Tuesday, December 27, 2011

விகடன் மேடை - வைகோ

த.சத்தியநாராயணன், சென்னை.
''விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடு கள் எப்படி இருக்கின்றன?''
 ''காலம்தான் உரைகல்லாக இருக்கும்!''
கருப்பம்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.
''உண்மையைச் சொல்லுங்கள். கோபாலபுரத்தில் சுதந்திரமாக உலவியது போல, போயஸ் தோட்டத்தில் உலவ முடிந்ததா?''
 ''தி.மு.க-வில் கடுமையாக உழைத்த வன் என்ற முறையில், நினைத்த நேரங்களில் கோபாலபுரத்துக்குச் சென்று இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்சியின் பொதுச் செயலா ளர் என்ற முறையில்தான் நான் போயஸ் தோட்டத்துக்குச் சென்று இருக்கிறேன். அப்போது, உரிய மரியாதையோடு நடத்தப்பட்டு இருக்கிறேன்!''

''இன்றைய இளம் நடிக, நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?''
 ''ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட விரும்பவில்லை!''
வி.சிஜேன் மாதவன், மயிலாடுதுறை.
''தங்களின் உடனடி இலக்கு... தமிழ் ஈழமா? சேது சமுத்திரத் திட்டமா? ஆட்சியைப் பிடிப்பதா?''
 ''அறமும் நெறியும் ஓங்கிய தொல் பழங்காலத் தமிழகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் இன்றைய சிதைவில்இருந்து மீட்டு எடுப்பது; தமிழகத்தின் வாழ்வாதாரங் களைக் காப்பது; ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பது; சாதி, மதப் பூசல் அற்ற மனிதநேயம் ஓங்கிட, மறுமலர்ச்சி பெறும் தமிழகம்; சுதந்திரத் தமிழ் ஈழ நாடு... இவையே என் இலக்குகள்!''
ஆ.பிரபு, சென்னை.
''எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்?''
 ''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்றுஎதை யும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும்!''
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
''திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுவது, உங்கள் பலவீனம் என்கிறார்களே?''
 ''வேறு எதுவும் சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம் இது.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
  புன்கண்நீர் பூசல் தரும்’

என்று  வான்மறையில் வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பிறரது துன்பத்தை, துயரைக் காண்கையில், எண்ணுகையில், என் கண்களில் நீர். ஆபத்துகளுக்கோ, மரணமே வந்திடுமோ என்ற அச்சத்துக்கோ, கலங்கியதும் இல்லை, கண்கள் கசிந்ததும் இல்லை!''
ஆ.பிரபு, சென்னை.
''அரசியலுக்கு வந்தது தவறு என்று எப்போதாவது வருத்தப்பட்டதுஉண்டா?''
 1993 அக்டோபர் 3-ல், கொலைப் பழி சுமத்தப்பட்டபோது வருந்தினேன்!''
கே.ஆண்டனி, நாகப்பட்டினம்.
''கூட்டணியைவிட்டு உங்களை ஜெயலலிதா வெளியேற்ற, உண்மையான காரணம் என்ன?''
 ''1998-ல் அண்ணா தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ (நீங்கள்தான் எனக்குப் போட்டியாளர்) என்று சொன்னார்.
நான் உடனே அதை மறுத்து, 'நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். நானோ, அரும்பி மலர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். என்னை ஏன் போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ என்றேன். 'உங்களுக்குத் தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ என்றார். அத்தோடு நான் அதை மறந்துவிட்டேன்.
2006 முதல் ஐந்து ஆண்டுகள், மிக உறுதியாக, நல்ல தோழமை வளர்ந்திட நான் செயல்பட்டும், ஆறு இடங்கள் என்று தொடங்கி, எட்டு இடங்கள் வரை சொல்லி அனுப்பியவர், அதற்கு மறுநாளே, திரு.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட் டையன் ஆகியோரை என் இல்லத்துக்கு அனுப்பிவைத்து, அந்த எட்டு இடங்களும் தர முடியாது; அதைவிடக் குறைவாகத்தான் தர முடியும் என்று தெரிவித்தபோது, என்னைப் புண்படுத்தி, அ.தி.மு.க-வுக்கு எதிராக அறிக்கைவிட வைப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு வார காலம் அமைதி காத்தேன்.
கூட்டணியைவிட்டு என்னை வெளியேற்று வதற்கு, உலகக் கோடீசுவரர்களுள் ஒருவர் நடத்துகின்ற தொழில் நிறுவனம் காரணம் என்று சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. தவறு செய்தால், தவறுகளையும், அநீதி களையும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் எதிர்த்துப் போராடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்து இருக்கலாம்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்களுக்குப் பிடித்த பேச்சாளர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்?''
 ''அண்ணாவின் பேச்சு, கல்கியின் எழுத்து; விஸ்வநாதன் - இராமமூர்த்தி, இளையராஜாவின் இசை; சுசீலா, ஜிக்கி, ஜானகி, டி.எம்.எஸ்., சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்; பத்மினியின் நாட்டியம்!''
வி.மருதவாணன், தஞ்சாவூர்.
 ''நாடாளுமன்றத்தில் முதன்முதலாக கன்னிப் பேச்சு பேசும்போது உங்களுக்கு நடுக்கம் இருந்ததா?''
 ''சட்ட மன்ற அனுபவம் ஏதும் இன்றி, நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு நிகழ்த்தியபோது, மனதில் ஒரு பரபரப்பும், எவ்விதத்திலாவது முத்திரைப் பதித்துவிட வேண்டுமே என்ற துடிப்பும் உள்ளத்தில் இருந்தது.
1978 ஏப்ரல் 26-ம் தேதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாகப் பாதித்து, வட மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டு இருந்த, குழந்தைகளின் உயிர் குடித்த மூளைக் காய்ச்சல் (என்செபாலிடீஸ்) நோய்க் கொடுமையைத் தடுக்க, மத்திய அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல், அந்நோய் நாடு முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது என்று பேசினேன். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முன்னிறுத்தி, ஆங்கில இலக்கியத்தில் வீரச் சிறுவன் கசாபியங்கா வெளிப்படுத்திய துணிச்சலையும், மரணத்தை எதிர்கொண்ட அவனுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஏற்றுக்கொண்ட கொள் கைக்காக, அவனைப் போல போராடுவேன் என்று பேசினேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் மனதாரப் பாராட்டியதும், இந்த உரையைத் தயாரிப்பதற்கு ஊக்கம் அளித்தவர் முரசொலி மாறன் என்பதும் மறக்க முடியாதவை!''
த.சத்தியநாராயணன், சென்னை.
நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் என்று கேள்விப்பட்டேன். அவர் நடித்த படங்களில், தங்களால் மறக்க முடியாத படம் எது?''
''பாசமலர்!''
க.ராமலிங்கம், பாபநாசம்.
''உங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தகுதியே, உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?''
''அளவுக்கு அதிகமான தகுதி எனக்கு இல்லை. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் முதல் இடம் பெற்றேன். பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றேன். கைப்பந்து, கூடைப்பந்து, கல்லூரி அணிகளில் இடம் பெற்றேன்.
தி.மு.கழகத்தில் உழைப்பதில், தொண்டு செய்வதில், மேடைக் கலையில் முத்திரை பதிப்பதில், சிறைச்சாலைக்கு முதல் ஆளாகச் செல்வதில், தொண்டர்களை நேசித்து அரவணைப்பதில், கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் வெற்றிபுரிக்குக் கொண்டுசெல்லத் துடிப்பதில் என் சக்திக்கு மீறி அர்ப்பணிப்புடன் இருந்தது என் இயல்பு.
1975 சேலம் தி.மு.க. மாநாடு; 78 திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாடு; 85 கடலூர் தி.மு.க. மாநாடு; இவற்றில் நான் ஆற்றிய உரைகள், மிகுந்த பாராட்டையும் தொண்டர்களிடம் எனக்கு ஈடற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
1987 வரை, எனது நாடாளுமன்றப் பணிகள் பாராட்டப் பட்டன. அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்டதற்காக, 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். எனினும், கட்சியின் நலன் மதிப்பைக் கருதி, அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினேன். நீதிமன்றத்திலும் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன் என்று தனியாக, பிரமாண வாக்குமூலம் கொடுத்தேன்.
1990 பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், பிற்பகல் 2 மணி அளவில் நான் உரை ஆற்றியதும், 1993 மார்ச் மாதத்தில், கோவை தி.மு.க. மாநில மாநாட்டில், 'மத வெறியும் மக்கள் சீரழிவும்’ என்ற தலைப்பில் நண்பகல் உணவு வேளையில் உரை ஆற்றி யதும் மிகச் சிறந்தவை என்று, தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் மெச்சினர். அதுவே, அரசியல் வாழ்வில் என்னைத் தாக்கிய இடிகளுக்கும் காரணமாக அமைந்தன.
1998 ஜனவரியில், திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. மாநாட்டில், நண்பகலில் நான் ஆற்றிய உரை, எவரும் எதிர் பாராத வரவேற்பைத் தொண்டர்களிடம் ஏற்படுத்தியபோது, அதை அக்கட்சியின் தலைமை ரசிக்கவே இல்லை என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.
எதிலும் சராசரியாக இருந்திருந்தால், பிரச்னைகளே வராமல்கூடப் போயிருக்கலாம். தடைகள்தாம், சாதனைக்கான படிக்கட்டுகள். மலையளவு பலம்கொண்ட சக்திகளோடு மோதும்போதுதான், போராடும் உரமும் மனதுக்கு நிறைவும் கிடைக்கின்றது!''
 
த.சத்தியநாராயணன், சென்னை.

Friday, December 16, 2011

கேரள எல்லையில் கேவல சேட்டைகள்!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
 எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.
அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.
''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.
''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.
''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.
''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).
அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள்  உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்! 
- சண்.சரவணக்குமார்
கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது  'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.  கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள். கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

குமுறும் குமுளி!

முல்லைப் பெரியாறு விவகாரம், கேரள எல்லையில் ரத்த ஆறாக மாறிவிடும் அபாயம் தெரிகிறது. ஆனால், இந்த ஆபத்தை தமிழக, கேரள மற்றும் மத்திய அரசு உணரவில்லை என்பதுதான் வேதனை.
 அரசியல் கலப்பு இல்லாத உணர்வுப்பூர்வமான போராட்டத்தால் முக்கியக் கட்டத்தை எட்டி இருக்கிறது, தமிழர்களின் முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராட்டம். திக்கெட்டும் போலீஸ்; திரும்பிய பக்கம் எல்லாம் ஆக்ரோஷக் கோஷங்கள், எங்கெங்கும் மனிதத் தலைகள் என்று யுத்த களம் போல் காட்சி அளிக்கிறது, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி. இந்தக் கட்டுரையை டைப் செய்யும் நிமிடம்கூட, கம்பம் மெட்டு ஏரியாவில் தமிழக போலீஸ் தடியடி நடத்துவதாகத் தகவல்.
என்ன நடக்கிறது கம்பம் பள்ளத்தாக்கில்? இதோ பகீர் ரிப்போர்ட்!
கிராமத்துக்கு 10 பேர்!
போருக்குச் செல்லும் சிப்பாய்களைப் போல கம்பத்தில் இருந்து கேரளம் நோக்கி தினமும் ஊர்வலம் செல்பவர்களில், முக்கால்வாசிப் பேர் இளைஞர்களே! அந்த அளவுக்கு எரிமலையாய் கொதித்துக்கிடக்கும் கம்பம் பள்ளத்தாக்கு இளைஞர்கள் இப்போது ஒரு ரகசிய திட்டம் தீட்டுகிறார்களாம். கோர்ட் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் கேரளா, அணை விவகாரத்தில் எதைச் செய்யவும் துணியலாம் என்பதால், பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்காக இளைஞர் படை ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். கிராமத்துக்கு 10 பேர் வீதம், 25 வயதுக்கு உட்பட்ட 1,000 இளைஞர்களை இந்தப் படையில் சிப்பாய்களாகச் சேர்க்கும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன.
கடந்த 9-ம் தேதி கம்பத்தில், தேனி கலெக்டர் பழனிசாமி அமைதிக் குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது பொங்கி எழுந்த இளைஞர் ஒருவர், ''நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருங்க... கேரளாக்காரன் அணையை உடைச்சிட்டுப் போகப்போறான். உங்களால் முடிஞ்சா பாருங்க.... இல்லைன்னா எங்க அமைப்புகிட்ட விஷயத்தை விட்டுருங்க, நாங்க பாத்துக்கிறோம்'' என்று ஆவேசப்பட்டார்.
''நீ எந்த அமைப்பு?'' என்று கலெக்டர் கேட்டதும், ''முல்லைப் பெரியாறு பாதுகாப்புப் படை'' என்று அந்த இளைஞரிடம் இருந்து தயக்கம் இன்றிப் பதில் வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்து, போர்ப் பயிற்சி எடுத்த பகுதி இது. மேலும், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அந்த இளைஞர் சொன்னதை பீதியோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறது உளவுத்துறை.
இந்தப் 'படை’ குறித்து நம்மிடம் பேசியவர்கள், ''நம்ம வீட்டை நாமே காவல் காக்குறதுதானே முறை... அது மாதிரித்தான் இதுவும். அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்காவிட்டால், 'முல்லைப் பெரியாறு பாதுகாப்புப் படை’ அந்தப் பணியைச் செய்யும். அதையும் தாண்டி அணைக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், கேரள அரசுக்குச் சொந்தமான இடுக்கி அணையை இல்லாமல் செஞ்சிடுவோம். இதற்கான அத்தனை பயிற்சிகளும் படையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்'' என்கிறார்கள். இதுகுறித்து ம.தி.மு.க-வின் கம்பம் நகரச் செயலாளர் ராம கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''யாரும் கூட்டம் போட்டுப் படை திரட்ட வேண்டியது இல்லை. அணையைப் பாதுகாக்கும் விஷயத்தில், இங்கே இருக்கிற அத்தனை பேருமே சிப்பாய்கள்தான்'' என்று சொன்னார்.
உக்கிரமாக்கியது யார்?
முல்லைப் பெரியாறு போராட்டத்தை இவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாற்றியதே கேரளத்தினர்தான். கேரள பி.ஜே.பி-காரர்கள் பேபி அணை மீது ஏறி நின்று ஷட்டரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும், கேரள எஸ்டேட்களுக்கு வேலைக்குப் போயிருந்த தமிழகப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதும்தான் மக்களை போராட்டக் களத்துக்கு இழுத்து வந்துவிட்டது. இந்த சம்பவத்துக்குப் பதிலடியாக, கேரளத்துக்குள் புகுந்து எதையாவது செய்ய வேண்டும் எனத் தமிழக மக்கள் குமுளி எல்லைக்குள் படை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். போலீஸ் தடையை மீறி கேரளத்துக்குள் நுழைய முடியாமல் போவதால், கம்பம் மற்றும் தேனி பகுதியில் இருக்கும் கேரளத்துக்காரர்களின் சொத்துக்களைத் துவம்சம் செய்து ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். 
வீரபாண்டி அருகில் உள்ள மலநாடு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து தினமும் 80 ஆயிரம் லிட்டர் பால் கேரளத்துக்குப் போகும். 10-ம் தேதி மதியம் இந்த நிலையத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள், 40 ஆயிரம் லிட்டர் பாலையும் கீழே கொட்டிக் கவிழ்த்தார்கள். கிராமங்களில் உள்ள கேரளத்தவர்களின் மாட்டுப் பண்ணைகள், தோட்டங்கள், முந்திரித் தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. 11-ம் தேதி குமுளிக்குப் பேரணியாய் சென்றவர்கள், குறுவனூத்து பாலம் அருகே கேரள சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான சொகுசு மாட்டு வண்டிகளுக்கு தீ வைத்து, அங்கே இருந்தக் கட்டடத்தையும் தரை மட்டம் ஆக்கினார்கள். காக்கனோடை ஏரியாவில் கேரளத்தவரின் கயிறு தொழிற்சாலை ஒன்றுக்கு தீ வைக்க வந்தவர்களை போலீஸார் தடுத்தனர். ''சார்... தீ வைக்க விடுங்க; இல்லாட்டி எங்களைச் சுட்டுத் தள்ளுங்க'' என்று ஆக்ரோஷம் காட்டியதால், சத்தம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது போலீஸ். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரை! மாலை 5 மணி வாக்கில்,  கம்பம் அவுட்டரில் உள்ள கேரளத்தவர்களின் புண்ணாக்கு கம்பெனிக்குத் தீ வைத்தனர். 'உங்களுக்கும் இதே கதிதான்’ என்று எச்சரித்து, அணைப்பதற்கு வந்த தீயணைப்பு வண்டியையும் திருப்பி அனுப்பியது இளைஞர் படை!
திரண்டது தமிழர் படை!
10-ம் தேதி காலையில் சுருளிப்பட்டியில் இருந்து திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் 2,000 பேர் குமுளியை நோக்கிக் கிளம்புவதாக போலீஸுக்குத் தகவல். ஆனால், அதையும் தாண்டி கூட்டம் மிக அதிகமாகத்  திரண்டு வரவே, தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறிப்போனது போலீஸ். ஊர்வலம் கம்பத்தை அடைந்தபோது, அக்கம்பக்கம் நின்றவர்கள் எல்லாம் தன்னெழுச்சியாக அதில் கலந்துகொண்டார்கள். 20 ஆயிரம் பேருக்கு மேல் குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்தது ஊர்வலம். லோயர் கேம்ப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய கலெக்டர் பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி-யான ராஜேஷ்தாஸும் எவ்வளவோ பேசிப் பார்த்தார்கள், ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. 'கேரள எல்லை வரை சென்று ஆர்ப்பாட்டம் செய்யாமல் திரும்ப மாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்னார்கள். அவர்கள் மீது போலீஸ் விரல்கூட படக் கூடாது என்பது மேலிட உத்தரவாம். அதனால், ''யப்பா.... என்னோட சொந்த ரிஸ்க்கில் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அங்க வந்து யாரும், எந்த பிரச்னையும் பண்ணக் கூடாது'' என்று கெஞ்சிக் கூத்தாடி, ஊர்வலத்தை குமுளிக்கு வழிநடத்தினார் ஐ.ஜி.
தமிழர் படை வருகிறது என்றதுமே குமுளியிலும் கேரள எல்லைக்குள்ளும் பதற்றம் பற்றிக்கொண்டது. கடைகள் அடைக்கப்பட்டு கேரள போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டார்கள். தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக விவசாயிகள், 'தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் 13 வழிகளையும் அடைக்க வேண்டும், பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்புப் போடவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். 'உங்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்து இருக்கிறேன்... உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று சொன்னார். அந்த சமாதானத்தைக் கேட்ட பிறகே, வந்த வழியே திரும்பியது கூட்டம்.
    உயிர் தப்பிய ஓ.பி.எஸ்.!
கடந்த 10-ம் தேதி இரவே, 'நாளைக்கு காலையில கே.கே.பட்டி, அணைப்பட்டி சுத்துவட்டார ஊர்கள்ல இருந்து குமுளிக்கு ஊர்வலம் கிளம்புறாங்கப்போய்!’ என்ற செய்தி போலீஸ் வட்டாரத்தைக் கலவரப்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரவோடு இரவாக கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. 11-ம் தேதி காலையில் குமுளி நோக்கி டூ வீலர்கள், லாரிகள், டிராக்டர்களில் புறப்பட்ட சுமார் 1 லட்சம் பேருக்கு மத்தியில், போலீஸ் படை கடலில் கரைத்த பெருங்காயமாகிப்போனது. 'நேத்து மாதிரி சும்மா திரும்ப மாட்டோம்’ என்று ஊர்வலத்தினர் முன்னோட்டம் கொடுத்ததால், கலக்கத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்தது போலீஸ். தடைகளைத் தகர்த்து குமுளியை அடைந்த ஊர்வலத்தினர், ஒரு கட்டத்தில் போலீஸ் மீதே கற்களையும் கம்புகளையும் வீசினார்கள். ''நாங்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வந்த எங்கள் மீதே தாக்குதல் நடத்துவது சரியில்லை'' என்று தென் மண்டல ஐ.ஜி. வருத்தம் காட்டினார்.
கோஷம் போட்டும் ஆத்திரம் அடங்காத கூட்டம் அப்படியே உட்கார்ந்துவிட்டது. மக்களைச் சமாதானப்படுத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் நாளே குமுளிக்கு வருவதாக இருந்தார். ஆனால், போலீஸ் அவரைத் தடுத்துவிட்டது. சட்ட மன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டும் முதல்வரின் அறிவிப்பைச் சொல்லி சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் 11-ம் தேதி மாலை குமுளிக்குக் கிளம்பினார் பன்னீர்செல்வம்.
அமைச்சர் வருகையை ஐ.ஜி., மைக்கில் சொன்னதுமே, ''அவர் இங்கே வரக் கூடாது; வந்தா அசிங்கப்பட்டுப் போவார்'' என்று ஆவேசப்பட்டது கூட்டம். ஆனால், அதை மீறி வந்தார். குமுளி செக்போஸ்ட்டில் காரை நிறுத்திவிட்டு 200 மீட்டர் தூரம்கூட நடந்திருக்க மாட்டார்.. கம்புகள், கற்கள், செருப்புகள் என அனைத்தும் ஒரு சேர அவரைக் குறிவைத்துப் பறந்தன. பதறிப்போன போலீஸார், தாங்கள் கையில் வைத்திருந்த தடுப்புகளால் அமைச்சரை மூடிப் பாதுகாத்து பத்திரமாய் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அமைச்சரின் கார் நகர்ந்ததுமே ஐ.ஜி. கண் அசைக்க, லத்தியைச் சுழற்றி கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவியதால், 200 பைக்குகளில் அமைச்சரின் காரைத் துரத்தியது ஒரு கோஷ்டி. அவர்களிடம் சிக்காமல் கம்பம் ரோட்டில் பறந்தது ஓ.பி.எஸ். கார். அப்படியும் சிக்கல். 'இந்த வழியாத்தானே அமைச்சர் வரணும்’ என்றபடியே கூடலூரில் கம்புகளுடன் திரண்டனர் மக்கள். இந்தத் தகவலை அமைச்சரின் காதில் போட்ட தங்கத் தமிழ்ச்செல்வன், 'நாம் இந்த வழியா போறது நல்லதில்லை’ என்று சொல்லவே, மீண்டும் வந்த வழியே திரும்பி, சுருளியாறு மின் நிலையம் ரோடு வழியாக எஸ்கேப் ஆனார் ஓ.பி.எஸ்.
தமிழர்களே ஓடிப் போங்கள்!
தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களைப் பார்த்துவிட்டு, கேரளத்துக்காரர்களும் அங்கு உள்ள தமிழர்கள் மீது உக்கிரத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். 10-ம் தேதி குமுளியில் தமிழர்கள் திரண்டபோது, கேரள அரசு அங்கு போதுமான போலீஸாரைக் குவிக்கவில்லை என்று, பீர்மேடு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ-வான பிஜூமோன் மறியல்  நடத்தியதால், 11-ம் தேதி குமுளி எல்லையில் கூடுதலாக போலீசை இறக்கியது கேரள அரசு.
எஸ்டேட்களில் தங்கி இருந்து வேலை செய்யும் தமிழர்களை அங்கே இருந்து வெளியேறும்படி மிரட்டுகிறார்கள் கேரள வன்முறையாளர்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தும்  கொடுமைகளும் அரங்கேறத் தொடங்கின. அதனால், பத்துமுறி, மாலி, சாஸ்தான் ஓடை, மாதவன் கானல் போன்ற இடங்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற தமிழகம் நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். அதே சமயம், குமுளியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்கரை என்ற கிராமத்தில், 'நமக்காக உழைக்க வந்திருக்கும் இங்குள்ள தமிழர்களை நாம் தாக்கக் கூடாது’ என்று கேரளத் துக்காரர்கள் கூட்டம் போட்டு முடிவெடுத்த, நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது.
நடு ரோட்டில் சேலையை உருவி...
கம்பத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் கேரளத்தில் கொட்டாரக்கரையில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து கம்பம் திரும்பி இருக்கிறார். குமுளி எல்லைக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பஸ் நின்ற இடத்தில் டீ குடிக்க இறங்கினார். டீக் கடையில் அவர் தமிழில் பேச, 'நீ பாண்டி நாட்டுக்காரனோ?’ என்று கேட்டு சுற்றி வளைத்துத் தாக்கி இருக்கிறது ஒரு கேரளக் கும்பல். தன்னுடைய உடம்பில் இருந்த தழும்புகளைக் காட்டியபடி கதறிய தாஸ், ''நான் மலையாளத்துப் பெண்ணைத்தான் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டேன். நான் தமிழனாப் பொறந்தது குத்தமா? மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க சார். அதுகூட எனக்கு வலிக்கலை. பஸ்ல இருந்த ஒரு தமிழ்ப் பெண்ணை வலுக்கட்டாயமா கீழே இறக்கி, ரோட்டுல விட்டு சேலையை உருவுனாங்க; எனக்கு நெஞ்சே வெடிச்ச மாதிரி இருந்துச்சு. அந்தக் கும்பல்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடினேன், கர்நாடகத்துல இருந்து வந்த டூரிஸ்ட்காரங்கதான் கார் ஸீட்டுக்கு அடியில படுக்கவைச்சுக் கொண்டாந்து இறக்கிவிட்டாங்க'' என்றார்.
  ஏமாந்தா அம்புட்டுத்தான்!
தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று வழிகளில் கேரளாவைத் தொட முடியும். கம்பத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமுளி எல்லை தான் முக்கியமான வழித் தடம். கம்பத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் மெட்டு எல்லை, போடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் போடி மெட்டு எல்லை. பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் குடிநீர் ஆதாரமே பெரியாறுதான். கூடலூரில் இருந்து தேனி வரை இருபோகம் விளைகிறது. ''பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கவனமாகவும் குள்ளநரித்தனமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது கேரளா. நாமோ அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு அனைத்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்'' என்று சொல்லும் கம்பம் பள்ளத்தாக்கின் பட்டம் படித்த விவசாயிகள், ''அணையில் படகு விடும் உரிமை, மீன் பிடிக்கும் உரிமை, அணையின் நீர்மட்டத்தை நிர்ணயித்தல், அணைப் பாதுகாப்பு என நம்மிடம் இருந்த அத்தனை உரிமை களையும் பல்வேறு காரணங்களைச் சொல்லிப் பறித்துக்கொண்டுவிட்டது கேரள அரசு. நம்முடைய அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுத்து விட்டார்கள். பெரியாறு அணை தண்ணீரில் இருந்து அதிகபட்சம் ஒரு நாளைக்கு 140 மெகா வாட் மின்சாரத்தை எடுக்கிறோம். இதைக் காட்டிலும் ஏழு மடங்குப் பெரிய அணையை இடுக்கியில் கட்டி இருக்கிறது கேரளா. அங்கே கனடா நாட்டு ஒப்பந்தத்தில் மிகப் பெரிய நீர் மின் திட்டம் ஒன்று செயல்படுகிறது. அந்த அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சி. ஆனால், இதுவரை ஒரு தடவை கூட அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது இல்லை. பெரியாறு அணை இல்லாவிட்டால், அந்தத் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுபோய் இன்னும் கூடுதலாக மின்சாரம் எடுக்க முடியும் என்பதுதான் கேரளாவின் திட்டம். இந்த முறையும் நாம் ஏமாளித்தனமாக இருந்தால் கம்பம் பள்ளத்தாக்கு இன்னொரு ராமநாதபுரமாக மாறிவிடும்'' என்கிறார்கள்.
கம்பம் - குமுளி வரை போக்குவரத்து ஒரு வாரத்துக்கும் மேலாக தடைபட்டுக் கிடப்பதால், அந்த ஏரியாவே மயானம் போல் காட்சி அளிக்கிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பி குமுளியில் வர்த்தக நிறுவனங்களை நடத்தும் கேரளத்துக்காரர்கள் பொருளாதார ரீதியாக முடங்கிக் கிடக்கிறார் கள்.
இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தாலே, கேரளா வழிக்கு வந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தாலே விபரீதங்கள் தவிர்க்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்று கவலைப் படுகிறது தமிழக போலீஸ்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.சிவக்குமார்
12-ம் தேதி காலை கம்பத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர், கேரளாவுக்கான இன்னொரு நுழைவாயிலான கம்பம் மெட்டு நோக்கிக் கிளம்பினார்கள். அந்த ஏரியாவில் கேரளத்தவர்களின் வீடுகள் நிறையவே இருப்பதால், ஐந்து கிலோ மீட்டர் முன்னதாகவே மலைப் பகுதியில் கூட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். போலீஸ் தடுப்பை தாண்டிக்கொண்டு கூட்டத்தினர் முன்னேற முயற்சி செய்ததும், லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. இதை எதிர்பாராதவர்கள், 'தமிழக ஏ.டி.ஜி.பி-யான ஜார்ஜ் ஒரு மலையாளி. அவர்தான் கம்பம் மெட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு லத்தி சார்ஜுக்கு உத்தரவிட்டிருக்கிறார்’ என்று புயலைக் கிளப்பினார்கள். உடனே, 'ஜார்ஜ் மீது நடவடிக்கை எடு’ எனக் கோஷமிட்டதுடன், போலீஸ் படை நகர முடியாதபடி சாலைகளில் டயர்களைப் போட்டுக் கொளுத்தினார்கள். கேரளாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் 12-ம் தேதி மதியத்துக்கு மேல் தமிழக அரசுக்கு எதிரான திசையில் திரும்பியது!

-
Source - vikatan

அணை உடைந்தால்... இந்தியா உடையும்!


எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!''
- கோயபல்ஸ்     
    

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது.
உண்மை 1: அணை, நோக்கங்கள், லாபங்கள்!
ந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால், இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாக, ராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான், நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான்.
தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில், கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால், அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டு, ஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால், தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!
முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.
தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!
உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!
பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது.
1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோது, கேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில், அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படி, புதிய வடிகால் மாடங்கள், மதகுகள் அமைக்கப்பட்டன. ஆக, பழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார்.  
உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!
''அணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை 6 ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால், அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கி, கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவே, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும், இந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.
முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம், கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும், அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளி, ஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?
முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால், சற்றே பெரிய 4 குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.
புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு, நாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும், சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால், அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால், அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, அணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர்
எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள், ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால், இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.
இவை தவிர, எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம், கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் 3 இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, ஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால், ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.
 உண்மை 4: உடையப்போவது அணை அல்ல!
காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும்  1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால், இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை.
முல்லைப் பெரியாற்றில், அணை பலமாக இருந்தபோதே, அணை யைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண் டது தமிழகம். அணையைப் பலப் படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால், தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒருபோகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?
காவிரியோ, முல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோ, கேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்ல; நம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.
ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண் கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இனி செயய வேணடியது எனன?
 இரா.வெங்கடசாமி, நீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.
''நதிகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு, அங்குள்ள நீர் வளத்தை, தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில், தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோல, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின், தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் 4 அடி அதிகப்படுத்தி, நீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலே, நீர் வெளியேறும்படி செய்ய வேண்டும்.
நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்து, நீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழ, அகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''

-
Thanks Vikatan

விகடன் மேடை - வைகோ

அ.குணசேகரன், புவனகிரி. 
''வாழ்க்கையில் தாங்கள் எடுத்த முடிவுகளுள், நல்ல முடிவு எது? தவறான முடிவு எது?''
 ''அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அவரது அமைச்சரவையில் என்னை இடம் பெறச் சொல்லி வற்புறுத்தியபோது, அதனை ஏற்க மறுத்தது நல்ல முடிவு!
2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தவிர்த்தது, தவறான முடிவு!''
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
''நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள் வரவேற்பீர்களா?''
 ''சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அட்டைப்படங்களில், எட்டுக் காலங்களில் ஏடுகள் பலமாக ஆரூடம் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், 1996 மார்ச் 8-ம் நாள், பிற்பகல் 2.30 மணி முதல் 6.00 மணி வரை அவரிடம் நான் தனியாக உரையாடினேன். 'நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் வரவேற்கிறேன். ஆனால், உங்கள் பெயரை வேறு சிலர் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது சரி அல்ல. எங்கள் இயக்கத்திலும், வேறு பல இயக்கங்களிலும் உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, ஒரு சிலரின் சுயநல அரசியலுக்கு உங்கள் பெயரைப் பயன் படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்றேன்.
அதற்கு அவர், 'நான் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை; என்னுடைய ரசிகர்களை அல்லது என் பெயரை, தங்கள் கட்சிக்கு ஆதரவு என்று எவரும் பயன்படுத்துவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார்.
அத்துடன், இன்னும் 10 நாட்களில் அமெரிக்கா செல்லப்போகிறேன்; அதற்கு முன்பு, யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டுத்தான் செல்வேன் என்று என்னிடம் சொன்னார். அதே போல, அறிவித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்.
ஆனால், மதிப்புக்குரிய மூப்பனார் அவர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக் கட்சி தொடங்கியதை ஒட்டி, தமிழ்நாட்டில் இருந்து சிலர், அவருக்கு நிர்பந்தம் கொடுத்தனர். அதனால், அவர் அமெரிக்காவில் இருந்து ஓர் அறிக்கை தந்தார். அதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. தமிழ் மாநில காங்கிரஸ், தங்கள் பிரசாரத்தில் முழுக்க முழுக்க ரஜினியின் பெயரையும் படத்தையும் மட்டுமே பயன்படுத்தினர்.
தற்போது நீங்கள் கேட்டு இருக்கின்ற கேள்விக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தமிழ்நாட்டின் கலைத் துறைக்கு, அவர் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்!''
சத்தியநாராயணன், சென்னை.
''ஜெயலலிதாவின் மூளையாகச் செயல்படும் சோ பற்றி..?''
 ''ஜெயலலிதா அவராகவே முடிவு எடுத்து, அவராகவே செயல்படுகின்றார். பிறரது யோசனைகளை எல்லாம் கேட்டு அதன்படி முடிவு எடுக்கும் இயல்பு, அவரிடம் இல்லை. சோ, தன்னுடைய ஆலோசனைகளை முடிந்த மட்டும் சொல்லிப்பார்க்கிறார். ஆனால், அந்த யோசனைகள் எல்லாமே நல்லவை என்றும் சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகள் கேட்டு இருந்த இடங்களையும் சேர்த்து, 160 தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தபோது, அது ஜெயலலிதா எடுத்த முடிவு அல்ல என்றும் மற்றவர்கள்தாம் காரணம் என்றும் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.
இப்போது, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிரண்டு கட்சிகளை அழைத்துப் பேசியும் மற்றவர்களை அழைக்காமலேயும் தன்னிச்சையாக, அனைத்து மாநகராட்சி மேயர் வேட்பாளர்களையும் நகர்மன்றத் தலைவர் வேட்பாளர்களையும் அறிவித்த போது, இது ஜெயலலிதாவே அறிவித்த முடிவு என்றனர்!''
எம்.ஆதி, திருவண்ணாமலை.
''இதுவரை எத்தனை தடவை நடைப் பயணம் போயிருக்கின்றீர்கள். எத்தனை கிலோ மீட்டர் நடந்து இருக்கின்றீர்கள்?''
 ''இதுவரையிலும், ஆறு தடவைகள் நடைப்பயணம் சென்று உள்ளேன்.
முதலாவது நடைப்பயணம்:
1986-ம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் நகைகளைக் கொள்ளை அடித்த குற்றவாளிகளைக் கைதுசெய்து, நகைகளை மீட்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி, தென்திருப்பேரையில் இருந்து புறப்பட்டு, கிராமங்கள் வழியாகப் பிரசாரம் செய்துகொண்டே, திருநெல்வேலி வரையிலும், மூன்று நாட்கள் 60 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
இரண்டாவது நடைப்பயணம்:
1994 ஜூலை 27-ம் நாள், மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, ஒட்டுமொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் நடந்து உள்ளேன். ஒரு நாளைக்கு சராசரி யாக 32 கிலோ மீட்டர்கள் நடந்தேன். இதில் ஒன்பது நாட்கள், முழுக்க முழுக்க மழையில் நனைந்து உள்ளோம். அப்போதும், குடை களைப் பிடித்தது இல்லை.
அப்போதைய அண்ணா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கையும் கடுமையான ஊழலையும் எதிர்த்து, விழிப்பு உணர்வுப் பிரசாரப் பயணமாகவே நடத்தினேன். செப்டம்பர் 15-ம் நாள், சென்னை அண்ணா நகரில், அந்த எழுச்சி நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். மொத்தத்தில், கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து ஏற்படுத்திய தாக்கம், 1996-ல் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது.
மூன்றாவது நடைப்பயணம்:
காவிரி நதி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து, மக்கள் சக்தி யைத் திரட்ட, பூம்புகாரில் இருந்து புறப் பட்டு, கல்லணை வரையிலும், ஏழு நாட்கள், 180 கிலோ மீட்டர்கள் நடந்தேன்.
நான்காவது நடைப்பயணம்:
1997-ம் ஆண்டு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, திருவைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றுவழியாகக் கிராமங்கள் ஊடாகச் சென்று, நான்கு நாட்கள் நடந்து பிரசாரம் செய்து, தூத்துக்குடிக்கு வந்தோம். நான்கு நாட்களில், சுமார் 120 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
ஐந்தாவது நடைப்பயணம்:
2004 ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடிவிட்டு, மறுமலர்ச்சி நடைப்பயணத்தைத் தொடங்கினேன்.
சென்னைக்கு, 42 நாள்களில் 1,200 கிலோ மீட்டர்கள் நடந்தேன். என்னுடன் சீருடை அணிந்த 3,000 தொண்டர் படை இளைஞர்களும் கொடி பிடித்து நடந்து வந்தனர். இரவுகளில், கைகளில் தீபச் சுடர்களை ஏந்தி வந்தனர்.
தென்னக நதிகள் இணைப்பின் தேவையை மக்கள் உணரச் செய்யவும், மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தவும், சாதி மத வேற்றுமைகளை அகற்றி, சகோதரத்துவ எண்ணத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்தவும், மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு இரையாகிவிடாமல், இளம் தலைமுறைக்கு விழிப்பு உணர்வை உருவாக்கவும், தாய் - தந்தையை மதிக்கும் மனநிலையை இளைஞர்களிடம் ஏற்படுத்த வுமே இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டேன். எந்த இடத்திலும், கட்சி அரசியல் பேசவே இல்லை.
ஆறாவது நடைப்பயணம்:
முல்லைப் பெரியாறு அணையில் தமிழ கத்தின் உரிமையை நிலைநாட்டவும், தென் மாவட்டங்களில் விழிப்பு உணர்வை ஏற் படுத்தவும், 2008 டிசம்பர் 18-ம் நாள், மதுரையில் இருந்து புறப்பட்டு 23 வரையிலும் - ஆறு நாட்கள் - உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம் வழியாக கூடலூர் வரையிலும், 150 கிலோ மீட்டர்கள் நடந்தோம்.
இது தவிர, 1986-ம் ஆண்டு, தி.மு.க. இளைஞர் அணி சைக்கிள் பயணப் பிரசாரத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 33 நாட்கள் மேற்கொண்டேன். ஆடி மாதப் பெருங்காற்றிலும் வெயிலிலும் ஒரு நாளைக்குச் சராசரியாக 60 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்தேன். ஒவ்வொரு நாளும், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த 500 இளைஞர்கள் உடன் வந்தார்கள். மறு நாள் வேறு ஒன்றியத்தில், வேறு 500 இளைஞர்களுடன் சைக்கிள் மிதிப்பேன். அனல் கொதிக்கும் வெயிலில் பயணித்ததால், மேனி முழுவதும் கறுத்து, கொப்புளங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்தப் பயணம் முடிந்து சென்னைக்கு நான் வந்தபோது, என் மகள் கண்ணகி என்னைப் பார்த்து, 'அப்பா கறுப்பர் ஆகிவிட்டார்!’ என்றாள்.
கடந்த 40 ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர் களுக்கும் மேல் பயணித்து, சுமார் 80 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் சென்றிருப்பேன். இன்றைக்கும் அப்படித்தான் பயணித்துக் கொண்டே இருக்கின்றேன். தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணங்கள், கட்சிப் பிரசாரங்களுக் காகப் பயணித்து, தமிழகத்தில் 25,000 கிராமங்களுக்கு உள்ளே சென்று வந்து இருக்கின்றேன். 1995-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில், முதல் நாள் தொடங்கிய பயணத்தில், மறு நாள் விடிகாலை வரையி லும் இடைவிடாமல், 118 கிராமங்களில் கொடி ஏற்றி உள்ளேன்.
உழைக்கும் மக்கள், விவசாயிகள், குடிசை வாழ் அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களை, நேரில் சந்தித்து எனக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதினால், பல தொகுப்புகள் வரும். 'மக்களிடம் செல்’ என்றார் அண்ணா. இந்த ஒரு விஷயத்தில் யாரும் என்னுடன் போட்டி போட முடியாது என நினைக்கின்றேன்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா, அரசியல் செயல்பாடுகளை ஒப்பிடுங் கள்..?''
 ''பிடிவாதத்தில் மூவரும் ஒன்றுதான். எளிமை, மம்தா பானர்ஜியின் உடன்பிறந்த இயல்பு. எவரும் அணுக முடியும் என்பது, மாயாவதியின் நடைமுறை. இந்த இரண்டும் ஜெயலலிதாவிடம் இல்லை!''
ரேவதிப்ரியன், ஈரோடு.
''நீங்கள் படித்து ரசித்த புத்தகம்... புதிதாகக் கேட்டு ரசித்த பாடல்...''
 ''டாக்டர் சைடுபாட்டம் என்பவர் எழுதிய லயன் ஆஃப் தி சன் (lion of the sun). ரோமாபுரி வரலாறு குறித்த புதினம். யுத்தகளக் காட்சிகளை, அரண்மனைச் சதிகளை, பாலிஸ்டா என்ற கதாநாயகனின் வீரத்தை, அருமையாக வருணித்து இருக்கின்றார்.
பழைய பாடல்களையே திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
கே.ரங்கநாதன், புதுச்சேரி.
''கருணாநிதி 1960; 1980; 2010. உங்கள் கருத்து?''
 ''60-களில் அனல் பொங்கும் பேச்சு, எழுத்து, போராட்டக் களங்கள்.
80-களில் எதிர் நீச்சல்.
2010-ல், குடும்ப அரசியலால் பழி சுமந்து நிற்கும் பரிதாபம்!''
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
''உங்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள் எது? ஏன்?''
 '' 'தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு.’

இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர் ஆட்சிக் காலத்தில் சொன்னது. இன்றைக்குப் பொது வாழ்வில் இருப்போர்க் குத் தேவையானது!''

Sunday, December 11, 2011


கே.குணா, ஆம்பூர்.  
 ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உங்களை விசாரித்தார்களா?''
 ''ஆம்; கிரீன்வேஸ் சாலையில் உள்ள 'மல்லிகை’ என்ற அரசுக் கட்டடத்தில், சிறப் புப் புலனாய்வுக் குழுவினர், ஐந்து நாட்கள் என்னை விசாரித்தனர். பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 250-வது சாட்சியாக, கூண்டில் ஏற்றி என்னை விசாரித்தார்கள்.
பத்தாவது நிமிடத்திலேயே என்னைப் பிறழ் சாட்சி என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குப் பின்னரும், என்னை மூன்று நாட்கள் விசாரித்தார்கள். அந்த விசாரணையில் என்னிடம் கேட்ட கேள்விகளையும் நான் அளித்த பதில்களையும் தொகுத்து, ஒரு புத்தகமாகவே வெளியிட இருக்கிறேன்!''
எம்.பார்வதி, சுவாமிமலை.  
''நீங்கள் கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவரா?''
 ''இல்லை. என் மூத்த சகோதரி, என் இளைய மருமகன் ஆகியோர் கிறித்துவ மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். என் தாயும் என் மருமகளும் இந்துக் கடவுள்கள் மீது பக்தி மிக்கவர்கள். எங்கள் கிராமத்தில், இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என்ற வேறுபாடு இன்றி, அவர்கள் வழிபாடு களுக்கு உதவியாக இருக்கின்றோம். நான் பகுத்தறிவுவாதி.
தலைசிறந்த புரட்சியாளரும் பொது உடைமையாளருமான ஃபிடல் கேஸ்ட்ரோ, தான் படித்த நூல்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்தது பைபிளின் புதிய ஏற்பாடு என்றும், அதிலும் குறிப்பாக, இயேசுவின் மலைப் பிரசங்கம் என்றும் கூறினார். ஆனால், அவர் கிறித்துவர் அல்ல.
திருக்குறள், விவிலியம், திருக்குர்ஆன், மகாபாரத, இராமாயண இதிகாசங்கள், சைவத் திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், அண்ணல் அம்பேத்கர், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா நூல்கள் என அனைத்திலும் என் மனம் கவர்கின்ற பகுதி களை விரும்பிப் படிப்பேன்!''
சி.நாகமணி, சென்னை-18.
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில், அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
 ''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
இ.கிரி, பவானி.
''கரடுமுரடான சங்கத் தமிழ்ப் பாடல்களைக்கூட நீங்கள் கடகடவெனச் சொல்லுகிறீர்களே, இந்த மனப்பாட சக்தி உங்களுக்கு எப்படி வந்தது?''
 ''சின்ன வயதில் மேடைப் பேச்சுக்கு ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால், பாடல்களை மனனம் செய்தேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்போது, தேர்வுகளில்  குறிப்பாக தமிழில் முதல் மதிப்பெண்ணும் பரிசும் பெறுவேன். தமிழ்ப் பாடத்துக்கு உரிய பாடல்களை, சங்க இலக்கியம் முதல் பாரதி வரை முழுமையாக மனனம் செய்யும் பழக்கம் பள்ளிப் பருவத்திலேயே ஏற்பட்டது. பின்னர், பாரதிதாசன் பாடல்கள், மனம் கவர்ந்த ஆங்கில இலக்கியப் பாடல்களை மனனம் செய்தேன். என் தந்தையார் திருக்குறளையும் நாலடியாரையும் முழுமையாக மனனம் செய்தவர். அதுவும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தது.
சின்ன வயதிலேயே மனனம் செய்தவைதான், பசுமரத்து ஆணியாகப் பதிந்துவிட்டது. நடு வயதில் மனனம் செய்ததை, அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளாவிட்டால், மறந்துபோகும்!''
எ.ராம்மோகன், கருங்குழி.
''உங்களுக்கு பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டத் தெரியுமா?''
 ''தரையில் ஓடும் சக்கரம் பூட்டிய அனைத்து வாகனங்களையும் ஓட்டத் தெரியும்! இளம் பருவத்தில், இரட்டைக் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியை, வில் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்வதில், எனக்கு மிகவும் விருப்பம். சொந்தமாக ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தேன். 73-ம் ஆண்டு, சென்னையில் இருந்து காரை ஓட்டிச் செல்லும் போது, திண்டிவனத்துக்கு அருகில், மழையில் டயர்கள் சறுக்கி, தலை குப்புறக் கவிழ்ந்து, எதிரில் வந்த லாரியிலும் மரத்திலும் மோதாமல் பள்ளத்தில் விழுந்து, கையில் மட்டும் காயத் துடன் தப்பித்தேன். அதற்குப் பின்னர் கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன்!''               கு.இராமதாசு, கொடுங்காலூர்.
''விடுதலைப் புலிகளை விமர்சனமே இல்லாமல் ஆதரிப்பவரா நீங்கள்?''
 ''ஆம்; வீரத்தாலும் தியாகத்தாலும் அவர்களுக்கு நிகராக விடுதலைப் போர் நடத்தியவர்கள் வேறு எவரும் இல்லை. தங்களைவிடப் பல்லாயிரம் மடங்கு பலத்தைப் பல நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட கொடிய பகைவர்களை எதிர்த்து, உலகில் வேறு எந்த விடுதலை இயக்கமும் இப்படிக் களம் கண்டது இல்லை. ஈடு இணை சொல்ல முடியாத ஒழுக்கமும் அணு அளவும் தன்னலம் அற்ற தலைமைப் பண்பும்கொண்ட மாவீரர் திலகம் பிரபாகரனை என் இதயம் நிரம்ப நேசிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டா லும், அது அங்கு உள்ள கள நிலையைப் பொறுத்துத்தான் எடுக்கின்றார்கள் என்பதுதான் எனது கருத்து!''
லலிதா, காஞ்சிபுரம்.
''மொரார்ஜி, இந்திரா, ராஜீவ், வி.பி.சிங், நரசிம்மராவ், தேவ கவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் என எல்லோரும் உங்களுக்கு அறிமுகம் உண்டு. ஒவ்வொருவரைப் பற்றியும் ஓரிரு வரிகளில் சொல்லுங்கள்?''
''மொரார்ஜி தேசாய்: மனதில் பட்டதை ஒளித்துப் பேசத் தெரியாது. விட்டுக்கொடுக் கும் மனப்பான்மை இல்லாத, வீண்பிடிவாதக் காரர். இந்தியில் எனக்கு வந்த கடிதத்தை, நாடாளுமன்றத்தில் அவர் முகத்துக்கு நேராகக் கிழித்து எறிந்தபோதும், என் மீது கோபப்பட வில்லை.
இந்திரா காந்தி: நெருக்கடி நிலையை அறிவித்த சர்வாதிகாரி என விமர்சிக்கப்பட்டாலும், நாடாளுமன்ற விவாதங்களில் விமர்சனங்களைப் பொறுமையோடு கேட்பார். 1984 ஆகஸ்ட் திங்களில், ஈழத் தமிழர்களைப் பற்றி, நான் மிக உணர்ச்சிவசப்பட்டு உரை ஆற்றிய பின் அவர் பேசும்போது, 'உறுப்பினரின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்; இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்கள்தாம், அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள்’ என்று பேசினார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவை யில், அதுதான் அவர் ஆற்றிய கடைசி உரை. அவரது மறைவு, தமிழ் ஈழத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
ராஜீவ் காந்தி: நாடாளுமன்ற விவாதங்களில் பல முறை அவருடன் கடுமையாக வாதிட்டு உள்ளேன். ஒரு முறை நான் பேசிய பின்னர், அவர் அவையைவிட்டு வெளியேற முயன்றார். 'பதில் சொல்லாமல் எங்கே ஓடுகின்றீர்கள்?’ என்று கேட்டேன். மீண்டும் திரும்பி வந்து, 'எனக்கு அடுத்த அவையில் வேலை இருக்கின்றது’ என்று கோபப்படாமல் சொல்லிவிட்டுச் சென்றார். என்னிடம் பிரியத்துடனும் நேசத்துடனும் பழகினார்.
வி.பி.சிங்: 'விதுரனை இழந்த துரியோதனனைப் போல், வி.பி.சிங்கை இழந்த காங்கிரஸ் தோற்கப்போகின்றது’ என்று எச்சரித்தேன். பின்னர், அவர் பிரதமரானபோது, நான் பேசியதை நினைவுகூர்ந்த அவர், தொழிலாளர்கள் தினமாகிய மே முதல் நாள் அன்று, மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத் தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று அன்றே அதை அறிவித்தார்.
நரசிம்ம ராவ்: பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றவர். நிதானமாகப் பதில் சொல்வார். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர் களுக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையை ஏற்றுச் செயல்படுத்தினார்.
ஐ.கே.குஜ்ரால்: எவ்வளவு விமர்சனங்கள் செய்தாலும், ஆத்திரப்படாமல் விளக்கம் தருவார். இலங்கைக் கடற்படையின் ஹெலிகாப்டர், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் குண்டுகளை வீசி, ஆறு தமிழக மீனவர்களைப் படுகொலைசெய்ததை இந்தி யக் கடற்படை வேடிக்கை பார்த்துக்கொண்டு, நொண்டி வாத்தைப் போல உட்கார்ந்து இருக்கின்றது என்று குற்றம்சாட்டி ஒரு கடிதத்தை, அவரிடமே நேரில் தந்தபோது, அவருக்கு என் மீது வருத்தம்.
தேவ கவுடா: எல்லோரையும் மதித்துப் பழகுவார். விவசாயிகள் பிரச்னைகளைப் பற்றி சபையில் அழுத்தமாகப் பேசுவார். என்னிடம், மிக்க அன்பு காட்டுவார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்: அற்புதமான நாடாளுமன்றவாதி. என்னைத் தன் செல்லப் பிள்ளையாகவே பாவித்தார். ஒன்றா? இரண்டா? எத்தனை எத்தனையோ சம்பவங்கள். என் நெஞ்சம் மறக்குமா அந்த நேசம்?
98, 99 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும், குடியரசுத் தலைவர் மீதான நாடாளுமன்ற விவாதத்தை, நானே வழிமொழிந்து பேச வேண்டும் என்ற அவரது விருப்பப்படியே வழிமொழிந்தேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவ்வாறு வழிமொழிந்து பேசியது நானாகத்தான் இருப்பேன். அவரது அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போதும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களை அடுத்து, நானே விவாதத்தில் பேச வேண்டும் என்றார். நான் உரை ஆற்றும் வேளைகளில், அவர் அறையில் இருந்து அவைக்கு வந்து என் பேச்சைக் கேட்டு, மேசையைத் தட்டி வரவேற்றுவிட்டுத்தான் செல்வார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்து, அதற்கான அறிவிப்பைச் செய்ய இருந்த வேளையில், நான் அவரை  இல்லத்தில் நேரில் சந்தித்து, அது தமிழ்நாட்டுக்குக் கேடாய் அமையும் என்றபோது, என் வேண்டுகோளை ஏற்று, முடிவையே மாற்றினார்.
டாக்டர் மன்மோகன் சிங்: சிறந்த பொருளாதார மேதை. மிகவும் எளிமையானவர். நான் டாக்டர் மன்மோகன் சிங் என்ற மனிதரை மதிக்கின்றேன். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை எதிர்க்கின்றேன் என்று அவரிடமே நேரில் சொன்னபோது, 'உங்கள் அணுகுமுறையை மெச்சுகிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்’ நூலின் ஆங்கில மொழியாக்கமான 'ஃப்ரம் தி போர்டல்ஸ் ஆஃப் எ ப்ரிசன்’ ( From the Portals of a Prison) என்ற நூலை, சென்னையில் வெளியிட்டுப் பேசியபோது, 'வைகோ பொதுநலனுக்காக மட்டுமே என்னை வந்து சந்திப்பார். ஐ சல்யூட் ஹிம் (I Salute him)’  என்றார்!'

செ.பாரி, திருவாரூர்.
 ''ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரித்தது தவறு என்று, இப்போதாவது உணர்கின்றீர்களா?''
 '' 'சமரசம் ஒரு தேவையான ஆயுதம்; நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க, சமரசம் தேவைப்படுகின்றது’ என்றார் பகத்சிங்.
அடிப்படைக் கொள்கைகளைப் பலியிட்டுவிடாமல், சுயநலத்துக்குத் துளியும் இடம் இன்றிச் செயல்படும்போது, சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் சில முடிவுகளை மேற்கொள்ள நேரிடுகின்றது. வரலாற்றில் அதனை உணர்த்துகின்ற பாடங்கள் ஏராளம்.
நேதாஜி, ஹிட்லரோடு கரம் குலுக்கவில்லையா?
மா சே துங், சியாங்கே ஷேக் படையினரோடு தோள் கொடுக்கவில்லையா?
சோவியத், அக்டோபர் புரட்சிக்குப் பின், புதிய பொருளாதாரக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லையா?
இந்தியாவிலும்  தமிழ்நாட்டிலும் கூட்டணிகள் அமைந்ததையும் எதிரும் புதிருமானவர்கள் கரம் கோர்த்ததையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
எனவே, சூழ்நிலையும் இயக்கத்தைக் காக்க வேண்டிய அவசியமும் தவிர்க்க முடியாத புறச்சூழல் நடவடிக்கைகளுமே ம.தி.மு.க. மேற்கொண்ட கூட்டணி முடிவுகளுக்குக் காரணம்.
98 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொண்டது சரியான முடிவுதான். ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, எங்கள் இயக்கத்தில் 90 விழுக்காட்டினர் தி.மு.க-வோடு உடன்பாடு வேண்டாம் என்று வெறுக்கின்ற சூழ்நிலையை தி.மு.க-தான் ஏற்படுத்தியது. எனவே, என் மனதில் விருப்பம் இன்றியே, அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால், பணத்துக்காகக் கூட்டணிவைத்தேன் என்று அபாண்டமான பழியும் தூற்றலும் என் மீது வீசப்பட்டது.
அது ஒரு தவறான முடிவுதான் என்பதை உணர்கிறேன். கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய 'அரங்கேற்றம்’ திரைப்படத்தில், கதாநாயகிக்கு ஏற்பட்ட நிலைமையை ஒப்புமை காட்டி, அதுபோலதான் இன்று என் நிலைமை என்பதை, அப்போதே தோழர்களிடம் சொல்லி இருக்கின்றேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் ஐந்து ஆண்டுகள் உறுதியாக இருந்தோம். 2011 சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் எடுத்த முடிவால், எங்கள் மீது சுமத்தப்பட்ட பழி தானாக நீங்கிவிட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தபோதிலும், விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டிலோ, தமிழ் ஈழ விடுதலை நிலைப்பாட்டிலோ, இம்மி அளவும் எங்கள் இயக்கம் விலகியதும் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கோபித்துக்கொள்வாரோ என்று கருதி, பேசாமல் இருந்ததும் இல்லை!''
பா.மோகன், திருப்பூர்.
''விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு, மிக மிக முக்கியமான காரணம் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்கள்?''
 ''ஈழத் தமிழர் இனப் படுகொலை நடத்திட, சிங்கள அரசுக்கு ஆயிரமாயிரம் கோடிப் பணத்தையும், சக்திவாய்ந்த ஆயுதங்களையும் வழங்கியதோடு, நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் சிங்களவனின் முப்படைகள், விடுதலைப் புலிகளை யுத்த காலத்தில் வீழ்த்துவதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்தது இந்தியா. அத்துடன் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், இரான் ஆகிய அணு ஆயுத நாடுகளின் அபரிமிதமான ஆயுத உதவிகளும்தான் யுத்த களத்தில் விடு தலைப் புலிகளின் தோல்விக்குக் காரணம் ஆகும்.
பிரபாகரன் அவர்கள் மிகவும் நேசித்த மாத்தையா, தலைவரையே கொலை செய்யத் திட்டமிட்ட துரோகத்தைப் போலவே, பிரபாகரன் அவர்கள் மிகவும் பாசம்கொண்டு இருந்த கருணா, சிங்க ளவர்களின் கைக்கூலியாக மாறித் துரோ கம் இழைத்ததால், கிழக்கில் புலிகளின் படை அணிவகுப்பில் சேதம் ஏற்படுத்த சிங்கள அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதுவே, வடக்கிலும் அவர்கள் ஊடுருவு வதற்குக் காரணம் ஆயிற்று!''
வீ.மலர், பொள்ளாச்சி.
''உங்கள் வீட்டில் யாருடைய படங் களை வைத்து இருக்கின்றீர்கள்?''
 ''சென்னை வீட்டில், திருவள்ளுவர் படம், தந்தை பெரியார் படம், அறிஞர் அண்ணா படம்; தி.மு..க-வில் இருந்து என் மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்த தி.மு.கழகக் கண்மணிகளாம் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐவரின் படங்கள்; 89-ல், வன்னிக் காடுகளுக்குச் சென்று, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, இந்திய ராணுவத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் சுற்றி வளைக்கப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டபோது, என் உயிரைக் காப்பதற்காகப் படகைச் செலுத்த முனைந்து, ராணு வத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சரத் என்ற பீட்டர் கென்னடியின் படம் ஆகிய வற்றைத்தான் வரவேற்பு அறையில் வைத்து இருக்கிறேன்.
என் பாட்டனார், 1923-ம் ஆண்டு கலிங்கப்பட்டியில் கட்டிய மூன்று மாடி வீட்டில், என் தந்தையார் ஒரேயரு படத்தைத்தான் வைத்து இருந்தார். அது திருவள்ளுவர் படம் மட்டும்தான். கடவுள் படமோ, வேறு எந்தத் தலைவர்களுடைய படங்களோ கிடையாது.
நான் கல்லூரிக்குச் சென்று, பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் இணைந்த பிறகு, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் படங்களை வைத்தேன். நாடாளுமன்ற உறுப்பினரானதற்குப் பின்னர், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகியோருடன் ஸ்ரீநகரில் அவர்களுடைய இல்லத்தில் எடுத்துக்கொண்ட படம்; வன்னிக் காட்டில் பிரபாகரனோடு எடுத்துக்கொண்ட படங்கள் இடம்பெற்றன. இப்போது, எங்கள் குடும்பத்தினரின் படங்களும் உள்ளன!''
எல்.கருப்பசாமி, விருதுநகர்.
''ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன?''
  ''ஒற்றுமை: பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை, வெள்ளித்தட்டில் வைத்த பொற்பழமாகக் காலம் வழங்கிவிட்டதால், கலைஞர் கருணாநிதி அதற்குத் தலைமை ஏற்று நடத்துவதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காலச் சூழ்நிலை வாரி வழங்கிவிட்டதால், ஜெயலலிதா அதற்குத் தலைமை தாங்கி நடத்துவதும்!
வேற்றுமை: 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் இயக்கத்தைத் தொடங்கிய நாளில் இருந்து, அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பக்கபலத்தோடு, கட்சித் தலைவர் ஆனார் கலைஞர் கருணாநிதி. ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள், அண்ணா தி.மு.கழகத்தைத் தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், அந்தக் கட்சியில் ஜெயலலிதா சேர்ந்தார்!''
கி.மனோகரன், தஞ்சாவூர்.
''தி.மு.க-வில் இருந்து உங்களோடு விலகி வந்த பலரும், பின்னர் உங்களை விட்டு விலகியது எதனால்?''
 ''1993-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் நாள், திட்டவட்டமாகச் சொன்னேன்... 'என் னோடு வந்தால், போராட்டக் களங்களைச் சந்திக்க நேரிடும்; துன்ப, துயரங்களைச் சுமக்க நேரிடும். பட்டம், பதவிகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். இதற்குச் சித்தமானவர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்!’ என்று. ஆனால், இயக்கத்தில் அமைச்சர் பதவி வாய்ப்புகள் வந்தபோது, சகாக்களுக்குத்தான் கிடைக்கச் செய்தேன். போராட்டங்களே நிறைந்த எனது பயணத்தில், தொடக்கத்தில் புறப்பட்டவர்கள் தொடர்ந்து வர இயலாது என்பதுதான் உலகம் முழுவதும் வரலாறு தரும் பாடம். அப்படித்தான், இங்கும் சிலர் விலகிச் சென்றனர். அவர்களை நான் பழித்தது இல்லை. என்னோடு பயணித்தவரையிலும் அவர்களுக்கு என் நன்றி!''
எஸ்.கதிரேசன், துறையூர்.
''வரலாறு மீதுதான் உங்களுக்கு அதிகமான விருப்பமா?''
 ''ஆமாம். வரலாறுதானே படிப்பினை தருகின்றது; வரலாறுதானே மீண்டும் திரும்புகிறது. என்னை மிகவும் கவர்ந்த வரலாற்றுப் புத்தகம், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதிய, உலக சரித்திரக் கடிதங்கள்தாம்!''
வான்மதி, தண்டையார்பேட்டை.
''நீங்கள் இதுவரை எத்தனை முறை சிறைக்குச் சென்று உள்ளீர்கள். எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளீர்கள்?''
 ''28 முறை சிறைக்குச் சென்று உள்ளேன். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா கைதியாக பாளையங்கோட்டை, சேலம் என இரு சிறைகளில் 12 மாதங்கள். பொடா கைதியாக, வேலூர் சிறையில் 19 மாதங்கள். அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில், பாளைச் சிறை யில் 3 மாதங்கள். தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, ஒவ்வொரு முறை கைது செய்யப்படும்போதும், 15 நாள்கள் முதல் இரண்டு மாதங்கள் வரையிலும் சிறையில் இருந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியிலும் கைதுசெய்யப்பட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளேன்!''
கு.சிங்காரவேலு, ராமநாதபுரம்.
''உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்?''
 ''எனக்கு ஒரு மகன், இரண்டு புதல்வியர். மகன் துரை வையாபுரிதான் மூத்தவர். சிறிய அளவில், சொந்த வணிகத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மூத்த மகள் இராஜலெட்சுமி, மருமகன் இராஜசேகர், தேனியில் வசிக்கின்றனர். என் மருமகனின் குடும்பத்தினர், 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவரும் பருத்தி வணிகம் மற்றும் நூற்பு ஆலைப் பணிகளில், மருமகன் ஈடுபட்டு இருக்கிறார்.
இரண்டாவது மகள் கண்ணகி, மருமகன் ஜான் புஷ்பராஜ், அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கின்றனர். மருமகன், தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகின்றார். என் பிள்ளைகள் மூவருமே நன்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள்!''
சிந்தாமணி, சென்னை-29.
''அண்மையில் நீங்கள் பார்த்த திரைப்படம் எது? அந்தப் படம் பிடித்து இருந்ததா?''
 ''முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவு நாளுக்குப் பிறகு, திரை அரங்கங்களுக்குச் சென்று படம் பார்ப்பது இல்லை என்று முடிவு எடுத்தேன். விதிவிலக்குகள் தவிர்க்க முடியாதவைதானே? இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், நார்வே நண்பர்களோடு சேர்ந்து தயாரித்த, 'உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். தமிழ் ஈழச் சோக வரலாற்றை நெஞ்சில் வரையும்    காவியம் அது!''

விகடன் மேடை - வைகோ


விகடன் மேடை - வைகோ

பி.மாரி, தஞ்சாவூர்.
''புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா... இல்லையா?''
 ''மாவீரர் திலகம் பிரபாகரன் இருக்கின்றார்; தமிழ் ஈழ விடுதலை உணர்வாளர்களை இயக்குகின்றார்!''
ஆ.கிருபாகரன், செய்யாறு.
''எந்த வயதில் முதன்முதலாக நீங்கள் மைக் பிடித்தீர்கள் என்பது நினைவில் இருக்கிறதா?''
 ''எட்டு வயது. மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தி, பூமி தான இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, சர்வோதய இயக்கத் தலைவர்கள் ஜெகந்நாதன், நடராஜன் ஆகியோருடன் கலிங்கப்பட்டிக்கு வருகை தந்தார். அப்போது, என் பள்ளி ஆசிரியர்கள் கவிஞர் சட்டமுத்தன் அவர்களும் வயலி மாணிக்கவாசகம் அவர்களும் கடையெழு வள்ளல்களை வருணித்துத் தயாரித்துக் கொடுத்த உரையை மனனம் செய்து, ஒத்திகை பார்த்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில், கூச்சம் இன்றி, எழுதிவைத்ததைப் பாராமல் பேசினேன். அதை, மகாத்மாவின் பேரனுக்கு இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு, திருநெல்வேலிக்குச் சென்ற காந்தியின் பேரன், அங்கே என் பேச்சைப் பாராட்டிப் பேசியது, அப்போதைய 'சுதேசமித்திரன்’ இதழில் வெளிவந்து இருந்தது!''
கே.ராமன், சென்னை.
''தொடர்ந்து 35 ஆண்டுகளாக டெல்லித் தொடர்புகள் உள்ள உங்களுக்கு, இந்தி பேச, எழுத, படிக்க வருமா?''
 ''இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வில், அண்ணாவின் பாசறையில் வார்க்கப்பட்டவன் நான். அடிப்படை லட்சியங்களில் நான் எள் முனை அளவும் சமரசம் செய்துகொண்டது இல்லை. எனக்கு இந்தி பேச, எழுத, படிக்கத் தெரியாது. பிறர் பேசினாலும் ஒன்றும் புரியாது. ஆயினும் இரண்டு மூன்று சொற்களைத் தெரிந்துவைத்து இருக்கிறேன். ஏக், தோ, சீதா (நேராகச் செல்வது), பஸ் (போதும்).
ஏனெனில், நான் டெல்லியில் மீனா பாக் இரண்டாம் எண் வீட்டில் தங்கி இருந்தேன்; அங்கிருந்து நாடாளுமன்றம் செல்வதற்காக, டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டாக்ஸியை வரவழைக்க, 'ஏக் டாக்சி, தோ நம்பர் மீனா பாக்’ என்று தொலைபேசியில் சொல்லுவேன். வண்டி நேராகப் போவதற்கு 'சீதா’ என்பேன். வண்டியை நிறுத்த வேண்டும் என்றால், 'பஸ்’ என்பேன். அவ்வளவுதான்!''
மு.இளவரசு, காஞ்சிபுரம்.
''நீங்கள் வழக்கறிஞருக்குப் படித்து இருக்கின்றீர்கள். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணி ஆற்றியும் இருக்கின்றீர்கள். நிரந்தரமாக வழக்கறிஞர் தொழில் பார்க்காதது குறித்து உங்களுக்கு இப்போது வருத்தம் இருக்கின்றதா?''
 ''நான் சட்டம் பயின்றதும் பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதியரசராகத் திகழ்ந்த இரத்தினவேல் பாண்டியன் அவர்களிடம் சிறிது காலமும் அவருக்கும் சீனியராக இருந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன் அவர்களிடமும் ஜூனியராகப் பயிற்சி பெற்றது, மனதுக்குத் தித்திப் பானது. ஆனால், பொது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பின்னர், முழு நேர வழக்கறிஞராகத் தொழில் புரிய இயலவில்லையே என்று நான் ஒருபோதும் வருந்தியது இல்லை.
அநீதியை எதிர்த்துப் போராடவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடவும்; விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற, டிரிப்யூனலில் வாதாடவும்; தற்போது உயர் நீதிமன்றத்திலும் அதற்காக வழக்குத் தொடுத்து வாதாடவும்; நாஞ்சில் சம்பத் அவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தபோது, அதை எதிர்த்து வாதாடி, கைது ஆணையை ரத்து செய்ய இயன்றதும்; மூன்று தமிழர் உயிர் காக்க, புகழ்மிக்க ராம்ஜெத்மலானி அவர்களோடு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞனாக இயங்குவதற்கும், நான் படித்த சட்டப் படிப்பு வாய்ப்பைத் தந்து உள்ளதே என்று மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்!''
ப.ஸ்டாலின், வந்தவாசி.
''உலகத் தலைவர்களுள், உங்களுக் குப் பிடித்த தலைவர் யார்? ஏன்?''
 ''ஆபிரகாம் லிங்கன்.
இறந்துபோன தாய்க்குக் கல்லறை கட்டுவதற்குக்கூட வசதி அற்ற நிலையில், உடல் உழைப்பாலும் கடுமையான முயற்சிகளாலும் படித்து முன்னேறி, வழக்கறிஞராகி, ஓர் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து, தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தபோதிலும், தன் பேச்சாற்றலால், சத்திய வேட்கையால், அறம் சார்ந்த அரசியலால், அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
உடனே, எழுந்த உள்நாட்டுப் போரையும் சந்திக்க நேர்ந்த வேளையில், உடன் இருந் தவர்கள் முதுகில் குத்தியபோதும், தனது உறுதியான தலைமைப் பண்பை நிரூபித்து, கறுப்பர்களின் அடிமை விலங்கை ஒடிக்க நம்பிக்கை ஊட்டும் பிரகடனத்தையும் தந்து, தன்னை வெறுத்தவர்களையும் பகைத்தவர்களையும் அரவணைத்து, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளைக் கொடுத்து, ஜனநாயக ஒளிச் சுடரை உலகத்தின் கண்களுக்கு உயர்த்திக் காட்டிய மாபெரும் தலைவர்தான் ஆபிரகாம் லிங்கன். ஒரு வெறியனின் துப்பாக்கிக் குண்டுக்குத் தன் உயிரைத் தந்தார்.
அதனால்தான், வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, 'சங்கொலி’ வார இதழில் தொடர் கடிதங்களை எழுதிய நான், 'அரசியலுக் கோர் ஆபிரகாம் லிங்கன்’ என்ற தலைப்பில் நான்கு வாரங்கள் தொடர்ந்து எழுதினேன்.''
கே.ராஜன், கோயம்புத்தூர்.
''தி.மு.க-வின் ஸ்டார் பேச்சாளர் வைகோ; ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ. இரண்டுக்கும் என்ன வேறு பாட்டை உணர்கிறீர்கள்?''

கட்சி, அதன் தலைமை, அதற்காக உழைப்பதனால் ஏற்படும் மனநிறைவு என்று, ஓய்வு என்பதே அறியாமல் உழைப்பதில் சுகம் கண்டவன் நான். ஆனால், மறுமலர்ச்சி தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை, லட்சோபலட்சம் அண்ணாவின் தம்பிகள் எனக்கு வழங்கி இருப்பதனால், அந்த சகாக்களின் நலனையும், அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தோடு, சோதனைகள் முற்றுகை இட்டுக்கொண்டே இருக்கின்ற நிலையில், அவர்களை விடிய லின் கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என்கின்ற கவலையோடு, இரவிலும் பகலிலும் சதா சர்வகாலமும் பாடுகளையும், பாரங்களையும் சுமந்து கொண்டே, சோர்வுக்கோ, தளர்ச்சிக்கோ இம்மியும் இடம் கொடுக்காமல் இயங்கிக்கொண்டே இருக் கிறேன். இதுதான் வேறுபாடு!'' ''தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக நான் கருதப்பட்டபோது, கட்சிக்கு மக்கள் ஆதரவை வளர்க்க வேண்டுமே, இளைஞர் கூட்டத்தை ஈர்க்க வேண்டுமே, பலம் வாய்ந்த எதிரிகளின் தாக்குதல்களை, விமர்சனங்களை முறியடித்துப் பந்தாட வேண்டுமே என்ற உத்வேகத்தோடு பணி ஆற்றினேன். கழகத் தோழர்கள் என் உரையைக் கேட்டுக் கரவொலி எழுப்புவதும், கண்ணீர் சிந்த உணர்ச்சிகொள்வதும், போர்க் குணத்தோடு ஆவேசம் பெறுவதும், என்னைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தியது. அது என் வாழ்வின் வசந்த காலம். அதுவே கட்சியில் இடர்களையும் பிரச்னைகளையும் உருவாக்கும் என்று கனவிலும் கருதியது இல்லை.
ச.ஐயப்பன், சென்னை-75.
''தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?''
 ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.
எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன். 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய நானே விரைந்தேன்.
உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் அவர்கள், அதற்கு முன்பு எனக்குப் பழக்கம் இல்லாதவர். அந்த வேளையில் என் வீட்டுக்கு வந்தார்.
'நீங்கள் சோர்ந்துவிடக் கூடாது; ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லலாம்என உங்கள் வீட்டுக்கு வந்தேன். இங்கே, நீங்கள் இயங்கு கின்ற வேகத்தைப் பார்த்துத் திகைத்துப்போனேன்’ என்றவர், கோடானுகோடி மக்களின் ஆதரவைப் பெற்று இருந்த ஒரு தலைவர், தேர்தல் களத்தில் ஒரு முறை தோற்றவுடன், மிகவும் மனம் உடைந்து சோர்ந்ததையும், அவரது பலத்தை நினைவூட்டி தான் ஆறுதல் கூறியதையும் சொல்லிவிட்டு, எனது போர்க் குணம் தன்னை வியக்கவைத்துவிட்டது என்றார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''