Wednesday, April 4, 2012

மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்!

மின் கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம் கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும் ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும்?
சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங் வசதி எல்லாமே செவ்வனே அமைந்துள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி வசதி இருக்கிறது. சில அமைச்சர் வீடுகளில் டாய்லெட், பாத்ரூமிலும் கூட ஃபேன் இருக்கிறதாம். 
இதற்கெல்லாம் பில் உண்டு என்றாலும் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்​றால், கட்டணத்தை அமைச்சர்கள் செலுத்தப்போவது இல்லை. சைரன் கார், ஆடம்பர பங்களா, தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு என்று சகலமும் இலவசமாகக் கிடைப்பதைப்போலவே, மின்சாரக் கட்டணத்¬​தயும் அரசேதான் ஏற்கிறது. மின்வெட்டு கார​ணமாக எரிச்சலில் வெந்து​கொண்டு இருக்​கும் மக்களுக்கு, அமைச்சர்​களுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்தால், இன்னமும் எரியும்.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்​சர்கள் எந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்​தோம். கடந்த தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரத்தை எக்கச்சக்​கமாகப் பயன்படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர் கருணா​நிதி.ஐந்து ஆண்டுக் காலத்தில் கருணாநிதியின் கோ​பால புரம் இல்லத்துக்கு மின்சாரக் கட்டணமாக செலுத்தப்​பட்ட தொகை 7.27 லட்சம். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் ஐந்தாம் இடம். மின்சாரத்தின் அருமை தெரிந்ததாலோ என்னவோ, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு 12-வது இடம். ஐந்து ஆண்டுக் காலத்தில் அவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம்
4.22 லட்சம். பெண் அமைச்சர்களில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது கீதாஜீவன், 4.17 லட்சம். சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனைவிட துணை சபாநாயகராக இருந்த வி.பி. துரைசாமி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகக்குறைந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்தியவர் உபயதுல்லா. ஐந்து ஆண்டுகளில் இவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம் 27,748. கடந்த தி.மு.க. ஆட்சியில் மட்டும் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து மின் கட்டணமாக 1.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணம் 1.16 கோடி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. அந்தப் பணத்தை ஜெயல​லிதாவே செலுத்தி விட்டாராம். முந்தைய இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்​கான கட்டணம், தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணு போட்டு விடாதீர்கள்!

வாஸ்கோவின் வெறியாட்டம்!

இத்தனை நாட்களாகக் கனவு கண்ட இந்தியா​வைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் குதித்தார் வாஸ்​கோடகாமா. அது, கண்ணனூர் என்னும் காலிகட் துறைமுகம் அருகில் இருக்கிறது என்று அறிந்துகொண்டார். காலிகட் மன்னர் சாமோரினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பாவ்லோவையும் கறுப்பு மூர் ஒருவனையும் அனுப்பிவைத்தார். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்ட மன்னர், அவர்கள் அரபு உள​வாளிகள் என்று சந்தேகித்தார். வாஸ்கோடகாமாவே அரண்​மனைக்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்கவில்லை. போர்த்துக்கீசிய மன்னரிடம் இருந்து கடிதம் கொண்டுவந்து இருப்​பதாகச் சொன்னார் வாஸ்கோடகாமா. அதன்பிறகு​தான், மன்னரைச் சந்திக்க ஏற்பாடு ஆனது. மன்னருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டும். ஆசனத்தில் உட்காரக் கூடாது. கை நீட்டிப் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா.
சாமோரின் மன்னர், வாஸ்கோடகாமாவை வரவேற்று போர்ச்சுக்கல் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அரண்மனையின் அறை ஒன்றில் தங்கி இருக்க வாஸ்கோடகாமாவுக்கு உத்தரவு இட்டார் மன்னர். இதற்கிடையில், போர்த்துக்கீசியர்கள் மன்னருக்கு எதிராக சதி செய்ய வந்தவர்கள் என்று மன்னரை நம்பவைத்து, வாஸ்கோடகாமாவைக் கைது செய்ய ரகசிய ஏற்பாடு நடந்தது. எதிர்பாராமல் வாஸ்கோடகாமா கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கப்பல்கள் சிறைப்பிடிக்கப்​பட்டன.
தாங்கள் உளவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வாஸ்கோடகாமா போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில், மூன்று கப்பல்களும் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப்பட்டார் வாஸ்கோடகாமா. அந்த அவமானம் அவருக்குள் ஆறாத வடு போல் உறைந்தது.
அந்தக் கடல் பயணத்தில்தான் அவர்கள் கோவாவை அடைந்தனர். அங்கே, உள்நாட்டுப் பிரச்னை தலைதூக்கி இருப்பதை அறிந்து, அதை தாங்கள் தலையிட்டு முடிப்பதாக நுழைந்த வாஸ்கோடகாமா, கோவாவைத் தன் வசமாக்கிக்கொண்டார். இந்தியாவில் போர்த்துக்கீசியர்களுக்கான அடித்தளமாக கோவா உருவாக்கப்பட்டது. நாடு திரும்பலாம் என்று முடிவு செய்த வாஸ்கோடகாமா, நிறையப் பொன்னும் வெள்ளியும் வாசனைத் திரவியங்களும் கப்பலில் ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல் கிளம்பினார். நோயுற்ற வாஸ்கோடகாமாவின் சகோதரன் பாவ்லோ நடுக்கடலில் இறந்துபோனான்.
1499-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வாஸ்கோடகாமாவின் கப்பல், லிஸ்பன் நகரை அடைந்தது. வெற்றிகரமாகத் திரும்பி வந்த கப்பல்களை அரசரே முன்னின்று வரவேற்றார். அவரோடு துணைக்குச் சென்ற 150 பேரில் 50-க்கும் குறைவானவர்களே நாடு திரும்பினர். மற்றவர்கள், வழியிலேயே இறந்துபோய் கடலில் வீசி எறியப்பட்டு இருந்தனர். வாஸ்கோடகாமாவுக்கு 'டான்’ பட்டம் அளிக்கப்பட்டதோடு, பணமும் பதவியும் அவரது தலைமுறைக்குத் தரப்பட வேண்டிய கௌவரமும் அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான கடல் வழி பற்றிய வரைபடத்தைப் பார்த்த மேனுவல் மன்னர், உலகமே இனி தன் கையில் என்று துள்ளிக் குதித்தார். அடுத்த கடல் பயணத்துக்கு உத்தரவிட்டார்.
1501-ல் புறப்பட்ட இந்தப் பயணத்தில் வாஸ்கோடகாமா செல்லவில்லை. அந்தக் கப்பலுக்குக் கேப்டனாக பெத்ரோ அல்வாரஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். 1502-ல் தனது இரண்டாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை 13 கப்பல்கள், 5 துணைக் கப்பல்கள், நிறைய ஆயுதங்கள், போர் வீரர்கள் என்று யுத்தக் களத்துக்குச் செல்வது போல சென்றார். கடலில் எதிர்ப்பட்ட வணிகக் கப்பல்களைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளை அடித்தார். இந்தக் கடற்பயணம் பழிதீர்க்கும் யாத்திரை போலவே இருந்தது. தன்னை அவமதித்த சாமோரின் அரசனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, பீரங்கி மூலம் காலிகட் நகரைத் தரைமட்டமாக்கி ஊரையே கொள்ளை அடித்தார் வாஸ்கோடகாமா. காலிகட் நகரம் இயங்கும் என்று உத்தரவிட்ட வாஸ்கோடகாமா, மன்னரின் செல்வங்கள் மற்றும் முக்கிய வணிகர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்.
கோவாவில் தனது பிரதிநிதிகளை நியமித்து விட்டு, பெரும் செல்வத்துடன் லிஸ்பன் திரும்பினார் வாஸ்கோடகாமா. இரண்டாவது கடற்பயணத்தில் அவர் ஒரு கடற்கொள்ளையனைப் போல நடந்துகொண்டார். போர்த்துக்கீசியர்களின் கையில் இந்தியாவின் வணிகம் ஏகபோகம் ஆகத் தொடங்கியது. வாஸ்கோடகாமா, கடல் வாழ்வில் இருந்து ஒதுங்கி வசதியான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிரபு போல செல்வாக்கோடு வாழத் தொடங்கினார். ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.
இந்தியாவின் வைஸ்ராயாக வாஸ்கோடகாமா நியமிக்கப்பட்டார். புதிய கௌரவத்துடன் 1524-ம் ஆண்டு தனது 56-வது வயதில் 14 பெரிய கப்பல்களில் 3,000 போர் வீரர்களுடன் தனது மூன்றாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை, அவரது இரண்டாவது பிள்ளை எஸ்தவான், மூன்றாவது மகன் பவுலோ இருவரும் உடன் சென்றனர். கோவாவுக்கு வந்து, பதவி ஏற்றுக்கொண்ட வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். தன்னை அவமதித்த ராஜ்ஜியத்தை அடக்கி ஒடுக்கிய சந்தோஷத்துடன், தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுத்தார். மறைமுகமாக அவரை எதிர்த்த எதிரிகளை ஒழித்துக் கட்டியதோடு, வாசனைத் திரவியங்களின் மொத்த வணிகமும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடன் செயல்படத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராமல் கழுத்தைச் சுற்றிக் கொப்பளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். படுக்கையில் வீழ்ந்த வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். எந்த இந்தியாவைக் காண வேண்டும் எனத் துடிப்புடன் கடல்பயணம் செய்தாரோ, அதே இந்தியாவில் அவர் இறந்துபோனார். அவரது உடல் உரிய கௌரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த உடலின் மிச்சம், 1880-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஜாதிய ஒடுக்குமுறை, அதிகாரத் துஷ்பிரேயோகம், மதச் சண்டை ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டு இருப்பதை, வாஸ்கோடகாமா சரியாக உணர்ந்து கொண்டார். அந்தப் பிரச்னைகளைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்டு இந்தியாவை தனது பிடிக்குள் எளிதாகக் கொண்டு வர அவரால் முடிந்தது.
மிளகு மற்றும் சந்தனம் உள்ளிட்ட பொருட் களுக்காகத் தொடங்கிய கடல் பயணம், நாடு பிடிக்கும் சண்டையாக மாறியதே வரலாறு. இதில், அதிக இழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது இந்தியாதான்.
கடந்த 300 ஆண்டுகளுக்குள் போர்த்துக்கீசியரும் பிரெஞ்சு, டச்சுக்காரர்களும், கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியாவின் இயற்கை வளங்களையும், தங்கம், வெள்ளி, வைரங்களையும் கொள்ளையிட்டு, கப்பல் கப்பலாகக் கொண்டுசென்றனர். இந்தியா திட்டமிட்டு வறுமை நாடாக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்துவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை வணிகம். இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை.
ஏதேதோ பெரும் கனவுகளுடன் வந்த வாஸ்கோடகாமா இந்தியாவின் வைஸ்ராயாக ஆட்சி செய்தது எவ்வளவு காலம் தெரியுமா? மூன்றே மாதங்கள்தான். அலை போல எழுவதும் வீழ்வதுமான இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை, வாஸ்கோடகாமாவுக்கு கடல் நிச்சயம் உணர்த்தி இருக்கும்.