Thursday, January 30, 2014

ஆறாம் திணை - 70

விருட்சம் ஒன்று, பல விதைகளைத் தூவிவிட்டு இயற்கையோடு கலந்துவிட்டது. ஐயா நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை!
நம் தமிழின் மூத்த நூலான திரிகடுகம், 'தாளாளன்; வேளாளன்; கோளாளன்’ ஆகிய மூவரின் பேச்சைக் கேட்டு வாழச் சொன்னது. நம்மாழ்வார் இந்த மூன்றுமானவர். என்னை, என்னைப் போல் ஏராளமானோரை இயற்கை வாழ்வியலை நேசிக்கவும் சுவாசிக்கவும் வைத்த பசுமைப் போராளி.
' 'ரசாயனமில்லா வேளாண்மை, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லாக் கல்வி’ என, எம் ஆசான் கற்றுத்தந்த இந்த மூன்றையும் மீட்டெடுப்பதுதான் இனி எங்கள் இலக்கு’ என நம்மாழ்வாரின் இறுதி ஊர்வலத்தில் இளைஞர் கூட்டம் வீரமுழக்கம் செய்தது, இந்தப் புத்தாண்டு தினத்தில் புது ஒளிக்கீற்றை விதைக்கிறது. நம்மாழ்வார் இந்த மண்ணில் வாழ்ந்த மசானா ஃபுகாகோ என்பது நிதர்சன உண்மை. இந்த உழவுத் திருநாளில் இருந்து இயற்கை விவசாய மரபுகளுக்கான அவருடைய வழிகாட்டலை முன்னத்தி ஏராகக்கொண்டு, மேலும் உத்வேகமாக நடைபோடுவதே, நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி!
பொங்கல் திருவிழா... தமிழர்களின் வாழ்வியல் பாரம்பரியத்தை நினைவுகூரும் அவசியமான பெருவிழா. Recommended Dietary Allowance  விஷயங்கள் தெரியாத காலத்திலேயே பொங்கலிலும் இட்லியிலும் அரிசியையும் பருப்பையும் எப்படி இன்றைய உணவுப் பிரமிடு சொல்லும் சரிவிகித சம அளவில் சேர்த்தார்கள்? நெல்லுக்குப் பின் பயிறுகளை விளைவித்து, மண்ணின் நைட்ரஜன் சத்தைக் குறையாது மீட்கும் தொழில்நுட்பத்தை யார் கற்றுத்தந்தார்கள்? தமிழர்கள், இயற்கையை எப்போதும் நேசித்தும், கவனித்தும், பாதுகாத்தும், பேணியதில் கிடைத்த அனுபவக்கோவை அது. பொங்கல் விழா இந்த நேசிப்பின், இயற்கையுடனான நெருக்கத்தின் மகிழ்வுப் பெருக்கம். ஆக, தோள் உயர்த்தி, முஷ்டி முறுக்கி, நெஞ்சு நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையுடன் சொல்லுங்கள்... 'தமிழர்கள் இயற்கையின் தோழர்கள்’ என்று!
வெண்பொங்கல், உணவு மட்டுமா... மருந்து! ஹெச்.ஐ.வி. நோயருக்கு, உணவில் ஊட்டம் அளித்து, எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. முன்பு ஒருமுறை அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் முட்டை கொடுக்கலாமா... முந்திரிப்பருப்பைக் கொடுக்கலாமா என யோசித்தபோது, கடைசியில் பொங்கல்தான் தேர்வானது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண்பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆதலால் சர்க்கரை நோயாளிகள், பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டைத் தீட்டாத தினையரிசியோ வரகரிசியோ பயன்படுத்துவது சிறப்பான மாற்றாக இருக்கும். பாசிப் பருப்புக்குப் பதிலாக உடைத்த தோல் நீக்காத பாசிப் பயறையும் பயன்படுத்தலாம்.
தூளாக்கி விற்பனை செய்யப்படும் மிளகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் பொடித்து வைக்கப்பட்ட மிளகும், நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட மிளகும், தன்னுள் உள்ள மருத்துவ ஆல்கலாய்டுகளையும் நறுமணச் சத்துகளையும் இழக்க ஆரம்பித்துவிடும். குறுமிளகை அவ்வப்போது தூளாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளியை நீக்க, இரைப்பு நோயில் மூச்சிரைப்பைக் குறைக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க... எனப் பல வகைகளில் உதவிடும். பொங்கலில் மஞ்சள்தூள் சேர்ப்பதும், கொஞ்சமாக நெய் சேர்ப்பதும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும். மஞ்சளின் 'குர்குமின்’ சத்தை பலரும் புற்றுநோய்க்கும் தொற்றுநோய்க்கும்தான் நல்லது என நினைக்கிறார்கள். இதயத்தின் ரத்தநாளத்தில் வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அதனால் அதில் கொழுப்புப் படியாமல் இருக்கவும், செல் அழிவைத் தடுக்கவும் மஞ்சள் பயன்தரக்கூடியது.
பொங்கலின் மறக்க முடியாத இனிப்பு... கரும்பு. சர்க்கரை நோயரைத் தவிர பிறருக்கு கரும்புச்சாறு ஊட்டம் அளிக்கும் உணவு. பித்தம் நீக்கி, காமாலையில் ஏற்படும் தடாலடி ரத்த சர்க்கரைக் குறைவுக்கு, பொட்டாசியம் முதலான கனிமம் நிறைந்த கரும்புச்சாறு ஒரு மருந்தும்கூட. கடித்துச் சுவைப்பது அல்லது உடனடியாகப் பிழிந்து சாப்பிடுவதுதான் கரும்பை ருசிக்கும் முறை. நீண்டநாட்கள் வைத்திருந்தால், அது ஆல்கஹாலாக மெள்ள மெள்ள மாறிவிடும்.
பொங்கலை ஒட்டி நாம் சுவைத்தும் பின்னாளில் மறந்தும் போய்விட்ட ஓர் உணவு, பனங்கிழங்கு. நார்த்தன்மை மிக அதிகம்கொண்ட பனங்கிழங்கை, மஞ்சளும் மிளகுத்தூளும் சேர்த்து வேகவைத்து எடுத்துச் சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்குத் தீர்வுதரும் மருந்து.
பொங்கல் விழா என்பது, உழவில் உறுதுணையாக இருந்த மண்ணுக்கும், ஏருக்கும், நீருக்கும், சூரியனுக்கும், ஓடாக உழைத்து நமக்கு இன்றும் உணவு ஊட்டும் ஏழை விவசாய வேலையாளுக்கும் நன்றி கூறும் நாள். இந்த நாட்களில் அன்பின் குறியீடாக, விருப்பமான பரிசுகளைத் தரும் 'சாண்டா கிளாஸ்’ கிறிஸ்துமஸ் தாத்தா போல், சேலம் ஈசன் சுற்றுச்சூழல் குழுக்கள், பல ஆண்டுகளாக 'உழவன் தாத்தா’வை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு அந்தத் தாத்தா கம்புஉருண்டையும் தினைமிட்டாயும் தருகிறாராம். நாம் ஏன் தமிழகம் முழுக்கவே ஐயா நம்மாழ்வார் தோற்றத்தில் இந்த உழவன் தாத்தாவை வடிவமைத்து ஊர்வலம் அழைத்துச் சென்று கொண்டாடக் கூடாது? உழவன் தாத்தா நம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உருண்டைகள், நாளைய உழவன் உலகில் மாற்றத்தை விதைக்கும் அல்லவா?
- பரிமாறுவேன்...

- Vikatan Article

No comments:

Post a Comment