Sunday, December 21, 2014

அந்த நாள்... - 9

- Vikatan

அந்த நாள்... - 9
டி.அருள் எழிலன்
படங்கள்: உ.பாண்டி, கே.குணசீலன்
ந்த ஒற்றைக் கொலை, தமிழகத்தையே அதிரச் செய்தது. அதுவும் அது திட்டமிட்ட கொலையும் அல்ல; கொலை செய்யப்பட்டவர் பிரபலமானவரும் அல்ல. ஆனால், நாத்திகக் கருத்துக்களைத் தீவிரமாகப் பிரசாரம்செய்து, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் தி.மு.க கோலோச்சிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், மன்னார்குடியின் பிரமாண்ட ராஜகோபால சுவாமி கோயிலில் மூலவர் வாசுதேவப் பெருமாள் பார்த்திருக்க, செங்கமலத் தயாரின் மூலஸ்தானத்திலேயே அந்தக் கோயிலின் குருக்கள் கொல்லப்பட்டதே அந்தப் பேரதிர்ச்சிக்குக் காரணம்!
'இது நாத்திகர்களின் அரசு என்பதால், கோயில் குருக்களுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை’ எனக் கொலை வழக்கு அரசியல்ரீதியாக விஸ்வரூபம் எடுத்தது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து, சடசடவென ஆறே மாதங்களில் வழக்கை நடத்தி முடித்து, கோயில் குருக்களைக் கொன்ற பெரியகருப்பனுக்குத் தூக்கும், கோயில் நகைகளைக் கொள்ளையடித்ததற்காக வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தூக்கு உறுதியானது. கடைசி நம்பிக்கையான ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, மறுநாள் விடியலில் தூக்கு மேடை ஏறக் காத்திருந்தார்  பெரியகருப்பன். ஆனால், ஒரு திருப்பத்தில் அந்தத் தூக்கு ரத்து ஆனது! பல வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான வீரபாண்டியன் இறந்துவிட, இப்போது கமுதியில் பணியாரம் விற்றுக்கொண்டிருக்கிறார் பெரியகருப்பன். குழி விழுந்த கன்னம், மெலிந்த தேகம் என, வாடி வதங்கியிருக்கிறார் பெரியகருப்பன். ஆனால், அவரின் மீசை மட்டும் கம்பீரமாக முறுக்கி நிற்கிறது. நான்கு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்துவிட்டு மனைவியோடு கமுதியில் வாழ்கிறார். இவரது தூக்கு ரத்து ஆனதுதான் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு முன்மாதிரி. அந்த நாட்களில் அப்படி என்னதான் நடந்தது? ஆரம்பம் முதல் கதை சொல்லத் தொடங்கினார் பெரியகருப்பன்.
''கமுதிதான் எனக்குப் பூர்வீகம். வீட்ல வறுமை. அதுக்காக திருடுற அவசியம் எதுவும் இல்லை. படிப்பும் மண்டையில ஏறலை. மெட்ராஸ்ல ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலைபார்த்தேன். ஆனா, மெட்ராஸ் பிடிக்கலை. திரும்ப கமுதிக்கு வந்து இன்னொரு பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் அத்தை மக அழகா இருப்பா. ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன். வரிசையா ரெண்டு பொண்ணுங்க பொறந்தாங்க. மூணாவது பிள்ளை நாலு மாசமா கர்ப்பமா இருந்தப்போ, என் மச்சான் வீரபாண்டியன் வந்து 'தஞ்சாவூருக்குப் போய் அரிசி வியாபாரம் பண்ணலாம். வாடா...’னு கூட்டிட்டுப் போனார்.
தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், மன்னார்குடினு பல ஊர்களைச் சுத்தினோம். ஆனா, எல்லா ஊர்கள்லயும் கோயில்களுக்கு மட்டுமே கூட்டிட்டுப் போனார். 'மச்சான்... அரிசி வியாபாரம்னு சொல்லிட்டு, கோயில் கோயிலா சுத்துறியே!’னு கேட்கிறப்பலாம், 'வாயை மூடிட்டுப் பேசாம வாடா’னு சொல்வார். மூணு வேளை நல்லா சாப்பிட்டு கோயில், குளம்னு சுத்திட்டு நல்லாத் தூங்கினோம். பல  கோயில்களைச் சுத்திப் பார்த்துட்டு கடைசியில மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்குப் பக்கத்துல ரூம் போட்டுத் தங்கினோம். தினமும் காலையில குளிச்சு முடிச்சதும், கோயிலுக்குப் போயிருவோம். பயபக்தியா சாமி கும்பிடுவோம். சீனிவாசக் குருக்கள் நீட்டுற ஆராதனை தட்டுல எல்லோரும் சில்லறை காசு போடுவாங்க. என் மச்சான் மட்டும் 10, 20, 50-னு ரூபாய் நோட்டு போடுவார். அப்படி அதிக காணிக்கை போட்டு பயபக்தியோடு சாமி கும்பிட்டதால, குருக்களுக்கு எங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. செங்கமலத் தாயார் சந்நிதிக்கு நாங்க போனா ராஜமரியாதை கிடைக்கும். திரையை விலக்கி உடனடி தரிசனம் கிடைக்கும். இப்படியே நாளும் பொழுதும் போயிட்டு இருந்தது.
திடீர்னு ஒருநாள், 'அம்பாளுக்குப் போட்டிருக்குற நகைகளைப் பாத்தியாடா. உனக்கு என்ன தோணுது?’னு மச்சான் கேட்டார். 'பணக்கார அம்பாள்போல மச்சான். நம்பவே முடியலை’னு சொன்னேன். 'டேய்... அந்த நகைகளைக் கொள்ளையடிக்கப் போறோம்டா. அதுக்குத்தான் இத்தனை நாளா அந்தக் குருக்களோடு பழகினேன். இப்போலாம் நாம போன உடனே சீனிவாச குருக்கள் உற்சாகமாயிடுறார் பார்த்தியா... நீ என்ன சொல்ற?’னு கேட்டார். நான் 'சரி’னு மட்டும் சொன்னேன்'' என்றவர் பேசுவதை நிறுத்திவிட்டு தோள்களைச் சிலுப்பிக்கொண்டார்.
அதிகாலையில் கோயிலுக்குச் சென்று குருக்களிடம் அவசரமாக சுவாமியைத் தரிசிக்க வேண்டும் எனக் கேட்பது, குருக்கள் கர்ப்பக்கிரகத்தைத் திறந்ததும் அவரைக் கட்டிப்போட்டுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது, அந்த நகைகளை உடனடியாக உருக்கி விற்பது... இதுதான் வீரபாண்டியனின் கோயில் கொள்ளைத் திட்டம். இதற்குத்தான் பெரிய கருப்பனைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். 31 நாட்கள் மன்னார்குடி அஜந்தா லாட்ஜில் தங்கி நோட்டம் பார்த்த பிறகு, மீண்டும் கமுதி வந்து பெரிய சாட்டைக் கயிறு ஒன்றையும், கொஞ்சம் துணிகளையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மன்னார்குடி சென்றனர் இருவரும். திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்துக் காத்திருந்தனர். அந்த நாள் வந்தது!
''அன்னைக்கு அதிகாலையிலயே கோயில் குருக்கள் சீனிவாச தீட்சிதர் வீட்டுக்கே போய், 'வியாபார விஷயமா அவசரமாக வெளியூர் போறோம். அதுக்கு முன்னாடி அம்பாள் ஆசியும் தரிசனமும் வேணும்’னு சொன்னோம். கர்ப்பக்கிரகத்துக்கு ரெண்டு சாவிகள். அதுல ஒண்ணு குருக்கள்கிட்ட இருக்கும். இன்னொண்ணு அறநிலையத் துறை அதிகாரியிடம் இருக்கும். குருக்கள் போய் அந்த அதிகாரிகிட்ட இருந்து சாவியை வாங்கிட்டு வந்தார். அப்படி அவர் வர்றப்போ பொலபொலனு விடிஞ்சிருச்சு. கோயிலைத் திறந்து திரையை விலக்கி செங்கமலத் தாயாருக்கு அவர் அலங்காரம் பண்ண ஆரம்பிச்சார். அப்போ வீரபாண்டியன் கண்ணைக் காட்ட நான் குருக்களைக் கட்டிப்போடுறதுக்காக கயிற்றோடு அவரை நெருங்கினேன். ஆனா, அவர் சட்டுனு 'என்ன நடக்குது?’னு சுதாரிச்சு  என்னைக் கீழே தள்ளிவிட்டார். அவர் என்னைவிட வலு. 'ஐயோ... குருக்கள் சத்தம் போட்டா காரியம் கெட்டுருமே’னு நான் பக்கத்துல இருந்த அரிவாளை எடுத்து குருக்களோட கழுத்திலும் தலையிலும் வெட்டினேன். அம்பாள் கர்ப்பக்கிரகத்துலயே சரிந்து விழுந்தார் சீனிவாச தீட்சிதர்.
நான் குருக்களை வெட்டிட்டு இருக்கும்போதே, வீரபாண்டியன் நகைகளை அள்ளி பையில போட்டுட்டுத் தப்பிச்சு ஓடிட்டார். நான் ரத்த வெள்ளத்தில் துடிச்சுட்டு இருந்த குருக்களை ஓரமா ஒதுக்கிட்டு, கர்ப்பக்கிரகத்தை திரையைப் போட்டு மூடினேன். ஆனா, அப்பவே சிலர் சாமி கும்பிட வந்துட்டாங்க. நான் கோயிலைவிட்டு வெளியேறும் போது, பக்தர்கள் என்கிட்ட  'குருக்கள் எங்கே?’னு கேட்டாங்க. 'அவர் விஷேச பூஜையில இருக்கார். போயிட்டு அப்புறம் வாங்க’னு சொல்லிட்டு கோயில் கதவை நெருங்கிட்டேன். அப்ப, 'அய்யோ... குருக்களை யாரோ வெட்டிப் போட்டிருக்காங்க’னு ஒருத்தர் கத்திட்டார். உடனே காவலாளி கோயில் கதவை மூடிட்டார். நான் என்ன பண்றதுனு தெரியாம அரிவாளால அவரையும் வெட்டிட்டு மெயின் ரோட்டுக்கு ஓடினேன். வெளியே வந்ததும் எனக்கு எதுவுமே தெரியாத மாதிரி மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். ஆனா, என் சட்டையில பின்னாடி சிதறியிருந்த ரத்தத்தைக் கவனிக்கலை. குருக்களை வெட்டிய தகவல் பரவிட்டதால, ரத்தக்கறை சட்டையோட நடந்துவந்துட்டு இருந்த என்னை, ஒரு போலீஸ்காரர் ஓடிவந்து பிடிச்சார். நான் அவரைத் தள்ளிவிட்டுட்டு ஓடினேன். துப்பாக்கியால் சுட்டார். வயித்துல குண்டு பாய்ஞ்சு கீழே விழுந்துட்டேன். கைது பண்ணி மன்னார்குடி மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. கோயில் குருக்களைக் கொன்று நகைகளைக் கொள்ளையடிச்சதா என்னை முதல் குற்றவாளியாவும், வீரபாண்டியனை ரெண்டாவது குற்றவாளியாவும் பதிஞ்சு வழக்கு போட்டாங்க!'' என்று நிறுத்தி பெருமூச்சு விடுகிறார் பெரியகருப்பன்.
நகைகளோடு தப்பிச்சென்ற வீரபாண்டியன் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே அவற்றைப் புதைத்துவிட்டு சென்னைக்குத் தப்பிச் சென்றார். 11 நாட்கள் கழித்து ராயப்பேட்டையில் அவரைக் கைதுசெய்து பின்னர் நகைகளை மீட்டிருக்கிறது போலீஸ்.    
''எனக்கு இலவச வக்கீலாக வாதாடியவர் முகம்மது சாலி; வீரபாண்டியனுக்கு வி.எஸ்.ராமலிங்கம்; நீதிபதியாக இருந்தவர் ஒரு கிறிஸ்தவர்; வழக்கை விசாரித்த காவல் துறை தலைவர் அருள் ஒரு கிறிஸ்தவர்; அப்ப முதலமைச்சரா இருந்த கருணாநிதியோ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இவ்வளவு பின்னணிகளோடு அந்த வழக்குக்கு மதச்சாயம் பூசினாங்க. 'நாத்திகர்களால் குருக்களுக்கும் கோயில் நகைகளுக்கும் பாதுகாப்பு இல்லை’னும் அப்ப பிரசாரம் பண்ணாங்க. இதனால் அரசுத் தரப்பு எங்களுக்கு எதிரா மிகக் கடுமையாக நீதிமன்றத்தில் வாதாடினாங்க. ஆறே மாசத்துல எனக்குத் தூக்குத் தண்டனையும், வீரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் கொடுத்து தீர்ப்பு வந்தது. எனக்குத் தூக்குனு தீர்ப்பு வந்த அன்னைக்கு ராத்திரி, என் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. 'சத்யா’னு பேர் வெச்சோம்!''
இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடுகள் பலன் அளிக்கவில்லை. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட, அதில் இருந்து ஏழு நாட்களுக்குள் சென்னை சென்ட்ரல் சிறையில் தூக்கிலிடப்பட காத்திருந்தார் பெரியகருப்பன்.
''கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்கனு தகவல் வந்ததும் எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சு. எதுவும் சாப்பிடப் பிடிக்கலை. செய்யக் கூடாத ஒரு தப்பு பண்ணிட்டு பிள்ளைகளையும் சம்சாரத்தையும் தவிக்க விட்டுட்டுப் போறோமேனு அழுதுட்டே இருந்தேன். முன்னாடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன், தோழர் ஜீவா போன்றவர்கள் தலைமறைவா இருந்தபோது அவங்களுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செஞ்சிருக்கேன். அந்த அறிமுகத்தில் என்னைத் தூக்கில் இருந்து காப்பாத்தச் சொல்லி தா.பாண்டியனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் எனக்காக சில வழக்கறிஞர்களை வெச்சு உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். 'பெரியகருப்பனின் கருணை மனு மீது முடிவெடுக்க நான்கு ஆண்டுகள் காலதாமதம் ஏன்?’ அப்படினு கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், என் தூக்குக்குத் தடை விதிச்சது. 'விடிஞ்சா செத்துருவோம்’னு நினைச்சுட்டு நான் தூங்காம இருந்தேன். அப்போ அதிகாலை 2.30 மணிக்கு சிறை அதிகாரிக்கு என் தூக்குக்குத் தடை உத்தரவு வந்தது. கடைசி நிமிஷத்துல நான் பிழைச்சேன்!'' - அந்த இரவின் பதற்றத்தை இப்போதும் பிரதிபலித்தன அவரது வார்த்தைகள்.
கருணை மனு மீது முடிவெடுக்க காலதாமதம் ஆனதைக் காரணம்காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியும் என்ற நடைமுறைக்கு தமிழகத்தில் முன்னுதாரணம் ஆனது பெரியகருப்பனின் வழக்குதான். பின்னர் ஆயுள் கைதியாக சிறையில் காலம் கழித்த பெரியகருப்பன், மொத்தம்                 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆனார்.
''27 வயசுல ஜெயிலுக்குப் போயிட்டு 41 வயசுல வெளியே வந்தேன். இப்பவும் என் மனைவி, பிள்ளைகளைத் தவிர என் குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் என்னை ஒரு மனுஷனாக்கூட ஏத்துக்கலை. அதையும் மீறி இப்ப ஏன் நான் இதையெல்லாம் பேசுறேன்னா, அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, இறைவன் படைச்ச உயிரை எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதுக்காக என்னைக்காவது அந்த குருக்களின் வாரிசுகளிடம் நான்  மன்னிப்பு கேட்கணும். ரெண்டாவது திருட்டை சாகசம் நிறைஞ்ச ஒரு தொழிலாக யாரும் நினைக்கக் கூடாது. இன்னொருத்தவங்க உழைச்சு சம்பாதிச்ச காசை களவாடுறது மாதிரியான பாவம் வேற எதுவும் இல்லை!'' என்று சொல்லிக்கொண்டே முறுக்குமீசையைத் தடவிக்கொடுக்கும் பெரிய கருப்பன் நிலைகுத்திய பார்வையுடன் அமர்ந்திருந்தார். சட்டெனக் கலைந்து  தன் மனைவி சுட்டுவைத்த பணியாரங்களை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்குக் கிளம்புகிறார்.

எப்படி இருக்கிறார்கள் சீனிவாச தீட்சிதரின் வாரிசுகள்?
சீனிவாச தீட்சிதர் கொல்லப்பட்ட பின், அவரது மகன் ராமானுஜ தீட்சிதர் கோயில் குருக்கள் ஆனார். 80 வயதை எட்டிய ராமானுஜரும், அவரது மகன் வெங்கடேச தீட்சிதரும்தான் இப்போது மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலின் குருக்கள்.  
''தாத்தா கொலை செய்யப்பட்டப்போ எனக்கு மூணு வயசு. தாத்தாவைக் கொலை பண்ணவங்களைப் பத்தி அப்பவே நாங்க எதுவும் சொல்லலை. ஏன்னா எது சரி, எது தப்புனு புரியாம அந்தத் தப்பைச் செஞ்சுட்டாங்க. அதனால நாங்க அவங்களை மன்னிச்சு விட்டுட்டோம். அவங்களும் எங்கேயாவது நல்லபடியா வாழ்ந்தால் போதும்'' என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.
''பெரியகருப்பன் உங்களைச் சந்தித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறார். நீங்கள் அவரைச் சந்திப்பீங்களா?'' என்று அவரிடம் கேட்டால், ''வேண்டாம். அது முடிஞ்சுபோன கதை. இனிமே அவரைச் சந்திச்சு என்ன ஆகப்போகுது? அவர் நல்லபடியா வாழ்ந்தா,  அதுவே போதும்'' எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment