Thursday, October 24, 2013

அவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பி.எஃப். பணம் !

சம்பளம் வாங்குகிறவர்களின் ஓய்வுக்கால நிதித் தேவைக்கு அடித்தளம் அமைத்துத் தருவதுதான் பி.எஃப் என்று சொல்லப்படுகிற தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி. ஓய்வுக்காலத்துக்காகச் சேர்க்கும் இந்தப் பணத்தை இடைப்பட்ட காலத்தில் முடிந்தவரை எடுக்காமல் இருப்பது நல்லது. என்றாலும், மிக முக்கியமான செலவு ஏற்படும்போது பி.எஃப்.-ல் சேர்ந்த பணத்தைத் திரும்ப (withdrawal) எடுத்துக்கொள்ள முடியும். அதற்கான வசதி இருக்கிறது.
என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப். சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்கலாம் என சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் அதிகாரிகளிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் அவர்கள்.
கல்வி மற்றும் திருமணத்துக்கு!
சம்பளதாரர் தன் திருமணம், பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கும்போது பி.எஃப்-லிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, சம்பளதாரரின் மேற்படிப்பு, அவரது பிள்ளைகளின் மேற்படிப்புக்கும்  பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஒருவர் ஏழு ஆண்டுகள் பி.எஃப். சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்ப எடுக்கும்போது,  அவருடைய பி.எஃப். கணக்கில் 50 சதவிகித தொகை மட்டுமே (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) பெற முடியும்.
இதற்கு வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பப் படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து, அதனுடன் கல்விக்கு கடன் என்றால் கல்வி நிறுவனத்திடமிருந்து போனோஃபைட் சர்ட்டிஃபிகேட், கட்டண விவரத்துடன்கூடிய ஃபீஸ் ஸ்ட்ரக்சர் சமர்ப்பிக்க வேண்டும். திருமணத்துக்கு எனில், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் திருமண அழைப்பிதழை நிறுவனத்தின் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் கல்விக்கென்று ஒருமுறையும், திருமணத்துக்கு என்று இரண்டுமுறையும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
மருத்துவச் செலவுகளுக்கு!
சம்பளதாரர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு ஒருமாத காலத்துக்கு மேல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை (காசநோய், புற்றுநோய், இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள், குடும்பத்தார்களில் மனைவி, பிள்ளைகள், உறுப்பினர்களின் பெற்றோர்களுக்கும் இதேமாதிரியான அறுவை சிகிச்சை செய்வதற்கும்) செய்தால் அதற்காகத் தேவைப்படும் செலவுகளுக்கு பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதேவகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. அலுவலகத் திடமிருந்து எங்களது திட்டங்களின் கீழ் இந்தப் பணியாளர் பயன் பெறவில்லை என்கிற சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரிடமிருந்தும் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்திருக்கும்பட்சத்தில் அதற்கான சான்றிதழ்களையும் மருத்துவரி டமிருந்து வாங்கி சமர்ப்பிப்பது அவசியம்.
இந்தத் தேவைக்கு ஆறு மாதச் சம்பளத் தொகை அல்லது ஊழியர்களின் முழு பி.எஃப். சேமிப்புத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இப்படி பணம் எடுக்க குறிப்பிட்ட ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
புதிதாக வீடு வாங்க, வீட்டின் கட்டுமானத்துக்கு!
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வீடு வாங்க, வீடு கட்ட அந்தக் கணக்கில் ஒருவர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்பித்ததின் அடிப்படையில் வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தா தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப் படாது) மற்றும் வட்டியுடன் கணக்கிடப்பட்டு  வழங்கப்படும்.
வாங்கும் அல்லது கட்டும் வீடானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இணைந்து இருக்கலாம். மனைவியைத் தவிர்த்து மற்றவர்களின் பெயரில் வீடு பதிவு செய்யப்பட்டால் இப்படி பணம் பெற முடியாது.
விண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவும் பி.எஃ.ப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வீடு வாங்க அல்லது கட்ட என்ன தொகை பி.எஃப்.-லிருந்து பெற முடியுமோ, அதே தொகைதான் வீடு கட்டவும் கிடைக்கும். அதே விதிமுறைகள்தான் இதற்கும்.
வீட்டுமனைகள் வாங்க!
பணிக் காலத்தில் ஒருமுறைதான் இதற்காக பணத்தை பி.எஃப்-லிருந்து பெற முடியும். வாங்கும் வீட்டு மனையானது உறுப்பினரின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் அல்லது இருவரின் பெயரில் இருக்க வேண்டும். பி.எஃப்.-லிருந்து பணத்தைக் கேட்டு சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் படிவம்-31-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்களின் 24 மாதங்களுக்கான சம்பளத் தொகை விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். நிரப்பப்பட்ட டிக்ளரேஷன் படிவத்துடன் மனை வாங்குவதற்கான உறுதிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான இழப்பு ஏற்படும்போது..!
தொழிற்சாலை வேலைநிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தின் மொத்த தொகையை, நிறுவனம் எவ்வளவு மாதங்கள் மூடப்பட்டிருக்கிறதோ, அந்த எண்ணிகையால் பெருக்க கிடைக்கும் தொகையை அவர்களின் தேவைகளுக்காகப் பெறலாம்.
ஆறு மாதங்களுக்குமேல், தொழில் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்களின் பி.எஃப். சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்துக்கு குறைவான தொகையினைப் பெறலாம். இதற்கு குறிப்பிட்ட வருடங்கள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. தொழிற்சாலை வேலைநிறுத்தம் போன்ற சமயங்கள் வரும் போதெல்லாம் இதன் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். படிவம்-31-ல் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களுடன் நிறுவனத்தின் தொழிற்சாலை வேலை நிறுத்தம் அறிவிப்பு சார்ந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  
உடல் ஊனமுற்றவர்களுக்கு!
உடல் ஊனமுற்றவர்கள் கருவிகளைப் பெறுவதற்காக பி.எஃப். மூலம் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு படிவம் 31-உடன் மருத்துவரிடம் சான்றிதழ்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
அடிப்படைச் சம்பளம் மற்றும் ஆறு மாதங்களுக்கான டி.ஏ தொகை அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்புத் தொகை வட்டியுடன் சேர்த்து (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது) அல்லது வாங்கும் பொருளின் மதிப்பு இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
பி.எஃப். கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற அதிகபட்சம் இரண்டு மாதம் ஆகலாம்.  இதற்கு வட்டி எதுவும் இல்லை!
- செ.கார்த்திகேயன்.

No comments:

Post a Comment