Saturday, October 5, 2013

டெஸ்ட் டிரைவ் - ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி லவ்லி பைக்?

From MOTOR VIKATAN

ராயல் என்ஃபீல்டு - விசுவாசமான வாடிக்கையாளர்களைக்கொண்ட பைக் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பைக்குகளை, 'தரத்தின் உச்சம், கையாளுமையில் சூப்பர்’ என்றெல்லாம் புகழ முடியாது. ஆனால், இந்த பைக்குகளுக்கு இருக்கும் ஈர்ப்பும், உயிரும் வேறு பைக்குகளுக்குக் கிடையாது. அதனால்தான், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வைத்திருப்பவர்கள், திரும்பத் திரும்ப அதையேதான் சுற்றி வருகிறார்கள். 
புதுப்புது டிசைன்களில் பலவிதமான பைக்குகள் அறிமுகமானாலும், இவர்களுக்கு புல்லட்டின் மீதான ஆர்வம் குறையாது. வெறித்தனமான இந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரு நிறுவனத்துக்குப் போதாது. அதனால், புதிய வாடிக்கையாளர்களைக் கவர, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெளிவான திட்டங்களுடன் எடுத்த ரிஸ்க், 'கான்டினென்டல் ஜிடி!’
1960-களில், இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த 'கஃபே ரேஸர்’ பைக்கின் மறுஜென்மம்தான் கான்டினென்டல் ஜிடி. சின்னச் சின்ன விஷயங்களில்கூட நுணுக்கமான கவனமும் சிரத்தையும் எடுத்து, கான்டினென்டல் ஜிடிக்கு உயிர் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.
கிளாஸிக் லுக்குடன் இருக்கும் ஹெட்லைட் வடிவமைப்பால், பைக்கின் முன் பக்கம் தெளிவான டிசைனில் இருக்கிறது. கிளிப் ஆன் ஹேண்டில்பாரில், என்ஃபீல்டு பைக்குகளின் பரிச்சயமான சுவிட்சுகளும், பாஸ் லைட் ஃப்ளாஷர் மற்றும் இன்ஜின் கில் சுவிட்ச்சும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் ரகத்தைச் சேர்ந்தவை. ஸ்பீடோ மற்றும் டேக்கோமீட்டர் இரண்டும் அனலாக். இவற்றைச் சுற்றி க்ரோம் பட்டை கொடுக்கப்பட்டு, இரண்டு குடுவைகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஃப்யூல் மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர் ஆகிய மூன்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஒளிர்கிறது. ஹேண்டில்பாரில் மாட்டிக் கொள்ளக்கூடிய அழகான ரியர் வியூ மிரரை, ஆஃப்டர் மார்க்கெட் பாகமாக அளிக்கிறார்கள். இதன் சைஸ் சின்னதாக இருந்தாலும், பயன்படுத்த நன்றாக இருக்கிறது.
பைக்கின் 13.5 லிட்டர் ஃப்யூல் டேங்க், கஃபே ரேஸர் பைக்குகளுக்கே உரிய வடிவமைப்புடன் அதிகம் அலங்காரமில்லாமல், தெளிவான கம்பெனி லோகோவுடன் காட்சியளிக்கிறது. பெட்ரோல் டேங்க் மூடி, 'ஃப்ளிப் டு ஓப்பன்’ டைப்பில் வசதியாக இருக்கிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக் கூடிய சீட் மட்டும்தான் என்றாலும், 'டூயல் சீட்’ ஆப்ஷனும் உண்டு. இருக்கை முடியும் இடத்தில் மேலே எழும்பும் உலோக பாகம், கொள்ளை அழகு. ஜிடியில் இருப்பது ஸ்போக்குகள்கொண்ட அலாய் வீல் என்பது, நெருங்கிக் கவனித்தால்தான் தெரியும்.
கான்டினென்டல் ஜிடியின் ஒட்டுமொத்தத் தரம்... மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளைவிட ஒரு படி மேலே இருக்கிறது. ஸ்டைலிங் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
கான்டினென்டல் ஜிடிக்கு மெக்கானிக்கல் உயிர் அளிப்பது 535 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின். இன்ஜினைக் குளிர்விப்பதற்கு ஏர் கூல்டு முறையையே தேர்ந்தெடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இன்ஜினை இயக்கியதும் கொஞ்சம் சாஃப்ட்டான, அதேசமயம் தனித்துவமான ஒரு சத்தத்துடன் இயங்குகிறது. ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், சத்தம் இன்னும் ரசிக்கும்படி இருக்கிறது. அதிகபட்சமாக 29.1 bhp சக்தியை 5,100 ஆர்பிஎம்-லும், 4.49 kgm டார்க்கை 4,000 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. 1 டவுன் 4 அப் முறையில் இயங்கும் கியர்பாக்ஸ், ஸ்மூத்தாக ஷிஃப்ட் ஆனாலும் கிளட்ச் இன்னும் சிறப்பான முறையில் இருந்திருக்கலாம்.
இது ஸ்போர்ட்டியான கிளாஸிக் பைக் என்பதால், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்யலாம். மணிக்கு 140 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும்போதும் பைக் அலைபாயாமல் இருக்கிறது. அதிர்வுகள் கொஞ்சம் இருக்கின்றன. ஒரு பக்கா ராயல் என்ஃபீல்டு இன்ஜினுக்கான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. அதிக ஆர்பிஎம்-ல் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக உள்ளது. ஆனால், குறைந்த ஆர்பிஎம்-ல் சக்தியின் வெளிப்பாடு சுமார்தான். டிராஃபிக்கில் ஆக்ஸிலரேட்டரைக் கூடுதலாக முறுக்கினால்தான் வசதியாக இருக்கும். மைலேஜ் லிட்டருக்கு சுமார் 25 - 30 கி.மீ இருக்கலாம். முழுவதுமாக டெஸ்ட் செய்யும்போதுதான் சரியான மைலேஜ் தெரியும்.
கான்டினென்டல் ஜிடியின் இருக்கை அகலமாகவும், வசதியாகவும் இருக்கிறது. ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரா மற்றும் புல்லட் மாடல் அளவுக்கு இதன் இருக்கைகள் சொகுசாக இல்லை. இப்போது இருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே ஸ்போர்ட்டியான டிரைவிங் பொசிஷன் இருப்பது ஜிடியில்தான்.
பிரபலமான ஹாரிஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தால் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது இதன் ட்வின் டவுன் ட்யூப் ஸ்டீல் ஃப்ரேம். பைக்கின் எடையும் 184 கிலோதான். முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பக்கம் பயோலி நிறுவனத்தின் அட்ஜஸ்டபிள் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஓட்டுதல் தரம் கச்சிதமாக இருக்கிறது. புதிய ஃப்ரேம், பைக்கை நம்பிக்கையுடன் நன்றாக வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு உதவுகிறது. தேவையான க்ரிப்பை பைரலி டயர்கள் வழங்குகின்றன.
பைக்கின் வேகத்தைக் கட்டுப்படுத்த, முன் சக்கரத்தில் 300 மிமீ ஃப்ளோட் மவுன்டட் டூயல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. பிரேக் பிடிக்கும்போது, லீவரில் சிறப்பான ஃபீட்பேக் உள்ளது. மேலும், கச்சிதமாக இயங்குகிறது இந்த பிரேக் காம்பினேஷன்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கையாளுமையில் கான்டினென்டல் ஜிடி தனி முத்திரை பதிக்கிறது!
 இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி. விலை கிட்டத்தட்ட  2.25 லட்சம் இருக்கும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு இது நிச்சயம் பெரிய ரிஸ்க்தான். ஏனென்றால், வழக்கமான புல்லட் பிரியர்களைவிட, கிளாஸிக் வகையிலேயே வித்தியாசத்தை விரும்பும் இன்னொரு தரப்பு வாடிக்கையாளர்களையும் நோக்கித்தான் இந்த பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது என்ஃபீல்டு.
ஏற்கெனவே கூறியது போல, தெளிவாகத் திட்டமிட்டே இந்த பைக்கைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை உலக அளவில் ஒரு கிளாஸிக் பைக் தயாரிப்பாளராக நிலை நிறுத்தும் முயற்சி இது. கிளாஸிக் பிரியர்கள் கான்டினென்டல் ஜிடியைக் காதலிக்கலாம்!

No comments:

Post a Comment