Thursday, January 30, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 15

மகாத்மா முதல் மன்மோகன் வரை!
டுபாக்கூர் கம்பெனிகளை 'மன்னார் அண்ட் கம்பெனி’ என்று கிண்டல் செய்வார்கள். அம்மா இந்திராவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகன் சஞ்சய் அந்தக் காலத்தில் ஆரம்பித்த கார் கம்பெனிக்கும் இந்த மன்னார் அண்ட் கம்பெனிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது என்பார்களே... அப்படித்தான் சஞ்சய் அந்தத் தொழிலை நடத்தினார். கார் உற்பத்தி செய்யப்போவதாக எண்ணிக்கையைக் காட்டி, ஒரு நிறுவனத்தின் பெயரில் அனுமதியைப் பெற்று, பல்வேறு முறைகளில் பணத்தைத் திரட்டிய முறைகேடு சஞ்சய் மூலமாகத் தொடங்கியது. போஃபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை அனைத்து முறைகேடுகளுக்கும் அரிச்சுவடி போட்டுக்கொடுத்தது சஞ்சய் காந்தியின் செயல்.
 ராஜீவ் காந்தியைப்போல அமைதியானவர் அல்ல சஞ்சய். இளம் வயதிலேயே துடுக்கும் மிடுக்கும் நிறைந்தவராக வளர்ந்தார். ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி என்றால் எப்படித் துள்ளும்! அதைவிட அதிகமாகவே துள்ளினார். பெரும் குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கும் டூன் பள்ளியில் படித்தாலும், அவருக்கு அந்தக் கல்வி மீது ஆர்வம் இல்லை. அவரது எண்ணம் எப்போதும் கார், கார், கார்.
காரை வெகுவேகமாக ஓட்டுவதும், எந்த காராக இருந்தாலும் பிரித்து மேய்வதும் அவரது ஆசையும் வாடிக்கையாகவும் இருந்தன.
எந்த கார் கிடைத்தாலும் எடுத்துக்கொண்டு பறப்பார். அது பரவாயில்லை. யாருடைய காராக இருந்தாலும் எடுத்துச் செல்ல முடியுமா? அதையும் சஞ்சய் செய்தார். அதுதான் சிக்கல். அவரைப்போலவே கார் ஆசை கொண்ட இளைஞர்கள் படை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். கார்களில் இரவு பகலாக டெல்லியைச் சுற்றுவதே இவர்களின் ஒரே பொழுதுபோக்கு. இந்த நிலையில் ராணுவ அதிகாரி ஒருவரின் கார் காணாமல் போனது. மறுநாள், டெல்லி பாலம் விமான நிலையம் அருகில் அது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மயங்கிய நிலையில் ஒரு இளைஞன் இருந்தார். அவர், சஞ்சய் காந்தியின் நெருக்கமான நண்பரான அடில் ஷர்யார். இந்த கார் திருட்டை அன்றைய 'கரன்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.
இதன் மூலமாக மகனுக்கு, மிக மோசமான இளைஞர்களின் சகவாசம் இருக்கிறது என்று இந்திரா உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கார்களின் மீது மகனுக்கு ஆர்வம் இருப்பதை மட்டும்(!) இந்திரா உணர்ந்துகொண்டார். இங்கிலாந்தில் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப அறிவு பெற அனுப்பிவைக்கப்பட்டார் சஞ்சய். மூன்றாண்டு படிப்பை முழுமையாக முடிக்காமல், இரண்டாவது ஆண்டே இந்தியா திரும்பினார் சஞ்சய். இந்திராவே அவரைக் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு வயதாலும் அனுபவத்தாலும் வளர்ந்திருந்தார். கார் மோகம் அவருக்கு இன்னும் அதிகமாகி இருந்தது. தனது நண்பர்களோடு கார் மெக்கானிக் வேலைகளில் மும்முரம் ஆனார்.
இந்தக் காலம் மாதிரி அப்போதெல்லாம் விதவிதமான கார்கள் கிடையாது. அதுவும் சிறிய கார்களும் இல்லை. இந்தியாவில் சிறிய கார்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை மத்திய அரசுக்கும் இந்த தொழிலில் இருந்த நிறுவனங்களுக்குமே இருந்தது. மிகமிகக் குறைந்த விலையில், அதாவது அன்றைய (1968) மதிப்பில் சுமார் 6,000 ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தது. அவர்கள் திட்டமிட்டதில், அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. நோக்கம் நல்ல நோக்கம்தான். ஆனால் அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதிகாரம் உள்ளே நுழைந்தது.
சிறிய கார் உற்பத்தியில் இறங்க அனுமதி கேட்டு 14 விண்ணப்பங்கள் வந்தன. அதில் ஒன்று சஞ்சய் காந்தியின் விண்ணப்பம். ரெனால்ட், சிட்ரன், டொயோட்டா, மஸ்டா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஆனால் அவை, சஞ்சய் காந்தியைப்போல பிரதமரின் மகன் என்ற தகுதியைப் பெற்றதா என்ன?
சஞ்சய் காந்தி, இந்திய மக்களுக்கு புதிய கார் ஒன்றை தயாரித்துத் தரப்போகிறார் என்று அன்றைய மத்திய தொழில் துறை இணை அமைச்சர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். '6,000 ரூபாய் மதிப்பில் சிறிய கார் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அது லிட்டர் ஒன்றுக்கு 90 கி.மீ. ஓடும். அதனுடைய வேகம் மணிக்கு 85 கி.மீட்டர்’ என்றும் அவர் தெரிவித்தார். அதுதான் சஞ்சய் காந்தியின் கற்பனையில் உருவான 'மாருதி’ நிறுவனம். எல்லா லட்சியங்களுமே கனவுகளால் உருவாவதுதான். ஆனால், லட்சங்களைப் பெற்ற பிறகும் கனவிலேயே படம் காட்ட முடியுமா? காட்டும் திறமை சஞ்சய்க்கு இருந்தது.
50 ஆயிரம் கார்களைத் தயாரிப்பதற்கான அனுமதி, பிரதமர் இந்திரா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டது. அதற்கான கடிதத்தை சஞ்சய் காந்தியிடம் கொடுத்தவர், அன்றைய மத்திய தொழில் துறை அமைச்சர் தினேஷ் சிங்.
பிரதமர் மகன் தொடங்கும் கம்பெனி என்றால் அதிகார வர்க்கம், காலால் இட்ட வேலையை தலையால் செய்யும் அல்லவா? இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்... என்று பலரும் அழைக்க, இறுதியில் அரியானா மாநிலத்தில் இந்த நிறுவனத்துக்கான இடம் தரப்பட்டது. கொடுத்தவர் பன்சிலால். டெல்லிக்கு சற்றே அருகில் உள்ள இடம் இது. ஆனால், அவை விவசாய நிலங்கள். அவை பலாத்காரமாகப் பறிக்கப்பட்டதாக முதல் புகார் எழுந்தது. விலை அதிகம் உள்ள இடத்தை குறைவான விலைக்கு வாங்குவதாக அடுத்தப் புகார் எழுந்தது. இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எந்தத் தாமதமும் இல்லாமல் 1971-ல் நிறுவனம் தொடங்கப்பட்டது. கார் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை வேலைகள், உள்கட்டமைப்புகள் செய்யப்படுவதற்கு முன்பே... காரை விற்பனை செய்யும் டீலர்களை நியமித்தார் சஞ்சய். நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட 75 டீலர்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முன்பணம் வாங்கப்பட்டது. முதல் லாபம் இது. ஆனாலும் நிறுவனத்தைத் தொடங்க முடியவில்லை. இந்தப் பணம் போதாது என்று நினைத்தார் சஞ்சய். தன்னுடைய கவலையை காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொன்னார். அவர்களுக்கு தெரிந்த, வசதியான ரூட்டைக் காட்டினார்கள்... வங்கிகள் நமக்கு தாராளமாக பணம் கொடுக்குமே என்று.  இரண்டு வங்கிகளிடம் கடன் கேட்டார்கள். ஏதாவது ஒன்று தந்தால் போதும் என்று நினைத்தார்கள். சஞ்சய் காந்தியின் அதிர்ஷ்டம், இரண்டு வங்கிகளுமே கடன் கொடுத்தன. 'வங்கிகளிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? எங்களிடம் கேட்டால் தரமாட்டோமா?’ என்று பல காங்கிரஸ் பிரமுகர்கள் முன்வந்தார்கள். பிரதமர் மகனின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நமக்கு வேறு வசதிகள், லாபங்கள் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து பல தொழிலதிபர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் முதலீடு செய்தார்கள். சஞ்சய் கையில் கோடிகளில் பணம் புரளத் தொடங்கியது. ஆனால், அந்தப் பணத்தை வைத்து நிறுவனம் பெரியதாக அமைக்கப்படவில்லை. அன்றைய இந்திராவின் எதிரிகள், 'கார் மெக்கானிக்கல் ஷெட்டை, கார் கம்பெனி என்று சஞ்சய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்’ என்று கிண்டல் அடித்தனர். பின்னர் 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்திலும் இப்படித்தான் சொன்னார்கள்.
இந்த நிலையில், 1972 நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய வர்த்தக கண்காட்சியில் தனது கனவு காரின் மாடலை கொண்டுவந்து நிறுத்தினார் சஞ்சய். இதனை சோதனை செய்துபார்க்க அப்போது சிலர் முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், விரைவில் கார் ஓடும் என்று சஞ்சய் நம்பிக்கையுடன் சொன்னார்.
சில மாதங்கள் கழிந்தன...
இந்திய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் கார் தரவேண்டும் என்ற முதல் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதுதான் இந்த அனுமதி. அதற்கே முதலில் வேட்டு வைத்தார் சஞ்சய்.
''6,000 ரூபாயில் கார் உற்பத்தி செய்ய முடியாது. புதிய காரின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய்'' என்று சொன்னார். 6,000 ரூபாய்க்குத்தான் கார் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு விலையை இரண்டு மடங்கு கூட்டியதைப்போல வேறு யாராவது செய்திருந்தால் அரசாங்கம் அனுமதிக்குமா? செய்தது சஞ்சய் என்பதால், யாராலும் தடைபோட முடியவில்லை.  
இந்த காரில் என்ன மாதிரியான இன்ஜின் பொருத்துவது என்ற குழப்பம் கடைசிவரை சஞ்சய்க்கு ஏற்பட்டது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று சொன்னார் அவரது நண்பர். சஞ்சய்யும் சரி என்று சொல்லிவிட்டார். வரவழைத்து பொருத்திவிட்டார்கள். ஆனால், இதுவும் அப்பட்டமான விதிமுறை மீறல்தான். அரசின் ஒப்பந்தப்படி, தயாராகும் காரில் பொருத்தப்படும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் இந்தியத் தயாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் முதல் ஷரத்து, காரின் விலை குறைவாக இருக்க வேண்டும். அதனை மீறி இரண்டு மடங்கு விலை அதிகமாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஷரத்து, இந்திய உதிரிப் பாகங்கள்தான் பொருத்த வேண்டும். அதற்கு மாறாக ஜெர்மன் பாகங்கள் பொருத்தப்பட்டன. ஆனால், பிரதமர் மகன் நிறுவனத்தில் யாராவது கேட்க முடியுமா?
சரி, விதிமுறைகள்தான் மீறப்பட்டன. காராவது தயாரிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை!
இப்போது வரப்போகிறது, அப்போது ஓடப்போகிறது என்ற செய்திதான் பரப்பப்பட்டதே தவிர, காரையே காணவில்லை. ஆனால், புதிய துணை நிறுவனங்களைத் தொடங்கி, கம்பெனி வளர்ந்துகொண்டு வருவதாகக் காட்டிக்கொண்டார். ரோடு ரோலர்கள் தயாரிப்பில் குதித்து, அதற்கான டெண்டர்களை கைப்பற்றத் தொடங்கினார் சஞ்சய். துணை நிறுவனங்கள் தொடங்கியதும்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனைக் கேள்வியாய் போட்டு மடக்கியது. பிரதமர் இந்திரா, ''என்னுடைய மகன் என்பதற்காக, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைஞரை ஊக்கப்படுத்தாமல் இருக்க முடியாது'' என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னாரே தவிர, விதிமீறல்களுக்கு விளக்கம் சொல்ல அவரால் முடியவில்லை.
ஆனால் சஞ்சய் காந்தியை, அளவுக்கு அதிகமாக இந்திரா ஊக்கப்படுத்தியதால் இந்தியா அடைந்த அவஸ்தைகள்தான் அதிகம்!

- Vikatan Article

No comments:

Post a Comment