Thursday, January 30, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 18

அவசர நிலைப் பிரகடனத்துக்கு அடித்தளம் அமைத்தது அலகாபாத்!

1975 ஜூன் மாதம் 12-ம் நாள் இந்திரா வாழ்வில் ஒரே நாளில் மூன்று இடிகள் தாக்கிய நாள்!
இந்திராவின் நம்பிக்கைக்குரிய மனிதராக இருந்த டி.பி.தார் இறந்துபோன செய்தி அன்று அதிகாலையில் இந்திராவுக்கு வந்து சேர்ந்தது. இதனை அபசகுனமாக இந்திரா நினைத்திருந்தார்.
பொழுது விடிந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தோல்வி உறுதி என்பதைச் சொல்லும் அளவிலான முதல்கட்டத் தேர்தல் முடிவுகள் அங்கிருந்து வர ஆரம்பித்தன. அந்த தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு சாதகமாக வரும் என்று, அவர் நம்பிக்கொண்டு இருந்தார். இது அவரது மனதை சஞ்சலப்படுத்தியது.
மதியம் வெயில் தெரிய ஆரம்பித்தபோதுதான் அலகாபாத் தீர்ப்பு வந்தது.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரேபரேலி தொகுதியில் நடந்த தேர்தலில் வென்ற இந்திராவின் வெற்றி, செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோன்லால் சின்ஹா தீர்ப்புத் தீயை மூட்டினார். இந்திரா நிலைகுலைந்து சரிந்தது இந்தத் தீர்ப்பைக் கேட்டபோதுதான்.
இந்திரா மனதில் இந்த ராட்சஷ ரணத்தை ஏற்படுத்தியவர் ராஜ்நாராய்ண். ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ தகிடுதத்தங்களை இந்திரா செய்தார் என்று ஆதாரங்கள் திரட்டிய ராஜ்நாராய்ண், இந்திராவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்தார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை இந்திரா வாங்கினார் என்று ராஜ்நாராய்ணின் குற்றச்சாட்டை, நீதிபதி சின்ஹா ஏற்கவில்லை. ஆனால், மிகச் சிறிய இரண்டு குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்திராவின் வெற்றி செல்லாது என்று சொல்ல இதுவே போதும் என்று நினைத்ததுதான் ஆச்சர்யமானது.
ரேபரேலி தொகுதியில் இந்திராவின் தேர்தல் முகவராக இருந்தவர் ஓர் அரசு ஊழியர். அவர் தனது ராஜினாமாவை உடனடியாக அறிவிக்காமல் தேர்தல் வேலைகளை பல நாட்கள் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, தாமதமாக அறிவித்தார். ஒரு அரசு ஊழியரை, தனது கட்சி முகவராக செயல்பட அனுமதித்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ரேபரேலி தொகுதியில் பொது மேடையை அமைத்தவர் யார் தெரியுமா? அரசாங்க பொறியாளர். அதாவது ஓர் அரசு ஊழியரை வைத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரிக்கும் மேடையை அமைத்தது இரண்டாவது விதிமுறை மீறல் என்று நீதிமன்றம் ஏற்றது.
'ராஜ்நாராய்ண் தாக்கல் செய்த ரிட் மனுவை இந்த நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதன் மூலம் எதிர்மனு தாரரான இந்திரா, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டு காலத்துக்கு தேர்தலில் நிற்கும் தகுதியை இந்திரா இழக்கிறார் என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8ஏ பிரிவின் படி அறிவிக்கிறோம்'' என்று நீதிபதி சின்ஹா அறிவித்தார். இந்தத் தீர்ப்பின் முடிவை 20 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். மேல்முறையீடு செய்வதாக இருந்தால் அதற்கான அவகாசம்தான் இது.
இந்தத் தீர்ப்பு வந்ததுதான் தாமதம், இந்திராவின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், டெல்லியில் பெரும் போராட்டங்களைத் தொடங்கிவிட்டார்கள். கலகம், தீவைப்பு, வன்முறையாக இது மாறியது. இதனைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று டெல்லி போலீஸுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது டெல்லி லெப்டினென்ட் கவர்னராக இருந்த கிருஷ்ண சந்த்தை அழைத்தார் பிரதமர் இந்திரா. அவர் போகாமல், உஷாராக தனது செயலாளர் நவீன் சாவ்லாவை அனுப்பிவைத்தார். தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சி பற்றி நவீன் சாவ்லாவிடம் இந்திரா சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி வந்து டெல்லியிலும், இந்திரா வீட்டின் முன்னாலும் குவிக்கும் காரியத்தை டெல்லி நகராட்சியும், டெல்லி போக்குவரத்துக் கழகமும் செய்தன. ஷா கமிஷன் முன் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்திராவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை டெல்லிக்குள் 1761 பேருந்துகளில் ஆட்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். வெவ்வேறு இடத்தில் இவர்களைக் கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். இந்திராவை ஆதரித்து முழக்கமிட்டவாறே, இந்திராவின் வீட்டை நோக்கி இவர்கள் ஊர்வலமாகச் செல்ல வேண்டும். தினமும் இதே வேலையைச் செய்ததாக டெல்லி போக்குவரத்து மேலாளர் ஜே.ஆர்.ஆனந்த் வாக்குமூலம் கொடுத்தார். இவர்களுக்கான கட்டணத்தை மொத்தமாக காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டும். நான்கு லட்சம் ரூபாயை இரண்டு ஆண்டுகளாக அந்தக் கட்சி போக்குவரத்துக் கழகத்துக்குத் தரவில்லை என்றும் ஜே.ஆர்.ஆனந்த் கூறினார்.
இப்படி அனைத்து வாகனங்களும் பிரதமர் வீடான எண் 1, சப்தர்ஜஸ் சாலைக்குப் போனதால் மற்ற பகுதி மக்களுக்கு பேருந்துகள் கிடைக்காமல் அல்லாடினார்கள். 'இந்திரா காந்திக்கு ஜே’ போடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பேருந்துகள் கிடைத்தது. இந்த ஏற்பாடுகளை முன்னின்று நடத்திக் காட்டியவர் ஆர்.கே.தவான். டெல்லியை சுற்றி இருந்த அரியானா, ராஜஸ்தான், மேற்கு உ.பி-யைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்க நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தக் காரணமாக இருந்தவர் இவர். டெல்லிக்குள் நுழைவதற்கான பெர்மிட்டை எந்த வாகனத்திடமும் கேட்கக் கூடாது என்றும் உத்தரவு போடப்பட்டது.
இன்னும் சில இடங்களில் வேறொரு காரியம் நடந்தது. பேருந்துகளை எங்கேயாவது இருந்து கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். அதில் பயணம் செய்வதற்கான ஆட்களை அழைத்து வர வேண்டிய கடமை டெல்லி போலீஸுக்கு கொடுக்கப்பட்டது. எங்கே போவார்கள் ஆட்களுக்கு? ஏதாவது ஒரு தொழிற்சாலைக்குப் போக வேண்டியது. அங்கிருந்த தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி பேருந்துகளில் ஏற்ற வேண்டியது போலீஸாரின் வேலை ஆனது. பரிதாபாத் நியூ இன்டர்ஸ்டிரியல் டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராஜ் ரூப்சிங், ஷா கமிஷன் கொடுத்த வாக்குமூலத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். இவர் மட்டுமல்ல பல போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பின்னர் இதனை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்தார்கள்.
இது போதாது என்று லக்னோ, கான்பூர், வாரணாசி ஆகிய மூன்று ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களில் பொதுமக்களை அழைத்து வந்தார்கள்.
கும்பலைக் காட்டி குதூகலிப்பதும், கும்பலை கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து ஷோ காண்பிப்பதுமான நடைமுறை இந்திய அரசியலில் அப்போதுதான் அரங்கேறியது. இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை ஒட்டி, இந்திரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கின. ஆனால், இந்திரா ஆதரவாளர்களின் டெல்லி படையெடுப்பு அந்தக் குரலை மேலெழுப்ப விடாமல் தடுத்தது. இப்படி கூலிக்கு ஆள் பிடித்து கும்பல் சேர்ப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்கள் கோபத்தை திருப்பினார்கள். 22.6.1975 அன்று எதிர்க் கட்சிகள் சேர்ந்து ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தன. இதில் பேச ஜெயபிரகாஷ் நாராயணன் அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், இந்தப் பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை. பிரதமருக்கு ஆதரவாக கூட்டம்கூட அனுமதிக்கும் போலீஸ், எதிரான கூட்டத்துக்கு அனுமதி தரவில்லை. இப்படி எந்தக் கூட்டமும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இந்திரா. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் தந்திராலோசனைகள் செய்யப்பட்டு வந்தன.
இதற்கு இடையில் அலகாபாத் தீர்ப்பாணையை, எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திரா மனு செய்தார். இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை காத்திருக்க நினைத்தார். அந்தத் தீர்ப்பு 22.6.1975 அன்று வந்தது. அலகாபாத் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 நாள் கழித்து வந்த இந்தத் தீர்ப்பினை அளித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். அலகாபாத் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தீர்ப்பளித்தார். ஆனாலும் சில நிபந்தனைகளை விதித்தார்.
'இந்திரா மக்களவை உறுப்பினராகத் தொடரலாம். நாடாளுமன்றம் செல்லலாம். வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடலாம். ஆனால், மக்களவையின் செயல்களில் ஈடுபடவோ, வாக்கெடுப்பு நடக்கும்போது வாக்களிப்பதோ கூடாது’- என்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் விதித்த நிபந்தனை இந்திராவை அலறவைத்தது. அதாவது எம்.பி-யாக இருக்கலாம். ஆனால், அதற்கான எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது என்றது உச்ச நீதிமன்றம் இதனை எப்படி ஏற்பார் இந்திரா?
கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த எதிர்க்கட்சிகளின் மனதில் எண்ணெய் வார்த்தது நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு வந்த இரண்டாவது நாள், அதாவது 24-ம் தேதி இந்திராவுக்கு எதிராக மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இந்திரா பதவி விலகியே தீர வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. 24-ம் தேதி வரை இரண்டு நாட்கள் அவகாசம் தர இந்திரா தயார் இல்லை. 23-ம் தேதியே அனைத்து தலைவர்களையும் கைதுசெய்து சிறையில் வைக்க முடிவெடுத்தார். எதிர்க் கட்சிகள் தங்கள் பேரணியைத் தள்ளிவைத்தன.
அப்போது இந்திரா இரண்டு பேரை அடிக்கடி அழைத்து பேசினார். ஒருவர் சஞ்சய் காந்தி, இன்னொருவர் ஆர்.கே.தவான். தன்னுடைய பதவியையும் காப்பாற்றிக்கொண்டு எதிர்க் கட்சிகளையும் அடக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதில் இந்த மூவரும் முடிவாய் இருந்தார்கள்.
மொத்த அதிகாரத்தையும் தன் கையில் கொண்டுவரும் வழியாக அதுவே அமைந்தது. இந்தியாவில் சர்வாதிகாரப் பாதை முதன் முதலாக போடப்பட்டது.

- Vikatan Article

No comments:

Post a Comment