Sunday, December 21, 2014

அந்த நாள்... - 1

- Vikatan article

அந்த நாள்...
டி.அருள் எழிலன், படங்கள்: ஜெ.தான்யராஜு, கே.குணசீலன்
'பார்க்கச் சலிக்காதவை - கடல், ரயில், யானை! இந்தப் பட்டியலில் சில காலம் 'கடலுக்கு’ விடுமுறை விடவைத்த நாள் 2004, டிசம்பர் 26... சுனாமி!
மண்ணுக்கும் விண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்து ஊருக்குள் நுழைந்த ஆழிப்பேரலைகள், தமிழகக் கடலோரத்தைத் துவம்சம் செய்தன. காலம் எல்லாம் 'கடலம்மா’ என அதன் தாய் மடியில் தலை சாய்த்து உயிர் வாழ்ந்த மனிதர்களை, ஒரே கணத்தில் உயிரற்ற சடலங்களாக்கிவிட்டது சுனாமி. பல்லாயிரம் உயிர்கள் பலியான அந்தப் பயங்கரம் மறக்காது!
''எங்களாலும் மறக்க முடியலைதான். ஆனா, அந்தக் காயத்துக்கு நாங்களே ஒரு மருந்து கண்டுபிடிச்சோம்'' - நாகப்பட்டினம் கடலின் உப்புக்காற்று உடல் மோத, நினைவைக் கிளறிப் பேசுகிறார் பரமேஸ்வரன். அவரைச் சுற்றி சிறிசும் பெரிசுமாக, குழந்தைகள் துள்ளி விளையாடுகிறார்கள். ''இப்போ இவங்கதான் எங்க பிள்ளைங்க; உலகம்'' என்ற பரமேஸ்வரனின் கரம் பற்றுகிறார் அவரது மனைவி சூடாமணி.
10 ஆண்டுகளுக்கு முன்பு, சுனாமியின் கொடூரப் பசிக்கு திடீரென ஒரு நாளில் சடலங்களாகிப்போன கணத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது பரமேஸ்வரனுக்கு.
''அன்னைக்கு எனக்குப் பிறந்த நாள். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நிறைய சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. மூத்த பொண்ணு ரட்சண்யா, ரெண்டாவது பொண்ணு காருண்யா, பையன் கிருபாசன்... எல்லாரையும் அழைச்சுக்கிட்டு பீச்சுக்குப் போனேன். கூட வந்த சொந்தக்காரங்களையும் சேர்த்து மொத்தம் 11 பேர் பீச்சுக்குக் கிளம்பினோம். என் மனைவி மட்டும் வீட்டுல சமைச்சுட்டு இருந்தாங்க. வீட்டுல இருந்து அரை கிலோமீட்டர் தூரத்துலதான் பீச். அந்தக் காலை நேரத்துல கடல் அவ்வளவு பிரகாசமா இருந்துச்சு. வாக்கிங் போயிட்டிருந்தாங்க; வாலிபால் விளையாடிட்டிருந்தாங்க. சின்னச் சின்னப் பசங்களும் நிறையப் பேர் கும்பல் கும்பலா இருந்தாங்க. பறக்கும்தட்டு வீசி விளையாடினோம். அந்த ஏரியாவே குதூகலமா இருந்துச்சு.
கிருபாசன் கடலைப் பார்த்து நின்னுட்டு இருந்தான். நான் அவனுக்கு எதிர்ப் பக்கம் நின்னேன். திடீர்னு அவன் 'அப்பா கடலைப் பாருங்க’னு கத்தினான். பார்த்தா... எனக்கு என்னன்னே தெரியலை. அதுக்கு முன்னபின்ன அப்படி ஒரு காட்சியைப் பார்த்தது இல்லை... உலகமே அழியப்போகுதோனு தோணுச்சு...'' - துயரத்தைப் பரிசளிக்க வந்த அந்த நாளின் நினைவுகள் பரமேஸ்வரனை அழுத்துகின்றன.
''பனைமர உயரத்துக்கு அலை. முதல்ல அது அலைன்னே எனக்குத் தோணலை. ஏதோ ஒண்ணு விசித்திரமா வானத்துக்கும் கடலுக்கும் நடுவுல முளைச்சு நிக்குதுனு தோணுச்சு. அது நகர்ந்து நகர்ந்து வரவும்தான் பெரிய அலைனு புரிஞ்சது. அந்தக் காட்சியை இப்போ நினைச்சாலும் உடம்பு உதறுது. சட்டுன்னு சுதாரிச்சு, 'ஓடுங்க... ஓடுங்க’னு கத்துனேன். எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்க. வயசானவங்களால ஓட முடியலை. நான் என் பையனைக் கையில் தூக்கிக்கிட்டு மத்த பிள்ளைகளைத் தேடுறேன். யாரையும் காணோம். அலை நெருங்கி வருது. வீட்டை நோக்கி நான் வேகவேகமா ஓடுறேன். திடீர்னு என் முதுகில் ஒரே அடி. அலை என்னை அடிச்சுக் கீழே தள்ளி அமுக்கிருச்சு. ஒரு கையில பிள்ளையைப் பிடிச்சுருக்கேன். மூச்சுத் திணறுது. கையில் இருக்கிற குழந்தையை யாரோ வலுக்கட்டாயமாப் பிடுங்குற மாதிரி இருக்கு. மூச்சுவிட முடியலை. தண்ணிக்கு மேல வந்து மூச்சு வாங்குறேன்... மறுபடியும் ஒரு பெரிய அலை வந்து மடேர்னு அடிச்சு உள்ளே தள்ளுது. பையன் கையில் இருந்து நழுவிட்டான். அலையோட வேகம் அதிகரிச்சு, என்னை அப்படியே தூக்கி ஒரு பனை மரத்துல வீசியடிச்சது. உடம்பெல்லாம் காயம். மரத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன். சமாளிக்க முடியாத சமயத்துல மரத்தை விட்டுட்டு தண்ணி போற போக்குல நீந்த ஆரம்பிச்சேன். ஊருக்குள்ள கண்ணுக்கு எட்டின தூரம் வரை கடல்தான். தள்ளாடியபடியே என் வீட்டுக்குப் போனேன். முதல் மாடி வரைக்கும் தண்ணீர். என் மனைவி பதற்றமா மாடில நின்னுட்டு இருந்தாங்க!'' - ஆழிப்பேரலை கொடுத்த அடியை இப்போதும் உணர்ந்து நடுங்குகிறது பரமேஸ்வரனின் உடல்.
இவர், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் உதவி செயற்பொறியாளர். இவரது மனைவி சூடாமணி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் நிர்வாக அதிகாரி. மத்திய அரசு ஊழியர்களான இருவரும், கடல் பார்த்த வீடு வேண்டும் என வேண்டி விரும்பி, நாகப்பட்டினம் கடற்கரை அருகே வீடு வாங்கிக் குடியேறியவர்கள்.
''என் மனைவி என்னை மட்டும் பார்த்துட்டு, 'பசங்க எங்கே?’னு கேட்டாங்க. என்னால பதில் சொல்ல முடியலை. கடல் கொஞ்சம் உள்வாங்கவும் குழந்தைகளைத் தேடி கடலை நோக்கிப் போனேன். போற வழியிலேயே ரட்சண்யா தண்ணியில தலைகுப்புற மிதந்துட்டு இருந்தா. உயிர் இல்லை. அவளைத் தூக்க முடியலை. பிடிச்சு இழுத்துட்டே வந்து வீட்டுல போட்டேன். ரயில்வே டிராக் பக்கம் இன்னோர் உறவினரோட உடல் கிடந்தது. அதையும் இழுத்துட்டு வந்தேன். யாரோ வந்து, 'உன் மகன் உடம்பு கலெக்டர் ஆபீஸ் பக்கம் கிடக்கு’னு சொன்னாங்க. அழக்கூடத் தெம்பு இல்லாம அந்தப் பக்கம் ஓடினேன். உடம்பு முழுக்கக் காயங்களோடு இறந்துகிடந்தான் கிருபாசன். அவனையும் வீட்டுக்கு இழுத்துட்டு வந்தேன். கொஞ்சம் தள்ளி காருண்யா உடம்பும் கிடைச்சது. மொட்டைமாடியிலதான் எல்லாரையும் வரிசையா கிடத்தினோம். எங்க வீட்ல இருந்து பீச்சுக்குப் போன 11 பேர்ல நான் மட்டும்தான் பிழைச்சேன்; 7 பேர் உடல்கள்தான் கிடைச்சது.
ஆசை ஆசையா வாங்கின வீட்ல மூணு குழந்தைங்க உட்பட உறவினர்கள் உடல்களையும் வெச்சுக்கிட்டு நானும் மனைவியும் கதறிட்டு இருந்தோம். என்ன பண்றதுன்னே தெரியலை. ஊர் முழுக்கப் பிணங்கள். எல்லாரும் யாரையோ தேடி ஓடிக்கிட்டே இருக்காங்க. உறவினர்கள் வீட்டுக்கு எப்படித் தகவல் சொல்றதுனு தெரியலை. டெலிபோன், கரன்ட் எதுவுமே இல்லை. காலையில் வரைக்கும் உயிரோட இருப்போமானே சந்தேகமாகிருச்சு. கடல் அலையோட இரைச்சல் கேட்கும்போது எல்லாம் பக்குபக்குனு இருந்துச்சு. இன்னோர் அலை வந்து மொத்தமா எல்லாரையும் அள்ளிட்டுப் போயிட்டாக்கூட பரவா யில்லைனு தோணுச்சு.
இருட்டுன பிறகு, மூணு குழந்தைகளையும் வண்டியில எடுத்துட்டு சுடுகாட்டுக்குப் போனோம். நான் குழி தோண்ட, என் மனைவி எடுத்துக் கொடுக்க, மூணு குழந்தைகளையும் புதைச்சோம். அந்த நிலைமை எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது. சொந்தக்காரங்க உடல்களைத்தான் என்ன பண்றதுனு தெரியாம இடிஞ்சுபோய் உட்கார்ந்திருந்தோம். தகவல் தெரிஞ்சு ஊர்ல இருந்து ஆளுங்க வந்து சேரவே நாலு நாள் ஆச்சு!''
இதற்கு மேல் துக்கம் வேறு எதுவும் இல்லை என்ற அளவுக்கு, அந்தக் கொடூரத் துயரத்தை பரமேஸ்வரன் தம்பதி சந்தித்த நாட்கள் அவை. வாழ்வின் மீது பிடிப்பு விட்டுப்போய், 'இதுக்கு மேல் உயிரோடு இருந்து என்ன பண்ணப்போறோம், தற்கொலை பண்ணிக்கலாமா?’ என்று மனைவி சூடாமணியிடம் கேட்டிருக்கிறார் பரமேஸ்வரன். அதற்கு அவர், 'அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம். எனக்கு இப்போ பசிக்குது; சாப்பாடு வேணும்’ என்றாராம். சாவில் இருந்து வாழ்வுக்கு அழைத்து வந்த சொற்கள் அவை. இருவரும் நிவாரண முகாமில் சோற்றுப் பொட்டலம் வாங்க வரிசையில் நின்றனர். அப்போதுதான் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோகம் நிரம்பியிருக்கும் யதார்த்தம் முகத்தில் அறைந்தது.
'' 'பெத்தவங்களை இழந்து நிறையக் குழந்தைங்க அழுதுட்டுத் திரியுறாங்க. வாங்க, போய்ப் பார்ப்போம்’னு என் மனைவிதான் அழைச்சுட்டுப் போனாங்க. சாமந்தான் பேட்டை கடற்கரைக் கிராமத்துக்கு நாங்க போனப்போ, பல சடலங்கள் மீட்கப்படலை. பெத்தவங்களை இழந்து நாலு சின்னப் பசங்க தவிச்சுப்போய் நின்னாங்க. அவங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தோம். முதல்ல சாப்பாடு சமைச்சு எல்லோரும் சாப்பிட்டோம். அப்பதான் இவங்களைப் போலவே இன்னும் நிறையக் குழந்தைங்க நிர்கதியா நிக்கிறதை நினைச்சுப்பார்த்தோம். பிள்ளைங்களை இழந்துட்டு நாங்க அநாதையா நின்னது மாதிரி, இவங்க தங்களைப் பெத்தவங்களை இழந்துட்டு நின்னாங்க. இனி நாமதான் இவங்களைப் பார்த்துக்கணும்; ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கணும்னு நினைச்சோம். வரிசையா ஒவ்வொருத்தரா வந்து சேர ஆரம்பிச்சாங்க!'' என்கிறார் பரமேஸ்வரன்.
மொத்தமாக 36 குழந்தைகளை இவர்கள் அரவணைத்திருக்கிறார்கள். அப்போது சிறுவர், சிறுமியராக வந்தவர்கள் அனைவரும், இப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள்; நம்பிக்கை இல்லத்தில் உற்சாகமாக உலா வருகின்றனர். கடல் பார்த்த பரமேஸ்வரனின் வீடுதான், இப்போது 'நம்பிக்கை இல்லம்’!
''இவங்க வந்து சேர்ந்த பின்னாடி எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. ஷெமாயா, மிக்காயா. ஷெமாயா என்றால், புதிய தலைமுறை. மிக்காயா என்றால், தீர்க்கதரிசி. இவங்களையும் சேர்த்து இந்த நம்பிக்கை இல்லத்துல மொத்தம் 38 குழந்தைகள். இப்போ எல்லாரும் வளர்ந்துட்டாங்க. இவங்க எல்லாரையும் சின்ன வயசுலேருந்து வளர்த்தது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. எப்பவும் அழுகைச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அம்மா, அப்பா இறந்துட்டாங்கங்கிறதைப் புரிஞ்சுக்கிற வயசு இல்லை. எதை, எதையோ சொல்லி சமாதானப்படுத்தணும். 'அம்மா, அப்பா ஊருக்குப் போயிருக்காங்க’னு முழுப் பொய்யும் சொல்ல முடியாது. ஏன்னா, குழந்தைங்கள்ல விவரம் தெரிஞ்சவங்களும் இருந்தாங்க. அதுவும் போக, வீட்டைவிட்டு வெளியில் போனா, சுனாமி பாதிப்பு இல்லாத குடும்பமே கிடையாது. அதனால் உண்மைகளைச் சொல்லித்தான் வளர்த்தோம். எல்லார் மனசுலயும் சோகமும் வெறுமையும் நிறைஞ்சுருக்கும். திடீர்னு மன அழுத்தத்துக்கு ஆளாகிடுவாங்க. அதைப் புரிஞ்சு அவங்களை வழிநடத்தணும். நிறைய செலவுகள். சாப்பாடு, டிரெஸ்... எல்லாத்துக்கும் எங்க சம்பளப் பணத்தைச் செலவு செய்வோம். ரெண்டு பேரும் வேலைபார்த்ததால், சமாளிக்க முடிஞ்சது. வெளிய இருந்தும் சில உதவிகள் கிடைச்சது. 'இவங்களுக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை?’னு பலர் சொன்னாங்க. நாங்க அதைக் கண்டுக்கலை. சுனாமி பாதிப்பைப் பார்வையிட வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் என்னைக் கூப்பிட்டுப் பேசிய பிறகுதான் எல்லாரும் எங்களைக் கவனிச்சாங்க. இந்த இல்லத்துல தங்கிப் படிக்கிற பசங்க, சுயமா சொந்தக் காலில் நிற்கும் வரை நாங்களே எல்லா உதவிகளும் செய்றோம். ஒருசில பசங்க படிச்சுட்டு வேலைக்கும் போக ஆரம்பிச்சுட்டாங்க. மத்தவங்களை எங்களால முடிஞ்ச அளவுக்குப் படிக்கவெச்சு, வேலை வாங்கித் தர்றோம்.
அன்னைக்கு வந்த சுனாமி எங்க மூணு பிள்ளைங்களின் உயிரைப் பறிச்சது. அதுக்குப் பதிலா 38 பிள்ளைகள் இங்கே வளர்கிறார்கள்.  ஒருவேளை அன்னைக்கு நாங்க தற்கொலை செஞ்சிருந்தா, இவங்கள்லாம் எங்கே, என்ன பண்ணிட்டு இருப்பாங்கனு யோசிக்கவே முடியலை. சுனாமிக்குப் பிறகு எங்க வாழ்க்கை சூன்யம்னு நினைச்சோம். ஆனா, அதுக்கு அர்த்தம் கிடைச்சது இந்தப் பிள்ளைங்களால் தான்!'' - குழந்தைகளை அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் பரமேஸ்வரன்.
அதே கடல்தான்... அதே இல்லம்தான்... இப்போது அந்த இல்லத்தின் பெயர் நம்பிக்கை!

No comments:

Post a Comment