Saturday, January 4, 2014

“இது ஆண்டவன் கட்டளை!” - சூப்பர் ஸ்டார் தொடர் - 2 (ஆனந்த விகடன்: 5.6.2005)

என் ரசிகனே.. என் இதயமே...
தியின் குளிரும்... மலரும் இரவும்.. ஒளிரும் நிலவும் சூழலை சுகந்தமாக்குகிறது!
ருத்ர பிரயாக்... இரண்டு நதிகள் காதலுடன் கலக்கும் பணிநீர்ச் சாலை.
ஏதேதோ ரகசியங்கள் பேசும் நதி நீரை விரலால் தொட்டாலே உயிர் உறையும் குளிர். அதன் பாய்ச்சல் இன்னும் பயமுறுத்துகிறது!
“குளிப்போமா?” என்கிறார் ரஜினி. “அடப் போப்பா! கரையில நிக்கறப்பவே கிடுகிடுக்குது” என நண்பர் ஹரி தயங்க, “இக்கட சூடு!” என இடுப்பில் ஒரு துண்டுடன் ஜாலியாக ஆற்றில் இறங்கிய வேகத்தில் மூழ்கி எழுகிறார் ரஜினி.
“குளிரலையா தலைவரே?” வியப்பும் திகைப்புமாய் ஹரி கேட்க, “இறங்கற வரைக்கும்தாம்ப்பா எல்லா தயக்கமும், முழுக்க நனைஞ்சிட்டா மோட்சம்!” உற்சாகமாய் நீராடுகிற ரஜினி, கழுத்தளவு நீரில் மௌனமாய் அமர்கிறார். நிமிடங்கள் கரையக் கரைய நிசப்தமாய் தியானத்தில்!’
துண்டை உதறி தலை துவட்டத் தொடங்குகிற ரஜினி ஒரு கதை சொல்கிறார்...
“ஒருவன் கடவுளுக்குப் பரிசு தர விரும்பினான். தன்னையே படைச்ச கடவுளுக்கு தான் என்ன பரிசு தருவது?
இந்த உடல், உயிர், உலகம் எல்லாமே அவன் தந்தது. அதைப் பரிசாகத் தர்றதில் அர்த்தமில்லை. மண், பொன், மலர், பொருள்னு எல்லாமே அவனோடது. அவன் தந்ததையே அவனுக்குத் தர முடியுமா? கடவுளுக்கு ஒரு பரிசு தர்றோம்னா, அது நிச்சயம் அபூர்வமானதா இருக்கணும். அந்தக் கடவுளிடம் இல்லாத ஒண்ணா இருக்கணும். கடவுளிடம் இல்லாத ஒண்ணுன்னா அதை எப்படிக் கண்டுபிடிக்கிறது? அது கடவுளைத் தேடுறதைக் காட்டிலும் கஷ்டமான காரியமாச்சே!
இருந்தாலும் கடவுளுக்கு அப்படி ஒரு பரிசு குடுக்கணும். என்ன குடுக்கலாம்? அது தன்னால் மட்டுமே தர முடிகிற விஷயமா இருக்கணும். இந்தப் பிரபஞ்சத்தில் அது தன்னைவிட வேறு யாராலயும் தர முடியாத ஒண்ணா இருக்கணும்னு நினைச்சான். கடவுளுக்கு இது தெரிஞ்சா 'இதப் பார்றா!’னு சிரிச்சிருப்பார். ஆனாலும் அப்படி ஒண்ணை அவன் கண்டுபிடிச்சான். அது என்ன தெரியுமா?'' ஒரு கணம் நிறுத்தி, கண்களால் விசாரிக்கிறார் ரஜினி. அப்படி ஒரு பரிசு என்னவாயிருக்கும்?
''நானே சொல்றேன், நினைச்சு நினைச்சு தேடித் தேடி நெஞ்சுருகி நின்ன பக்தன், கடைசியில் அப்பிடி அபூர்வமான பரிசா தந்தது... எல்லாம் அறிந்த கடவுளுக்கு தன்னோட அறியாமையை!'' என்று சிரிக்கிற ரஜினி, ''அது அவனால் மட்டும்தானே தர முடியும். மனிதன் கடவுளுக்குத் தர முடிகிற ஒரே காணிக்கை - அறியாமை மட்டும்தான். 'நாராயணனுக்கு ஆராதனை என் அறியாமை ஒன்றே!’னு சொன்ன அந்த பக்தன் யார் தெரியுமா, நம்ம கம்பன்!''
யணம் அன்றிரவு அங்கேயே ஒரு விடுதியில் முடிகிறது. மிகச் சாதாரண அறையை, வசந்த மாளிகை ஆக்குவது அதன் நீள அகலமான கண்ணாடி ஜன்னல். ஜன்னலுக்கு வெளியே கங்கை!
இரண்டு சப்பாத்திகளுடன் முடிகிறது இரவு உணவு. நள்ளிரவு தாண்டியும் நீள்கிறது பேச்சு. 'சந்திரமுகி’யின் வெற்றி பற்றி பேச்சு ஆரம்பிக்கிறது. ''நான் சந்தோஷமா இருக்கேன். 'பாபா’ படம் சரியாகப் போகாதது பற்றி எனக்குப் பெரிய வருத்தம் இல்லை. பிசினஸ்னு பார்த்தால் அதுவும் சக்சஸ்தான். ஆனால், என் ரசிகர்கள் அப்போ கொஞ்சம் அப்செட் ஆகிட்டாங்க. என்னை நேசிக்கிற ஒவ்வொரு ரசிகனும் எனக்கு அம்மா மாதிரி. இதை சும்மா என் உதட்டிலிருந்து சொல்லலை. மனசிலிருந்து, என் இதயத்திலிருந்து சொல்றேன்... ஆமா, அவங்க ஒவ்வொருத்தரும் எனக்கு அம்மா மாதிரி!'' கண்ணாடி ஜன்னல் வழியே கங்கையை கண்கள் பார்க்க, ரஜினியின் இதயக் கதவுகள் டபக்கென திறக்கின்றன.
''தாய்க்கு நாம நன்றி செலுத்த முடியுமா? தாயன்புக்கு ஈடான மரியாதை செய்ய முடியுமா?
ஏன்னா... ஒரு தாய், தன் பிள்ளையை வயித்தில் சுமக்கிறதைவிட மனசில் சுமக்கிறது அதிகம். அவளுக்கு எல்லாமே அந்தப் பிள்ளைதான். அவளோட அத்தனை கவனமும் அந்தப் பிள்ளை மேலதான் இருக்கும். அவளோட தூக்கம் கெடும். பிள்ளை ரொம்பத் தொந்தரவா இருக்கும். ஆனாலும் அந்தப் பிள்ளையையே தன் உயிரா நினைச்சு வாழ்வாள். அப்படிப் படாதபாடுபடுத்துற அந்தக் குழந்தை சடக்குனு அபூர்வமா தன் அம்மாவைப் பார்த்துச் சிரிக்கும். அந்தச் சின்னப் புன்னகை, அம்மாவோட எல்லாக் கவலைகளையும் துடைச்சுப் போட்டுடும்.
அப்படி என் ரசிகனுக்கு இதுவரைக்கும் என்னால் தர முடிஞ்சது 'பாட்ஷா’, 'படையப்பா’, 'சந்திரமுகி’னு சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான். ஆனா, அது மட்டுமே போதுமானு எனக்கு யோசனையா இருக்கு. ஒவ்வொரு தானியத்தின் மீதும் ஒவ்வொருத்தர் பெயர் எழுதபட்டிருக்கும்னு சொல்வாங்க. என் தானியங்கள் மீது என் பெயரை எழுதின ஒவ்வொரு ரசிகனும் எனக்கு கடவுளுக்கும் மேலே!''
ஜினியிடம் ஒரு பழக்கம், அவர் பெரும்பாலும் அமர்வதில்லை. விடுவிடுவென வேகமாய் குறுக்கும்நெடுக்குமாய் நடந்தபடியே இருக்கிறார். கோடிக்கோடி இதயங்களை வசீகரிக்கிற நடை!
''இந்த ஸ்டைல் ஸ்டைல்னு சொல்றாங்களே, அது நானா பண்றதில்லை. தானா வந்தது! முன்னெல்லாம் பரபரனு என் மனசு அலைபாயும். ஒரு இடத்தில் இருந்தாலும் மனசு ஊரெல்லாம் ஊர்வலம் போகும். இப்போ உலகமெல்லாம் சுத்தினாலும், என் மனசை ஒரே இடத்தில் குவிக்க முடியுது, இது எனக்கு வாய்ச்சது, ஒன்று இறை நம்பிக்கையால், இன்னொண்ணு யோகாவும் தியானமும் கொடுத்த பரிசு!''
தோ யோசனையில் அமர்ந்திருக்கிற ரஜினியிடம், ''இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரா வருவோம்னு எப்பவாவது நினைச்சிருக்கீங்களா?'' என்று கேட்கிறார் ஹரி. ''என்ன கேட்டீங்க, என்ன கேட்டீங்க?'' எனத் திரும்புகிற ரஜினி, ''எப்பவோ என்னிடம் எழுத்தாளர் சுஜாதா இதே கேள்வியைக் கேட்டார்... 'ரஜினி நீங்க ரொம்ப பெரிசா ஜெயிச்சிருக்கீங்க, இப்போ திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்லே உழைப்பா?’னு கேட்டார்.
'சத்தியமா ஆண்டவன் அனுக்கிரகம்தான்! அவன் கருணை இல்லாமல் நான் வளர்ந்திருக்க முடியாது. ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!
அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாருங்க, அது அவனோட உழைப்பு. நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை... அதோட, ஜனங்களைத் தன்னாலயும் என்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை. அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!’னு சொன்னேன். அதானே உண்மை!
கண்ணா, ஒரு விதை வளர்ந்து செடியாக நல்ல மண்ணு, தண்ணி, காத்து, வெளிச்சம் இப்பிடி என்னென்னவோ வேணும். எல்லாமே கிடைச்சாலும்கூட, முக்கியமா அந்த விதைக்குள்ள இருக்குமே ஒரு உயிர்... அந்த உயிருக்கு தன்னால் முட்டிமோதி முளைக்க முடியும்கிற நம்பிக்கை வேணும். நம்பிக்கைதானேப்பா எல்லாம்!''
பாயகரமான சரிவுகளும், வழுக்குப் பாறைகளும் நிறைந்த கரடுமுரடான பாதை... வழி காட்ட நாயும் முன் செல்ல, துரோணகிரி மலை மீது துவங்குகிறது பயணம்!
கிடுகிடுவென மின்னல் வேகத்தில் தொட்டுவிட முடியாத தூரத்துக்கு சரசரவென முன்னேறுகிற ரஜினி, ''வாங்கப்பா!'' என ஹரியையும் வெங்கட்டையும் வேகப்படுத்துகிறார்.
''நாங்க வழி காட்ட வந்தோமா? இல்லே, நீங்க எங்களுக்கு வழி காட்டுறீங்களானு புரியலையே தலைவரே!'' - மலைப் பாதையில் பிடிமானத்துக்காகப் பயன்படுத்துகிற ஊன்றுகோலை ஊன்றியபடி ஹரி கேட்க, அதே ஸ்டிக்கைச் சுழற்றியபடி உற்சாகமாகச் சிரிக்கிறார் ரஜினி.
ஜினி கிரியா யோகாவுக்கான தீட்சை வாங்கியது பாபாஜியின் குகையில்!
அந்த முதல் விஜயத்தின்போது, தன் மனைவி லதாவையும் அழைத்து வந்தார். அது இன்னும் கடுமையான பயணம். ஆனால், ரஜினியும் லதாவும் ஒரு பரவச தரிசனத்துக்குத் தயாராக வந்திருந்ததால், எந்த சிரமத்தையும் பொருட்படுத்தவில்லை. பாபாஜியின் குகையில் இருந்த ஒவ்வொரு கணமும் ரஜினி, லதா இருவரிடமும் அப்படி ஒரு உற்சாகம். வெளியே வந்த ரஜினி சொன்னார்... ''நான் புதிதாகப் பிறந்திருக்கிறேன். இந்த சந்தோஷம் நான் இதுவரை அறியாதது!''
தோ இம்முறை பாபாஜியின் குகையில் நுழைகிறோம். அது இயற்கை அமைத்துத் தந்த கற்குகை. பாபாஜியும் அவரது சீடர்களும் வாசம் செய்யும் தலம். உள்ளே பிரவேசித்ததுமே அந்த அதிர்வை உணர முடிகிறது. மௌனமாய் குகையில் தியானத்தில் அமர்கிறார் ரஜினி. பக்கத்திலேயே ஹரியும் வெங்கட்டும்!
திடுமென ஏதோ ஒரு தகவல் கிடைத்த உள்ளுணர்வில் ''வாப்பா வா!'' என ரஜினியை அழைத்தபடி, பதற்றமும் பரவசமுமாக மலை மீது ஓடுகிறார் ஹரி!
மேலே சில தப்படிகள் கடந்து, ஒரு புதரோரம் ஒளிந்துகிடக்கிற ஒரு பாறைப் பிளவைக் காட்டுகிறார். ''இதுதான் பாபாஜியின் அருள் குகை. இதுக்குள்ள இறங்கறது உயிரைப் பணயம் வைக்கிற வேலை!'' என ஹரி சொல்லச் சொல்ல... ரஜினியின் விழிகளில் டிகிர் டிகிரியாக ஒளிர்கிறது பிரகாசம்!
''இப்போதான் நமக்கு பாபாஜியின் அருள் கிடைச்சிருக்கு. தோ பாருங்க தலைவரே, நாம பெரிய குகை பார்த்துட்டோம். இப்பவே இப்படியே சந்தோஷமா திரும்பிடலாம்.
உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு, நீங்க பெரிய சூப்பர் ஸ்டார். சந்தோஷமான லைஃப் ஸ்டைல். அப்படியே ஜாலியா இருக்கலாம். ஏன்னா, இந்தக் குகைக்குள் இறங்கணும்னா அது ரொம்ப ரிஸ்க்கான விஷயம். பகவானோட ஆசிர்வாதம் வேணும்.
இது கிட்டத்தட்ட டபிள்யூ ஷேப்பில் இருக்கிற குகை. ஒரு மனுஷன் ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போகணும். கூர் கூரான கல்லு குத்திக் கிழிக்கும். உள்ளே என்ன இருக்கும்னு யாருக்கும் தெரியாது. மனுஷ நடமாட்டமே இல்லாத வனாந்தரம் இது. இங்கே என்ன வேணா நடக்கலாம்!
இந்த ரிஸ்க எடுக்கணுமா சொல்லுங்க... இப்பவும் உங்களுக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு!'' ஹரி சொல்வதைக் கவனமாகக் கேட்கிற ரஜினி, கட்டை விரலால் தன் நெற்றியில் கோடு கிழித்துச் சிரித்தபடி, ''நான் ரெடி!'' என்கிறார்.
முதலில் வெங்கட் இறங்குகிறார். கூரிய கற்களுக்கு நடுவே குனிந்து வளைந்து நெளிந்து அவர் உள்ளே நகர்ந்து நகர்ந்து செல்வதைப் பார்க்கிற ரஜினியும் இப்போது தயார்!
''பாபா!'' என வானம் நோக்கி வணங்குபவர், பூமிக்குள் இறங்குகிறார். ''கவனமா கவனமா!'' மேலே நிற்கிர ஹரி சொல்லச் சொல்ல, ரஜினி மிகுந்த சிரமத்துடன் உள்ளே இறங்கி இறங்கி காணாமல் போகிறார்... தன்னைக் கண்டெடுக்க!
- காந்தம் இழுக்கும்

- Vikatan Article

No comments:

Post a Comment