Sunday, October 27, 2013

பாதுகாப்பும், பட்டா பெயர் மாற்றமும்!

- Article from nanayam vikatan.

பத்திரப்பதிவு முடித்துவிட்டோம். நமக்கே நமக்கான ஒரு சொந்த மனை அமைந்துவிட்டதில் திருப்தி மற்றும் சந்தோஷத்தை உணரக்கூடிய நாட்கள் இது. இத்தனை நாட்கள் அலைந்து திரிந்துவிட்டோம், இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என யோசனை வரும். ஆனால், இந்த உணர்வு உங்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைப்பார்களா என எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருக்கின்றன பிரச்னையின் கண்கள். எனவே, இந்தச் சூழ்நிலையில் சமயோசிதமாக சில வேலைகளைச் செய்து முடிப்பது அவசியம்.  
நாம் முதலீட்டு நோக்கில் மனை வாங்கவில்லை, உடனே வீடு கட்டவேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கும். மாற்று கருத்தில்லைதான். ஆனால், நமது நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால், அந்த இடத்தில் வீடு கட்டும் வேலைகள் தொடங்க குறைந்தது மூன்று மாதத்திலிருந்து ஆறு மாத காலம் ஆகும். இந்த இடைவெளியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் மனையின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
வீடு கட்டுவதற்கான நடைமுறைகளைத் தொடங்குவதற்கு முன் செய்யவேண்டிய முதல் வேலை, பட்டா பெயர் மாற்றம்தான். எந்தக் காரணம் கொண்டும் இந்த வேலையைத் தள்ளிப்போடக் கூடாது.  பத்திரப்பதிவு முடிந்த பத்து நாட்களுக்குள் சொத்து உரிமை மாற்ற ஆவணங்கள் நமது கையில் கிடைத்துவிடும். அதாவது, நமது பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரப்பதிவு ஆவணங்கள். இந்த ஆவணங்கள் கிடைத்த அடுத்தநாளே மனை அமைந்துள்ள சம்பந்தப்பட்ட கிராமத்தின் நிர்வாக அலுவலகம் சென்று இந்த வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும்.  
நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் மனையின் பழைய ஆவணங்கள், அந்த மனையை நீங்கள் வாங்கியதற்கான ஆதாரமான தற்போதைய பத்திரப்பதிவு ஆவணத்தின் நகல் போன்றவற்றின் அடிப்படையில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் செய்யவேண்டும். இதற்கு கட்டணம் செலுத்தி மறக்காமல் ரசீதும் வாங்கிக் கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலமாக பெயர் மாற்றப்பட்ட புதிய பட்டா உங்களுக்குக் கிடைக்கும். பத்திரத்தில் உள்ள பெயருக்குத்தான் பட்டா விண்ணப்பிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
பட்டா பெயர் மாற்றம் செய்தவுடன், மனையின் பாதுகாப்பு விஷயத்திலும் எப்போதும் ஒரு கண் வைத்து செயல்பட வேண்டும். மனை வாங்கும்போது ஏமாந்து விடக்கூடாது என்று எப்படி பார்த்துப் பார்த்து வாங்கின மாதிரி, மனை வாங்கிய பின்னும், அந்த எச்சரிக்கை உணர்வு அவசியம். ஆள் நடமாட்டம் இல்லாத எல்லா இடமும் நம் இடமே என்று காத்திருப்பார்கள் சில வில்லங்கப் பேர்வழிகள். இடம் வாங்க என்ன கஷ்டப்பட்டிருப்போம், எந்ததெந்த வகையில் பணம் புரட்டியிருப்போம் என்கிற வலியெல்லாம் அவர்களுக்கு இல்லை. நறுக்கென்று மனை நடுவில் ஒரு கொட்டகை போட்டு வைத்துவிட்டு போய்விடுவார்கள்.
இப்படி ஓர் அனுபவத்தைச் சந்தித்தது திண்டுக்கலைச் சேர்ந்த நண்பர் சுரேஷ்குமாரின் குடும்பம். எல்லாம் பக்காவாகப் பார்த்து புறவழிச்சாலையில் சாலையோரமாக ஒரு பழைய மனைப் பிரிவில் இருந்த இடத்தை வாங்குகிறார்கள். அக்கம் பக்கம் குடியிருப்புகள் உள்ள ஏரியா என்பதால், உடனடியாக வீடு கட்டும் ஏற்பாடுகளிலும் இறங்குகிறார்கள். ஆனால், எதிர்பாராதச் சூழ்நிலையில், நண்பரின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ வேலைகளில் கவனம் செலுத்தியதில் வீட்டு வேலைகள் தொடங்க தாமதமாகிவிட்டது. அந்த இடைவெளியில் மனையையும் சென்று பார்த்துவரவில்லை. சுமார் மூன்று மாதங்கள் கழித்து வீட்டு வேலை தொடங்குவதற்கு முன், மனையைச் சுத்தப்படுத்த அங்கு போனால், அந்த மனையில் கீற்றுக் கொட்டகைப் போட்டு ஒரு குடும்பம் வசித்து வருகிறது. என்ன யார் என்று விசாரிக்க, அந்த ஊரில் உள்ள ஓர் அரசியல் பிரமுகரை கை நீட்டுகிறார்கள்.
பிறகு அங்கே, இங்கே என்று அலைந்து, கட்டப் பஞ்சாயத்து வரை சென்று அந்த இடத்தை மீட்டுக்கொண்டுவந்தது நண்பரின் குடும்பம். ''சார், இதை பெரிசு பண்ணாதீங்க, ஏதோ சும்மா கிடந்த இடம்னு அவங்களைக் குடியிருக்கச் சொன்னேன். நீங்களும் இப்ப நம்ம ஊர்க்காரர் ஆகிட்டீங்க'' என்று அந்த அரசியல்வாதி இறங்கி வந்து இடத்தைக் கொடுத்தார். நண்பருக்கு இருந்த செல்வாக்குக் காரணமாக சில நாட்கள் அலைச்சலில் இடத்தை மீட்டுவிட்டனர். ஆனால், எல்லோருக்கும் இப்படியான செல்வாக்கு அமைந்துவிடுவதில்லை. எந்த ஒரு செல்வாக்கும் இல்லாதவர்கள் இந்த இடஅபகரிப்பு பேர்வழிகளிடம் சிக்கினால், அவர்களின் கதி அதோ கதிதான்!  
இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க ஒரே வழி, மனையைச் சுற்றி கம்பி வேலி அமைப்பது. உடனடியாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த கம்பி வேலி பாதுகாப்பு தேவை இல்லை. தவிர, வீடு கட்டும்போது இந்த கம்பி வேலி இடையூறாகவே இருக்கும்.
மனையைப் பாதுகாக்க சிறந்த முறை எது என விசாரித்தபோது பலரும் பரிந்துரைத்தது இதைத்தான்.  மனை வாங்கிய அடுத்தநாளே மனையின் நான்கெல்லை மூலையிலும் 'எல்’ டைப்பில் இரண்டடிக்கு ஆழம் எடுத்து செங்கல் சுவர் அல்லது ஹாலோ பிளாக் சுவர் இரண்டடி உயரத்துக்கு எழுப்பிவிட வேண்டும். அதில் அந்த மனையை வாங்கிய விவரங்களை எழுதி வைத்துவிட வேண்டும். இதன்மூலம் அந்த இடம் இன்னாருக்குச் சொந்தமானது என்பதை அறிவித்தால், யாரும் அந்த இடத்தில் நுழைய முடியாது. அப்படி நுழைந்தால் அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த முறையை எல்லோருமே பின்பற்றுகிறார்கள் என்கிறார்கள் அனுபவசாலிகள்.
மனை வாங்கிய அனைவருமே ஆக்கிரமிப்பு சிக்கலில் சிக்கிவிடுவதில்லை என்றாலும், அது நமக்கு நிச்சயம் நடக்காது என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அதேசமயம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் மனையை நேரில் சென்று பார்த்துவிட்டு வருவது அவசியம். மனைக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் ஏற்கெனவே வீடு கட்டி வசித்து வந்தால், அவர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வதன் மூலம் ஆக்கிரமிப்புகளிலிருந்து இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். குறைந்தபட்சம் அவர்கள் நமக்கு உடனடியாக தகவல் சொல்லும்பட்சத்தில் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
சரி, மனையைப் பாதுகாத்துவிட்டோம். அடுத்து, வீட்டு வேலைகளைத் தொடங்கிவிட வேண்டியதுதானே என்கிறீர்களா? வாழ்த்துக்கள், வீடு கட்ட முடிவு செய்ததற்கு! அந்த வேலையில் இறங்கும் முன்பு இரண்டு முக்கியமான வேலைகளை நீங்கள் செய்தாகவேண்டும். மின்சார இணைப்பு பெறுவது எப்படி? தண்ணீருக்கான வசதியை ஏற்படுத்திக்கொள்ள என்ன செய்வது? என்பதை அடுத்து பார்ப்போம்!

No comments:

Post a Comment