Sunday, December 21, 2014

அந்த நாள்... - 4

- Vikatan Article

'பாவ மன்னிப்பு’... 1961-ம் ஆண்டு இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த படம். கோடீஸ்வரன் ஆளவந்தான் வீட்டில் ராமுவாகப் பிறந்து, ஏழை முஸ்லிம் வீட்டில் ரஹீமாக வளரும் கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசனின் மாஸ்டர் பீஸ்!
1979-ம் வருடம் தூத்துக்குடி, லூர்து அம்மாள்புரத்தின் லட்சுமி டூரிங் டாக்கீஸில் 'பாவ மன்னிப்பு’ திரையிடப்பட்டது. ஜூலை மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதியக் காட்சி அது. படம் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தபோது, அந்த ஓலைக்கொட்டகைத் திரையரங்கு மீது சிதறி விழுந்த சிறு நெருப்புப் பொறி படபடவென பற்றியெரிந்து 115 உயிர்களைச் சுட்டுப் பொசுக்கியது. சுழன்று வீசிய பொட்டல் காற்று அடங்கிய பின்னர், குவியல் குவியலாகக்  கிடந்த பிணங்களை அள்ளிப்போட மட்டுமே முடிந்தது தீயணைப்புத் துறையால். அந்தத் திரையரங்கத் தீ விபத்தில் இறந்தவர்கள் அனைவரும், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஏழைகள். தீ தின்ற கொடூரம் அரங்கேறி 35 ஆண்டுகள் ஓடிவிட்ட பின்பும் மனதிலும் உடலிலும் காயங்கள் ஆறாமல், அந்தக் கறுப்பு நாளின் சாட்சிகளாக இன்னமும் தூத்துக்குடிப் பக்கம் வாழ்கிறார்கள் பலர்.
மறுநாள் பாடுக்கான மீன்பிடி வலையை உலர்த்தி, கிழிந்துபோன கண்ணிகளைக் கட்டி சரிசெய்துகொண்டே பேசினார் ஜேசுநஸ்ரியான். 'பாவ மன்னிப்பு’ படம் பார்க்கப் போய் காயம் அடைந்த பல பெண்களைக் காப்பாற்றிய ஜேசுநஸ்ரியான், அந்தத் தீ நிகழ்வை அப்படியே விவரிக்கிறார்...
''நான் சிவாஜி ரசிகன். அவரோட எந்தப் படம் வந்தாலும் குடும்பத்தோடு போய் பார்த்துடுவேன். 'பாவ மன்னிப்பு’ முதல் தடவை வெளியானப்ப, தூத்துக்குடி டவுனுக்குப் போய் படத்தைப் பார்த்தேன். அப்புறம் எங்கூட்டு பக்கத்தில் லட்சுமி கொட்டாயில் படம் போட்டாங்க. குடும்பத்தோடு போனோம். அப்ப டிக்கெட் 40 பைசா. 'ஏ’ கிளாஸ் டிக்கெட்டே பெஞ்சுதான். பெரும்பாலானவங்க மண் தரையில் உக்கார்ந்துதான் படம் பார்ப்பாங்க. அப்படித்தான் 'பாவ மன்னிப்பு’ படத்தையும் உக்கார்ந்து பார்த்தோம். நீளமான படம். மூணு மணி நேரம் ஓடும். இடைவேளை முடிஞ்சு படம் ஆரம்பிச்சதும், 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...’ பாட்டு வரும். பாட்டு முடியும்போது  ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போற சாவித்திரியைக் காப்பாத்தி அறிவுரைசொல்லி ஒரு அநாதைக் குழந்தையைக் கையில் குடுத்து வளர்க்கச் சொல்வார் சிவாஜி. குழந்தையை சாவித்திரி கையில் வாங்குறப்ப, திரையில் எங்க பார்வை படுற இடத்தில் சின்னதா தீ எரிஞ்சது. அது படத்தில் வர்ற காட்சினு நினைச்சு நாங்க பார்த்துட்டு இருந்தோம். ஆனா, சிலர் 'தீ... தீ...’னு கத்துனாங்க. 'அட... படத்தில் ஏதோ எரியுதுப்பா’னு சிலர் சொல்ல, என்னனு தெரியாத குழப்பத்துலயே நாங்க பார்த்துட்டு இருந்தப்ப, மளமளனு தீ பரவுச்சு. நெசமாவே தீ பிடிச்சு எரியுதுனு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சது!  
'கொட்டாய்ல தீ பிடிச்சிருச்சு.. தப்பிக் கணும்’னு புரிஞ்சு நாங்க  சுதாரிக்கிறதுக்குள்ள தீ திரையைப் பொசுக்கி கூரை மேல் பிடிச்சுக்கிச்சு. ஞாயிற்றுக்கிழமைங்கிறதால நல்ல கூட்டம். 300-க்கும் மேல இருக்கு சனம். இதை உங்ககிட்ட சொல்ற நேரத்துக்குள் தீ மொத்தமா சூழ்ந்துருச்சு. பகல் நேர ஆட்டம்கிறதால வெளிச்சம் வரக் கூடாதுனு கொட்டாயைச் சுத்தி தார்ப்பாய் போட்டு, இறுக்கி மூடிக் கட்டிவெச்சிருந்தாங்க. உள்ளே போக வெளியே வர ஒரே வாசல்தான். தீ எரிஞ்ச புகைமூட்டத்தில் வாசல் எங்க இருக்குனுகூடத் தெரியலை. தப்பிச்சு ஓட என்ன பண்றதுனு தெரியாம பக்கவாட்டில் இருந்த கம்புகளைப் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சிருச்சு சனம். இன்னொரு பக்கம் மொத்தக் கூட்டமும் வாசலை நோக்கித் திமிறிட்டு ஓடுச்சு. கொட்டாயோட கூரை தீ பிடிச்சு எரிஞ்சுட்டு இருந்ததால், கம்பைப் பிடிச்சு உலுக்குனதுல கூரை அப்படியே எரிஞ்சுட்டே கீழே இருந்த சனம் மேல விழுந்து அமுக்கிருச்சு. அவ்வளவுதான்... அப்புறம் அங்கே நடந்ததைக் கண்கொண்டு பார்க்கவும் முடியலை; இப்போ நினைச்சுப் பார்த்துச் சொல்லவும் முடியலை.
அதிகபட்சம் அரை மணி நேரம் தீ எரிஞ்சிருக்கும். அப்பவே நூத்துக்கும் அதிகமானவங்க செத்திருப்பாங்க. ஆனா, செத்தவங்க எல்லாம் தீயில் கருகிச் செத்தாங்கனு சொல்ல முடியாது. முழுசா எரிஞ்சு செத்தவங்க குறைவுதான். நெரிசலில் மிதிபட்டுச் செத்தவங்கதான் அதிகம். கொட்டாயில் நாலு மூலையிலும் குவியல் குவியலாக் கிடந்துச்சு பிணங்கள். காரணம், சனம் முழுக்க உயிர் தப்ப ஒரே இடத்தில் குவிஞ்சு நின்னதுங்க. அதான் ஒண்ணு மேல ஒண்ணு அமுங்கி செத்துப்போச்சுங்க. எல்லாம் எரிஞ்சு முடிஞ்ச பிறகு, ஃபயர் வண்டிக்காரன் வந்து தண்ணி அடிச்சது எல்லாம் வெந்துகிடந்த உடம்பு மேலதான். நான் அப்போ சில பெண்களையும் குழந்தைகளையும் காப்பாத்தி வெளியே போட்டேன். அந்தச் சம்பவத்துக்கு சாட்சி, என் மனைவி ஜேசுவடியாள். தீயில் கருகின அவளோட ஒரு காலை அப்பவே எடுத்துட்டோம். சில வருஷங்களுக்கு முன்னாடி இன்னொரு காலில் விரல்களையும் எடுத்துட்டோம்.
சம்பவம் நடந்த பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நேரில் வந்து பார்த்தார். யார் யாரோ எல்லாம் உதவுறோம்னு சொன்னாங்க. ஆனா, பெறவு எதுவும் நடக்கலை. செத்தது பூரா பாவப்பட்ட சனங்க. இன்னைக்கும் கை போனவங்க, கால் போனவங்கனு பல பேரு ஊருக்குள் உலாத்திட்டுக் கிடக்குறாங்க. இந்த விபத்துக்குப் பிறகு பல குடும்பங்கள்  பிரிஞ்சும் சிதைஞ்சும் போச்சு!''
இந்தியாவில் மிகப் பெரிய திரையரங்கத் தீ விபத்தான இந்த பயங்கரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை, அரசு ஆவணங்களும் தீயணைப்பு துறை ஆவணங்களும் அதிகபட்சம் 115 எனப் பதிந்திருக்கின்றன. ஆனால், எண்ணிக்கை நிச்சயம் அதைவிட அதிகம் என்கிறார்கள். அடையாளம் தெரியாதவர்கள், கணக்கில் வராதவர்கள் என நலிந்த ஏழைகளைக் கணக்கில் காட்டாமலே முடங்கிப்போனது உண்மையான இழப்பு விவரம்.
''அன்னைக்கு 40 காசு குடுத்து கொட்டாய்ல டிக்கெட் வாங்கினேன். இப்போ 35 வருஷம் ஓடிப்போச்சு. ஆனா, அந்த 40 காசு குடுத்த  காயம் இன்னும் ஆறலை!'' என்றபடியே வீட்டுக்குள் இருந்து தவழ்ந்து வெளியில் வருகிறார் ராஜம். இரண்டு கால்களையும் தீக்கு தின்னக் கொடுத்துவிட்டுப் பிழைத்துக் கிடக்கிறார்.
''மேல இருந்து கூரை அப்படியே விழுந்து என்னை அமுக்கிருச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோன எட்டாவது நாளே காலை  எடுத்துட்டாங்க. அப்போ எனக்கு 16 வயசு இருக்கும். என்கூட வந்திருந்த என் ஜோட்டுப் பொண்ணுங்களுக்கு தாவணில தீ பிடிச்சு எரிச்சிருச்சு. டிரெஸ் இல்லாம வெளியே ஓடிவரப் பயந்து கொட்டாய்க்குள் தீயில் வெந்துட்டாங்க. அதனால் பெண்களும் குழந்தைகளும்தான் நிறைய செத்துப்போனாங்க. எப்படியோ தப்பிச்ச என்னை ஒரு மவராசன் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா, ரெண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு ரெண்டு கால்களும் இல்லாத என்கிட்ட வரதட்சணை கேட்டார். 'வரதட்சணை கொடுக்க நான் எங்கே போவேன்?’னு கேட்டதும் என்னை அப்படியே விட்டுட்டுப் போயிட்டார்!'' -ஆயுள் முழுக்க அவலம் துரத்தும் துயரம் பகிரும் ராஜத்துக்கு இப்போது வயது 50.
திரையரங்கத் தீ விபத்தில் முகம் முழுக்கவே சிதைந்துபோன எலிசபெத் ராணியின் கதை துயரமும் உருக்கமும் நிரம்பியது... ''எனக்கு அப்ப கல்யாணமாகி மூணு வயசில் ஒரு பையன் இருந்தான். வயிற்றில் ஏழு மாசக் குழந்தை. அப்ப ஒரு துக்கம் விசாரிக்க அம்மா வீட்டுக்கு வந்திருந்தேன். வந்த இடத்தில் சினிமாவுக்குப் போகலாமேனு, நான், அம்மா, தங்கச்சி மூணு பேரும் லட்சுமி டாக்கீஸுக்குப் போனோம். படம் பார்த்துட்டே இருக்கிறப்ப திடுதிப்புனு தீ பிடிச்சிருச்சு. 'தீ... தீ’னு சனம் கத்துச்சு. நாங்க ஓடினோம். ஆனா, தப்பிக்க முடியலை. அம்மா மாட்டிட்டாங்க. தங்கச்சி மேலே ஒரு கரன்ட் பாக்ஸ் விழுந்து அப்படியே அமுக்கிடுச்சு. என் மேல தீக்கட்டைகள் விழுந்து எரிஞ்சது. முகம், இடுப்பு, கை, கால்கள் எல்லாம் கருகிப்போச்சு!'' என்கிற எலிசபெத் ராணி சம்பவத்துக்குப் பிறகு ஒரு வருடம் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்திருக்கிறார். தீக்காய சிகிச்சைக்கு இடையிலேயே எலிசபெத்துக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், தீக்காயத்துடன் இருக்கும் எலிசபெத் பிறந்த சிசுவைப் பராமரித்தால் தாய் - சேய் இருவருக்குமே ஆபத்து என மருத்துவர்கள் சொன்னதால் குழந்தையை கோவையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு  தத்துக் கொடுத்துவிட்டார் எலிசபெத். எலிசபெத் மருத்துவமனையில் இருந்தபோதே அவரது கணவர் விவாகரத்து  கேட்டுப் பிரிந்துவிட்டார். அப்போது சிறுவனாக இருந்த தன் தம்பி மைக்கேலின் உதவியோடு வாழ ஆரம்பித்தார் எலிசபெத். இப்போது மைக்கேலுக்குத் திருமணம் நடந்து குடும்பம் குழந்தைகள் என்றான பிறகும்  அக்காவைத் தன்னுடனேயே வைத்திருக்கிறார். தத்துக் கொடுத்த குழந்தைக்கும் எலிசபெத்துக்குமான உறவு... ஓர் உருக்கமான நெகிழ்ச்சி!
'' 'பாவ மன்னிப்பு’ படத்தில் மாணிக்கம் பிள்ளையா நடிச்சிருப்பார் பாலையா. அவர் 'ஆளவந்தான்’கிற பணக்காரர் வீட்டு டிரைவர். ஆளவந்தான் ஒரு கொலையைப் பண்ணிட்டு, மாணிக்கம் பிள்ளையை போலீஸில் மாட்டி விட்ருவார். மாணிக்கம் பிள்ளையோட குடும்பம் சிதறிப்போயிடும். ரொம்ப நாள் ஜெயிலில் இருந்துட்டு மாணிக்கம் பிள்ளை வெளியே வர்றப்போ, அவரோட மகள் பணக்காரங்க வீட்டில் வளர்றது தெரிஞ்சு போய் பார்ப்பார். ஆனா, அந்தப் பொண்ணை எடுத்து நல்லபடியா வளர்த்த மனுஷன் மாணிக்கம் பிள்ளைகிட்ட, 'நீங்கதான் அப்பானு உங்க பொண்ணுகிட்ட சொல்லிராதீங்க’னு சொல்லிடுவார். அதனால்,  அப்பானு காட்டிக்காமலேயே தன்  பெண்ணை தூரத்துல இருந்து பார்த்துட்டுப் போவார் மாணிக்கம் பிள்ளை. அந்தத் தீ விபத்து என்னையும் மாணிக்கம் பிள்ளை கணக்காதான் ஆக்கிருச்சு. என் பொண்ணைத் தத்து கொடுக்கும்போதே, 'ஒரு நாளும் இவ என் பொண்ணுனு உரிமை கேட்டு வர மாட்டேன். ஆனா, என் புள்ளையை நல்லா வளர்த்து ஆளாக்கிடுங்க’னு மட்டும் சொன்னேன். என் பொண்ணை நல்லபடியா வளர்த்து பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்து நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ரொம்ப நல்ல நிலைமைல இருக்கா என் பொண்ணு. அவங்க கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டாங்க. நானும் காப்பத்தணும்ல! 'நான்தான் உன் அம்மா’னு சொல்லிக்காம என் மகளை தூரத்தில் இருந்தே பார்த்துட்டு வந்துருவேன். எப்படியோ என் குழந்தை நல்லா இருக்கா... அது போதும் எனக்கு!'' - தீக்காயங்கள் உடலைப் பொசுக்கியிருக்க, பாசத்தை நெஞ்சில் புதைத்துப் பேசுகிறார் எலிசபெத்.
லட்சுமி டாக்கீஸ் இருந்த இடம் இன்று வெறிச்சோடிய காலி நிலம். அருகிலேயே முருகன் தியேட்டர்  கட்டடம் எழும்பியிருக்கிறது. விபத்து நடந்த சமயத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க அனுதாபியான லட்சுமி டாக்கீஸ் உரிமையாளர் ராஜாமணி  என்கிற உருண்டையன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து உடல்நலம் குன்றி இறந்துபோனார். லட்சுமி டாக்கீஸில் லைசென்ஸ் உரிமையாளரும் ஆபரேட்டராகவும் இருந்த சீனிவாசன், அதன் பிறகு தியேட்டர் தொழிலிலேயே ஈடுபட முடியாமல், பின்னர் இறந்துவிட்டார். 90-களுக்குப் பின்னர் திரையரங்கங்களில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பமும் மாற்றங்களும் டூரிங் டாக்கீஸ்களையே ஒழித்துவிட்டது. ஆனால், இந்த நவீன தியேட்டர்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறதா என்பது  பதில் அளிக்க முடியாத கேள்வி!
ஒவ்வொரு விபத்தும் உண்டாக்குவது காயங்களை மட்டும் அல்ல... அனுபவங்களையும்தான். அதில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை நாம் தவறவிடக் கூடாது!

இன்றும் கலவர நிலவரம்!
ன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தூத்துக்குடி நகரத்தையே பிணக்காடாக மாற்றிய லட்சுமி டாக்கீஸ் தீவிபத்து பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அது பற்றி எந்தப் பேச்சும் இல்லை. திரையரங்கத் தீவிபத்து பற்றிய விழிப்புஉணர்வு உருவாக டெல்லி திரையரங்கம் ஒன்றில் ஒரு விபத்து நடக்கவேண்டிய நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது.
1997-ம் ஆண்டு ஜூனில் டெல்லி 'உப்ஹார்’ திரையரங்கத் தீவிபத்தில் 59 பேர் பலி ஆனார்கள். அது தொடர்பாக வழக்கு பதிந்த சி.பி.ஐ., திரையரங்க உரிமையாளர்கள் சுசில் மற்றும் கோபால் உள்பட 12 பேரை கிரிமினல் குற்றவாளிகள் என அறிவித்தது. Association of the Victims of Uphaar Tragedy என சங்கம் தொடங்கி நீதிப் போராட்டத்தின் மூலமாக உப்ஹார் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 25 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீட்டைப் பெற்றார்கள். அப்போது நீதிமன்றம் திரையரங்கங்களுக்கு சில வழிகாட்டும் நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியது. திரையரங்கங்கள் அமைத்துக்கொள்ளும் டிரான்ஸ்ஃபார்மரை திறந்தவெளியில் தனி அறையில் அமைக்க வேண்டும், விபத்து நடந்தால் தப்பிச் செல்லும் அவசர வழிகள் தொடர்பாக ஒவ்வொரு ஷோவுக்கு முன்னரும் அறிவிக்க வேண்டும்; அவசர வழிகள் எவை என்பது தெரியும்படி விளக்குகள் எரியவிடப்பட வேண்டும்; திரையரங்கத்தை முறையாக இன்ஷூர் செய்ய வேண்டும் என்றெல்லாம் பல வழிமுறைகளை வழங்கியது. ஆனால், டூரிங் டாக்கீஸ்களைக் காட்டிலும் அதிக அபாயங்கள் நிரம்பிய நவீன மல்ட்டிப்ளெக்ஸ்களில் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது அச்சுறுத்தும் சந்தேகங்கள். ஒற்றை தியேட்டரை நான்கு குட்டிக் குட்டி தியேட்டர்களாக மாற்றி இடுக்குகளையே வாசலாக, வழியாக மாற்றிக் கட்டியிருக்கிறார்கள். அதிலும் ஷாப்பிங் மால்களில் அமைந்திருக்கும் இப்படியான திரையரங்கங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், ஒருவர்கூடத் தப்பிக்க முடியாது என்பதே கலவரமான நிலவரம்.

1 comment:

  1. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த கொடூர கோர விபத்தில் என் தாய் மற்றும் சகோதரிகள்,பாட்டி என நான்கு உயிர்களை பறிகொடுத்தவன் இதுபோன்ற கொடுமை உலகில் யாருக்கும் நடக்க கூடாது

    ReplyDelete