Tuesday, April 15, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 39

1. பணம் லஞ்சம் வாங்குவதைப் பற்றி யோசித்தாலே அனைவர் மனக்கண் முன் நிழலாடும் காட்சி, பங்காரு லட்சுமணன் பணம் வாங்கி தன்னுடைய மேஜை டிராயரைத் திறந்து வைப்பதுதான்!

2001 காலகட்டத்தில் பி.ஜே.பி-யின் தலைவராக இருந்தவர் பங்காரு லட்சுமணன். 'தெஹல்கா’ என்ற வலைதளம் இதனைப் படம் பிடித்தது. இந்திய அரசியல்வாதிகளுக்கும் ஆயுத விற்பனை செய்பவர்களுக்கும் இடையில் பேரங்கள் நடைபெறுவதையும் லஞ்சப் பணம் கைமாறுவதையும் அது படம் பிடித்தது. பங்காரு லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தரப்பட்டது. அவர் அதை வாங்கி தன்னுடைய மேஜை டிராயரில் வைக்கிறார். இந்தக் காட்சி 13.3.2001 அன்று தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டது. இதேபோல் ஜெயா ஜெட்லியும் மாட்டினார். பி.ஜே.பி. அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய சக கட்சியாக அன்று இருந்தது ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சி. அதன் தலைவராக இருந்தவர்தான் ஜெயா ஜெட்லி. வாஜ்பாய் அமைச்சரவையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அரசு ஒதுக்கீடு செய்த வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜெயா ஜெட்லி பேரம் பேசுவதாகவும் இறுதியில் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாகவும் அந்தக் காட்சிகள் காட்டப்பட்டன. இந்தக் காட்சிகளில் எந்தக் காட்சிப்படுத்துதலும் இல்லை, அவை அனைத்தும் உண்மையானவை என பச்சையாகத் தெரிந்தால் பதவி விலகல் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்தன. இதைத் தொடர்ந்து பங்காரு லட்சுமணன், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் பதவி விலகினார்கள். அதே நேரத்தில் தெஹல்கா வலைதளத்தின் ஊழியர்கள் அரசாங்கத்தால் பழி வாங்கப்பட்டார்கள்.
2. 'பிரதமர் உடந்தையாக இருந்து நடந்துள்ள அரசு கஜானாவின் மிகப்பெரிய கொள்ளை’ என்ற தலைப்பில் 'நியூ ராஜ்’ இதழ் (1999 ஜூலை 16-24) செய்தி வெளியிட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் 'தாத்தா’ அதுதான்.
செல்போன் தொலைபேசி உரிமையாளர்கள், அடிப்படைத் தொலைபேசி வசதி செய்து தருவோர் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் 1999-ல் வகுக்கப்பட்டன. லைசென்ஸ் கட்டணம் செலுத்துவது, வருமானத்தில் ஒரு பங்கை அளிப்பது - இந்த இரண்டில் ஒன்றை அந்த தனியார் தொலைபேசி உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளின்போது ஆறு மாதங்களுக்கான லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தார்கள். இதனால் அரசு வருவாயில் ரூ. 3800 கோடி ரூபாய் (1999-ல் பண மதிப்பை வைத்து கணக்குப் போட வேண்டும்!) இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
''நான்கு மாநகரங்களில் செல்போன் தொலைபேசியை இயக்குகிற எட்டு தனியார் கம்பெனிகளின் நன்மைக்காக செய்யப்பட்ட சலுகை இது'' என்று குற்றம்சாட்டினார்கள்.
''இப்போது நாம் வைத்துக்கொண்டு இருக்கும் தொலைத்தொடர்புக் கொள்கை தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவதாகவும் அரசுக்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது'' என்று இந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஜக்மோகன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிறுவனங்கள் லைசென்ஸ் கட்டணத்தை செலுத்தாததைக் கடுமையாகக் கண்டித்தார் அமைச்சர் ஜக்மோகன்.
1994-ல் செல்போன் பயன்பாடு வந்தது. பகிரங்க டெண்டர் வந்தது. கூடுதல் தொகை கேட்டவருக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன. ஒரு மாநகரத்தில் இரண்டு கம்பெனிகள் இயங்கலாம் என்பது விதி. முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணமும் அடுத்தடுத்த ஏழு ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணமும் செலுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் எந்தக் கட்டணத்தையும் செலுத்தவில்லை. இந்தியாவின் தலைமைத் தணிக்கை அதிகாரி, கண்டன அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பினார். ஆனால், அந்த நிறுவனங்கள் அசைந்து கொடுக்கவில்லை. இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் தேவகவுடாதான் முதலில் கிளப்பினார். அதன் பிறகு, இரண்டு பொதுநல மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 'எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்று இந்த நிறுவனங்கள் அரசை அணுகியது. ஒரு நிறுவனம் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளின் கணவரைப் பிடித்தது. இன்னொரு நிறுவனம் ஆந்திராவில் பிரபலமான சாமியாரைப் பிடித்தது. மற்றொரு நிறுவனம் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியைப் பிடித்தது. காரியங்கள் நகர ஆரம்பித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தலைமையில் தொலைத் தொடர்புக் குழு போடப்பட்டது. அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஜக்மோகன். அவருக்கு இந்தக் குழுவும் பிடிக்கவில்லை. குழு அமைக்கப்பட்ட நோக்கமும் பிடிக்கவில்லை. 'லைசென்ஸ் கட்டணத்தில் பாக்கி உள்ளதால், 20 சதவிகிதத்தை செலுத்தினால் போதும்’ என்று இந்தக் குழு ஆலோசனை சொன்னது. ஆனால், இதை அட்டர்னி ஜெனரல் சோலி சோரங்ஜி ஏற்க மறுத்துவிட்டார். பாக்கி தொகையை முழுமையாகத்தான் வசூல் செய்ய வேண்டும் என்றார். அமைச்சர் ஜக்மோகன். அவர் தனது கோப்பில் 11 விதமான கேள்விகளை எழுப்பினார்.
'சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப்பெரிய அளவுக்கு லாபம் அடைந்துள்ள நிலையில், அவர்களுடைய தொழில் நன்றாக நடைபெறவில்லை என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? நஷ்டம் அடைந்திருந்தால் அவர்களில் ஒருவர்கூட ஏன் லைசென்ஸைத் திருப்பித்தரவில்லை? பலரும் புதிய லைசென்ஸை கேட்டுக் கேட்டு வாங்கியது ஏன்?’ என்று பகிரங்கமாக எழுதினார் அமைச்சர் ஜக்மோகன்.
20 சதவிகிதம் செலுத்தினால் போதும் என்று அரசு சொன்னது அல்லவா? அந்த 20 சதவிகிதத்தைக்கூட உடனடியாக செலுத்த சில நிறுவனங்கள் முன்வரவில்லை. அதன் லைசென்ஸ்களை ஜக்மோகன் ரத்து செய்தார். ஜக்மோகனை எப்படியாவது இந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் முயற்சித்தன. ஜக்மோகன், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். தொலைத் தொடர்புத் துறையை அன்றைய பிரதமர் வாஜ்பாய் தன் வசம் வைத்துக்கொண்டார். தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு, இங்கிலாந்தில் விடுமுறையைக் கழிப்பதற்காக சென்றிருந்த அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி வரவழைக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டு... லைசென்ஸ் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது. நிதி அமைச்சகத்தின் துணை அறிக்கை மட்டுமே இந்த நடவடிக்கையை எதிர்த்தது. அன்று செய்யப்பட்ட சிறிய ஓட்டைதான் அடுத்தடுத்த பல பெரிய ஊழல் பிரளயங்களுக்குக் காரணம்.
3. தொலைத்தொடர்பு துறை என்பது இன்று உலகில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. டெலிகாம் நெட்வொர்க்கில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடு என்று இந்தியா சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு இதில் வர்த்தகம் உள்ளது. அதே அளவுக்கு ஊழலும் உள்ளது.
1994-ல் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் நுழைவு ஏற்பட்டது. 1995-ல் தொலைத் தொடர்பு வட்டங்களின் போட்டி ஏல முறையில் வழங்கப்பட்டது. ஆனால், 2001-ல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்று அது ஆக்கப்பட்டது. பயன்பாடு அதிகமாக இருக்கும் பொருள்களுக்கு ஏல முறைதான் சரியானது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் FCFS எனப்படும் First Come First Served  என்ற அளவுகோல் தனக்கு வேண்டியவர்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தரும் தந்திரம். 1993-ல் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில், 'அரிய வளமான காற்றாலைகள் அல்லது ஸ்பெக்ட்ரத்தை அதிகப்படியான வாடிக்கையாளர்களிடையே விநியோகிக்கும் போது திசிதிஷி என்பது தன்னிச்சையானதாகவும் நடுநிலை அற்றதாகவும், நியாயப்படுத்த இயலாததாகவும் இருக்கும். போட்டியை ஊக்குவிக்கும் ஒப்பந்தப் புள்ளிகோரும் ஏல முறையே நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும்'' என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் பி.ஜே.பி. அரசு முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று தீர்மானித்து எல்லாத் தவறுகளுக்கும் அடித்தளம் வகுத்தது.
4. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகள் பி.ஜே.பி. ஆட்சியில்தான் தொடங்கியது. பங்கு விற்பனைக்கு என்றே தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். 'நவீன இந்தியாவின் திருக் கோயில்கள்’ என்று பிரதமர் நேருவால் மகுடம் சூட்டப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை, 'அவை ரத்தம் ஒழுகும் குடல் புண்கள்’ என்று அமைச்சர் அருண்ஷோரி வர்ணித்தார். 1991-ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,36,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத் துறை பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸுக்கும் பி.ஜே.பி-க்கும் மாற்றுக் கருத்து இல்லை.
5. இந்த வரிசையில் யூனிட் ட்ரஸ்ட், டெலிகாம், பிரட் கம்பெனி, பால்கோ, வி.எஸ்.என்.எல். சென்டூர், மொரீஷியஸ் பாதை... போன்ற பல்வேறு விவகாரங்களில் உள்ள சர்ச்சைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கிளப்பி வந்தார்கள். இத்தகைய தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாகத்தான் 2004-ல் பி.ஜே.பி. மாபெரும் தோல்வியைத் தழுவியது. பி.ஜே.பி-க்கு மக்கள் இந்த தண்டனையை மனத்தில் வைத்து செயல்படும் ஆட்சியாக காங்கிரஸ் இல்லாமல் போனதுதான் கடந்த 10 ஆண்டுகால கஷ்டங்கள்!

- Vikatan

No comments:

Post a Comment