Sunday, October 27, 2013

''கடலோரப் பாதுகாப்பில் பெரிய ஓட்டை!''

கசப்பான அனுபவங்களை தர ஆரம்பித்​திருக்கிறது இந்தியப் பெருங்கடல். இந்திய வரலாற்றில் முதன் முறையாக கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் மும்பையை ரணகளம் செய்தபோதே, இந்தியக் கடலோரப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. அடுத்தடுத்து, இலங்கை கடற்படையின் எல்லை தாண்டிய அத்துமீறல்கள், வெளிநாட்டு மாலுமிகள் நம் கடல் எல்லையில் நமது மீனவர்களையே சுட்டுக் கொல்வது, அடையாளம் தெரியாத வெளிநாட்டவர்கள் நமது கடல் எல்லையில் சுற்றித்திரிவது போன்ற சமீபத்திய நிகழ்வுகள் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்க கப்பல் ஆயுதங்களுடன் வர... அதில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 
இந்த திக்திக் சூழலில் முன்னாள் கடற்படை வீரர் ஆர்.எஸ்.வாசனிடம் பேசினோம். ''இந்தியக் கடல் பரப்பு உலகின் மிக முக்கியமான கடல் வணிகத்தடம். கிழக்கு உலகத்தையும் மேற்கு உலகத்தையும் இணைக்கும் கடல் வழித்தடமாக இந்தியப் பெருங்கடல் திகழ்கிறது. பொதுவாக அனைத்துத் தரப்பினராலும் இந்தியக் கடல் பரப்புக்கு மிகப் பெரிய சவாலாக உணரப்படுவது தீவிரவாதிகள் ஊடுருவலும் கடல் கொள்ளையும்தான். ஆனால், இதையும் தாண்டி பல அச்சுறுத்தல்கள் இந்தியப் பெருங்கடலில் அலையடிக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால், உரிமைப் பிரச்னை, இயற்கைப் பேரிடர், அமெரிக்க - சீனப் பனிப்போர், சோமாலிய கடற்கொள்ளை​யர்கள், மீன் வளம், வாழ்வாதாரப் பிரச்னைகள், தேடல் மற்றும் மீட்பில் போதிய பயிற்சியின்மை, கடல் மாசு, சுற்றுச்சூழல் பிரச்னைகள் என பல உள்ளன. இவை எல்லாமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றோடு ஒன்று நிச்சயமாக தொடர்புகொண்டவைதான்.''
''வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் எந்த நிலைமையில் உள்ளன?''
''தேசத்தின் பெயருடன் இணைத்துச் சொல்லப்படும் ஒரே கடல் பரப்பு இந்தியப் பெருங்கடல் மட்டும்தான். சீனாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. 'இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படுவதால், அது இந்தியாவின் கடல் என்று அர்த்தப்படாது’ என்பது சீனாவின் வாதம். அதற்குப் பதிலடியாக நாம், 'தென் சீனக் கடல் பகுதி என்று சொல்வதால், அது சீனாவின் கடல் பகுதி என்று ஆகிவிடாது’ என்று வார்த்தை யுத்தம் நடத்துகிறோம். ஆனால், சீனா தன்னுடைய கருத்துக்கு உண்மை வடிவம் கொடுப்பதற்காக பல நடவடிக்கைகளை அசுர வேகத்தில் செய்துவருகிறது. ஆனால், அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்முடைய அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகள் எதையும் இதுவரை எடுக்கவில்லை. இது ஒரு பக்கம்.
மறுபுறம், உலகத்தின் ஒற்றை வல்லரசாகத் திகழும் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்குச் சாதகமாக அமெரிக்காவின் பாரம்பரியப் பங்காளிகளான நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வட கொரியா போன்ற நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கின்றன. தாலிபன் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவான நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு மேலோட்டமாக வேறுபாடு நிலவினாலும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒத்த சிந்தனையால், ரகசிய நட்பும் இருக்கிறது. இலங்கையுடனும் அப்படித்தான். இந்த நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து வியாபாரத் தொடர்புகளை வளர்த்து வருவதுடன் பல வழிகளில் உதவியும் செய்கிறது. இதன் மூலம் மெள்ள மெள்ள அமெரிக்கா தன்னுடைய துருப்புகளை இந்தப் பகுதிகளில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்படி சீனாவுக்கு அமெரிக்கா வைக்க நினைக்கும் செக்மேட் நமக்கும் சேர்த்துத்தான் பாதகங்களை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் இந்தத் திட்டத்தைத் தடுக்க சீனாவும் திறமையாகத்தான் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள நாடுகளுக்கு மிகப் பெரிய கட்டுமான உதவிகளைச் செய்து அவர்களை தனக்கு விரோதமாகப் போகாமல் பார்த்து வருகிறது. அதற்கு கண்முன் சாட்சிகள்... பாகிஸ்தானில் குவாடரிலும், பங்களாதேஷின் சிட்டாகாங்கிலும், மியான்மரின் சித்வியிலும், இலங்கையின் அம்பான்தோட்டாவிலும் சீனா அமைத்துக் கொடுத்த மிகப் பெரிய துறைமுகங்கள். சீனா இந்தத் துறைமுகங்களை எந்த வணிக நோக்கத்துக்காகவும் அமைத்துக் கொடுக்கவில்லை. இதன் மூலம் அந்த நாடுகளில் உள்ள கடல் பகுதிகளை சீனா நினைத்த நேரத்தில் தாராளமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் வழிசெய்துள்ளது. இதுவும் நமக்கு மிகப் பெரிய பாதகத்தைத்தான் ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக நாம் இதுவரை எந்த ராஜதந்திர நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலை நீடித்தால், நம்முடைய கடல் பரப்பே நம்மிடம் இருக்காது. அதைப் பயன்படுத்துவதற்கு நாம் அமெரிக்காவிடமோ அல்லது சீனாவின் அனுமதியையோ எதிர்பார்த்து காத்துக் கிடக்க வேண்டியிருக்கும்.''
''தீவிரவாதிகள் பற்றிய அச்சமும் இந்தியாவின் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எப்படி இருக்கின்றன?''
''கடல் வழியாக மும்பைக்குள் தீவிரவாதிகள் நுழைந்த பிறகுதான், அப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்பதையே இங்கு உள்ளவர்கள் உணர்ந்தார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பையும், சர்வதேச கடல் வணிகத்தில் இந்தியா பெற்றுவைத்துள்ள நம்பிக்கையையும் இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் தூள் தூளாக்கிவிடும். கலாசாரம், மொழி, எல்லை போன்றவற்றால் நம்முடன் பாராம்பரியத் தொடர்பில் உள்ள பாகிஸ்தானே, நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் இருப்பது நமது துரதிருஷ்டம்தான். மும்பை தீவிரவாதிகள் நுழைந்ததன் தொடர்ச்சியாக அல்லது அதுபோன்றோதான் அண்மையில் தூத்துக்குடியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலையும் பார்க்க வேண்டி உள்ளது. அவர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக நம்முடைய கடல் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். லிட்டர் கணக்கில் டீசல் வாங்கியுள்ளனர். பயங்கரமான ஆயுதங்களை வைத்துள்ளனர். ஆனால், அதை நம்மால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே, நம்முடைய கடலோர பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய ஓட்டைக்கு உதாரணம்.''
''இந்தப் பிரச்னைகளை சமாளிக்க நாம் செய்ய வேண்டியது என்ன?''
''அமெரிக்கா சீனா பனிப்போரில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் நடவடிக்கையை ராஜதந்திர ரீதியில் நாமும் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்தியப் பெருங்கடல் பகுதியிலோ அல்லது பசிபிக் பெருங்கடல் பகுதியிலோ அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளில் எந்த நாட்டின் கை ஓங்கினாலும், நமக்கு ஆபத்துதான். இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் பிரச்னையை முறியடிக்க ஜப்பான், தென் கொரியா, இலங்கை, சீனாவுடன் சேர்ந்து ஒரு அமைப்பாக செயல்படலாம். இந்த நாடுகள் ஒன்றிணைந்து கடலோரப் பாதுகாப்புக்காக மட்டும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிச் செயல்பட வேண்டும்.
கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை எல்லைக்கு வெளியிலேயே அடையாளம் கண்டு வகைப்படுத்த, தேசிய அடையாள அமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி இனம் காணலாம். அனைத்து கலங்கரை விளக்கங்களிலும் நவீன ரேடார் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் பல கலங்கரை விளக்கங்கள் வெறும் லைட் ரூமாக மட்டுமே உள்ளது. கடலோர பாதுகாப்பு கன்ட்ரோல் ரூம்கள் இப்போது இருப்பதைவிட நவீனமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஏவுகணைப் பயிற்சி, தொலைதூர நுண்ணுணர்வு ரேடார்களை அதிக பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், நிலப்பரப்பில் தீவிரவாத இயக்கங்களைப் புலனாய்வு செய்யும் உளவுத் துறையுடன் இணைந்து செயல்படும் திட்டங்களை வகுத்தல், கடலோர பாதுகாப்பில் மாநில காவல் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல், கூட்டு ரோந்துப் பணி போன்றவற்றை சரியாக செய்வதன் மூலம் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவுவதை குறைக்க முடியும். இவற்றை விட மிக முக்கியமானது கடலிலேயே காலம் கழிக்கும் மீனவ மக்களிடம் விழிப்பு உணர்வையும் பயிற்சியையும் மேம்படுத்தலாம். ஏனென்றால், அவர்களுக்கு ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் மீனவன் யார்? மாற்று நபர்கள் யார் என்பது மிகத் தெளிவாக தெரியும். கடலின் சிறு சிறு அசைவுகளையும் கடலின் எல்லா திசைகளையும் நன்கறிந்த மீனவர்களுடன், கடலோர பாதுகாப்புப் படை மோதல் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. அவர்களை அரவணைத்துச் செல்வதன் மூலம் மிகப் பெரிய உதவிகளையும் உபயோகமான தகவல்களையும் அவர்களிடம் இருந்து பெற முடியும்.''
- இப்படி வழிகாட்டுகிறார் வாசன்!

-Article from Junior vikatan.

No comments:

Post a Comment