சய் மறைவுக்குப் பிறகு மேனகா அந்த அதிகாரம் தந்திருந்தார். மேனகா சொல்வதை நிறைவேற்றும் மனிதராகவும் அக்பர் அகமது இருந்தார். ஒருநாள், பிரதமர் இல்லத்துக்கு வந்த அவரை செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிட்டார். கோபத்தில் அக்பர் கத்தினார். 'என்னை உள்ளே போகக் கூடாது என்று முட்டாள்தனமாக உத்தரவிட யாருக்கு துணிச்சல் வந்தது?’ என்று அக்பர் கேட்டார். 'எனக்குத்தான்’ என்று சொல்லி இந்திரா வெளியில் வந்தார். இதன் பிறகுதான் அரசியலில் தனக்கு எந்த இடத்தையும் இந்திரா தரமாட்டார் என்ற எண்ணத்துக்கு மேனகா வந்தார். உடனடியாக ராஜீவ் காந்தியை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அவசர ஆசையும் இந்திராவுக்குத் துளிர்த்தது.
சஞ்சயின் அண்ணனாக ராஜீவ் இருந்தாலும், அரசியலில் ஆர்வமே இல்லாத தம்பியாகத்தான் இருந்தார். காதல் மனைவி சோனியாவைக் கைப்பிடித்து, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை ஆகி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக நிம்மதியாக குடும்ப வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தார். வீட்டில் நடப்பது எதையும் அறியாதவராக, அறிய விரும்பாதவராக இருந்தார். அலகாபாத் தேர்தலில் இந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்ற கொந்தளிப்பான சூழ்நிலையில் கூட்டப்பட்ட (1975 ஜூன் 20) போட் கிளப் மைதான கூட்டத்துக்கு ராஜீவும் சோனியாவும் முதன்முதலாகப் போனார்கள். 'நான் ஏற்பாடு செய்கிற கூட்டம். நீங்கள் நிச்சயம் வரவேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் சஞ்சய். இந்திராவின் குடும்பத்தினர் அன்று முதல் வரிசையை அலங்கரித்தார்கள். கட்சி மாநாடுகளில் தலைவரின் குடும்பத்தினர் முன்வரிசையைப் பிடிப்பதன் முதல் கூட்டமாகக்கூட அது இருக்கலாம்!
எமர்ஜென்சி காலத்தில்கூட என்ன நடக்கிறது என்றே கவலைப்படாமல் இருந்தார் ராஜீவ். ஒருநாள் மும்பையில் ராஜீவ் போய்க்கொண்டிருந்தபோது, நெடுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 'யார் போகிறார்கள்... இவ்வளவு நேரம் நிறுத்தப்படுகிறதே?’ என்று இறங்கிக் கேட்டாராம் ராஜீவ். 'சஞ்சய் காந்தி போகிறார்’ என்று சொன்னார்களாம். வீட்டுக்கு வந்ததும் சஞ்சயிடம் சண்டை போட்டார். பின்னர், இந்திராவின் தேர்தல் தோல்விக்கு சஞ்சய்தான் காரணம் என்று ராஜீவ் நினைத்தார். அரசியல் அதிகாரம் போன்றவற்றை வெறுக்கும் மனிதராகத்தான் ராஜீவ் ஆரம்பத்தில் இருந்தார்.
ஆனால் விதி, அவரை அரசியலுக்கு அழைத்தது. 81 ஜூன் மாதம் நடந்த அமேதி தேர்தல் களத்தில் ராஜீவ் நிறுத்தப்பட்டார். விமானம் ஓட்டுவதிலும் புகைப்படம் எடுப்பதிலும் மட்டுமே ஆர்வமாக இருந்த ராஜீவ், அரைகுறை விருப்பத்துடன் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டார். இது மேனகாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இது இந்திரா - மேனகா மோதலாகவும், மேனகா - சோனியா மோதலாகவும் மாறியது.
''இந்திரா முதலில் மேனகாவின் நிராதரவான நிலையைப் புரிந்துகொண்டார். மேனகாவுக்குப் பரிவு காட்டும் எண்ணத்தில் தம்மோடு பயணித்து தம் செயலாளராக இருந்துகொள்ளவே இளம் விதவையான அவரை அனுமதிக்க விரும்பினார். இது சோனியாவைக் கலங்கவைத்தது. இந்திரா - சோனியா இடையே நிறைய கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ராஜீவ் தமக்கும் குடும்பத்துக்கும் தேவைப்படுவதை உணர்ந்த இந்திரா, மேனகாவுக்குக் கொடுக்க இருந்த சந்தர்ப்பத்தை விலக்கிக்கொண்டார்'' என்று இந்திராவின் தோழி பூபுல் ஜெயகர் எழுதினார்.
மேனகா அரசியலுக்கு வருவதையும் சோனியா தடுத்தார். அதே நேரத்தில் தனது கணவர் ராஜீவ் அரசியலுக்குப் போவதையும் சோனியா ஆரம்பத்தில் விரும்பவில்லை.
ஆனால்..?

- Vikatan

No comments:

Post a Comment