Sunday, December 21, 2014

அந்த நாள்... - 6

முந்தைய நாள் உலைகளில் கொதித்த சாராயம், மறுநாள் சூளகிரி சுற்றுவட்டாரத்தைச் சுடுகாடு ஆக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை! தமிழ்நாடு - கர்நாடகா எல்லையை ஒட்டி, அன்றைய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சூளகிரி ஒன்றியத்தில், 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த விஷச் சாராய சாவுகள்... இரு மாநிலங்களையும் கதிகலங்கவைத்த கொடூரம்!
1998-ம் ஆண்டு நல்லகான கொத்தபள்ளி, சாமல்பள்ளம், பருவீதி, ஒசள்ளூர், குறும்புக்குட்டை, ஏனுசோனை, தின்னூர், கெட்டூர் கிராமங்களில் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் குடல்வெந்து இறந்தவர்களாக அரசாங்கம் சொன்ன எண்ணிக்கை 50. ஆனால், விஷச் சாராயம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை  இன்னும் அதிகம்.
நல்லகான கொத்தபள்ளி கிராமத்தில் மட்டும் 18 பேர் பலியாகி இருந்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னியம்மாள், அந்த விஷச் சாராய சாவில் தன் கணவர் ராஜேந்திரனைப் பறிகொடுத்தவர்.
''அவருக்கு மூணு மனைவிங்க. மூத்தவங்க இறந்த பிறகு இரண்டாம் தாரமும் அப்புறம் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டார். சம்பவம் நடந்தப்போ என் மூத்த பொண்ணுக்கு ரெண்டு வயசு. ரெண்டாவது குழந்தை மீனாட்சி பிறந்து 22 நாள் ஆகியிருந்துச்சு. வழக்கம்போல அன்னைக்கு அவர் சாராயம் குடிச்சிட்டு வந்து சலம்பிட்டே தூங்கிட்டாரு.
காலையில் ரொம்ப நேரமா எந்திரிக்கல. மெதுவா எந்திரிச்சவரு, 'அய்யோ... எனக்குக் கண்ணு தெரியலை’னுதான் முதல்ல குரல்கொடுத்தாரு. என்ன ஏதுன்னே புரியலை. கொஞ்ச நேரத்துல 'வயிறு வலிக்குது’னு துடிச்சாரு. ஓசூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனோம். அங்கே என்ன ஏதுனு விசாரிச்சுட்டு இருந்தப்பவே, எங்க ஊர்க்காரங்க சிலர் அதேமாதிரி 'கண்ணு தெரியலை... வயிறு எரியுது’னு வரிசையா வந்தாங்க. உடனே சுதாரிச்சுட்டு, 'சாராயம் குடிச்சீங்களா, ஊர்ல எத்தனை பேர் குடிச்சாங்க?’னு கேட்டாங்க. திமுதிமுனு அந்த இடமே  கலவரமாப்போச்சு. என் புருஷன் வயித்துவலி தாங்காமத் துடிதுடிச்சு மத்தியானம் செத்துட்டாரு. எங்க ஊர்ல இருந்து வந்தவங்களும் வரிசையா அடுத்தடுத்து செத்தாங்க. ஊரே பொணக்காடாப் போச்சு. தினம் குடிச்சாலும் ஒருநாள்கூட அவர் வேலைக்குப் போகாம இருந்தது இல்லை. இளநீர் வித்தோ, விவசாயக் கூலி வேலைபார்த்தோ எங்களைக் கௌரவமாப்  பார்த்துக்கிட்டாரு. அவர் இறந்துட்ட பிறகு கூலி வேலைக்குப் போய் என் ரெண்டு பொண்ணுங்களையும் படிக்கவெச்சேன். மூத்தவ ப்ளஸ் டூ; இளையவ ஒம்போதாப்பு வரை படிச்சாங்க. ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை பார்க்கும்போது, 'படிக்கலைன்னாகூடப் பரவாயில்லை... குடிக்கக் கூடாது’னு சொன்னேன். தேடித் தேடி குடிக்காத மாப்பிள்ளைகளா புடிச்சேன். இப்போ என் பொண்ணுங்களைத் தங்கமாப் பார்த்துக்கிறாங்க. அதுதான் என் வாழ்க்கையில ஒரே நிம்மதி'' எனப் பெருமூச்சுடன் பெரும் சோகம் சொல்கிறார் கன்னியம்மாள்.
சூளகிரி ஒன்றியத்தில் உள்ள இரப்பன்பேல், எப்பளம் பகுதிகளில் உற்பத்தியாகும் சாராயம், ஏரியாவாரியாகப் பிரிக்கப்பட்டு  ஏஜென்ட்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகி வந்தது. அதில் எப்பளம் பகுதியின் சாராயச் சக்கரவர்த்தி செல்வத்தின் சாராயத்துக்கு கிராக்கி அதிகம். செல்வத்தின் சாராயம் சூளகிரியையும் தாண்டி கிருஷ்ணகிரி, ஓசூர், பாலகோடு, தேன்கனிக்கோட்டை வரை பரந்து விரிந்து பாய்ந்தது. சப்ளையர்கள், அவர்களுக்குக் கீழே ஏஜென்ட்கள், சில்லறை வணிகர்கள், சாராய சப்ளைக்கு 53 மொபெட்டுகள், புல்லட்கள், சைக்கிள்கள், வாகனங்கள் நுழைய முடியாத மலைப் பகுதிகளுக்கு கழுதைகள்... எனத் தெளிவான திட்டங்களோடு இண்டு இடுக்குகளில் எல்லாம் சாராயத்தைச் சேர்த்திருந்தார்கள். கர்நாடகாவில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகளில் முறைகேடாக பெட்ரோல், ஸ்பிரிட் எடுப்பது சாராய வியாபாரிகளின் வாடிக்கை. சாலையில் பழுதாகி நின்ற ஒரு வாகனத்தில் இருந்து,  35 லிட்டர் அளவுக்கு ஸ்பிரிட்டைத் திருடி சாராயம்  தயாரித்திருக்கிறார்கள். அதுதான் சூளகிரி பகுதியை அப்போது சுடுகாடு ஆக்கிவிட்டது.
''அன்னைக்கு நடந்தது இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. முதல் நாள் சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்த எங்க வீட்டுக்காரர் காலையில் எந்திரிக்கவே இல்லை. ஹெல்த் இன்ஸ்பெக்டர் வந்து, 'ஊர்ல யாராவது சாராயம் குடிச்சவங்க இருந்தீங்கன்னா, உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்புங்க. உங்க ஊர்ல சிலர் சாராயம் குடிச்சிச் செத்துப்போயிட்டாங்க’னு  அறிவிச்சாங்க. நான் உடனே என் புருஷனை எழுப்பி, 'அவருக்கு எதுவும் ஆகக் கூடாது’னு வேண்டிக்கிட்டே, ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சேன். டாக்டர் அவரைப் பரிசோதிச்சுட்டு 'குடல் வெந்துருச்சு. பிழைக்கிறது கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. சாயங்காலமே என் வீட்டுக்காரர் செத்துட்டார். அப்போ ஓசூர் ஆஸ்பத்திரியில எங்கே பார்த்தாலும் யாராவது ஒருத்தரை தரையில பொணமாப் போட்டுவெச்சிருந்தாங்க. பொண அறை முழுக்க நிறைஞ்சுபோச்சு'' என்று தன் கணவர் மரணம் அடைந்த துயரம் சொல்கிறார் சக்கரலம்மா.
''அப்போ ஒரு பாட்டில் குடிச்சவங்களுக்கு கண்ணு தெரியாமப்போய் சில மாசங்கள் இருந்து அப்புறம் செத்தாங்க. ரெண்டு பாட்டில் குடிச்சவங்க ஆஸ்பத்திரியில செத்தாங்க. மூணு பாட்டில் குடிச்சவங்க ராத்திரி படுத்து காலையில் எந்திரிக்கவே இல்லை. இப்படி இந்த ஊர்ல அன்னைக்கு சாராயம் குடிச்சவங்க யாரும், இப்போ உயிரோடு இல்லை. ஏன்னா, அது சாராயம் இல்லை... விஷம்; ஒவ்வொரு சொட்டும் விஷம்!'' என்று இன்றும் அன்றைய தவிப்புடன் பேசுகிறார் திம்மராயப்பா.  
''இந்த ஊர்ல மிலிட்டரி பெருமாள்னு ஒருத்தர் இருந்தார். அவர் மிலிட்டரியில் இருந்து ரிடையர்டு ஆன பிறகு, சாராயம் வாங்கி வித்தார். எங்க ஊருக்கு அவர்தான் சாராய ஏஜென்ட். சனம் முழுக்க அவர்கிட்டதான் சாராயம் வாங்கிக் குடிப்பாங்க. அன்னைக்கும் அவர்கிட்ட வாங்கிக் குடிச்சுத்தான் ஊரே செத்துச்சு. இதுல அவர் குடும்பமும் தப்பலை. அன்னைக்கு வித்த சாராயம் என்னைக்கும் இல்லாத ருசியா இருந்துச்சாம். 'ஏயப்பா... இன்னைக்கு சரக்கு சீக்கிரமே தீர்ந்திடும். இப்பவே கொஞ்சம் குடிச்சிக்கிடுங்க’னு சொல்லி அவர் மனைவி, மருமகள், மகன், மகள்னு மொத்தக் குடும்பத்தையும் குடிக்க வெச்சிருக்கார் பெருமாள். அவர் எதிர்பார்த்த மாதிரியே சாராயம் வேகமாக் காலியாகிருச்சு. ஆனா, பெருமாள் குடும்பத்தில் ஒருத்தர் பாக்கி இல்லாம, சாராயம் குடிச்ச எல்லாரும் இறந்துட்டாங்க!'' - அதிர்ச்சி கொடுக்கிறார்  திம்மராயப்பா.
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்று தருமபுரி மாவட்டம். தட்டுப்பாடின்றி ஒக்கேனக்கல் தண்ணீர் ஓடினாலும், தாழ்வான நிலத்தில் பாயும் அந்த வெள்ளத்தால், மேட்டுப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைப்பது இல்லை. கிருஷ்ணகிரியை ஒட்டிப் பாயும் தென்பெண்ணை ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியிருக்கிறது சூளகிரி ஒன்றியம். கனிம, குவாரிக் கொள்ளையர்கள் நிலத்தைக் குதறி எடுத்ததுபோக எஞ்சிய நிலத்தில் நடைபெறும் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள், பெரும்பாலான விவசாயக் கூலிகள்!
விஷச் சாராய சாவு வழக்கில் செல்வம் உள்பட 28 பேர் கைதுசெய்யப்பட்டார்கள். பல வருடங்கள் வழக்கு நடந்தது. எனினும் செல்வம் உள்பட ஒருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  சாட்சியங்களை வலுப்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும்விதமாக அரசு தரப்பு நடந்துகொள்ளாததன் விளைவாக உண்மை 'ஊத்தி’ மூடப்பட்டது!  
''பல கிராமங்களில் சாராயம் குடிச்சவங்க செத்துப்போறாங்கன்னு தகவல் வந்ததும் எங்க ஊர்லயும் தண்டோரா போட்டுச் சொன்னாங்க. வீடு வீடாப் போய் சாராயம் குடிச்சவங்களைத் தேடினப்போ, பலரும் செத்துக்கிடந்தாங்க. அப்போ ஆம்புலன்ஸ் கிடையாது. இவ்வளவு பேர் சாகிறதுக்கு அதுவும் ஒரு காரணம். எப்பவாது வரும் கவெர்மென்ட் பஸ்ஸில் ஏறித்தான் ஓசூர் போகணும். அப்படிச் சிலரை பஸ்ஸில் ஏத்தி ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்புனோம். ஆனா, பஸ் ஓசூருக்குப் போறதுக்கு முன்னாடியே பலரும் இறந்துட்டாங்க. பஸ்ஸை அப்படியே மார்ச்சுவரிக்குத்தான் ஓட்டிட்டுப் போனாங்க!'' என்கிறார் கெண்டப்பா.
அன்று சாராயம் குடித்தவர்களில் மிஞ்சியிருக்கும் வெகுசிலரில் பருவீதி வெங்கட்ராஜும் ஒருவர். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், மாலையில் இவருக்குக் கண்கள் தெரியாது.
''எனக்கு டீ காபி குடிக்கிற பழக்கம்கூட இல்லைங்க. ஆனால், சாயங்காலத்துல கொஞ்சம் சாராயம் குடிப்பேன். அன்னைக்கு ஒரு பாட்டில் சாராயம்தான் குடிச்சேன். அதுக்கே 15 நாள் ஆஸ்பத்திரியில் என்னை வெச்சிருந்தாங்க. என்னென்னமோ மருந்து எல்லாம் கொடுத்தும் கண் பார்வை மட்டும் பாதிச்சிருச்சு. சாயங்காலத்துல ரெண்டு கண்களும் தெரியாது. பலர் என்னை மாதிரி கண்ணு தெரியாம இருந்து கொஞ்ச நாட்கள்ல செத்துப்போனாங்க. இப்ப நான் சாராயம் குடிக்கிறது இல்லை. ஆனா, டாஸ்மாக் குவாட்டர் குடிக்கிறேன்!'' எனச் சிரிக்கிறார் வெங்கட்ராஜ்.
ஒவ்வோர் ஊரிலும் கணக்கில் வராத மரணங்களின் எண்ணிக்கை அதிகம். கிராமங்களில் விஷச் சாராயத்தால் சாவு எனத் தெரியாமலே பலரைப் புதைத்தார்கள். குறிப்பாக, சாராயம் குடித்து இறந்த பல பெண்களை, அவர்களது குடும்பத்தினர் போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமலே புதைத்தார்கள். ஆனால், இறந்த ஒவ்வொரு நபருக்கும் தலா 10,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதும், பிணங்களைத் தோண்டி எடுத்து 'சாராயத்தால் சாவு’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதில் பல பிணங்கள் கணக்கில் சேரவே இல்லை!
    
16 ஆண்டுகளுக்குப் பிறகு சூளகிரி பகுதி  இப்போது எப்படி இருக்கிறது?
அன்றே கொன்ற விஷச் சாராயத்தின் இடத்தை, 'நின்றுகொல்லும் டாஸ்மாக்’ கைப்பற்றியிருக்கிறது. நிஜ நிலவரம் சொல்கிறார் சமூக ஆர்வலர் முருகேசன்.
''1998-ம் ஆண்டு விஷச் சாராய சாவில் இறந்தவங்க பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைங்க. அதனால அவங்களுக்கு நிதியும் கிடைக்கலை; நீதியும் கிடைக்கலை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இந்தப் பகுதியில் வெளிப்படையான சாராய வியாபாரம் இல்லை. ஆனா, மெதுமெதுவா தெருவுக்குத் தெரு டாஸ்மாக் திறந்துட்டாங்க. சமீபத்தில்கூட சிலர் டாஸ்மாக்ல குடிச்சி சுருண்டு விழுந்து செத்துப்போனாங்க. காரணம், கடத்திக் கொண்டுவரப்படும் போலி மதுபான பாட்டில்கள். இந்தப் பகுதி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான தண்ணீர், கழிப்பிடம், பள்ளி போன்றவை  கேட்டு பல ஆண்டுகளாகப் போராடிட்டு இருக்கோம். ஆனா, அதையெல்லாம் யாரும் கண்டுக்கவே இல்லை. சாராயத்தை மட்டும் திகட்டத் திகட்ட ஊட்டுறாங்க!'' - முருகேசன் சொல்லிமுடிக்கும் சமயம், மாலை பரபரப்புக்கான எதிர்பார்ப்புடன் மினுங்கி மினுங்கி எரியத் தொடங்குகிறது உள்ளூர் டாஸ்மாக்கின் தட்டி விளக்கு!

''இன்று தக்காளி வியாபாரம் மட்டும்தான்!''
16 ஆண்டுகளுக்கு முன்பு சாராய வியாபாரியாக இருந்த 'சாராய செல்வம்’, இப்போது சூளகிரி ஏரியாவின் தக்காளி சப்ளையர். ஓசூர் பிரதான சாலையில் பிரமாண்ட தக்காளி மண்டி நடத்திவருகிறார் செல்வம். வெள்ளை வேட்டி, சட்டை, கழுத்தில் கொத்தாகத் தொங்கும் தங்கச் சங்கிலிகளும், கை விரலில் டாலடிக்கும் மெகா சைஸ் 'அம்மா’ மோதிரம், சுற்றி நிற்கும் ரத்தத்தின் ரத்தங்கள்... என அரசியலில் அலேக் வளர்ச்சி செல்வத்துக்கு.  
''என்னைப் பத்தி ஊருக்குள்ள விசாரிச்சுட்டு இருந்தீங்களாமே... என்கிட்டயே கேட்டிருக்கலாமே!'' என்று உற்சாகமாக வரவேற்றார். ''அப்போ எனக்குக்  கல்யாணம் ஆன புதுசு. கல்யாண களையில யாவாரத்தைச் சரியாக் கண்டுக்கலை. 'செல்வத்தை ஒழிக்க இதுதான் சமயம்’னு எவனோ காய்ச்சின சாராயத்தைக் குடிச்சு மக்கள் செத்துப்போன பழியை என் மேல போட்டுட்டாங்க. 13 மாசம் ஜெயிலில் இருந்தேன். 300 சாட்சிகளோடு வழக்கு நடந்தப்போ, 50 பேர் வரைக்கும் செத்துப்போயிட்டாங்க. மிச்சம் இருந்த 250 பேரில் ஒருத்தர்கூட, எனக்கு எதிரா சாட்சி சொல்லலை. நான் அந்த மக்களுக்குக் கெடுதல் பண்ணலை. அதனாலதான் நீதிமன்றம் என்னை விடுதலை பண்ணிச்சு. அதே மக்கள்தான் என்னை ஏனுசோனை பஞ்சாயத்துத் தலைவர் ஆக்குனாங்க. அடுத்து ஏனுசோனையைவிட பெரிய
பஞ்சாயத்தான சென்னப்பள்ளியில் போட்டியிட்டு அமோகமா ஜெயிச்சேன். எந்த சனங்களைக் கொன்னேன்னு என்னை ஜெயில்ல போட்டாங்களோ, அதே சனங்கதான் எனக்கு ஓட்டு போட்டாங்க. இப்பவும் சொல்றேன்... இந்த வேப்பனப்பள்ளி தொகுதியில் எனக்கு ஸீட் கொடுத்தா, நான் நிச்சயம் ஜெயிப்பேன். ஏன்னா, சுத்தியுள்ள 42 பஞ்சாயத்துகளிலும் என்னைக் கேட்காம ஒரு ஈ, காக்காகூட நுழைய முடியாது. எனக்கு அரசியல் செல்வாக்கு எல்லாம் கிடையாது. மக்கள் செல்வாக்கு மட்டும்தான்!'' எனப் பெருமிதமாகச் சொல்கிறார் இந்த முன்னாள் சாம்ராட்!

- Vikatan

No comments:

Post a Comment