Sunday, December 21, 2014

அந்த நாள்... -10

- Vikatan

அந்த நாள்... -10
டி.அருள் எழிலன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்
ந்த ஏழு நாட்களில் மட்டும் இலங்கையின் கொழும்பிலும் மேல்மாகாணத்திலும் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அதைச் சுருக்கமாக 'இனக் கலவரம்’ எனப் பதிந்துகொண்டது சிங்கள அரசாங்கம். ஆனால், உலகையே உலுக்கி ஈழப் போராட்டத்தின் மீது பெரும் கவனம் குவியச் செய்தது 1983-ன் அந்த 'ஜூலைக் கலவரம்’தான். அதன் ஒரு பகுதியான 'வெலிக்கடை சிறைப் படுகொலைகளை’ எந்தத் தயக்கமும் இல்லாமல் 'நரவேட்டை’ என்றே குறிப்பிடலாம். சிங்களக் கைதிகளை வைத்துக்கொண்டு சிறைக்குள் சிங்கள் அரசு நடத்திய அந்த நரவேட்டையில் கொல்லப்பட்ட 54 பேரும் ஈழப் போராட்டத்தின் பொக்கிஷங்கள். கொல்லப்பட்டவர்களில் பலரும் மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; சிந்தனையாளர்கள்; போராளிகள். அடித்தும், வெட்டியும், கண்கள் பிடுங்கப்பட்டும், தலை பிளக்கப்பட்டும்  கொல்லப்பட்டனர் அந்த 54 பேரும். வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நேரடிச் சாட்சியான டேவிட், பின்னர் சிறையில் இருந்து தப்பி, தமிழகம் வந்து 30 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். வெலிக்கடை சிறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இங்கே எஞ்சி இருக்கும் ஒரே சாட்சி டேவிட் மட்டுமே.
சாலமோன் அருளானந்தம் டேவிட் என்ற அந்த மூத்தப் போராளியை இன்று  'டேவிட் ஐயா’ என மரியாதையாக அழைக்கிறார்கள். கட்டடக் கலை வல்லுநராகவும், நகர வடிவமைப்பாளராகவும் உலகம் முழுக்கப் பணி செய்த டேவிட், ஈழப் போராட்டத்துக்காக வேலையை உதறிவிட்டு வன்னிக்கு வந்தவர். இவர் உள்ளிட்ட முக்கியமான போராளிகளை மீட்கவே மட்டக்களப்பு சிறை உடைப்பு நடத்தப்பட்டது. சிறையில் இருந்து மீண்டது முதல் தமிழகத்திலேயே வாழ்ந்துவரும் டேவிட்டுக்கு இன்றைக்கு வயது 91. வெலிக்கடை சிறைப் படுகொலைகளின் நினைவுகள் பற்றி கேட்டால், நெஞ்சு நடுங்குகிறது டேவிட் ஐயாவுக்கு.
''நாஜிப் படை கொடூரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதைவிட மிகக் கொடூரம் அந்தப் படுகொலைகள். எங்கள் போராட்ட வரலாற்றில் 1983, மிக முக்கியமான ஆண்டு.  நானும் என் நண்பரும் டாக்டருமான ராஜசுந்தரமும் தொடங்கிய காந்தியம் அமைப்பு அமைத்த பள்ளிகள் பெரும் வெற்றி பெற்றிருந்தன. மலையக மக்களை வன்னியிலும், ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் குடியேற்ற நாங்கள் எடுத்த முயற்சி மிகப் பெரிய வெற்றி அளித்தது. அன்றைய காலத்தில் ஒருங்கிணக்கப்பட்ட ஒரே அமைப்பாக, மிகப் பெரிய மக்கள் செல்வாக்கோடு இருந்தது எங்களது காந்தியம் அமைப்பு. இன்னொரு பக்கம் ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய காலகட்டமும் அதுதான். போராட்டத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், புத்திஜீவிகளின் பங்களிப்பும் செல்வாக்கும் அதிகமாக இருந்தன. இந்தப் போராட்டத்தின் அடிநாதமாக இருந்த எங்களைப் போன்றோரை முதலில் கைதுசெய்து சிறையில் அடைத்தது இலங்கை அரசு. 1983-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும் கைதுசெய்து சித்ரவதைகளுக்குப் பின் வெலிக்கடை சிறையில் அடைத்துவிட்டார்கள். அதுபோல நிர்மலா நித்தியானந்தன், ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உள்பட பலரையும் கைது செய்து சிறையில் போட்டார்கள். இதனால், வெளியே பெரும் கொந்தளிப்பு நிலவியது.
நாங்கள் சிறையில் இருந்த காலத்தில் வெளியில் போராளிகள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள். திருநெல்வேலி சந்திப்பில் பிரபாகரன், செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன் உள்பட பல போராளிகள் ஒரு சிங்கள ராணுவ வாகனத்தைத் தாக்கியதில் 13 ராணுவத்தினர் இறந்தனர். தமிழர்களும் திருப்பித் தாக்குவார்கள் என்பதை முதன்முதலாக பலமாகச் சொன்னது அந்தத் தாக்குதல். புலிகளின் அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் கொழும்பில் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு நகரங்களான தெகிவளை, வெள்ளவெத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி தெருக்களில் போட்டு தமிழர்களைக் கொளுத்தினார்கள். லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டுக்குள் அகதிகள் ஆனார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எல்லாம் முடிந்த பிறகு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தினார்கள். எரிந்துகொண்டிருந்த கொழும்பு நகரம் மரண அமைதியோடு இருக்க, வெலிக்கடை சிறைக்குள் இருந்த நாங்கள் இந்தச் செய்திகளை எல்லாம் வேதனையோடும் கொந்தளிப்போடும் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தக் கலவரங்களின் ஓர் அங்கமாக நாங்களும் கொல்லப்படுவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. கலவரங்கள் ஓய்ந்துவிடும்... இயல்பு நிலை திரும்பும் என நம்பிக்கொண்டிருந்த ஒருநாள் மதியத்தில் நடந்தது அந்த அகோரம்'' எனப் பெருமூச்சை வெளிப்படுத்துகிறார். நீண்ட மௌனத்துக்குப் பிறகு இறுகிய குரலில் தொடர்கிறார்...
''அன்று மதியம் இரண்டரை மணிபோல இருக்கும். நாங்கள் சிறை வளாகத்தில் மேல் தளத்தின் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தோம். நான், டாக்டர் ராஜசுந்தரம், பாதிரியார் சின்னராசா, டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் நடுவயதைக் கடந்தவர்கள். சுமார் 40 அடி அகலமுள்ள அறைகளில் எங்களை அடைத்திருந்தார்கள். கீழ் தளத்தில் வயதில் குறைந்த இளைஞர்களையும் சிறுவர்களையும் அடைத்துவைத்திருந்தார்கள். அத்தனை பேரும் போராளிகள். திடீரென சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகள் வெளியே திறந்துவிடப்பட்டார்கள். அது அசாதாரணமாக இருந்தது. சிங்கள சிறை அதிகாரிகளே தாழ்ப்பாள்களை நீக்கி சிங்களக் கைதிகளை விடுவித்தார்கள். அவர்களுடைய கைகளில் கம்பிகள், கத்திகள், ஹாக்கி மட்டைகள் என விதவிதமான ஆயுதங்கள் இருந்தன. ஏற்கெனவே சிறையில் இருந்து விடுதலையாகிச் சென்றவர்களும் சிறை வளாகத்தினுள் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள். வந்து இறங்கியவர்கள் இப்போதைய கைதிகளோடு சேர்ந்துகொள்ள, நரவேட்டை தொடங்கியது. தேடித் தேடி அடித்தார்கள்; ஓடினால் பிடித்து இழுத்து வந்து மண்டையைப் பிளந்தார்கள்.
களத்தில் தாக்குதல் என்றால் திருப்பித் தாக்கலாம்; அல்லது தப்பி ஒளியலாம். ஆனால், சிறைக்குள் எதைவைத்து எங்களைத் தற்காத்துக்கொள்வது... திருப்பித் தாக்குவது? பெரிய கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட எலிகளைப்போல மாட்டிக் கொண்டோம். ஒவ்வோர் அறையாகத் திறந்து, தாக்கி, அடித்தே கொன்றார்கள். கீழ்தளத்தில் இருந்து மரண ஓலம்  அதிகரித்தபடியே இருந்தது. அப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெகன், குட்டிமணி, தங்கதுரை ஆகியோரைத் தாக்கி இழுத்துவந்து அடித்தே கொன்றார்கள். பின்னர் அந்தச் சடலங்களைப் போட்டு அதைச் சுற்றி நின்று கோஷங்களை எழுப்பினார்கள். ஒரு சின்னப் பொடியன். அவன் பெயர் மயில்வாகனன் என நினைக்கிறேன். அவனைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. தரதரவென இழுத்துச் சென்றபோதே அந்த உடலில் உயிர் இருக்கவில்லை.  சிறை வளாகமே பிணக்காடு ஆனது. இரவு வரை தொடர்ந்தது கொலைவெறித் தாண்டவம். அது ஓய்ந்தபோது நாங்கள் உயிருடன் இருப்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், மேல் தளத்துக்கு அவர்கள் வரவில்லை. இருட்டிவிட்டதாலும் இதற்கு மேல் தொடர முடியாது என்பதாலும் அவர்களை அவரவர் செல்களுக்குள் அடைத்துவிட்டார்கள்.
அன்றைக்கு மட்டும் எங்கள் சிறையில் மிக முக்கியமான போராளிகளில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். கொழும்புக் கலவரங்கள் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்க, சிறையில் நடந்த கொலையை மறைக்க உயரதிகாரிகள் 'விசாரணை’ என்றார்கள். ஆனால், விசாரணை அதிகாரிகளிடம் நாங்கள் எதுவும் பேசக் கூடாது என்றார்கள். வாய்த் திறந்து எங்களுக்கு நடந்த கொடுமை பற்றி சொன்னாலும், எந்த நியாயமும் கிடைக்காது என்பதால் வாயே திறக்கவில்லை. எங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு நாங்கள் அந்த அதிகாரிகளிடம் கேட்டோம். 'அது முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். வேறு வழியின்றி நாங்கள் அமைதியாகக் கலைந்துவிட்டோம். அவர்கள் 37 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் கொடுக்காமல் அப்படியே போட்டு எரித்தும் புதைத்தும் அழித்துவிட்டார்கள். எல்லாம் ஏதோ சொல்லிவைத்துத் திட்டமிட்டு நடப்பதுபோல தோன்றியது.
விசாரணையின் மறுநாள்... நாங்கள் எதிர்பார்த்ததுபோல மீண்டும் தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த முறை மேல்தளம். மேலே வந்தவர்கள் என்னைத் தேடினார்கள். டாக்டர் ராஜசுந்தரத்துக்கு சிங்களம் தெரியும். அவர் எங்கள் சிறையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்தவர்களிடம், 'எங்களை ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லையே?’ எனச் சொல்லிக்கொண்டிருந்தபோதே சிறைக்கதவை உடைத்து உள்ளே வந்தார்கள். ஒரு கம்பியைக்கொண்டு ராஜசுந்தரத்தின் தலையில் ஓங்கி அடித்தார்கள். அவர் தலை பிளந்து கீழே விழுந்தார். அந்த நொடியே அவர் மரணித்தார். மேல்தளத்தில் இருந்த பாதிரியார்கள் கொல்லப்பட்டார்கள். நானும் மரணத்தை நோக்கி நின்றபோது, அன்றைய கொலைக்கான கெடு முடிந்துவிட்டதுபோல. சிறை அலாரம் ஒலித்தது. அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் கீழே அழைத்து வரப்பட்டோம். நடந்துவரும் பாதை முழுக்க பிணங்கள் சிதறிக்கிடந்தன. பெரும்பாலும் தலை சிதைக்கப்பட்டு இறந்துகொண்டிருந்தார்கள். ஒரு பாதிரியாரின் கால்கள் மெதுவாக இழுத்துக் கொண்டிருந்தன. சுவர்களில் எல்லாம் ரத்தம். நடுங்கியபடியே கீழே வந்து நின்றோம். அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்றுதான் வந்தேன். சிறை முழுக்கக் கொல்லப்பட்டு சிதறிக் கிடந்த உடல்களை ஓர் இடத்தில் குவித்திருந்தார்கள். அந்தச் சடலக் குவியலில் பலர் மிச்ச சொச்ச உயிருடன், ஆயுளின் கடைசிக் கணத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.
'எங்களை வேறு சிறைக்கு மாற்றுங்கள்’ என நாங்கள் வைத்த கோரிக்கையை, எங்களில் பெரும் பாலானவர்களைக் கொன்ற பின்னர் ஏற்றுக் கொண்டனர். எஞ்சியிருந்த 48 அரசியல் கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள்!''
ஈழ வரலாற்றின் கறுப்பு நாள் என அடையாளப்படுத்தப்படும் 'வெலிக்கடை சிறைப் படுகொலைகள்’ இரண்டு நாட்கள் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள். தமிழீழத்துக்காகப் போராடிய அனைத்து போராளிக் குழுக்களையும் சேர்ந்த 54 பேர், அந்தப் படுகொலையில் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஈழப் போராட்டத்தில் அடுத்தடுத்து நடந்த திருப்பங்களுக்கு அந்தக் கொலை தாண்டவமே காரணமாக இருந்தது. அந்தத் தொடர் பின்னணியைச் சொல்லத் தொடங்கினார் டேவிட்.
''இப்போது நாங்கள் மட்டக்களப்பு சிறையில்.அங்கு நாங்கள் மாற்றப்பட்ட பிறகு இலங்கைக்கு வெளியே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன, இந்தியாவின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. அதேசமயம் கொழும்புக் கலவரத்தைவிட வெலிக்கடை சிறைப் படுகொலைகளையே மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது சிங்கள அரசு. இன்னொரு பக்கம் எப்படியும் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற வேட்கை பல போராளிக் குழுக்களிடம் பரவிக் கிடந்தது. 'ஜூலைப் படுகொலைகள்’ நடந்து இரண்டு மாதங்கள் கழித்து, நாங்கள் நினைத்துப் பார்க்காத அந்த அதிசயம் நடந்தது. செப்டம்பர் 23-ம் தேதி இரவு ஏழே முக்கால் மணி இருக்கும். மட்டக்களப்பு சிறையைக் கைப்பற்றிய போராளிகள் ஒவ்வோர் அறையாகத் திறந்து சுமார் 60 பேரை விடுதலை செய்தனர். வெலிக்கடையில் தப்பியவர்கள் உள்பட பலரும் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பி, காடுகளுக்குள் சென்றோம். அப்போதுதான் நானும் தப்பித்தேன்!''  என்று சொல்லிவிட்டு ஆழமான யோசனையில் மூழ்குகிறார் டேவிட்.
மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்துக்குப் பல்வேறு போராளிக் குழுக்களும் உரிமை கோர, அதுவரை போராளிக் குழுக்களிடையே இருந்த போட்டி மனநிலையைப் போர்க்குண  வன்மமாக மாற்றியது. பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொண்டார்கள். இந்தப் பகை வளர்ந்து சென்னை வரை நீடித்து, சூளைமேட்டில் பத்மநாபா படுகொலை வரை சென்று, ஈழப் போராட்டத்தில் பெரும் பாதகத்தை விளைவித்தது.
''அப்போது சிறிதும் பெரிதுமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட போராளிக் குழுக்கள் இயங்கிவந்தன. இதில் விடுதலைப்புலிகள், பிளாட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ்... ஆகியவை முக்கியமான அமைப்புகளாக தமிழகத்திலும் ஈழத்திலும் இருந்து செயல்பட்டன. எல்லா அமைப்புகளிலும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரம் பேர் போராளிகளாக இருந்தோம். இலங்கை ராணுவத்திடம்கூட அப்போது அவ்வளவு எண்ணிக்கையில் ராணுவத்தினர் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே! எங்களுக்குத் தேவையான பயிற்சியை, ஆயுதங்களை இந்தியா கொடுத்தது. ஆனால் பத்மநாபா கொலைக்கு முன்னரே, எதிர்பாராத வகையில் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான முனையத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் 29 அப்பாவிகள் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டுவெடிப்புக்கு இலங்கை அரசு, போராளிகள் மீது பழிபோட்டது.
சகோதரக் கொலைகள், குண்டுவெடிப்பு, மக்களுடனான ஆயுதமோதல்... போன்ற தொடர் சம்பவங்களுக்குப் பின்னர் போராளிகள் மீது இந்தியாவின் கண்காணிப்பு இறுகியது. இந்தியாவில் ஈழப் போராளிகளுக்குச் சோதனைக் காலம் தொடங்கியது அப்போதிருந்துதான். அந்தக் காலகட்டம் முதல் கூட்டம் கூட்டமாக அப்பாவித் தமிழ் மக்களை, இலங்கையில் சிங்கள ராணுவம் கொன்றுகுவித்தது. போராளிகள் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டு இறந்தபோது, செத்தவன் அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவன்தானே என அடுத்தடுத்த போராளிக் குழுக்கள் அஞ்சலி செலுத்தாமல் அலட்சியம் செய்தன. ஈழம் என்பது இரண்டாம்பட்சமாகி, அமைப்புகளுக்கு இடையில் ஈகோ பிரதானம் ஆனது. ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவின் தலைவரைக் கொல்லத் தேடினார்கள். சிறி சபாரத்தினம், பத்மநாபா உள்பட பல போராளித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அனைத்து இயக்கங்களுமே அந்தக் கொலைகளில் கை நனைத்தன. எமது இளைஞர்களோடு சேர்ந்து  ஈழத்துக்காகப் போராடுவோம் என்று வந்த நான்,  என்னோடு வந்த அத்தனை பேரையுமே கொலைகளில் இழந்தேன். அதோடு இயக்க அரசியலே வேண்டாம் என ஒதுங்கினேன். இடையில் ஓடிக் கடந்துவிட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்கள். ஆனால் ஈழம் தொடர்பாக இப்போது என்னிடம் எஞ்சியிருப்பது கறுப்பு நினைவுகளே. என்றாவது ஒருநாள் ஈழ மக்களுக்கு விடிவு வரும் என நம்பிக்கையுடன் இந்த உயிரை இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறேன்'' என்கிற டேவிட் ஐயாவின் கண்ணீர் கன்னம் நனைக்கிறது!

No comments:

Post a Comment