Sunday, December 21, 2014

அந்த நாள்... - 7

- Vikatanகஸ்ட் 6, 1945. உலகம் மறக்க முடியாத நாள். அன்றுதான் உலகின் முதல் அணுகுண்டு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்டது. அதன் பிறகு ஆகஸ்ட் 9, 1945 அன்று நாகசாகி மீதும் வீசப்பட்ட அணுகுண்டுகளின் நெடியை இன்றும் சுமக்கிறது உலகம்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து,69 ஆண்டுகள் கழிந்துவிட்டன; பேரழிவின் சுவடுகள்கூட மறைந்துவிட்டன. எனினும் அழிவின் வரலாற்றுக்குச் சாட்சியாக நிற்கின்றன அந்த இரு நகரங்களும். சர்வநாசத்துக்குப் பிறகு ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து, இன்று உதாரண நகரங்களாக அவை ஜொலிக்கின்றன. அந்த அபார மீட்புப் பணியில் ஒட்டுமொத்த ஜப்பானையும் ஒருங்கிணையச் செய்ததில் சிறுமி சசாகிக்கும் பெரும் பங்கு இருக்கிறது. ஜப்பானில் 'சசாகி’ என்றால், உலக அமைதியின் உருவம். வருடந்தோறும் அமைதி நாள் அன்று எண்ணற்ற ஜப்பான் குழந்தைகள், காகிதக் கொக்கை கையில் ஏந்தியிருக்கும் சசாகியின் சிலையின் கீழ் நின்று, உலக அமைதிக்காக கண்ணீர் பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.
ஏன்... யார் இந்த சசாகி?  
இப்போது ஜப்பானின் பள்ளிப்பாடப் புத்தகங்களில் நாயகியாக வலம்வரும் சதாகோ சசாகிக்கு, 1954-ம் ஆண்டில் 12 வயது. மற்ற எல்லா சிறுமிகளைப்போலவே உற்சாகம் நிறைந்த ஓர் உலகத்தில் வாழ்ந்தாள் சசாகி. சில வருடங்களுக்கு முன்பு அவள் வாழ்ந்த ஹிரோஷிமா நகரத்தில் நடந்த அணுகுண்டு வெடிப்பைப் பற்றி மிக மங்கலான நினைவுகளே அவளுக்கு இருந்தன. குண்டு வெடித்தபோது அவளுக்கு இரண்டு வயது.  தனது உறவினர்கள் பலரை அந்தக் குண்டுவெடிப்பில் இழந்திருந்தாள். வருடம் தவறாமல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவள் வழக்கம். தவிரவும், தான் ஓர் ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவாக வேண்டும் என விரும்பி, அதற்கான தயாரிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தாள் சசாகி. அன்று பள்ளியில் ஓட்டப் பந்தயம். அவள் கவனம் முழுவதும் பந்தயத்திலேயே இருந்தது. சசாகியின் குடும்பமே அவளது வெற்றியைக் கொண்டாடக் காத்திருந்தது. ஆனால், போட்டியின் முடிவில் வெற்றிக் கூச்சல்கள் அவள் காதுகளை வந்தடைய வெகுநேரம் ஆனது. அன்றுதான் முதன்முதலாக சசாகிக்குத் தலைசுற்றத் தொடங்கியது. அதன் பிறகு பலமுறை தலைசுற்றல்கள் இருந்தாலும் அதைப் பற்றி சசாகி யாரிடமும் சொல்லவில்லை... ஒருநாள் மயங்கி விழும் வரை!
மருத்துவமனையில் அவளுக்கு 'அணுகுண்டு நோய்’ லுகேமியா தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது, சசாகியின் உலகம் நொறுங்கியது. அப்போது பரவலாக பலரைத் தாக்கிய லூகேமியாவுக்குக் காரணம், அணுகுண்டு வெடிப்பு உமிழ்ந்துகொண்டிருந்த கதிரியக்கம்.
நம்பிக்கையின்மையின் நிழலில் மருத்துவமனையிலேயே பல வாரங்கள் கழித்த சசாகியிடம் அவளது உயிர்த் தோழி சிசுகோ ஒரு தங்க நிற காகிதக் கொக்கைப் பரிசளித்தாள். 'இது உனது முதல் கொக்கு. இதுபோல 1,000 கொக்குகள் செய்தால், நீ குணம் அடைவாய்’ எனச் சொன்னாள் சிசுகோ.  ஜப்பானின் மிகப் பிரபல கலைவடிவம் ஒரிகாமி. காகிதங்களைக் கொண்டு விதவிதமாக மரம், செடி, கொடி, விலங்குகள் எனப் பல வடிவங்களைச் செய்யும் கலை.
அப்படி 1,000 ஒரிகாமி கொக்குகளைச் செய்தால் தீராத நோயையும் குணப்படுத்திவிடலாம் என்பது ஜப்பானியர்கள் நம்பிக்கை. 1,000 ஒரிகாமி கொக்குகள் என்பது, ஜப்பானின் கலாசாரத்தில் தவிர்க்க இயலாத ஒரு நடைமுறை. மகளின் திருமணத்தின்போது அவள் 1,000 வருடங்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என 1,000 ஒரிகாமி கொக்குகளைப் பரிசு அளிப்பார் பெண்ணின் அப்பா. பிறந்த குழந்தைக்குக் கிடைக்கும் பரிசும் அதுவே. காரணம், வீட்டில் 1,000 ஒரிகாமி கொக்குகள் இருந்தால், அந்த வீட்டில் வளம்கொழிக்கும் என்பது ஜப்பானியர்கள் நம்பிக்கை.
எப்போதும்போல் இல்லாமல், அந்த ஒற்றைக் கொக்கு கைக்கு வந்த நாளின் இரவை மிக பாதுகாப்பாக, அமைதியாக உணர்ந்தாள் சசாகி. அப்போதுமுதல் கொக்குகள் செய்வதைத் தவிர, அவளுக்கு வேறு எதிலும் சிந்தனை இல்லை. 10, 20, 100... எனச் செய்யச் செய்ய காகிதங்கள் கிடைக்காமல் மருந்துச் சீட்டு, மாத்திரை கவர் என, கிடைத்த அனைத்து காகிதங்களையும் சேகரித்து கொக்குகள் செய்தாள் சசாகி. அப்போதுதான் மருத்துவமனையில் கெஞ்சியைச் சந்தித்தாள். கெஞ்சி அவளைவிட சிறியவன். அவனுக்கும் அணுகுண்டு நோய். தன்னிடம் இருந்த மிக அழகான காகிதத்தில் கொக்கு செய்து கெஞ்சிக்குப் பரிசாக அளித்தாள் சசாகி. 'எனக்கும் கொக்கு செய்யத் தெரியும். ஆனால், இப்போது என்னை கடவுளர்களாலும் காப்பாற்ற முடியாது’ என்றான் அவன். அடுத்த சில நாட்களிலேயே கெஞ்சி இறந்துவிட்டான். வெகுநாட்களுக்குப் பிறகு அன்று இரவு சசாகி அழுதாள். அவளது நம்பிக்கை கரைந்துகொண்டிருந்தது. 'இன்னும் சில கொக்குகள்தான். இதோ தூங்குவதற்கு முன்பு ஒன்றைச் செய்து முடி. பிறகு,  நீ பாட்டிபோல வாழ்வாய்’ என்றார் அங்கிருந்த செவிலியர்.
இப்போது சசாகியிடம் 300 கொக்குகள் இருந்தன. கொஞ்சம் உடல்நிலை தேறி, அவள் வீடு திரும்பியிருந்தாள். ஆனாலும் சசாகி கொக்குகள் செய்வதை விடவில்லை. 500 கொக்குகளை நெருங்கும்போது சசாகிக்கு உடல்நிலையில் மீண்டும் பிரச்னை. 'இன்னும் 500 கொக்குகள்தான். முடித்துவிட்டால் சரியாகிவிடும்’ என சமாதானம் சொன்னாலும், சசாகியை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.
அன்று மருத்துவமனையில் 644-வது கொக்கை சசாகி மடித்துக்கொண்டிருந்தாள். ஆனால், முந்தைய கொக்குகளைப்போல நேர்த்தியாக இல்லை அது. உறுதியை இழந்துகொண்டிருந்த விரல்களில் இருந்து அதற்குமேல் நேர்த்தி சாத்தியம் இல்லாமல்போனது. அந்த அழகற்ற கொக்கைக் கையில் எடுத்த சசாகியின் அம்மா, 'சொர்க்கத்தில் இருக்கும் கொக்குகளே... உங்களது சிறகுகளால் எனது மகளைப் பாதுகாப்பீர்களாக!’ எனப் பிரார்த்தனை செய்தது, சசாகியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
க்டோபர் 25, 1955-ல் சசாகி இறந்துவிட்டாள். அவள் செய்யாமல் விட்ட மீதமுள்ள 356 கொக்குகளை, அவளுக்காக அவளது தோழிகளும் வகுப்பினரும் செய்தார்கள். 1,000 கொக்குகளுடன் சசாகியை வழியனுப்ப வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.
1958-ல் சசாகியின் நினைவாக, அவளைப்போல இறந்த எண்ணற்ற குழந்தைகளின் நினைவாக, ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் கொக்கைப் பறக்கவிடும் சசாகியின் சிலை நிறுவப்பட்டது. அணு ஆயுதப் போருக்கு எதிராக அமைதியின் சின்னமாக இன்றும் திகழும் அந்தச் சிலைக்கு, வருடத்துக்கு ஒருமுறை அமைதி நாள் அன்று வந்து, காகிதக் கொக்கு மாலைகளைச் சூட்டுவார்கள் ஜப்பான் நாட்டுக் குழந்தைகள்.
அந்தச் சிலையின் கீழ் ஜப்பான் குழந்தைகளின் தீராத ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்...
'இதுதான் எங்கள் அழுகுரல்
இதுதான் எங்கள் பிரார்த்தனை
உலக அமைதி!’
இனி யாரும் தன்னைப்போல உயிர் இழக்கக் கூடாது என்பதுதான் சசாகியின் எளிய பிரார்த்தனை. ஆனால், சசாகியின் அந்த இறுதி விருப்பம் இன்று வரை நிறைவேறவில்லை! ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 6-ம் தேதி சசாகியின் சிலை முன்பு கூடும் குழந்தைகளின் பிரார்த்தனையும் அதுதான்!
ஆனால், இன்றும் அந்தக் குழந்தைகளின் அழுகுரல்களும் பிரார்த்தனைகளும் எட்டாத தொலைவிலேயே நாம் இருக்கிறோம் என்பதற்கு, ஈழத்திலும் பாலஸ்தீனத்திலும் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே சாட்சி. 13 வயது இமானை குற்றவுணர்வு இல்லாமல் கொல்கிறது இஸ்ரேல். பிறந்த குழந்தைகளை போர் என்ற பேரில் கொல்வதுதான் மனிதன் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியா? உலக அமைதி உண்மையில் மலர இன்னும் எத்தனை அழுகுரல்கள் தேவை? எத்தனை ஆயிரம் கொக்குகள் தேவை?

அணுகுண்டு வெடித்த கதை!
அது இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு வெற்றிகரமாக அணுகுண்டைத் தயாரித்தார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். ஆனால், அந்த அணுகுண்டு தொடர்பான விஷயங்களை வெளியே கசியவிடாமல், தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது என 1943-ல் முடிவுசெய்தார்கள் அமெரிக்க அதிபர்  ரூஸ்வெல்ட்டும், இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும். பின்னர் பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகு, ஜப்பான் மீது அணுகுண்டை வீசி சோதித்துப் பார்ப்பது என முடிவு செய்தார்கள். பி-29 வகை விமானம், 4 டன் எடை கொண்ட குண்டைச் சுமந்துசென்று வீசுவதற்கு ஏற்ப மறுவடிவமைக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கான ஒத்திகைகள் மும்முரமாக நடந்தன. ஒத்திகைகளின்போது எறியப்பட்ட குண்டுகளின் பேர் பம்ப்கின் (பூசணிக்காய்).
பிப்ரவரி 1945-ல் யால்டாவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் ஓர் உச்சி மாநாடு நடத்தின. அப்போது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ஜப்பான் மீது போர் தொடுத்தது ரஷ்யா. அப்போது ஜெர்மனி சரணடைந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. ஏப்ரல் 12, 1945-ம் ஆண்டு ரூஸ்வெல்ட் மரணம் அடைந்த பிறகு, உதவி ஜனாதிபதி ஹென்றி ட்ரூமேன் அமெரிக்க ஜனாதிபதி ஆனார். அப்போதுதான் அவருக்கே அணுகுண்டுகள் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. ஏப்ரல் 27, 1945-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில், அணுகுண்டு வீச ஜப்பானில் 17 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. பின்னர்  புவியியல் மற்றும் இட அமைப்பியல் சார்ந்து ஆய்வுசெய்து எங்கு எறிந்தால் அணுகுண்டு நிறையப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் கியோடோ, ஹிரோஷிமா, யோகொஹாமா, கோகுரா ஆகிய நான்கு நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அந்த முதல் பட்டியலில் நாகசாகி இல்லை. பட்டியலின் மறு ஆய்வில்தான் நாகசாகி சேர்க்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நகரங்கள் மீதான வான் வழித் தாக்குதல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. காரணம், அப்போதுதான் அணுகுண்டு வீசும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழுமையாக அறிய முடியும் என்பதே!
அதிகபட்சப் பாதிப்பு எங்கு ஏற்படுமோ, அங்கு முன்னறிவிப்பு இல்லாமல் அணுகுண்டை வீசுவது என முடிவெடுத்தார்கள். ஆனால், அதற்கு விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். எனினும், அணுகுண்டின் முழுமையான 'பலன்’ தெரிய வேண்டும் எனக் காரணம் சொல்லி, விஞ்ஞானிகளின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அணுகுண்டு வீச்சு தேர்வு பட்டியலில் இருந்து, ஜப்பானின் கலாசாரத் தலைநகரம் கியோடோ விலக்கப்பட்டது. கலாசாரத் தலைநகரின் மீது குண்டுவீசினால், அதை ஜப்பான் என்றென்றும் மன்னிக்காது என்பதுதான் காரணம்.
அணுகுண்டுகளின் பூர்வாங்க சோதனை முடிந்து அணுகுண்டு வீசப்படும் தேதிக்காகக் காத்திருந்த நேரத்தில், சரணடைய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது ஜப்பான். அதைத் தடுத்துநிறுத்தும் பொருட்டு, ஜப்பான் மீது உடனடியாகக் குண்டுவீசுவது என அமெரிக்கா முடிவுசெய்தது. அணுகுண்டு மூலம் போரை முடித்தால், கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவின் ஆதிக்கம் மட்டுப்படும் என்பதும் அப்போது அமெரிக்காவின் எண்ணம்!
ஜப்பான் மீது குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்பட்டன. ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு (ஜப்பான் நேரம்) அணுகுண்டைச் சுமந்துகொண்டு 'எனோலா கே’ என்ற பி-29 ரக விமானம் புறப்பட்டது. அதோடு மேலும் இரண்டு விமானங்கள் பறந்தன. ஒன்றின் நோக்கம் படம்பிடிப்பது; இன்னொன்றின் நோக்கம் குண்டுவெடிப்பு அதிர்வுகளை ஆராய்வது. எனோலா கே விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மூன்று நகரங்களின் தட்பவெட்ப நிலை அறிய மூன்று விமானங்கள் கிளம்பிச் சென்றன.
காலை 7:15 மணிக்கு ஹிரோஷிமாவின் தட்பவெட்பம் சீராக இருப்பதாகத் தகவல் வந்தது. அந்தத் தகவல் ஹிரோஷிமாவின் தலையெழுத்தை மாற்றியது. 2,740 கி.மீ தூரத்தை ஆறரை மணி நேரம் பயணம் செய்து கடந்த விமான ஓட்டிக்கு ஹிரோஷிமா நகரம் கண்ணில் தட்டுப்பட்டதும், குண்டின் விசையை அழுத்தினார்.
குண்டு விழுந்து 43 விநாடிகள் கழித்து ஷிமா மருத்துவமனைக்கு மேல் வெடிக்கிறது. 'லிட்டில் பாய்’ என்ற அந்தக் குண்டு, இன்று வரை உலகம் பார்த்த மிக மோசமான பேரழிவை ஹிரோஷிமா மீது கட்டவிழ்த்தது. 6,300 பள்ளிக் குழந்தைகள் உள்பட பல லட்சக் கணக்கானவர்களைக் கொன்று அழித்தது அந்தக் குண்டு.
ஹிரோஷிமா நகரில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, 'புளுட்டோனியம்’ அணுகுண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டு இன்னொரு பேரழிவை ஏற்படுத்தியது அமெரிக்கா. போர் தந்திரமாக இல்லாமல், இரண்டு குண்டுகளின் சோதனைக்களங்களாக ஹிரோஷிமா, நாகசாகி இரு நகரங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதே வரலாற்றின் அதிர்ச்சித் துயரம்!
ஹிரோஷிமா, நாகசாகியில் வெடித்த குண்டுகளைவிட ஆயிரம் மடங்கு அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் இன்று உலக நாடுகள் கையில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் அணு யுத்தத்தைச் சந்திக்கும் அபாயத்துடனே உலகம், ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment