Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 30

இன்றைய நிலவரத்தைப் போன்றுதான் 1977-ம் ஆண்டும் இருந்தது!

யார் பிரதமர் வேட்பாளர் என்று தேர்வுசெய்ய முடியாமலேயே 11 கட்சிகள் சேர்ந்து மாற்று அணியை இன்று ஆரம்பித்திருப்பதுபோல... அன்றும் ஒரு அணி உருவாக்கம் நடந்தது. இன்று தனித்தனியாக கட்சிகள் வைத்திருந்து ஒரு அணியாக திரள்கிறார்கள். ஆனால், அன்று பல்வேறு கட்சிகள் இணைந்து புதிய ஒரு கட்சியாகவே உருமாறினார்கள். தனித்தனியாய் இருந்தால் இந்திராவை எதிர்க்க முடியாது என்ற யதார்த்தப் புரிதல் அந்தத் தலைவர்களிடம் இருந்தது. ஆனால் அது பதவிக்கு வந்ததும் காணாமல் போனது.
பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கிய அந்த ஜனதா கட்சிக்கு 27 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு அமைக்கப்பட்டது. கட்சியின் தலைவராக மொரார்ஜி தேசாய். துணைத் தலைவர் சரண் சிங். எல்.கே.அத்வானியும், சுரேந்திர மோகனும் பொதுச் செயலாளர்கள், மற்றவர்கள் உறுப்பினர்கள். 'ஏர் உழவன்’ இந்தக் கட்சியின் சின்னம். ஜனதா என்ற ஒரே கட்சியாக ஆனாலும் இதற்குள் பழைய காங்கிரஸ், பாரதிய லோக்தள், ஜன சங்கம், சோஷலிஸ்ட், காங்கிரஸிலிருந்து பிரிந்துவந்த சந்திரசேகர், ஜெகஜீவன் ராம் என்ற பெருங்கூட்டமே இருந்தது.
மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், சரண் சிங் ஆகிய மூவரும் பிரதமர் நாற்காலியைக் குறிவைத்தார்கள். யாருக்கு அந்த ஆசை இருந்தாலும் அதனை செயல்படுத்தும் அதிகாரம் தார்மீகரீதியாக ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு தான் இருந்தது. இந்திராவுக்கு எதிராக 'முழுப் புரட்சி’ நடத்தியதில் முக்கியப் பங்கு அவருக்குத்தான் உண்டு. கடைசி வரை காங்கிரஸில் இருந்து, அனைத்து அவசரநிலைப் பிரகடனக் கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துவிட்டு அவசரமாக இந்த அணிக்கு வந்து சேர்ந்த ஜெகஜீவன் ராம் பெயரை முதலில் நீக்கினார் ஜே.பி. அடுத்து போட்டியில் இருந்தது மொரார்ஜியும் சரண் சிங்கும். ஜெகஜீவன் ராமை வரவிடக் கூடாது என்பதால், மொரார்ஜியை ஆதரிக்கும் மனநிலைக்கு சரண் சிங் மாறியிருந்தார். இதுவும் ஜே.பி-க்கு சாதகமாகப் போனது. ஆச்சார்ய கிருபளானியை அழைத்து, 'மொரார்ஜிதான் பிரதமர்’ என்று அறிவிக்கச் சொன்னார் ஜே.பி. 1977 மார்ச் 24-ம் தேதி மொரார்ஜி இந்தியப் பிரதமர் ஆனார். காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமையை அடைந்தார்.
யாரெல்லாம் தன்னை எதிர்த்தார்களோ அவர்களையும் சேர்த்து அமைச்சரவை அமைத்தார். ஜெகஜீவன் ராம், சரண் சிங் ஆகியோர் இதில் இருந்தார்கள். மது தண்டவதே, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றவர்களும் இருந்தார்கள். ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் எல்.கே.அத்வானி தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் அரசியல் அரங்குக்கு அறிமுகம் ஆனார்கள். முதன்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் அத்வானி அடித்த ஜோக், அன்று அவரை உன்னிப்பாக கவனிக்க வைத்தன. எமர்ஜென்சியைக் குறிப்பிட்ட சில பத்திரிகைகள்தான் கடுமையாக எதிர்த்து நின்றன. பலரும் அமைதியாக இருந்தார்கள். இதைச் சுட்டிக்காட்டிய அத்வானி, ''உங்களை இந்திரா காந்தி குனியத்தான் சொன்னார். ஆனால், பலரும் படுத்துவிட்டீர்களே!'' என்றார். இப்படிப்பட்ட புதுமுகங்கள் தேசிய அரசியலுக்கு வந்தார்கள்.
எமர்ஜென்சி கொடுமைக்கு அடுத்து அமைத்த அரசு என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 'மிசா எனப்படும் சட்டமே நீக்கப்படும்’ என்று இந்த அரசு பகிரங்கமாக அறிவித்தது. இதனைச் சட்டபூர்வமாகச்செய்ய காலதாமதம் ஆனாலும், 1978 ஜூலை 16-ம் நாள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்தே 'மிசா’ நீக்கப்பட்டது. அதேபோல் இந்திரா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பல சட்டங்களை நீக்குவதற்கான முயற்சியைச் செய்தார்கள். இவை அனைத்துக்கும் மேலாக, அவசரநிலைக் கால கொடுமைகள் பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஷா தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது ஜனதா அரசு.
ஷா கமிஷன் தனது விசாரணையை 1977 செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கியது. தனிப்பட்ட இந்திராவுக்கு எதிரான விசாரணை கமிஷனாகவே அது மாறியது. இந்த விசாரணை கமிஷன் முன்பாக இரண்டு முறை இந்திரா ஆஜரானார். 'பிரதமர் என்பவர் ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டே அந்தப் பதவியை ஏற்கிறார். அந்தப் பிரமாணத்தை மீறி எந்த ரகசியத்தையும் நான் இந்த கமிஷன் முன் சொல்ல முடியாது’ - என்று இந்திரா சொன்ன லாஜிக் அன்று முதல் இன்றுவரை பெரும் பதவியின் இருப்பவர்கள் தப்பிக்க உதவும் வாசலாகவே அமைந்துவிட்டது. இந்த ஷா கமிஷனுக்கு ஒரு பதிலை இந்திரா அனுப்பினார்.
''அவசரநிலைப் பிரகடனத்தின்போது நடந்ததை ஆராய்வதற்கு முன் எந்த சூழ்நிலையில் அது அமல்படுத்தப்பட்டது என்பதை ஆராயுங்கள். தேசிய வாழ்வை சீர்குலைக்க பலரும் முயற்சித்தார்கள். சதி செய்து வன்முறைகள் நடத்தினார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரை வன்முறையினால் அகற்றுவது முறையா? ராணுவத்தைத் தூண்டுவது சரியா? இதனை எந்த சுதந்திரக் குடியரசும் ஏற்றுக்கொள்ளாது. இதனைத் தடுக்கத்தான் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. பின்னால் வரும் அரசாங்கம் குறைகூறும் என்ற அச்சத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த சுதந்திரக் குடியரசும் இயங்காமல் இருக்க முடியாது. அப்படி நினைத்தால் ஆட்சி நன்றாகவும் இருக்காது'' என்று தனது பதிலில் நியாயப்படுத்தினார்.
விசாரணை கமிஷன் முன் நேரில் ஆஜராகி கேள்விகளை எதிர்கொள்ளாததால் இந்திரா மீது ஜனதா ஆட்சிக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. ஊழல் வழக்குகள் பதியப்பட்டன. 'நெருக்கடி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்கள் அனைவரையும் கொலை செய்துவிட இந்திரா திட்டமிட்டார்’ என்று அமைச்சர் சரண் சிங் சொல்லி பீதியை அதிகப்படுத்தினார். 'உடல்நிலை சரியில்லை என்று சொன்னதுமே சரண் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்தேன்’ என்று இந்திரா பதிலடி கொடுத்தார். இது சரண் சிங்கை இன்னும் கோபப்படுத்தியது. இந்திராவை கைதுசெய்யும் முடிவை உள்துறை அமைச்சர் சரண் சிங் எடுத்தார்.
'ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உங்களைக் கைதுசெய்ய வந்துள்ளோம்’ என்று இந்திரா வீட்டுக்குள் (1977 அக்டோபர்) போலீஸ் நுழைந்தது. டெல்லியிலேயே வைத்திருந்தால்கூட சிக்கல் ஏற்பட்டு இருக்காது. டெல்லிக்கு அருகில் உள்ள அரியானா மாநிலத்துக்கு கொண்டுபோனார்கள். வழியில் ஒரு ரயில்வே கேட் மூடியிருந்தது. இந்திராவின் வாகனம் நின்றது. கவலையோடு காத்திருந்த இந்திரா, திடீரென ஆக்ரோஷமாகி வேனில் இருந்து வெளியே வந்தார். அது ஒரு பாலம். அந்த பாலத்தின் சுவரில் போய் உட்கார்ந்தார். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. டெல்லியிலிருந்தும் வழக்கறிஞர்கள் வந்துவிட்டார்கள். வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், இந்திராவை மீண்டும் டெல்லிக்குள் அழைத்து வந்தார்கள்.
போலீஸ் லைன் காவல் நிலையத்தில் ஒரு நாள் இரவு முழுக்க வைத்திருந்து, மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். 'இது பலவீனமான குற்றச்சாட்டு இதற்கு ஆதாரம் எதுவுமில்லை’ என்று சொல்லி இந்திராவை விடுவித்தார் மாஜிஸ்திரேட். ஒரே ஒரு நாள்கூட இந்திராவை சிறையில் வைக்க முடியாத ஜனதா அரசின் செயல்பாடு கடுமையான கண்டனத்தைப் பெற்றது. அது இந்திராவுக்கு ஆதரவான மனநிலையை மக்கள் மனதில் விதைத்தது. இந்த சம்பவம் பிரதமர் மொரார்ஜிக்கும் உள்துறை அமைச்சர் சரண் சிங்குக்கும் மோதலை ஏற்படுத்தியது. 'இந்திராவை நீதிமன்றத்தில் நிறுத்த வக்கில்லாத ஆண்மையற்றவர்களின் கூடாரமாக மத்திய அமைச்சரவை மாறிவிட்டது’ என்று சரண் சிங்கே குற்றம்சாட்டினார். 'இந்தச் சூழ்நிலைக்கு நீங்கள்தானே காரணம். உடனடியாக ராஜினாமா செய்யுங்கள்’ என்று சரண் சிங்குக்கு பிரதமர் கட்டளையிட்டார். சரண் சிங் பதவி விலகினார். இதிலிருந்து கோஷ்டிப் பூசலில் ஜனதா அரசு ஆட ஆரம்பித்தது. அமைச்சர் ராஜ் நாராயண் பதவி விலகினார். இருவரையும் உள்ளே கொண்டுவர முயற்சிகள் நடந்தன. பலரும் சமாதானம் செய்து சரண் சிங்கை ஒப்புக்கொள்ள  வைத்தார்கள். உள்துறை அமைச்சராக வெளியேபோன சரண் சிங், துணை பிரதமராக உள்ளே வந்தார். சரண் சிங்கை ஏற்றுக்கொண்ட மொரார்ஜி, ராஜ் நாராயணை ஏற்கவில்லை. எனவே அவர் வெளியேறி ஜனதா (மதச்சார்பற்றது) என்ற கட்சியைத் தொடங்கினார்.
இன்று பிரபலமாகப் பேசப்படும் 'மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை அன்று விதைத்தவர் ராஜ்நாராயண். அதற்குக் காரணம், அன்றைய ஜனதாவில் ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி போன்றோரின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அதனால் பாதிக்கப்பட்ட ராஜ் நாராயண் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார்.
இதனையே சோஷலிஸ்ட்களும் பிடித்துக்கொண்டார்கள். அன்றைய ஜனதாவில் இருந்த ஜனசங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்படி இரட்டை உறுப்பினர் முறை கூடாது என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ், மதுலிமாயி போன்ற சோஷலிஸ்ட்கள் பிரச்னையைக் கிளப்பினார்கள். ஆர்.எஸ்.எஸ்-லிருந்து வாஜ்பாயும் அத்வானியும் விலக வேண்டும். அல்லது அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இவர்கள் கோரினார்கள். ஆனால், அதனை பிரதமர் மொரார்ஜி ஏற்கவில்லை. இது ஜனதாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மொரார்ஜிக்கான எதிர்ப்பாக மாறியது. இதனை சரண் சிங் பயன்படுத்திக்கொள்ளத் துடித்தார். 'சரண் சிங் பிரதமர் ஆவதாக இருந்தால் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று இந்திரா உள்ளே நுழைந்தார். அது 1979 மார்ச்.
ராஜ் நாராயணை சஞ்சய் காந்தியே சந்தித்தார். இந்த 'கலக’ ஜனதாவினருக்கு 75-க்கும் மேற்பட்ட எம்.பி-கள் இருப்பதாகத் தகவல் வந்தது. அந்த தைரியத்தில் மொரார்ஜி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவந்தார்கள். பதவியைக் காப்பாற்ற முடியாது என்று பயந்த மொரார்ஜி தானாகவே பதவி விலகினார். நாடாளுமன்ற குழுத் தலைவராக சரண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆதரிக்கும் பட்டியலில் காங்கிரஸும் இருந்தது. காங்கிரஸ் எதிரிகளும் இருந்தார்கள். கம்யூனிஸ்ட்களும் இருந்தார்கள். சரண்சிங்கை எம்.ஜி.ஆரும் ஆதரித்தார்.
1979 ஜூலை 28-ல் பிரதமராகப் பதவியேற்ற சரண் சிங் அமைச்சரவையை ஆகஸ்ட் 20 அதாவது 24-வது நாளில் கவிழ்த்தார் இந்திரா. அவரது தயவால் பிரதமர் ஆன சரண் சிங், எமர்ஜென்சி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்ததுதான் காரணம்.
இந்திராவுக்கு எதிராகப் புரட்சி நடத்தி, கட்சிகளை ஒருங்கிணைத்து, ஆட்சியையும் பிடித்துவிட்டோம் என்று மகிழ்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் கண் முன்னேயே... அந்த ஆட்சி கவிழ்ந்து, தன்னுடைய சகாக்களே இந்திரா ஆதரவால் ஆட்சியை நடத்தி, அவராலேயே வஞ்சிக்கப்பட்டுக் கவிழ்க்கப்பட்ட காட்சிகளைக் காணச் சகிக்காமல் தூக்கத்திலேயே துக்கத்தால் செத்துப்போனார் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
பாட்னாவில் நடந்த இந்த இறுதிச் சடங்குக்கு இந்திராவும் சஞ்சய் காந்தியும் வந்திருந்தார்கள். ஒரு பிதாமகனின் மறைவும், அவரது சகாக்களின் பதவிப் பசியும் இந்திராவை மீண்டும் எழுச்சிபெற வைத்தது.

- Vikatan

No comments:

Post a Comment