Sunday, December 21, 2014

அந்த நாள்... -10

- Vikatan

அந்த நாள்... -10
டி.அருள் எழிலன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்
ந்த ஏழு நாட்களில் மட்டும் இலங்கையின் கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அதைச் சுருக்கமாக 'இனக் கலவரம்’ எனப் பதிந்துகொண்டது சிங்கள அரசாங்கம். ஆனால், உலகையே உலுக்கி ஈழப் போராட்டத்தின் மீது பெரும் கவனம் குவியச் செய்தது 1983-ன் அந்த 'ஜூலைக் கலவரம்’தான். அதன் ஒரு பகுதியான 'வெலிக்கடை சிறைப் படுகொலைகளை’ எந்தத் தயக்கமும் இல்லாமல் 'நரவேட்டை’ என்றே குறிப்பிடலாம். சிங்களக் கைதிகளை வைத்துக்கொண்டு சிறைக்குள் சிங்கள் அரசு நடத்திய அந்த நரவேட்டையில் கொல்லப்பட்ட 54 பேரும் ஈழப் போராட்டத்தின் பொக்கிஷங்கள். கொல்லப்பட்டவர்களில் பலரும் மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; சிந்தனையாளர்கள்; போராளிகள். அடித்தும், வெட்டியும், கண்கள் பிடுங்கப்பட்டும், தலை பிளக்கப்பட்டும்  கொல்லப்பட்டனர் அந்த 54 பேரும். வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நேரடிச் சாட்சியான டேவிட், பின்னர் சிறையில் இருந்து தப்பி, தமிழகம் வந்து 30 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். வெலிக்கடை சிறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இங்கே எஞ்சி இருக்கும் ஒரே சாட்சி டேவிட் மட்டுமே.
சாலமோன் அருளானந்தம் டேவிட் என்ற அந்த மூத்தப் போராளியை இன்று  'டேவிட் ஐயா’ என மரியாதையாக அழைக்கிறார்கள். கட்டடக் கலை வல்லுநராகவும், நகர வடிவமைப்பாளராகவும் உலகம் முழுக்கப் பணி செய்த டேவிட், ஈழப் போராட்டத்துக்காக வேலையை உதறிவிட்டு வன்னிக்கு வந்தவர். இவர் உள்ளிட்ட முக்கியமான போராளிகளை மீட்கவே மட்டக்களப்பு சிறை உடைப்பு நடத்தப்பட்டது. சிறையில் இருந்து மீண்டது முதல் தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் டேவிட்டுக்கு இன்றைக்கு வயது 91. வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நினைவுகள் பற்றி கேட்டால், நெஞ்சு நடுங்குகிறது டேவிட் ஐயாவுக்கு.
''நாஜிப் படை கொடூரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதைவிட மிகக் கொடூரம் அந்தப் படுகொலைகள். எங்கள் போராட்ட வரலாற்றில் 1983, மிக முக்கியமான ஆண்டு.  நானும் என் நண்பரும் டாக்டருமான ராஜசுந்தரமும் தொடங்கிய காந்தியம் அமைப்பு அமைத்த பள்ளிகள் பெரும் வெற்றி பெற்றிருந்தன. மலையக மக்களை வன்னியிலும், ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் குடியேற்ற நாங்கள் எடுத்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அளித்தது. அன்றைய காலத்தில் ஒருங்கிணக்கப்பட்ட ஒரே அமைப்பாக, மிகப் பெரிய மக்கள் செல்வாக்கோடு இருந்தது எங்களது காந்தியம் அமைப்பு. இன்னொரு பக்கம் ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய காலகட்டமும் அதுதான். போராட்டத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், புத்திஜீவிகளின் பங்களிப்பும் செல்வாக்கும் அதிகமாக இருந்தன. இந்தப் போராட்டத்தின் அடிநாதமாக இருந்த எங்களைப் போன்றோரை முதலில் கைதுசெய்து சிறையில் அடைத்தது இலங்கை அரசு. 1983-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும் கைதுசெய்து சித்ரவதைகளுக்குப் பின் வெலிக்கடை சிறையில் அடைத்துவிட்டார்கள். அதுபோல நிர்மலா நித்தியானந்தன், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உள்பட பலரையும் கைது செய்து சிறையில் போட்டார்கள். இதனால், வெளியே பெரும் கொந்தளிப்பு நிலவியது.
நாங்கள் சிறையில் இருந்த காலத்தில் வெளியில் போராளிகள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். திருநெல்வேலி சந்திப்பில் பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன் உள்பட பல போராளிகள் ஒரு சிங்கள ராணுவ வாகனத்தைத் தாக்கியதில் 13 ராணுவத்தினர் இறந்தனர். தமிழர்களும் திருப்பித் தாக்குவார்கள் என்பதை முதன்முதலாக பலமாகச் சொன்னது அந்தத் தாக்குதல். புலிகளின் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் கொழும்பில் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு நகரங்களான தெகிவளை, வெள்ளவெத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி தெருக்களில் போட்டு தமிழர்களைக் கொளுத்தினார்கள். லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டுக்குள் அகதிகள் ஆனார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த பிறகு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தினார்கள். எரிந்துகொண்டிருந்த கொழும்பு நகரம் மரண அமைதியோடு இருக்க, வெலிக்கடை சிறைக்குள் இருந்த நாங்கள் இந்தச் செய்திகளை எல்லாம் வேதனையோடும் கொந்தளிப்போடும் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தக் கலவரங்களின் ஓர் அங்கமாக நாங்களும் கொல்லப்படுவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. கலவரங்கள் ஓய்ந்துவிடும்... இயல்பு நிலை திரும்பும் என நம்பிக்கொண்டிருந்த ஒருநாள் மதியத்தில் நடந்தது அந்த அகோரம்'' எனப் பெருமூச்சை வெளிப்படுத்துகிறார். நீண்ட மௌனத்துக்குப் பிறகு இறுகிய குரலில் தொடர்கிறார்...
''அன்று மதியம் இரண்டரை மணிபோல இருக்கும். நாங்கள் சிறை வளாகத்தில் மேல் தளத்தின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம். நான், டாக்டர் ராஜசுந்தரம், பாதிரியார் சின்னராசா, டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் நடுவயதைக் கடந்தவர்கள். சுமார் 40 அடி அகலமுள்ள அறைகளில் எங்களை அடைத்திருந்தார்கள். கீழ் தளத்தில் வயதில் குறைந்த இளைஞர்களையும் சிறுவர்களையும் அடைத்துவைத்திருந்தார்கள். அத்தனை பேரும் போராளிகள். திடீரென சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகள் வெளியே திறந்துவிடப்பட்டார்கள். அது அசாதாரணமாக இருந்தது. சிங்கள சிறை அதிகாரிகளே தாழ்ப்பாள்களை நீக்கி சிங்களக் கைதிகளை விடுவித்தார்கள். அவர்களுடைய கைகளில் கம்பிகள், கத்திகள், ஹாக்கி மட்டைகள் என விதவிதமான ஆயுதங்கள் இருந்தன. ஏற்கெனவே சிறையில் இருந்து விடுதலையாகிச் சென்றவர்களும் சிறை வளாகத்தினுள் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். வந்து இறங்கியவர்கள் இப்போதைய கைதிகளோடு சேர்ந்துகொள்ள, நரவேட்டை தொடங்கியது. தேடித் தேடி அடித்தார்கள்; ஓடினால் பிடித்து இழுத்து வந்து மண்டையைப் பிளந்தார்கள்.
களத்தில் தாக்குதல் என்றால் திருப்பித் தாக்கலாம்; அல்லது தப்பி ஒளியலாம். ஆனால், சிறைக்குள் எதைவைத்து எங்களைத் தற்காத்துக்கொள்வது... திருப்பித் தாக்குவது? பெரிய கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட எலிகளைப்போல மாட்டிக் கொண்டோம். ஒவ்வோர் அறையாகத் திறந்து, தாக்கி, அடித்தே கொன்றார்கள். கீழ்தளத்தில் இருந்து மரண ஓலம்  அதிகரித்தபடியே இருந்தது. அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெகன், குட்டிமணி, தங்கதுரை ஆகியோரைத் தாக்கி இழுத்துவந்து அடித்தே கொன்றார்கள். பின்னர் அந்தச் சடலங்களைப் போட்டு அதைச் சுற்றி நின்று கோஷங்களை எழுப்பினார்கள். ஒரு சின்னப் பொடியன். அவன் பெயர் மயில்வாகனன் என நினைக்கிறேன். அவனைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. தரதரவென இழுத்துச் சென்றபோதே அந்த உடலில் உயிர் இருக்கவில்லை.  சிறை வளாகமே பிணக்காடு ஆனது. இரவு வரை தொடர்ந்தது கொலைவெறித் தாண்டவம். அது ஓய்ந்தபோது நாங்கள் உயிருடன் இருப்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், மேல் தளத்துக்கு அவர்கள் வரவில்லை. இருட்டிவிட்டதாலும் இதற்கு மேல் தொடர முடியாது என்பதாலும் அவர்களை அவரவர் செல்களுக்குள் அடைத்துவிட்டார்கள்.
அன்றைக்கு மட்டும் எங்கள் சிறையில் மிக முக்கியமான போராளிகளில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புக் கலவரங்கள் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்க, சிறையில் நடந்த கொலையை மறைக்க உயரதிகாரிகள் 'விசாரணை’ என்றார்கள். ஆனால், விசாரணை அதிகாரிகளிடம் நாங்கள் எதுவும் பேசக் கூடாது என்றார்கள். வாய்த் திறந்து எங்களுக்கு நடந்த கொடுமை பற்றி சொன்னாலும், எந்த நியாயமும் கிடைக்காது என்பதால் வாயே திறக்கவில்லை. எங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு நாங்கள் அந்த அதிகாரிகளிடம் கேட்டோம். 'அது முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். வேறு வழியின்றி நாங்கள் அமைதியாகக் கலைந்துவிட்டோம். அவர்கள் 37 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் கொடுக்காமல் அப்படியே போட்டு எரித்தும் புதைத்தும் அழித்துவிட்டார்கள். எல்லாம் ஏதோ சொல்லிவைத்துத் திட்டமிட்டு நடப்பதுபோல தோன்றியது.
விசாரணையின் மறுநாள்... நாங்கள் எதிர்பார்த்ததுபோல மீண்டும் தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த முறை மேல்தளம். மேலே வந்தவர்கள் என்னைத் தேடினார்கள். டாக்டர் ராஜசுந்தரத்துக்கு சிங்களம் தெரியும். அவர் எங்கள் சிறையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்தவர்களிடம், 'எங்களை ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லையே?’ எனச் சொல்லிக்கொண்டிருந்தபோதே சிறைக்கதவை உடைத்து உள்ளே வந்தார்கள். ஒரு கம்பியைக்கொண்டு ராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி அடித்தார்கள். அவர் தலை பிளந்து கீழே விழுந்தார். அந்த நொடியே அவர் மரணித்தார். மேல்தளத்தில் இருந்த பாதிரியார்கள் கொல்லப்பட்டார்கள். நானும் மரணத்தை நோக்கி நின்றபோது, அன்றைய கொலைக்கான கெடு முடிந்துவிட்டதுபோல. சிறை அலாரம் ஒலித்தது. அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் கீழே அழைத்து வரப்பட்டோம். நடந்துவரும் பாதை முழுக்க பிணங்கள் சிதறிக்கிடந்தன. பெரும்பாலும் தலை சிதைக்கப்பட்டு இறந்துகொண்டிருந்தார்கள். ஒரு பாதிரியாரின் கால்கள் மெதுவாக இழுத்துக் கொண்டிருந்தன. சுவர்களில் எல்லாம் ரத்தம். நடுங்கியபடியே கீழே வந்து நின்றோம். அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்றுதான் வந்தேன். சிறை முழுக்கக் கொல்லப்பட்டு சிதறிக் கிடந்த உடல்களை ஓர் இடத்தில் குவித்திருந்தார்கள். அந்தச் சடலக் குவியலில் பலர் மிச்ச சொச்ச உயிருடன், ஆயுளின் கடைசிக் கணத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.
'எங்களை வேறு சிறைக்கு மாற்றுங்கள்’ என நாங்கள் வைத்த கோரிக்கையை, எங்களில் பெரும் பாலானவர்களைக் கொன்ற பின்னர் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியிருந்த 48 அரசியல் கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்!''
ஈழ வரலாற்றின் கறுப்பு நாள் என அடையாளப்படுத்தப்படும் 'வெலிக்கடை சிறைப் படுகொலைகள்’ இரண்டு நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள். தமிழீழத்துக்காகப் போராடிய அனைத்து போராளிக் குழுக்களையும் சேர்ந்த 54 பேர், அந்தப் படுகொலையில் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஈழப் போராட்டத்தில் அடுத்தடுத்து நடந்த திருப்பங்களுக்கு அந்தக் கொலை தாண்டவமே காரணமாக இருந்தது. அந்தத் தொடர் பின்னணியைச் சொல்லத் தொடங்கினார் டேவிட்.
''இப்போது நாங்கள் மட்டக்களப்பு சிறையில்.அங்கு நாங்கள் மாற்றப்பட்ட பிறகு இலங்கைக்கு வெளியே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன, இந்தியாவின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. அதேசமயம் கொழும்புக் கலவரத்தைவிட வெலிக்கடை சிறைப் படுகொலைகளையே மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது சிங்கள அரசு. இன்னொரு பக்கம் எப்படியும் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற வேட்கை பல போராளிக் குழுக்களிடம் பரவிக் கிடந்தது. 'ஜூலைப் படுகொலைகள்’ நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, நாங்கள் நினைத்துப் பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. செப்டம்பர் 23-ம் தேதி இரவு ஏழே முக்கால் மணி இருக்கும். மட்டக்களப்பு சிறையைக் கைப்பற்றிய போராளிகள் ஒவ்வோர் அறையாகத் திறந்து சுமார் 60 பேரை விடுதலை செய்தனர். வெலிக்கடையில் தப்பியவர்கள் உள்பட பலரும் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பி, காடுகளுக்குள் சென்றோம். அப்போதுதான் நானும் தப்பித்தேன்!''  என்று சொல்லிவிட்டு ஆழமான யோசனையில் மூழ்குகிறார் டேவிட்.
மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்துக்குப் பல்வேறு போராளிக் குழுக்களும் உரிமை கோர, அதுவரை போராளிக் குழுக்களிடையே இருந்த போட்டி மனநிலையைப் போர்க்குண  வன்மமாக மாற்றியது. பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொண்டார்கள். இந்தப் பகை வளர்ந்து சென்னை வரை நீடித்து, சூளைமேட்டில் பத்மநாபா படுகொலை வரை சென்று, ஈழப் போராட்டத்தில் பெரும் பாதகத்தை விளைவித்தது.
''அப்போது சிறிதும் பெரிதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் இயங்கிவந்தன. இதில் விடுதலைப்புலிகள், பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ்... ஆகியவை முக்கியமான அமைப்புகளாக தமிழகத்திலும் ஈழத்திலும் இருந்து செயல்பட்டன. எல்லா அமைப்புகளிலும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் பேர் போராளிகளாக இருந்தோம். இலங்கை ராணுவத்திடம்கூட அப்போது அவ்வளவு எண்ணிக்கையில் ராணுவத்தினர் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே! எங்களுக்குத் தேவையான பயிற்சியை, ஆயுதங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பத்மநாபா கொலைக்கு முன்னரே, எதிர்பாராத வகையில் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான முனையத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் 29 அப்பாவிகள் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டுவெடிப்புக்கு இலங்கை அரசு, போராளிகள் மீது பழிபோட்டது.
சகோதரக் கொலைகள், குண்டுவெடிப்பு, மக்களுடனான ஆயுதமோதல்... போன்ற தொடர் சம்பவங்களுக்குப் பின்னர் போராளிகள் மீது இந்தியாவின் கண்காணிப்பு இறுகியது. இந்தியாவில் ஈழப் போராளிகளுக்குச் சோதனைக் காலம் தொடங்கியது அப்போதிருந்துதான். அந்தக் காலகட்டம் முதல் கூட்டம் கூட்டமாக அப்பாவித் தமிழ் மக்களை, இலங்கையில் சிங்கள ராணுவம் கொன்றுகுவித்தது. போராளிகள் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டு இறந்தபோது, செத்தவன் அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவன்தானே என அடுத்தடுத்த போராளிக் குழுக்கள் அஞ்சலி செலுத்தாமல் அலட்சியம் செய்தன. ஈழம் என்பது இரண்டாம்பட்சமாகி, அமைப்புகளுக்கு இடையில் ஈகோ பிரதானம் ஆனது. ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவின் தலைவரைக் கொல்லத் தேடினார்கள். சிறி சபாரத்தினம், பத்மநாபா உள்பட பல போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அனைத்து இயக்கங்களுமே அந்தக் கொலைகளில் கை நனைத்தன. எமது இளைஞர்களோடு சேர்ந்து  ஈழத்துக்காகப் போராடுவோம் என்று வந்த நான்,  என்னோடு வந்த அத்தனை பேரையுமே கொலைகளில் இழந்தேன். அதோடு இயக்க அரசியலே வேண்டாம் என ஒதுங்கினேன். இடையில் ஓடிக் கடந்துவிட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள். ஆனால் ஈழம் தொடர்பாக இப்போது என்னிடம் எஞ்சியிருப்பது கறுப்பு நினைவுகளே. என்றாவது ஒருநாள் ஈழ மக்களுக்கு விடிவு வரும் என நம்பிக்கையுடன் இந்த உயிரை இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறேன்'' என்கிற டேவிட் ஐயாவின் கண்ணீர் கன்னம் நனைக்கிறது!

அந்த நாள்... - 9

- Vikatan

அந்த நாள்... - 9
டி.அருள் எழிலன்
படங்கள்: உ.பாண்டி, கே.குணசீலன்
ந்த ஒற்றைக் கொலை, தமிழகத்தையே அதிரச் செய்தது. அதுவும் அது திட்டமிட்ட கொலையும் அல்ல; கொலை செய்யப்பட்டவர் பிரபலமானவரும் அல்ல. ஆனால், நாத்திகக் கருத்துக்களைத் தீவிரமாகப் பிரசாரம்செய்து, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் தி.மு.க கோலோச்சிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், மன்னார்குடியின் பிரமாண்ட ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவர் வாசுதேவப் பெருமாள் பார்த்திருக்க, செங்கமலத் தயாரின் மூலஸ்தானத்திலேயே அந்தக் கோயிலின் குருக்கள் கொல்லப்பட்டதே அந்தப் பேரதிர்ச்சிக்குக் காரணம்!
'இது நாத்திகர்களின் அரசு என்பதால், கோயில் குருக்களுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை’ எனக் கொலை வழக்கு அரசியல்ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து, சடசடவென ஆறே மாதங்களில் வழக்கை நடத்தி முடித்து, கோயில் குருக்களைக் கொன்ற பெரியகருப்பனுக்குத் தூக்கும், கோயில் நகைகளைக் கொள்ளையடித்ததற்காக வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தூக்கு உறுதியானது. கடைசி நம்பிக்கையான ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, மறுநாள் விடியலில் தூக்கு மேடை ஏறக் காத்திருந்தார்  பெரியகருப்பன். ஆனால், ஒரு திருப்பத்தில் அந்தத் தூக்கு ரத்து ஆனது! பல வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான வீரபாண்டியன் இறந்துவிட, இப்போது கமுதியில் பணியாரம் விற்றுக்கொண்டிருக்கிறார் பெரியகருப்பன். குழி விழுந்த கன்னம், மெலிந்த தேகம் என, வாடி வதங்கியிருக்கிறார் பெரியகருப்பன். ஆனால், அவரின் மீசை மட்டும் கம்பீரமாக முறுக்கி நிற்கிறது. நான்கு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவிட்டு மனைவியோடு கமுதியில் வாழ்கிறார். இவரது தூக்கு ரத்து ஆனதுதான் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு முன்மாதிரி. அந்த நாட்களில் அப்படி என்னதான் நடந்தது? ஆரம்பம் முதல் கதை சொல்லத் தொடங்கினார் பெரியகருப்பன்.
''கமுதிதான் எனக்குப் பூர்வீகம். வீட்ல வறுமை. அதுக்காக திருடுற அவசியம் எதுவும் இல்லை. படிப்பும் மண்டையில ஏறலை. மெட்ராஸ்ல ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலைபார்த்தேன். ஆனா, மெட்ராஸ் பிடிக்கலை. திரும்ப கமுதிக்கு வந்து இன்னொரு பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் அத்தை மக அழகா இருப்பா. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன். வரிசையா ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. மூணாவது பிள்ளை நாலு மாசமா கர்ப்பமா இருந்தப்போ, என் மச்சான் வீரபாண்டியன் வந்து 'தஞ்சாவூருக்குப் போய் அரிசி வியாபாரம் பண்ணலாம். வாடா...’னு கூட்டிட்டுப் போனார்.
தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், மன்னார்குடினு பல ஊர்களைச் சுத்தினோம். ஆனா, எல்லா ஊர்கள்லயும் கோயில்களுக்கு மட்டுமே கூட்டிட்டுப் போனார். 'மச்சான்... அரிசி வியாபாரம்னு சொல்லிட்டு, கோயில் கோயிலா சுத்துறியே!’னு கேட்கிறப்பலாம், 'வாயை மூடிட்டுப் பேசாம வாடா’னு சொல்வார். மூணு வேளை நல்லா சாப்பிட்டு கோயில், குளம்னு சுத்திட்டு நல்லாத் தூங்கினோம். பல  கோயில்களைச் சுத்திப் பார்த்துட்டு கடைசியில மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்குப் பக்கத்துல ரூம் போட்டுத் தங்கினோம். தினமும் காலையில குளிச்சு முடிச்சதும், கோயிலுக்குப் போயிருவோம். பயபக்தியா சாமி கும்பிடுவோம். சீனிவாசக் குருக்கள் நீட்டுற ஆராதனை தட்டுல எல்லோரும் சில்லறை காசு போடுவாங்க. என் மச்சான் மட்டும் 10, 20, 50-னு ரூபாய் நோட்டு போடுவார். அப்படி அதிக காணிக்கை போட்டு பயபக்தியோடு சாமி கும்பிட்டதால, குருக்களுக்கு எங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. செங்கமலத் தாயார் சந்நிதிக்கு நாங்க போனா ராஜமரியாதை கிடைக்கும். திரையை விலக்கி உடனடி தரிசனம் கிடைக்கும். இப்படியே நாளும் பொழுதும் போயிட்டு இருந்தது.
திடீர்னு ஒருநாள், 'அம்பாளுக்குப் போட்டிருக்குற நகைகளைப் பாத்தியாடா. உனக்கு என்ன தோணுது?’னு மச்சான் கேட்டார். 'பணக்கார அம்பாள்போல மச்சான். நம்பவே முடியலை’னு சொன்னேன். 'டேய்... அந்த நகைகளைக் கொள்ளையடிக்கப் போறோம்டா. அதுக்குத்தான் இத்தனை நாளா அந்தக் குருக்களோடு பழகினேன். இப்போலாம் நாம போன உடனே சீனிவாச குருக்கள் உற்சாகமாயிடுறார் பார்த்தியா... நீ என்ன சொல்ற?’னு கேட்டார். நான் 'சரி’னு மட்டும் சொன்னேன்'' என்றவர் பேசுவதை நிறுத்திவிட்டு தோள்களைச் சிலுப்பிக்கொண்டார்.
அதிகாலையில் கோயிலுக்குச் சென்று குருக்களிடம் அவசரமாக சுவாமியைத் தரிசிக்க வேண்டும் எனக் கேட்பது, குருக்கள் கர்ப்பக்கிரகத்தைத் திறந்ததும் அவரைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது, அந்த நகைகளை உடனடியாக உருக்கி விற்பது... இதுதான் வீரபாண்டியனின் கோயில் கொள்ளைத் திட்டம். இதற்குத்தான் பெரிய கருப்பனைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். 31 நாட்கள் மன்னார்குடி அஜந்தா லாட்ஜில் தங்கி நோட்டம் பார்த்த பிறகு, மீண்டும் கமுதி வந்து பெரிய சாட்டைக் கயிறு ஒன்றையும், கொஞ்சம் துணிகளையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னார்குடி சென்றனர் இருவரும். திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்துக் காத்திருந்தனர். அந்த நாள் வந்தது!
''அன்னைக்கு அதிகாலையிலயே கோயில் குருக்கள் சீனிவாச தீட்சிதர் வீட்டுக்கே போய், 'வியாபார விஷயமா அவசரமாக வெளியூர் போறோம். அதுக்கு முன்னாடி அம்பாள் ஆசியும் தரிசனமும் வேணும்’னு சொன்னோம். கர்ப்பக்கிரகத்துக்கு ரெண்டு சாவிகள். அதுல ஒண்ணு குருக்கள்கிட்ட இருக்கும். இன்னொண்ணு அறநிலையத் துறை அதிகாரியிடம் இருக்கும். குருக்கள் போய் அந்த அதிகாரிகிட்ட இருந்து சாவியை வாங்கிட்டு வந்தார். அப்படி அவர் வர்றப்போ பொலபொலனு விடிஞ்சிருச்சு. கோயிலைத் திறந்து திரையை விலக்கி செங்கமலத் தாயாருக்கு அவர் அலங்காரம் பண்ண ஆரம்பிச்சார். அப்போ வீரபாண்டியன் கண்ணைக் காட்ட நான் குருக்களைக் கட்டிப்போடுறதுக்காக கயிற்றோடு அவரை நெருங்கினேன். ஆனா, அவர் சட்டுனு 'என்ன நடக்குது?’னு சுதாரிச்சு  என்னைக் கீழே தள்ளிவிட்டார். அவர் என்னைவிட வலு. 'ஐயோ... குருக்கள் சத்தம் போட்டா காரியம் கெட்டுருமே’னு நான் பக்கத்துல இருந்த அரிவாளை எடுத்து குருக்களோட கழுத்திலும் தலையிலும் வெட்டினேன். அம்பாள் கர்ப்பக்கிரகத்துலயே சரிந்து விழுந்தார் சீனிவாச தீட்சிதர்.
நான் குருக்களை வெட்டிட்டு இருக்கும்போதே, வீரபாண்டியன் நகைகளை அள்ளி பையில போட்டுட்டுத் தப்பிச்சு ஓடிட்டார். நான் ரத்த வெள்ளத்தில் துடிச்சுட்டு இருந்த குருக்களை ஓரமா ஒதுக்கிட்டு, கர்ப்பக்கிரகத்தை திரையைப் போட்டு மூடினேன். ஆனா, அப்பவே சிலர் சாமி கும்பிட வந்துட்டாங்க. நான் கோயிலைவிட்டு வெளியேறும் போது, பக்தர்கள் என்கிட்ட  'குருக்கள் எங்கே?’னு கேட்டாங்க. 'அவர் விஷேச பூஜையில இருக்கார். போயிட்டு அப்புறம் வாங்க’னு சொல்லிட்டு கோயில் கதவை நெருங்கிட்டேன். அப்ப, 'அய்யோ... குருக்களை யாரோ வெட்டிப் போட்டிருக்காங்க’னு ஒருத்தர் கத்திட்டார். உடனே காவலாளி கோயில் கதவை மூடிட்டார். நான் என்ன பண்றதுனு தெரியாம அரிவாளால அவரையும் வெட்டிட்டு மெயின் ரோட்டுக்கு ஓடினேன். வெளியே வந்ததும் எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். ஆனா, என் சட்டையில பின்னாடி சிதறியிருந்த ரத்தத்தைக் கவனிக்கலை. குருக்களை வெட்டிய தகவல் பரவிட்டதால, ரத்தக்கறை சட்டையோட நடந்துவந்துட்டு இருந்த என்னை, ஒரு போலீஸ்காரர் ஓடிவந்து பிடிச்சார். நான் அவரைத் தள்ளிவிட்டுட்டு ஓடினேன். துப்பாக்கியால் சுட்டார். வயித்துல குண்டு பாய்ஞ்சு கீழே விழுந்துட்டேன். கைது பண்ணி மன்னார்குடி மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. கோயில் குருக்களைக் கொன்று நகைகளைக் கொள்ளையடிச்சதா என்னை முதல் குற்றவாளியாவும், வீரபாண்டியனை ரெண்டாவது குற்றவாளியாவும் பதிஞ்சு வழக்கு போட்டாங்க!'' என்று நிறுத்தி பெருமூச்சு விடுகிறார் பெரியகருப்பன்.
நகைகளோடு தப்பிச்சென்ற வீரபாண்டியன் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே அவற்றைப் புதைத்துவிட்டு சென்னைக்குத் தப்பிச் சென்றார். 11 நாட்கள் கழித்து ராயப்பேட்டையில் அவரைக் கைதுசெய்து பின்னர் நகைகளை மீட்டிருக்கிறது போலீஸ்.    
''எனக்கு இலவச வக்கீலாக வாதாடியவர் முகம்மது சாலி; வீரபாண்டியனுக்கு வி.எஸ்.ராமலிங்கம்; நீதிபதியாக இருந்தவர் ஒரு கிறிஸ்தவர்; வழக்கை விசாரித்த காவல் துறை தலைவர் அருள் ஒரு கிறிஸ்தவர்; அப்ப முதலமைச்சரா இருந்த கருணாநிதியோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இவ்வளவு பின்னணிகளோடு அந்த வழக்குக்கு மதச்சாயம் பூசினாங்க. 'நாத்திகர்களால் குருக்களுக்கும் கோயில் நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை’னும் அப்ப பிரசாரம் பண்ணாங்க. இதனால் அரசுத் தரப்பு எங்களுக்கு எதிரா மிகக் கடுமையாக நீதிமன்றத்தில் வாதாடினாங்க. ஆறே மாசத்துல எனக்குத் தூக்குத் தண்டனையும், வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் கொடுத்து தீர்ப்பு வந்தது. எனக்குத் தூக்குனு தீர்ப்பு வந்த அன்னைக்கு ராத்திரி, என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. 'சத்யா’னு பேர் வெச்சோம்!''
இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடுகள் பலன் அளிக்கவில்லை. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, அதில் இருந்து ஏழு நாட்களுக்குள் சென்னை சென்ட்ரல் சிறையில் தூக்கிலிடப்பட காத்திருந்தார் பெரியகருப்பன்.
''கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்கனு தகவல் வந்ததும் எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சு. எதுவும் சாப்பிடப் பிடிக்கலை. செய்யக் கூடாத ஒரு தப்பு பண்ணிட்டு பிள்ளைகளையும் சம்சாரத்தையும் தவிக்க விட்டுட்டுப் போறோமேனு அழுதுட்டே இருந்தேன். முன்னாடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன், தோழர் ஜீவா போன்றவர்கள் தலைமறைவா இருந்தபோது அவங்களுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செஞ்சிருக்கேன். அந்த அறிமுகத்தில் என்னைத் தூக்கில் இருந்து காப்பாத்தச் சொல்லி தா.பாண்டியனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்காக சில வழக்கறிஞர்களை வெச்சு உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். 'பெரியகருப்பனின் கருணை மனு மீது முடிவெடுக்க நான்கு ஆண்டுகள் காலதாமதம் ஏன்?’ அப்படினு கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், என் தூக்குக்குத் தடை விதிச்சது. 'விடிஞ்சா செத்துருவோம்’னு நினைச்சுட்டு நான் தூங்காம இருந்தேன். அப்போ அதிகாலை 2.30 மணிக்கு சிறை அதிகாரிக்கு என் தூக்குக்குத் தடை உத்தரவு வந்தது. கடைசி நிமிஷத்துல நான் பிழைச்சேன்!'' - அந்த இரவின் பதற்றத்தை இப்போதும் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.
கருணை மனு மீது முடிவெடுக்க காலதாமதம் ஆனதைக் காரணம்காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியும் என்ற நடைமுறைக்கு தமிழகத்தில் முன்னுதாரணம் ஆனது பெரியகருப்பனின் வழக்குதான். பின்னர் ஆயுள் கைதியாக சிறையில் காலம் கழித்த பெரியகருப்பன், மொத்தம்                 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆனார்.
''27 வயசுல ஜெயிலுக்குப் போயிட்டு 41 வயசுல வெளியே வந்தேன். இப்பவும் என் மனைவி, பிள்ளைகளைத் தவிர என் குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் என்னை ஒரு மனுஷனாக்கூட ஏத்துக்கலை. அதையும் மீறி இப்ப ஏன் நான் இதையெல்லாம் பேசுறேன்னா, அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, இறைவன் படைச்ச உயிரை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதுக்காக என்னைக்காவது அந்த குருக்களின் வாரிசுகளிடம் நான்  மன்னிப்பு கேட்கணும். ரெண்டாவது திருட்டை சாகசம் நிறைஞ்ச ஒரு தொழிலாக யாரும் நினைக்கக் கூடாது. இன்னொருத்தவங்க உழைச்சு சம்பாதிச்ச காசை களவாடுறது மாதிரியான பாவம் வேற எதுவும் இல்லை!'' என்று சொல்லிக்கொண்டே முறுக்குமீசையைத் தடவிக்கொடுக்கும் பெரிய கருப்பன் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருந்தார். சட்டெனக் கலைந்து  தன் மனைவி சுட்டுவைத்த பணியாரங்களை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்குக் கிளம்புகிறார்.

எப்படி இருக்கிறார்கள் சீனிவாச தீட்சிதரின் வாரிசுகள்?
சீனிவாச தீட்சிதர் கொல்லப்பட்ட பின், அவரது மகன் ராமானுஜ தீட்சிதர் கோயில் குருக்கள் ஆனார். 80 வயதை எட்டிய ராமானுஜரும், அவரது மகன் வெங்கடேச தீட்சிதரும்தான் இப்போது மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் குருக்கள்.  
''தாத்தா கொலை செய்யப்பட்டப்போ எனக்கு மூணு வயசு. தாத்தாவைக் கொலை பண்ணவங்களைப் பத்தி அப்பவே நாங்க எதுவும் சொல்லலை. ஏன்னா எது சரி, எது தப்புனு புரியாம அந்தத் தப்பைச் செஞ்சுட்டாங்க. அதனால நாங்க அவங்களை மன்னிச்சு விட்டுட்டோம். அவங்களும் எங்கேயாவது நல்லபடியா வாழ்ந்தால் போதும்'' என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.
''பெரியகருப்பன் உங்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறார். நீங்கள் அவரைச் சந்திப்பீங்களா?'' என்று அவரிடம் கேட்டால், ''வேண்டாம். அது முடிஞ்சுபோன கதை. இனிமே அவரைச் சந்திச்சு என்ன ஆகப்போகுது? அவர் நல்லபடியா வாழ்ந்தா,  அதுவே போதும்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அந்த நாள்... - 8

- Vikatan

14 வருடங்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் கிடையாது. அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான தண்ணீரை மாநகராட்சிதான் விநியோகம் செய்தது. அங்கு கோலோச்சிய அரசியல் ரௌடிகள் சிலர் குடிதண்ணீரை விலைவைத்து விற்றனர். அப்போது, அந்தப் பகுதியின் கவுன்சிலராகத் தேர்வானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி. பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். தண்ணீருக்காக உள்ளூர் யுத்தத்தில் ஏற்பட்ட முதல் பலி லீலாவதி. அன்று என்ன நடந்தது?
முன்கதையோடு முழு விவரமும் சொல்கிறார் லீலாவதியின் கணவர் குப்புசாமி. இவர் தன் மனைவியின் மரணத்துக்குப் பிறகு வில்லாபுரத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது பித்தளைப் பட்டறை ஒன்றை நடத்திவருகிறார்.
''எனக்கும் லீலாவதிக்கும் மதுரைதான் பூர்வீகம். 1977-ல் கல்யாணம் ஆச்சு. அப்போ நான் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் தீவிரமா இருந்தேன். லீலாவதிக்கு வீட்ல நெசவு வேலை. அப்போ நான் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகியா இருந்தேன். அந்தச் சங்கத்தில் பெண்களின் பங்களிப்பும் தேவைனு கட்சி முடிவெடுத்தது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரா லீலாவதியைச் சேரவெச்சேன். அப்புறம் தோழர்கள் அவங்கவங்க உறவினர்களைச் சேர்த்தாங்க. அப்படித்தான் பொது வாழ்க்கைக்கு வந்தார் லீலாவதி.
பிறந்தது முதலே வறுமையில் வளர்ந்த லீலாவதிக்கு, இயல்பாகவே ஏழைகள் மீது கரிசனம் இருந்தது; அவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கிறவங்க மீது கோபம் இருந்தது. பெரும்பாலும் கட்சி வேலை. மத்த நேரம் கைத்தறி நெசவுனு போச்சு எங்க வாழ்க்கை. சாதாரணப் பள்ளியில்தான் பிள்ளைகளைப் படிக்கவெச்சோம். வீட்டுக்குள் வறுமை. ஆனா, வீட்டுக்கு வெளியே லீலாவதியின் செல்வாக்கு பெருகுச்சு. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் அவரைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆக்கியது. கைத்தறி நெசவாளர் மாநில சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவி வந்துச்சு. முக்கியமா வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெரும் அளவு சம்பாதிச்சார் லீலாவதி. அது நல்லதுக்கா, கெட்டதுக்கானு தெரியாம அப்போ சந்தோஷப்பட்டோம்!'' என்கிற குப்புசாமியின் குரல்  மௌனமாகிறது.
1996-ல் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒரு பங்குத் தொகுதிகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் இருந்த கட்சிகளில் தலைமை தொடங்கி கீழ்நிலைத் தலைவர்கள் வரை அனைவரும், பெண்களுக்கான தொகுதியில் அவரவர் வீட்டுப் பெண்களைக் களம் இறக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்களிடையே செல்வாக்கோடு இருந்த லீலாவதியை 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தியது. அதுவரை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை தேர்தல் வெற்றியின் மூலம் சி.பி.எம் கைப்பற்றியது. அது லீலாவதி என்ற தனிநபரின் செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றி. அப்போது வில்லாபுரம் பகுதி மக்கள் சந்தித்த பிரதான பிரச்னைகள் மூன்று... குடிநீர், ரேஷன் விநியோக முறைகேடு, அரசியல் ரௌடியிஸம்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகான நிலவரம் சொல்கிறார் குப்புசாமி. ''வில்லாபுரத்தில் கைத்தறித் தொழிலை நம்பி வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம். சிலர் அந்த வறுமையை வருமான வாய்ப்பா பாத்தாங்க. ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிக்கிறது, ரேஷன் கடை சாமான்களைக் கடத்துறது, குடிதண்ணிக்கு விலைவெச்சு விக்கிறதுனு ரௌடியிஸம் கொடி கட்டிப் பறந்தது. அப்போ வில்லாபுரத்தில் ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலைவெச்சு விப்பாங்க. ஒரு குடம் தண்ணீர் 50 பைசாவில் தொடங்கி, இரண்டு ரூபாய் வரை விலைபோகும். ஹோட்டல்காரங்க தண்ணிக்கு நிறையக் காசு கொடுப்பாங்கனு, மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணியை அவங்களுக்கு வித்துடுவாங்க. அதிலும் வெயில் காலத்துல குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது. அப்பப்போ வர்ற லாரித் தண்ணியைப் பிடிக்க மக்கள் கூட்டம் அடிச்சுக்கும். இப்படி தண்ணீர்ப் பஞ்சத்தைச் செயற்கையா உண்டாக்கி, அப்புறம் தண்ணீரைக் கொள்ளைக் காசுக்கு வித்துட்டிருந்தாங்க. எப்பவும் ஊர் தண்ணீர்ப் பஞ்சத்துலயே இருக்கணும்னு, வில்லாபுரம் பகுதியில் அரசாங்கம் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைச்சுடாமப் பார்த்துக்கிட்டாங்க. ஏன்னா, குடிநீர்க் குழாய் வந்துட்டா மாநகராட்சி தண்ணீர் லாரியை எதிர்பார்த்து யாரும் காத்திருக்கத் தேவைஇல்லையே!
இந்த நிலைமையை எப்படியாவது மாத்தணும்னு லீலாவதி முடிவெடுத்தாங்க. வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும், தண்ணீர்த் தொட்டியும் அமைக்கணும்னு மதுரை மேயருக்கு மனுகொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாப் போராடினாங்க. மாநகராட்சிக் கூட்டத்தில் குரல்கொடுத்தாங்க. இப்படிப் பல போராட்டங்கள் காரணமா வில்லாபுரம் பகுதியில்  குடிநீர்க் குழாய்களை அமைக்கும் வேலையை ஆரம்பிச்சது மாநகராட்சி. குழாய் மூலம் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிஞ்சது. தண்ணீர் மக்களை நோக்கி நெருங்கி வர வர, லீலாவதியின் மதிப்பு மக்களிடம் அதிகரிச்சது.
இன்னொரு பக்கம் ஏரியா கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளைத் தட்டிக் கேட்டாங்க. தப்பு நடக்கும் ரேஷன் கடைகளைத் தீவிரமாக் கண்காணிச்சாங்க. ஏரியாவில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூலிப்பாங்க. அதனால் கோபத்தில் இருந்த வியாபாரிகள் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைச்சது. அது வரை அரசியல் செல்வாக்கோடு எல்லா அராஜகமும் பண்ணிட்டு இருந்த கும்பலுக்கு, லீலாவதியின் வேலைகள் பெரிய தடங்கலாச்சு. ஒட்டுமொத்த வருமானத்தையும் லீலாவதி காலி பண்றாங்கனு கடுப்பு. ஆனா அதைப் பத்தி கவலைப்படாம, 'என்ன பண்ணிடுவாங்க?’னு வழக்கம்போல வேலைபாத்துட்டு இருந்தோம். ஆனா, 'என்ன வேணா பண்ணுவாங்க’னு அப்போ எங்களுக்குத் தெரியலை'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார்.
''தொழிலாளர் தினத்துக்கு ஒரு வாரம் இருந்துச்சு. எங்க பகுதியில் அதை எப்படிக் கொண்டாடுறதுனு பேசிட்டு இருந்தோம். அன்னைக்கு புதன்கிழமை. காலையில எந்திரிச்சு டீ குடிச்சுட்டு தோழர்களைப் பார்க்கக் கிளம்புனேன். எண்ணெய் வாங்குறதுக்காக பக்கத்து மளிகைக் கடைக்குப் போனாங்க லீலாவதி. நான் கொஞ்ச தூரம் தள்ளி தோழர்களோடு பேசிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு, 'ஒரு பொம்பளையை வெட்டுறாங்க... வெட்டுறாங்க’னு அலறுனாங்க. என்ன... ஏதுனு ஓடி வந்தப்போ, 'தோழர்... உங்க மனைவியைத்தான் வெட்டிப் போட்டிருக்காங்க’னு சொன்னாங்க. எனக்கு கண்கள் எல்லாம் இருட்டிட்டு வந்தது. தெருவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கக் கிடந்தா லீலாவதி. உயிர் பிழைச்சுடவே கூடாது, ஆஸ்பத்திரி தூக்கிட்டுப் போறதுக்குள்ள உயிர் போயிடணும்னு கழுத்துப் பகுதியிலேயே குறிவெச்சு வெட்டியிருக்காங்க. கண்ணு முன்னாடி துள்ளத்துடிக்க செத்துப்போயிட்டா என் மனைவி!'' -அந்த நாளின் நினைவுகள் அழுத்த, குரல் நடுங்குகிறது குப்புசாமிக்கு.
''ஆனா, என் மனைவியின் உயிரை எடுத்தவங்களால், அவங்களால் கிடைச்ச உரிமைகளைத் தடுக்கமுடியலை. லீலாவதி மரணம்தான் இந்தப் பகுதியில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துச்சு. லீலாவதி படுகொலை செய்தி பரவியதும் மதுரை ஸ்தம்பிச்சது. ஊர் முழுக்கப் பதற்றம். சுமார் 10 கி.மீ தூரம் வரை லீலாவதி இறுதி ஊர்வலம் நடந்துச்சு. வழி முழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்னு அஞ்சலி செலுத்தினாங்க. எங்கே பார்த்தாலும் ஜனத்திரள். யாருமே சொல்லாமல் கடைகளை அடைச்சாங்க மதுரை வியாபாரிகள். பொதுமக்கள்கிட்ட இருந்து அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமப்போயிருந்தா, லீலாவதி சிந்தின ரத்தம் காய்றதுக்குள்ள வழக்கை இழுத்து மூடியிருப்பாங்க!''
லீலாவதி கொலை வழக்கில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டனர். வில்லாபுரம் பகுதியில் தன் அரசியல் சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்த முத்துராமலிங்கம், அந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு தன் தம்பி மனைவியை வேட்பாளர் ஆக்கினார். ஆனால், மக்கள் அபிமானத்தால் லீலாவதி வெற்றிபெற்றார். ஒரு கவுன்சிலராக லீலாவதியின் செயல்பாடுகள் முத்துராமலிங்கத்தை அரசியல்ரீதியாப் பாதித்திருக்கிறது. அதுவே லீலாவதியைக் கொலைக்கு வித்திட்டிருக்கிறது.
முதன்முதலாக கம்யூனிஸ்ட்டாக வில்லாபுரத்தில் வென்றவர் லீலாவதி. இன்று வரை அங்கு கம்யூனிஸ்ட்களைத் தவிர இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு காற்றோடு கலந்திருக்கிறது லீலாவதியின் தியாகம். வில்லாபுரம் பகுதிக்கு குடிநீர்க் குழாயில் முதலில் தண்ணீர் வந்தபோது, குடங்களில் தண்ணீர் பிடித்த மக்கள் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லவில்லை. லீலாவதி வெட்டிக்கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று அந்தத் தண்ணீரை ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஏனெனில், அந்தப் பகுதி மக்கள் அருந்தும் ஒவ்வொரு துளி நீரிலும் கலந்திருக்கிறது லீலாவதியின் ஆன்மா!

லீலாவதி கொலை வழக்கின் பின்னணி!
லீலாவதி கொலை வழக்கில் கருமலையன், முத்துராமலிங்கம், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் என, கைதுசெய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது மதுரை கீழ் நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் செல்ல, 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதிசெய்தது. 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளின்போது இவர்கள் அத்தனை பேரையும் மனித உரிமை ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட்களின் கடும் எதிர்ப்பையும் மீறி விடுதலைசெய்தது அப்போதைய தி.மு.க அரசு. மதுரை தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே அந்தச் சலுகை அளிக்கப்பட்டது என்கிற குமுறல் இன்னும் இருக்கிறது.  
''கம்யூனிஸ்ட்களின் முன்மாதிரி லீலாவதி!''
லீலாவதி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் மதுரை (தெற்கு) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை.
''10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தோழர் லீலாவதி, மக்களின் அபிமானத்தைப் பெறுவது எப்படி, தேர்தல் வெற்றிக்குப்  பிறகு மக்களுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்பதற்கு முன்மாதிரி. எந்தப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து தனி மனுஷியாகப் போராடியிருக்கிறார். கவுன்சிலரான பிறகும்கூட கைத்தறித் தொழிலை விடாமல், அந்த வருமானம் மூலமே குடும்பத்தை நிர்வகித்தார். லீலாவதி மரணத்துக்குப் பிறகு வில்லாபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை ஆகிவிட்டது. அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு லீலாவதி ஒரு முன்மாதிரியாக அமைந்துவிட்டார். தோழர் லீலாவதியின் மரணமும் தியாகமும் எங்களோடு இருக்கின்றன. நாங்கள் எப்போதும் தோழர் லீலாவதியோடு இருக்கிறோம்!''
லீலாவதி குடும்பம் இன்று...
லீலாவதி - குப்புசாமி தம்பதிக்கு கலாவதி, துர்கா, டான்யா... என மூன்று பெண் குழந்தைகள். அதில் மூத்தவர் கலாவதிக்கு அரசு வேலை கிடைத்து, திருமணம் முடித்து மதுரையில் வாழ்கிறார். துர்கா, கல்லூரி காலத்தில் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், குடும்ப வாழ்க்கை சிக்கல்களை உண்டாக்க, தற்கொலை செய்துகொண்டார். கடைசி மகள் டான்யா சென்னையில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

அந்த நாள்... - 7

- Vikatanகஸ்ட் 6, 1945. உலகம் மறக்க முடியாத நாள். அன்றுதான் உலகின் முதல் அணுகுண்டு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 9, 1945 அன்று நாகசாகி மீதும் வீசப்பட்ட அணுகுண்டுகளின் நெடியை இன்றும் சுமக்கிறது உலகம்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து,69 ஆண்டுகள் கழிந்துவிட்டன; பேரழிவின் சுவடுகள்கூட மறைந்துவிட்டன. எனினும் அழிவின் வரலாற்றுக்குச் சாட்சியாக நிற்கின்றன அந்த இரு நகரங்களும். சர்வநாசத்துக்குப் பிறகு ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து, இன்று உதாரண நகரங்களாக அவை ஜொலிக்கின்றன. அந்த அபார மீட்புப் பணியில் ஒட்டுமொத்த ஜப்பானையும் ஒருங்கிணையச் செய்ததில் சிறுமி சசாகிக்கும் பெரும் பங்கு இருக்கிறது. ஜப்பானில் 'சசாகி’ என்றால், உலக அமைதியின் உருவம். வருடந்தோறும் அமைதி நாள் அன்று எண்ணற்ற ஜப்பான் குழந்தைகள், காகிதக் கொக்கை கையில் ஏந்தியிருக்கும் சசாகியின் சிலையின் கீழ் நின்று, உலக அமைதிக்காக கண்ணீர் பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.
ஏன்... யார் இந்த சசாகி?  
இப்போது ஜப்பானின் பள்ளிப்பாடப் புத்தகங்களில் நாயகியாக வலம்வரும் சதாகோ சசாகிக்கு, 1954-ம் ஆண்டில் 12 வயது. மற்ற எல்லா சிறுமிகளைப்போலவே உற்சாகம் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ்ந்தாள் சசாகி. சில வருடங்களுக்கு முன்பு அவள் வாழ்ந்த ஹிரோஷிமா நகரத்தில் நடந்த அணுகுண்டு வெடிப்பைப் பற்றி மிக மங்கலான நினைவுகளே அவளுக்கு இருந்தன. குண்டு வெடித்தபோது அவளுக்கு இரண்டு வயது.  தனது உறவினர்கள் பலரை அந்தக் குண்டுவெடிப்பில் இழந்திருந்தாள். வருடம் தவறாமல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவள் வழக்கம். தவிரவும், தான் ஓர் ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவாக வேண்டும் என விரும்பி, அதற்கான தயாரிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தாள் சசாகி. அன்று பள்ளியில் ஓட்டப் பந்தயம். அவள் கவனம் முழுவதும் பந்தயத்திலேயே இருந்தது. சசாகியின் குடும்பமே அவளது வெற்றியைக் கொண்டாடக் காத்திருந்தது. ஆனால், போட்டியின் முடிவில் வெற்றிக் கூச்சல்கள் அவள் காதுகளை வந்தடைய வெகுநேரம் ஆனது. அன்றுதான் முதன்முதலாக சசாகிக்குத் தலைசுற்றத் தொடங்கியது. அதன் பிறகு பலமுறை தலைசுற்றல்கள் இருந்தாலும் அதைப் பற்றி சசாகி யாரிடமும் சொல்லவில்லை... ஒருநாள் மயங்கி விழும் வரை!
மருத்துவமனையில் அவளுக்கு 'அணுகுண்டு நோய்’ லுகேமியா தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, சசாகியின் உலகம் நொறுங்கியது. அப்போது பரவலாக பலரைத் தாக்கிய லூகேமியாவுக்குக் காரணம், அணுகுண்டு வெடிப்பு உமிழ்ந்துகொண்டிருந்த கதிரியக்கம்.
நம்பிக்கையின்மையின் நிழலில் மருத்துவமனையிலேயே பல வாரங்கள் கழித்த சசாகியிடம் அவளது உயிர்த் தோழி சிசுகோ ஒரு தங்க நிற காகிதக் கொக்கைப் பரிசளித்தாள். 'இது உனது முதல் கொக்கு. இதுபோல 1,000 கொக்குகள் செய்தால், நீ குணம் அடைவாய்’ எனச் சொன்னாள் சிசுகோ.  ஜப்பானின் மிகப் பிரபல கலைவடிவம் ஒரிகாமி. காகிதங்களைக் கொண்டு விதவிதமாக மரம், செடி, கொடி, விலங்குகள் எனப் பல வடிவங்களைச் செய்யும் கலை.
அப்படி 1,000 ஒரிகாமி கொக்குகளைச் செய்தால் தீராத நோயையும் குணப்படுத்திவிடலாம் என்பது ஜப்பானியர்கள் நம்பிக்கை. 1,000 ஒரிகாமி கொக்குகள் என்பது, ஜப்பானின் கலாசாரத்தில் தவிர்க்க இயலாத ஒரு நடைமுறை. மகளின் திருமணத்தின்போது அவள் 1,000 வருடங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என 1,000 ஒரிகாமி கொக்குகளைப் பரிசு அளிப்பார் பெண்ணின் அப்பா. பிறந்த குழந்தைக்குக் கிடைக்கும் பரிசும் அதுவே. காரணம், வீட்டில் 1,000 ஒரிகாமி கொக்குகள் இருந்தால், அந்த வீட்டில் வளம்கொழிக்கும் என்பது ஜப்பானியர்கள் நம்பிக்கை.
எப்போதும்போல் இல்லாமல், அந்த ஒற்றைக் கொக்கு கைக்கு வந்த நாளின் இரவை மிக பாதுகாப்பாக, அமைதியாக உணர்ந்தாள் சசாகி. அப்போதுமுதல் கொக்குகள் செய்வதைத் தவிர, அவளுக்கு வேறு எதிலும் சிந்தனை இல்லை. 10, 20, 100... எனச் செய்யச் செய்ய காகிதங்கள் கிடைக்காமல் மருந்துச் சீட்டு, மாத்திரை கவர் என, கிடைத்த அனைத்து காகிதங்களையும் சேகரித்து கொக்குகள் செய்தாள் சசாகி. அப்போதுதான் மருத்துவமனையில் கெஞ்சியைச் சந்தித்தாள். கெஞ்சி அவளைவிட சிறியவன். அவனுக்கும் அணுகுண்டு நோய். தன்னிடம் இருந்த மிக அழகான காகிதத்தில் கொக்கு செய்து கெஞ்சிக்குப் பரிசாக அளித்தாள் சசாகி. 'எனக்கும் கொக்கு செய்யத் தெரியும். ஆனால், இப்போது என்னை கடவுளர்களாலும் காப்பாற்ற முடியாது’ என்றான் அவன். அடுத்த சில நாட்களிலேயே கெஞ்சி இறந்துவிட்டான். வெகுநாட்களுக்குப் பிறகு அன்று இரவு சசாகி அழுதாள். அவளது நம்பிக்கை கரைந்துகொண்டிருந்தது. 'இன்னும் சில கொக்குகள்தான். இதோ தூங்குவதற்கு முன்பு ஒன்றைச் செய்து முடி. பிறகு,  நீ பாட்டிபோல வாழ்வாய்’ என்றார் அங்கிருந்த செவிலியர்.
இப்போது சசாகியிடம் 300 கொக்குகள் இருந்தன. கொஞ்சம் உடல்நிலை தேறி, அவள் வீடு திரும்பியிருந்தாள். ஆனாலும் சசாகி கொக்குகள் செய்வதை விடவில்லை. 500 கொக்குகளை நெருங்கும்போது சசாகிக்கு உடல்நிலையில் மீண்டும் பிரச்னை. 'இன்னும் 500 கொக்குகள்தான். முடித்துவிட்டால் சரியாகிவிடும்’ என சமாதானம் சொன்னாலும், சசாகியை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.
அன்று மருத்துவமனையில் 644-வது கொக்கை சசாகி மடித்துக்கொண்டிருந்தாள். ஆனால், முந்தைய கொக்குகளைப்போல நேர்த்தியாக இல்லை அது. உறுதியை இழந்துகொண்டிருந்த விரல்களில் இருந்து அதற்குமேல் நேர்த்தி சாத்தியம் இல்லாமல்போனது. அந்த அழகற்ற கொக்கைக் கையில் எடுத்த சசாகியின் அம்மா, 'சொர்க்கத்தில் இருக்கும் கொக்குகளே... உங்களது சிறகுகளால் எனது மகளைப் பாதுகாப்பீர்களாக!’ எனப் பிரார்த்தனை செய்தது, சசாகியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
க்டோபர் 25, 1955-ல் சசாகி இறந்துவிட்டாள். அவள் செய்யாமல் விட்ட மீதமுள்ள 356 கொக்குகளை, அவளுக்காக அவளது தோழிகளும் வகுப்பினரும் செய்தார்கள். 1,000 கொக்குகளுடன் சசாகியை வழியனுப்ப வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.
1958-ல் சசாகியின் நினைவாக, அவளைப்போல இறந்த எண்ணற்ற குழந்தைகளின் நினைவாக, ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் கொக்கைப் பறக்கவிடும் சசாகியின் சிலை நிறுவப்பட்டது. அணு ஆயுதப் போருக்கு எதிராக அமைதியின் சின்னமாக இன்றும் திகழும் அந்தச் சிலைக்கு, வருடத்துக்கு ஒருமுறை அமைதி நாள் அன்று வந்து, காகிதக் கொக்கு மாலைகளைச் சூட்டுவார்கள் ஜப்பான் நாட்டுக் குழந்தைகள்.
அந்தச் சிலையின் கீழ் ஜப்பான் குழந்தைகளின் தீராத ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்...
'இதுதான் எங்கள் அழுகுரல்
இதுதான் எங்கள் பிரார்த்தனை
உலக அமைதி!’
இனி யாரும் தன்னைப்போல உயிர் இழக்கக் கூடாது என்பதுதான் சசாகியின் எளிய பிரார்த்தனை. ஆனால், சசாகியின் அந்த இறுதி விருப்பம் இன்று வரை நிறைவேறவில்லை! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 6-ம் தேதி சசாகியின் சிலை முன்பு கூடும் குழந்தைகளின் பிரார்த்தனையும் அதுதான்!
ஆனால், இன்றும் அந்தக் குழந்தைகளின் அழுகுரல்களும் பிரார்த்தனைகளும் எட்டாத தொலைவிலேயே நாம் இருக்கிறோம் என்பதற்கு, ஈழத்திலும் பாலஸ்தீனத்திலும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே சாட்சி. 13 வயது இமானை குற்றவுணர்வு இல்லாமல் கொல்கிறது இஸ்ரேல். பிறந்த குழந்தைகளை போர் என்ற பேரில் கொல்வதுதான் மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியா? உலக அமைதி உண்மையில் மலர இன்னும் எத்தனை அழுகுரல்கள் தேவை? எத்தனை ஆயிரம் கொக்குகள் தேவை?

அணுகுண்டு வெடித்த கதை!
அது இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். ஆனால், அந்த அணுகுண்டு தொடர்பான விஷயங்களை வெளியே கசியவிடாமல், தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது என 1943-ல் முடிவுசெய்தார்கள் அமெரிக்க அதிபர்  ரூஸ்வெல்ட்டும், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும். பின்னர் பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு, ஜப்பான் மீது அணுகுண்டை வீசி சோதித்துப் பார்ப்பது என முடிவு செய்தார்கள். பி-29 வகை விமானம், 4 டன் எடை கொண்ட குண்டைச் சுமந்துசென்று வீசுவதற்கு ஏற்ப மறுவடிவமைக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கான ஒத்திகைகள் மும்முரமாக நடந்தன. ஒத்திகைகளின்போது எறியப்பட்ட குண்டுகளின் பேர் பம்ப்கின் (பூசணிக்காய்).
பிப்ரவரி 1945-ல் யால்டாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் ஓர் உச்சி மாநாடு நடத்தின. அப்போது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஜப்பான் மீது போர் தொடுத்தது ரஷ்யா. அப்போது ஜெர்மனி சரணடைந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஏப்ரல் 12, 1945-ம் ஆண்டு ரூஸ்வெல்ட் மரணம் அடைந்த பிறகு, உதவி ஜனாதிபதி ஹென்றி ட்ரூமேன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அப்போதுதான் அவருக்கே அணுகுண்டுகள் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. ஏப்ரல் 27, 1945-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில், அணுகுண்டு வீச ஜப்பானில் 17 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. பின்னர்  புவியியல் மற்றும் இட அமைப்பியல் சார்ந்து ஆய்வுசெய்து எங்கு எறிந்தால் அணுகுண்டு நிறையப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கியோடோ, ஹிரோஷிமா, யோகொஹாமா, கோகுரா ஆகிய நான்கு நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அந்த முதல் பட்டியலில் நாகசாகி இல்லை. பட்டியலின் மறு ஆய்வில்தான் நாகசாகி சேர்க்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் மீதான வான் வழித் தாக்குதல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. காரணம், அப்போதுதான் அணுகுண்டு வீசும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழுமையாக அறிய முடியும் என்பதே!
அதிகபட்சப் பாதிப்பு எங்கு ஏற்படுமோ, அங்கு முன்னறிவிப்பு இல்லாமல் அணுகுண்டை வீசுவது என முடிவெடுத்தார்கள். ஆனால், அதற்கு விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். எனினும், அணுகுண்டின் முழுமையான 'பலன்’ தெரிய வேண்டும் எனக் காரணம் சொல்லி, விஞ்ஞானிகளின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அணுகுண்டு வீச்சு தேர்வு பட்டியலில் இருந்து, ஜப்பானின் கலாசாரத் தலைநகரம் கியோடோ விலக்கப்பட்டது. கலாசாரத் தலைநகரின் மீது குண்டுவீசினால், அதை ஜப்பான் என்றென்றும் மன்னிக்காது என்பதுதான் காரணம்.
அணுகுண்டுகளின் பூர்வாங்க சோதனை முடிந்து அணுகுண்டு வீசப்படும் தேதிக்காகக் காத்திருந்த நேரத்தில், சரணடைய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஜப்பான். அதைத் தடுத்துநிறுத்தும் பொருட்டு, ஜப்பான் மீது உடனடியாகக் குண்டுவீசுவது என அமெரிக்கா முடிவுசெய்தது. அணுகுண்டு மூலம் போரை முடித்தால், கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் மட்டுப்படும் என்பதும் அப்போது அமெரிக்காவின் எண்ணம்!
ஜப்பான் மீது குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு (ஜப்பான் நேரம்) அணுகுண்டைச் சுமந்துகொண்டு 'எனோலா கே’ என்ற பி-29 ரக விமானம் புறப்பட்டது. அதோடு மேலும் இரண்டு விமானங்கள் பறந்தன. ஒன்றின் நோக்கம் படம்பிடிப்பது; இன்னொன்றின் நோக்கம் குண்டுவெடிப்பு அதிர்வுகளை ஆராய்வது. எனோலா கே விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மூன்று நகரங்களின் தட்பவெட்ப நிலை அறிய மூன்று விமானங்கள் கிளம்பிச் சென்றன.
காலை 7:15 மணிக்கு ஹிரோஷிமாவின் தட்பவெட்பம் சீராக இருப்பதாகத் தகவல் வந்தது. அந்தத் தகவல் ஹிரோஷிமாவின் தலையெழுத்தை மாற்றியது. 2,740 கி.மீ தூரத்தை ஆறரை மணி நேரம் பயணம் செய்து கடந்த விமான ஓட்டிக்கு ஹிரோஷிமா நகரம் கண்ணில் தட்டுப்பட்டதும், குண்டின் விசையை அழுத்தினார்.
குண்டு விழுந்து 43 விநாடிகள் கழித்து ஷிமா மருத்துவமனைக்கு மேல் வெடிக்கிறது. 'லிட்டில் பாய்’ என்ற அந்தக் குண்டு, இன்று வரை உலகம் பார்த்த மிக மோசமான பேரழிவை ஹிரோஷிமா மீது கட்டவிழ்த்தது. 6,300 பள்ளிக் குழந்தைகள் உள்பட பல லட்சக் கணக்கானவர்களைக் கொன்று அழித்தது அந்தக் குண்டு.
ஹிரோஷிமா நகரில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 'புளுட்டோனியம்’ அணுகுண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டு இன்னொரு பேரழிவை ஏற்படுத்தியது அமெரிக்கா. போர் தந்திரமாக இல்லாமல், இரண்டு குண்டுகளின் சோதனைக்களங்களாக ஹிரோஷிமா, நாகசாகி இரு நகரங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதே வரலாற்றின் அதிர்ச்சித் துயரம்!
ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்த குண்டுகளைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் இன்று உலக நாடுகள் கையில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அணு யுத்தத்தைச் சந்திக்கும் அபாயத்துடனே உலகம், ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறது!

அந்த நாள்... - 6

முந்தைய நாள் உலைகளில் கொதித்த சாராயம், மறுநாள் சூளகிரி சுற்றுவட்டாரத்தைச் சுடுகாடு ஆக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை! தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டி, அன்றைய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சூளகிரி ஒன்றியத்தில், 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விஷச் சாராய சாவுகள்... இரு மாநிலங்களையும் கதிகலங்கவைத்த கொடூரம்!
1998-ம் ஆண்டு நல்லகான கொத்தபள்ளி, சாமல்பள்ளம், பருவீதி, ஒசள்ளூர், குறும்புக்குட்டை, ஏனுசோனை, தின்னூர், கெட்டூர் கிராமங்களில் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் குடல்வெந்து இறந்தவர்களாக அரசாங்கம் சொன்ன எண்ணிக்கை 50. ஆனால், விஷச் சாராயம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை  இன்னும் அதிகம்.
நல்லகான கொத்தபள்ளி கிராமத்தில் மட்டும் 18 பேர் பலியாகி இருந்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னியம்மாள், அந்த விஷச் சாராய சாவில் தன் கணவர் ராஜேந்திரனைப் பறிகொடுத்தவர்.
''அவருக்கு மூணு மனைவிங்க. மூத்தவங்க இறந்த பிறகு இரண்டாம் தாரமும் அப்புறம் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டார். சம்பவம் நடந்தப்போ என் மூத்த பொண்ணுக்கு ரெண்டு வயசு. ரெண்டாவது குழந்தை மீனாட்சி பிறந்து 22 நாள் ஆகியிருந்துச்சு. வழக்கம்போல அன்னைக்கு அவர் சாராயம் குடிச்சிட்டு வந்து சலம்பிட்டே தூங்கிட்டாரு.
காலையில் ரொம்ப நேரமா எந்திரிக்கல. மெதுவா எந்திரிச்சவரு, 'அய்யோ... எனக்குக் கண்ணு தெரியலை’னுதான் முதல்ல குரல்கொடுத்தாரு. என்ன ஏதுன்னே புரியலை. கொஞ்ச நேரத்துல 'வயிறு வலிக்குது’னு துடிச்சாரு. ஓசூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம். அங்கே என்ன ஏதுனு விசாரிச்சுட்டு இருந்தப்பவே, எங்க ஊர்க்காரங்க சிலர் அதேமாதிரி 'கண்ணு தெரியலை... வயிறு எரியுது’னு வரிசையா வந்தாங்க. உடனே சுதாரிச்சுட்டு, 'சாராயம் குடிச்சீங்களா, ஊர்ல எத்தனை பேர் குடிச்சாங்க?’னு கேட்டாங்க. திமுதிமுனு அந்த இடமே  கலவரமாப்போச்சு. என் புருஷன் வயித்துவலி தாங்காமத் துடிதுடிச்சு மத்தியானம் செத்துட்டாரு. எங்க ஊர்ல இருந்து வந்தவங்களும் வரிசையா அடுத்தடுத்து செத்தாங்க. ஊரே பொணக்காடாப் போச்சு. தினம் குடிச்சாலும் ஒருநாள்கூட அவர் வேலைக்குப் போகாம இருந்தது இல்லை. இளநீர் வித்தோ, விவசாயக் கூலி வேலைபார்த்தோ எங்களைக் கௌரவமாப்  பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்ட பிறகு கூலி வேலைக்குப் போய் என் ரெண்டு பொண்ணுங்களையும் படிக்கவெச்சேன். மூத்தவ ப்ளஸ் டூ; இளையவ ஒம்போதாப்பு வரை படிச்சாங்க. ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்க்கும்போது, 'படிக்கலைன்னாகூடப் பரவாயில்லை... குடிக்கக் கூடாது’னு சொன்னேன். தேடித் தேடி குடிக்காத மாப்பிள்ளைகளா புடிச்சேன். இப்போ என் பொண்ணுங்களைத் தங்கமாப் பார்த்துக்கிறாங்க. அதுதான் என் வாழ்க்கையில ஒரே நிம்மதி'' எனப் பெருமூச்சுடன் பெரும் சோகம் சொல்கிறார் கன்னியம்மாள்.
சூளகிரி ஒன்றியத்தில் உள்ள இரப்பன்பேல், எப்பளம் பகுதிகளில் உற்பத்தியாகும் சாராயம், ஏரியாவாரியாகப் பிரிக்கப்பட்டு  ஏஜென்ட்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகி வந்தது. அதில் எப்பளம் பகுதியின் சாராயச் சக்கரவர்த்தி செல்வத்தின் சாராயத்துக்கு கிராக்கி அதிகம். செல்வத்தின் சாராயம் சூளகிரியையும் தாண்டி கிருஷ்ணகிரி, ஓசூர், பாலகோடு, தேன்கனிக்கோட்டை வரை பரந்து விரிந்து பாய்ந்தது. சப்ளையர்கள், அவர்களுக்குக் கீழே ஏஜென்ட்கள், சில்லறை வணிகர்கள், சாராய சப்ளைக்கு 53 மொபெட்டுகள், புல்லட்கள், சைக்கிள்கள், வாகனங்கள் நுழைய முடியாத மலைப் பகுதிகளுக்கு கழுதைகள்... எனத் தெளிவான திட்டங்களோடு இண்டு இடுக்குகளில் எல்லாம் சாராயத்தைச் சேர்த்திருந்தார்கள். கர்நாடகாவில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளில் முறைகேடாக பெட்ரோல், ஸ்பிரிட் எடுப்பது சாராய வியாபாரிகளின் வாடிக்கை. சாலையில் பழுதாகி நின்ற ஒரு வாகனத்தில் இருந்து,  35 லிட்டர் அளவுக்கு ஸ்பிரிட்டைத் திருடி சாராயம்  தயாரித்திருக்கிறார்கள். அதுதான் சூளகிரி பகுதியை அப்போது சுடுகாடு ஆக்கிவிட்டது.
''அன்னைக்கு நடந்தது இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. முதல் நாள் சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்த எங்க வீட்டுக்காரர் காலையில் எந்திரிக்கவே இல்லை. ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்து, 'ஊர்ல யாராவது சாராயம் குடிச்சவங்க இருந்தீங்கன்னா, உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்புங்க. உங்க ஊர்ல சிலர் சாராயம் குடிச்சிச் செத்துப்போயிட்டாங்க’னு  அறிவிச்சாங்க. நான் உடனே என் புருஷனை எழுப்பி, 'அவருக்கு எதுவும் ஆகக் கூடாது’னு வேண்டிக்கிட்டே, ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சேன். டாக்டர் அவரைப் பரிசோதிச்சுட்டு 'குடல் வெந்துருச்சு. பிழைக்கிறது கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. சாயங்காலமே என் வீட்டுக்காரர் செத்துட்டார். அப்போ ஓசூர் ஆஸ்பத்திரியில எங்கே பார்த்தாலும் யாராவது ஒருத்தரை தரையில பொணமாப் போட்டுவெச்சிருந்தாங்க. பொண அறை முழுக்க நிறைஞ்சுபோச்சு'' என்று தன் கணவர் மரணம் அடைந்த துயரம் சொல்கிறார் சக்கரலம்மா.
''அப்போ ஒரு பாட்டில் குடிச்சவங்களுக்கு கண்ணு தெரியாமப்போய் சில மாசங்கள் இருந்து அப்புறம் செத்தாங்க. ரெண்டு பாட்டில் குடிச்சவங்க ஆஸ்பத்திரியில செத்தாங்க. மூணு பாட்டில் குடிச்சவங்க ராத்திரி படுத்து காலையில் எந்திரிக்கவே இல்லை. இப்படி இந்த ஊர்ல அன்னைக்கு சாராயம் குடிச்சவங்க யாரும், இப்போ உயிரோடு இல்லை. ஏன்னா, அது சாராயம் இல்லை... விஷம்; ஒவ்வொரு சொட்டும் விஷம்!'' என்று இன்றும் அன்றைய தவிப்புடன் பேசுகிறார் திம்மராயப்பா.  
''இந்த ஊர்ல மிலிட்டரி பெருமாள்னு ஒருத்தர் இருந்தார். அவர் மிலிட்டரியில் இருந்து ரிடையர்டு ஆன பிறகு, சாராயம் வாங்கி வித்தார். எங்க ஊருக்கு அவர்தான் சாராய ஏஜென்ட். சனம் முழுக்க அவர்கிட்டதான் சாராயம் வாங்கிக் குடிப்பாங்க. அன்னைக்கும் அவர்கிட்ட வாங்கிக் குடிச்சுத்தான் ஊரே செத்துச்சு. இதுல அவர் குடும்பமும் தப்பலை. அன்னைக்கு வித்த சாராயம் என்னைக்கும் இல்லாத ருசியா இருந்துச்சாம். 'ஏயப்பா... இன்னைக்கு சரக்கு சீக்கிரமே தீர்ந்திடும். இப்பவே கொஞ்சம் குடிச்சிக்கிடுங்க’னு சொல்லி அவர் மனைவி, மருமகள், மகன், மகள்னு மொத்தக் குடும்பத்தையும் குடிக்க வெச்சிருக்கார் பெருமாள். அவர் எதிர்பார்த்த மாதிரியே சாராயம் வேகமாக் காலியாகிருச்சு. ஆனா, பெருமாள் குடும்பத்தில் ஒருத்தர் பாக்கி இல்லாம, சாராயம் குடிச்ச எல்லாரும் இறந்துட்டாங்க!'' - அதிர்ச்சி கொடுக்கிறார்  திம்மராயப்பா.
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்று தருமபுரி மாவட்டம். தட்டுப்பாடின்றி ஒக்கேனக்கல் தண்ணீர் ஓடினாலும், தாழ்வான நிலத்தில் பாயும் அந்த வெள்ளத்தால், மேட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பது இல்லை. கிருஷ்ணகிரியை ஒட்டிப் பாயும் தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கிறது சூளகிரி ஒன்றியம். கனிம, குவாரிக் கொள்ளையர்கள் நிலத்தைக் குதறி எடுத்ததுபோக எஞ்சிய நிலத்தில் நடைபெறும் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள், பெரும்பாலான விவசாயக் கூலிகள்!
விஷச் சாராய சாவு வழக்கில் செல்வம் உள்பட 28 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். பல வருடங்கள் வழக்கு நடந்தது. எனினும் செல்வம் உள்பட ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  சாட்சியங்களை வலுப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும்விதமாக அரசு தரப்பு நடந்துகொள்ளாததன் விளைவாக உண்மை 'ஊத்தி’ மூடப்பட்டது!  
''பல கிராமங்களில் சாராயம் குடிச்சவங்க செத்துப்போறாங்கன்னு தகவல் வந்ததும் எங்க ஊர்லயும் தண்டோரா போட்டுச் சொன்னாங்க. வீடு வீடாப் போய் சாராயம் குடிச்சவங்களைத் தேடினப்போ, பலரும் செத்துக்கிடந்தாங்க. அப்போ ஆம்புலன்ஸ் கிடையாது. இவ்வளவு பேர் சாகிறதுக்கு அதுவும் ஒரு காரணம். எப்பவாது வரும் கவெர்மென்ட் பஸ்ஸில் ஏறித்தான் ஓசூர் போகணும். அப்படிச் சிலரை பஸ்ஸில் ஏத்தி ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்புனோம். ஆனா, பஸ் ஓசூருக்குப் போறதுக்கு முன்னாடியே பலரும் இறந்துட்டாங்க. பஸ்ஸை அப்படியே மார்ச்சுவரிக்குத்தான் ஓட்டிட்டுப் போனாங்க!'' என்கிறார் கெண்டப்பா.
அன்று சாராயம் குடித்தவர்களில் மிஞ்சியிருக்கும் வெகுசிலரில் பருவீதி வெங்கட்ராஜும் ஒருவர். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், மாலையில் இவருக்குக் கண்கள் தெரியாது.
''எனக்கு டீ காபி குடிக்கிற பழக்கம்கூட இல்லைங்க. ஆனால், சாயங்காலத்துல கொஞ்சம் சாராயம் குடிப்பேன். அன்னைக்கு ஒரு பாட்டில் சாராயம்தான் குடிச்சேன். அதுக்கே 15 நாள் ஆஸ்பத்திரியில் என்னை வெச்சிருந்தாங்க. என்னென்னமோ மருந்து எல்லாம் கொடுத்தும் கண் பார்வை மட்டும் பாதிச்சிருச்சு. சாயங்காலத்துல ரெண்டு கண்களும் தெரியாது. பலர் என்னை மாதிரி கண்ணு தெரியாம இருந்து கொஞ்ச நாட்கள்ல செத்துப்போனாங்க. இப்ப நான் சாராயம் குடிக்கிறது இல்லை. ஆனா, டாஸ்மாக் குவாட்டர் குடிக்கிறேன்!'' எனச் சிரிக்கிறார் வெங்கட்ராஜ்.
ஒவ்வோர் ஊரிலும் கணக்கில் வராத மரணங்களின் எண்ணிக்கை அதிகம். கிராமங்களில் விஷச் சாராயத்தால் சாவு எனத் தெரியாமலே பலரைப் புதைத்தார்கள். குறிப்பாக, சாராயம் குடித்து இறந்த பல பெண்களை, அவர்களது குடும்பத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமலே புதைத்தார்கள். ஆனால், இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதும், பிணங்களைத் தோண்டி எடுத்து 'சாராயத்தால் சாவு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதில் பல பிணங்கள் கணக்கில் சேரவே இல்லை!
    
16 ஆண்டுகளுக்குப் பிறகு சூளகிரி பகுதி  இப்போது எப்படி இருக்கிறது?
அன்றே கொன்ற விஷச் சாராயத்தின் இடத்தை, 'நின்றுகொல்லும் டாஸ்மாக்’ கைப்பற்றியிருக்கிறது. நிஜ நிலவரம் சொல்கிறார் சமூக ஆர்வலர் முருகேசன்.
''1998-ம் ஆண்டு விஷச் சாராய சாவில் இறந்தவங்க பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைங்க. அதனால அவங்களுக்கு நிதியும் கிடைக்கலை; நீதியும் கிடைக்கலை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தப் பகுதியில் வெளிப்படையான சாராய வியாபாரம் இல்லை. ஆனா, மெதுமெதுவா தெருவுக்குத் தெரு டாஸ்மாக் திறந்துட்டாங்க. சமீபத்தில்கூட சிலர் டாஸ்மாக்ல குடிச்சி சுருண்டு விழுந்து செத்துப்போனாங்க. காரணம், கடத்திக் கொண்டுவரப்படும் போலி மதுபான பாட்டில்கள். இந்தப் பகுதி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிப்பிடம், பள்ளி போன்றவை  கேட்டு பல ஆண்டுகளாகப் போராடிட்டு இருக்கோம். ஆனா, அதையெல்லாம் யாரும் கண்டுக்கவே இல்லை. சாராயத்தை மட்டும் திகட்டத் திகட்ட ஊட்டுறாங்க!'' - முருகேசன் சொல்லிமுடிக்கும் சமயம், மாலை பரபரப்புக்கான எதிர்பார்ப்புடன் மினுங்கி மினுங்கி எரியத் தொடங்குகிறது உள்ளூர் டாஸ்மாக்கின் தட்டி விளக்கு!

''இன்று தக்காளி வியாபாரம் மட்டும்தான்!''
16 ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரியாக இருந்த 'சாராய செல்வம்’, இப்போது சூளகிரி ஏரியாவின் தக்காளி சப்ளையர். ஓசூர் பிரதான சாலையில் பிரமாண்ட தக்காளி மண்டி நடத்திவருகிறார் செல்வம். வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் கொத்தாகத் தொங்கும் தங்கச் சங்கிலிகளும், கை விரலில் டாலடிக்கும் மெகா சைஸ் 'அம்மா’ மோதிரம், சுற்றி நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்... என அரசியலில் அலேக் வளர்ச்சி செல்வத்துக்கு.  
''என்னைப் பத்தி ஊருக்குள்ள விசாரிச்சுட்டு இருந்தீங்களாமே... என்கிட்டயே கேட்டிருக்கலாமே!'' என்று உற்சாகமாக வரவேற்றார். ''அப்போ எனக்குக்  கல்யாணம் ஆன புதுசு. கல்யாண களையில யாவாரத்தைச் சரியாக் கண்டுக்கலை. 'செல்வத்தை ஒழிக்க இதுதான் சமயம்’னு எவனோ காய்ச்சின சாராயத்தைக் குடிச்சு மக்கள் செத்துப்போன பழியை என் மேல போட்டுட்டாங்க. 13 மாசம் ஜெயிலில் இருந்தேன். 300 சாட்சிகளோடு வழக்கு நடந்தப்போ, 50 பேர் வரைக்கும் செத்துப்போயிட்டாங்க. மிச்சம் இருந்த 250 பேரில் ஒருத்தர்கூட, எனக்கு எதிரா சாட்சி சொல்லலை. நான் அந்த மக்களுக்குக் கெடுதல் பண்ணலை. அதனாலதான் நீதிமன்றம் என்னை விடுதலை பண்ணிச்சு. அதே மக்கள்தான் என்னை ஏனுசோனை பஞ்சாயத்துத் தலைவர் ஆக்குனாங்க. அடுத்து ஏனுசோனையைவிட பெரிய
பஞ்சாயத்தான சென்னப்பள்ளியில் போட்டியிட்டு அமோகமா ஜெயிச்சேன். எந்த சனங்களைக் கொன்னேன்னு என்னை ஜெயில்ல போட்டாங்களோ, அதே சனங்கதான் எனக்கு ஓட்டு போட்டாங்க. இப்பவும் சொல்றேன்... இந்த வேப்பனப்பள்ளி தொகுதியில் எனக்கு ஸீட் கொடுத்தா, நான் நிச்சயம் ஜெயிப்பேன். ஏன்னா, சுத்தியுள்ள 42 பஞ்சாயத்துகளிலும் என்னைக் கேட்காம ஒரு ஈ, காக்காகூட நுழைய முடியாது. எனக்கு அரசியல் செல்வாக்கு எல்லாம் கிடையாது. மக்கள் செல்வாக்கு மட்டும்தான்!'' எனப் பெருமிதமாகச் சொல்கிறார் இந்த முன்னாள் சாம்ராட்!

- Vikatan

அந்த நாள்... - 5

- Vikatan Article

அந்த நாள்... - 5
டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
ந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!
திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, 'இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. 'சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். 'மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு 'மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்...
''நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. 'ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு  பரபரப்பாயிருச்சு. 'ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க.  நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. 'ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா,  கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!'' - தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
''நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் 'பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் 'இந்து மதத்தின் 'பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். 'மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. 'மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்... ஆனா 'ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, 'வாங்க பாய்... உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச  மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா... எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!'' - அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.  
மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.
''அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ,  பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, 'நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை 'யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போது மட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். 'தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க 'கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க... அவ்வளவுதான்!''  
தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.
''நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்... ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா  விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, 'நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. 'உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், 'ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!'' என்கிறார் ஆறுமுகச் சாமி.
மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
'பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!