Sunday, December 11, 2011


செ.பாரி, திருவாரூர்.
 ''ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரித்தது தவறு என்று, இப்போதாவது உணர்கின்றீர்களா?''
 '' 'சமரசம் ஒரு தேவையான ஆயுதம்; நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வலுப்படுத்திக்கொள்ள, அழிக்க நினைக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க, சமரசம் தேவைப்படுகின்றது’ என்றார் பகத்சிங்.
அடிப்படைக் கொள்கைகளைப் பலியிட்டுவிடாமல், சுயநலத்துக்குத் துளியும் இடம் இன்றிச் செயல்படும்போது, சில வேளைகளில் தவிர்க்க முடியாமல் சில முடிவுகளை மேற்கொள்ள நேரிடுகின்றது. வரலாற்றில் அதனை உணர்த்துகின்ற பாடங்கள் ஏராளம்.
நேதாஜி, ஹிட்லரோடு கரம் குலுக்கவில்லையா?
மா சே துங், சியாங்கே ஷேக் படையினரோடு தோள் கொடுக்கவில்லையா?
சோவியத், அக்டோபர் புரட்சிக்குப் பின், புதிய பொருளாதாரக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லையா?
இந்தியாவிலும்  தமிழ்நாட்டிலும் கூட்டணிகள் அமைந்ததையும் எதிரும் புதிருமானவர்கள் கரம் கோர்த்ததையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.
எனவே, சூழ்நிலையும் இயக்கத்தைக் காக்க வேண்டிய அவசியமும் தவிர்க்க முடியாத புறச்சூழல் நடவடிக்கைகளுமே ம.தி.மு.க. மேற்கொண்ட கூட்டணி முடிவுகளுக்குக் காரணம்.
98 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொண்டது சரியான முடிவுதான். ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, எங்கள் இயக்கத்தில் 90 விழுக்காட்டினர் தி.மு.க-வோடு உடன்பாடு வேண்டாம் என்று வெறுக்கின்ற சூழ்நிலையை தி.மு.க-தான் ஏற்படுத்தியது. எனவே, என் மனதில் விருப்பம் இன்றியே, அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால், பணத்துக்காகக் கூட்டணிவைத்தேன் என்று அபாண்டமான பழியும் தூற்றலும் என் மீது வீசப்பட்டது.
அது ஒரு தவறான முடிவுதான் என்பதை உணர்கிறேன். கே.பாலசந்தர் அவர்கள் இயக்கிய 'அரங்கேற்றம்’ திரைப்படத்தில், கதாநாயகிக்கு ஏற்பட்ட நிலைமையை ஒப்புமை காட்டி, அதுபோலதான் இன்று என் நிலைமை என்பதை, அப்போதே தோழர்களிடம் சொல்லி இருக்கின்றேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் ஐந்து ஆண்டுகள் உறுதியாக இருந்தோம். 2011 சட்டமன்றத் தேர்தலில், நாங்கள் எடுத்த முடிவால், எங்கள் மீது சுமத்தப்பட்ட பழி தானாக நீங்கிவிட்டது.
அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்தபோதிலும், விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டிலோ, தமிழ் ஈழ விடுதலை நிலைப்பாட்டிலோ, இம்மி அளவும் எங்கள் இயக்கம் விலகியதும் இல்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கோபித்துக்கொள்வாரோ என்று கருதி, பேசாமல் இருந்ததும் இல்லை!''
பா.மோகன், திருப்பூர்.
''விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு, மிக மிக முக்கியமான காரணம் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்கள்?''
 ''ஈழத் தமிழர் இனப் படுகொலை நடத்திட, சிங்கள அரசுக்கு ஆயிரமாயிரம் கோடிப் பணத்தையும், சக்திவாய்ந்த ஆயுதங்களையும் வழங்கியதோடு, நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் சிங்களவனின் முப்படைகள், விடுதலைப் புலிகளை யுத்த காலத்தில் வீழ்த்துவதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்தது இந்தியா. அத்துடன் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், இரான் ஆகிய அணு ஆயுத நாடுகளின் அபரிமிதமான ஆயுத உதவிகளும்தான் யுத்த களத்தில் விடு தலைப் புலிகளின் தோல்விக்குக் காரணம் ஆகும்.
பிரபாகரன் அவர்கள் மிகவும் நேசித்த மாத்தையா, தலைவரையே கொலை செய்யத் திட்டமிட்ட துரோகத்தைப் போலவே, பிரபாகரன் அவர்கள் மிகவும் பாசம்கொண்டு இருந்த கருணா, சிங்க ளவர்களின் கைக்கூலியாக மாறித் துரோ கம் இழைத்ததால், கிழக்கில் புலிகளின் படை அணிவகுப்பில் சேதம் ஏற்படுத்த சிங்கள அரசுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதுவே, வடக்கிலும் அவர்கள் ஊடுருவு வதற்குக் காரணம் ஆயிற்று!''
வீ.மலர், பொள்ளாச்சி.
''உங்கள் வீட்டில் யாருடைய படங் களை வைத்து இருக்கின்றீர்கள்?''
 ''சென்னை வீட்டில், திருவள்ளுவர் படம், தந்தை பெரியார் படம், அறிஞர் அண்ணா படம்; தி.மு..க-வில் இருந்து என் மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்த தி.மு.கழகக் கண்மணிகளாம் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐவரின் படங்கள்; 89-ல், வன்னிக் காடுகளுக்குச் சென்று, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, இந்திய ராணுவத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் சுற்றி வளைக்கப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டபோது, என் உயிரைக் காப்பதற்காகப் படகைச் செலுத்த முனைந்து, ராணு வத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சரத் என்ற பீட்டர் கென்னடியின் படம் ஆகிய வற்றைத்தான் வரவேற்பு அறையில் வைத்து இருக்கிறேன்.
என் பாட்டனார், 1923-ம் ஆண்டு கலிங்கப்பட்டியில் கட்டிய மூன்று மாடி வீட்டில், என் தந்தையார் ஒரேயரு படத்தைத்தான் வைத்து இருந்தார். அது திருவள்ளுவர் படம் மட்டும்தான். கடவுள் படமோ, வேறு எந்தத் தலைவர்களுடைய படங்களோ கிடையாது.
நான் கல்லூரிக்குச் சென்று, பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் இணைந்த பிறகு, அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் படங்களை வைத்தேன். நாடாளுமன்ற உறுப்பினரானதற்குப் பின்னர், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகியோருடன் ஸ்ரீநகரில் அவர்களுடைய இல்லத்தில் எடுத்துக்கொண்ட படம்; வன்னிக் காட்டில் பிரபாகரனோடு எடுத்துக்கொண்ட படங்கள் இடம்பெற்றன. இப்போது, எங்கள் குடும்பத்தினரின் படங்களும் உள்ளன!''
எல்.கருப்பசாமி, விருதுநகர்.
''ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன?''
  ''ஒற்றுமை: பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை, வெள்ளித்தட்டில் வைத்த பொற்பழமாகக் காலம் வழங்கிவிட்டதால், கலைஞர் கருணாநிதி அதற்குத் தலைமை ஏற்று நடத்துவதும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காலச் சூழ்நிலை வாரி வழங்கிவிட்டதால், ஜெயலலிதா அதற்குத் தலைமை தாங்கி நடத்துவதும்!
வேற்றுமை: 1949-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் இயக்கத்தைத் தொடங்கிய நாளில் இருந்து, அவருக்கு உறுதுணையாக இருந்து உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பக்கபலத்தோடு, கட்சித் தலைவர் ஆனார் கலைஞர் கருணாநிதி. ஆனால், புரட்சித் தலைவர் அவர்கள், அண்ணா தி.மு.கழகத்தைத் தொடங்கி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், அந்தக் கட்சியில் ஜெயலலிதா சேர்ந்தார்!''
கி.மனோகரன், தஞ்சாவூர்.
''தி.மு.க-வில் இருந்து உங்களோடு விலகி வந்த பலரும், பின்னர் உங்களை விட்டு விலகியது எதனால்?''
 ''1993-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் நாள், திட்டவட்டமாகச் சொன்னேன்... 'என் னோடு வந்தால், போராட்டக் களங்களைச் சந்திக்க நேரிடும்; துன்ப, துயரங்களைச் சுமக்க நேரிடும். பட்டம், பதவிகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். இதற்குச் சித்தமானவர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்!’ என்று. ஆனால், இயக்கத்தில் அமைச்சர் பதவி வாய்ப்புகள் வந்தபோது, சகாக்களுக்குத்தான் கிடைக்கச் செய்தேன். போராட்டங்களே நிறைந்த எனது பயணத்தில், தொடக்கத்தில் புறப்பட்டவர்கள் தொடர்ந்து வர இயலாது என்பதுதான் உலகம் முழுவதும் வரலாறு தரும் பாடம். அப்படித்தான், இங்கும் சிலர் விலகிச் சென்றனர். அவர்களை நான் பழித்தது இல்லை. என்னோடு பயணித்தவரையிலும் அவர்களுக்கு என் நன்றி!''
எஸ்.கதிரேசன், துறையூர்.
''வரலாறு மீதுதான் உங்களுக்கு அதிகமான விருப்பமா?''
 ''ஆமாம். வரலாறுதானே படிப்பினை தருகின்றது; வரலாறுதானே மீண்டும் திரும்புகிறது. என்னை மிகவும் கவர்ந்த வரலாற்றுப் புத்தகம், பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதிய, உலக சரித்திரக் கடிதங்கள்தாம்!''
வான்மதி, தண்டையார்பேட்டை.
''நீங்கள் இதுவரை எத்தனை முறை சிறைக்குச் சென்று உள்ளீர்கள். எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளீர்கள்?''
 ''28 முறை சிறைக்குச் சென்று உள்ளேன். நெருக்கடி நிலைக் காலத்தில், மிசா கைதியாக பாளையங்கோட்டை, சேலம் என இரு சிறைகளில் 12 மாதங்கள். பொடா கைதியாக, வேலூர் சிறையில் 19 மாதங்கள். அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில், பாளைச் சிறை யில் 3 மாதங்கள். தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, ஒவ்வொரு முறை கைது செய்யப்படும்போதும், 15 நாள்கள் முதல் இரண்டு மாதங்கள் வரையிலும் சிறையில் இருந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியிலும் கைதுசெய்யப்பட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்து உள்ளேன்!''
கு.சிங்காரவேலு, ராமநாதபுரம்.
''உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கின்றார்கள்?''
 ''எனக்கு ஒரு மகன், இரண்டு புதல்வியர். மகன் துரை வையாபுரிதான் மூத்தவர். சிறிய அளவில், சொந்த வணிகத்தில் ஈடுபட்டு உள்ளார்.
மூத்த மகள் இராஜலெட்சுமி, மருமகன் இராஜசேகர், தேனியில் வசிக்கின்றனர். என் மருமகனின் குடும்பத்தினர், 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவரும் பருத்தி வணிகம் மற்றும் நூற்பு ஆலைப் பணிகளில், மருமகன் ஈடுபட்டு இருக்கிறார்.
இரண்டாவது மகள் கண்ணகி, மருமகன் ஜான் புஷ்பராஜ், அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கின்றனர். மருமகன், தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகின்றார். என் பிள்ளைகள் மூவருமே நன்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள்!''
சிந்தாமணி, சென்னை-29.
''அண்மையில் நீங்கள் பார்த்த திரைப்படம் எது? அந்தப் படம் பிடித்து இருந்ததா?''
 ''முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவு நாளுக்குப் பிறகு, திரை அரங்கங்களுக்குச் சென்று படம் பார்ப்பது இல்லை என்று முடிவு எடுத்தேன். விதிவிலக்குகள் தவிர்க்க முடியாதவைதானே? இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், நார்வே நண்பர்களோடு சேர்ந்து தயாரித்த, 'உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். தமிழ் ஈழச் சோக வரலாற்றை நெஞ்சில் வரையும்    காவியம் அது!''

No comments:

Post a Comment