Saturday, January 4, 2014

''இது ஆண்டவன் கட்டளை!'' - சூப்பர் ஸ்டார் தொடர் - 4 (ஆனந்த விகடன்: 19.6.2005)

சோதி மலையொன்று தோன்றிற் றதிலொரு
வீ தியுண் டாச்சுதடி
வீதியிற் சென்றேனவ் வீதி நடுவொரு
மேடை இருந்ததடி
மேடையி லேறினேன் மேடைமே லங்கொரு
கூட மிருந்ததடி
கூடத்தை நாவடக் கூடமே லேழ்நிலை
மாட மிருந்ததடி
ஏழ்நிலைக் குள்ளு மிகுந்த அதிசயம்
என்னென்று சொல்வனடி - அம்மா!
என்னென்று சொல்வனடி!
திருவருட்பா திரட்டு
‘என் அன்பான குழந்தாய், நமக்குள் பிரிவென்பதே இல்லை!’ - பாபாஜி
திகிலும் திகைப்புமாய் கலவர முகம். பயம் உறைந்த கண்களுடன் வார்த்தை வராமல் தடுமாறுகிறார் மலைவாசி. பக்கத்தில் நிற்கிற நாய்க்கும் நடுக்கம் குறையவில்லை.
''சாப் டைகர் சாப்! புலி வந்துருச்சு...'' பதற்றத்தோடு விவரிக்கிறார்... ''நீங்க குகைக்குள் போயிட்டீங்க. நான் இங்கே தனியா நாயோட உட்கார்ந்திருந்தேனா... மலையேறி வந்த அசதியில கொஞ்சம் கண் அசந்துட்டேன். திடீர்னு நாய் குரைக்க ஆரம்பிச்சதும், கண்ணு முழிச்சுப் பார்த்தா டைகர் சாப். தூரத்தில் நின்னு பார்க்குது. அந்தப் பக்கம் நீங்க குகைக்குள்ள இருக்கீங்க. இந்தப் பக்கம் புலி வருது. என்ன நடக்குமோனு ரொம்பப் பயந்துட்டேன் சாப்!
பெரிய புலி. சும்மா மொரட்டு உடம்பு... அசைஞ்சு அசைஞ்சு வருது... வயித்தைக் கலக்கிருச்சு சாப்!'' - கடகடவெனக் கொட்டிய மலைவாசியின் தோளை இழுத்து அணைக்கிறார் ரஜினி.
''கொஞ்சம் சாந்தமா இருங்க... நாம இருக்கிற இடத்துக்கு அவங்க வரலை. அவங்க இடத்துக்குத்தான் நாம வந்திருக்கோம். அதான், 'இது யார்டா புதுசா மனுஷங்க வந்திருக்காங்க?’னு பார்க்க வந்திருப்பாங்க!'' என்று அவர் தோளில் கை போட்டுச் சிரிக்கிறார் ரஜினி.
''அஞ்சு நிமிஷம், அப்பிடியே நின்னுருந்துச்சு... அப்புறம் மெள்ள இந்த பொதர்ப் பக்கம்தான் இறங்குச்சு!'' என்று கை காட்டுகிற மலைவாசியிடம், ''கூல் கூல்! நாம அவங்க கெஸ்ட்டுப்பா!'' என்கிறார் குறும்பாக!
புலிகள் உலவும் கானகத்தில், குளிர் மலைச் சிகரச் சரிவில், ரஜினி நிற்கிறார். நெஞ்சு நிறைய ஆழமாக சுவாசிக்கிறார். தன் கைக் காப்பைச் சரி செய்தபடி, ஏகாந்தமான மனநிலையில் கொஞ்சம் காலாற நடக்கிறார்.
வழக்கமான அந்த செம்புக் காப்பு தவிர, இப்போது ரஜினியின் கையில் புதுசாக ஓர் அழகுக் காப்பு மின்னுகிறது. கொஞ்சம் தங்கம், கொஞ்சம் வெள்ளி, கொஞ்சம் செம்பு என மூன்று கம்பிகள் கொண்ட முறுக்கு இது. கிரியா யோகா பெற்றதற்கான தீட்சையின் போது, ரஜினிக்கு அணிவிக்கப்பட்ட காப்பு இது. தைவானில் தயாராகி, அமெரிக்காவில் தயா மாதாவிடம் ஆசிர்வாதம் பெற்று, ரஜினியின் கையில் வந்து அமர்ந்த வளையம் இது!
திரும்பும் வழியில், ஒரு மரத்தடியில் சில நிமிடங்கள் இளைப்பாறுகிற நேரம்... ''நிறைய படங்கள் செய்துட்டீங்க. பெருசா பேர் வாங்கியாச்சு. இதோ 'சந்திரமுகி’யோட சக்சஸ் ஒரு புது ஹிஸ்டரி. இனி யாருக்கு நீங்க என்ன ப்ரூவ் பண்ணணும்? உங்க மனசில் என்ன இருக்கு தலைவரே?''
''யாரோ... எப்பவோ நட்ட மரம் நமக்கு நிழல் தருது. என்னிக்கோ யாரோ வெட்டின கிணறு நமக்குத் தண்ணீர் தருது. இதோ நாம நடக்கிற இந்தப் பாதையும் அப்படித்தானே!
எல்லாரும் ஏதாவது செய்யணும். ஒரு தலைவன் நினைச்சா அதை தேசத்துக்கே செய்யலாம்... அசோகர் மரம் நட்ட மாதிரி. ஒரு சாதாரண மனுஷன் நினைச்சால், சக மனுஷனுக்காவது அதைச் செய்ய முடியும்.. அது பற்றித்தான் யோசிக்கிறேன்!'' - பதில் எதிர்பாராமல், சொல்லி நடக்கிறார் ரஜினி.
''உங்களுக்கு எவ்வளவோ ரசிகர்கள் இருக்காங்க...'' என ஹரி சொல்லும்போதே, ''யெஸ், ட்ரூ!'' திரும்பிப் பார்க்கிற ரஜினி நடை வேகத்தைக் குறைக்காமல் பேசுகிறார்... ''நிறைய... நிறைய இருக்காங்க. கடவுள் தந்த பரிசு. எனக்கு இந்த ரசிகர்கள், சிஷ்யர்கள் நிறைய இருக்கலாம். ஆனால், ஒரு சிஷ்யன் எப்படி இருக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்தது பாபாதான்!
பாபாவுக்கு ஒரு சின்னக் குழு உண்டு. அவர் ஒருவரை சிஷ்யரா ஏத்துக்கறது அபூர்வத்திலும் அபூர்வமான காரியமாம். அதுக்கு பல சத்திய சோதனைகள் உண்டு. ஒருமுறை, திடீர்னு ஒரு ஆள் பாபா இருந்த இடத்துக்கு எப்படியோ வந்துட்டார். பாபாவைப் பார்த்ததும் பரவசமாகி, 'அய்யா, நான் உங்களைத்தான் தேடிட்டே இருக்கேன், இந்த மலைப் பாறைகளுக்கு நடுவே நீங்க எங்கே இருப்பீங்கனு மாசக்கணக்கில் தேடித் திரிஞ்சேன். என்னை உங்க சிஷ்யனா எப்படியாவது ஏத்துக்கணும் சாமி, நான் கெஞ்சறேன், உங்க காலில் விழறேன்’னு மன்றாடியிருக்கார்.
பாபா பதில் எதுவும் சொல்லலை. 'அய்யா! நீங்க என்னை ஏத்துக்கலைன்னா, இந்த மலை உச்சியிலிருந்து நான் குதிச்சிருவேன். உங்க வழிகாட்டுதல் இல்லாம நான் வாழ்ந்து பயனில்லை சுவாமி!’னு கதறி இருக்கார். 'அப்படின்னா குதிச்சிடு. நீ இப்போ இருக்கிற நிலைமையில் உன்னை என்னால் ஏற்க முடியாது’னு பாபா சொன்னதும், அதே வேகத்தில் ஓடிப் போய் மலை உச்சியிலிருந்து டமால்னு குதிச்சுட்டாராம் அந்த ஆள்.
எல்லாரும் அதிர்ச்சியாகிப் பார்க்க, கீழே விழுந்து கிடக்கிற அந்த ஆளின் உடலை எடுத்துட்டு வரும்படி சொன்னாராம் பாபா. கீழே தரையில் சிதறிக் கிடந்த அவரோட உடம்பின் பாகங்களை சிஷ்யர்கள் போய் அள்ளிட்டு வந்தாங்களாம். குருநாதர் தன் கையை அந்த உடம்பின் மீது வெச்சதும், சடார்னு அந்த ஆளுக்கு உயிர் வந்து எழுந்து, பாபா காலில் விழுந்து கும்பிட்டாராம்.
'நீ இப்போ என் சீடனாகத் தயாராக உள்ளாய்!’னு உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடரைப் பார்த்து பாபா சொன்னாராம். 'நீ என் கடுமையான பரீட்சையில் தேறிட்டே... அழிவற்ற எங்கள் குழுவில் நீயும் இப்போ ஒருவன்!’னு அவரைத் தன்னுடன் சேர்த்துக்கிட்டாராம்னு 'ஒரு யோகியின் சரிதம்’ புத்தகத்தில் படிச்சேன். ஒரு குருவுக்கு சிஷ்யன்னா அப்படி இருக்கணும். சரணாகதிதானே இருக்கிறதிலேயே பெரிய அன்பு!''
தேதோ பேசியபடி நடக்கிற ரஜினி, மகிழ்ச்சியாக இருக்கிறார். பாபாவின் அருள் குகை தந்த பரவச அதிர்வுகளும், அந்த மலைக் காற்றில் கிடைத்த புத்துணர்ச்சியுமாக, புதுநடை போடுகிறார்.
''ஆனா, நீங்க ரசிகர்களைச் சந்திக்கிறதே அபூர்வமா இருக்கே?'' - சிரித்துக்கொண்டே ஹரி கேட்க,
''அதுதான் என்னோட ஒரே வருத்தம்! என்னை நேசிக்கிறவங்களைச் சந்திக்க முடியாமப் போறது ஒரு சோகம்தான்.
பத்திரிகையில் என் போட்டோ பார்த்தாலே சந்தோஷமாகிடறாங்க. நான் நடிச்சு ஒரு படம் வந்தா திருவிழா மாதிரி கொண்டாடறாங்க. என்னை பார்க்கணும்னு தவிக்கிறாங்க. ஆனால், அதுக்கு அவங்க நிறைய செலவழிக்கிறாங்க... பணம், நேரம், எனர்ஜினு நெறைய!
ரசிகர்களில் நிறைய பேர் அப்பாவி மனுஷங்க... கூலி வேலை பார்க்கிறவங்க. அவங்க உழைச்சாதான் அவங்க குடும்பத்துக்கு சாப்பாடுங்கிற மாதிரி கஷ்டப்படறவங்க. நான் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம், 'முதல்ல உங்க அம்மா - அப்பாவைப் பாருங்க, உங்க குடும்பத்தைக் கவனியுங்க’னு சொல்லிட்டே இருப்பேன். அதுதான் முதல் கடமை. 'நீ எங்கேயோ இருக்கே, நான் எங்கேயோ இருக்கேன். ஆனால், என் இதயத்தில் நீ மட்டும்தான் இருக்கே’னு சொல்லத் துடிப்பேன். பிறந்த நாள், இல்லே... ஏதாவது விழா அப்படினு என்னைப் பார்க்கிறதுக்காக அவங்க பைசா செலவழிக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு. எங்கேயோ நான் போகும்போது, கூட்டத்தில் திமிறிக்கிட்டு 'தலைவா வாழ்க’னு என் ரசிகன் இடிபடறதை, சட்டை கிழிஞ்சு நிக்கிறதை சத்தியமா என்னால தாங்க முடியலை. அதான் எனக்குத் தயக்கம்!
ஆனால், எனக்கு என் ரசிகன்தான் எல்லாம்! அட்லீஸ்ட், நன்றி சொல்லவாவது அவங்களை நான் சந்திக்கணும்!'' யோசனையில் தாடியை வருடிகிறார் ரஜினி.
''அப்படி நீங்க வேற என்ன செய்யணும்னு நினைக்கறீங்க?'' சற்றும் எதிர்பாராமல் ஹரி கேட்டுவிட, சிறு புன்னகையுடன் திரும்பிப் பார்க்கிறார் ரஜினி.
''ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், ஒரு அம்மா தன் பையனை அழைச்சிட்டு வந்தாங்க. 'சாமி, இவன் எப்பப் பார்த்தாலும் ஸ்வீட்டா சாப்பிடறான். அது உடம்புக்கு ரொம்பக் கெடுதினு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான். நீங்கதான் புத்தி சொல்லணும்’னு அந்தம்மா கேட்டுக்கிட்டாங்க. அவர் அந்தப் பையனை ஒரு மாசம் கழிச்சு அழைச்சிட்டு வரச் சொன்னார். 'ஏன்... இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஒரு மாசம் கழிச்சு வரச் சொல்றார்?’னு யாருக்கும் புரியலை.
ஒரு மாசம் கழிச்சு, மறுபடி பையனை அழைச்சிட்டு வந்தாங்க அந்தம்மா. குட்டிப் பையனைத் தூக்கித் தன் மடியில் உட்கார வெச்சுக்கிட்ட பரமஹம்சர், 'ஸ்வீட் சாப்பிடறது தப்பில்ல குழந்தை. ஆனா, நிறைய ஸ்வீட் சாப்பிட்டா அது உடம்புக்கு நல்லதில்லை. முதலில் பல்லு கெட்டுப் போகும். அப்புறம் வயிறு கெட்டுப் போகும். கொஞ்சங்கொஞ்சமா உடம்பே கெட்டுப்போயிடும். அம்மா சொல்றது உன் நல்லதுக்குத்தான் கண்ணா!’னு சொல்லி அனுப்பிச்சார்.
ஆசிரமத்தில் இருந்தவங்களுக்கு சந்தேகம், 'ஏன் குருவே... இதை நீங்க அன்னிக்கே அந்தப் பையனுக்கு சொல்லி இருக்கலாமே, ஏன் இவ்வளவு நாள் தள்ளி வரச் சொன்னீங்க?’னு கேட்டாங்களாம்.
'அது சரிதான். ஆனா, ஸ்வீட் எனக்கும் பிடிக்கும். அது கூடாதுனு அந்தப் பையனுக்குச் சொல்றதுக்கு முன்னால அதுக்கு என்னைத் தகுதியாக்கிக்கணும், இல்லையா? நான் ஒரு மாசம் அவகாசம் கேட்டது அந்தக் குட்டிப் பையனுக்காக இல்லை... எனக்கு!’னு சிரிச்சாராம் குரு.
அதுதான் சரி, நீ சொல்லப்போறது நல்ல விஷயமாகவே இருந்தாலும், அதைச் சொல்றதுக்கு முதலில் நீ உன்னைத் தகுதியாக்கிக்கணும்!
'வரம் கிடைக்கணும்னா மட்டுமில்லை, கொடுக்கணும்னாகூட தவமிருக்கணும்!''’- புன்னகை வழியும் உதடுகளுடன் அழுத்தமாகச் சொல்கிறார் ரஜினி.
அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்!
- காந்தம் இழுக்கும்

- Vikatan Article

No comments:

Post a Comment