Sunday, December 21, 2014

அந்த நாள்... - 8

- Vikatan

14 வருடங்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் கிடையாது. அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான தண்ணீரை மாநகராட்சிதான் விநியோகம் செய்தது. அங்கு கோலோச்சிய அரசியல் ரௌடிகள் சிலர் குடிதண்ணீரை விலைவைத்து விற்றனர். அப்போது, அந்தப் பகுதியின் கவுன்சிலராகத் தேர்வானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி. பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். தண்ணீருக்காக உள்ளூர் யுத்தத்தில் ஏற்பட்ட முதல் பலி லீலாவதி. அன்று என்ன நடந்தது?
முன்கதையோடு முழு விவரமும் சொல்கிறார் லீலாவதியின் கணவர் குப்புசாமி. இவர் தன் மனைவியின் மரணத்துக்குப் பிறகு வில்லாபுரத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது பித்தளைப் பட்டறை ஒன்றை நடத்திவருகிறார்.
''எனக்கும் லீலாவதிக்கும் மதுரைதான் பூர்வீகம். 1977-ல் கல்யாணம் ஆச்சு. அப்போ நான் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் தீவிரமா இருந்தேன். லீலாவதிக்கு வீட்ல நெசவு வேலை. அப்போ நான் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகியா இருந்தேன். அந்தச் சங்கத்தில் பெண்களின் பங்களிப்பும் தேவைனு கட்சி முடிவெடுத்தது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரா லீலாவதியைச் சேரவெச்சேன். அப்புறம் தோழர்கள் அவங்கவங்க உறவினர்களைச் சேர்த்தாங்க. அப்படித்தான் பொது வாழ்க்கைக்கு வந்தார் லீலாவதி.
பிறந்தது முதலே வறுமையில் வளர்ந்த லீலாவதிக்கு, இயல்பாகவே ஏழைகள் மீது கரிசனம் இருந்தது; அவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறிக்கிறவங்க மீது கோபம் இருந்தது. பெரும்பாலும் கட்சி வேலை. மத்த நேரம் கைத்தறி நெசவுனு போச்சு எங்க வாழ்க்கை. சாதாரணப் பள்ளியில்தான் பிள்ளைகளைப் படிக்கவெச்சோம். வீட்டுக்குள் வறுமை. ஆனா, வீட்டுக்கு வெளியே லீலாவதியின் செல்வாக்கு பெருகுச்சு. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் அவரைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆக்கியது. கைத்தறி நெசவாளர் மாநில சம்மேளனத்தின் துணைத் தலைவர் பதவி வந்துச்சு. முக்கியமா வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெரும் அளவு சம்பாதிச்சார் லீலாவதி. அது நல்லதுக்கா, கெட்டதுக்கானு தெரியாம அப்போ சந்தோஷப்பட்டோம்!'' என்கிற குப்புசாமியின் குரல்  மௌனமாகிறது.
1996-ல் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மூன்றில் ஒரு பங்குத் தொகுதிகள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டன. அப்போது தமிழகத்தில் இருந்த கட்சிகளில் தலைமை தொடங்கி கீழ்நிலைத் தலைவர்கள் வரை அனைவரும், பெண்களுக்கான தொகுதியில் அவரவர் வீட்டுப் பெண்களைக் களம் இறக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் மக்களிடையே செல்வாக்கோடு இருந்த லீலாவதியை 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நிறுத்தியது. அதுவரை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை தேர்தல் வெற்றியின் மூலம் சி.பி.எம் கைப்பற்றியது. அது லீலாவதி என்ற தனிநபரின் செல்வாக்குக்குக் கிடைத்த வெற்றி. அப்போது வில்லாபுரம் பகுதி மக்கள் சந்தித்த பிரதான பிரச்னைகள் மூன்று... குடிநீர், ரேஷன் விநியோக முறைகேடு, அரசியல் ரௌடியிஸம்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகான நிலவரம் சொல்கிறார் குப்புசாமி. ''வில்லாபுரத்தில் கைத்தறித் தொழிலை நம்பி வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம். சிலர் அந்த வறுமையை வருமான வாய்ப்பா பாத்தாங்க. ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூலிக்கிறது, ரேஷன் கடை சாமான்களைக் கடத்துறது, குடிதண்ணிக்கு விலைவெச்சு விக்கிறதுனு ரௌடியிஸம் கொடி கட்டிப் பறந்தது. அப்போ வில்லாபுரத்தில் ஒரு நாள்விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலைவெச்சு விப்பாங்க. ஒரு குடம் தண்ணீர் 50 பைசாவில் தொடங்கி, இரண்டு ரூபாய் வரை விலைபோகும். ஹோட்டல்காரங்க தண்ணிக்கு நிறையக் காசு கொடுப்பாங்கனு, மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தண்ணியை அவங்களுக்கு வித்துடுவாங்க. அதிலும் வெயில் காலத்துல குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது. அப்பப்போ வர்ற லாரித் தண்ணியைப் பிடிக்க மக்கள் கூட்டம் அடிச்சுக்கும். இப்படி தண்ணீர்ப் பஞ்சத்தைச் செயற்கையா உண்டாக்கி, அப்புறம் தண்ணீரைக் கொள்ளைக் காசுக்கு வித்துட்டிருந்தாங்க. எப்பவும் ஊர் தண்ணீர்ப் பஞ்சத்துலயே இருக்கணும்னு, வில்லாபுரம் பகுதியில் அரசாங்கம் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைச்சுடாமப் பார்த்துக்கிட்டாங்க. ஏன்னா, குடிநீர்க் குழாய் வந்துட்டா மாநகராட்சி தண்ணீர் லாரியை எதிர்பார்த்து யாரும் காத்திருக்கத் தேவைஇல்லையே!
இந்த நிலைமையை எப்படியாவது மாத்தணும்னு லீலாவதி முடிவெடுத்தாங்க. வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும், தண்ணீர்த் தொட்டியும் அமைக்கணும்னு மதுரை மேயருக்கு மனுகொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாப் போராடினாங்க. மாநகராட்சிக் கூட்டத்தில் குரல்கொடுத்தாங்க. இப்படிப் பல போராட்டங்கள் காரணமா வில்லாபுரம் பகுதியில்  குடிநீர்க் குழாய்களை அமைக்கும் வேலையை ஆரம்பிச்சது மாநகராட்சி. குழாய் மூலம் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிஞ்சது. தண்ணீர் மக்களை நோக்கி நெருங்கி வர வர, லீலாவதியின் மதிப்பு மக்களிடம் அதிகரிச்சது.
இன்னொரு பக்கம் ஏரியா கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளைத் தட்டிக் கேட்டாங்க. தப்பு நடக்கும் ரேஷன் கடைகளைத் தீவிரமாக் கண்காணிச்சாங்க. ஏரியாவில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூலிப்பாங்க. அதனால் கோபத்தில் இருந்த வியாபாரிகள் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைச்சது. அது வரை அரசியல் செல்வாக்கோடு எல்லா அராஜகமும் பண்ணிட்டு இருந்த கும்பலுக்கு, லீலாவதியின் வேலைகள் பெரிய தடங்கலாச்சு. ஒட்டுமொத்த வருமானத்தையும் லீலாவதி காலி பண்றாங்கனு கடுப்பு. ஆனா அதைப் பத்தி கவலைப்படாம, 'என்ன பண்ணிடுவாங்க?’னு வழக்கம்போல வேலைபாத்துட்டு இருந்தோம். ஆனா, 'என்ன வேணா பண்ணுவாங்க’னு அப்போ எங்களுக்குத் தெரியலை'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார்.
''தொழிலாளர் தினத்துக்கு ஒரு வாரம் இருந்துச்சு. எங்க பகுதியில் அதை எப்படிக் கொண்டாடுறதுனு பேசிட்டு இருந்தோம். அன்னைக்கு புதன்கிழமை. காலையில எந்திரிச்சு டீ குடிச்சுட்டு தோழர்களைப் பார்க்கக் கிளம்புனேன். எண்ணெய் வாங்குறதுக்காக பக்கத்து மளிகைக் கடைக்குப் போனாங்க லீலாவதி. நான் கொஞ்ச தூரம் தள்ளி தோழர்களோடு பேசிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு, 'ஒரு பொம்பளையை வெட்டுறாங்க... வெட்டுறாங்க’னு அலறுனாங்க. என்ன... ஏதுனு ஓடி வந்தப்போ, 'தோழர்... உங்க மனைவியைத்தான் வெட்டிப் போட்டிருக்காங்க’னு சொன்னாங்க. எனக்கு கண்கள் எல்லாம் இருட்டிட்டு வந்தது. தெருவில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கக் கிடந்தா லீலாவதி. உயிர் பிழைச்சுடவே கூடாது, ஆஸ்பத்திரி தூக்கிட்டுப் போறதுக்குள்ள உயிர் போயிடணும்னு கழுத்துப் பகுதியிலேயே குறிவெச்சு வெட்டியிருக்காங்க. கண்ணு முன்னாடி துள்ளத்துடிக்க செத்துப்போயிட்டா என் மனைவி!'' -அந்த நாளின் நினைவுகள் அழுத்த, குரல் நடுங்குகிறது குப்புசாமிக்கு.
''ஆனா, என் மனைவியின் உயிரை எடுத்தவங்களால், அவங்களால் கிடைச்ச உரிமைகளைத் தடுக்கமுடியலை. லீலாவதி மரணம்தான் இந்தப் பகுதியில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துச்சு. லீலாவதி படுகொலை செய்தி பரவியதும் மதுரை ஸ்தம்பிச்சது. ஊர் முழுக்கப் பதற்றம். சுமார் 10 கி.மீ தூரம் வரை லீலாவதி இறுதி ஊர்வலம் நடந்துச்சு. வழி முழுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்னு அஞ்சலி செலுத்தினாங்க. எங்கே பார்த்தாலும் ஜனத்திரள். யாருமே சொல்லாமல் கடைகளை அடைச்சாங்க மதுரை வியாபாரிகள். பொதுமக்கள்கிட்ட இருந்து அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமப்போயிருந்தா, லீலாவதி சிந்தின ரத்தம் காய்றதுக்குள்ள வழக்கை இழுத்து மூடியிருப்பாங்க!''
லீலாவதி கொலை வழக்கில் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டனர். வில்லாபுரம் பகுதியில் தன் அரசியல் சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்த முத்துராமலிங்கம், அந்த வார்டு கவுன்சிலர் பதவிக்கு தன் தம்பி மனைவியை வேட்பாளர் ஆக்கினார். ஆனால், மக்கள் அபிமானத்தால் லீலாவதி வெற்றிபெற்றார். ஒரு கவுன்சிலராக லீலாவதியின் செயல்பாடுகள் முத்துராமலிங்கத்தை அரசியல்ரீதியாப் பாதித்திருக்கிறது. அதுவே லீலாவதியைக் கொலைக்கு வித்திட்டிருக்கிறது.
முதன்முதலாக கம்யூனிஸ்ட்டாக வில்லாபுரத்தில் வென்றவர் லீலாவதி. இன்று வரை அங்கு கம்யூனிஸ்ட்களைத் தவிர இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு காற்றோடு கலந்திருக்கிறது லீலாவதியின் தியாகம். வில்லாபுரம் பகுதிக்கு குடிநீர்க் குழாயில் முதலில் தண்ணீர் வந்தபோது, குடங்களில் தண்ணீர் பிடித்த மக்கள் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லவில்லை. லீலாவதி வெட்டிக்கொல்லப்பட்ட இடத்துக்குச் சென்று அந்தத் தண்ணீரை ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள். ஏனெனில், அந்தப் பகுதி மக்கள் அருந்தும் ஒவ்வொரு துளி நீரிலும் கலந்திருக்கிறது லீலாவதியின் ஆன்மா!

லீலாவதி கொலை வழக்கின் பின்னணி!
லீலாவதி கொலை வழக்கில் கருமலையன், முத்துராமலிங்கம், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் என, கைதுசெய்யப்பட்ட ஆறு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது மதுரை கீழ் நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் செல்ல, 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதிசெய்தது. 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளின்போது இவர்கள் அத்தனை பேரையும் மனித உரிமை ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட்களின் கடும் எதிர்ப்பையும் மீறி விடுதலைசெய்தது அப்போதைய தி.மு.க அரசு. மதுரை தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே அந்தச் சலுகை அளிக்கப்பட்டது என்கிற குமுறல் இன்னும் இருக்கிறது.  
''கம்யூனிஸ்ட்களின் முன்மாதிரி லீலாவதி!''
லீலாவதி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் மதுரை (தெற்கு) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை.
''10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த தோழர் லீலாவதி, மக்களின் அபிமானத்தைப் பெறுவது எப்படி, தேர்தல் வெற்றிக்குப்  பிறகு மக்களுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்பதற்கு முன்மாதிரி. எந்தப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து தனி மனுஷியாகப் போராடியிருக்கிறார். கவுன்சிலரான பிறகும்கூட கைத்தறித் தொழிலை விடாமல், அந்த வருமானம் மூலமே குடும்பத்தை நிர்வகித்தார். லீலாவதி மரணத்துக்குப் பிறகு வில்லாபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை ஆகிவிட்டது. அந்த வகையில் ஒரு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு லீலாவதி ஒரு முன்மாதிரியாக அமைந்துவிட்டார். தோழர் லீலாவதியின் மரணமும் தியாகமும் எங்களோடு இருக்கின்றன. நாங்கள் எப்போதும் தோழர் லீலாவதியோடு இருக்கிறோம்!''
லீலாவதி குடும்பம் இன்று...
லீலாவதி - குப்புசாமி தம்பதிக்கு கலாவதி, துர்கா, டான்யா... என மூன்று பெண் குழந்தைகள். அதில் மூத்தவர் கலாவதிக்கு அரசு வேலை கிடைத்து, திருமணம் முடித்து மதுரையில் வாழ்கிறார். துர்கா, கல்லூரி காலத்தில் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், குடும்ப வாழ்க்கை சிக்கல்களை உண்டாக்க, தற்கொலை செய்துகொண்டார். கடைசி மகள் டான்யா சென்னையில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

1 comment:

  1. இன்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதே தி.மு.க வோடு கூட்டணி அமைத்து, இந்து பெண்கள் சீவி சிங்காரிச்சு கோவிலுக்கு போவது நான் காமத்துக்கு தயார் என்பற்காக என்றெழுதிய மலையாள எழுத்தாளனை அரவணைத்து பாராட்டிய எழுத்தாளார் வெங்கடேசன் கம்யூனிஸ்ட கட்சி சார்பாக.. கொலைக் கழகத்தினர் கூட்டோடு. வெட்கம், மானம், ரோஷம் கெட்ட இந்திய கம்யூனிஸ்ட், கழக, காங்கிரஸ் தேச விரோத கூட்டணிகள்..

    ReplyDelete