Saturday, January 4, 2014

எந்த காரை வாங்கலாம்?

அதுவா...  இதுவா?
கார் வாங்கப் பணத்தை ஏற்பாடு செய்வதுகூட சிரமமான காரியம் அல்ல. 'எந்த காரைத் தேர்ந்தெடுக்கலாம்?’ என்ற கேள்விக்கு விடையைக் கண்டுபிடிப்பதுதான் உண்மையிலேயே சிரமமான விஷயம். அதிலும், புதிதாக வந்திருக்கும் கார்களை வாங்கலாமா அல்லது மார்க்கெட்டில் ஏற்கெனவே வெற்றிபெற்ற கார்களை வாங்கலாமா? எது, கொடுக்கும் விலைக்கு ஏற்ற தரமான காராக இருக்கும்?
எது, எதில் பெஸ்ட்?
எது நம் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கார் என்பதைக் கண்டறிவதற்கு முன்பு, 'எதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று முடிவுசெய்ய வேண்டியதும் முக்கியம். அந்த வகையில், சைஸ், விலை, பவர் ஆகியவற்றை வைத்து, 'மெத்தட் ஆஃப் எலிமினேஷன்’படி பல கார்களைச் சுலபமாக எலிமினேட் செய்துவிட முடியும்.
அப்படிச் செய்தாலும்கூட ஆல்ட்டோவா, இயானா, டஸ்ட்டரா, எக்கோஸ்போர்ட்டா, அதுவா இதுவா என்ற கேள்வி வந்து நிற்கும். இதற்கு விடை காண்பதுதான் மிகவும் சிரமம். ஆனால், இந்த 32 பக்க இணைப்பு உங்கள் கையில் இருந்தால், அந்தச் சிரமம் இருக்காது.
இந்தத் தொகுப்பு குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு கடிதம், மெயில் மற்றும் ஃபேஸ்புக் மூலமாகவும் அனுப்பலாம்.
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் கார், மாருதி ஆல்ட்டோ. ஆல்ட்டோ, இயான், நானோ ஆகிய மூன்று கார்களும் சேர்ந்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2.5 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன. இந்திய கார் மார்க்கெட்டின் ஆணிவேர் இந்தச் சின்ன கார்கள்தான்.
ஆல்ட்டோ, நானோ, இயான் ஆகிய கார்கள், பலருக்கு முதல் காராகவும் சிலருக்கு இரண்டாவது, மூன்றாவது காராகவும் இருக்கும். பட்ஜெட் கார்கள் என்பதற்காக, காசு குறைவாக உள்ளவர்கள் மட்டும் அல்ல, நகர நெருக்கடிகளில் தினமும் அலுவலகம் செல்பவர்களும், கடை வீதிகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருப்பவர்களும்தான் இந்த கார்களை அதிகம் வாங்குகிறார்கள்.
இதில், ஆஃப் ரோடிங் செய்ய முயற்சிப்பது, நெடுஞ்சாலையில் பறக்க முயற்சிப்பது ஆகியவை எல்லாம் நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.  
   டேஷ்போர்டில் பொருட்கள்வைக்க இரட்டை க்ளோவ் பாக்ஸ், மியூஸிக் சிஸ்டம், பவர் விண்டோஸ், ப்ளூ-டூத் மற்றும் பென் டிரைவ் இணைக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள் நானோவில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆல்ட்டோ 800 காரில் மியூசிக் சிஸ்டம், வீல் கவர், யுஎஸ்பி இணைக்கும் வசதி, ஸ்பாய்லர், இடது பக்கக் கண்ணாடி போன்ற வசதிகள் உள்ளன.
நானோ மற்றும் ஆல்ட்டோ கார்களின் டேஷ்போர்டையும் இயானின் டேஷ் போர்டையும் பார்த்தாலே... இவற்றுக்கு இடையேயான தர வித்தியாசம் தெரிந்துவிடும். ஸ்டீயரிங் டில்ட் அட்ஜஸ்ட், மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், காற்றுப் பை, கீ-லெஸ் என்ட்ரி என இயானில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன.


நானோவின் இருக்கைகள் உயரமாக இருப்பதோடு, இடவசதியும் அதிகம். பின் இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். பில்லர்கள் சிறிதாக இருப்பதால், வளைத்து ஓட்டும்போது சாலையை முழுவதுமாகப் பார்க்க முடியும். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொள்பவர்கள், நகருக்குள் எந்த இடிபாடுகளிலும் சிக்காமல் நானோவை ஓட்ட முடியும். இதன் ஏ.சியும் பக்கா!
ஆல்ட்டோ 800 காரின் முன் இருக்கையில் இடவசதி அதிகம். அதனால், மிகவும் உயரமானவர்கள்கூட கொஞ்சம் வசதியாக உட்கார முடியும். ஆனால், ஸ்டீயரிங் கொஞ்சம் தாழ்வாக இருப்பதால், திருப்பங்களில் வளைக்கும்போது கால் முட்டி ஸ்டீயரிங்கை இடிக்கும். அதனால், கொஞ்சம் கவனம் தேவை. ஆல்ட்டோ 800 காரில் பவர் விண்டோ பட்டன்கள் கியர் லீவருக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளன. பின்பக்க இருக்கைகளில் மூன்று பேர் உட்கார முடியாது என்பதோடு, இரண்டு பேரே நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்கப் போதுமான லெக்ரூம் ஆல்ட்டோவில் இல்லை.
இயானில் சிக்கன நடிவடிக்கை என்ற பெயரில் குளறுபடிகள் எதுவும் இல்லை. முழுமையான காராக இருக்கிறது இயான். பவர் விண்டோஸ், மிரர் அட்ஜஸ்ட் என எல்லாமே பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றன. முன் இருக்கைகளில் அதிக இடவசதி உண்டு. பின்பக்க இருக்கைகளில் இடவசதி குறைவுதான் என்றாலும், ஆல்ட்டோவைவிடப் பரவாயில்லை. மூன்று கார்களில் இயானின் டிக்கியில்தான் பொருட்களை அதிகம்வைக்க முடியும். ஆல்ட்டோவைவிட இயானின் டிக்கி 38 லிட்டர் கொள்ளளவு அதிகம்.
   மிகவும் சிறிதான, 12 இன்ச் வீல் கொண்ட நானோவில், மேடு பள்ளங்களில் பயணிப்பது தண்டனைதான். ஆல்ட்டோ மற்றும் இயானின் சஸ்பென்ஷனைக் குறை சொல்ல முடியாது. மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அதிகமாக அலுங்கல் குலுங்கல்கள் தெரியவில்லை.
   624 சிசி, இரண்டு சிலிண்டர் இன்ஜின்கொண்ட நானோவை, எப்படி மெகா சைஸ் கார்களுக்கு இடையே நகருக்குள் ஓட்ட முடியும் என சிலருக்குப் பய உணர்வு எழலாம். ஆனால், உண்மையிலேயே நகருக்குள் பெரிய கார்களுடன் போட்டி போடும் அளவுக்கு, ஓட்டுவதற்குச் சிறந்த காராகவே இருக்கிறது நானோ. ஆனால், நானோவில் இன்ஜின் சத்தம் மிகவும் அதிகமாகக் கேட்பதோடு, அதிர்வுகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஆல்ட்டோவில் இருப்பது 796 சிசி திறன்கொண்ட இன்ஜின்தான் என்றாலும், நகருக்குள் ஓட்டும்போது பெர்ஃபாமென்ஸ் குறைபாடு இருப்பது போன்ற எந்த எண்ணமும் ஏற்படாது. காரணம், ஆரம்பம் மற்றும் மிட் ரேஞ்சில் பவர் சீராக வெளிப்படுகிறது. கிளட்ச் ஹெவியாக இல்லை. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் என்பதால், ஸ்டாப்/ஸ்டார்ட் டிராஃபிக்கில், ஓட்டுதல் அனுபவம் சிறப்பாகவே இருக்கிறது.
மூன்று கார்களில் அதிக பவர்கொண்ட கார், ஹூண்டாய் இயான்தான். ஆனால், அதிக சக்தி இருந்தும் பவர் டெலிவரி சீராக இல்லாததால், இயானின் பெர்ஃபாமென்ஸ் செம சொதப்பல். அடிக்கடி கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதிர்வுகளும் அதிகம். மைலேஜைப் பொறுத்தவரை நானோ நகருக்குள் 15-17 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. ஆனால், 15 லிட்டர் டேங்க் என்பதால், ஒவ்வொரு 200 கி.மீ-க்கும் ஒருமுறை பெட்ரோல் பங்க் தேட வேண்டும். மற்ற இரண்டு கார்களும் சராசரியாக 15 கி.மீ வரை மைலேஜ் தருகின்றன.
 விலைதான் இந்த செக்மென்ட்டில் எந்த காரை வாங்கலாம் என்பதை முடிவு செய்யும் இறுதிக் காரணி. விலையைப் பொறுத்தவரை, இயான் விலைக்கு இரண்டு நானோ கார்களை வாங்கலாம். இயானின் விலை ரொம்பவே அதிகம். ஆல்ட்டோ, தரத்துக்கு ஏற்ற விலையுடன் உள்ளது.  
 நானோவின் பலம், அதன் விலையும் மெயின்டனன்ஸ் செலவுகளும் குறைவு என்பதுதான். சின்ன காருக்குப் போதுமான பெர்ஃபாமென்ஸ், அதிக மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் என்பது ஆல்ட்டோவின் பலம். இயானின் விலை அதிகம் என்பதோடு, பெர்ஃபாமென்ஸும் சிறப்பாக இல்லை. பவர் ஸ்டீயரிங் இல்லாதததும், இன்ஜின் சத்தமும் நானோவை போட்டியில் இருந்து பல படிகள் கீழே இறக்கிவிடுகிறது. தினமும் 15-20 கி.மீ-தான் பயணம் செய்வேன் என்பவர்கள், நானோவை வாங்கலாம். மற்றபடி, நீண்ட தூரம் ஓட்டினால் அலுப்புத் தட்டிவிடும். மூன்று கார்களில் பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை சிறந்தது ஆல்ட்டோ 800. பட்ஜெட் கார்தான் என்றாலும் ஸ்டைலாக இருக்க வேண்டும்; வசதிகள் அதிகம் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே, இயானை வாங்கலாம்.
ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிக முக்கியமான கார்கள், இவை மூன்றும். ஸ்விஃப்ட்தான் இந்த ஏரியாவின் நீண்ட கால தாதா! ஹூண்டாயின் ஐ20 மற்றும் ஃபோர்டு ஃபிகோ இரண்டு கார்களுமே ஸ்விப்ஃட்டுக்கு மிகச் சிறந்த போட்டியாளர்கள். உயர்ந்துகொண்டே போகும் பெட்ரோல் விலை உயர்வால், டீசல் கார்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். எதை வாங்கலாம்?

 இந்த வகைக் கார்களை, டிரைவர் வைத்து ஓட்ட மாட்டார்கள் என்பதால், அனைத்து வசதிகளுமே ஓட்டுநரை மையமாக வைத்துத்தான் உருவாக்கப்படும். டேஷ்போர்டின் தரம், சிறப்பம்சங்கள் என அனைத்திலுமே நிறைவான காராக இருக்கிறது ஸ்விஃப்ட். கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ், ரியர் ஃபோல்டிங் மிரர்ஸ் எனத் தேவையான வசதிகள் அனைத்தும் ஸ்விப்ஃட்டில் உள்ளன. ஆனால், ப்ளூ-டூத் வசதி இல்லை.
பெரிய கண்ணாடிகளைக் கொண்டிருக்கும் ஃபிகோ காருக்குள் அதிக இடவசதி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. டேஷ்போர்டு மிகவும் சாதாரணமாக இருக்கிறது. தரமாக இருந்தாலும் வசதிகள் அதிகம் இல்லை. ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்ஸ், ஏபிஎஸ் மற்றும் காற்றுப் பைகள் எனப் பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், மிக முக்கிய வசதியான பின்பக்க பவர் விண்டோஸ் வசதி இல்லை. மூன்று கார்களில் ஸ்டைலான, சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட கார் ஐ-20. பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், ரெயின் சென்ஸிங் வைப்பர், பார்க்கிங் சென்ஸார், 6 காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்ஸ் என சிறப்பம்சங்கள் அதிகம்கொண்ட கார், ஐ20.
 ஸ்விஃப்ட்டில் முன் பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம். ஆனால், பின்பக்க இருக்கைகளில் லெக்-ரூம் மிகவும் குறைவு. மேலும், இருக்கைகள் உயரம் குறைவாக இருப்பதோடு, முன்பக்கத்தில் உள்ள இரண்டு பில்லர்களுமே பெரிதாக இருப்பதும், சின்ன பின்பக்க விண்ட் ஸ்க்ரீனும் ப்ளைன்ட் ஸ்பாட்டுகள். ஓட்டும்போது முழுப் பார்வையை சாலையில் இருந்து மறைக்கிறது.
ஃபிகோவின் முன்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம் இருந்தாலும், சீட்டின் உயரம் மிகக் குறைவு. சீட்டை உயர்த்தும் அட்ஜஸ்ட் சிறப்பாக இயங்கவில்லை.
ஐ20 காரின் பின்னிருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும். அதேபோல், 295 லிட்டர் கொள்ளளவுகொண்ட ஐ20 டிக்கியில்தான் பொருட்கள் வைக்க அதிக இடம் இருக்கிறது.
 ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை ஸ்விஃப்ட்டைக் குறை சொல்ல முடியாது. வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும் சிறப்பாக இருக்கிறது ஸ்விஃப்ட்.
பாடி கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி, வளைத்து நெளித்து ஓட்டுவதற்கான பெர்ஃபெக்ட் ஸ்டீயரிங் என ஓட்டுநர்களின் காராக இருக்கிறது ஃபிகோ. ஆனால், காருக்குள் அலுங்கல் குலுங்கல்களை அதிகம் உணர முடிகிறது.
ஐ20 சாஃப்ட் சஸ்பென்ஷன், சின்ன மேடு பள்ளங்களுக்கு ஓகே என்றாலும், நம் ஊரின் பெரிய பெரிய ஸ்பீடு பிரேக்கர் மற்றும் குண்டு குழிகளில் படாதபாடுபடுகிறது.
 ஸ்விஃப்ட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின். அதிகபட்சமாக 74 bhp சக்தியை வெளிப்படுத்தும். ஆரம்ப வேகம் மந்தமாக இருப்பதால், நகருக்குள் கியர்களை உடனுக்குடன் மாற்றி வேகம் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதன் பிறகு இதன் வேகம் வியக்கவைக்கிறது. 0-100 கி.மீ வேகத்தை 13.63 விநாடிகளில் கடந்துவிடுகிறது. ஸ்விஃப்ட் டீசல் நகருக்குள் 14.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.5 கி.மீ மைலேஜ் தருகிறது.
1.4 லிட்டர், 68 bhp சக்திகொண்ட ஃபிகோ இன்ஜின்தான் பெர்ஃபாமென்ஸில் பின்தங்கியிருக்கிறது. ஆனால், டர்போ லேக் இல்லை என்பதால், நகருக்குள் ஓட்டுவதற்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கிறது ஃபிகோ. ஆனால், அதிக வேகத்தில் மற்ற கார்களுடன் போட்டி போட முடியாமல் ஒதுங்கிவிடுகிறது. 0- 100 கி.மீ வேகத்தைக் கடக்க 16 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது ஃபிகோ. நகருக்குள் 14.1 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.5 கி.மீ மைலேஜ் தருகிறது.
1.4 லிட்டர் காமென் ரெயில் டீசல் இன்ஜின்கொண்ட ஐ20, அதிகபட்சம் 88.7bhpசக்தியை வெளிப்படுத்துகிறது. பெர்ஃபாமென்ஸில் மூன்றில் சிறந்த கார் ஐ20தான். 0 - 100 கி.மீ வேகத்தை 12.88 விநாடிகளில் கடந்துவிடும் இந்த காரில் டர்போ லேக் அதிகமாக இல்லை. இதனால் நகருக்குள் ஓட்டுவதற்கும் சரி, நெடுஞ்சாலையிலும் ஓட்டுவதற்கும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மைலேஜிலும் குறைவில்லை. இது, நகருக்குள் 13.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.5 கி.மீ மைலேஜ் தருகிறது.
 ஸ்விஃப்ட்டின் விலை குறைந்த மாடலின் சென்னை விலை 6.87 லட்சம். வசதிகள் அதிகம்கொண்ட காரின் விலை 8.32 லட்சம். ஃபோர்டு ஃபிகோவின் விலை குறைந்த மாடலின் விலை 6.05 லட்சம். வசதிகள் அதிகம்கொண்ட மாடலின் விலை 7.39 லட்சம். கிட்டத்தட்ட ஃபிகோவைவிட 1 லட்சம் ரூபாய் அதிகமாக விற்பனையாகும் ஸ்விஃப்ட்டில் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி மற்றும் பின்பக்க பவர் விண்டோவைத் தாண்டி பெரிய வசதிகள் எதுவும் இல்லை. மூன்று கார்களில் மிகவும் விலை அதிகமான கார் ஐ20. இதன் விலை குறைந்த மாடலின் விலை 6.99 லட்சம். விலை அதிகம்கொண்ட மாடலின் விலை 8.78 லட்சம்.
 மூன்று கார்களில் விலைக்கேற்ற தரமான கார் ஃபோர்டு ஃபிகோதான். 'ஃபன் டு டிரைவ்’ என்பதில் முதல் இடம். மைலேஜ் மற்றும் தரத்திலும் சிறந்தது. ஆனால், பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது ஃபிகோ.
ஸ்விஃப்ட், இந்த செக்மென்ட்டில் மாஸ் கார். பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் மாருதியின் குறைந்த மெயின்டனன்ஸ் செலவுகள் எனக் குறை சொல்ல முடியாத கார். ஆனால், பெயரும் தோற்றமும் சலிப்படைய வைத்துவிட்டது.
ஐ20 காருக்கான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இதன் விலையை உயர்த்திக்கொண்டே இருக்கிறது ஹூண்டாய். விலை அதிகம்தான் என்றாலும் ஸ்டைல், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் மற்றும் நம்பகத்தன்மை என எல்லா விதத்திலும் சிறந்த காராக இருக்கிறது ஹூண்டாய்.
ஆல்ட்டோ, இயான், ஐ10 போன்ற சின்ன கார்கள் வேண்டாம்; ஃபிகோ, ஸ்விஃப்ட், ஐ20 போன்ற பெரிய கார்களும் வேண்டாம். இதற்கு இடையில் 6 லட்சம் ரூபாய்க்குள் தரமான டீசல் கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸ்தான் இந்த இரண்டு கார்களும். ஹூண்டாயின் புதிய காரான கிராண்ட் ஐ10, விற்பனையில் இப்போது டாப் 10 இடங்களுக்குள் வந்திருப்பது, இந்த கார்களுக்கான தேடல் அதிகம் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறது.
 ஸ்டைலைப் பொறுத்தவரை, இரண்டு கார்களில் ஸ்டைலான கார் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்தான். டொயோட்டா எட்டியோஸ் லிவாவில் அலாய் வீல், பவர் விண்டோஸ், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், ஏபிஎஸ், கீ-லெஸ் என்ட்ரி, மியூசிக் சிஸ்டம், ப்ளூ-டூத், காற்றுப் பை, ஸ்டீயரிங் கன்ட்ரோல்ஸ் என முக்கிய வசதிகள் அனைத்தும் உள்ளன.
சிறப்பம்சங்களை வைத்தே ஆளை மயக்கும் ஹூண்டாய், கிராண்ட் ஐ10 காரிலும் தனது கை வரிசையைக் காட்டியிருக்கிறது. ஆனால், இதில் பல வசதிகள் நமக்குத் தேவையே இல்லை. மியூஸிக் சிஸ்டம், யுஎஸ்பி, ப்ளூ-டூத், ஆட்டோமேட்டிக் மிரர்ஸ், ஸ்டீயரிங் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் அட்ஜஸ்ட், கலர் டிஸ்ப்ளே, பார்க்கிங் சென்ஸார், காற்றுப் பைகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்ட முக்கிய சிறப்பம்சங்கள் இருப்பது ஓகே. ஆனால், நகரத்துக்குள் பயணிக்க இருக்கும் இந்தச் சின்ன காரில் கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரியர் ஏ.சி வென்ட், லெதர் ஸ்டீயரிங் வீல் ஆகியவை தேவையற்றவை.
 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த கார் போல இருக்கிறது எட்டியோஸ் லிவா. காரின் டேஷ்போர்டு மற்றும் பிளாஸ்டிக்குகளின் தரம் ரொம்பவும் சுமார். பழைய லிவாவைவிட இப்போது புதிதாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தும் தரமான காராக இல்லை லிவா. ஆனால், இடவசதி அதிகம். முன்பக்க இருக்கைகளில் வசதியாக உட்கார்ந்து ஓட்ட முடியும் என்பதோடு, பின்பக்க இருக்கைகளில் மூன்று பேர் தாராளமாக நீண்ட நேரம் எந்த வலியும் இல்லாமல் உட்கார்ந்து பயணிக்கலாம்.
காருக்குள் நுழைந்ததுமே... கொடுத்த காசு வீண் போகவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது கிராண்ட் ஐ10. டேஷ்போர்டு மிகவும் தரமாக இருப்பதோடு, கன்ட்ரோல்கள் பயன்படுத்த மிகவும் ஈஸியாக இருக்கின்றன. டிரைவர் சீட் உயர அட்ஜஸ்ட் இருப்பதோடு, முன்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம். ரியர் ஏ.சி வென்ட் இருப்பதால், பின் இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியவில்லை. டிக்கியைப் பொறுத்தவரை இரண்டு கார்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. லிவாவைவிட கிராண்ட் ஐ10 காரில் 6 லிட்டர் கொள்ளளவு அதிகம்.



குறைந்த வேகத்தில் ஓட்டும்போது, எட்டியோஸ் லிவாவில் அலுங்கல் குலுங்கல்கள் அதிகம். வேகம் போகப் போக, இந்த ஆட்டம் தெரியவில்லை. ஸ்டெபிளிட்டி மிகவும் சிறப்பாக இருப்பதோடு, வளைத்து நெளித்து ஓட்டுவதற்குச் சிறந்தது லிவா. டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் குறைவு என்பதால், பார்க்கிங் செய்வது மிகவும் சுலபம்.
டீசல் கார்களில் ஹேண்ட்லிங் சிறப்பாக இருக்கும் கார், கிராண்ட் ஐ10. கிளட்ச் மிகவும் லைட்டாக இருப்பதால், டிராஃபிக் நெரிசலில் நீண்ட நேரம் ஓட்டினாலும் கால்களில் வலி இல்லை. சாஃப்ட் சஸ்பென்ஷன் என்பதால் நகருக்குள் ஓகே. பெரிய மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. ஸ்டெபிளிட்டியிலும் லிவாவுக்கு இணையாக கிராண்ட் ஐ10 சிறப்பாக இல்லை.
  
1364 சிசி திறன்கொண்ட டொயோட்டா எட்டியோஸ் லிவா, அதிகபட்சமாக 68 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 4 சிலிண்டர் இன்ஜின் என்பதால், அதிர்வுகள் இல்லை என்பதோடு, டர்போ லேக்கும் இல்லை. இதனால் நகருக்குள் வேகமாகப் பயணிக்க முடிகிறது. கிளட்ச் மிகவும் லைட்டாக இருப்பதோடு, கியர் ஷிஃப்ட்டும் செம ஈஸி. மைலேஜைப் பொறுத்தவரை லிவா நகருக்குள் லிட்டருக்கு 14.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.3 கி.மீ மைலேஜ் தருகிறது.
1120 சிசி திறன்கொண்ட கிராண்ட் ஐ10 அதிகபட்சமாக 71 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால், 3 சிலிண்டர் இன்ஜின் என்பதால், காரை ஸ்டார்ட் செய்தவுடனேயே அதிர்வுகளுடன் இயக்கத்தைத் துவக்குகிறது இன்ஜின். அதிக சக்தி இருந்தும் ஆரம்பத்தில் டர்போ லேக் இருப்பதால், லிவா அளவுக்கு நகருக்குள் ஓட்டுவதற்குச் சுலபமான காராக இல்லை கிராண்ட் ஐ10. டர்போ லேக் அதிகம் என்பதால், 0 - 100 கி.மீ வேகத்தைக் கடக்க மிகவும் பொறுமையாக 20.25 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதே வேகத்தை எட்டியோஸ் லிவா 15.86 விநாடிகளில் கடக்கிறது. அதிக மைலேஜுக்காக ட்யூன் செய்யப்பட்டிருக்கும் கிராண்ட் ஐ10, நகருக்குள் லிட்டருக்கு 15.4 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.6 கி.மீ மைலேஜ் தருகிறது.
 கிராண்ட் ஐ10 காரின் விலை குறைந்த டீசல் மாடலின் விலை 6.18 லட்சம். விலை அதிகமான ஆஸ்ட்டா மாடலின் விலை 7.54 லட்சம். இதில் வேடிக்கை என்னவென்றால், எட்டியோஸ் லிவாவின் விலை - சிறப்பம்சங்கள் அதிகம் கொண்ட கிராண்ட் ஐ10 காரைவிட அதிகம். லிவாவின் ஆரம்ப மாடலின் விலை 6.86 லட்சம். விலை அதிகமான மாடலின் விலை 7.86 லட்சம்.
 பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருந்தும், டொயோட்டாவின் தரத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தப்படும் வகையில் எட்டியோஸ் லிவா இல்லை. மேலும் விலையும் அதிகம். சாம்ஸங் போனில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கும். போன் வாங்கும் முக்கால்வாசிப் பேர் அதில் பல வசதிகளைப் பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள். அதுபோலத்தான் கிராண்ட் ஐ10. இந்த காருக்குத் தேவையில்லாத பல விஷயங்களைக் கொடுத்து, விலையை நியாயப்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தேவை இல்லாத வசதிகளை எல்லாம் தூக்கிவிட்டு விலையைக் குறைத்தால், கிராண்ட் ஐ10 காரின் விற்பனை இன்னும் கூடும்.
 
ஸ்விஃப்ட்டின் பின் பக்கத்தில், டிக்கியை மட்டும் சேர்த்தால் மட்டும் போதும். அது, இந்தியாவின் நம்பர் ஒன் மிட் சைஸ் காராக விற்பனையில் கலக்கும் என டிசையரை அறிமுகப்படுத்தும்போது, மாருதியே நினைத்துப் பார்த்திருக்குமா என்று தெரியாது. மாதந்தோறும் சுமார் 15,000 கார்கள் வரை விற்பனையாகி முதல் இடத்தில் இருக்கிறது. டிசையரின் அறிமுகம்தான் ஆரம்ப விலை மிட்-சைஸ் கார்களுக்கான மார்க்கெட் எவ்வளவு என்பதை, மற்ற கார் தயாரிப்பாளர்களுக்கு உணர்த்தியது. டிசையரின் விற்பனையைப் பங்குபோட வந்திருக்கும் கார்தான் ஹோண்டாவின் அமேஸ். டிசையரை வாங்கலாமா... அமேஸை வாங்கலாமா?
  

டிசையரின் பின் பக்கத்தைப் பார்க்கும்போது, டிக்கி - காருடன் பொருந்தாமலேயே இருப்பதை உணர முடியும். மேலும், ஸ்விஃப்ட்டின் அதே முன்பக்கம் என்பதால், பழைய கார் என்ற பிம்பத்தையே ஏற்படுத்துகிறது டிசையர். அமேஸ், ஒரு முழுமையான மிட் சைஸ் காராக இருக்கிறது. டிசையர், அமேஸ் ஆகிய இரண்டு கார்களிலுமே 2 காற்றுப் பைகள், யுஎஸ்பி போர்ட், அலாய் வீல், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளன. ஆனால், டிசையரில் கூடுதல் சிறப்பம்சங்களாக கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி மற்றும் சிடி ப்ளேயர் வசதி உள்ளன. டிசையரில் இல்லாமல், அமேஸில் இருக்கும் ஒரே கூடுதல் வசதி, எலெக்ட்ரிக் சைடு வியூ மிரர் வசதி மட்டுமே!
டிசையரைவிட அமேஸின் வீல்பேஸ் 25 மிமீ குறைவு. அப்படி இருந்தும் அமேஸில் இடவசதி அதிகம். கேபின் இட வசதியை அதிகரிப்பதற்காக, டேஷ்போர்டை இன்ஜின் பக்கம் தள்ளிவைத்திருக்கிறது ஹோண்டா. டிசையரின் முன்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம் என்றாலும், பின் இருக்கைகளில் மூன்று பேர் அல்ல, இரண்டு பேரே நீண்ட தூரப் பயணங்களின்போது வசதியாக உட்கார முடியாது. அமேஸின் டிக்கி 400 லிட்டர் கொள்ளளவுகொண்டது. பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை அமேஸைவிட, டிசையரே ஸ்ட்ராங்கான கார்.
 அமேஸைவிட 1 இன்ச் பெரிய வீல்களைக்கொண்டிருப்பதால், குறைந்த வேகத்தில் ஸ்பீடு பிரேக்கர், குண்டும்குழியுமான சாலைகளில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல் அதிகம் இல்லை. ஆனால், பெரிய மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, எகிறிக் குதிக்கிறது டிசையர். ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸும் சிறப்பாக இல்லை.
அமேஸில் பாடி கன்ட்ரோல் சிறப்பாக இருக்கிறது. ஸ்டீயரிங்கும் பெர்ஃபெக்ட்டாக இருப்பதால், வளைவுகளில் ஜாலியாக வளைத்து நெளித்து ஓட்டலாம். மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் ஆட்டமும் அதிகமாக இல்லை. ஆனால், டிசையரைவிட அமேஸில் டீசல் இன்ஜின் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
 ஸ்விஃப்ட்டில் இருக்கும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின்தான் டிசையரிலும் இருக்கிறது. இது, அதிகபட்சமாக 74 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. டர்போ சார்ஜர் 1,800 ஆர்பிஎம்-க்கு மேல்தான் சூடு பிடிப்பதால், ஆரம்ப வேகம் மிகவும் மந்தம். இதனால், நகருக்குள் பயணிக்கும்போது கியர்களுடன் நீண்ட நேரம் விளையாட வேண்டியிருக்கும். ஆனால், 1,800 ஆர்பிஎம்-க்கு மேல் அதிக பவர் கிடைப்பதால், பெர்ஃபாமென்ஸில் குறை இல்லாத கார் டிசையர்.
ஹோண்டாவின் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், அதிபட்சமாக 98.6bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இது, டிசையரைவிட கிட்டத்தட்ட 24bhpஅதிகம். 1,200 ஆர்பிஎம் வரைதான் டர்போ லேக் என்பதால், இதை லேட் பிக்-அப் எனச் சொல்ல முடியாது. ஆனால், பவர் அதிகமாக இருந்தும் பெர்ஃபாமென்ஸில் அதிரடியான கார் எனச் சொல்ல முடியாது. இதற்குக் காரணம்,மைலேஜில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, அமேஸின் இன்ஜினை ட்யூன் செய்திருப்பதுதான்.
இருப்பினும், டிசையருக்கும் அமேஸுக்கும் மைலேஜில் பெரிய வித்தியாசம் இல்லை. டிசையர் நகருக்குள் லிட்டருக்கு 14.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 19.8 கி.மீ மைலேஜ் தர, அமேஸ் நகருக்குள் 15.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 20.8 கி.மீ மைலேஜ் தருகிறது.
பொதுவாக பெட்ரோல் கார்களில், அதுவும் ஹோண்டாவின் பெட்ரோல் கார்களில் சத்தமே வெளியே கேட்காது. ஆனால், ஹோண்டாவின் இந்த டீசல் அதிகம் சத்தம் எழுப்புகிறது. குறிப்பாக, மாருதியைவிட ஹோண்டாவின் இன்ஜின் காருக்குள் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, அதிகச் சத்தத்தை எழுப்புகிறது. அமேஸில் அதிர்வுகளும் கொஞ்சம் அதிகம்.
 விற்பனை உயர உயர... கடந்த ஐந்து ஆண்டுகளில் டிசையரின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது. டிசையர் டீசலின் ஆரம்ப மாடல் சென்னை விலை 7.29 லட்சம். விலை உயர்ந்த மாடலின் விலை 8.93 லட்சம். ஹோண்டா அமேஸ் 7.33 லட்சத்தில் துவங்கி, 9.06 லட்சம் வரை விற்பனையாகிறது.
 பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்திலுமே குறை சொல்ல முடியாத கார் ஸ்விஃப்ட் டிசையர். ஆனால், தோற்றத்திலும், ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையிலும் அமேஸைவிட சிறப்பான காராக இல்லை. ஹோண்டாவின் நம்பகத்தன்மை மற்றும் அதிக இடவசதிகொண்ட முழுமையான ஆரம்ப விலை மிட் சைஸ் காராக இருக்கும் அமேஸ்தான், இரண்டு கார்களில் சிறந்த கார்.
எஸ்யூவி போன்ற பிரம்மாண்டமான ஸ்டைல் வேண்டும்; 5 சீட்டர் போதும்; நகருக்குள் பயணிக்கும் காராக காம்பேக்ட்டாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் முன்பு வரை பெரிதாக சாய்ஸ் இல்லை. நகருக்குள் பயணிக்க முடியாமல், பெரிய எஸ்யூவி காரை 15 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுத்து தேவை இல்லாமல் வாங்கி அவஸ்தைப்பட்டவர்கள் அதிகம். நகருக்குள் மிகப் பெரிய எஸ்யூவி மார்க்கெட் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து ரெனோ வெளியிட்ட டஸ்ட்டர், சூப்பர் டூப்பர் ஹிட்!

இன்னும் ஒருபடி மேலே போய் இந்தியாவின் வரிச் சலுகை மீட்டரான, நான்கு மீட்டருக்குள்ளேயே ஒரு எஸ்யூவி காரைத் தயாரிக்க முடியும்  என்பதை நிரூபித்து வெற்றி பெற்றிருக்கிறது ஃபோர்டு எக்கோஸ்போர்ட். இரண்டு கார்களில் எதை வாங்கலாம்?
 இரண்டு கார்களில் ஸ்டைலான கார் ஃபோர்டு எக்கோஸ்போர்ட். காரின் முன் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, 4 மீட்டர் கார் என்பது இல்லாமல், பிரம்மாண்டமான எஸ்யூவி லுக்கில் இருக்கிறது எக்கோஸ்போர்ட். மாறாக லோகன் ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் டஸ்ட்டர், சாஃப்ட் ரோடர் லுக்கில் இருக்கிறது. எக்கோஸ்போர்ட்டைவிட நீளம் அதிகம் என்றாலும், கார் ஸ்டைலான எஸ்யூவியாக இல்லை.
லோகனின் ப்ளாட்ஃபார்ம் என்பதால், டஸ்ட்டரிலும் ரெனோவின் சிக்கன நடவடிக்கைகள் தொடர்கின்றன. எலெக்ட்ரிக் மிரர்ஸ், டிரைவர் சீட் உயர அட்ஜஸ்ட், பின்பக்க பயணிகளுக்கு ரியர் ஏ.சி வென்ட் என முக்கிய வசதிகள் அனைத்தும் உள்ளன. ஆப்ஷனல் வசதியாக டச் ஸ்கிரீனும் உண்டு. ஆனால், ஸ்டீயரிங் வீலில் இருக்கும் ஆடியோ கன்ட்ரோல் பட்டனை, ஸ்டீயரிங் வீலுக்குப் பின் பக்கமும்... எலெக்ட்ரிக் மிரர் அட்ஜஸ்ட்டை, கியர் லீவருக்குப் பின் பக்கமும் ஒளித்துவைத்திருக்கிறது ரெனோ. கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி-யும் இல்லை.
டஸ்ட்டருடன் ஒப்பிடும்போது, எக்கோஸ்போர்ட்டில் இல்லாத வசதி ரியர் ஏ.சி வென்ட் மட்டுமே! கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார் என அனைத்து வசதிகளும் உள்ளன. டஸ்ட்டரில் இரண்டு காற்றுப் பைகள் மட்டுமே இருக்க, எக்கோஸ்போர்ட்டின் விலை உயர்ந்த வேரியன்ட்டில் 6 காற்றுப் பைகள் உள்ளன. ஏபிஎஸ் இரண்டு கார்களிலும் உள்ளன.
 வெளிப்பக்கத்தைவிட, காரின் உள்ளேதான் இரண்டு கார்களுக்கும் இடையே தர வித்தியாசம் அதிகமாகத் தெரிகிறது. டேஷ்போர்டு பிளாஸ்டிக் தரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது டஸ்ட்டர். ஏ.சி கன்ட்ரோல்களின் தரமும் ரொம்ப சுமார். டஸ்ட்டரின் முன் இருக்கைகள் பெரிதாக இருக்கின்றன. ஆனால், மிகவும் தட்டையாக இருப்பதால், நீண்ட நேரம் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியவில்லை. ஆனால், பின்பக்க இருக்கைகளில், டஸ்ட்டரில் இடவசதி அதிகம். இங்கே மூன்று பேர் தாராளமாக உட்காரலாம். ஆனால், ரியர் ஏ.சி வென்ட் இருப்பதால், நடு சீட் பயணி கொஞ்சம் கால்களை மடக்கித்தான் உட்கார வேண்டும். ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டின் டேஷ்போர்டு முன்பக்கமாகத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால், முன்பக்கம் இடவசதி அதிகமாக இருக்கிறது. ஆனால், இது உயரமாக இருப்பதால், காரின் முன்பக்கம் எங்கே முடிகிறது என்று கணிப்பது சிரமம். டிக்கியைப் பொருத்தவரை, மீண்டும் டஸ்ட்டரில்தான் பொருட்கள் வைக்க அதிக இடம் உண்டு. டஸ்ட்டரின் டிக்கி 475 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 4 மீட்டர் எஸ்யூவிதான் என்றாலும் எக்கோஸ்போர்ட்டிலும் 362 லிட்டர் கொள்ளளவு இடம் இருக்கிறது.
 இரண்டு கார்களுமே கையாளுமையில் சிறந்த கார்கள். சின்ன ஹேட்ச்பேக் கார்களை ஓட்டுவது போன்று, நகருக்குள் ஈஸியாகப் பயணிக்க முடிகிறது. டஸ்ட்டரின் சஸ்பென்ஷன், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் இல்லாதவாறு திறமையாகச் சமாளிக்கிறது. எக்கோஸ்போர்ட், சின்னச் சின்ன மேடு பள்ளங்களைச் சமாளித்தாலும் குண்டும் குழியுமான சாலைகளில் அதிகமாக அலுங்கிக் குலுங்குகிறது. மேலும், ஸ்டெபிளிட்டியிலும் டஸ்ட்டர் அளவுக்குச் சிறப்பாக இல்லை. ஆனால், வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பான, டிரைவ் டு ஃபன் காராக இருக்கிறது எக்கோஸ்போர்ட்.
 லோகன், ஃப்ளூயன்ஸ், ஸ்காலா, பல்ஸ், மைக்ரா, சன்னி என இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு டஜன் கார்களில் இருக்கும் ரெனோவின் 1.5 லிட்டர் டிசிஐ இன்ஜின்தான் டஸ்ட்டரிலும் இருக்கிறது. 85bhp 110 bhp என இரண்டு பவர் கொண்ட இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது டஸ்ட்டர். இதில் 110 bhp  சக்திகொண்ட டஸ்ட்டர்தான் பெர்ஃபாமென்ஸில் சிறந்த கார். இருப்பினும், 2000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் அதிகமாக இருக்கிறது.  மேலும், கிளட்ச் ஹெவியாக இருப்பதால், நகருக்குள் டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டுவதற்குச் சிரமம். ஆனால், திராட்டிலை மிதிக்க மிதிக்க அதிக சக்தியால் பெர்ஃபாமென்ஸில் மிரட்டுகிறது டஸ்ட்டர். 0 - 100 கி.மீ வேகத்தை 11.88 விநாடிகளில் கடந்துவிடுகிறது டஸ்ட்டர். இதே வேகத்தைக் கடக்க எக்கோஸ்போர்ட் 13.72 விநாடிகளில் தான் கடக்கிறது. ஆனால், இன்ஜின் சத்தம் காருக்குள் அதிகம் கேட்கிறது.
1.5 லிட்டர் திறன்கொண்ட எக்கோஸ்போர்ட், 89 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. டர்போ லேக் இதில் இல்லை என்பதால், நகருக்குள் சட்டென சீறிப் பறக்க சிறந்த கார். மூன்றாவது கியரிலும் திணறல் இல்லாமல் 30-40 கி.மீ வேகத்தில் ஓட்டலாம். ஆனால், நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று வந்தால், பவர் இல்லாமல் எக்கோஸ்போர்ட் பின்தங்கிவிடுகிறது. டஸ்ட்டர், நகருக்குள் லிட்டருக்கு 11.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ மைலேஜ் தர, எக்கோஸ்போர்ட் நகருக்குள் 13.3 கி.மீ, நெடுஞ்சாலையில் 18.6 கி.மீ மைலேஜ் தருகிறது.
 110 தீலீஜீ சக்திகொண்ட ரெனோ டஸ்ட்டரின் ஆரம்ப மாடலின் விலை 13.12 லட்சம் ரூபாயில் துவங்கி, டாப் எண்ட் 14.85 லட்சம் ரூபாயோடு முடிகிறது. எக்கோஸ்போர்ட்டின் விலை 8.59 லட்சம் ரூபாயில் துவங்கி, 11.31 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.
 விலை, சிறப்பம்சங்கள், இடவசதி, ஃபன் டு டிரைவ் என நகருக்கு ஏற்ற பெர்ஃபெக்ட் எஸ்யூவியாக இருக்கிறது எக்கோஸ்போர்ட். ஆனால், நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பவர் இல்லாத காராகப் பின்தங்கிவிடுகிறது. டஸ்ட்டர், பவர்ஃபுல் காராகவும் அதிக இடவசதி கொண்ட காராக இருந்தாலும், விலைக்கேற்ற தரத்தில் சிறந்த கார், எக்கோஸ்போர்ட்தான்.
 
டஸ்ட்டரின் இன்னொரு வடிவம்தான், நிஸான் டெரானோ. பெரிய எஸ்யூவிகளுடன் போட்டி போடும் வகையில் டஸ்ட்டரின் முன்பக்கத் தோற்றத்தை அப்படியே மாற்றி, பிரம்மாண்டமான எஸ்யூவியாகக் கொடுத்திருக்கிறது நிஸான். பொலேரோ, ஸ்கார்ப்பியோ, ஸைலோ என கரடு முரடு கார்களை மட்டுமே தயாரித்து வந்த மஹிந்திரா, சட்டென ஸ்டைலான எஸ்யூவியாக விற்பனைக்குக் கொண்டுவந்த கார்தான் எக்ஸ்யூவி 500. சின்ன எஸ்யூவி வேண்டாம்; அதே சமயம் அதிக விலைகொண்ட காரும் வேண்டாம் என்பவர்களுக்கான சாய்ஸ்தான், இந்த இரண்டு கார்களும். இதில் எதை வாங்கலாம்?
 இரண்டுமே ஸ்டைலான கார்கள். நீள, அகல, உயர அளவுகளில் பெரிய கார் என்பதால், டெரானோவைவிட கொஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கிறது எக்ஸ்யூவி 500. டஸ்ட்டரைவிட 35,000 ரூபாய் விலை அதிகமாக விற்பனைக்கு வந்திருக்கும் டெரானோவுக்கும் டஸ்ட்டருக்கும் சிறப்பம்சங்களில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. மாறாக, டஸ்ட்டரில் இருக்கும் டச் ஸ்கிரீன் நேவிகேஷன் கன்ட்ரோல், ஸ்டீயரிங் பின்னால் ஒளிந்திருந்த ஆடியோ/போன் கன்ட்ரோல் லீவர் ஆகியவைகூட டெரானோவில் இல்லை. லெதர் சீட், ப்ளூ-டூத், யுஎஸ்பி போர்ட், பார்க்கிங் சென்ஸார், ஏபிஎஸ் மற்றும் இரண்டு காற்றுப் பைகள் என டஸ்ட்டரின் சிறப்பம்சங்கள் அனைத்தும் டெரானோவில் உள்ளன.
எக்ஸ்யூவி 500 காரின் மிகப் பெரிய பலமே, இதன் சிறப்பம்சங்கள்தான். டச் ஸ்கிரீன் ஜிபிஎஸ் நேவிகேஷன், கிளைமேட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், டிவிடி ப்ளேயர், 6 காற்றுப் பைகள், ஏபிஎஸ், மலைப் பாதையில் கார் பின்னால் வராமல் தடுக்கும் கன்ட்ரோல் என ஒரு எஸ்யூவி காருக்கு உண்டான அத்தனை வசதிகளும் உள்ளன. இதில், 4 வீல் டிரைவ் மாடல் இருப்பதும் கூடுதல் பலம்.
 காரின் வெளிப்பக்கத்தைப் போன்றே, காருக்கு உள்ளேயும் இரண்டு கார்களுக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். டெரானோவில் சென்டர் கன்ஸோலில் செவ்வக வடிவ ஏ.சி வென்ட்டுகள் இருப்பதோடு, இரட்டை க்ளோவ் பாக்ஸ், புதிய ஸ்டீயரிங் வீல் எனப் புதுமைகள் இருந்தாலும் டஸ்ட்டரின் குறைகள் எதுவும் டெரானோவில் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் மிரர் அட்ஜஸ்ட், கியர் லீவருக்குப் பின்னாலேயே ஒளிந்திருக்கிறது. ஆனால், எக்ஸ்யூவியுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் பாகங்களின் தரம் டெரானோவில் சிறப்பாக இருக்கிறது. இடவசதியைப் பொறுத்தவரை குறை சொல்ல முடியாத கார் டெரானோ.
எக்ஸ்யூவி 500, டேஷ்போர்டு டயல்கள் பெரிதாக இருந்தாலும் அதில் இருக்கும் ஏகப்பட்ட எண்கள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. முன்பக்க இருக்கைகளில் இடவசதி அதிகம். மேலும், இருக்கைகள் உயரமாக இருப்பதால், டிரைவிங் பொசிஷன் மிகவும் வசதியாக இருக்கிறது. எக்ஸ்யூவியின் மூன்றாவது வரிசையில் வசதியாக உட்கார முடியாது. ஆனாலும், ஏழு இருக்கைகள் என்பது இதன் கூடுதல் பலம். ஆனால், இதுவே இன்னொரு வகையில் மைனஸும்கூட. ஏழு பேர் காருக்குள் உட்கார்ந்துவிட்டால் டிக்கியில் பொருட்கள் வைக்க வெறும் 93 லிட்டர் கொள்ளளவுதான் இடம். பின் இருக்கைகளை மடக்கிவிட்டால், அதிகப் பொருட்களை வைக்கலாம். டெரானோவில் 475 லிட்டர் கொள்ளளவுகொண்ட டிக்கி இருப்பதால், அதிகப் பொருட்களை வைக்க முடியும்.
 டெரானோ, எக்ஸ்யூவி-யை ஈஸியாக வீழ்த்தும் ஏரியா இதுதான். ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் டெரானோ பெஸ்ட். சின்ன காரை ஓட்டுவது போன்று இருக்கிறது. நகருக்குள் யு-டர்ன், பார்க்கிங் என எல்லாமே இதில் சுலபம். ஆனால், எக்ஸ்யூவி 500 காரைத் திருப்ப, பெரிய வேனைத் திருப்புவது போன்ற மனநிலைக்குத் நம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.
மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, எக்ஸ்யூவி 500 காரில் அலுங்கல் குலுங்கல்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றன. மேலும், இது வேகமாக வளைத்து நெளித்து ஓட்ட தைரியத்தைத் தூண்டும் காராகவும் இல்லை. ரோடு கிரிப்பும் சிறப்பாக இல்லை. பிரேக்குகளின் செயல்பாடும் பயத்தை வரவழைப்பதாகவே இருக்கிறது.
 டெரானோவை விட 700 சிசி அதிகமாக 2.2 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது எக்ஸ்யூவி 500. பவரும் அதிகம். இருந்தும் மோசமான கியர்பாக்ஸ் மற்றும் அதிக எடையால், பெர்ஃபாமென்ஸில் தத்தளிக்கிறது எக்ஸ்யூவி. இதில் ஒவ்வொரு கியரையும் சரியாகப் போடுவதே பெரிய எக்ஸர்சைஸ். டர்போ லேக்கைப் பொறுத்தவரை 1500 ஆர்பிஎம் தொட்ட உடனே பிக்-அப் எகிறிவிடுவதால், நகருக்குள் ஓட்டுவது அவ்வளவு சிரமமாகத் தெரியவில்லை.
டஸ்ட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான் டெரானோவிலும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 110 தீலீஜீ சக்திகொண்ட இந்த காரில் 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. இதனால், நகருக்குள் சட்டென வேகம் பிடித்து ஓட்ட முடியவில்லை. ஆனால், எக்ஸ்யூவி 500 காரைவிட 30 தீலீஜீ சக்தி குறைவாக இருந்தாலும், குறைந்த எடை காரணமாக பவர்ஃபுல்லாகவே இருக்கிறது டெரானோ.
மைலேஜைப் பொறுத்தவரை டெரானோ நகருக்குள் லிட்டருக்கு 11.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17 கி.மீ மைலேஜ் தருகிறது. எக்ஸ்யூவி 500, நகருக்குள் 10.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 14.3 கி.மீ மைலேஜ் தருகிறது.
 பெரிய காராக இருந்தும் விலை குறைவாக இருப்பதுதான் எக்ஸ்யூவி 500 காரின் அதிக விற்பனைக்குக் காரணம். எக்ஸ்யூவி 500 காரின் விலை 14.60 லட்சம் ரூபாய் துவங்கி 17.79 லட்சம் ரூபாய் வரை போகிறது. டெரானோவின் விலை 13.49 லட்சம் ரூபாயில் துவங்கி, 14.82 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.
 அதிக இடவசதி இருப்பதால், காருக்குள் அதிகம் பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். மேலும், சிறப்பம்சங்களும் அதிகம். விலையும் குறைவு என்பதுதான் எக்ஸ்யூவி 500 காரை வாங்கத் தூண்டும் அம்சங்கள். நீங்கள் ஓட்டவில்லை, பின் இருக்கைகளில்தான் பயணீப்பீர்கள் என்றால், எக்ஸ்யூவி 500 கார்தான் உங்களுக்குச் சரியான காராகத் தோன்றும். ஆனால், கொடுக்கும் 15 லட்சம் ரூபாய்க்கு பில்டு குவாலிட்டியிலும், இன்ஜின் தரத்திலும், கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்திலும் சிறந்த கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குச் சரியான கார் - நிஸான் டெரானோதான்.
டீசல் கார்களுக்கான விற்பனை உயர்ந்துகொண்டே வரும் நிலையில், மிட்-சைஸ் கார்களிலும் டீசல் கார்களுக்கான போட்டிதான் அதிகம். இதில், டீசல் இன்ஜின் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், ஃபோர்டும், ஹூண்டாயும்தான் நேரடிப் போட்டியாளர்கள். அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் வகையில் ஸ்டைலாக இருக்க வேண்டும்; மைலேஜ் அதிகம் இருக்க வேண்டும்; ஏகப்பட்ட சிறப்பம்சங்களும் இருக்க வேண்டும் எனப் பல 'வேண்டும்’களை எதிர்பார்ப்பவர்களின் ஏரியா இது. இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஸ்டைலான, சிறப்பம்சங்கள் அதிகம்கொண்ட காராக வெர்னாவை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஹூண்டாய். இதற்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்தான் ஃபியஸ்டா. இரண்டு கார்களில் சிறந்த கார் எது?




ஸ்டைல் மற்றும் டிசைனைப் பொறுத்தவரை ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல எனும் வகையில், அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் கான்செப்ட், ஃபோர்டின் தனித்துவமான டிசைனும் இரண்டு கார்களையுமே பார்த்ததுமே கவர்ந்திழுக்கும் கார்களாக மாற்றியிருக்கின்றன.
இரண்டு கார்களிலுமே ப்ளு-டூத் ஆடியோ, போன் கன்ட்ரோல் இருப்பதோடு, ஃபோர்டில் கூடுதலாக குரல் மூலம் கன்ட்ரோல் செய்யும் வாய்ஸ் கன்ட்ரோல் வசதியும் உண்டு. ஆனால், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ஆறு காற்றுப் பைகள், டீசல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், கிளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட சிறப்பம்சங்களுடன் இருக்கிறது வெர்னா.
 இடவசதி அதிகம் என்பதோடு, இருக்கைகள் மிகவும் சொகுசாக இருப்பதால், நீண்ட நேரம் பயணம் செய்தாலும் ஃபியஸ்டாவில் அலுப்புத் தெரியவில்லை. பின் இருக்கைககளிலும் இடவசதி அதிகம்தான் என்றாலும், கண்ணாடி சிறிதாக இருப்பதால், காருக்குள் அடைந்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
வெர்னாவிலும் இடவசதி பிரமாதம் என்று சொல்ல முடியாது. வெர்னாவின் முன் இருக்கைகளில் மட்டும் அல்ல, பின் இருக்கைகளுக்கும் வசதியான வடிவமைப்பு மிஸ்ஸிங். வெர்னாவின் பின்பக்கம் ஹெட்ரூமும் குறைவாக இருக்கிறது. மேலும், இருக்கைகளும் உயரம் குறைவாக இருப்பதால், காருக்கு உள்ளே போவதும், வெளியே வருவதுமே சிரமமான விஷயமாக மாறிவிடுகிறது. இரண்டு கார்களிலுமே காபி கப், தண்ணீர் பாட்டில், பேப்பர் எனப் பொருட்கள் வைக்க அதிக இடம் இருப்பது போன்று தோன்றினாலும், முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி சிறிதாக இருக்கின்றன. டிக்கியைப் பொறுத்தவரை ஃபியஸ்ட்டாவைவிட 35 லிட்டர் கொள்ளளவு அதிகம்கொண்ட டிக்கியைக் கொண்டிருப்பதால், வெர்னாவில் இட வசதி அதிகமாக இருக்கிறது.


வெர்னா மிகவும் பின்தங்கியிருக்கும் ஒரே ஏரியா, ஓட்டுதல் தரம்தான். நகருக்குள் மட்டும்தான் ஓட்டுவீர்கள் என்றால், உங்களுக்கு வெர்னா ரொம்பவும் பிடிக்கும். விரல்களை ஸ்டீயரிங்கில் வைத்தாலே போதும்; சட்டென வளைந்து திரும்பும் வெர்னா. ஸ்டீயரிங் செம ஷார்ப். ஆனால், நெடுஞ்சாலையில் வேகம் போகப் போக கொஞ்சம் பயத்தை வரவழைத்து விடுகிறது. சில நேரங்களில் ஸ்டீயரிங்கை நீங்கள் திருப்பினாலும் நேராகப் போவது, வெர்னாவின் மிகப் பெரிய மைனஸ்.
மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, காருக்குள் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாகத் தெரிகின்றன. ரோடு கிரிப்பைப் பொறுத்தவரை பெரிய பிரிட்ஜ்ஸ்டோன் டயர்களைக் கொண்டிருப்பதால், தப்பிக்கிறது வெர்னா.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் மிகச் சிறந்த கார் ஃபோர்டு ஃபியஸ்டா. வளைத்து நெளித்து ஓட்ட சிறப்பாக இருப்பதோடு, ஸ்டெபிளிட்டியும் சூப்பர். ஃபியஸ்டாவின் ஸ்டீயரிங்கை பெஞ்ச் மார்க் ஸ்டீயரிங் எனச் சொல்லலாம். நகருக்குள் ஈஸியாக வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும்,நெடுஞ்சாலைகளில் வேகமாக ஓட்டும்போது ஸ்ட்ராங்கான ஸ்டீயரிங்காக மாறுவது, வேகமாகப் போவதற்கு நம்மைத் தைரியப்படுத்துகிறது. சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருப்பதால், குறைந்த வேகத்தில் காருக்குள் கொஞ்சம் ஆட்டம் தெரிந்தாலும்... வேகம் போகப் போக அலுங்கல் குலுங்கல்கள் இல்லை.
  
90 bhp சக்திகொண்ட, 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஃபோர்டு, இன்ஜின் மிகவும் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டிருப்பதால், சத்தம் அதிகம் இல்லை; அதிர்வுகளும் இல்லை. ஆனால், ஃபோர்டின் டீசல் இன்ஜின்களுக்கே உரிய அதிக டர்போ லேக், ஃபியஸ்டாவிலும் உண்டு. 1800 ஆர்பிஎம் வரை மந்தமாகவே இருப்பதால், நகருக்குள் அடிக்கடி கியர்களை ஏற்றி இறக்கி ஓட்ட வேண்டும். ஃபியஸ்டாவைவிட 36bhpஅதிக சக்திகொண்டது மட்டும் அல்ல, இந்த செக்மென்ட்டிலேயெ பவர்ஃபுல் பெர்ஃபாமர் வெர்னாதான். உண்மையிலேயே ஆக்ஸிலரேட்டரை மிதிக்க மிதிக்க, வெறிகொண்டு பறக்கிறது.
டீசல் கார்களுக்கே உரிய டர்போ லேக் இருந்தாலும் உறுத்தலாக இல்லை. பவர் வெளிப்பாடு மிகவும் சீராக இருக்கிறது. வெர்னா 0 - 100 கி.மீ வேகத்தை 10.54 விநாடிகளில் கடக்க, இதே வேகத்தைக் கடக்க ஃபியஸ்டா கிட்டத்தட்ட 3 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொள்கிறது. பெர்ஃபாமென்ஸ் அதிகமாக இருப்பதால், மைலேஜும் குறையவில்லை. ஹூண்டாய் வெர்னா நகருக்குள் 13.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.9 கி.மீ மைலேஜ் தருகிறது. ஃபியஸ்டாவும் நகருக்குள் 13.9 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.4 கி.மீ மைலேஜ் தருகிறது.
 ஃபியஸ்டாவின் டீசல் ஆரம்ப மாடல் விலை 11 லட்சம். அதிக வசதிகள் கொண்ட மாடலின் விலை 12.70 லட்சம். ஹூண்டாய் வெர்னா டீசலின் குறைந்த வசதிகள்கொண்ட மாடலின் விலை 10.3 லட்சம் ரூபாய். அதிக வசதிகள்கொண்ட மாடலின் விலை 13.21 லட்சம் ரூபாய்.
 ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் சிறந்த காராக இருந்தாலும், வெர்னா மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். ஸ்டைல், அதிக சிறப்பம்சங்கள், போதுமான மைலேஜ் மற்றும் பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸால் சிறந்த காராக இருக்கிறது வெர்னா. கொடுக்கிற காசுக்கு ஒரு முழுமையான கார் என்ற திருப்தியைக் கொடுப்பதால், வெர்னாதான் இரண்டு கார்களில் சிறந்த கார்.
- சார்லஸ், சுரேன்

-Vikatan article

No comments:

Post a Comment