Saturday, October 5, 2013

டெஸ்ட் டிரைவ் - ஸ்கோடா ஆக்டேவியா

Article From MOTOR VIKATAN

ஆக்டேவியா... இந்திய கார் வாடிக்கையாளர்கள் மனதில் ஆழப் பதிந்த இந்த காரை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்து நிறுத்தியது ஸ்கோடா. 'ஆக்டேவியா மீண்டும் வர வேண்டும்’ என ரசிகர்கள் கொடி பிடிக்க... இப்போது லேட்டஸ்ட் ஆக்டேவியா களம் இறக்கியிருக்கிறது. புதிய ஆக்டேவியாவை சிம்லாவில் டெஸ்ட் டிரைவ் செய்தேன். 
    ஆக்டேவியா முன்னோட்டம்!
ஸ்கோடா ஆக்டேவியா, முதன்முதலில் ஐரோப்பாவில் 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் இந்தியாவில் 2001-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது தலைமுறை ஆக்டேவியா 2004-ம் ஆண்டு அறிமுகமானது. ஆனால், இந்த கார் இந்தியாவில் லாரா என்ற பெயரில் வேறு காராக விற்பனைக்கு வந்ததோடு, பழைய ஆக்டேவியா தொடர்ந்து விற்பனையில் இருந்தது. திடீரென 2010-ம் ஆண்டு ஆக்டேவியாவின் தயாரிப்பை ஸ்கோடா நிறுத்தியது. இந்த நிலையில், மீண்டும் புதிய ஆக்டேவியா விற்பனைக்கு வருவதால், தற்போது விற்பனையில் இருக்கும் லாராவின் தயாரிப்பு நிறுத்தப்பட இருக்கிறது.
டிசைன்
ஃபோக்ஸ்வாகனின் புத்தம் புதிய எம்க்யூபி (Modularer QuerBaukasten) ) என்னும் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுகிறது புதிய ஆக்டேவியா. பழைய ஆக்டேவியாவைவிட இது பெரிய காராக இருப்பதோடு, எடையும் குறைவானது. புதிய க்ரில்லில் ஸ்கோடாவின் புதிய லோகோ பதிக்கப்பட்டுள்ளது. பை-ஸெனான் ஹெட்லைட்ஸ் உடன் சேர்ந்திருக்கும் எல்இடி 'டே டைம் ரன்னிங் லைட்ஸ்’ காரின் முன்பக்கத் தோற்றத்தை மிகவும் ஸ்டைலாக மாற்றியிருக்கிறது. பின் பக்கத்தைப் பொறுத்தவரை, ஸ்கோடாவின் புதிய டிசைன் 'தீம்’படி, பின்பக்க விளக்குகள் 'சி’ வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. வேரியன்ட்டுகளைப் பொறுத்து 5-ஸ்போக் மற்றும் 10-ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
பழைய ஆக்டேவியாவைவிட புதிய ஆக்டேவியா நீளத்தில் 90 மிமீ, அகலத்தில் 45 மிமீ அதிகம். அதேசமயம், பழைய காரைவிட 105 கிலோ எடை குறைவு என்பதுதான் ஹைலைட்!
உள்ளே
உள்பக்க இட வசதியில் பிரமிக்கவைக்கிறது ஆக்டேவியா. இரண்டு பேர் மிகவும் வசதியாக உட்கார்ந்து பயணிக்கும் அளவுக்குத் தாராளமான இடம் இருக்கிறது. மூன்றாவது நபர் உட்கார இடம் இருந்தாலும், நடுவில் அமைந்திருக்கும் பெரிய ஏ.சி டனல் அவரின் பயண அனுபவத்தை வெறுப்புக்குள்ளாக்கும். காருக்குள்ளே நுழைவதும், வெளியேறுவதும் செம ஈஸி. கலர் கலர் விஷயங்கள் எதுவும் இல்லாமல், செம சிம்பிளாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ஆக்டேவியாவின் உள்பக்கம். லெதர் சீட், சன் ரூஃப், ஸ்டீயரிங் கன்ட்ரோல், டச் ஸ்க்ரீன், அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், டோர் ஓப்பன் இண்டிகேட்டர், பின் பக்க ஏ.சி வென்ட், ஏபிஎஸ், காற்றுப் பைகள் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. ஆனால் ஜப்பான், கொரிய கார்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட ஐரோப்பிய நிறுவனங்கள் செய்யும் சில குளறுபடிகள், புதிய ஆக்டேவியாவிலும் உண்டு.
பெரிய டச் ஸ்க்ரீன் கொடுத்தவர்கள், ரிவர்ஸ் கேமரா கொடுக்கவில்லை. வெறும் ரிவர்ஸ் சென்ஸார் மட்டுமே! காரில் பயணம் செய்யும்போது எஸ்டி கார்டை எல்லாம் பயன்படுத்துவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், எஸ்டி கார்டு செலுத்த காருக்குள் வசதி உண்டு. பென் டிரைவ், ஐ-பாட் கனெக்ட்விட்டி உள்ளன. ஆனால் பென் டிரைவை நேராகச் செலுத்த முடியாது. இதற்கெனத் தனியாக இன்னொரு அடாப்டர் வாங்க வேண்டும் என இம்சிக்கிறது ஸ்கோடா. மேலும், பின் பக்க ஏ.சி வென்ட் இருந்தாலும், அது முன் பக்க ஏ.சி அளவுக்கு பவர்ஃபுல்லாக இல்லை.
காருக்குள் இருக்கும் இட வசதியைப் போன்றே டிக்கியிலும் தாராள இட வசதியுடன் இருக்கிறது. 590 லிட்டர் கொள்ளளவுகொண்ட டிக்கியில், பெரிய பயணத்துக்குத் தேவையான அத்தனை பைகளையும் அடக்கி விட முடியும்.
இன்ஜின்
மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஆக்டேவியாவை விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஸ்கோடா. விலை குறைவான 1.4 லிட்டர், 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்றுமே பவர்ஃபுல் இன்ஜின்களைக் கொண்டிருக்கின்றன. ஃபோக்ஸ்வாகன் ஜெட்டாவில் இருக்கும் அதே 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் ஆக்டேவியாவிலும் இருக்கிறது. ஆனால், ஜெட்டாவில் வெறும் 122 bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்திய இந்த இன்ஜின், ஆக்டேவியாவில் 138 bhp சக்தியைக்கொண்டதாக பவர் கூட்டப்பட்டிருக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்கொண்ட இந்த மாடலில், ஆரம்பத்தில் டர்போ லேக் இருந்தாலும், 1,400 ஆர்பிஎம் மேல் இன்ஜின் சீற ஆரம்பிக்கிறது.
1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 177 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில், டர்போ லேக் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம் சீராக வெளிப்படுகிறது. மேலும், இன்ஜின் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்டு இருப்பதால், 1.4 லிட்டர் இன்ஜினைவிட சத்தமும் குறைவு. நாம் இந்த காரை டெஸ்ட் செய்தது சண்டிகர் சிம்லா மலைப் பாதை என்பதால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட இந்த மாடல், ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. கையாளுமை, ஓட்டுதல் தரம் என இரண்டிலுமே சிறப்பாக இருக்கும் இந்த கார், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கு அற்புதமான கார்.
ஆக்டேவியாவின் பலமே டீசல் இன்ஜின்தான் என்பதால், இந்த காரிலும் 2 லிட்டர் பவர்ஃபுல் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் டீசல் மாடலில் உண்டு. 2 லிட்டர் டீசல் இன்ஜின் 141 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. டர்போ லேக் அதிகம் இல்லை என்றாலும், 2000 ஆர்பிஎம் கடந்து விட்டால், இன்ஜின் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
ஓட்டுதல் தரம்
ஓட்டுதல் தரத்திலும், கையாளுமையிலும் ஆக்டேவியா மிகச் சிறப்பாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மிமீ என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். மேடு பள்ளங்களை மிகவும் திறமையாகச் சமாளிக்கிறது ஸ்கோடாவின் சஸ்பென்ஷன். காரை முழுமையாக டெஸ்ட் செய்யாததால், இந்த இதழில் ஆக்டேவியாவின் உண்மையான மைலேஜை வெளியிடவில்லை. 'அராய் சான்றிதழ்படி, 1.4 லிட்டர் இன்ஜின் லிட்டருக்கு 16.8 கி.மீ, 1.8 லிட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் 14.7 கி.மீ, டீசல் மேனுவல் 20.6 கி.மீ, டீசல் ஆட்டோமேட்டிக் 19.3 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது ஸ்கோடா.
முதல் தீர்ப்பு
ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா, செவர்லே க்ரூஸ், டொயோட்டா கரோலா ஆல்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது ஸ்கோடா ஆக்டேவியா. ஆனால், உண்மையில் இந்த செக்மென்ட் மட்டும் அல்லாமல், இதைவிட சொகுசு கார்களான பஸாத், சொனாட்டா, கேம்ரி கார்களுக்குப் போட்டி போடும் அளவுக்கு மிகவும் தரமான கார். சின்னச் சின்னக் குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் தோற்றம், சிறப்பம்சங்கள், இன்ஜின் என மூன்றிலுமே புதிய ஆக்டேவியா முழுமையான சூப்பர் கார். டீசல் இன்ஜினின் மைலேஜும் அதிகமாக இருக்கும்.
ஆக்டேவியா 15 - 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களைவிட விலையில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், முழுமையான ஆரம்ப விலை சொகுசு காராக இருக்கிறது ஆக்டேவியா!

No comments:

Post a Comment