Saturday, October 5, 2013

ஸ்விஃப்ட்டை வீழ்த்துமா ஐ10 டீசல்

From MOTOR VIKATAN

ந்தியா என்றாலே, ஹேட்ச்பேக் கார்கள்தான். இந்த மார்க்கெட்டைப் பிடித்து விட்டால், இந்திய கார் மார்க்கெட்டையே சுலபமாகப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது ஹூண்டாய். அதனால்தான் இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 என ஏற்கெனவே நான்கு ஹேட்ச்பேக் கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வந்தாலும், இப்போது ஐந்தாவது ஹேட்ச்பேக் காராக 'கிராண்ட் ஐ10’ எனும் காரைக் களம் இறக்கியிருக்கிறது. 'அதுதான் ஏற்கெனவே ஐ10 இருக்கிறதே... கிராண்ட் ஐ10 காரை புத்தம் புது காராக எப்படிக் கருத முடியும்?’ எனக் கேள்வி எழலாம். ஆனால், உண்மையிலேயே கிராண்ட் ஐ10, புதிய கார்தான். காருக்குள் இருக்கும் மூன்று சிலிண்டர்களைக்கொண்ட டீசல் இன்ஜினில் இருந்து, காரின் நீள அகலங்கள் வரை அனைத்துமே இதில் புதுசுதான். 
வெளித்தோற்றம்
இயான் மற்றும் ஐ20 கார்களைப் போல, காரின் வெளித்தோற்றத்தில் க்ரீஸ் கோடுகளின் ஆலாபனை அதிகம் இல்லை. அதனால், காரின் தோற்றத்துக்குப் பாதகம் இல்லை. காரைப் பார்க்க சிம்பிளாக இருக்கிறது. அதேசமயம், ஐ10 காரைவிட பெரிதாகத் தோற்றம் அளிக்கிறது. அதிலும், அறுகோண வடிவத்தில் உள்ள ஏர்டேம், சற்றே ஆல்ட்டோவை நினைவுப்படுத்தினாலும் அழுத்தமான ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறது. அதேபோல, ஏர்டேம் கீழ் இருக்கும் பனி விளக்குகளும், அதற்குக் கீழே இருக்கும் க்ரீஸ் கோடுகளும் 'வாவ்’ ரகம். இதன் கிரில் மற்றும் ஹெட்லைட்ஸ், காருக்கு ஸ்லீக்கான தோற்றத்தைக் தருகின்றன. பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது சிம்பிளாகவே தெரிந்தாலும், வைரத்தை நினைவுபடுத்துவதுபோல வடிவமைக்கப்பட்டுள்ள இதன் அலாய் வீல்கள்தான் இதன் மதிப்பை உயர்த்துகிறது. பின்னிருக்கைகளில் இருக்கும் ஜன்னல் விசாலமாக இருந்தால்தான் நம் ஊர் வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கும் என்பதால், கிராண்ட் ஐ10 காரின் பின் பக்க ஜன்னல் கண்ணாடிகளை ஹூண்டாய் பெரிதாக அமைத்திருக்கிறது. இதனால், காரின் பின் பக்கத்தில் உட்கார்ந்தால், வெளிச்சத்துக்குக் குறைவு இல்லை. பெரிய காரில் உட்கார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வும் ஏற்படுகிறது. காரின் பின் பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் டெயில் லைட்ஸ், பக்கவாட்டிலும் நீள்வது காருக்கு 'இளமை’ அடையாளத்தை ஊட்டுகிறது.
உள்ளலங்காரம்
ஹூண்டாய் கார்கள் என்றாலே, காரின் உள்ளலங்காரம் திருப்தியாக இருக்கும். அதிலும் கிராண்ட் ஐ10 காரின் உள்ளலங்காரம், அதற்கும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு, அலட்டலான அலங்காரம் எதுவும் இல்லாமல் இருப்பதே இதற்கு ஒரு கனிவான இமேஜைக் கொடுக்கிறது. டேஷ்போர்டின் தரம், முதல் தரம். ஆனாலும் காபி வண்ணத்தை எல்லோருமே விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது. எலான்ட்ராவின் ஸ்டீயரிங் வீல்தான் இந்த காரில் இருக்கும் ஸ்டீயரிங் வீலுக்கு இன்ஸ்பிரேஷன். ஆனால், காரின் டிரைவர் சீட்டில் உயரம் குறைந்தவர்கள் உட்கார்ந்தால், நிச்சயம் சீட்டை உயர்த்திக்கொண்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஸ்டீயரிங்கை சௌகரியமாகப் பிடிக்க முடியும். ஏ.சி திருகுகள், ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள் எல்லாமே தரமாக இருப்பதோடு, கைக்கு எட்டும் தூரத்தில் வசதியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் விலை உயர்ந்த வேரியன்டில்கூட கிளைமேட் கன்ட்ரோல் இல்லாதது குறைதான். கியர் லீவர் டிசைன் சூப்பர். உள்ளலங்காரத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டல் எஃபெக்ட், காருக்கு ரிச் லுக் கொடுக்கிறது. காரின் வீல்பேஸ் 40 மிமீ கூடியிருப்பதால், இதன் பின்னிருக்கைகளில் காலை நீட்டி உட்கார தாராளமாக இடம் கிடைக்கிறது. பின்னிருக்கைகள் சோபா போல சற்றே சாய்ந்த நிலையில் பொருத்தப்பட்டு இருப்பதால், வசதியாக சாய்ந்து உட்காரும் போது, சொகுசான உணர்வு.
காரின் பின்னிருக்கையில் உட்கார்ந்தால், அடைப்பட்ட உணர்வு தலைதூக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததால், பெரிய ஜன்னல் கண்ணாடிகளாக இதற்குப் பொருத்தியது ஹூண்டாய். ஆனால், ஹூண்டாயின் எண்ணம் முழுமையாக நிறைவேறவில்லை. காரணம், காரின் ஜன்னல்கள் சற்றே உயரமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. அதோடு, காரின் இருக்கைகளும் சற்றே தாழ்வாக இருக்கின்றன. ஆனால், இந்தக் குறைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு, பின்னிருக்கைகளுக்கு ஏ.சி வென்ட் கொடுத்து மறக்கடித்து விடுகிறது ஹூண்டாய்.
இன்ஜின்
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது ஹூண்டாய் கிராண்ட். ஐ10 மற்றும் ஐ20 கார்களில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது.ஐ10 காரைப் போலவே ஓட்டுவதற்கு பெப்பியான இன்ஜினாக இருக்கிறது  1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்.
கிராண்ட் ஐ10 காரின் பெரிய கவர்ச்சியே இதன் புது வரவான 1.1 லிட்டர் டீசல் இன்ஜின்தான். இதைப் புத்தம் புது இன்ஜின் என்று  ஹூண்டாய் சொன்னாலும், உண்மையில் இது ஐ20 காரில் இருக்கும் சிஆர்டிஐ இன்ஜின்தான். ஆனால், ஐ20 காரில் நான்கு சிலிண்டர்கள்,   1396 சிசி திறன்கொண்டிருந்த இன்ஜின், இதில் மூன்று சிலிண்டர்கள், 1102 சிசி-யாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. டீசல் இன்ஜின்களுக்கும் மூன்று சிலிண்டர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், பல சமயங்களில் அதிர்வுகள் அதிகமாக இருக்கும். அதனால்தான் ஐ20 போல இது அதிர்வுகளே இல்லாத காராக இல்லை. டீசல் இன்ஜின் என்பதை உறுதிப்படுத்த, ஐடிலிங்கிலேயே அதிர்வுகளுடன் ஆரம்பிக்கிறது. ஆனால், வேகம் கூடக்கூட அதிர்வுகள்  கொஞ்சம் மறைந்துவிடுகிறது.  டீசல் இன்ஜினுக்கே உரிய மற்றொரு குணமான டர்போ லேக் இதில் உண்டு. 1,500 ஆர்பிஎம் வரை இன்ஜின் கொஞ்சம் மந்தமாக இருக்க... அதன் பிறகு பிக்-எப் எடுத்துவிடுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், 1,500 ஆர்பிஎம்-ல் இருந்து 2,700 ஆர்பிஎம் வரை ஓட்ட ஓட்ட ஆனந்தம்தான். ஆனால், அதுவே 3,500 ஆர்பிஎம் தாண்டி விட்டால், சக்தி போதவில்லை.
என்னதான் சின்ன காராக இருந்தாலும், இது போட்டி போடுவது மாருதி ஸ்விஃப்ட் உடன் என்பதை இங்கே நினைவில் கொண்டாக வேண்டும். இதைச் சொல்வதற்குக் காரணம், ஸ்விஃப்ட் 0 - 100 வேகத்தை எட்ட 13.5 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால், இதே வேகத்தை எட்ட கிராண்ட் ஐ10 எடுத்துக் கொள்வதோ, 20.25 விநாடிகள்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
இந்த விஷயத்தில் ஹூண்டாய் கார்கள் எல்லாமே கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கின்றன. ஆனால், கிராண்ட் ஐ10 காரில், இந்த ஏரியாவில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கொஞ்சம் பெரிய ஸ்பீடு பிரேக்கராக இருந்தாலும் இது நன்றாகவே சமாளிக்கிறது. ஆனால், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, காரும் மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. மற்ற ஹூண்டாய் கார்களைவிட சற்றே உறுதியான உணர்வை இதன் ஸ்டீயரிங் கொடுப்பதால், நம்பிக்கையுடன் ஓட்ட முடிகிறது. ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்தபோது, எதிர்பார்க்காத திசையிலிருந்து ஒரு டூ-வீலர் சடார் என வெளிப்பட... சடன் பிரேக் அடித்தோம். அப்போது இதன் ஏபிஎஸ் நமக்கு சூப்பராகக் கை கொடுத்தது.
மைலேஜ்
அராய் அமைப்பை மேற்கோள் காட்டி, ஹூண்டாய் இது லிட்டருக்கு 24 கி.மீ மைலேஜ் கொடுப்பதாகக் கூறினாலும், நாம் இதை டெஸ்ட் செய்தபோது, நகருக்குள் 15.4 கி.மீ; நெடுஞ்சாலையில் 19.6 கி.மீதான் கொடுத்தது. சராசரியாகச் சொன்னால், லிட்டருக்கு 17.5 கி.மீ. போட்டியாளர்களின் அளவுக்குத்தான் இதன் மைலேஜ் இருக்கிறது. கிராண்ட் ஐ10 காரின் எரிபொருள் கொள்ளளவு 43 லிட்டர் என்பதால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 750 கி.மீ பயணிக்க முடியும்.


 ஐ10-ல் வேரியன்ட்டுகளைக் குறைத்த ஹூண்டாய்!
 கிராண்ட் ஐ10 காருடன் விலையில் முட்டி மோதுவதால், ஐ10 காரின் டாப் வேரியன்ட்களின் தயாரிப்பை நிறுத்திவிட்டது ஹூண்டாய். ஐரோப்பிய நாடுகளில் புதிய ஐ10 காராக அறிமுகப்படுத்த... கிராண்ட், இந்தியாவில் ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையே மற்றொரு காராக விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ஐ10, ஐ10 கிராண்ட் என இரு கார்களும் விலையில் ஒன்றை ஒன்று நெருங்கியதால், ஐ10 காரின் ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா மாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், ஐ10 கிராண்ட் காரில் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு வருவதால், ஐ10 காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment