Monday, October 28, 2013

இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து!

-vikatan article

லகெங்கும் உள்ள கோடிக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் காபி, டீ-யில் தவறாமல் உபயோகப்படுத்துவது 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ (Sugar free/Equal) எனும் வஸ்துவைத்தான். இன்றைக்கு இது அனைத்து ஹோட்டல்கள், வீடுகள் என்று எங்கெங்கும் நீக்கமற தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன், சர்க்கரைக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்பட்ட பொருள் 'சாக்ரின்’. அதைப் பயன்படுத்தினால், 'சிறுநீர்ப்பையில் புற்றுநோய் வரலாம்’ என்று கருதப்பட்டதால், மெள்ள அந்த இடத்தை 'சுகர்ஃப்ரீ / ஈக்குவல்’ பிடித்துக் கொண்டது. சுகர்ஃப்ரீயின் வேதியியல் பெயர் அஸ்பார்டேம் (Aspartame).
இந்த 'அஸ்பார்டேம்’ சாக்ரினைவிட மிகவும் கெடுதலான பொருள் என்று உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும், நூற்றுக்கணக்கான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அசைக்க முடியாத மாபெரும் ராட்சத சக்தியாக 'அஸ்பார்டேம்’ வேரூன்றிவிட்டது. இதைப் பற்றிய மருத்துவ உண்மைகளை உங்களுக்குச் சொல்லவேண்டியது என் தார்மிகக் கடமை.
1971-ம் ஆண்டு 'ஸியர்லி’ என்கிற பிரபல மருந்து கம்பெனியின் மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிலேட்டர், வயிற்றுப் புண்ணுக்கான மருந்துகளை சோதனை செய்து கொண்டிருந்தார். தற்செயலாக அவரின் விரலில் பட்ட வெள்ளை நிற பவுடரை சுவைத்தார். சீனியைவிட 500 பங்கு இனிப் பாக இருந்த அந்த பவுடர்தான் 'அஸ்பார்டேம்’. அன்று முதல் 'ஸியர்லி’ கம்பெனிக்கு அடித்தது யோகம்! 1974-ம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. (FDA-Food and Drug Administration) இதற்கு அனுமதி அளித்தது. அதற்குள், 'அஸ்பார்டேம் கெடுதலை உண்டு பண்ணலாம்’ என்று நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துவிட்டன.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநலப் பேராசிரியர் டாக்டர் ஓல்னி அஸ்பார்டேமுக்கு எதிராக தனி மனித போராட்டத்தையே தொடங்கினார். அஸ்பார்டேம் உட்கொண்ட எலிகளுக்கு மூளையில் புற்றுநோய் வருவதை நிரூபித்து, 'மனிதர்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படலாம்’ என்ற கருத்துக்களை முன் வைத்தார். உடனே (1975) அஸ்பார்டேமுக்கு வழங்கிய அங்கீகாரத்தை வாபஸ் பெற்றது எஃப்.டி.ஏ. அதுவரை பணமழையில் நனைந்து வந்த 'ஸியர்லி’ கம்பெனி சும்மா இருக்குமா..? 'அஸ்பார்டேம் மிகவும் பாதுகாப்பானது’ என கிட்டத்தட்ட 200 மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது.
ஒரு விஷயத்தை 'கெட்டது’ என்று சொல்வதற்கும்... அதே விஷயத்தை 'நல்லது' என்று சொல்வதற்கும் இந்த டாக்டர்களே ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுகிறார்களே... என்று உங்களுக்கு ஆச்சர்யமாக / அதிர்ச்சியாக இருக்கிறதா? சக்தி வாய்ந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால், எந்த மாதிரி ஆராய்ச்சி முடிவுகளும் வெளியிட முடியும் என்கிற கசப்பான உண்மையை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். 'ஒருவன் கொலைகாரன்’ என்று சொல்வதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்கள். 'அவனே நிரபராதி’ என்று வாதிடுவதற்கும் வக்கீல்கள் இருக்கிறார்களே, அதுபோலத்தான்.
'ஸியர்லி கம்பெனி வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோடிக்கப்பட்ட பொய்’ என்று டாக்டர் ஓல்னி வாதிட்டார். இதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் ஸ்கின்னர், விசாரணை கமிஷன் அமைக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்தார் (பிறகு இவர், ஸியர்லி கம் பெனியின் சட்ட ஆலோசகராகச் சேர்ந்து கொண்டது தனிக்கதை).
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ரீகன், தன்னுடைய நெருங்கிய நண்பரான ஹேஸ் என்பவரை எஃப்.டி.ஏ-வின் புதிய தலைவராக நியமித்தார். அதே சூட்டோடு அஸ்பார்டேமுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துவிட்டு, அடுத்த வருஷமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸியர்லி கம்பெனியிலேயே சேர்ந்தார் ஹேஸ். க்ளைமாக்ஸாக 1985-ம் ஆண்டு ஸியர்லி கம்பெனியை விலைக்கு வாங்கிவிட்டது... 'மான்சான்டோ’.
முந்தைய சாக்ரினை உற்பத்தி செய்தது, இந்த மான்சான்டோ நிறுவனம்தான். பிரபல பூச்சிக்கொல்லி மருந்தாக உலகெங்கும் உபயோகிக்கப்பட்டு, தற்போது இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் தடை செய்து விட்ட டிடிடீ (DDT) உற்பத்தி செய்பவர்களும் இவர்கள்தான்.
தற்போது, உலகளவில் முக்கால் பங்கு அஸ்பார்டேமை உற்பத்தி செய்வது மான்சான்டோ. மீதி கால்பங்கு உற்பத்தி செய்வது யார் தெரியுமா... அஜினோமோட்டோ! உலகெங்கிலும் உள்ள சமையல் அறைகளைக் கெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் 'மானோசோடியம் குளுடாமேட்’ (MSG) என்கிற வேதிப்பொருள் கலந்த அஜினாமோட்டோவை உற்பத்தி செய்பவர்கள்தான் இவர்கள். இந்த இரண்டு பேரின் பிடியில் சிக்கியுள்ள அஸ்பார்டேம், நீங்கள் அன்றாடம் பருகும் காபி, டீயில் தவறாமல் இடம் பிடித்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

Sunday, October 27, 2013

கல்யாண மன்னன் ! - குட்டியூண்டு நாட்டை 'குட்டிகள்’ சூழ ஆட்சி செய்கிறார் மன்னர்

- Timepass..

சுவிட்சர்லாந்து தெரியும். சுவாசிலாந்து தெரியுமா? தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு. இந்தக் குட்டியூண்டு நாட்டை 'குட்டிகள்’ சூழ ஆட்சி செய்கிறார் மன்னர் மூன்றாம் ஸ்வாட்டி.
அந்த நாட்டுக் குல வழக்கப்படி பட்டத்துக்கு வந்துவிட்ட அரசர் எப்போது திருமணம் செய் கிறாரோ, அப்போதிருந்து ஆண்டுக்கு ஒரு திருமணம் செய்து தன் ராணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தக் கணக்கின்படி ஸ்வாட்டி, 30 வயதில் தன் முதல் திருமணம் செய்தார். சமீபத் தில் தன் 45-வது வயதில், 15-வது ராணியை மணந்திருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா?
தங்கள் மன்னர், புது ராணியைத் தேர்ந் தெடுக்க, வருடந்தோறும் நாட்டிலுள்ள இளம் பெண்களையெல்லாம் ஒரு மைதானத் தில் சங்கமிக்கவைத்து அரசே விழா நடத்துகிறது. அவர்களை ஆடவும், பாடவும் வைத்து, தனக்குப் பிடித்தமான ராணியை ரசித்து தேர்வு செய்கிறார் மன்னர்.
பண்டு இன ஆதிவாசி மக்கள் அதிகம் வாழும் நாடு. இந்த நாட்டு மக்களில் கல்வி கற்றோர் மிகவும் குறைவு. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இங்கு இருந்தாலும், மன்னரே நாட்டின் பலம் மிக்கவர். வருடம் ஒரு முறை நடக்கும் சுயம்வரம்தான் தேசத்தின் பெரிய திருவிழா.இதைக் காண்பதற்காக பல நாடுகளி லிருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெ டுத்து வருகிறார்கள். இதன் மூலம் அந்த நாட்டுக்கு நல்ல வருமானமும் வருகிறது.
விழா நடக்கும் மைதானத்தில் மன்னர் நடுநாயகமாக அமர்ந்திருப்பார். இளம்பெண் கள் நாணல் புற்களைக் கைகளில் ஏந்திக் கொண்டு மன்னரின் முன் ஆடுவார்கள். அதுவும் எப்படி? மேலாடை இல்லாமல். நாணல் புல்லை வைத்து ஆடும் இளம்பெண்கள் அதை மன்னரின் முதுகில் வருடி விடுவார்களாம். அதில் எது ரொம்ப இதமாக இருக்கிறதோ, அந்தப் பெண்ணுக்குத்தான் ஜாக்பாட் அடிக்கும்.  
தற்போது 'சின்டிஸ்வா டிலோமினி’ என்ற பெண்ணை அதிகாரப்பூர்வ ராணியாக தேர்ந்தெடுத்திருக்கும் மன்னருக்கு ஏற்கெனவே உள்ள ராணிகள் மூலம் 24 பிள்ளைகள் இருக்கிறதாம். இவர்கள் படிக்க தனிப் பள்ளிக்கூடமும் அரண்மனைக்குள் உண்டு. பாரம்பரியம் என்ற பேரில் செக்ஸ் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு சுவாசிலாந்து இளம்பெண்கள் வாழ்க்கையைக் காலி செய்யும் மன்னரின் செயலைக் கண்டித்து சர்வதேசங்களிலுள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், ''எங்கள் நாட்டு இறையாண்மைக்குள் தலையிடாதீர்கள்'' என்று பொசுக்கென்று கோபப்படுகிறார் மன்னர்.
என்னமோ போடா மாதவா!

கோக்கு மாக்கு ! - IF Rahul in cinema

-Timepass

நயந்தாரா மேல லைக் இருக்குப்பா ! -நான் கடவுள் ranjendran

மொட்டைத் தலை, கரகர குரல், கத்திப்பேசுற வசனம்... இந்த க்ளூ போதாதா? 'நான் கடவுள்’ ராஜேந்திரனைக் கண்டுபிடிக்க. 'ராஜா ராணி’, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைத் தொடர்ந்து தற்போது, 'சகுந்தலாவின் காதலன்’, 'ஜாக்கி’ படங்களில் நடிப்பவரிடம் ஒரு ஜாலி பேட்டி...
''ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் டு ஆர்ட்டிஸ்ட்... எப்படி இருக்கு?''
''எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி. ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டு, சைக்கிள் கடையில வேலை பார்த்துட்டிருந்தேன். அப்புறம் அந்த சைக்கிள் கடையை மூடினதும், ஸ்டன்ட் எனக்குக் குலத்தொழில் ஆயிடுச்சு. நான், எங்க அப்பா, அண்ணனுங்ககூட ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்தான். இப்படி ஷூட்டிங் இருந்தா காசு, இல்லைன்னா கூலி வேலைனு ஓடிட்டிருந்தேன். ஒருநாள் 'பிதாமகன்’ல ஸ்டன்ட் சீன்ல வேலை பார்த்துட்டு இருந்தப்போ, 'அடுத்த படத்துல உனக்கொரு கேரக்டர் இருக்கு’னு பாலா சார் சொன்னாரு. அப்போ ஆரம்பிச்சதுதான். இப்போ நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைக்கிறதுனால, நடிப்புல மட்டுமே கவனம் செலுத்துறேன். முன்ன இருந்ததைவிட வாழ்க்கை, இப்போ ரொம்ப சூப்பரா இருக்கு!''
''சின்ன வயசுல ரொம்ப அடி வாங்கினவங்கதான் ஸ்டன்ட் மாஸ்டரா இருப்பாங்களாமே... அப்படியா?''
''அதெல்லாம் உண்மையா, இல்லையானு நமக்குத் தெரியாதுங்க. ஆனா, உண்மையிலேயே சின்ன வயசுல எக்கச்சக்கமான பேர்கிட்ட அடி வாங்கியிருக்கேன். ஏரியாவுல திரியிற வாண்டுகள்ல இருந்து, பள்ளிக்கூடத்து வாத்தியார் வரைக்கும் எல்லோரும் என்னை வெளுத்துருக்காங்க. இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேருகிட்ட அடி வாங்க முடியுதுனா, அதுக்குக் காரணம் இவங்கெல்லாம் எனக்குக் கொடுத்த அடிதான்!''
''உங்க வாய்ஸே இப்படித்தானா, இல்லை கத்திக் கத்திப் பேசவெச்சே இப்படி ஆக்கிட்டாங்களா?''
''சூப்பரா சொன்னப்பா... அதான் நிஜம். ஒரு படத்துல அந்த மாதிரி கத்திப் பேசினேன். அடுத்தடுத்த படத்திலேயும் இதே மாதிரியே பேசச் சொல்லிட்டாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல ரெண்டு தடவை கத்திப் பேசுறேன்னா, டப்பிங் பண்ணும்போது நாலு தடவை கத்தணும். இதுல என்ன கொடுமைன்னா, இப்பெல்லாம் 'சவுண்ட் பத்த மாட்டேங்குது... இன்னும் கொஞ்சம் கத்திப் பேசுங்க'னு சொல்றாங்கப்பா!''
''வாய்ஸ் ஓகே... மொட்டையோட திரியிறதுக்குக் காரணம்?''
''அதுவா... முன்னாடியெல்லாம் நல்லாத்தாம்பா முடி இருந்துச்சு. ஒரு மலையாளப் படத்துல ஸ்டன்ட் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டிருந்தப்போ, ஆத்துல குதிக்கிற மாதிரி ஒரு சீன்... குதிச்சிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, தலை பூரா பொட்டு பொட்டா வீங்க ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சது, நான் குதிச்ச ஆத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு ஃபேக்டரியில இருந்து, கெமிக்கல் கழிவு தண்ணியில கலக்குதுனு... அப்போ ஆரம்பிச்சதுதான் முடி கொட்டுறது. இப்போ புருவம் இல்லாத, ஏன்? உடம்பு பூராவுமே முடி இல்லாத ஆளாக்கிடுச்சு!''
''உங்க ஆசைக்காக கேட்கிறேன்... எந்த நடிகையோட ஜோடியா நடிக்கணும்னு ஆசை?''
''எனக்கு நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். இதுவரைக்கும் அவங்களோட நான் பழகலைன்னாலும், அவங்களோட ரியாக்ஷன், பேச்சு, நடிப்பு எல்லாமே தனியாத் தெரியும். அதனால, எனக்கு அவங்க மேல சின்னதா ஒரு லைக் இருக்குப்பா!''

'ஜன்னல் ஒரம்' ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி...

ரியாக்‌ஷன் !

Timpass...

அரசுத் திட்டங்கள் + மானியங்கள் !


Article from Pasumai Vikatan..

நெல்லியில் இருக்கு... நிறைந்த பலன்!

மனித உடலுக்கு நீடித்த இளமையை வாரி வழங்கும் வல்லமை கொண்டது நெல்லிக்கனி. இது 'கனிகளின் அரசன்’ என்றே அழைக்கப்படுகிறது.
நெல்லிக்கனியின் மகத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய காலத்திலிருந்தே தமிழர்கள் பறைசாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலை..? மற்ற பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் காட்டும் ஆர்வத்தில், சிறு அளவுகூட நெல்லி சாப்பிடுவதில் காட்டுவதில்லை. துவர்ப்பு மற்றும் புளிப்புத் தன்மையோடு இருப்பதால், நெல்லியை பெரும்பாலான மக்கள் முற்றிலுமாக ஒதுக்குகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ தங்கள் உடலுக்கு தாங்களே வஞ்சனை செய்து கொள்கிறார்கள்.  கால்சியம், பாஸ்பரஸ், புரதம், பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து, ரிபோஃபிளேவின், தயாமின்... என மனிதர்களின் ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நெல்லியில் அடங்கியிருக்கின்றன.
வைட்டமின்-சி மற்றும் டேனின் ஆகியவை இதில் நிறைந்து காணப்படுகின்றன. 'நெல்லிச்சாறை தனியாகவோ, பாகற்காய் சாறு அல்லது தேனோடு கலந்து அருந்தினால்... புற்றுநோய் கட்டுப்படும்’ என்கிறார்கள், மருத்துவர்கள். புற்றுநோயாளிகளுக்கு இதனைப் பரிந்துரை செய்தும் வருகிறார்கள். நெல்லி, ஆயுர்வேத மருத்துவத்திலும் மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. நெல்லி சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். செரிமானத் தன்மையும் கூடும். குளிர்ச்சித்தன்மை அதிகமாக இருப்பதால், ரத்தச் சுத்திகரிப்புக்குப் பெருந்துணை புரிகிறது நெல்லி. வைட்டமின்-சி குறைவால் ஏற்படும் 'ஸ்கர்வி' எனும் பல் ஈறு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும் நெல்லிக்கு உண்டு.
இத்தனை அற்புதங்கள் அடங்கி இருந்தாலும் கூட, இதன் சுவை ஈர்ப்புடையதாக இல்லாமல் இருப்பதால், இதை சாதாரணமாக சாப்பிட, பெரும்பாலான மக்கள் விருப்பம் காட்டுவதில்லை. இதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால், கண்டிப்பாக விற்பனை வாய்ப்பு வெற்றிகரமாக அமையும்.
நெல்லி ஜாம்!
நெல்லியில் உள்ள துவர்ப்புத் தன்மையைப் போக்குவதற்கு 8 சதவிகித உப்புக் கரைசலில் 2 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு, 10 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வைத்து எடுக்க வேண்டும். ஆவியில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். கொட்டையை நீக்கிய பிறகு, சதைப்பகுதியை நன்கு மசிய வைத்து கூழாக்க வேண்டும். நெல்லிக் கூழுடன் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்து காய்ச்ச வேண்டும். சர்க்கரையின் அளவு 68.5 டிகிரி பிரிக்ஸ் அடையும்போது, சூடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். அல்லது கரண்டியில் எடுத்துப் பார்த்து, தாள் போன்ற பதம் வந்ததும் சூடுபடுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இந்தப் பதத்தில் நெல்லி ஜாம் தயாராகி விடும். இதை, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்யலாம்.  
நெல்லி பவுடர்!
நெல்லியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்தே நெல்லி பவுடர் தயார் செய்து விடலாம். இதனைக் குளிர்ந்த நீரில் கலந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஜூஸாகவும் அருந்தலாம். சாதாரண தண்ணீர் அல்லது பாலில் கலந்தும் அருந்தலாம். இது உடல் சோர்வை நீக்குவதோடு, உடலின் வறட்சித் தன்மையையும் போக்கும். தினமும் 3 கிராம் நெல்லி பவுடருடன் 8 கிராம் முதல் 9 கிராம் நெய் சேர்த்து சாப்பிட்டால், தோல் வியாதிகள் நாளடைவில் குணமாகும்.
நெல்லிக்கனி ஸ்குவாஷ்!
நெல்லிக்கனியை நன்றாகக் கழுவி, 10 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த நெல்லியை குளிர்ந்த நீரில் இட்டு கொட்டைகளை நீக்க வேண்டும். சதை பாகத்தை மின் அரவை இயந்திரத்திலிட்டு அரைத்து, வடிப்பான் மூலம் சாறை வடிகட்டி தனியே வைக்க வேண்டும். தண்ணீர், சர்க்கரை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை கலந்து, சர்க்கரை கரையும் வரை சூடுபடுத்தி, வடிகட்டி... நெல்லிக்கனிச் சாறுடன் நன்கு கலந்து, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பினால், நெல்லக்கனி ஸ்குவாஷ் தயார். இதை அருந்தினால், கண் உபாதைகள் நீங்கும். உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
இஞ்சி கலந்த நெல்லி ஸ்குவாஷ்!
நெல்லிச் சாறுடன் இஞ்சி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு தயார் செய்து வடிகட்டி, இஞ்சி-நெல்லிச் சாறுடன் கலந்து, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யலாம். இது செரிமானத் தன்மையை அதிகரித்து, பசியைத் தூண்டும். சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்த இது மிகச்சிறந்த மருந்தாகும். குளிர்காலத்தில் இதனை அருந்தினால், உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும்.
தயார் நிலை நெல்லி பானம்!
நெல்லிக்காயை வேக வைத்து, மின் அரவை இயந்திரத்திலிட்டு, அரைத்து, மெல்லியத் துணியில் வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையுடன் தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து சூடுபடுத்தி ஆறிய பிறகு, நெல்லிச் சாறு கலந்து, 80 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலையில் 5 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். இதனை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் காற்று நீக்கி நிரப்ப வேண்டும். இது நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.
இதே முறையில் நெல்லி-இஞ்சி தயார் நிலை பானமும் தயாரிக்கலாம். நெல்லி சுபாரி, நெல்லி இனிப்பு கேண்டி, நெல்லி ஃபிரிசர்ஸ், நெல்லி மசாலா கேண்டி, நெல்லி இஞ்சி கேண்டி, நெல்லித்தூள் கரன், நெல்லி ஜாம், நெல்லி சாஸ், நெல்லி கண்டா (நெல்லி இனிப்பு மசாலா ஜாம்)... என நெல்லியில் இருந்து இன்னும் ஏராளமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம். இவை அனைத்துமே பல்வேறு நோய்களைத் தீர்க்கக்கூடிய மகத்தான மருத்துவ குணம் கொண்டவை. அதேசமயம் சுவை மிக்கதாகவும் இருப்பதால், மக்களிடம் இவற்றைக் கொண்டு செல்வது மிகவும் எளிது.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!    
-மதிப்புக் கூடும்.

 நெல்லியின் வேறு பெயர்கள்!
தமிழ் மற்றும் மலையாளத்தில் நெல்லி என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கூஸ்பெர்ரி, தெலுங்கில் ஆம்லாகாமு, பஞ்சாபியில் அமோல்பால், வங்காளம் மற்றும் ஒரியா மொழியில் ஆம்லா, ஹிந்தியில் ஆன்லா, சமஸ்கிருதத்தில் தாத்ரி, தாத்ரிபாலா, அம்லாக்கி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
நெல்லியில் பனராசி, பிரான்சிஸ், சக்கையா என மூன்று முக்கிய ரகங்கள் உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நரேந்திரா தேவ் வேளாண் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்... நெல்லியில் என்.ஏ-5 (நரேந்திரா ஆன்லா-5), என்.ஏ-6, என்.ஏ.-7, என்.ஏ-10, கிருஷ்ணன், காஞ்சன் என பல புதிய ரகங்களை உருவாக்கியுள்ளது.
குஜராத்தில் பி.எஸ்.ஆர்.-1 என்ற நெல்லி ரகம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல்லி உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெல்லி விளைகிறது. மூலிகை சார்ந்த அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் நெல்லி பயன்படுத்தப்படுகிறது.

''கடலோரப் பாதுகாப்பில் பெரிய ஓட்டை!''

கசப்பான அனுபவங்களை தர ஆரம்பித்​திருக்கிறது இந்தியப் பெருங்கடல். இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையை ரணகளம் செய்தபோதே, இந்தியக் கடலோரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. அடுத்தடுத்து, இலங்கை கடற்படையின் எல்லை தாண்டிய அத்துமீறல்கள், வெளிநாட்டு மாலுமிகள் நம் கடல் எல்லையில் நமது மீனவர்களையே சுட்டுக் கொல்வது, அடையாளம் தெரியாத வெளிநாட்டவர்கள் நமது கடல் எல்லையில் சுற்றித்திரிவது போன்ற சமீபத்திய நிகழ்வுகள் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க கப்பல் ஆயுதங்களுடன் வர... அதில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 
இந்த திக்திக் சூழலில் முன்னாள் கடற்படை வீரர் ஆர்.எஸ்.வாசனிடம் பேசினோம். ''இந்தியக் கடல் பரப்பு உலகின் மிக முக்கியமான கடல் வணிகத்தடம். கிழக்கு உலகத்தையும் மேற்கு உலகத்தையும் இணைக்கும் கடல் வழித்தடமாக இந்தியப் பெருங்கடல் திகழ்கிறது. பொதுவாக அனைத்துத் தரப்பினராலும் இந்தியக் கடல் பரப்புக்கு மிகப் பெரிய சவாலாக உணரப்படுவது தீவிரவாதிகள் ஊடுருவலும் கடல் கொள்ளையும்தான். ஆனால், இதையும் தாண்டி பல அச்சுறுத்தல்கள் இந்தியப் பெருங்கடலில் அலையடிக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால், உரிமைப் பிரச்னை, இயற்கைப் பேரிடர், அமெரிக்க - சீனப் பனிப்போர், சோமாலிய கடற்கொள்ளை​யர்கள், மீன் வளம், வாழ்வாதாரப் பிரச்னைகள், தேடல் மற்றும் மீட்பில் போதிய பயிற்சியின்மை, கடல் மாசு, சுற்றுச்சூழல் பிரச்னைகள் என பல உள்ளன. இவை எல்லாமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றோடு ஒன்று நிச்சயமாக தொடர்புகொண்டவைதான்.''
''வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் எந்த நிலைமையில் உள்ளன?''
''தேசத்தின் பெயருடன் இணைத்துச் சொல்லப்படும் ஒரே கடல் பரப்பு இந்தியப் பெருங்கடல் மட்டும்தான். சீனாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. 'இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படுவதால், அது இந்தியாவின் கடல் என்று அர்த்தப்படாது’ என்பது சீனாவின் வாதம். அதற்குப் பதிலடியாக நாம், 'தென் சீனக் கடல் பகுதி என்று சொல்வதால், அது சீனாவின் கடல் பகுதி என்று ஆகிவிடாது’ என்று வார்த்தை யுத்தம் நடத்துகிறோம். ஆனால், சீனா தன்னுடைய கருத்துக்கு உண்மை வடிவம் கொடுப்பதற்காக பல நடவடிக்கைகளை அசுர வேகத்தில் செய்துவருகிறது. ஆனால், அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்முடைய அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை. இது ஒரு பக்கம்.
மறுபுறம், உலகத்தின் ஒற்றை வல்லரசாகத் திகழும் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்குச் சாதகமாக அமெரிக்காவின் பாரம்பரியப் பங்காளிகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வட கொரியா போன்ற நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கின்றன. தாலிபன் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவான நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு மேலோட்டமாக வேறுபாடு நிலவினாலும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒத்த சிந்தனையால், ரகசிய நட்பும் இருக்கிறது. இலங்கையுடனும் அப்படித்தான். இந்த நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து வியாபாரத் தொடர்புகளை வளர்த்து வருவதுடன் பல வழிகளில் உதவியும் செய்கிறது. இதன் மூலம் மெள்ள மெள்ள அமெரிக்கா தன்னுடைய துருப்புகளை இந்தப் பகுதிகளில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்படி சீனாவுக்கு அமெரிக்கா வைக்க நினைக்கும் செக்மேட் நமக்கும் சேர்த்துத்தான் பாதகங்களை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் இந்தத் திட்டத்தைத் தடுக்க சீனாவும் திறமையாகத்தான் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு மிகப் பெரிய கட்டுமான உதவிகளைச் செய்து அவர்களை தனக்கு விரோதமாகப் போகாமல் பார்த்து வருகிறது. அதற்கு கண்முன் சாட்சிகள்... பாகிஸ்தானில் குவாடரிலும், பங்களாதேஷின் சிட்டாகாங்கிலும், மியான்மரின் சித்வியிலும், இலங்கையின் அம்பான்தோட்டாவிலும் சீனா அமைத்துக் கொடுத்த மிகப் பெரிய துறைமுகங்கள். சீனா இந்தத் துறைமுகங்களை எந்த வணிக நோக்கத்துக்காகவும் அமைத்துக் கொடுக்கவில்லை. இதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள கடல் பகுதிகளை சீனா நினைத்த நேரத்தில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் வழிசெய்துள்ளது. இதுவும் நமக்கு மிகப் பெரிய பாதகத்தைத்தான் ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக நாம் இதுவரை எந்த ராஜதந்திர நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலை நீடித்தால், நம்முடைய கடல் பரப்பே நம்மிடம் இருக்காது. அதைப் பயன்படுத்துவதற்கு நாம் அமெரிக்காவிடமோ அல்லது சீனாவின் அனுமதியையோ எதிர்பார்த்து காத்துக் கிடக்க வேண்டியிருக்கும்.''
''தீவிரவாதிகள் பற்றிய அச்சமும் இந்தியாவின் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எப்படி இருக்கின்றன?''
''கடல் வழியாக மும்பைக்குள் தீவிரவாதிகள் நுழைந்த பிறகுதான், அப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதையே இங்கு உள்ளவர்கள் உணர்ந்தார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பையும், சர்வதேச கடல் வணிகத்தில் இந்தியா பெற்றுவைத்துள்ள நம்பிக்கையையும் இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் தூள் தூளாக்கிவிடும். கலாசாரம், மொழி, எல்லை போன்றவற்றால் நம்முடன் பாராம்பரியத் தொடர்பில் உள்ள பாகிஸ்தானே, நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இருப்பது நமது துரதிருஷ்டம்தான். மும்பை தீவிரவாதிகள் நுழைந்ததன் தொடர்ச்சியாக அல்லது அதுபோன்றோதான் அண்மையில் தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலையும் பார்க்க வேண்டி உள்ளது. அவர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக நம்முடைய கடல் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். லிட்டர் கணக்கில் டீசல் வாங்கியுள்ளனர். பயங்கரமான ஆயுதங்களை வைத்துள்ளனர். ஆனால், அதை நம்மால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே, நம்முடைய கடலோர பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய ஓட்டைக்கு உதாரணம்.''
''இந்தப் பிரச்னைகளை சமாளிக்க நாம் செய்ய வேண்டியது என்ன?''
''அமெரிக்கா சீனா பனிப்போரில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கையை ராஜதந்திர ரீதியில் நாமும் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியப் பெருங்கடல் பகுதியிலோ அல்லது பசிபிக் பெருங்கடல் பகுதியிலோ அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் எந்த நாட்டின் கை ஓங்கினாலும், நமக்கு ஆபத்துதான். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் பிரச்னையை முறியடிக்க ஜப்பான், தென் கொரியா, இலங்கை, சீனாவுடன் சேர்ந்து ஒரு அமைப்பாக செயல்படலாம். இந்த நாடுகள் ஒன்றிணைந்து கடலோரப் பாதுகாப்புக்காக மட்டும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.
கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை எல்லைக்கு வெளியிலேயே அடையாளம் கண்டு வகைப்படுத்த, தேசிய அடையாள அமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி இனம் காணலாம். அனைத்து கலங்கரை விளக்கங்களிலும் நவீன ரேடார் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் பல கலங்கரை விளக்கங்கள் வெறும் லைட் ரூமாக மட்டுமே உள்ளது. கடலோர பாதுகாப்பு கன்ட்ரோல் ரூம்கள் இப்போது இருப்பதைவிட நவீனமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஏவுகணைப் பயிற்சி, தொலைதூர நுண்ணுணர்வு ரேடார்களை அதிக பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், நிலப்பரப்பில் தீவிரவாத இயக்கங்களைப் புலனாய்வு செய்யும் உளவுத் துறையுடன் இணைந்து செயல்படும் திட்டங்களை வகுத்தல், கடலோர பாதுகாப்பில் மாநில காவல் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல், கூட்டு ரோந்துப் பணி போன்றவற்றை சரியாக செய்வதன் மூலம் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதை குறைக்க முடியும். இவற்றை விட மிக முக்கியமானது கடலிலேயே காலம் கழிக்கும் மீனவ மக்களிடம் விழிப்பு உணர்வையும் பயிற்சியையும் மேம்படுத்தலாம். ஏனென்றால், அவர்களுக்கு ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் மீனவன் யார்? மாற்று நபர்கள் யார் என்பது மிகத் தெளிவாக தெரியும். கடலின் சிறு சிறு அசைவுகளையும் கடலின் எல்லா திசைகளையும் நன்கறிந்த மீனவர்களுடன், கடலோர பாதுகாப்புப் படை மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. அவர்களை அரவணைத்துச் செல்வதன் மூலம் மிகப் பெரிய உதவிகளையும் உபயோகமான தகவல்களையும் அவர்களிடம் இருந்து பெற முடியும்.''
- இப்படி வழிகாட்டுகிறார் வாசன்!

-Article from Junior vikatan.

பாதுகாப்பும், பட்டா பெயர் மாற்றமும்!

- Article from nanayam vikatan.

பத்திரப்பதிவு முடித்துவிட்டோம். நமக்கே நமக்கான ஒரு சொந்த மனை அமைந்துவிட்டதில் திருப்தி மற்றும் சந்தோஷத்தை உணரக்கூடிய நாட்கள் இது. இத்தனை நாட்கள் அலைந்து திரிந்துவிட்டோம், இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என யோசனை வரும். ஆனால், இந்த உணர்வு உங்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைப்பார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருக்கின்றன பிரச்னையின் கண்கள். எனவே, இந்தச் சூழ்நிலையில் சமயோசிதமாக சில வேலைகளைச் செய்து முடிப்பது அவசியம்.  
நாம் முதலீட்டு நோக்கில் மனை வாங்கவில்லை, உடனே வீடு கட்டவேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கும். மாற்று கருத்தில்லைதான். ஆனால், நமது நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால், அந்த இடத்தில் வீடு கட்டும் வேலைகள் தொடங்க குறைந்தது மூன்று மாதத்திலிருந்து ஆறு மாத காலம் ஆகும். இந்த இடைவெளியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மனையின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
வீடு கட்டுவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதற்கு முன் செய்யவேண்டிய முதல் வேலை, பட்டா பெயர் மாற்றம்தான். எந்தக் காரணம் கொண்டும் இந்த வேலையைத் தள்ளிப்போடக் கூடாது.  பத்திரப்பதிவு முடிந்த பத்து நாட்களுக்குள் சொத்து உரிமை மாற்ற ஆவணங்கள் நமது கையில் கிடைத்துவிடும். அதாவது, நமது பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்கள். இந்த ஆவணங்கள் கிடைத்த அடுத்தநாளே மனை அமைந்துள்ள சம்பந்தப்பட்ட கிராமத்தின் நிர்வாக அலுவலகம் சென்று இந்த வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும்.  
நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் மனையின் பழைய ஆவணங்கள், அந்த மனையை நீங்கள் வாங்கியதற்கான ஆதாரமான தற்போதைய பத்திரப்பதிவு ஆவணத்தின் நகல் போன்றவற்றின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் செய்யவேண்டும். இதற்கு கட்டணம் செலுத்தி மறக்காமல் ரசீதும் வாங்கிக் கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக பெயர் மாற்றப்பட்ட புதிய பட்டா உங்களுக்குக் கிடைக்கும். பத்திரத்தில் உள்ள பெயருக்குத்தான் பட்டா விண்ணப்பிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பட்டா பெயர் மாற்றம் செய்தவுடன், மனையின் பாதுகாப்பு விஷயத்திலும் எப்போதும் ஒரு கண் வைத்து செயல்பட வேண்டும். மனை வாங்கும்போது ஏமாந்து விடக்கூடாது என்று எப்படி பார்த்துப் பார்த்து வாங்கின மாதிரி, மனை வாங்கிய பின்னும், அந்த எச்சரிக்கை உணர்வு அவசியம். ஆள் நடமாட்டம் இல்லாத எல்லா இடமும் நம் இடமே என்று காத்திருப்பார்கள் சில வில்லங்கப் பேர்வழிகள். இடம் வாங்க என்ன கஷ்டப்பட்டிருப்போம், எந்ததெந்த வகையில் பணம் புரட்டியிருப்போம் என்கிற வலியெல்லாம் அவர்களுக்கு இல்லை. நறுக்கென்று மனை நடுவில் ஒரு கொட்டகை போட்டு வைத்துவிட்டு போய்விடுவார்கள்.
இப்படி ஓர் அனுபவத்தைச் சந்தித்தது திண்டுக்கலைச் சேர்ந்த நண்பர் சுரேஷ்குமாரின் குடும்பம். எல்லாம் பக்காவாகப் பார்த்து புறவழிச்சாலையில் சாலையோரமாக ஒரு பழைய மனைப் பிரிவில் இருந்த இடத்தை வாங்குகிறார்கள். அக்கம் பக்கம் குடியிருப்புகள் உள்ள ஏரியா என்பதால், உடனடியாக வீடு கட்டும் ஏற்பாடுகளிலும் இறங்குகிறார்கள். ஆனால், எதிர்பாராதச் சூழ்நிலையில், நண்பரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ வேலைகளில் கவனம் செலுத்தியதில் வீட்டு வேலைகள் தொடங்க தாமதமாகிவிட்டது. அந்த இடைவெளியில் மனையையும் சென்று பார்த்துவரவில்லை. சுமார் மூன்று மாதங்கள் கழித்து வீட்டு வேலை தொடங்குவதற்கு முன், மனையைச் சுத்தப்படுத்த அங்கு போனால், அந்த மனையில் கீற்றுக் கொட்டகைப் போட்டு ஒரு குடும்பம் வசித்து வருகிறது. என்ன யார் என்று விசாரிக்க, அந்த ஊரில் உள்ள ஓர் அரசியல் பிரமுகரை கை நீட்டுகிறார்கள்.
பிறகு அங்கே, இங்கே என்று அலைந்து, கட்டப் பஞ்சாயத்து வரை சென்று அந்த இடத்தை மீட்டுக்கொண்டுவந்தது நண்பரின் குடும்பம். ''சார், இதை பெரிசு பண்ணாதீங்க, ஏதோ சும்மா கிடந்த இடம்னு அவங்களைக் குடியிருக்கச் சொன்னேன். நீங்களும் இப்ப நம்ம ஊர்க்காரர் ஆகிட்டீங்க'' என்று அந்த அரசியல்வாதி இறங்கி வந்து இடத்தைக் கொடுத்தார். நண்பருக்கு இருந்த செல்வாக்குக் காரணமாக சில நாட்கள் அலைச்சலில் இடத்தை மீட்டுவிட்டனர். ஆனால், எல்லோருக்கும் இப்படியான செல்வாக்கு அமைந்துவிடுவதில்லை. எந்த ஒரு செல்வாக்கும் இல்லாதவர்கள் இந்த இடஅபகரிப்பு பேர்வழிகளிடம் சிக்கினால், அவர்களின் கதி அதோ கதிதான்!  
இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க ஒரே வழி, மனையைச் சுற்றி கம்பி வேலி அமைப்பது. உடனடியாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த கம்பி வேலி பாதுகாப்பு தேவை இல்லை. தவிர, வீடு கட்டும்போது இந்த கம்பி வேலி இடையூறாகவே இருக்கும்.
மனையைப் பாதுகாக்க சிறந்த முறை எது என விசாரித்தபோது பலரும் பரிந்துரைத்தது இதைத்தான்.  மனை வாங்கிய அடுத்தநாளே மனையின் நான்கெல்லை மூலையிலும் 'எல்’ டைப்பில் இரண்டடிக்கு ஆழம் எடுத்து செங்கல் சுவர் அல்லது ஹாலோ பிளாக் சுவர் இரண்டடி உயரத்துக்கு எழுப்பிவிட வேண்டும். அதில் அந்த மனையை வாங்கிய விவரங்களை எழுதி வைத்துவிட வேண்டும். இதன்மூலம் அந்த இடம் இன்னாருக்குச் சொந்தமானது என்பதை அறிவித்தால், யாரும் அந்த இடத்தில் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த முறையை எல்லோருமே பின்பற்றுகிறார்கள் என்கிறார்கள் அனுபவசாலிகள்.
மனை வாங்கிய அனைவருமே ஆக்கிரமிப்பு சிக்கலில் சிக்கிவிடுவதில்லை என்றாலும், அது நமக்கு நிச்சயம் நடக்காது என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அதேசமயம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனையை நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது அவசியம். மனைக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஏற்கெனவே வீடு கட்டி வசித்து வந்தால், அவர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வதன் மூலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் அவர்கள் நமக்கு உடனடியாக தகவல் சொல்லும்பட்சத்தில் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
சரி, மனையைப் பாதுகாத்துவிட்டோம். அடுத்து, வீட்டு வேலைகளைத் தொடங்கிவிட வேண்டியதுதானே என்கிறீர்களா? வாழ்த்துக்கள், வீடு கட்ட முடிவு செய்ததற்கு! அந்த வேலையில் இறங்கும் முன்பு இரண்டு முக்கியமான வேலைகளை நீங்கள் செய்தாகவேண்டும். மின்சார இணைப்பு பெறுவது எப்படி? தண்ணீருக்கான வசதியை ஏற்படுத்திக்கொள்ள என்ன செய்வது? என்பதை அடுத்து பார்ப்போம்!

Saturday, October 26, 2013

“துரோகிகளுக்கு அழைப்பில்லை!” இது முற்றத்து சீற்றம்

-Vikatan Article..

றுதியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்பு பதுங்கு குழியையும் குண்டுவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் புத்த விஹாரை அமைக்கத் திட்டமிடுகிறது இலங்கை அரசு.  30வருடங்கள் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் அடையாளமாக ஈழ மண்ணில் இப்போது எதுவும் இல்லை.
இந்த நிலையில், ஈழ மண்ணில் பெருகியோடிய குருதியாற்றின் சுவடை, தஞ்சையில் பதித்திருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’ ஈழத் தமிழர்கள் அனுபவித்த போர்க் கொடுமைகள், நினைவு முற்றத்தின் சிற்பங்களாகப் பரந்து விரிந்திருக்கின்றன. அந்தத் தமிழர்களின் வலியை, வேதனையை, கதறலை, ஆக்ரோஷத்தை அச்சு அசலாகப் படியெடுத்திருக்கிறது ஒவ்வொரு சிற்பமும்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் நேரடிக் கண்காணிப்பில் நூற்றுக்கணக்கான சிற்பிகள், பல ஓவியர்களின் கூட்டு உழைப்பில் உருவான முற்றத்தின் சிற்பங்களின் பிரமாண்டம் பிரமிப்பூட்டும் அதே சமயம், மனதின் ஈரத்தைக் கசியவைக்கின்றன!
முற்றத்தின் நடுவில், 40 டன் எடையுள்ள தமிழ்ப் பாவையின் சிற்பப் பீடம். அதன் இரு பக்கங்களிலும் ஈழத்தின் அவலத்தையும், தமிழர்களின் உயிர்த் தியாகத்தையும் கற்சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். தமிழ்ப் பாவை சிற்பத்தின் பீடத்தினுள் எட்டிப்பார்த்தால், நமது முகத்தைப் பிரதிபலிக்கிறது முப்பரிமாணக் கண்ணாடி.
வெள்ளையர்களை எதிர்த்த தமிழ் மன்னர்கள், மொழிப் போர் தியாகிகளின் படங்களோடு விடுதலைப் புலித் தளபதிகளின் படங்களும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. முற்றத்தின் அரங்கில் பிரதான மரியாதை, பார்வதி அம்மாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உள்ளேயே தங்கியிருந்து வேலைகளைப் பார்வையிடும் பழ.நெடுமாறனிடம் பேசினேன்...
''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நல்லகண்ணுவும் வைகோவும் இந்த  முற்றத்துக்கான அடிக்கல் நாட்டியபோது, ஒரே ஒரு நினைவுத் தூண் அமைப்பது மட்டும்தான் நோக்கம். ஆனால், தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ஈழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டதோடு, புலிகளின் வெற்றிச் சின்னங்களையும் அழித்து சிங்கள ராணுவத்தின் சின்னங்களை அங்கே நிறுவிவிட்டார்கள். அதன் பிறகே, ஈழத்தில் நிகழ்ந்த அவலம் ஆவணம் இன்றி கடந்துவிடக் கூடாது என்று இந்த முற்றத்தை வடிவமைக்கத் தீர்மானித்தோம். இந்தப் பெருங்கனவை நனவாக்க கல் கொடுத்தவர்கள், மண் கொடுத்தவர்கள், மரம் கொடுத்தவர்கள், புகைப்படங்களைச் சேகரித்துக் கொடுத்தவர்கள்... என இது மிகப் பெரும் உழைப்பு!
40 டன் எடையுள்ள தமிழ்ப் பாவை சிற்பத்தை, 15 அடி மேடையில் ஏற்றி வைத்தோம். இந்த முற்றத்தினுள் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களுக்கு ஆதாரமாக இருந்தவை ஓவியர் வீரசந்தானம் வரைந்த ஓவியங்கள்தான்!'' என்று வீரசந்தானம் பக்கம் மடை மாற்றுகிறார் பழ. நெடுமாறன்.
''மகாபலிபுரத்தில் இருக்கும் 'அர்ஜுனன் தபசு’ போன்ற நீளமான கல்லின் இரண்டு பக்கமும் ஈழ வரலாற்றைப் பதிவுசெய்யும் ஓவியங்களை கோட்டோவியமாக வரைந்து கொடுத்தேன். ஈழத்தின் தேசியப் பறவை, தேசிய மரம், அந்த மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார்கள் என்பது முதல், யாழ் நூலகம் எரிப்பு, ஜெகன்- குட்டிமணி-தங்கதுரை படுகொலை, வெலிக்கடை சிறை உடைப்பு... என, தமிழர் போராட்ட வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளை வரைந்தேன்.
இன்னொரு பக்கம் இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்ட விதம், ரசாயனக் குண்டுகள் கொத்துக் கொத்தாக உயிரைப் பறித்த விதம்... என சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத்தை ஆவணம் ஆக்கினோம். அந்தக் கோட்டோவியங்களை ஆதாரமாக வைத்து சிற்பங்களை வடிவமைத்தனர். ஈழப் படுகொலைகள் குறித்து உலகம் இன்று வரை மௌனமாக இருக்கிறது. ஆனால், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம், ஈழப் படுகொலையின் பின்னணியையும் வேதனைக் காட்சிகளையும் தலைமுறைகள் தாண்டியும் மக்களிடம் கொண்டு சேர்க்கும்!'' என்கிறார் வீரசந்தானம்.
முற்றத்தில் சிற்பங்களை வடிவமைத்திருப்பது, மாமல்லபுரம் ஸ்தபதி முருகன் குழுவினர். முருகனிடம் பேசினேன்...
''பொதுவாக, சிற்பம் செய்ய கறுப்புக் கல்தான் சிறந்தது. அதிலும் இறுகிய கல் வேண்டும். தமிழகம் முழுக்க அப்படியான கல் தேடி அலைந்தோம். புதுக்கோட்டையில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படும் வெள்ளைக் கல்லையும், ஊத்துக்குளியில் சிற்பங்களுக்கான கறுப்புக் கல்லையும் தேர்ந்தெடுத்தோம். தமிழ்ப் பாவை சிலையை அமைக்க 55 டன் எடையுள்ள கல்லை ஊத்துக்குளியில் இருந்து கொண்டு வந்து, சீராக்கி, செதுக்கி முடித்தபோது, அது 40 டன் எடையோடு நிலை கொண்டது. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் நிலைத்து நிற்கும் தரத்தோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன இந்தச் சிற்பங்கள்!' என்கிறார் முருகன்.
நவம்பர் 8, 9, 10 தேதிகளில் மூன்று நாள் விழாவாக திறப்பு விழா காண இருக்கிறது 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’.
''எந்த அரசியல் சார்பும் இல்லாமல், ஒட்டுமொத்தத் தமிழினத்தின் விழாவாக இதை அரங்கேற்ற இருக்கிறோம். பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவோம். ஆனால், ஈழப் படுகொலைகளுக்குத் துணைபோன துரோகிகளுக்கு நாங்கள் அழைப்பு அனுப்பவில்லை. ஏனென்றால், இன்னொரு முறை இப்படியான கொலைகள் நடக்காமல் இருக்க, எதிரிகளிடம் மட்டும் அல்ல, துரோகிகளிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது!'' என்கிறார் பழ.நெடுமாறன்.
அதை ஆமோதிப்பதுபோல,  முற்றத்துச் சிற்பங்களில் அறைந்து மோதுகிறது அனல் காற்று!

Thursday, October 24, 2013

அவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பி.எஃப். பணம் !

சம்பளம் வாங்குகிறவர்களின் ஓய்வுக்கால நிதித் தேவைக்கு அடித்தளம் அமைத்துத் தருவதுதான் பி.எஃப் என்று சொல்லப்படுகிற தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி. ஓய்வுக்காலத்துக்காகச் சேர்க்கும் இந்தப் பணத்தை இடைப்பட்ட காலத்தில் முடிந்தவரை எடுக்காமல் இருப்பது நல்லது. என்றாலும், மிக முக்கியமான செலவு ஏற்படும்போது பி.எஃப்.-ல் சேர்ந்த பணத்தைத் திரும்ப (withdrawal) எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான வசதி இருக்கிறது.
என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கலாம் என சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அதிகாரிகளிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.
கல்வி மற்றும் திருமணத்துக்கு!
சம்பளதாரர் தன் திருமணம், பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கும்போது பி.எஃப்-லிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, சம்பளதாரரின் மேற்படிப்பு, அவரது பிள்ளைகளின் மேற்படிப்புக்கும்  பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒருவர் ஏழு ஆண்டுகள் பி.எஃப். சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்ப எடுக்கும்போது,  அவருடைய பி.எஃப். கணக்கில் 50 சதவிகித தொகை மட்டுமே (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) பெற முடியும்.
இதற்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பப் படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து, அதனுடன் கல்விக்கு கடன் என்றால் கல்வி நிறுவனத்திடமிருந்து போனோஃபைட் சர்ட்டிஃபிகேட், கட்டண விவரத்துடன்கூடிய ஃபீஸ் ஸ்ட்ரக்சர் சமர்ப்பிக்க வேண்டும். திருமணத்துக்கு எனில், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் திருமண அழைப்பிதழை நிறுவனத்தின் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் கல்விக்கென்று ஒருமுறையும், திருமணத்துக்கு என்று இரண்டுமுறையும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
மருத்துவச் செலவுகளுக்கு!
சம்பளதாரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஒருமாத காலத்துக்கு மேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை (காசநோய், புற்றுநோய், இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள், குடும்பத்தார்களில் மனைவி, பிள்ளைகள், உறுப்பினர்களின் பெற்றோர்களுக்கும் இதேமாதிரியான அறுவை சிகிச்சை செய்வதற்கும்) செய்தால் அதற்காகத் தேவைப்படும் செலவுகளுக்கு பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதேவகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. அலுவலகத் திடமிருந்து எங்களது திட்டங்களின் கீழ் இந்தப் பணியாளர் பயன் பெறவில்லை என்கிற சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரிடமிருந்தும் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்திருக்கும்பட்சத்தில் அதற்கான சான்றிதழ்களையும் மருத்துவரி டமிருந்து வாங்கி சமர்ப்பிப்பது அவசியம்.
இந்தத் தேவைக்கு ஆறு மாதச் சம்பளத் தொகை அல்லது ஊழியர்களின் முழு பி.எஃப். சேமிப்புத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இப்படி பணம் எடுக்க குறிப்பிட்ட ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
புதிதாக வீடு வாங்க, வீட்டின் கட்டுமானத்துக்கு!
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வீடு வாங்க, வீடு கட்ட அந்தக் கணக்கில் ஒருவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்பித்ததின் அடிப்படையில் வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தா தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப் படாது) மற்றும் வட்டியுடன் கணக்கிடப்பட்டு  வழங்கப்படும்.
வாங்கும் அல்லது கட்டும் வீடானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இணைந்து இருக்கலாம். மனைவியைத் தவிர்த்து மற்றவர்களின் பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டால் இப்படி பணம் பெற முடியாது.
விண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவும் பி.எஃ.ப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வீடு வாங்க அல்லது கட்ட என்ன தொகை பி.எஃப்.-லிருந்து பெற முடியுமோ, அதே தொகைதான் வீடு கட்டவும் கிடைக்கும். அதே விதிமுறைகள்தான் இதற்கும்.
வீட்டுமனைகள் வாங்க!
பணிக் காலத்தில் ஒருமுறைதான் இதற்காக பணத்தை பி.எஃப்-லிருந்து பெற முடியும். வாங்கும் வீட்டு மனையானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். பி.எஃப்.-லிருந்து பணத்தைக் கேட்டு சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்களின் 24 மாதங்களுக்கான சம்பளத் தொகை விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். நிரப்பப்பட்ட டிக்ளரேஷன் படிவத்துடன் மனை வாங்குவதற்கான உறுதிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான இழப்பு ஏற்படும்போது..!
தொழிற்சாலை வேலைநிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தின் மொத்த தொகையை, நிறுவனம் எவ்வளவு மாதங்கள் மூடப்பட்டிருக்கிறதோ, அந்த எண்ணிகையால் பெருக்க கிடைக்கும் தொகையை அவர்களின் தேவைகளுக்காகப் பெறலாம்.
ஆறு மாதங்களுக்குமேல், தொழில் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்களின் பி.எஃப். சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்துக்கு குறைவான தொகையினைப் பெறலாம். இதற்கு குறிப்பிட்ட வருடங்கள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தொழிற்சாலை வேலைநிறுத்தம் போன்ற சமயங்கள் வரும் போதெல்லாம் இதன் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களுடன் நிறுவனத்தின் தொழிற்சாலை வேலை நிறுத்தம் அறிவிப்பு சார்ந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  
உடல் ஊனமுற்றவர்களுக்கு!
உடல் ஊனமுற்றவர்கள் கருவிகளைப் பெறுவதற்காக பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு படிவம் 31-உடன் மருத்துவரிடம் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
அடிப்படைச் சம்பளம் மற்றும் ஆறு மாதங்களுக்கான டி.ஏ தொகை அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகை வட்டியுடன் சேர்த்து (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) அல்லது வாங்கும் பொருளின் மதிப்பு இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற அதிகபட்சம் இரண்டு மாதம் ஆகலாம்.  இதற்கு வட்டி எதுவும் இல்லை!
- செ.கார்த்திகேயன்.

இந்தியாவின் மார்ஸ் மிஷன்!

From Vikatan..

சூரியனைச் சுற்றிவரும் மூன்றாவது கிரகம், பூமி. நான்காவது கிரகம், செவ்வாய். ஆங்கிலத்தில் 'மார்ஸ்’ என்றால் போர்க் கடவுள் என்று பொருள். யுத்தம், கோபம், ரத்தம் இவற்றின் குறியீடாக விளங்கும் செந்நிறத்தில் தகதகக்கும் கிரகத்துக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்கள் அங்காரகன், செம்மீன், செவ்வாய் என்று பெயர் சூட்டிவிட்டன!
இந்த செவ்வாய் கிரகத்தை நோக்கிய ஒரு சாதனைப் பயணத்துக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இந்தியாவின் விண்கலம் ஒன்று புறப்படத் தயார் நிலையில் காத்திருக்கிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ESA (ஃப்ரான்ஸைத் தலைமையாகக்கொண்ட 13 ஐரோப்பிய நாடுகள்), ஜப்பான், சீனா... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியுள்ளன. இவற்றில் ஜப்பானும் சீனாவும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே, இந்தியா செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற நான்காவது நாடு என்ற பெருமையும், ஆசியாவின் முதல் வெற்றி நாடு என்ற பெருமையும் கிடைக்கும்!
பூமிக்கும் செவ்வாய்க்கும் நிறைய ஒற்றுமைகள்...
பூமி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் பிடிக்கும்; செவ்வாய்க்கு 24 மணி நேரமும் 37 நிமிடங்களும் பிடிக்கும். பூமி, தன் சுற்றுப்பாதையில் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகும்; செவ்வாய்க்கு 687 நாட்கள் தேவைப்படும்.  
பிரம்மாண்ட ஆழமும் அகலமும்கொண்ட பள்ளத்தாக்குகள், எரிமலைகள் பூமியில் இருப்பதைப் போல செவ்வாயிலும் உண்டு. செவ்வாயில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 7 கி.மீ., அகலம் 4,000 கி.மீ.; பூமியின் மிகப் பெரிய பள்ளத்தாக்கின் ஆழம் 1.8 கி.மீ., நீளம் 400 கி.மீ. (அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான்). செவ்வாயில் இருக்கும் மிகப் பெரிய எரிமலையின் உயரம் 26 கி.மீ., இதன் விட்டம் 602 கி.மீ; பூமியில் உள்ள மிகப் பெரிய எரிமலையின் உயரம் 10.1 கி.மீ., விட்டம் 121 கி.மீ.
செவ்வாய் கிரகத்தின் பரப்பில் கரியமில வாயு 97 சதவிகிதம், பிராண வாயு 0.13 சதவிகிதம் என்ற அளவில் உள்ளன. பூமியில் நைட்ரஜன் 77 சதவிகிதமும் பிராண வாயு 21 சதவிகிதமும் உள்ளன. 2008-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 'சந்திராயன்-1’ அனுப்பப்பட்டதற்கு பிறகு, அடுத்த சாதனைப் பயணத்துக்கு 'இஸ்ரோ’ தயார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரம் 3,850 லட்சம் கி.மீ. இந்தத் தூரத்தை இந்திய விண்கலம் கடந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய சுமார் 10 மாதங்கள் பிடிக்கும். அதாவது, இந்த அக்டோபர் 28-ம் தேதி மாலை 4.27 மணிக்கு விண்கலம் சரியாகப் புறப்படுமானால், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி அதிகாலை 4.27 மணிக்கு செவ்வாய்க்குப் போய்ச் சேருமாம். எவ்வளவு வியப்பூட்டும், துல்லியமானத் தகவல்!
எம்.ஓ.எம். (’மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’) என்ற இந்தத் திட்டத்தின் பட்ஜெட், ரூ.450 கோடி. 1,350 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஒரே வருடத்தில் தயாரிக்கப்பட்டது.
பெங்களூரூவில் உள்ள 'இஸ்ரோ’ மையத்தின் திட்ட இயக்குநரான சுப்பையா அருணன், ஒரு தமிழர். ''இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சம் இது. செவ்வாய் கிரகத்தில், உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்வதும், அந்தக் கிரகத்தின் சுற்றுச்சூழலை ஆராய்வதுமே நமது நோக்கங்கள். இவற்றுக்கு மேலாக, கிரகம்விட்டு கிரகம் பயணிக்க இந்தியா எடுக்கும் முயற்சிக்கு இந்தப் பயணம்தான் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.  
அக்டோபர் 2-ம் தேதி அதிகாலை, பெங்களூரூ 'இஸ்ரோ’விலிருந்து பலத்த பாதுகாப்புடன், விண்கலம் சாலை வழியாக தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. 345 கி.மீ. தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்துக்கு, மணிக்கு சுமார் 10 கி.மீ. வேகத்தில் அது பயணித்துப்  பத்திரமாக வந்து சேர்ந்தது. சாலை வழியாக 10 கி.மீ. வேகத்தில் பயணம் செய்த விண்கலம், விண்வெளியில் மணிக்கு 25,000 கி.மீ. வேகத்தில் பறக்க இருக்கிறது!
நாம் அனுப்பும் விண்கலம் செவ்வாயில் தரை இறங்கப்போவது இல்லை. செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரப்போகிறது. இது ஒரு தொழில்நுட்ப சோதனைத் திட்டமே தவிர, அறிவியல் ஆராய்ச்சித் திட்டம் அல்ல. கிரகம்விட்டு கிரகம் பயணிக்கும் சாத்தியக்கூறு நம்மிடம் இருப்பதை உறுதிசெய்யும் திட்டம். பல்வேறு விதமான நோக்கங்களுடன் ஐந்து முக்கியக் கருவிகளை இந்த விண்கலத்தில் பொருத்தியுள்ளோம்.
பூமியில் இருக்கும் நமக்கு, ஒரு சந்திரன்தான் உபகிரகமாக உள்ளது. ஆனால், செவ்வாய்க்கு இரண்டு உபகிரகங்கள். இந்தியா அனுப்பவுள்ள விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம், செவ்வாயிலிருந்து தரையையும் உப கிரகங்களையும் கண்காணித்து, உயிரினம் வாழத் தேவையான மீத்தேன் வாயு, தாதுக்கள், நீர் போன்றவை இருக்கின்றனவா என்று விண்கலத்தில் இணைத்து அனுப்பப்படும் கருவிகள் சொல்லும்.
விண்கலத்தின் எடை 1,350 கிலோ என்றாலும், அதனுள் 852 கிலோ எரிபொருள் அடங்கியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து புறப்படவுள்ள விண்கலத்தை ஏற்றிச் செல்ல பி.எஸ்.எல்.வி. சி 25 என்ற ராக்கெட், நான்கு எரிபொருள் நிலைகளுடன் தயார். இது இந்தியாவின் சில்வர் ஜூப்ளி ராக்கெட்!'' என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுப்பையா அருணன்.
செவ்வாய் கிரகத்தை ஆராய, அட்லஸ் மற்றும் டைட்டன்ஸ் எனும் மிகப் பெரிய, ஏராள பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, ராக்கெட்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. அவற்றை ஒப்பிடுகையில் குறைந்த செலவிலான இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைப் பயன்படுத்துவது இந்திய விண்வெளி ஆய்வுச் சிறப்புகளில் ஒன்று. பூமியின் ஈர்ப்பு சக்தி முடிவுபெறும் இடத்தை அடைய 9,18,347 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். 'இஸ்ரோ’ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் விண்கலத்தில் மிகக் குறைவான எரிபொருளையே பயன்படுத்தி இந்தச் சாதனையைச் செய்ய இருக்கிறது.
''ஒருகாலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலக்கிரமத்தில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, அங்கு உயிரினம் வாழமுடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. பூமியிலும் நாம் பல தவறுகளைச் செய்து வருகிறோம். தூய்மையான நீர், கழிவு நீரால் அசுத்தமாகி வருகிறது. சுவாசிக்கும் பிராண வாயு, நச்சுப்புகையால் மாசுபடுகிறது. ஓஸோன் மண்டலம் பழுதுபட்டு வருகிறது. சுனாமி, புயல் போன்றவை பூமியில் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன. இப்படி பூமியை நாம் பாழ்படுத்திவருகிறோம். ஓர் அனுமானத்தில் நாம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சி, பூமிக் கிரகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க வழிகாட்டலாம்!'' என்கிறார் விஞ்ஞானி சுப்பையா அருணன்.  
'அக்டோபர் 28’ என்று நாள் குறித்திருப்பதில் ஒரு நுட்பம் இருக்கிறது. இந்த நாளில் இந்தியாவைவிட்டு விண்கலம் புறப்பட்டால்தான் அது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, செவ்வாயின் ஈர்ப்பு விசையில் செலுத்தப்பட்டு, செவ்வாயின் சுற்றுப்பாதையைச் சரியாக அடைய முடியுமாம். சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் 44 டிகிரியில் ஒன்றுசேருதல் (மிகக் குறைந்த எரிபொருள் செலவில்) சாத்தியமாவது அக்டோபர் 28 முதல் நவம்பர் 15 வரைதானாம்.  இந்தக் காலத்தைத் தவறவிட்டால், ஜனவரி 2016 அல்லது மே 2018தான்அடுத்தடுத்த சாய்ஸ்! ''நாம் நிச்சயம் சாதிப்போம்'' என்கிறார் அருணன் உற்சாகமாக.
தமிழன் சாதிப்பான். விகடனின் வாழ்த்துகள்!
யார் இந்த அருணன்?
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தின் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை ஒட்டிய கோதைச்சேரி கிராமத்தில் பிறந்தவர். மனைவி கீதா, பெங்களூரூவில் நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆசிரியை. மகள் ஸ்ருதி அருணன், பெங்களூரூவில் எம்.பி.பி.எஸ்.  மாணவி. அருணனின் தாயார் மாணிக்கம், ராக்கெட் உளவு வழக்கில் சிக்கி, நிரபராதி என்று விடுதலைசெய்யப்பட்ட பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மூத்த சகோதரி. அருணனின் மனைவி கீதா, நம்பி நாராயணன் - மீனா தம்பதியரின் மகளே!