Saturday, October 5, 2013

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி!

From Dr. VIKATAN

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  அதிலும், தொடர்ந்து அதிக தூரம் வண்டியிலேயே பயணம் செய்ய நேரிடும்போது கை, கால், மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் தசைகள் இறுகி வலி ஏற்படும். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 15 நிமிடங்களில் செய்யக்கூடிய நான்கு பயிற்சிகளைப் பற்றி உடற்பயிற்சியாளர் பிரபாகரன் நமக்கு செய்துகாட்டினார். மேலும், 'இந்தக் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது ஒரே மாதத்தில் நல்ல பலன் தெரியும்' என்கிறார்.

முதுகுதண்டு நீட்சி அடையும் பயிற்சி
(Spinal Curve  Stretching Workouts)
வயிற்றுப் பகுதி தரையில் இருக்கும்படி நேராக குப்புறப் படுக்க வேண்டும். இரண்டு கால்களையும் ஒட்டியவாறு வைத்துக்கொண்டு, முட்டிப் பகுதிக்கு கீழுள்ள காலை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புப் பகுதியில் வைத்து, சில நொடிகள் அதே நிலையில் இருந்து, மூச்சை அடிவயிறு வரை நன்கு இழுத்தபடி 15 முதல் 20 விநாடிகள் இருக்க வேண்டும்
பலன்கள்: நீண்ட நாள் தீராத முதுகுவலி சரியாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பலம் பெறும்.
 கீழ் மற்றும் மேல் முதுகுக்கான பயிற்சி
(Low Back And Upper Back Workouts)
 
இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, வலது கால் முட்டிபோட்ட நிலையிலும், இடது காலை பின்புறம் நேராக நீட்ட வேண்டும். இப்போது, இடது காலை கீழ் இருந்து மேலாக 10 முதல் 20 தடவைகளுக்கு மேல் உயர்த்த வேண்டும். இதேபோன்று வலது காலுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்: தோல் பட்டை மற்றும் இடுப்புப் பகுதி வலுபெறும். கணுக்கால் முட்டி வலுவடைந்து, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
முதுகெலும்பு மற்றும் கால்களை வலுவாக்கும் பயிற்சி
(Spinal Curve and Leg Strengthening  Workouts)
முட்டி போட்டவாறு, கைகளை தரையில் ஊன்றி உடலை நிலை நிறுத்தவேண்டும். இப்போது இடது காலை மட்டும் மடித்து மேல்புறமாக உயர்த்தி கீழே இறக்குங்கள். இப்படி 10 முதல் 20 தடவைகள் செய்ய வேண்டும். இதேபோல, வலது காலுக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்: காலில் உள்ள எல்லா நரம்புகளும் தசைகளும் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். தசைப் பிடிப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து செய்யும்போது நல்ல தீர்வு கிடைக்கும்!
தொடைகளை வலுவாக்கும் பயிற்சி
(Quadriceps Strengthening)
தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும்  வைக்க வேண்டும். இடது கையை முன்பக்கமாக நீட்டி தரையைத் தொடும்படி வைக்கவேண்டும். இப்போது, இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். இப்படி 10 முதல் 20 தடவைகள் செய்யயுங்கள். இதேபோல வலது கைக்கும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்: முதுகெலும்பு, முதுகில் உள்ள நரம்புகள் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். முழங்கால் மூட்டுப் பகுதி வலுபெறும்.

No comments:

Post a Comment