Saturday, January 4, 2014

ஆறாம் திணை - 69 மருத்துவர் கு.சிவராமன்

'''பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என, நன்னூலில் பவணந்திப் புலவர் என்றோ புதுமைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார். குடிசை வீடு அபார்ட்மென்ட்டாகவும்,  வேட்டி-சேலை ஜீன்ஸ்-டி-ஷர்ட்டாகவும், புறா விடு தூது செல்போன், மின்னஞ்சலாகவும்  மாறி உள்ளன. இவை எல்லாவற்றையும் பாதக விளைவுகளைக் கண்டுகொள்ளாமல் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், உணவில் மட்டும் அரிசிக்குப் பதில் நூடுல்ஸ், பீட்சா என்று ஏன் புதுமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?'' - இது என்னிடம் பலர் கேட்கும் கேள்வி. இதற்கான பதிலை, நான் விரிவாகவே விளக்குகிறேன்.
தமிழ் சமூகம், புதுமையை எப்போதும் உதாசீனப்படுத்தியதே இல்லை. விட்டு விடுதலையாக, கட்டுடைக்கும் புதுமை நிச்சயம் வேண்டும். சமூக அடித்தட்டில் இன்றளவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை மீட்டெடுக்க, புதுமை நிகழ்ந்தேதான் ஆக வேண்டும். இந்த நிலையில், உணவில் புதுமைக்கு மட்டும் ஏன் பயம்?

மிளகில் இருந்து மிளகாய்க்கு நகர்ந்ததுபோல, குடம்புளியில் இருந்து தக்காளிக்கு வந்ததுபோல, வரகு, தினையில் இருந்து நெல்லரிசிக்கு வந்ததுபோல, அடிசல்கும்மாயத்தில் இருந்து சாம்பார், ரசத்துக்கு நகர்ந்ததுபோல, நம் உணவிலும் புதுமைகள் வந்தன. அந்தப் புதுமைகள், வரலாற்றில் இனக்குழுக்கள் இடம்பெயர்ந்தபோதும், படையெடுப்புகளின் போதும் நிகழ்ந்தவை. அவை மெள்ள மெள்ள நம்மிடையே ஊடுருவின. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் உட்புகுந்த புது உணவுகள், அப்படி ஊடுருவியவை அல்ல!
வெளித்தோற்றத்தில் நவீனக் கலாசாரக் குறியீடும், கலோரி பூச்சும், ஆரோக்கியக் குறிப்பும் பதித்துக் கொண்டுவரப்படும் பல புதுமை உணவுகள், மறைமுகமாக நம் மீது நடத்தப்படும் படையெடுப்புகள்! அறத்தையும் பொருளையும் பிரித்தறியத் தெரியாத வணிகப் பேரங்கள். சூழலைச் சிதைக்கும் புதுமைகள் இங்கே பயமுறுத்துவதாகத்தான் உள்ளன. பாரம்பரியமே பாதுகாப்பாக இருக்கிறது.
'தொற்றா நோய்க்கூட்டம்’தான் இனி மனிதகுலம் எதிர்கொள்ளும் பெரும் சவால் என்பதை, ஐ.நா. சபை முதல் அண்ணாச்சிக் கடை வரை அனைவரும் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். நம் உடல்-மன ஆரோக்கியத்தில் வைரஸ் பாக்டீரியாக்கள் உண்டாக்காத பாதிப்பை, நாம் சிதைத்த சூழலும் உணவும் உண்டாக்குகின்றன. இந்தத் தொற்றா வாழ்வியல் நோய்க்கூட்டம், இன்றளவில் 'முழுமையாகத் தீர்க்கமுடியாத நோய்’ என்பதைத் தாண்டி, நோயோடு வாழ்நாளை நகர்த்தவும்கூட வசதி படைத்தவரால்தான் முடியும் என்ற நிலையை மெதுவாக உருவாக்குகிறது.
சர்க்கரை நோயினால் சிறுநீரகச் செயலிழப்பு வந்த பின், 'எவ்வளவு நாள்தான் என்னால் வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்ய முடியும்? 21 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் கீமோதெரபிக்கு வீட்டையும் காட்டையும் விற்றாயிற்று. என் நோய், என்னை வதைப்பதுடன் எனக்குப் பின் என் குடும்பத்தையும் வதைப்பது என்ன நியாயம்? மூன்று நாளத்திலும் அடைப்பு. அடைப்பு நீக்க ஸ்டென்ட்டோ, மாற்றுப் புறவழி நாள இணைப்பு கொடுத்தாலோ, நிச்சயம் எனக்கு நல்வாழ்வு உண்டுதான். ஆனால், அதற்கான மூன்று லட்ச ரூபாய்க்கு நான் எங்கே போவேன்?’ இப்படியான கேள்விகளுடன் இந்தியாவில் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலவுகிறார்கள், உங்களுக்கு வெகு அருகிலேயே!
வெறும் கூடுதல் கொழுப்பும், உப்பும், இனிப்பும், உடல் அறியாத ரசாயனமும் உள்ள பன்னாட்டுக் குப்பை உணவு தரும் malnutrition மட்டுமல்ல, சுதந்திரம் அடைந்து 67-வது புத்தாண்டு கொண்டாடும் இந்தத் தருணத்திலும் 65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் bad nutrition உடன் இருப்பதும் தொற்றா நோய்க்கூட்டத்தைத் தொடங்கும் என்கிறது நவீன அறிவியல்.
THRIFTY PHENOTYPE HYPOTHESIS’ - இன்று பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவப் புரிதல். அதன்படி, தாயின் கருப்பைக்குள் உணவுப் பற்றாக்குறையுடன் வளரும் சிசு, வளரும் பருவத்தில் தகுதியான RDA கிடைக்காத குழந்தை இரண்டுக்குமே வெறும் சோகையும், புரதப் பற்றாக்குறையும், காசமும், கழிச்சலும் மட்டுமல்ல... அவர்கள் வளர்ந்து ஆளாகும்போது சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றும்கூட வரும் என்கிறது. இப்படி நம் சகபயணி வாழ்வின் பிறப்பில் இருந்து மரணம் வரை நோய்க்கூட்டத்தில் சிக்கியிருப்பதற்குக் காரணம், உலகத்தையே கட்டியாளும் வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது தெரியுமா?
'உங்கள் நாட்டு மக்களுக்கு இனாம் கொடுக்கக் கூடாது; மானியமும் கூடாது. நாங்கள் சொல்லும் நிறுவனத்திடம் இருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும். உங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்றால், எங்கள் நாட்டின் கழிவுகளை உங்கள் ஊரில் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மர அறுவைத் தொழில்நுட்பத்தையும் இயந்திரத்தையும் வழங்குவோம்... உங்கள் ஊர் மரங்களை அறுத்து 'ஃபினிஷ்டு புராடக்ட்’ ஆக எங்களிடம் திருப்பி அளிக்க வேண்டும்’ - இதுவும் இன்ன பிறவுமாக ஏகப்பட்ட ஒப்பந்தங்கள்தான் நம் ஒவ்வொருவரின் இயக்கத்தை, நம் செலவுகளைத் தீர்மானிக்கின்றன என்றால் நம்புவீர்களா?
ந்தப் புது வருடத்திலிருந்து தினசரி ஓடப்போகிறேன்; கிரெடிட் கார்டு பயன்படுத்தப்போவது இல்லை; முதல் மார்க் வாங்கப்போகிறேன்; சிக்ஸ்பேக், ஜீரோ இடுப்பு உடம்பு கொண்டுவரப்போகிறேன்... என, ஆளாளுக்குப் பல முடிவுகள் எடுத்திருப்போம். ஆனால், நாம் அனைவரும் எடுக்கவேண்டிய புத்தாண்டு உறுதி ஒன்று இருக்கிறது.
அது, வரகு தோசை, சோளப் பணியாரம், கேழ்வரகு இட்லி, கம்பு சோறு, சாமை பிரியாணி, குதிரைவாலி கூட்டாஞ்சோறு... ஆகியவற்றை அடிக்கடி சமையலறையில் மணக்கச்செய்து உணவுத்தட்டுகளில் நிரப்பிக்கொள்வோம் என்பதே!
நவதானியக் கொழுக்கட்டை, சிறுதானிய இடியாப்பம், அவல்-வெல்லப் பாயசம், நிலக்கடலை உருண்டை... என, உங்கள் குழந்தைகள் சுவைக்கப் பழகட்டும். பால்கனி தொட்டிச் செடியில் நேற்றைய உணவு மிச்சத்தைப் போட்டு வளர்த்த கீரையிலும், ரசாயனக் கலப்பு இல்லா உள்ளூர் காய்கறியில், உள்ளூர் பழத்தில், கடல் மீனில், களத்தில் மேயும் நாட்டுக் கோழியில் இருக்கும் ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்வோம். அதுதான் உண்மையிலேயே 2014-ஐ நிஜப் புத்தாண்டாகக் கழிக்கச் செய்யும்!
-Vikatan article

No comments:

Post a Comment