Saturday, October 5, 2013

மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ?

From Ananda VIkatan




ரேந்திர தாமோதர் தாஸ் மோடி, பிரதமர் வேட்பாளர்தானா... அல்லது பிரதமரே ஆகிவிட்டாரா என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது, இந்தியா முழுக்க அலையடிக்கும் 'மோடி மேனியா’!
  2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது’ என்பதை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இப்போது 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற முழக்கத்துடன் நரேந்திர மோடி என்கிற ஒற்றை மனிதரை காங்கிரஸுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது. ஒரு பக்கம், 'இனப் படுகொலைக் குற்றவாளி’ என்ற ரத்தக்கறை மோடி மீது படிந்திருக்கும் நிலையில், மறுபக்கம் அவர்தான் இந்திய இளைஞர்களின் புதிய நம்பிக்கையாகவும் கொண்டாடப்படுகிறார். எதை நம்புவது..? மோடியின் சாதனைகள்... மோடி மீதான விமர்சனங்கள் என இரு துருவ விவாதங்களை இங்கே அலசலாம்...
''மோடி... வளர்ச்சியின் முகம்!''
நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்? அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில் என்ன?..  பட்டியலிடுகிறார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன்.
''காற்றாலை மின்சாரம், கடல் அலையில் இருந்து மின்சாரம், சூரிய மின்சாரம்... என குஜராத்தில் திட்டமிடப்பட்டுள்ள மாற்று வழி மின் தயாரிப்புத் திட்டங்களும், அங்குள்ள மரபுசார்ந்த மின் உற்பத்தித் திட்டங்களும் மொத்தமாக அமலுக்கு வரும்போது, இந்தியாவின் மொத்த மின் தேவையில் 35 சதவிகிதத்தை குஜராத் மாநிலம் மட்டுமே பூர்த்தி செய்யும். குறிப்பாக, நர்மதா நதிக் கால்வாய் மேல் 458 கி.மீ. நீளத்துக்கு சூரிய மின் தகடுகள் பதிக்கப்பட்டு சூரிய மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், கால்வாய் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு, அசுத்தமாகாமலும் காப்பாற்றப்படுகிறது. இந்த வளர்ச்சியைத்தான் நாங்கள் மொத்த இந்தியாவுக்கும் கொண்டுவருவோம் என்கிறோம்.
ஓர் அரசு, லாபத்தை மட்டுமே பார்க்கக் கூடாது என்கிறார்கள். இதை நான் ஏற்கிறேன். ஆனால் தனது துறைகளில் லாபம் ஈட்டும்படி அரசு இயங்கினால்தானே, மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி கிடைக்கும்? கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சியை வேறு எந்த மாநிலத்துடன் ஒப்பிட்டாலும் உயர்வானதுதான். 'வளர்ச்சி’ என்று வரும்போது மற்றவர்களுக்கு ஓர் அளவுகோலும், குஜராத்துக்கு ஓர் அளவுகோலும் வைப்பது எதனால்? குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் பேசும்போது எல்லாம், உடனே 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகள் குறித்து திரும்பத் திரும்பப் பேசுகின்றனர். எனில், முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளின்போது நடைபெற்ற வன்முறைகளில் இருந்து இதைத் தொடங்க வேண்டும்.
எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள்... குஜராத்தில் நல்ல சாராயமும் இல்லை; கள்ளச் சாராயமும் இல்லை. பூரண மதுவிலக்கை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் வரும் பாவப் பணத்தை மறுத்து ஆட்சி நடத்தும் மோடியின் ஆட்சி எப்படி மக்களுக்கு நன்மையற்றதாக இருக்கும்?''
''ஆனால், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், பிரசவ மரணங்கள், ஆண்-பெண் விகிதாசாரம், வறுமைக்கோட்டுக்கு கீழ் ஏராளமாக உள்ள மக்கள்... போன்ற அடிப்படை விஷயங்களில் குஜராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறதே?''
'' 'மோடி ஏன் 98 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்... 100 ரன்கள் ஏன் அடிக்கவில்லை?’ என்று கேட்பதைப் போல இருக்கிறது இது. மோடி கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குஜராத்தை ஆட்சி செய்கிறார். இந்தக் குறுகியகால இடைவெளியில் அவர் செய்துள்ள சாதனைகளைத்தான் நாங்கள் பிரசாரம் செய்ய முடியும். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குஜராத்தில் அதிகம் உள்ளனர் என்பதை எங்களுக்கு எதிரான பிரசாரமாகப் பேசுகிறார்கள். ஆனால், குஜராத்தின் பெரும்பகுதி மக்கள் சைவ உணவு உண்பவர்கள். சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச் சத்து மற்றும் இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பது இயல்பு. இதை மாற்ற, அரசு பல திட்டங்களைத் தீட்டியுள்ளது என்றபோதிலும், இது சமூகத்தின் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடையது!''
  ''உலகிலேயே குஜராத்தில்தான் அதிகளவு வாடகைத் தாய்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டுக்கு சராசரியாக, 30 ஆயிரம் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இதன் மூலம் குஜராத்துக்கு வருடத்துக்கு 1,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. பெண்களின் கர்ப்பப் பையை வாடகைக்கு விடுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?''
''வாடகைத் தாய்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்கவே அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இதை ஏன் நீங்கள் அந்நியச் செலாவணியுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்? வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்படும் பணமும் அந்நியச் செலாவணிக் கணக்கில்தான் வரும். வாடகைத் தாய் முறையை மத்திய அரசு அனுமதித்துள்ளதால்தான், அது நடைபெறுகிறது என்பதையும் நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.''
''2002-ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளில் மோடிக்கு உள்ள தொடர்பையும் மறுப்பீர்களா?''
''2002-ம் ஆண்டு நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை, '2000... 3000’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பொய்யாகத் திரித்துக் கூறப்படுகிறது. ஆனால், கணக்கெடுப்பின்படி அந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 856 பேர்தான். இதில் 254 பேர் இந்துக்கள். ஆக, இறந்த அனைவருமே இஸ்லாமியர்கள் அல்ல. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு நரேந்திர மோடிதான் அந்த வன்முறைகளை முன்னின்று நடத்தினார் என்று சொல்வது பொய்ப் பிரசாரம். அந்தச் சம்பவத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!''
ஆதாரம்: Census 2011, Reserve Bank of India, National Sample Survey Organisation, The Economic Times,  Narendra Modi: The Man, The Times - Nilanjan Mukhopadhyay

''மோடி பிம்பம்... அத்தனையும்  இட்டுக்கட்டிய பொய்கள்!''
நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறது கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையனிடம் பேசினேன்...
''மோடி, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர். நீங்களோ, அவரை 'கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆள்’ என்கிறீர்கள். எப்படி?
''அண்மையில், இந்தியாவின் டாப்-100 நிறுவனங்களின் சி.இ.ஓ-களிடம், 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியபோது, 'இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்?’ என்ற கேள்வியை முன்வைத்தது. டாடா, அம்பானி, பிர்லா, மிட்டல், அடானி... உள்ளிட்ட பெரும் முதலாளிகள்தான் அந்த சர்வேயில் பங்குகொண்டவர்கள். அவர்களில் 74 சதவிகிதம் பேர் மோடி பிரதமராக வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு சேர்த்து 26 சதவிகிதம்தான்.
ஏன் அவர்கள் மோடியை விரும்புகின்றனர்? ஏனென்றால், மோடி குஜராத்தில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை, விவசாயிகளிடம் இருந்தும், மீனவர்களிடம் இருந்தும் பிடுங்கி, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் கோடி சலுகைகளை வரைமுறையின்றி வாரி வழங்கி இருக்கிறார். மோடி, மொத்த இந்தியாவுக்கும் பிரதமராக வந்தால் இந்தச் சுரண்டலை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடியை மாற்றத்தின் நாயகனாக அவர்கள் முன்னிறுத்துவதன் பின்னுள்ள அரசியல் இதுதான். மன்மோகன் சிங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமானவர்தான் என்றபோதிலும், அவர் இப்போது செல்லாக் காசாகிவிட்டார். அந்தப் படம் இப்போது ஓடாது. ஆகவேதான் 'மோடி’ என்கிற புதிய ஹீரோவைக் களம் இறக்குகிறார்கள் கார்ப்பரேட்டுகள்.
மோடி எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். டாடா நானோ தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வந்ததைப் பற்றி மோடி குறிப்பிடும்போது, 'பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை வெறும் ஒரு ரூபாய் செலவில் அழைத்து வந்தேன்’ என்பார். அதாவது, இவர் டாடாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அவர் குஜராத் வந்துவிட்டார். அந்த 'ஒரு ரூபாய் செலவின்’ உண்மை முகம் என்ன? 1,100 ஏக்கர் நிலத்தை சந்தை விலையைவிட 100 மடங்கு குறைவான விலையில் டாடாவுக்குக் கொடுத்தார் மோடி. 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டுக்கு 9,570 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அதற்கு வெறும் 0.1 சதவிகிதம்தான் வட்டி. கடனை 20 ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். இது எந்த ஊரிலாவது நடக்குமா? மோடி பிரதமராவதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க. தலைவர்களிடம் மாற்றுக் கருத்து இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ ஒருமித்த குரலில் மோடியை ஆதரிக்கின்றன.
அதேபோல, வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்தில் அதிகம் என்ற சித்திரம், திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் பெயரளவுக்கு உள்ள சம்பிரதாயங்கள்கூட குஜராத்தில் கிடையாது. '1000 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை ஆன்லைனிலேயே முடித்தோம்’ என்று அவர்கள் பெருமையுடன் சொல்வது இதைத்தான். இப்படிப்பட்ட மாநிலத்தை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காது? சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) இந்தியாவில் இருப்பது நமக்குத் தெரியும். குஜராத்தில் மட்டும்தான், சிறப்பு முதலீட்டு மண்டலங்கள் (Special Investment Zones)இருக்கின்றன. அதுபோலவே, மோடியை 'சிறந்த நிர்வாகி’ என்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஐ.ஜி., டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் சிறைக்குள் இருக்கிறார்களா? ஆனால், குஜராத்தில் 32 பேர் இருக்கிறார்கள். அனைவரும் 2002 -ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இத்தனை அதிகாரிகளே சிறையில் இருந்தால், அப்புறம் அது என்ன சிறந்த நிர்வாகம்?''
''குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து என்ன சொல்வீர்கள்?''
''மோடியின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்களுக்கு புள்ளிவிவரங்கள் குறித்து அக்கறை இல்லை. அவர்கள் துணிந்து பொய்களைப் பரப்புகின்றனர். அல்லது 'மின்சார உற்பத்தியில் குஜராத் தன்னிறைவு பெற்றுவிட்டது’ என்கிறார்கள். 'என்ன விலை கொடுத்தாலும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும்’ என்பது எந்த வர்க்கத்தின் கோரிக்கை? அது செலவு செய்ய முடிபவர்களின் குரல். பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்து, சில நூறு முதலாளிகள் மட்டுமே லாபம் அடைவதற்குப் பெயர் 'வளர்ச்சி’ அல்ல. லாபத்தை மட்டுமே அளவுகோலாகக் கருத, மோடி நடத்துவது மளிகைக்கடையும் அல்ல!''
''புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். மோடிக்கு என இந்தியா முழுக்க ஒரு இமேஜ் உருவாகியிருப்பது பொய் இல்லை. அதற்கு உங்கள் பதில் என்ன?''
''மோடியைச் சுற்றி எழுப்பப்படும் இந்த பிம்பம் எதேச்சையாக வந்தது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (Apco World wide)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் 'லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான். ஊடகச் செய்திகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தூதுவர்களின் குஜராத் வருகை எல்லாவற்றுக்கும் பின்னால், இந்த நிறுவனத்தின் லாபி இருக்கிறது. மோடி எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்?.. என்பன ஒரு திரைக்கதையைப் போல முன்பே தயாரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங்கை UNDERACHIEVER என்று வர்ணித்த அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, மோடியை MODI MEANS BUSINESS என்று அட்டைப் படத்தில் வெளியிட்டது. இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!''
''சரி... உங்களைப் போன்றோரின் பிரசாரங்களையும் மீறி மோடி பிரதமர் ஆகிவிட்டால்..?''
''எந்தக் காரணத்தால் மோடி குஜராத்தில் வெற்றி பெற்றாரோ, அதே காரணத்தால் அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. இந்து மதவெறி, முஸ்லீம் எதிர்ப்பு... என்ற அவரது குஜராத் ஃபார்முலா, தேசிய அளவில் உதவாது. 'மோடி மேனியா’ என்பது, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம் மட்டும்தான் இருக்கிறது. நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடம் இது எடுபடவில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை என்பதை பா.ஜ.க-வால் கனவிலும் நினைக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றால், அதற்கு நரேந்திர மோடிதான் வில்லன். ஆகவே, மோடியின் பிரதமர் கனவு நிறைவேறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது நிறைவேற வேண்டுமெனில், மிகக் கேவலமான சந்தர்ப்பவாதிகளாக மற்ற அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது!''

ஆதாரம்!
ரேந்திர மோடியின் 'மைனஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய 'ப்ளஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும், பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் நம்மிடம் கூறியவையே.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதற்கு முன் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போது ரகுராம் ராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகுறித்து ஆய்வு செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில்... கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், அரியானா... ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன. மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் மேற்கு வங்கம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவற்றோடு குஜராத்தும் இடம் பிடித்துள்ளது!

No comments:

Post a Comment