Friday, December 16, 2011

குமுறும் குமுளி!

முல்லைப் பெரியாறு விவகாரம், கேரள எல்லையில் ரத்த ஆறாக மாறிவிடும் அபாயம் தெரிகிறது. ஆனால், இந்த ஆபத்தை தமிழக, கேரள மற்றும் மத்திய அரசு உணரவில்லை என்பதுதான் வேதனை.
 அரசியல் கலப்பு இல்லாத உணர்வுப்பூர்வமான போராட்டத்தால் முக்கியக் கட்டத்தை எட்டி இருக்கிறது, தமிழர்களின் முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராட்டம். திக்கெட்டும் போலீஸ்; திரும்பிய பக்கம் எல்லாம் ஆக்ரோஷக் கோஷங்கள், எங்கெங்கும் மனிதத் தலைகள் என்று யுத்த களம் போல் காட்சி அளிக்கிறது, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி. இந்தக் கட்டுரையை டைப் செய்யும் நிமிடம்கூட, கம்பம் மெட்டு ஏரியாவில் தமிழக போலீஸ் தடியடி நடத்துவதாகத் தகவல்.
என்ன நடக்கிறது கம்பம் பள்ளத்தாக்கில்? இதோ பகீர் ரிப்போர்ட்!
கிராமத்துக்கு 10 பேர்!
போருக்குச் செல்லும் சிப்பாய்களைப் போல கம்பத்தில் இருந்து கேரளம் நோக்கி தினமும் ஊர்வலம் செல்பவர்களில், முக்கால்வாசிப் பேர் இளைஞர்களே! அந்த அளவுக்கு எரிமலையாய் கொதித்துக்கிடக்கும் கம்பம் பள்ளத்தாக்கு இளைஞர்கள் இப்போது ஒரு ரகசிய திட்டம் தீட்டுகிறார்களாம். கோர்ட் உத்தரவுகளை உதாசீனப்படுத்தும் கேரளா, அணை விவகாரத்தில் எதைச் செய்யவும் துணியலாம் என்பதால், பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்காக இளைஞர் படை ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். கிராமத்துக்கு 10 பேர் வீதம், 25 வயதுக்கு உட்பட்ட 1,000 இளைஞர்களை இந்தப் படையில் சிப்பாய்களாகச் சேர்க்கும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன.
கடந்த 9-ம் தேதி கம்பத்தில், தேனி கலெக்டர் பழனிசாமி அமைதிக் குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது பொங்கி எழுந்த இளைஞர் ஒருவர், ''நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருங்க... கேரளாக்காரன் அணையை உடைச்சிட்டுப் போகப்போறான். உங்களால் முடிஞ்சா பாருங்க.... இல்லைன்னா எங்க அமைப்புகிட்ட விஷயத்தை விட்டுருங்க, நாங்க பாத்துக்கிறோம்'' என்று ஆவேசப்பட்டார்.
''நீ எந்த அமைப்பு?'' என்று கலெக்டர் கேட்டதும், ''முல்லைப் பெரியாறு பாதுகாப்புப் படை'' என்று அந்த இளைஞரிடம் இருந்து தயக்கம் இன்றிப் பதில் வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்து, போர்ப் பயிற்சி எடுத்த பகுதி இது. மேலும், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும் அந்த இளைஞர் சொன்னதை பீதியோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறது உளவுத்துறை.
இந்தப் 'படை’ குறித்து நம்மிடம் பேசியவர்கள், ''நம்ம வீட்டை நாமே காவல் காக்குறதுதானே முறை... அது மாதிரித்தான் இதுவும். அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்காவிட்டால், 'முல்லைப் பெரியாறு பாதுகாப்புப் படை’ அந்தப் பணியைச் செய்யும். அதையும் தாண்டி அணைக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், கேரள அரசுக்குச் சொந்தமான இடுக்கி அணையை இல்லாமல் செஞ்சிடுவோம். இதற்கான அத்தனை பயிற்சிகளும் படையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்'' என்கிறார்கள். இதுகுறித்து ம.தி.மு.க-வின் கம்பம் நகரச் செயலாளர் ராம கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''யாரும் கூட்டம் போட்டுப் படை திரட்ட வேண்டியது இல்லை. அணையைப் பாதுகாக்கும் விஷயத்தில், இங்கே இருக்கிற அத்தனை பேருமே சிப்பாய்கள்தான்'' என்று சொன்னார்.
உக்கிரமாக்கியது யார்?
முல்லைப் பெரியாறு போராட்டத்தை இவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாற்றியதே கேரளத்தினர்தான். கேரள பி.ஜே.பி-காரர்கள் பேபி அணை மீது ஏறி நின்று ஷட்டரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதும், கேரள எஸ்டேட்களுக்கு வேலைக்குப் போயிருந்த தமிழகப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதும்தான் மக்களை போராட்டக் களத்துக்கு இழுத்து வந்துவிட்டது. இந்த சம்பவத்துக்குப் பதிலடியாக, கேரளத்துக்குள் புகுந்து எதையாவது செய்ய வேண்டும் எனத் தமிழக மக்கள் குமுளி எல்லைக்குள் படை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். போலீஸ் தடையை மீறி கேரளத்துக்குள் நுழைய முடியாமல் போவதால், கம்பம் மற்றும் தேனி பகுதியில் இருக்கும் கேரளத்துக்காரர்களின் சொத்துக்களைத் துவம்சம் செய்து ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கிறார்கள். 
வீரபாண்டி அருகில் உள்ள மலநாடு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து தினமும் 80 ஆயிரம் லிட்டர் பால் கேரளத்துக்குப் போகும். 10-ம் தேதி மதியம் இந்த நிலையத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள், 40 ஆயிரம் லிட்டர் பாலையும் கீழே கொட்டிக் கவிழ்த்தார்கள். கிராமங்களில் உள்ள கேரளத்தவர்களின் மாட்டுப் பண்ணைகள், தோட்டங்கள், முந்திரித் தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. 11-ம் தேதி குமுளிக்குப் பேரணியாய் சென்றவர்கள், குறுவனூத்து பாலம் அருகே கேரள சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான சொகுசு மாட்டு வண்டிகளுக்கு தீ வைத்து, அங்கே இருந்தக் கட்டடத்தையும் தரை மட்டம் ஆக்கினார்கள். காக்கனோடை ஏரியாவில் கேரளத்தவரின் கயிறு தொழிற்சாலை ஒன்றுக்கு தீ வைக்க வந்தவர்களை போலீஸார் தடுத்தனர். ''சார்... தீ வைக்க விடுங்க; இல்லாட்டி எங்களைச் சுட்டுத் தள்ளுங்க'' என்று ஆக்ரோஷம் காட்டியதால், சத்தம் காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது போலீஸ். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரை! மாலை 5 மணி வாக்கில்,  கம்பம் அவுட்டரில் உள்ள கேரளத்தவர்களின் புண்ணாக்கு கம்பெனிக்குத் தீ வைத்தனர். 'உங்களுக்கும் இதே கதிதான்’ என்று எச்சரித்து, அணைப்பதற்கு வந்த தீயணைப்பு வண்டியையும் திருப்பி அனுப்பியது இளைஞர் படை!
திரண்டது தமிழர் படை!
10-ம் தேதி காலையில் சுருளிப்பட்டியில் இருந்து திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் 2,000 பேர் குமுளியை நோக்கிக் கிளம்புவதாக போலீஸுக்குத் தகவல். ஆனால், அதையும் தாண்டி கூட்டம் மிக அதிகமாகத்  திரண்டு வரவே, தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறிப்போனது போலீஸ். ஊர்வலம் கம்பத்தை அடைந்தபோது, அக்கம்பக்கம் நின்றவர்கள் எல்லாம் தன்னெழுச்சியாக அதில் கலந்துகொண்டார்கள். 20 ஆயிரம் பேருக்கு மேல் குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்தது ஊர்வலம். லோயர் கேம்ப் பகுதியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய கலெக்டர் பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி-யான ராஜேஷ்தாஸும் எவ்வளவோ பேசிப் பார்த்தார்கள், ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. 'கேரள எல்லை வரை சென்று ஆர்ப்பாட்டம் செய்யாமல் திரும்ப மாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்னார்கள். அவர்கள் மீது போலீஸ் விரல்கூட படக் கூடாது என்பது மேலிட உத்தரவாம். அதனால், ''யப்பா.... என்னோட சொந்த ரிஸ்க்கில் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அங்க வந்து யாரும், எந்த பிரச்னையும் பண்ணக் கூடாது'' என்று கெஞ்சிக் கூத்தாடி, ஊர்வலத்தை குமுளிக்கு வழிநடத்தினார் ஐ.ஜி.
தமிழர் படை வருகிறது என்றதுமே குமுளியிலும் கேரள எல்லைக்குள்ளும் பதற்றம் பற்றிக்கொண்டது. கடைகள் அடைக்கப்பட்டு கேரள போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டார்கள். தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக விவசாயிகள், 'தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் 13 வழிகளையும் அடைக்க வேண்டும், பெரியாறு அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்புப் போடவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். 'உங்களின் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்து இருக்கிறேன்... உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று சொன்னார். அந்த சமாதானத்தைக் கேட்ட பிறகே, வந்த வழியே திரும்பியது கூட்டம்.
    உயிர் தப்பிய ஓ.பி.எஸ்.!
கடந்த 10-ம் தேதி இரவே, 'நாளைக்கு காலையில கே.கே.பட்டி, அணைப்பட்டி சுத்துவட்டார ஊர்கள்ல இருந்து குமுளிக்கு ஊர்வலம் கிளம்புறாங்கப்போய்!’ என்ற செய்தி போலீஸ் வட்டாரத்தைக் கலவரப்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரவோடு இரவாக கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. 11-ம் தேதி காலையில் குமுளி நோக்கி டூ வீலர்கள், லாரிகள், டிராக்டர்களில் புறப்பட்ட சுமார் 1 லட்சம் பேருக்கு மத்தியில், போலீஸ் படை கடலில் கரைத்த பெருங்காயமாகிப்போனது. 'நேத்து மாதிரி சும்மா திரும்ப மாட்டோம்’ என்று ஊர்வலத்தினர் முன்னோட்டம் கொடுத்ததால், கலக்கத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்தது போலீஸ். தடைகளைத் தகர்த்து குமுளியை அடைந்த ஊர்வலத்தினர், ஒரு கட்டத்தில் போலீஸ் மீதே கற்களையும் கம்புகளையும் வீசினார்கள். ''நாங்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வந்த எங்கள் மீதே தாக்குதல் நடத்துவது சரியில்லை'' என்று தென் மண்டல ஐ.ஜி. வருத்தம் காட்டினார்.
கோஷம் போட்டும் ஆத்திரம் அடங்காத கூட்டம் அப்படியே உட்கார்ந்துவிட்டது. மக்களைச் சமாதானப்படுத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல் நாளே குமுளிக்கு வருவதாக இருந்தார். ஆனால், போலீஸ் அவரைத் தடுத்துவிட்டது. சட்ட மன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டும் முதல்வரின் அறிவிப்பைச் சொல்லி சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் 11-ம் தேதி மாலை குமுளிக்குக் கிளம்பினார் பன்னீர்செல்வம்.
அமைச்சர் வருகையை ஐ.ஜி., மைக்கில் சொன்னதுமே, ''அவர் இங்கே வரக் கூடாது; வந்தா அசிங்கப்பட்டுப் போவார்'' என்று ஆவேசப்பட்டது கூட்டம். ஆனால், அதை மீறி வந்தார். குமுளி செக்போஸ்ட்டில் காரை நிறுத்திவிட்டு 200 மீட்டர் தூரம்கூட நடந்திருக்க மாட்டார்.. கம்புகள், கற்கள், செருப்புகள் என அனைத்தும் ஒரு சேர அவரைக் குறிவைத்துப் பறந்தன. பதறிப்போன போலீஸார், தாங்கள் கையில் வைத்திருந்த தடுப்புகளால் அமைச்சரை மூடிப் பாதுகாத்து பத்திரமாய் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அமைச்சரின் கார் நகர்ந்ததுமே ஐ.ஜி. கண் அசைக்க, லத்தியைச் சுழற்றி கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். இந்த விஷயம் காட்டுத் தீயாகப் பரவியதால், 200 பைக்குகளில் அமைச்சரின் காரைத் துரத்தியது ஒரு கோஷ்டி. அவர்களிடம் சிக்காமல் கம்பம் ரோட்டில் பறந்தது ஓ.பி.எஸ். கார். அப்படியும் சிக்கல். 'இந்த வழியாத்தானே அமைச்சர் வரணும்’ என்றபடியே கூடலூரில் கம்புகளுடன் திரண்டனர் மக்கள். இந்தத் தகவலை அமைச்சரின் காதில் போட்ட தங்கத் தமிழ்ச்செல்வன், 'நாம் இந்த வழியா போறது நல்லதில்லை’ என்று சொல்லவே, மீண்டும் வந்த வழியே திரும்பி, சுருளியாறு மின் நிலையம் ரோடு வழியாக எஸ்கேப் ஆனார் ஓ.பி.எஸ்.
தமிழர்களே ஓடிப் போங்கள்!
தமிழகத்தின் உணர்வுப் போராட்டங்களைப் பார்த்துவிட்டு, கேரளத்துக்காரர்களும் அங்கு உள்ள தமிழர்கள் மீது உக்கிரத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். 10-ம் தேதி குமுளியில் தமிழர்கள் திரண்டபோது, கேரள அரசு அங்கு போதுமான போலீஸாரைக் குவிக்கவில்லை என்று, பீர்மேடு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ-வான பிஜூமோன் மறியல்  நடத்தியதால், 11-ம் தேதி குமுளி எல்லையில் கூடுதலாக போலீசை இறக்கியது கேரள அரசு.
எஸ்டேட்களில் தங்கி இருந்து வேலை செய்யும் தமிழர்களை அங்கே இருந்து வெளியேறும்படி மிரட்டுகிறார்கள் கேரள வன்முறையாளர்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தும்  கொடுமைகளும் அரங்கேறத் தொடங்கின. அதனால், பத்துமுறி, மாலி, சாஸ்தான் ஓடை, மாதவன் கானல் போன்ற இடங்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற தமிழகம் நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். அதே சமயம், குமுளியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைக்கரை என்ற கிராமத்தில், 'நமக்காக உழைக்க வந்திருக்கும் இங்குள்ள தமிழர்களை நாம் தாக்கக் கூடாது’ என்று கேரளத் துக்காரர்கள் கூட்டம் போட்டு முடிவெடுத்த, நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது.
நடு ரோட்டில் சேலையை உருவி...
கம்பத்தைச் சேர்ந்த தாஸ் என்பவர் கேரளத்தில் கொட்டாரக்கரையில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்து கம்பம் திரும்பி இருக்கிறார். குமுளி எல்லைக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பஸ் நின்ற இடத்தில் டீ குடிக்க இறங்கினார். டீக் கடையில் அவர் தமிழில் பேச, 'நீ பாண்டி நாட்டுக்காரனோ?’ என்று கேட்டு சுற்றி வளைத்துத் தாக்கி இருக்கிறது ஒரு கேரளக் கும்பல். தன்னுடைய உடம்பில் இருந்த தழும்புகளைக் காட்டியபடி கதறிய தாஸ், ''நான் மலையாளத்துப் பெண்ணைத்தான் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டேன். நான் தமிழனாப் பொறந்தது குத்தமா? மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க சார். அதுகூட எனக்கு வலிக்கலை. பஸ்ல இருந்த ஒரு தமிழ்ப் பெண்ணை வலுக்கட்டாயமா கீழே இறக்கி, ரோட்டுல விட்டு சேலையை உருவுனாங்க; எனக்கு நெஞ்சே வெடிச்ச மாதிரி இருந்துச்சு. அந்தக் கும்பல்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடினேன், கர்நாடகத்துல இருந்து வந்த டூரிஸ்ட்காரங்கதான் கார் ஸீட்டுக்கு அடியில படுக்கவைச்சுக் கொண்டாந்து இறக்கிவிட்டாங்க'' என்றார்.
  ஏமாந்தா அம்புட்டுத்தான்!
தேனி மாவட்டத்தில் இருந்து மூன்று வழிகளில் கேரளாவைத் தொட முடியும். கம்பத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமுளி எல்லை தான் முக்கியமான வழித் தடம். கம்பத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் மெட்டு எல்லை, போடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் போடி மெட்டு எல்லை. பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் குடிநீர் ஆதாரமே பெரியாறுதான். கூடலூரில் இருந்து தேனி வரை இருபோகம் விளைகிறது. ''பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கவனமாகவும் குள்ளநரித்தனமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது கேரளா. நாமோ அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு அனைத்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்'' என்று சொல்லும் கம்பம் பள்ளத்தாக்கின் பட்டம் படித்த விவசாயிகள், ''அணையில் படகு விடும் உரிமை, மீன் பிடிக்கும் உரிமை, அணையின் நீர்மட்டத்தை நிர்ணயித்தல், அணைப் பாதுகாப்பு என நம்மிடம் இருந்த அத்தனை உரிமை களையும் பல்வேறு காரணங்களைச் சொல்லிப் பறித்துக்கொண்டுவிட்டது கேரள அரசு. நம்முடைய அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுத்து விட்டார்கள். பெரியாறு அணை தண்ணீரில் இருந்து அதிகபட்சம் ஒரு நாளைக்கு 140 மெகா வாட் மின்சாரத்தை எடுக்கிறோம். இதைக் காட்டிலும் ஏழு மடங்குப் பெரிய அணையை இடுக்கியில் கட்டி இருக்கிறது கேரளா. அங்கே கனடா நாட்டு ஒப்பந்தத்தில் மிகப் பெரிய நீர் மின் திட்டம் ஒன்று செயல்படுகிறது. அந்த அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சி. ஆனால், இதுவரை ஒரு தடவை கூட அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது இல்லை. பெரியாறு அணை இல்லாவிட்டால், அந்தத் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுபோய் இன்னும் கூடுதலாக மின்சாரம் எடுக்க முடியும் என்பதுதான் கேரளாவின் திட்டம். இந்த முறையும் நாம் ஏமாளித்தனமாக இருந்தால் கம்பம் பள்ளத்தாக்கு இன்னொரு ராமநாதபுரமாக மாறிவிடும்'' என்கிறார்கள்.
கம்பம் - குமுளி வரை போக்குவரத்து ஒரு வாரத்துக்கும் மேலாக தடைபட்டுக் கிடப்பதால், அந்த ஏரியாவே மயானம் போல் காட்சி அளிக்கிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பி குமுளியில் வர்த்தக நிறுவனங்களை நடத்தும் கேரளத்துக்காரர்கள் பொருளாதார ரீதியாக முடங்கிக் கிடக்கிறார் கள்.
இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தாலே, கேரளா வழிக்கு வந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால், இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தாலே விபரீதங்கள் தவிர்க்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்று கவலைப் படுகிறது தமிழக போலீஸ்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.சிவக்குமார்
12-ம் தேதி காலை கம்பத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர், கேரளாவுக்கான இன்னொரு நுழைவாயிலான கம்பம் மெட்டு நோக்கிக் கிளம்பினார்கள். அந்த ஏரியாவில் கேரளத்தவர்களின் வீடுகள் நிறையவே இருப்பதால், ஐந்து கிலோ மீட்டர் முன்னதாகவே மலைப் பகுதியில் கூட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள். போலீஸ் தடுப்பை தாண்டிக்கொண்டு கூட்டத்தினர் முன்னேற முயற்சி செய்ததும், லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. இதை எதிர்பாராதவர்கள், 'தமிழக ஏ.டி.ஜி.பி-யான ஜார்ஜ் ஒரு மலையாளி. அவர்தான் கம்பம் மெட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு லத்தி சார்ஜுக்கு உத்தரவிட்டிருக்கிறார்’ என்று புயலைக் கிளப்பினார்கள். உடனே, 'ஜார்ஜ் மீது நடவடிக்கை எடு’ எனக் கோஷமிட்டதுடன், போலீஸ் படை நகர முடியாதபடி சாலைகளில் டயர்களைப் போட்டுக் கொளுத்தினார்கள். கேரளாவுக்கு எதிரான இந்தப் போராட்டம் 12-ம் தேதி மதியத்துக்கு மேல் தமிழக அரசுக்கு எதிரான திசையில் திரும்பியது!

-
Source - vikatan

No comments:

Post a Comment