Thursday, January 30, 2014

நான்ஸ்டிக் பாத்திரங்கள் நல்லதா? கெட்டதா? அலெர்ட் ரிப்போர்ட்

ன்றும் பல வீடுகளில் 'என் அம்மா சமைச்சா... அத்தனை ருசியா இருக்கும்... வாசனை ஊரையே தூக்கும்’ என்று, மனைவி செய்த சமையலை ஒரு கவளம் வாயில் வைத்ததும், வார்த்தைகளை உதிர்க்கும் கணவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச் சமைத்ததும் உற்சாகமான மனநிலையில் அன்பையும் கரண்டி வழியே கலந்து பரிமாறியது இன்று, குறைந்திருப்பதுதான் இதற்குக் காரணம். உணர்வோடு மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களாலும் சமையலில் சத்துக்கள் குறைகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு.  
மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.
ஸ்வீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கைதான், உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அது 'நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்ததைச் சாப்பிடுபவர்களுக்கு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்’ என்பதுதான். நான்ஸ்டிக் பாத்திரங்களில், 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’ (Perfluorinated compounds) எனப்படும் ஒரு வகை ரசாயனக் கலவை இருக்கிறது. சமைக்கும்போது உணவில் கலக்கும் இந்த ரசாயனம், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது. இது கணையத்தின் செயல்பாட்டைப் பாதித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறது, இந்த ஆராய்ச்சி முடிவு.
இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த 'மோனிக்கா லின்ட்’ இது குறித்துக் கூறுகையில், 'நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலிகுளோரினேட்டட் பைபீனைல்ஸ், டயாக்சின்ஸ், பிஸ்பினால் ஏ போன்றவை, சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இதேபோல, சர்க்கரை நோயை ஏற்படுத்தக்கூடிய 'பர்ஃப்ளூரினேட்டட் காம்பவுண்ட்’கள் நம் உடலில் உள்ளதா என்பதை ஆராய்ந்தோம். ஏனெனில், நான்ஸ்டிக் பாத்திரம் உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களில் இந்த ரசாயனம் உள்ளது. இது உணவில் கலந்து நம்முடைய உடலில் சென்று சேர்கிறதா என்பதை கண்டறிவதன்மூலம் இந்த பொருட்களில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்.
ஆய்வில் பெரும்பாலானவர்களுக்கு, பர்ஃப்ளூரினேட்டட் அமிலம் அதிக அளவில் இருந்ததைக் கண்டறிந்தோம். இது கணையத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, இன்சுலின் சுரப்பைப் பாதிக்கிறது. இந்த ரசாயனம் கணையத்தை எப்படி பாதிக்கிறது என்பது பற்றி நாங்கள் விரிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வைப் பற்றி சர்க்கரை நோய் நிபுணர், கருணாநிதியிடம் கேட்கையில், 'இதைப் படித்துவிட்டு சர்க்கரை நோய் வருவதற்கு, நான்ஸ்டிக் பாத்திரம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சர்க்கரை நோய்க்கு மூலகாரணங்கள் மூன்று. அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைவான உடற்பயிற்சி மற்றும் மரபணு. இதைத் தவிர இதர காரணங்கள் பல உண்டு. அதில் இந்த பர்ஃப்ளூரினேடட் ரசாயனக் கலவை முதன்மையான காரணமாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். நச்சுத் தன்மையுடைய இந்த ரசாயனக் கலவை, கணையத்தை நேரடியாகப் பாதித்து, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாகவும் அல்லது அதிகமாகவும் வெளியேறுகிறது. இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ரத்தத்தில் சேர்வதனால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. எனவே மக்கள் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் சர்க்கரை நோயைத் தவிர்த்துவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. 'ஜங்க் ஃபுட்’ உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்துவிட்டு அதிக நார்ச் சத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், தினசரி உடற்பயிற்சி போன்றவற்றால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்' என்றார்.
'உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உணவில் சுவையும், சத்தும் அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மை.’ என்கிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த சித்த மருத்துவர் கண்மணி.
'மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. பாத்திரம் என்ற வரிசையில்கூட அது வராதது வருத்தத்தை அளிக்கிறது.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை. எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும். ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும். இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே' என்றார் டாக்டர் கண்மணி.
 - செ.கிஷோர் பிரசாத் கிரண், எஸ்.வெங்கடகிருஷ்ணன்
படம்: சிவபாலன், அ.ஜெஃப்ரி தேவ், ர.சதானந்த்

- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 18

அவசர நிலைப் பிரகடனத்துக்கு அடித்தளம் அமைத்தது அலகாபாத்!

1975 ஜூன் மாதம் 12-ம் நாள் இந்திரா வாழ்வில் ஒரே நாளில் மூன்று இடிகள் தாக்கிய நாள்!
இந்திராவின் நம்பிக்கைக்குரிய மனிதராக இருந்த டி.பி.தார் இறந்துபோன செய்தி அன்று அதிகாலையில் இந்திராவுக்கு வந்து சேர்ந்தது. இதனை அபசகுனமாக இந்திரா நினைத்திருந்தார்.
பொழுது விடிந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி உறுதி என்பதைச் சொல்லும் அளவிலான முதல்கட்டத் தேர்தல் முடிவுகள் அங்கிருந்து வர ஆரம்பித்தன. அந்த தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு சாதகமாக வரும் என்று, அவர் நம்பிக்கொண்டு இருந்தார். இது அவரது மனதை சஞ்சலப்படுத்தியது.
மதியம் வெயில் தெரிய ஆரம்பித்தபோதுதான் அலகாபாத் தீர்ப்பு வந்தது.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரேபரேலி தொகுதியில் நடந்த தேர்தலில் வென்ற இந்திராவின் வெற்றி, செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோன்லால் சின்ஹா தீர்ப்புத் தீயை மூட்டினார். இந்திரா நிலைகுலைந்து சரிந்தது இந்தத் தீர்ப்பைக் கேட்டபோதுதான்.
இந்திரா மனதில் இந்த ராட்சஷ ரணத்தை ஏற்படுத்தியவர் ராஜ்நாராய்ண். ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ தகிடுதத்தங்களை இந்திரா செய்தார் என்று ஆதாரங்கள் திரட்டிய ராஜ்நாராய்ண், இந்திராவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை இந்திரா வாங்கினார் என்று ராஜ்நாராய்ணின் குற்றச்சாட்டை, நீதிபதி சின்ஹா ஏற்கவில்லை. ஆனால், மிகச் சிறிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்திராவின் வெற்றி செல்லாது என்று சொல்ல இதுவே போதும் என்று நினைத்ததுதான் ஆச்சர்யமானது.
ரேபரேலி தொகுதியில் இந்திராவின் தேர்தல் முகவராக இருந்தவர் ஓர் அரசு ஊழியர். அவர் தனது ராஜினாமாவை உடனடியாக அறிவிக்காமல் தேர்தல் வேலைகளை பல நாட்கள் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, தாமதமாக அறிவித்தார். ஒரு அரசு ஊழியரை, தனது கட்சி முகவராக செயல்பட அனுமதித்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ரேபரேலி தொகுதியில் பொது மேடையை அமைத்தவர் யார் தெரியுமா? அரசாங்க பொறியாளர். அதாவது ஓர் அரசு ஊழியரை வைத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் மேடையை அமைத்தது இரண்டாவது விதிமுறை மீறல் என்று நீதிமன்றம் ஏற்றது.
'ராஜ்நாராய்ண் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதன் மூலம் எதிர்மனு தாரரான இந்திரா, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் நிற்கும் தகுதியை இந்திரா இழக்கிறார் என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8ஏ பிரிவின் படி அறிவிக்கிறோம்'' என்று நீதிபதி சின்ஹா அறிவித்தார். இந்தத் தீர்ப்பின் முடிவை 20 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேல்முறையீடு செய்வதாக இருந்தால் அதற்கான அவகாசம்தான் இது.
இந்தத் தீர்ப்பு வந்ததுதான் தாமதம், இந்திராவின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் பெரும் போராட்டங்களைத் தொடங்கிவிட்டார்கள். கலகம், தீவைப்பு, வன்முறையாக இது மாறியது. இதனைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று டெல்லி போலீஸுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது டெல்லி லெப்டினென்ட் கவர்னராக இருந்த கிருஷ்ண சந்த்தை அழைத்தார் பிரதமர் இந்திரா. அவர் போகாமல், உஷாராக தனது செயலாளர் நவீன் சாவ்லாவை அனுப்பிவைத்தார். தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சி பற்றி நவீன் சாவ்லாவிடம் இந்திரா சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி வந்து டெல்லியிலும், இந்திரா வீட்டின் முன்னாலும் குவிக்கும் காரியத்தை டெல்லி நகராட்சியும், டெல்லி போக்குவரத்துக் கழகமும் செய்தன. ஷா கமிஷன் முன் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்திராவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை டெல்லிக்குள் 1761 பேருந்துகளில் ஆட்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வெவ்வேறு இடத்தில் இவர்களைக் கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். இந்திராவை ஆதரித்து முழக்கமிட்டவாறே, இந்திராவின் வீட்டை நோக்கி இவர்கள் ஊர்வலமாகச் செல்ல வேண்டும். தினமும் இதே வேலையைச் செய்ததாக டெல்லி போக்குவரத்து மேலாளர் ஜே.ஆர்.ஆனந்த் வாக்குமூலம் கொடுத்தார். இவர்களுக்கான கட்டணத்தை மொத்தமாக காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாயை இரண்டு ஆண்டுகளாக அந்தக் கட்சி போக்குவரத்துக் கழகத்துக்குத் தரவில்லை என்றும் ஜே.ஆர்.ஆனந்த் கூறினார்.
இப்படி அனைத்து வாகனங்களும் பிரதமர் வீடான எண் 1, சப்தர்ஜஸ் சாலைக்குப் போனதால் மற்ற பகுதி மக்களுக்கு பேருந்துகள் கிடைக்காமல் அல்லாடினார்கள். 'இந்திரா காந்திக்கு ஜே’ போடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பேருந்துகள் கிடைத்தது. இந்த ஏற்பாடுகளை முன்னின்று நடத்திக் காட்டியவர் ஆர்.கே.தவான். டெல்லியை சுற்றி இருந்த அரியானா, ராஜஸ்தான், மேற்கு உ.பி-யைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்க நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தக் காரணமாக இருந்தவர் இவர். டெல்லிக்குள் நுழைவதற்கான பெர்மிட்டை எந்த வாகனத்திடமும் கேட்கக் கூடாது என்றும் உத்தரவு போடப்பட்டது.
இன்னும் சில இடங்களில் வேறொரு காரியம் நடந்தது. பேருந்துகளை எங்கேயாவது இருந்து கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். அதில் பயணம் செய்வதற்கான ஆட்களை அழைத்து வர வேண்டிய கடமை டெல்லி போலீஸுக்கு கொடுக்கப்பட்டது. எங்கே போவார்கள் ஆட்களுக்கு? ஏதாவது ஒரு தொழிற்சாலைக்குப் போக வேண்டியது. அங்கிருந்த தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்ற வேண்டியது போலீஸாரின் வேலை ஆனது. பரிதாபாத் நியூ இன்டர்ஸ்டிரியல் டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராஜ் ரூப்சிங், ஷா கமிஷன் கொடுத்த வாக்குமூலத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். இவர் மட்டுமல்ல பல போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பின்னர் இதனை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்தார்கள்.
இது போதாது என்று லக்னோ, கான்பூர், வாரணாசி ஆகிய மூன்று ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களில் பொதுமக்களை அழைத்து வந்தார்கள்.
கும்பலைக் காட்டி குதூகலிப்பதும், கும்பலை கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து ஷோ காண்பிப்பதுமான நடைமுறை இந்திய அரசியலில் அப்போதுதான் அரங்கேறியது. இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை ஒட்டி, இந்திரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின. ஆனால், இந்திரா ஆதரவாளர்களின் டெல்லி படையெடுப்பு அந்தக் குரலை மேலெழுப்ப விடாமல் தடுத்தது. இப்படி கூலிக்கு ஆள் பிடித்து கும்பல் சேர்ப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் கோபத்தை திருப்பினார்கள். 22.6.1975 அன்று எதிர்க் கட்சிகள் சேர்ந்து ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தன. இதில் பேச ஜெயபிரகாஷ் நாராயணன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், இந்தப் பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை. பிரதமருக்கு ஆதரவாக கூட்டம்கூட அனுமதிக்கும் போலீஸ், எதிரான கூட்டத்துக்கு அனுமதி தரவில்லை. இப்படி எந்தக் கூட்டமும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இந்திரா. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் தந்திராலோசனைகள் செய்யப்பட்டு வந்தன.
இதற்கு இடையில் அலகாபாத் தீர்ப்பாணையை, எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா மனு செய்தார். இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்க நினைத்தார். அந்தத் தீர்ப்பு 22.6.1975 அன்று வந்தது. அலகாபாத் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 நாள் கழித்து வந்த இந்தத் தீர்ப்பினை அளித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். அலகாபாத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தீர்ப்பளித்தார். ஆனாலும் சில நிபந்தனைகளை விதித்தார்.
'இந்திரா மக்களவை உறுப்பினராகத் தொடரலாம். நாடாளுமன்றம் செல்லலாம். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடலாம். ஆனால், மக்களவையின் செயல்களில் ஈடுபடவோ, வாக்கெடுப்பு நடக்கும்போது வாக்களிப்பதோ கூடாது’- என்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் விதித்த நிபந்தனை இந்திராவை அலறவைத்தது. அதாவது எம்.பி-யாக இருக்கலாம். ஆனால், அதற்கான எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது என்றது உச்ச நீதிமன்றம் இதனை எப்படி ஏற்பார் இந்திரா?
கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த எதிர்க்கட்சிகளின் மனதில் எண்ணெய் வார்த்தது நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு வந்த இரண்டாவது நாள், அதாவது 24-ம் தேதி இந்திராவுக்கு எதிராக மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இந்திரா பதவி விலகியே தீர வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. 24-ம் தேதி வரை இரண்டு நாட்கள் அவகாசம் தர இந்திரா தயார் இல்லை. 23-ம் தேதியே அனைத்து தலைவர்களையும் கைதுசெய்து சிறையில் வைக்க முடிவெடுத்தார். எதிர்க் கட்சிகள் தங்கள் பேரணியைத் தள்ளிவைத்தன.
அப்போது இந்திரா இரண்டு பேரை அடிக்கடி அழைத்து பேசினார். ஒருவர் சஞ்சய் காந்தி, இன்னொருவர் ஆர்.கே.தவான். தன்னுடைய பதவியையும் காப்பாற்றிக்கொண்டு எதிர்க் கட்சிகளையும் அடக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதில் இந்த மூவரும் முடிவாய் இருந்தார்கள்.
மொத்த அதிகாரத்தையும் தன் கையில் கொண்டுவரும் வழியாக அதுவே அமைந்தது. இந்தியாவில் சர்வாதிகாரப் பாதை முதன் முதலாக போடப்பட்டது.

- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 17

இந்திராவும் சஞ்சயும் சேர்ந்து இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மையையே குலைத்தார்கள். எப்போதும் ஆட்சியையும் அரசாங்கத்தையும் கொதிநிலையிலேயே வைத்திருந்தார்கள். தன்னுடைய ஆசைகளை பூர்த்திசெய்யாத அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது, விமர்சனம் செய்யக்கூடியவர்களை நினைத்த நேரத்தில் கழுத்தறுத்து வீட்டுக்கு அனுப்புவதும்... தகுதியற்ற, தலையாட்டிப் பொம்மைகளை கொண்டுவந்து பதவிகளில் உட்காரவைப்பதுமான துக்ளக் தர்பார் இந்தக் காலகட்டத்தில்தான் தொடங்கியது.
 கட்சியில் உருவான சர்வாதிகாரப் பாணிக்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்றிரண்டு மட்டும் இங்கே...
அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. மூன்று காங்கிரஸ் கோஷ்டிகள் இருந்ததால், மாநில ஆட்சி நிம்மதியை இழந்தது. அப்போது இந்திராவும் சஞ்சயும், கமலாபதி திரிபாதியை முதலமைச்சராக உள்ளே புகுத்தினார்கள். சில மாதங்களில் கமலாபதி திரிபாதியையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆட்சியையே கலைத்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.
உ.பி. மாநில அமைச்சரவைக் கூட்டம் உலக அதிசயமாகவும் ரகசியமாகவும் டெல்லியில் கூடியது. காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரலாம் என்று மேலிடம் கூறியதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதே என்று அமைச்சர்கள் சொன்னார்கள். 'நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை’ என்று கமலாபதி திரிபாதியும் வெளிப்படையாக (10.6.1973) அறிவித்தார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து உ.பி. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
''அரசியல் சட்டத்தில் உள்ள விதிகள், காங்கிரஸ் கட்சியின் நலனுக்காகவும் தனிப்பட்டவர்களின் அக்கறைக்காகவும் முறைதவறிப் பயன்படுத்தப்பட்டது'' என்று இந்துஸ்தான் டைம்ஸ் எழுதியது.
இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமல்ல... பல மாநிலங்களில் நடந்தது. தனக்குப் பிடிக்காத மாநில முதலமைச்சர்களைக் கட்டாயப்படுத்தி, பதவியில் இருந்து இறக்கினார் இந்திரா. ஆந்திர மாநில முதலமைச்சர் பிரமானந்த ரெட்டி, மத்தியப்பிரதேச முதலமைச்சர் சுக்லா, அசாம் முதல்வர் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் சுகாதியா ஆகியோர் கேள்வி கேட்பார் இல்லாமல் பதவியில் இருந்து இறக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கும் இருந்தது. பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவும் இருந்தது. அதையும் மீறி நீக்கப்பட்டார்கள் என்றால், இரண்டு காரணங்கள்.
தங்களுக்கு அடக்கமானவர்களாக அவர்கள் இல்லை என்பது ஒன்று.
இரண்டாவது, மாநிலத்தில் தங்களுக்கென இவர்கள் தனிப்பட்ட செல்வாக்கை சேர்த்துக்கொள்வது தவறு என்ற பொறாமை கலந்த எரிச்சல். இவை இரண்டும்தான் அடிப்படைக் காரணம்.
இதில் இன்னொரு கேவலம் நடந்தது. நீக்கப்பட்ட முதலமைச்சர் பதவிக்கு... அடுத்து இருக்கும் தகுதியானவரை நியமிக்காமல், தனக்கு வேண்டிய மத்திய அமைச்சர்களை பதவி விலகச் செய்து, மாநில முதலமைச்சராகக் கொண்டுவந்து பொருத்தும் காரியத்தையும் இந்திரா செய்தார். இவர்கள் எம்.எல்.ஏ-க்களாகவே இருக்க மாட்டார்கள். அதனால் என்ன... இந்திராவுக்கு வேண்டியவர்களாயிற்றே!
மத்திய அமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே, மேற்கு வங்க முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஓஜா, குஜராத் மாநில முதலமைச்சராகவும், சேத்தி, மத்தியப்பிரதேச முதலமைச்சராகவும், திருமதி நந்தினி சத்பதி, ஒரிஸ்ஸா முதலமைச்சராகவும் வந்து உட்கார்ந்தார்கள். இவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர்களாக இருந்து இந்திராவால் மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள்.
இப்படி இறக்குமதி செய்வதற்காக நடத்தப்பட்ட நாடகங்களும் அபத்தமானவை.
குஜராத் முதல்வராக ஓஜாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தேர்தலை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் குஜராத் வந்தார். வாக்கெடுப்பு நடந்தது. ஓஜாவுக்கு அதிக வாக்குகள் ஒருவேளை விழாமல் போயிருந்தால், அது இந்திராவுக்கு அவமானமாக ஆகிவிடும் என்பதால், வாக்குப்பெட்டியை டெல்லிக்கு கொண்டுபோகச் சொன்னார் ஸ்வரண்சிங். இதனை டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுபோனாலும் பரவாயில்லை. மத்திய அரசாங்கத்தின் செயலகங்கள் இருக்கும் 'சவுத் பிளாக்’ எடுத்துச் சென்று வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஓஜா 'வெற்றிபெற்றதாக’ அறிவிக்கப்பட்டார்.
இப்படி இறக்குமதி செய்யப்பட்ட ஓஜாவால், குஜராத் மாநில முதலமைச்சராக நீடிக்க முடியவில்லை. அவரால் அந்த மாநில மக்களையும், கட்சியையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தகுதியற்றவர் என இந்திராவால் அவரே கருதப்பட்டார். ஓஜாவை நீக்கிவிட்டு சிம்மன்பாய் படேலை முதலமைச்சர் ஆக்கினார் இந்திரா. குஜராத்தில் உணவுப் பஞ்சம் தலைதூக்கியபோது முதல்வர் சிம்மன்பாய் படேல், பிரதமர் இந்திரா ஆகிய இருவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 'என்னுடைய ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்’ என்று ஒரு மாநில முதலமைச்சரே கோரிக்கை வைக்கும் இழி சூழ்நிலையை சிம்மன்பாய் படேல் உருவாக்கினார். இதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர இந்திராவுக்கு வேறுவழி இல்லை. குடியரசுத் தலைவர் கட்சியும் அமலானது. ஜனநாயக நெறிமுறைகளோடு சேர்ந்து சிம்மன்பாய் படேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் விருந்தாளியாக இருந்தவர், திடீரென வெறுப்பாளி ஆனார்.
குஜராத் மாநிலத்தை ஓஜாவால் சரிக்கட்ட முடியவில்லை என்பதைப் போலவே, மத்தியப்பிரதேசத்தில் சேத்தி அதிக மாதங்கள் நீடிக்கவில்லை. ஒரிஸ்ஸாவில் நந்தினி சத்பதி விரைவில் பதவி விலகிவிட்டார். மீண்டும் இந்த மாநிலத்தில் பொதுத் தேர்தல் வந்தது.
சொந்த செல்வாக்குப் படைத்தவர்கள் மாநிலங்களில் வளர்ந்துவிடக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே எந்தச் செல்வாக்கும் இல்லாத மனிதர்களை முதல்வர்களாகப் புகுத்தினார்கள். இப்படி புகுத்தப்பட்டவர்களால் எந்தப் பயனும் இல்லை. கட்சிக்கும் கெட்ட பேர். ஆட்சியும் பறிபோனது. இந்திரா, சஞ்சய் ஆகியோரின் ஈகோ திருப்தி ஆனது மட்டும்தான் மிச்சம். இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இன்றுவரை தொடர்கிறது. மாநில முதலமைச்சர்களை நீக்குவது, கட்சியின் மாநிலத் தலைமையைப் பந்தாடுவது ஆகியவைதான் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே இவ்வளவு பந்தாட்டம் என்றால், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் நிலைமை பற்றி கேட்கவே வேண்டாம்.
நேரு பிரதமராக இருந்தபோதே கேரள ஆட்சியைக் கலைத்த முன் அனுபவம் இந்திராவுக்கு இருந்தது. இப்போது அவர் கையில் முழு அதிகாரம் இருக்கும்போது, கேட்கவும் வேண்டுமா?
1966 ஜனவரி 24-ம் நாள் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் 1977 வரை தான் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 29 முறை கலைத்தவர் இந்திரா. உ.பி-யில் நான்கு முறை ஆட்சிக் கலைப்பு நடந்தது. பஞ்சாப், மேற்குவங்கம், குஜராத், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் மூன்று முறை ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1976 ஜனவரி 30 தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது,
இது, மாநில ஆட்சிகளை மதிக்காமல், மத்தியில் ஒற்றையாட்சி ஒன்றை உருவாக்கும் காரியம். இதனை கூச்சமில்லாமல் இந்திரா செய்தார். எல்லாவற்றையும் பிரதமரே செய்ய வேண்டும் என்ற சர்வாதிகாரமும், தான் நினைத்ததே கட்சியில், ஆட்சியில், மாநிலங்களில் அமலாக வேண்டும் என்ற எதேச்சதிகாரமும் தலைவிரித்தாடியது.
''அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும். அதிக அதிகாரம், அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்'' என்ற மொழிக்கு ஏற்ப... லஞ்சமும் முறைகேடும் ஊழலும் இந்தக் காலகட்டத்தில் எங்கெங்கு காணினும் தென்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மிகமிகச் சாதாரணத் தொண்டரான துல்மோகன் ராம், இந்தியப் பிரபலம் ஆனது ஊழலால்தான்.
மிகச் சாமான்யரான துல்மோகன்ராம், எப்படியோ அமைச்சர் எல்.என்.மிஸ்ராவின் அன்பைப் பெற்றுவிட்டார். இல்லாத ஒரு நிறுவனத்துக்கு துல்மோகன் ராம் சொன்னார் என்பதற்காக ஏராளமான சலுகைகளை எஸ்.என்.மிஸ்ரா வழங்கினார். இது ஒருசில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் துளைத்தெடுத்தன.
இன்று எந்தப் பிரச்னை என்றாலும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து கூச்சல் போடுவது, அனைவரும் சபாநாயகர் இருக்கைக்கு ஓடி வருவது, அவரை கெரோ செய்வதைப் பார்க்கிறோம் அல்லவா? இந்தக் காட்சி இந்திய நாடாளுமன்ற வரலாற்றின் முதன்முதலாக துல்மோகன்ராம் விஷயத்தில்தான் அரங்கேறியது. இவ்வளவையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்த இந்திரா சொன்னார்: 'ஊழல் என்பது உலகம் எங்கும் காணப்படுவதுதான்.’ அனைவரையும் அதிரவைத்த வாக்குமூலம் இது.
தி கார்டியன், தி ஸ்டேட்டஸ் மேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய ஏடுகளில் தொடர்ந்து எழுதிவந்த இந்தியாவின் மூத்த பத்திரிகையாளார்களில் ஒருவரான இந்தர் மல்ஹோத்ரா, இந்திரா பற்றிய தனது நூலில் எழுதினார்....
''கட்சிக்கு நிதி வசூலிப்பது என்ற போர்வையில் ஊழல் மலிந்தது. பெரும் தொழில் நிறுவனங்கள் தாம் சார்ந்திருந்த சுதந்திரா கட்சிக்குத்தான் நன்கொடை வழங்குவார்கள் என்று அஞ்சியபோது, லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில், அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதை காங்கிரஸ் அரசு தடை செய்திருந்தது. அதன் விளைவாக அரசியல் கட்சிகளுக்கும் பண முதலைகளுக்கும் இடையே பெருமளவு கறுப்புப் பணம் புழங்கியது. பணமே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு அது வரப்பிரசாதமாயிற்று. ஆரம்பத்தில் வசூலாவதில் ஒரு சிறு பங்கை மட்டும் ஒதுக்கிக்கொண்டவர்கள், மெள்ள மெள்ள பெரும்பான்மையினரான பங்கைத் தாமே அமுக்கிக்கொண்டனர். பலராலும் மதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய், 'பிரதமரின் எடுபிடிகள் டன் கணக்கில் கறுப்புப் பண வசூலில் ஈடுபட்டார்கள்’ என்று நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்திராவின் கட்சிக்காக நிதி வசூலித்தவர்களில் முதன்மையானவரான லலித் நாராயண் மிஸ்ராவுக்கு 'ரொக்கப்பண நாராயணன்’ என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. நீண்டகாலம் பிரதமராக இருந்த நேரு, கட்சிக்கு நிதி வசூலிப்பதிலும் அதனை விநியோகிப்பதிலும் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டிருந்தது இல்லை. ஆனால், பிரதமரின் இல்லத்துக்குக் கட்டுக்கட்டாக ரூபாய்களை நிரப்பிய பணப்பெட்டிகளை வருவிப்பது இந்திராவின் தலைமைப் பணிக்குத் தேவையாக இருந்தது!'' என்று எழுதி இருக்கிறார்.
1975 தொடக்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்த லலித் நாராயண் மிஸ்ரா என்ற எல்.என்.மிஸ்ரா பேசிக்கொண்டு இருந்தார். மேடைக்கு கீழே புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து, அந்த இடத்திலேயே மிஸ்ரா இறந்துபோனார். இந்த சாவில் பல மர்மங்கள் உண்டு. இந்திராவுக்கு எதிரான அரசியல் புரட்சியின் ஆரம்பம்தான் இந்தப் படுகொலை என்று சொல்வார்கள் பலர். இல்லை, காங்கிரஸுக்குப் பணம் வந்த பாதையை அறிந்த ஒரே நபர் எல்.என்.மிஸ்ரா என்பதால், படுகொலை செய்யப்பட்டார் என்பார்கள் சிலர். எப்படிப் பார்த்தாலும் அரசியல் காரணங்களுக்காக சுதந்திர இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட முதலாவது அமைச்சர் இவர்தான்.
'என்னைத் தீர்த்துக்கட்ட நடந்த முயற்சிதான் இது’ என்று இந்திரா கூறினார். தனக்கு எதிரான அரசியல், வன்முறை மூலமாக செயல்படுத்தப்படுவதாக இந்திரா உணர்ந்தார். எதிரி அடிக்க நினைப்பதற்கு முன் இவர் தாக்குதலைத் தொடங்கினார்.
அதுதான் எமர்ஜென்சி!
- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 16

சஞ்சய் காந்தியை காங்கிரஸ் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, இந்திராவுக்கு அருகில் இருந்தவர்களே எரிச்சலோடுதான் பார்த்தார்கள். இவர் இருப்பதால், இவரது பேச்சைத்தான் இந்திரா அதிகமாகக் கேட்கிறார் என்ற விரக்தி கலந்த கோபம் ஒரு பக்கம் இருந் தாலும், இந்திராவைத் தவறாக வழிநடத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை விரைவில் சஞ்சய் காந்தி அதள பாதாளத்துக்குத் தள்ளிவிடுவார் என்றும் அவர்கள் பயந்தார்கள்.
 சஞ்சய் காந்தியின் போக்கு கட்சிக்கும் நல்லதல்ல; இந்திராவுக் கும் நல்லதல்ல என்று முதலில் சொன்னவர் பி.என்.ஹக்ஸர். இவர் வேறு யாருமல்ல, பிரதமர் இந்திராவின் செயலாளர். ஆனால் அவர் சொன்னது, சஞ்சய் மற்றும் இந்திராவின் விசுவாசிகளால் தவறான எண்ணத்துடன் பார்க்கப் பட்டது.
''சஞ்சய் காந்தி கார் கம்பெனி ஆரம்பிப்பது நல்லதல்ல. அவரால் நினைத்த அளவுக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய முடியாது. கொடுத்த வாக்குறுதிப்படி 50 ஆயிரம் கார்கள் தர முடியாது. இந்த நிறுவனம் தொடங்குவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் பலாத்காரத்தின் அடிப்படையில் பறிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்'' என்று இந்திராவிடமே நேரில் சொன்னார் பி.என்.ஹக்ஸர்.
''கார் நிறுவனத்துக்கு அருகில் பி.என்.ஹக்ஸருக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. சஞ்சய், தன்னுடைய நிலத்தையும் பறித்துவிடுவார் என்று ஹக்ஸர் பயப்படுகிறார். அதனால்தான் சஞ்சய்க்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்'' என்று இந்திராவிடம் போட்டுக்கொடுத்தார்கள். இதனை இந்திராவும் நம்பினார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திராவின் குடும்ப நண்பராக இருந்த முஹம்மது யூனுஸை சந்தித்த பி.என்.ஹக்ஸர், ''அந்தப் பிள்ளையை இந்தப் பைத்தியக்காரத்தனமான திட்டத்தை கைவிடச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஆனால், ஹக்ஸர் தன்னுடைய சுயநலனுக்காக இப்படிச் சொல்வதாக யூனுஸும் நினைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சஞ்சய் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தன. இவர்கள் வெறும் அரசியல் தாக்குதல்களாக இல்லாமல், பல்வேறு ஆதாரங்களுடன் பேசினார்கள். அரசுக்கும், மத்திய தொழில் துறைக்கும், சஞ்சய் காந்திக்கும் மட்டுமே தெரிந்த ஆவணங்களை இவர்கள் வெளியிட்டார்கள். இது இந்திராவுக்கும் சஞ்சய்க்கும் சந்தேகம் கிளப்பியது.
பி.என்.ஹக்ஸர் தான் இந்த செய்திகளை வெளியில் விடுகிறார்... தன்னுடைய இடதுசாரி நண்பர்களுக்குத் தகவல்களைக் கொடுத்து பரப்புகிறார்... அவர்தான் தூண்டிவிடுகிறார்... என்று இந்திராவும் சஞ்சயும் நம்பினார்கள். இந்த நிலையில் பி.என்.ஹக்ஸர் பதவியில் இருந்து தூக்கப்பட்டார். ஹக்ஸருக்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு செல்வாக்கான இடத்தில் இருந்தவர் அவர்.
சஞ்சய் காந்தியின் செல்வாக்கை காங்கிரஸ் பிரமுகர்களும் மற்றவர்களும் இதில் இருந்துதான் உணர்ந்து கொண்டனர். சஞ்சயை விமர்சித்தால் காங்கிரஸிலும் இருக்க முடியாது என்ற யதார்த்தம் வெளிப்பட்டது. சஞ்சய் காந்தியை காக்கா பிடித்தால்தான் காங்கிரஸில் காலம் தள்ள முடியும் என்ற நிலையே உருவானது.
அந்தக் காட்சிகளை முஹம்மது யூனுஸ் வர்ணிக்கிறார்...
''பல முதல்வர்கள் அடிக்கடி எனக்கு டெலிபோன் செய்து, 'யூனுஸ் சாகிப், சஞ்சய் பஞ்சாப், ஹரியானாவுக்கு மட்டும் போகிறாரே... நாங்கள் இருப்பது ஞாபகம் இல்லையா? எங்கள் மாநிலத்துக்கு அவரை அனுப்பி வையுங்கள்’ என்று ஒப்பாரி வைத்தார்கள். ஆந்திராவில் இருந்து வெங்காலராவ், தமிழக ஆளுநர், மகாராஷ்டிராவில் இருந்து எஸ்.பி.சவான் இப்படி எல்லோரும் சஞ்சயை வரவேற்றனர். எஸ்.பி.சவான் எல்லை மீறிப் புகழ்ந்தார். 'அவர் இளைஞர்கள் தலைவர் மட்டுமல்ல... தேசத்தின் தலைவரும்’ என்று பேசினார். அந்தக் காலத்தில் அதைப் புகழ்ச்சி என்றுகூடக் கூற முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிந்தது. இது காங்கிரஸின் அன்றைய நிலைமையை வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. காங்கிரஸார் தங்கள் லட்சியங்களை இழந்து போயினர். அநேகர் குறுக்கு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். மற்றவர் புகழில் மறைந்து கொள்வதைக் காட்டிலும் சுலபமானது எதுவும் இல்லை. தனயனைப் புகழ்ந்து தாயாரை உச்சி குளிர வைத்து தங்களை நிலைநிறுத்திக்கொள்வதே அவர்களின் நோக்கமாகும்'' என்று எழுதி இருக்கிறார். இந்திரா குடும்பத்தின் முக்கியமான தலையாட்டி பொம்மைகளில் ஒருவரான முஹம்மது யூனுஸே இப்படி எழுதி இருக்கிறார் என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கவனியுங்கள்.
இப்படிப்பட்ட நேரத்தில் பி.என்.ஹக்ஸர் மட்டும்தான், ''பிரதமருடன் ஒரே வீட்டில் வசிக்கும் வரை, எந்தவிதமான வர்த்தகரீதியான செயல்பாடுகளிலும் சஞ்சய் காந்தி ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்'' என்று துணிச்சலாகச் சொன்னார். இதனாலேயே ஓரங்கட்டப்பட்டார்.
இதேபோன்ற எண்ணம் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி புபுல் ஜெயகருக்கும் இருந்தது. சஞ்சய் பற்றி வெளிப்படையாகச் சொன்னால் இந்திராவுக்குப் பிடிக்காது என்று புபுல் ஜெயகருக்குத் தெரியும். 'சஞ்சய் இதே மாதிரியான தொழில் எல்லாம் செய்ய வேண்டுமா? அரசியல் எதிரிகள் இதனைப் பயன்படுத்திக்கொள்வார்களே?’ என்று வருத்தப்பட்டு கேட்பதுபோல இந்திராவுக்குச் சொல்லிப் பார்த்தார். அதற்கு இந்திரா சொன்ன பதில், புபுல் ஜெயகரை பதில் யோசிக்கவிடாமலே தடுப்பது மாதிரி இருந்தது.
''பிரதமரின் மகன் என்பதற்காக சஞ்சய்க்கு ஆர்வமான தொழிலைச் செய்து சாதனை படைப்பதற்கு தடை போட முடியாது'' என்று சொன்ன இந்திரா,
''அது ஒரு கார் கம்பெனியைப் போலவே இல்லை என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஒருநாள் நான், கான்ஸன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரைச் சந்தித்தேன். அவருக்கு விமானம் செய்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இரண்டே இரண்டு அறைகள் கொண்டது அவரது கம்பெனி. அதில் அவர் ஒரு சிறிய விமானத்தை உருவாக்கி இருந்தார். அதில் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றி வருவார். ஒரு பாதிரியாரால் ஒரு விமானத்தை உருவாக்க முடியும்போது, சஞ்சயால் ஒரு காரைத் தயாரிக்க முடியாதா?'' என்று கேட்டாராம்.
ஒரு அறைக்குள் பறப்பதை விமானம் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், சஞ்சய் தயாரித்ததையும் கார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா இப்படிச் சொன்னார் என்பதை அவர் இறந்ததற்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் புபுல் ஜெயகருக்கே வெளியில் சொல்லத் தைரியம் வந்தது.
அந்தளவுக்கு யாராலும் இந்திராவால்கூட தட்டிக் கேட்க முடியாதவராக சஞ்சய் வலம் வந்தார். ஒரு உதாரணம் சொன்னால் புரியும்!
பாரத ஸ்டேட் வங்கியின் நாடாளுமன்ற வீதி கிளையின் தலைமைக் கணக்காளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு ஒரு போன் வந்தது. ''நான் பிரதமரின் செயலாளர் ஹக்ஸர் பேசுகிறேன். பிரதமருக்கு அவசரமாக 60 லட்சம் பணம் தேவைப்படுகிறது'' என்று அந்தக் குரல் சொன்னது. அந்தக் குரல், போனை இன்னொருவரிடம் கொடுத்தது. அடுத்துப் பேசுபவர் பெண். ''பணத்தை நீங்கள் எடுத்து வந்து கொடுங்கள்'' என்றது. இது பிரதமர் இந்திராவின் குரல்தான் என்று அந்தக் கணக்காளர் பின்னர் நடந்த விசாரணையில் சொன்னார்.
60 லட்சம் ரூபாயை எடுத்தார் மல்ஹோத்ரா. காரில் வைத்தார். சொன்ன இடத்துக்குப் போனார். நின்ற நபரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கியவர் பெயர்தான் நகர்வாலா.
60 லட்சம் ரூபாய் என்பது இன்றைய ஊழல்களோடு ஒப்பிடும்போது குறைவாகத் தெரியலாம். 1971-ல் 60 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் எனப் பாருங்கள்!
60 லட்சம் ரூபாய் பணத்தை யாரிடமும் தான் கொடுக்கச் சொல்லவில்லை என்று ஹக்ஸர் கையை விரித்துவிட்டார், அப்படி யாருக்கும் நான் போன் செய்யவில்லை என்று சொல்லிவிட்டார். எதிர்கட்சிகள் இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பி இந்திராவை வளைத்தது. இந்திரா இதற்கு பதிலே பேசவில்லை. ''அந்த அதிகாரி சொல்வது நம்பும்படியாக இல்லை'' என்று சொல்லி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நகர்வாலா கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சில மாதங்களிலேயே நகர்வாலா சிறையில் இறந்தார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி டி.கே.காஷ்யப், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.
நகர்வாலா சாதாரண ஆள் அல்ல. இந்தியப் புலனாய்வுத் துறையில் வேலை பார்த்தவர். ஒரு வங்கி அதிகாரியையும், புலனாய்வு அதிகாரியையும் யார் பயன்படுத்த முடியும் என்பது தெரியாதது அல்ல. இது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று தெரிந்ததும், நகர்வாலாவை உடனடியாக கைது செய்கிறார்கள். அவரிடம் இருந்து பணம் அப்படியே கைப்பற்றப்படுகிறது. மிகப்பெரிய கிரிமினலாக இருந்திருந்தால் நகர்வாலா, உடனடியாக எங்காவது தப்பி இருக்கக் கூடும். அதைச் செய்யாமல் தானே சிக்கிக்கொண்டு, பணத்தையும் திருப்பி ஒப்படைத்தார்.
ஆனால் கடைசி வரை, போனில் பேசியது யாருடைய குரல் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இந்திரா அமைத்த விசாரணையில் மட்டும் அல்ல... அவரது ஆட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசு அமைத்த விசாரணையிலும் இதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 'விசாரணைக்குப் பிறகும் சந்தேகம் அதிகரிக்கவே செய்கிறது’ என்று நீதிபதி சொன்னார். ஆனால் உண்மைகள், விசாரணை கமிஷன்கள் வைத்து தேட வேண்டியதாக எப்போதும் இருக்காது.
60 லட்ச ரூபாய்  பணத்தை எடுத்துக் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட மல்ஹோத்ராவுக்கு, தன்னுடைய கார் கம்பெனியில் சஞ்சய் காந்தி வேலை போட்டுக் கொடுத்திருந்ததன் மூலமாக உண்மை உணரத்தக்கது!
- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 15

மகாத்மா முதல் மன்மோகன் வரை!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

- Vikatan Article

மகாத்மா முதல் மன்மோகன் வரை ! - 14

கூட்டணி ஃபார்முலா உருவானது!  
நேருவை அறிந்தவர்கள், நேரு வயதை எட்டியவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுடன் பழகியவர்கள் என ஒரு பெருங்கூட்டம் கட்சியைவிட்டு விலகிப்போனதை வருத்தமாகப் பார்க்கவில்லை இந்திரா. தனக்கு வசதியாகிப் போனதாகவே உணர்ந்தார். அதிகாரக் குவிமையமாக தானும் காங்கிரஸ் தலைமையும் மாறுவது ஒன்றே லட்சியம் என்பதுபோலச் செயல்பட்டார். இந்த நோக்கத்துடன் இந்தியாவையே ஒற்றை ஆட்சி நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்.
இந்தியா பரந்து விரிந்துபட்ட ஒரு தேசம். இதில் பல மொழிகளைப் பேசும் தேசிய இனங்கள் இருக்கின்றன. வேறு வேறு கடவுள்களை வணங்கும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றனர். இந்தப் பரப்பில் வர்த்தகம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தொழில்பரப்பை மொத்தமாக பிரிட்டிஷாருக்குத் தாரை வார்த்தபோது பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள், பாளையப்பட்டுகள் அனைத்தையும் சேர்த்து அளித்தனர். இதில் பலருடனும் சண்டையிட்டும் சமாதானமாகவும் மொத்த இடத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி வளைத்து, அதற்கு ஒன்றுபட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கியது. ஒற்றை ஆட்சிகொண்ட நிர்வாக முறை அமலானது.
ஒரு நாடு முழுவதும் ஒரே ஆட்சியால் ஆளப்பட்டால், அந்த முறைக்கு ஒற்றை ஆட்சி முறை என்று பெயர். ஒரு அரசாங்கத்தின் அனைத்து விதமான அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட மையத்தில், அதாவது மத்திய அரசாங்கத்திடம் இருந்து செயல்படுத்தப்படும் ஒற்றை ஆட்சியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செயல்படுத்தினார்கள்.
பல்வேறு மொழி, இன, மத, சாதி, பண்பாடு கொண்ட நாட்டை ஒற்றை ஆட்சி முறை எப்படி பிரதிபலிக்க முடியும்? எனவேதான், 'கூட்டாச்சி தத்துவம் மலர வேண்டும்’ என்று நம்முடைய விடுதலைப் போராட்ட வீரர்கள் குரல் கொடுத்தனர். கூட்டாட்சி என்பது பல்வேறு மாநிலங்கள் இருக்கும், அந்த மாநிலங்களை இணைக்கும் மத்தியக் கூட்டமைப்பு அரசு ஒன்று இருக்கும். ஒரே நாட்டுக்குள் ஒரு மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் இருக்கும். இந்தக் கூட்டாட்சி முறையைத்தான் காங்கிரஸ் கட்சியும் சுதந்திரப் போராட்ட காலத்தில் வலியுறுத்தியது.
'எதிர்கால இந்திய அரசமைப்பு, கூட்டாட்சி அமைப்பாகத்தான் இருக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூறியது. ஆனால், சுதந்திரம் அடையும் காலகட்டம் நெருங்கிவரும் சூழ்நிலையில், 'அநேகமாக விடுதலை பெற்ற இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட இந்தியாவாகத்தான் இருக்கும். ஆனால், மிக அதிகமான ஒற்றை ஆட்சி முறைகளும் கட்டுப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் அந்தக் கூட்டாட்சி அமைப்பில் இடம்பெற வேண்டும்’ என்று நேரு சொல்ல ஆரம்பித்தார். மாநிலத்தில் அரசுகள் இருந்தாலும் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் அமைய வேண்டும் என்று நேரு நினைத்தார். காங்கிரஸ் கட்சியையும் ஒரு மத்திய மயமாக்கப்பட்ட ஒரு கட்சியாக உருவாக்கினார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இருந்தாலும், அனைத்துக்கும் அதிகாரம் பொருந்திய அமைப்பு... அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காங்கிரஸ் ஒர்க்கிங் கமிட்டி என்று இதைச் சொல்வார்கள். நடைமுறையில் காங்கிரஸ் காரிய கமிட்டி என்று அழைப்பது இதைத்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பொருந்தியது இந்தக் காரிய கமிட்டி. இது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் கண்ணசைவைப் பார்த்து மட்டுமே இயங்கக் கூடியது. இந்தத் தலைவரைத்தான் காங்கிரஸ் மேலிடம் என்றும் கட்சியின் ஹை கமாண்ட் என்றும் அழைக்கிறோம். மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும் மாநில அரசின் காங்கிரஸ் முதல்வர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவருமே இந்த ஹை கமாண்டுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் நினைத்தால் பதவியில் தொடரலாம். மனம் மாறினால் பதவியை இழக்கலாம். மாநிலத் தலைமைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கட்சி மட்டத்தில் முடிவெடுத்த காங்கிரஸ் கட்சி, மாநில அரசுகளுக்கே பெரிய அதிகாரங்கள் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையைப் படிப்படியாக உருவாக்கவும் செய்தது.
இன்னொன்று... அரசாங்கத்துக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற சூழ்நிலையையும் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
ஒரு அரசாங்கத்தை, ஒரு அரசியல் கட்சி ஆளலாம். அதற்காக அந்த அரசியல் கட்சியே அரசாங்கமாக ஆக முடியுமா? ஆனால், காங்கிரஸ் அப்படி வித்தியாசம் காண முடியாத அளவுக்கு ஒரு அரசாங்கத்தை ஆளும் அரசாங்க கட்சியாகவே செயல்படத் தொடங்கியது.
இந்தியாவின் நிர்வாக நெறிமுறைகளை ஆய்வுசெய்த வரலாற்று ஆசிரியர்கள் இந்த நுணுக்கமான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது வைக்கிறார்கள். ''காங்கிரஸின் ஆட்சி முறை, ஒரு அரசியல் கட்சிக்கும் அரசுக்கும் இருக்க வேண்டிய எல்லைக் கோட்டை முழுவதும் மங்கச் செய்துவிட்டது'' என்று பேராசிரியர் கே.எம்.பாம்வெல் எழுதி இருக்கிறார். அதாவது, மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, மத்திய ஆட்சிக்கும் அதை ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொள்வது - என்ற சூழ்நிலையை நேரு காலத்தில் லேசாக ஆரம்பித்து இந்திரா காலத்தில் அதைக் கெட்டிப்படுத்தினார்கள். 1947-1967 வரை இதில் அசைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் எழுந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு இறங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததுபோல, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஏகபோகம் - 1967-ல் தகர்ந்தது என்றே சொல்லலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், 'ஒரே வழி எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும்; எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் சேரலாம். காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பது ஒன்றே கொள்கை; மற்றவற்றை, ஓரமாக ஒதுக்கி வைத்துவிட வேண்டும்’ என்ற கூட்டணி ஃபார்முலா அப்போதுதான் உருவானது. உன்னதமான சோஷலிஸ்ட்கள் என்று கொண்டாடப்பட்ட ராம் மனோகர் லோஹியா, வகுப்புவாத ஜனசங்கத்துடனும் வலதுசாரி சுதந்திரா கட்சியுடனும் சேர்ந்தார். 'திராவிட இனவாதம்’ பேசிய அண்ணாவும் 'தமிழ்த் தேசியவாதம்’ பாடிய ம.பொ.சி-யும் மதச் சிந்தனைகள் கொண்ட முஸ்லிம் லீக்கும், வலதுசாரி எண்ணம் கொண்ட ராஜாஜியையும் கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொண்டு காங்கிரஸை வீழ்த்தப் புறப்பட்ட காலம் அது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்தது. பஞ்சாபில் அகாலிதளம் தலைமையிலான அரசை, ஜனசங்கமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து ஆதரித்தார்கள். பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்த எதிர்க்கட்சி அரசாங்கங்களில் சுதந்திரா கட்சியும் ஜனசங்கமும் சோஷலிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடம்பெற்றன. அரசாங்கத்தில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது.
இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு எதிராக மார்தட்டிக் கிளம்பி இருப்பவர்கள், கடந்த காலத்தில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதவாத சக்திகளுடனும் வலதுசாரிகளுடனும் எந்தக் கூச்சமும் இல்லாமல் கூட்டணி வைத்துக்கொண்டவர்கள்தான் என்பதே வரலாற்றுப் புரிதல்.
இந்திராவுக்கு எதிராக தமிழகம் நீங்கலாக பிற மாநிலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணி அரசுகள், உள் முரண்பாடுகளால் உதிர ஆரம்பித்தன. 1967 முதல் 1970 வரை பீகாரில் ஏழு அரசுகள், உ.பி-யில் நான்கு அரசுகள், ஹரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளத்தில் தலா மூன்று அரசுகள் அமைந்தன. இந்த உள்குழப்பம் காரணமாக ஏழு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டு காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 800 எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியதாகவும் அதில் 150 பேர் அமைச்சர்கள் ஆனதாகவும் ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஸ்திரமற்ற தன்மையை மேலே உட்கார்ந்து இந்திரா ரசித்தார். மாநிலங்களில் அவரது செல்வாக்கு குறைந்தாலும், மத்தியில் அவரது அதிகாரம் பலமாக இருந்தது. 1971 தேர்தலில் 'இந்திராவை ஒழிப்போம்’ என்று ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா, ஜனசங்கம், எஸ்.எஸ்.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன.
நன்றாகக் கவனியுங்கள். 1940-களில் இருந்து எந்த ராஜாஜியும் காமராஜரும் தனித்தனி தீவுகளாக இருந்து மோதினார்களோ... அந்த இருவரும் 1971 தேர்தலில் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் ஜனசங்கமும் இருந்தது. சோஷலிசம் பேசிய காமராஜரும், வலதுசாரி கொள்கை கொண்ட ராஜாஜியும் மதவாதிகளான ஜனசங்கமும் சேர்ந்து கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தல் அது. இந்த ஜனசங்கம்தான், இன்றைய பாரதிய ஜனதாவின் தாய். இந்தத் தேர்தலில் இந்திராவுடன் கூட்டணி வைத்தார் கருணாநிதி. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸை வீழ்த்த மெகா கூட்டணி அமைத்த கட்சி அது.
காமராஜரும் ராஜாஜியும் ஜனசங்கமும் சேர்ந்துவிட்டதால், அந்த அணியே வெற்றிபெறும் என்று செய்திகள் பரவியது. சென்னை கடற்கரையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தில் மைக் முன் பேசப் போன காமராஜரை அழைத்து, தன் ஜிப்பாவில் வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து விபூதியை எடுத்து நெற்றியில் இட்டார் ராஜாஜி. அன்று பேசிய ராஜாஜி, ''ஞானோதயம் வந்த பிறகுதான் யார் நல்லவர் என்று புரிகிறது'' என்றார். ''நான் சொல்வதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறேன். திருமணத்துக்குப் பிறகு மகனும் மருமகளும் ஒன்றுபடுவதுபோல நானும் காமராஜரும் ஒரே குடும்பமாகிவிட்டோம்'' என்று ராஜாஜி சொன்னபோது, ஸ்தாபன காங்கிரஸ் வென்று இந்திரா தோல்வியடைந்ததுபோல எல்லோரும் கைதட்டினர்.
அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இந்தப் பொதுத்தேர்தலில் இந்திராவுக்கும் காங்கிரஸுக்கும் சாதகமான நிலை (1971-ல்) ஏற்பட்டது. பெரும்பான்மை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை பலத்தை இந்திரா பெற்றார். ஒற்றை ஆட்சி தன்மைகொண்ட ஒரு மத்திய அரசை, மாநிலங்களை அடிமையாக மட்டுமே வைத்திருக்கும் மத்திய அரசை உருவாக்க நினைத்தார். ''மத்திய அரசின் கீதத்துக்கு ஏற்ப மாநில அரசுகள் தாளம் போட வேண்டும் என்பது மிகமிகத் தேவையானது'' என்று திருப்பதியில் பேசும்போது பிரதமர் இந்திரா வெளிப்படையாகச் சொன்னார். தான் நினைத்ததே கட்சியிலும், தான் நினைத்ததே ஆட்சியிலும், தான் நினைத்ததே மாநில ஆட்சிகளிலும் என்று இந்திரா செயல்பட 1971 தேர்தல் வழி அமைத்துக் கொடுத்தது.
இதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல; 'இந்திரா நாயகம்’ என்று புதிய பெயரையே சூட்டினார் இரா.செழியன். இந்த யுகத்தின் நாயகனாக 'மாருதி’ காரில் வந்தார் இந்திராவின் இளைய மகன் சஞ்சய்.

- Vikatan Article

ஆறாம் திணை - 73

த்தமாகக் குறட்டை விட்டுத் தூங்குபவரைப் பார்த்து, 'ச்சே... கள்ளம்கபடம் இல்லா மனசு... அசந்து தூங்குறார். கொடுத்து வெச்சவர்!’ என ஆச்சரியப்படாதீர்கள். சத்தமானக் குறட்டைப் பழக்கம், ஆரோக்கியக் குறியீடு அல்ல. உடல் எடை அதிகமாக இருந்து தொப்பையுடன் வலம் வருபவர் வாயில் இருந்து வரும் இந்த அனிச்சை ஒலி, பல வேளைகளில் அபாயச் சங்கு ஒலி.
சில விநாடிகள் இடையிடையே மூச்சு நின்று தடங்கலுடன் நடைபெறும் சுவாசத்தின்போதும், அனிச்சையாக வாயால் கொஞ்சம் காற்றை ஆற்றலுடன் உள்ளிழுக்கும்போதும் எழுவதுதான் அந்த விபரீதச் சத்தம். இப்படி ஒவ்வொரு முறையும் சில விநாடி மூச்சுத்தடங்கல் நிகழும்போதும் தடாலடியாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். பின் சத்தமான உள்ளிழுப்பில் அந்த இழப்பு ஈடுகட்டப்படும். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காரணமாக, ஆழ்ந்த உறக்கம் இல்லாது, மேலெழுந்தவாரியான உறக்கமே நிகழும். இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாத, குறட்டையுடன் அவதிப்படும் நோயை 'Sleep Apnea’ என்கிறார்கள். இவர்களுக்கு இதயத் துடிப்பில் தள்ளாட்டம், இதயத் தசைகள் வலுக்குறைவு, மாரடைப்பு... எனப் பல பிரச்னைகள் வரக்கூடும். கவனமாக இல்லையென்றால், திடீர் மரணம்கூட சம்பவிக்கும் வாய்ப்பு உண்டு.
பெருந்தொப்பைக்காரர்களுக்கு அதிகக் குறட்டை இருக்கும். நாள்பட்ட ஆஸ்துமா நோயினர், சைனஸ் நோய் உள்ளவருக்கும் குறட்டை வரும். குறட்டைக்கும் மதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. குடிப்பழக்கம் உள்ள நபருக்கு வரும் குறட்டை, காலன் கொடுக்கும் அபாய அலாரம். இரவில் மது அருந்தி, நடு இரவில் அதிகக் கொழுப்பு, காரம் உள்ள உணவைச் சாப்பிட்டு உறங்கும் பலருக்கும் கண்டிப்பாகக் குறட்டை இருக்கும். அது ஆழ்நிலைத் தூக்கத்தைப் பாதிப்பதால், பகலில் மனம் ஒட்டாத அலுவலகக் கூட்டத்தில் சில மணித்துளிகள் அமர்ந்திருந்தாலே தூக்கம் கண்களைச் சுழற்றும். பகல் உறக்கம் சில மணித்துளிகள் இல்லாவிட்டால், மாலை பணியில் எரிச்சல் எட்டிப்பார்க்கும்.
குறட்டை பற்றிய குறிப்புகள், கும்பகர்ணப் படலம் உள்ள ராமாயணம் தவிர்த்து அன்றைய மருத்துவக் குறிப்புகளில் அதிகம் தென்படவில்லை. உடல் உழைப்பு அதிகம் இல்லாத காலத்தில் குறட்டை அதிக அளவு இருந்திருக்காது போலும். சித்த மருத்துவம், குறட்டைப் பழத் தைலத்தை மூக்கடைப்பு நோய்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது. சைனஸ் நோயால் வரும் குறட்டையை அது தடுப்பதால், அந்தப் பெயர் வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை!
குறட்டையில் இருந்து விடுபட, குடியில் இருந்து விடுபட வேண்டும். உடல் எடையைக், (குறிப்பாக தொப்பையை) குறைத்தே ஆகவேண்டும். இல்லாவிடில் சந்திரனுக்குப் பயணப்படும் விண்வெளி வீரர் போல, ஒரு முகமூடி உபகரணத்தை அணிந்துகொண்டு ஆக்ஸிஜன் உருளைகள் உதவியுடன் உறங்க வேண்டிவரும்.
சைனஸ் மூக்கடைப்பு உள்ளவர்கள், சுக்குத் தைலம் அல்லது குறட்டைப் பழத் தைலத்தால் வாரம் ஒருமுறையேனும் எண்ணெய்க் குளியல், மற்றவர் நல்லெண்ணைக் குளியல் போடுவது படிப்படியாக ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். தினசரி 'கபாலாபாதி’ எனும் நாடிசுத்தி மூச்சுப் பயிற்சியும், பிற பிராணாயாமப் பயிற்சியும் செய்வதுதான் குறட்டையை அடியோடு நீங்கச் செய்வதற்கான மிகச் சிறந்த பயிற்சி. மூச்சுப் பயிற்சியில் உறக்கத்துக்கு எனத் தனி மூச்சுப் பயிற்சியை வடிவமைத்துள்ளனர். 'RAPID EYE MOVEMENT SLEEP’ எனும் மேலோட்டமான தூக்கம் எப்படிக் கட்டுப்பட்டு ஆழ்ந்த உறக்கம் வழிவகுக்கப்படுகிறது என்பதை, electro encephalogram சோதனை மூலம் நிரூபிக்கவும் செய்திருக்கிறார்கள்.
காலையில் 45 நிமிட வேக நடை, மாலை மூச்சுப் பயிற்சி, உடல் எடை குறைக்க உணவுப் பழக்கம், மதுவை ஒழித்தல் மட்டுமே குறட்டைக்கு நிரந்தரத் தீர்வாகும்.
'எல்லாம் சரி... தொப்பை, அதிக உடல் எடை, மது காரணமாகக் குறட்டை வந்தால் நீங்கள் சொல்லும்படி செய்யலாம். என் பையனுக்கு மூன்று வயது. அவன் விடும் குறட்டைக்கு என்ன பண்ணுவது?’ என்று பதட்டமாகக் கேட்பார்கள் சில பெற்றோர். குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்னைகள் இருப்பின், அதனால் ஏற்படும் தொண்டைச் சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டுவதால் ஏற்படும் அவதியும்கூட குறட்டையைத் தோற்றுவிக்கலாம். குழந்தைகள் குறட்டைவிடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு டான்சிலைடிஸ் பிரச்னை இருக்கிறதா என்று குடும்ப மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
வீட்டுத் தொட்டியில் வளரும் கற்பூரவல்லி இலைச் சாற்றில் தேன் சேர்த்து குழைத்துக் கொடுத்தால், மெள்ள மெள்ள டான்சில் வீக்கம் குறையும். அதே போல் மிளகை தேனில் குழைத்துத்  தந்தால், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சு சளி, இருமல் ஆகியவற்றை நீக்க உதவும். பூண்டுத் தேனைப் பக்குவமாக குழந்தையின் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சிலின் மீது தடவினாலோ, அதனை குழந்தையின் நாக்கின் பின்புறம் தடவி கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைக்கச் சொன்னாலோ, மெதுமெதுவாக வீக்கம் குறையும். இதோடு ஐஸ்க்ரீம், இனிப்புகள் மீதான அலாதிப் பிரியத்தை அகற்றுவதால், மீண்டும் மீண்டும் கபம் அங்கே சேருவதைத் தடுக்க முடியும். குழந்தையின் குறட்டையும் மறையத்தொடங்கும்!
ஆழ்ந்த உறக்கம் ஆரோக்கிய ஆயுளுக்கான ரீசார்ஜ் என்பதை மறக்காதீர்கள்!
- பரிமாறுவேன்...
குறட்டைப் பழத் தைல செய்முறை
நாட்டு-சித்த மருந்துக் கடைகளில் 'குறட்டைப்பழம்’ கிடைக்கும். அது, சாப்பிடுவதற்கு உகந்த பழம் அல்ல. ஆனால், அதன் தைலம் மருத்துவக் குணம் நிரம்பியது.
குறட்டைப் பழச்சாறு 1 லிட்டர், சமபங்கு நல்லெண்ணெய். இதில் 20 கிராம் இடித்த மிளகு போட்டுக் காய்ச்ச வேண்டும். சாறு வற்றி எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கி புட்டியில் சேமித்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு இதனைத் தேய்த்து எண்ணெய்க் குளியல் போட்டால்,  மூக்கடைப்பு, தலைவலியுடன் வரும் குறட்டை நீங்கும். குறட்டைப் பழத்துக்கு இன்னொரு பெயர் 'சவுரிப்பழம்’. ஏனென்றால், இந்தத் தைலத்தின் பக்கவிளைவு... அடர்த்தியான கூந்தல் வளர்ச்சி!

- Vikatan Article

ஆறாம் திணை - 72

டந்த வாரம் உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, ''கை கழுவும் இடம் எங்கே?'' எனக் கேட்டேன். ''ப்ளீஸ் வெயிட் சார்... ஃபிங்கர் பௌல் வரும்!'' என்றார் சிப்பந்தி. கைகளைப் பிசைந்து ஓடும் நீரில் கழுவாது, கோப்பைச் சுடுநீரில் கையை மூழ்கடித்துக் கழுவுவது நாகரிகமா... மடச் சோம்பேறித்தனமா? புரியவில்லை! வந்த கழுவும் கோப்பையில் வெந்நீரில் மிதந்துகொண்டிருந்த எலுமிச்சம் பழத் துண்டைப் பார்த்து கொஞ்சம் வேதனையாக இருந்தது. எத்தனை அற்புதமான பாரம்பரிய மருந்து எலுமிச்சை... அதற்கு இந்த நிலையா?
மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக... என விடுகதையாக சித்தர் தேரன் மருந்து பாரதத்தில்  பாடியிருக்கும் பழம், எலுமிச்சை. சித்த மருத்துவப் புரிதலில், 'மந்திரி எனும் 'பித்தம்’ அதிகரித்துவரும் நோய்க்கு, அரசவையின் மந்திரி போல் சமயோசிதமாக உடலுக்கு வேறு பிரச்னை ஏதும் வராமல் பக்கவிளைவு இல்லாது தணிக்கும் ஆற்றலும், உடலின் மன்னனான 'வாதத்தை’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருப்பதும், தந்திரமாக உடலில் சேரும் 'கபத்து’க்கு மித்திரனாக (நண்பனாக) இருந்து அதை வெளியேற்றும் இயல்பும்... என மூன்று பணிகளையும் செவ்வனே செய்யும் இந்த எலுமிச்சை’ எனக் கவித்துவத்துடன் சொல்கிறார் சித்தர் தேரன்.
இறைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்பு போல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும்பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலுக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின்- சி சத்து எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், ரத்தக்கொதிப்பு காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் அது மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
ஈராக் நாட்டின் எலுமிச்சையைக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகம். 'சீமை கமலா ஆரஞ்சு’ எனச் சொல்லி, விலை அதிகமாக விற்கப்படும் 'மான்ட்ரேய்ன் பொமெல்லா’ ஒட்டு ரகக் கலவைப் பழத்துக்கு இணையான வைட்டமின்-சி சத்து, அதைவிடப் பெரிதும் விலை குறைவான நம் நாட்டு எலுமிச்சையில் உண்டு. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகளில், சீனத்து பிரக்கோலி போல், காபூல் மாதுளை போல், தென் அமெரிக்க நாட்டின் கிராவியாலா போல், எலுமிச்சையின் பயனும் மிகவும் பேசப்பட்டு வருகிறது.
எலுமிச்சையின் தோலில், பழத்தில் உள்ள eriocitrin, hesperidin, naringin முதலான flavones glycosides உடல் எடை குறைப்பில், சர்க்கரை நோய் வராது தடுக்க, ரத்தக்கொழுப்பு குறைக்க எனப் பல தொற்றா வாழ்வியல் நோய்களில் பயனாவதை நவீன உணவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டில் ஓர் ஆராய்ச்சி, லெமன் டீயில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதன் பயனை முழுமையாக ஆய்ந்து, நாம் ஏன் தினம் 'லைம் டீ’ சாப்பிடக் கூடாது என்ற சிந்தனையை விதைத்திருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரில் பாலோ வெள்ளை சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. அதையும்விட முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரை 'இன்ஸ்டன்ட் லைம் டீ பவுடரை’ வெந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மணம் இருக்கும்... ஆனால், மருத்துவம் அதிகம் இருக்காது. காரணம், தேயிலையை இன்ஸ்டன்ட் பொடியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் நம் இந்த பாராவின் முதலில் சொன்ன பல மருத்துவ குணமுள்ள பாலிபீனால்கள் அனைத்தும் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைந்துவிடும். உண்மையான லெமன் டீ பயனுக்கு, அவ்வப்போது தேயிலை போட்ட, கொஞ்சம் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிடுவது மட்டும்தான் நல்லது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு; ஆத்திர சமையலுக்குச் சக்தி மட்டு!
ஒரு பக்கம், 'எலுமிச்சைச் சாறு சேர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பறை கழுவலாம்’ என நவீன வணிகம் இந்தப் பழத்தை வேறு இடத்துக்குக் கொண்டுசெல்ல, மறுபக்கம் 'எலுமிச்சை கீமோதெரபியைக் காட்டிலும் பாதுகாப்பான கேன்சர் மருத்துவம்’ என தகவல்கள் பரபரக்கின்றன. எலுமிச்சைச் சாறு, கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுப்பதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், எலுமிச்சையின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்கு பல காலம் பிடிக்கும். காப்புரிமை அரக்கன் பிடியில் சிக்கியுள்ள மருந்து நிறுவனங்கள், அதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டுத்தான் ஆராய்ச்சியையே தொடர்வார்கள். ஒருவேளை அதிக லாபம் சம்பாதிக்க இயலாது எனக் கணக்காளர்கள் கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், அந்த நிறுவனங்கள் பயனளிக்கும் மருத்துவ முடிவுகளைப் பரணேற்றி வைத்துவிடும்.
கேன்சர் நோயாளிகள் இதற்கெல்லாம் காத்திராமல், எலுமிச்சைச் சாறில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தோடு கூடுதலாகச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை!
மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பிறழ்வு முதலான பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்த மருத்துவ மூலிகை, எலுமிச்சை. மனச்சோர்வு மன நோயாவது ஒருசிலருக்கு மட்டுமே. சர்க்கரை நோயாக, ரத்தக்கொதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் நோயாக உருமாறுவதே  அதிகம். எலுமிச்சம் பழச் சாற்றில் லேசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் சீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், இந்த நோய்களைத் தவிர்க்க உதவிடும்.
ஆகவே, எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்!
- பரிமாறுவேன்...

- Vikatan Article

ஆறாம் திணை - 71

வெள்ளையனை மட்டுமல்ல வெள்ளை அரிசியையும் வேண்டாம் எனச் சொன்னவர் மகாத்மா காந்தி. 'பழுப்பரிசியே நல்லது’ என 70 வருடங்கள் முன்னரே அவர் வலியுறுத்தினார். உணவுப்பற்றாக்குறை குறித்த பெரும் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் 'ஆலையில் அரைத்த, குருணை அற்ற, வெளுத்த அரிசியை மட்டுமே விநியோகிக்கச் சொல்கின்றார்கள். ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது’ என நெல் விவசாயிகள் வருந்திச் சொன்னபோது காந்தி, 'பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது. அதைச் சாப்பிடுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார்.
பழுப்பரிசி எனும் பிரவுன் ரைஸில், 'Aleurone layer’ எனும் தவிட்டுக்குப் பிந்தைய அரிசியின் தோல் நீக்கப்படுவது இல்லை. அந்த 'அலெயுரன்’ நீக்கிய வெள்ளை அரிசியில், கைக்குத்தல் அரிசியில் உள்ள 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6, மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேலானவை காலாவதியாகிவிடும். நார்ச் சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் கூட முற்றிலும் காணாமல் போய்விடும்.
இந்த உண்மை தெரிந்த பிறகும் அரிசிக்கு ஏன் அந்த பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், 'அலெயுரன் உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு அதுதானே அடிப்படை?’ என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குறைவதைக் கண்டுகொள்வது இல்லை!
பழுப்பாக இருக்கிறது என்பதாலேயே பல வீடுகளில் புழுங்கல் அரிசியை இன்றும் சமைப்பது இல்லை. 'Maillard Browning effect’ எனும் நெல்லை வேக வைப்பதால் ஏற்படும் பழுப்பு நிறம், வெளிநாட்டு அரிசி ஏற்றுமதிக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்பதற்காக முழுமையாகத் தோலுரித்து பாலிஷ் போட்டு வெள்ளையாக்கப்படும் அரிசியில் சத்துகள் ஏதும் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், புழுங்கல் நெல்லில் உள்ள எண்ணெய்ச் சத்து அரிசியின் 'அமைலோஸ்’ எனும் சர்க்கரையுடன் சேர்ந்து, எளிதில் உடைந்து, சர்க்கரையை ரத்தத்தில் வேகமாகக் கலக்கவிடாத 'அமைலோ பெக்டின்’ எனும் ஒரு கூட்டுப்பொருளாக மாறுவது பலருக்கும் தெரியாது. அதனாலேயே புழுங்கல் அரிசியைச் சமைத்துச் சாப்பிடும்போது அதில் உள்ள சர்க்கரை சத்து, பச்சரிசி போல வேகமாக குளுக்கோஸை ரத்தத்தில் உடனே கலக்க விடாது. மெதுவாகக் கலக்கும். ஆதலால், தேவையான ஆற்றலும் கிடைக்கும்; திடீர் சர்க்கரை உயர்வும் நடக்காது. ஆரம்பம் முதலே இதுபோன்ற லோ கிளைசிமிக் உணவை அன்றாடம் பயன்படுத்தினால், நம் வீட்டுக் குழந்தைகளுக்கு சர்க்கரையைத் தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியும்.
ரசாயன உரம் இடாது வளர்க்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கவுனி, காட்டுயாணம், குழியடிச்சான் முதலான பாரம்பரிய அரிசி ரகங்கள், பட்டைத்தீட்டாத தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றின் அரிசிகள் லோ கிளைசிமிக் தன்மையைத் தரும். இந்தத் தானியங்களைச் சோறாகச் சமைத்த பின்பு, கீரைச் சாதம் ஆக்கினாலோ, பச்சை நிற அவரை, வெண்டை, கத்திரி போட்ட குழம்புகள் மூலமோ, எண்ணெயில் பொரிக்காத வேகவைத்த நாட்டுக்கோழி குழம்பு மூலமோ, மீன் குழம்பு மூலமோ இன்னும் கொஞ்சம் லோ கிளைசிமிக் தன்மையோடு ஆக்க முடியும் என்கிறது இன்றைய உணவு அறிவியல்.
சர்க்கரை வியாதி, இதய நோய், புற்று நோய், அதிக உடல் எடை, 'பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி போன்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்க, இப்படியான பாலிஷ் பளபளப்பு இல்லாத தானியங்களில்தான் அன்றாட உணவு இருக்க வேண்டும். ஆனால், சாலையோரக் கடையின் முதன்மை உணவான பரோட்டாவோ, 'ஜென் எக்ஸ்’ குழந்தைகளின் தேர்வாக இருக்கும் நூடுல்ஸோ, பட்டர்-நானோ ஹை கிளைசிமிக் தன்மையுடன்தான் இருக்கின்றன.
'கடை பரோட்டோ எப்படி இவ்வளவு சாஃப்ட்டா இருக்கிறது... டி.வி-யில் காட்டும் சப்பாத்தி எப்படி தவாவில் அழகா 'புஸ்’ என பூரி மாதிரி உப்புகிறது’ எனப் பலருக்கும் கேள்வி உண்டு. பரோட்டா மென்மையாகவும் விசிறிப் போட வசதியாகவும், தவாவில் போடும் சப்பாத்தி, உப்பி வருவதற்கும் கோதுமையில் இயல்பாக இருக்கும் குளூட்டனைவிடக் கூடுதல் 'குளூட்டன்’ கோதுமை மாவில் சேர்க்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குளூட்டன், பலருக்கும் ஒவ்வாமை தரக்கூடியது. அது மூலநோய், குடல் புண், 'இரிடபிள் பவல் சிண்ட்ரோம்’ எனும் குடல் நோய் முதல் குடல் புற்று வரை உருவாக்கக்கூடியது.
'உப்பு... உப்பேய்’ என கூவிக் கூவி விற்கப்பட்ட உப்பை நாம் ஒழித்தாயிற்று. இன்றளவும் சர்ச்சைக்குரிய அயோடினைக் கலந்த உப்பு மட்டும்தான் சட்டப்படி சந்தையில் இருக்க முடியும். அந்த நவீன உப்பைத் தயாரிக்கும் முறையைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
உப்பளத்தில் காய்ந்து பெற்ற கடல் உப்பைக் கழுவி, அரைத்து, குழம்பாக்கி, தூசிகள்(?) நீக்கி, 'வேக்கும் ரிஃபைனரி’ மூலம் இயல்பாகவே கடல் உப்பில் ஒட்டியிருக்கும் மக்னீசிய, கால்சிய கனிமங் கள், கடல் பாசியின் நுண்கனிமங்களை நீக்கி, பின் காயவைத்து உலர்த்தி, அயோடினைச் சேர்த்து, மறுபடி பொலபொலவென உதிர்ந்து விழ, உணவுக் கட்டுப்பாடு விதிகள் அங்கீகரித்து சேர்க்கப்படும் ரசாயனங்களான சோடியம் ஃபெர்ரோசயனேட், சோடியம் அலுமினோ சிலிகேட் அல்லது மெக்னீசியம் சல்பேட் முதலான பல கூறுகளில் சிலவற்றைச் சேர்த்து பளபளப்பாகப் புட்டியில் வரும் வெள்ளை வெளேர் உப்பு, சுத்தம் தரலாம். சுகம் தருமா?
எமன் கறுப்பு எருமையில் வருவதுபோல சித்திரித்தே நமக்குப் பழக்கம். ஆனால், உண்மையில் எமன் வருவதோ, 'வெள்ளை எருமை’யில்தான். உஷார்!
- பரிமாறுவேன்...

- Vikatan Article