Sunday, December 11, 2011

விகடன் மேடை - வைகோ


விகடன் மேடை - வைகோ

பி.மாரி, தஞ்சாவூர்.
''புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா... இல்லையா?''
 ''மாவீரர் திலகம் பிரபாகரன் இருக்கின்றார்; தமிழ் ஈழ விடுதலை உணர்வாளர்களை இயக்குகின்றார்!''
ஆ.கிருபாகரன், செய்யாறு.
''எந்த வயதில் முதன்முதலாக நீங்கள் மைக் பிடித்தீர்கள் என்பது நினைவில் இருக்கிறதா?''
 ''எட்டு வயது. மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தி, பூமி தான இயக்கத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, சர்வோதய இயக்கத் தலைவர்கள் ஜெகந்நாதன், நடராஜன் ஆகியோருடன் கலிங்கப்பட்டிக்கு வருகை தந்தார். அப்போது, என் பள்ளி ஆசிரியர்கள் கவிஞர் சட்டமுத்தன் அவர்களும் வயலி மாணிக்கவாசகம் அவர்களும் கடையெழு வள்ளல்களை வருணித்துத் தயாரித்துக் கொடுத்த உரையை மனனம் செய்து, ஒத்திகை பார்த்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில், கூச்சம் இன்றி, எழுதிவைத்ததைப் பாராமல் பேசினேன். அதை, மகாத்மாவின் பேரனுக்கு இந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு, திருநெல்வேலிக்குச் சென்ற காந்தியின் பேரன், அங்கே என் பேச்சைப் பாராட்டிப் பேசியது, அப்போதைய 'சுதேசமித்திரன்’ இதழில் வெளிவந்து இருந்தது!''
கே.ராமன், சென்னை.
''தொடர்ந்து 35 ஆண்டுகளாக டெல்லித் தொடர்புகள் உள்ள உங்களுக்கு, இந்தி பேச, எழுத, படிக்க வருமா?''
 ''இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்வில், அண்ணாவின் பாசறையில் வார்க்கப்பட்டவன் நான். அடிப்படை லட்சியங்களில் நான் எள் முனை அளவும் சமரசம் செய்துகொண்டது இல்லை. எனக்கு இந்தி பேச, எழுத, படிக்கத் தெரியாது. பிறர் பேசினாலும் ஒன்றும் புரியாது. ஆயினும் இரண்டு மூன்று சொற்களைத் தெரிந்துவைத்து இருக்கிறேன். ஏக், தோ, சீதா (நேராகச் செல்வது), பஸ் (போதும்).
ஏனெனில், நான் டெல்லியில் மீனா பாக் இரண்டாம் எண் வீட்டில் தங்கி இருந்தேன்; அங்கிருந்து நாடாளுமன்றம் செல்வதற்காக, டாக்ஸி ஸ்டாண்டில் இருந்து டாக்ஸியை வரவழைக்க, 'ஏக் டாக்சி, தோ நம்பர் மீனா பாக்’ என்று தொலைபேசியில் சொல்லுவேன். வண்டி நேராகப் போவதற்கு 'சீதா’ என்பேன். வண்டியை நிறுத்த வேண்டும் என்றால், 'பஸ்’ என்பேன். அவ்வளவுதான்!''
மு.இளவரசு, காஞ்சிபுரம்.
''நீங்கள் வழக்கறிஞருக்குப் படித்து இருக்கின்றீர்கள். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணி ஆற்றியும் இருக்கின்றீர்கள். நிரந்தரமாக வழக்கறிஞர் தொழில் பார்க்காதது குறித்து உங்களுக்கு இப்போது வருத்தம் இருக்கின்றதா?''
 ''நான் சட்டம் பயின்றதும் பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதியரசராகத் திகழ்ந்த இரத்தினவேல் பாண்டியன் அவர்களிடம் சிறிது காலமும் அவருக்கும் சீனியராக இருந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் செல்லப்பாண்டியன் அவர்களிடமும் ஜூனியராகப் பயிற்சி பெற்றது, மனதுக்குத் தித்திப் பானது. ஆனால், பொது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பின்னர், முழு நேர வழக்கறிஞராகத் தொழில் புரிய இயலவில்லையே என்று நான் ஒருபோதும் வருந்தியது இல்லை.
அநீதியை எதிர்த்துப் போராடவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடவும்; விடுதலைப் புலிகள் மீதான தடையை அகற்ற, டிரிப்யூனலில் வாதாடவும்; தற்போது உயர் நீதிமன்றத்திலும் அதற்காக வழக்குத் தொடுத்து வாதாடவும்; நாஞ்சில் சம்பத் அவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தபோது, அதை எதிர்த்து வாதாடி, கைது ஆணையை ரத்து செய்ய இயன்றதும்; மூன்று தமிழர் உயிர் காக்க, புகழ்மிக்க ராம்ஜெத்மலானி அவர்களோடு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞனாக இயங்குவதற்கும், நான் படித்த சட்டப் படிப்பு வாய்ப்பைத் தந்து உள்ளதே என்று மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்!''
ப.ஸ்டாலின், வந்தவாசி.
''உலகத் தலைவர்களுள், உங்களுக் குப் பிடித்த தலைவர் யார்? ஏன்?''
 ''ஆபிரகாம் லிங்கன்.
இறந்துபோன தாய்க்குக் கல்லறை கட்டுவதற்குக்கூட வசதி அற்ற நிலையில், உடல் உழைப்பாலும் கடுமையான முயற்சிகளாலும் படித்து முன்னேறி, வழக்கறிஞராகி, ஓர் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து, தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தபோதிலும், தன் பேச்சாற்றலால், சத்திய வேட்கையால், அறம் சார்ந்த அரசியலால், அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.
உடனே, எழுந்த உள்நாட்டுப் போரையும் சந்திக்க நேர்ந்த வேளையில், உடன் இருந் தவர்கள் முதுகில் குத்தியபோதும், தனது உறுதியான தலைமைப் பண்பை நிரூபித்து, கறுப்பர்களின் அடிமை விலங்கை ஒடிக்க நம்பிக்கை ஊட்டும் பிரகடனத்தையும் தந்து, தன்னை வெறுத்தவர்களையும் பகைத்தவர்களையும் அரவணைத்து, அவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளைக் கொடுத்து, ஜனநாயக ஒளிச் சுடரை உலகத்தின் கண்களுக்கு உயர்த்திக் காட்டிய மாபெரும் தலைவர்தான் ஆபிரகாம் லிங்கன். ஒரு வெறியனின் துப்பாக்கிக் குண்டுக்குத் தன் உயிரைத் தந்தார்.
அதனால்தான், வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, 'சங்கொலி’ வார இதழில் தொடர் கடிதங்களை எழுதிய நான், 'அரசியலுக் கோர் ஆபிரகாம் லிங்கன்’ என்ற தலைப்பில் நான்கு வாரங்கள் தொடர்ந்து எழுதினேன்.''
கே.ராஜன், கோயம்புத்தூர்.
''தி.மு.க-வின் ஸ்டார் பேச்சாளர் வைகோ; ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ. இரண்டுக்கும் என்ன வேறு பாட்டை உணர்கிறீர்கள்?''

கட்சி, அதன் தலைமை, அதற்காக உழைப்பதனால் ஏற்படும் மனநிறைவு என்று, ஓய்வு என்பதே அறியாமல் உழைப்பதில் சுகம் கண்டவன் நான். ஆனால், மறுமலர்ச்சி தி.மு.க-வின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை, லட்சோபலட்சம் அண்ணாவின் தம்பிகள் எனக்கு வழங்கி இருப்பதனால், அந்த சகாக்களின் நலனையும், அமைப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தோடு, சோதனைகள் முற்றுகை இட்டுக்கொண்டே இருக்கின்ற நிலையில், அவர்களை விடிய லின் கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே என்கின்ற கவலையோடு, இரவிலும் பகலிலும் சதா சர்வகாலமும் பாடுகளையும், பாரங்களையும் சுமந்து கொண்டே, சோர்வுக்கோ, தளர்ச்சிக்கோ இம்மியும் இடம் கொடுக்காமல் இயங்கிக்கொண்டே இருக் கிறேன். இதுதான் வேறுபாடு!'' ''தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராக நான் கருதப்பட்டபோது, கட்சிக்கு மக்கள் ஆதரவை வளர்க்க வேண்டுமே, இளைஞர் கூட்டத்தை ஈர்க்க வேண்டுமே, பலம் வாய்ந்த எதிரிகளின் தாக்குதல்களை, விமர்சனங்களை முறியடித்துப் பந்தாட வேண்டுமே என்ற உத்வேகத்தோடு பணி ஆற்றினேன். கழகத் தோழர்கள் என் உரையைக் கேட்டுக் கரவொலி எழுப்புவதும், கண்ணீர் சிந்த உணர்ச்சிகொள்வதும், போர்க் குணத்தோடு ஆவேசம் பெறுவதும், என்னைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தியது. அது என் வாழ்வின் வசந்த காலம். அதுவே கட்சியில் இடர்களையும் பிரச்னைகளையும் உருவாக்கும் என்று கனவிலும் கருதியது இல்லை.
ச.ஐயப்பன், சென்னை-75.
''தொடர் தோல்விகள், உங்களை மனரீதியாகப் பலவீனம் அடையச் செய்துள்ளதா?''
 ''போராட்ட வாழ்வின் அங்கமே தோல்விகளும் படிப்பினைகளும்தான். இடையறாது தோல்விகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து வெற்றிகளைப் பெற்ற மாவீரர்கள், மாமனிதர்களின் வரலாறுகள்தாம் என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றன.
எந்தக் கட்டத்திலும், தோல்வியால் மனம் கலங்கியது இல்லை. மாறாக, தோல்விச் செய்தி கிடைத்தவுடன், அந்தக் கணத்திலேயே எழுந்து வேகமாகப் பணி ஆற்றத் தொடங்கிவிடுவேன். 96 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. முழுமையாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்த அரங்கத்தை ஏற்பாடு செய்ய நானே விரைந்தேன்.
உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர் குசேலர் அவர்கள், அதற்கு முன்பு எனக்குப் பழக்கம் இல்லாதவர். அந்த வேளையில் என் வீட்டுக்கு வந்தார்.
'நீங்கள் சோர்ந்துவிடக் கூடாது; ஊக்கத்தோடு தொடர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லலாம்என உங்கள் வீட்டுக்கு வந்தேன். இங்கே, நீங்கள் இயங்கு கின்ற வேகத்தைப் பார்த்துத் திகைத்துப்போனேன்’ என்றவர், கோடானுகோடி மக்களின் ஆதரவைப் பெற்று இருந்த ஒரு தலைவர், தேர்தல் களத்தில் ஒரு முறை தோற்றவுடன், மிகவும் மனம் உடைந்து சோர்ந்ததையும், அவரது பலத்தை நினைவூட்டி தான் ஆறுதல் கூறியதையும் சொல்லிவிட்டு, எனது போர்க் குணம் தன்னை வியக்கவைத்துவிட்டது என்றார்.
2009 நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் என் தோல்விச் செய்தி வந்துகொண்டு இருந்தபோது, அதற்காக வருந்தித் தீக்குளித்த தலித் சகோதரன் அய்யனாரைக் காப்பாற்ற, வத்திராயிருப்புக்கு விரைந்து சென்று, அவரை மதுரை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசேர்த்து, உடன் சிகிச்சை தந்து காப்பாற்றியபோதுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது!''

No comments:

Post a Comment