Saturday, April 5, 2014

மகாத்மா முதல் மன்மோகன் வரை! - 32

ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகுதான் சோனியாவின் 'அரசியல்’ ஆரம்பமாகிறது!

இத்தாலியின் வட பகுதியில் உள்ள அர்பாஸானோவில் பிறந்தவர் சோனியா. அவருக்கு நூதியா, அனுஷ்கா என இரண்டு சகோதரிகள் உண்டு. இவரது தந்தை பெயர் ஸ்டீபானோ. ஜெர்மனை எதிர்த்து ரஷ்யாவுக்காகப் போரிட்டவர் இவர். ஜெர்மனில் சிறைக் கைதியாக இருந்தவர். இவர் தன்னுடைய மகள்களை கத்தோலிக்க பாரம்பரியப்படி வளர்த்தார். அதனால்தான் ராஜீவ் - சோனியா திருமணத்தை இவர் ஏற்கவில்லை. சோனியாவின் திருமணத்தை உறவினரான மரியோ பிரடபன்தான் நடத்தி வைத்தார். சோனியாவின் தந்தையான ஸ்டீபானோ, இந்தியாவுக்கு வரவே இல்லை. ராஜீவ் அரசியலுக்கு வந்ததும் இவருக்குப் பிடிக்கவில்லை. மகளும் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்றும் சொல்லி வந்தார். 1988-ல் இவர் இறந்தும் போனார். சோனியா எப்போதும் அவரது அம்மா பாவ்லாவின் பிள்ளையாகவே வளர்ந்தார். சோனியாவின் சகோதரி அனுஷ்கா, தங்களது சொந்த ஊரான அர்பாஸானோவுக்கு அருகில் உள்ள ஜெர்போவா டி ரிவோல்டா என்ற கட்டடத்தில் 'எட்னிகா’ என்ற கலைப் பொருள் விற்பனைக் கடையை நடத்தி வருகிறார். இதை வைத்துத்தான், 'இந்திய கலைப் பொருட்களை சோனியா குடும்பம் கடத்தல் செய்கிறது’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்லி வருகிறார். 1968 பிப்ரவரி 25-ம் தேதி ராஜீவ் - சோனியா திருமணம் நடந்தது. மொத்தமே 250 பேர்தான் அழைக்கப்பட்டனர். ராஜீவ் விமானப் பணியிலும் சோனியா வீட்டுப் பணியிலுமே ஆர்வம் கொண்டவர்களாக ஆரம்பத்தில் இருந்தார்கள்.
1975 எமர்ஜென்சி இவர்களை நாட்டில் ஏதோ நடக்கிறது என்பதைக் கவனிக்கவைத்தது. 1977-ல் இந்திராவின் தோல்வி, ஏதோ ஒரு சிக்கலில் அத்தை மாட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை உணரவைத்தது. 1980 ஜூன் மாதத்தில் சஞ்சய் மரணம் அடைந்தார். சஞ்சய் இடத்தை அவரது மனைவி மேனகா பிடிக்கத் துடித்தபோது சோனியா மனதில் பொறாமை ஏற்பட்டது.
இந்திராவின் அரசியல் வாரிசாக மேனகா வந்துவிடவும் கூடாது, அதே நேரத்தில் தன் காதல் கணவர் ராஜீவ் தன்னைவிட்டுத் தூரமாகப் போய்விடவும் கூடாது என்ற இரட்டை ஊசலாட்டம் சோனியாவுக்கு ஏற்பட்டது. மேனகாவின் செயல்பாடுகளை பார்த்து, தன் கணவர் அரசியலில் இறங்குவதில் என்ன தவறு என்று மனம் மாற ஆரம்பித்தார். இந்திரா - மேனகா மோதல் நாளுக்கு நாள் அதிகம் ஆகியது. மேனகா மீதான கோபத்தில் இந்திரா, சோனியாவை எப்போதும் தன்னோடு இருக்குமாறு பார்த்துக்கொண்டார். 1982 மார்ச் மாதம், லண்டனுக்கு இந்திரா சென்றார். சோனியாவையும் தன்னோடு அழைத்துச் சென்றார். மார்ச் 28-ம் தேதி டெல்லி திரும்பிய இந்திரா, கோபமாக வீட்டுக்குள் வந்தார். வாசலில் நின்று வணக்கம் வைத்தார் மேனகா. இந்திரா பதில் வணக்கம்கூட வைக்கவில்லை. அவரோடு ஆர்.கே.தவான், தீபேந்திர பிரம்மச்சாரி ஆகிய இருவர் இருந்தார்கள். நேராக மேனகாவின் அறைக்குப் போனார். பின்னால் ஓடிவந்தார் மேனகா. 'உடனே இந்த வீட்டை விட்டு வெளியேறு’ என்று இந்திரா உத்தரவிட்டார். 'இந்த வீட்டில் இருந்து எதையும் எடுத்துச்செல்லக் கூடாது’ என்றும் இந்திரா சொன்னார்.
இரண்டு ஆண்டுகளாக இந்திரா - மேனகா - சோனியா சண்டை நடந்தாலும் இன்று திடீரென இந்திரா இந்த முடிவெடுக்க என்ன காரணம்?
இந்திரா லண்டனில் இருந்தபோது மேனகா தன் நண்பர்களோடு சேர்ந்து சில ஆலோசனைகளைச் செய்துகொண்டு இருந்தார். இறுதியில் 'சஞ்சய் விகார் மஞ்ச்’ என்ற ஒரு அமைப்பைத் தொடங்க முடிவெடுத்தார். தனக்கு எதிராக ஒரு அரசியல் கட்சியை மேனகா தொடங்கப்போகிறார் என்ற தகவல் இந்திராவுக்கு வந்தது. உடன் சோனியா இருந்ததால் விவகாரம் பெரியதாகியது. இரண்டு எதிரிகள் ஒன்றாக இருக்கும்போது, நல்ல செய்தி வந்தாலும் அது நச்சாகப் பரிமாறப்படும் அல்லவா? அப்படித்தான் ஆனது!
''அதிகாலை ஒரு மணி வரை இந்தச் சண்டை நடந்தது. மேனகா வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி வெளியில் காத்திருந்த ஒரு டஜனுக்கும் மேலான பி.பி.ஸி., ராய்ட்டர்ஸ், ஏ.எஃப்.பி. போன்ற சர்வதேச பத்திரிகையாளர்கள் வரை பரபரபாக்கியது அவர்களுக்குத் தங்கள் வாழ்நாள் சந்தர்ப்பச் செய்தியாயிற்று. 'தலைவிரி கோலத்தில் இந்திரா கத்திக்கொண்டு இருந்தார். மெல்லிய குரலெடுத்து மேனகா தேம்பிக்கொண்டு இருந்தார். நூற்றுக்கணக்கான இந்திப் படங்களை பார்த்தவன் நான். ஆனால், இதுபோல் கண்டதில்லை. அத்தனை தத்ரூபமாக இருந்தது’ என்று இந்த நிகழ்ச்சியை முழுதாகப் படம் பிடித்த ஒரு பத்திரிகையாளர் கூறினார்'' என்று எழுதுகிறார் சோனியா காந்தியின் வரலாற்று நூல் ஆசிரியர் ரஷீத் கித்வாய்.
இதன் பிறகு சோனியாவின் மனம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 1968-ல் திருமணம் நடந்தாலும் இத்தாலிய குடியுரிமையை விலக்கிக்கொள்ளாமல் இருந்த சோனியா, 1983-ல்தான் விலக்கிக் கொண்டார். அமேதி தொகுதி எம்.பி-யாக ராஜீவ் இருந்ததால் அவரோடு போய் வருவார். இதுவரை யாரோடும் பழகாமல் இருந்த சோனியா தனது நட்பு வட்டத்தை விரித்துக்கொண்டார். இந்த நட்பு வட்டம்தான் ராஜீவ் பதவியை வீழ்த்தியது என்பதை பின்னர் பார்க்க இருக்கிறோம்.
சஞ்சய் மரணம் அடைந்தாலும் அவரது ஊழல் சுவடுகள் மறையவில்லை. அவர் தொடங்கிய கார் கம்பெனி இந்திராவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. சஞ்சய் மறைவுக்குப் பிறகு அந்த கார் கம்பெனியை எடுத்து நடத்த யாரும் இல்லை. கார் தயாரிப்பும் நடக்கவில்லை. இதனை யாருக்காவது விற்றுத் தலைமுழுகி விடலாம் என்று இந்திரா திட்டமிட்டபோது சஞ்சயின் நண்பர்களான லலித் சூரி, சரண்ஜித் சிங் ஆகிய இருவருமே வாங்கத் துடித்தார்கள். இவர்களுக்கு மாற்றிவிட்டாலும் கம்பெனியை வளர்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்ட பிரதமர் இந்திரா, கம்பெனியை அரசாங்கமே வாங்கிவிட்டால் என்ன என்று திட்டமிட்டார். மாருதி கார் நிறுவனத்தை அரசுடைமை ஆக்குவதாக 1980 அக்டோபர் 13-ம் தேதி பிரதமர் இந்திரா அறிவித்தார். அன்றைய சூழ்நிலையில் கார் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் கடன் இருந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் 500 கோடியின் இன்றைய மதிப்பு என்ன என்று பாருங்கள்.
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர், அரசாங்கத்துடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்துக்கொள்ளக் கூடாது என்று விதிமுறைகளை மீறி பிரதமரின் மகன் நடத்திய கம்பெனியை, பிரதமரே நாட்டுடமை ஆக்கிய அலங்கோலம் அன்று அரங்கேறியது. 'எத்தனையோ துறைகள் முதலீடு செய்யப் பணம் இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கும்போது இப்படி கடன் சுமையை ஏற்றிக்கொள்வது சரிதானா?’ என்று எதிர்க்கட்சிகள் கேட்டார்கள். ஆனால், எதையும் கேட்பவராக இல்லையே இந்திரா!
இதே கார் கம்பெனியை வைத்து சோனியாவும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருந்தார். கார் கம்பெனியின் இயக்குநர்களில் சோனியாவும் ஒருவர். இதன் அன்றாடச் செயல்பாடுகளில் அவர் தலையிடுவது இல்லையே தவிர, அதிகாரப்பூர்வமான இயக்குநர் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. ஜனதா அரசின்போது மாருதியின் செயல்பாடுகள் பற்றி ஆராய நீதிபதி ஏ.சி.குப்தா தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ''சோனியா ஒரு வெளிநாட்டுக்காரர். 1973-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அந்நியச்செலவாணி சட்டத்தின்படி ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி எந்த அந்நிய நாட்டவரும் எந்த இந்திய வர்த்தக நிறுவனங்களிலும் லாபம் தரும் பதவியிலோ பங்குதாரராகவோ இருக்க முடியாது'' என்று அந்த கமிஷன் பரிந்துரை செய்தது. இதன் விளைவாக அந்த இயக்குநர் பதவியை சோனியா ராஜினாமா செய்தார். ராஜீவ் பிரதமர் ஆனபோதும் இந்தக் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது. அப்போது ராஜீவ் விளக்கங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார். சஞ்சயின் கார் கம்பெனி பிரச்னையை இந்திரா முடித்துவைத்ததும் சஞ்சய் நண்பரான கமல் நாத்தின் ஊழல் விவகாரம் தலைதூக்கியது.
இன்று பெட்ரோல் விலை ஏறுகிறது. திடீரென இறங்குகிறது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை. அது ஏறும்போது பெட்ரோல் விலை ஏறும். இறங்கும்போது இறங்கும். எனவே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை விலை ஏறும்போது விலை இறங்கும்போதும் மாற்றி மாற்றிப் போடுவார்கள். ஆனால் கமல்நாத் ஒரு விலையை நிர்ணயித்து அதுதான் அந்த ஆண்டு முழுவதற்குமான விலை என்று ஒப்பந்தம் போட்டார். கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதிக விலை கொடுத்து அரசாங்கம் வாங்கித்தான் ஆக வேண்டும். கச்சா எண்ணெய் விலை அன்று பெரும் சரிவில் இருந்தது. இதனை எதிர்க்கட்சிகள் கண்டுபிடித்து நாடாளுமன்றத்தில் பிரச்னையைக் கிளப்பினார்கள். இன்று நிலக்கரி விவகாரத்தில் சொன்ன அதே பொய், அன்று முதன்முதலாகச் சொல்லப்பட்டது. 'ஃபைலைக் காணவில்லை’ என்பதுதான் அது.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. வேறு வழி தெரியவில்லை. ஃபைல் இருக்கும் இடம் கண்டு பிடிக்கப்பட்டது. பிரதமர் இந்திரா அலுவலகத்தில்தான் அந்த கோப்புகள் இருந்தன. இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அருண் ஷோரி. இதில் மாட்டியவர் சஞ்சய்யின் நண்பர் கமல் நாத்.
சஞ்சய் காந்தியின் இன்னொரு நண்பர் அந்துலே. அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். அறக்கட்டளைகள் ஆரம்பித்து எப்படி ஸ்வாகா செய்வது என்பதைக் கண்டுபிடித்து வழிகாட்டியவர் அந்துலே. முன்பு மத்திய இணை அமைச்சராக இருந்த அந்துலே மகாராஷ்டிரா முதல்வர் ஆக்கியவர் சஞ்சய் தான். முதல்வர் என்ற முறையில் சுருட்டும் லஞ்சப் பணம் அத்தனையையும் அறக்கட்டளைக்குப் போகும் வகையில் அரசின் விதிகளையே மாய்மாலம் செய்தவர் அந்துலே. அவர் ஆரம்பித்த டிரஸ்ட்டின் பெயர் 'இந்திரா பிரதிஸ்தான் அறக்கட்டளை’. கலை இலக்கிய வளர்ச்சிதான் இதன் நோக்கம். இது அந்துலே குடும்பத்தால் நடத்தப்படுவது. அந்துலே முதலமைச்சராக இருக்கும் மகாராஷ்டிரா அரசே இந்த அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தது. கூச்சமும் இல்லை, கோட்பாடும் இல்லை. ஒரு சிமென்ட் நிறுவனம், இந்த அறக்கட்டளைக்கு அதிகப்படியான பணம் கொடுத்து வருவதை அருண் ஷோரிதான் கண்டுபிடித்தார். இன்னொரு பக்கம் பார்த்தால் அந்த சிமென்ட் நிறுவனத்துக்கு அரசின் சலுகைகள் அதிகமாகப் போய்க்கொண்டும் இருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் அதனை அவர் எழுத, பிரச்னை வெளியில் வந்தது. அந்துலே மீது வழக்கு போடப்பட்டது. அந்துலே விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர் முழுவதுமே தடைப்பட்டது. 'இவை எதுவுமே உண்மையல்ல’ என்று பிரதமர் இந்திரா மறுத்தார். 1982 ஜனவரியில் மும்பை உயர் நீதிமன்றம், அந்துலேவை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதன் பிறகுதான் அவர் பதவி விலகினார். இந்திரா அவமானப்பட்டு நின்றது அந்துலே விவகாரத்தில்தான். அடுத்து தீபேந்திர பிரம்மச்சாரி சிக்கினார். இதைத் தொடர்ந்து அருண் நேரு தலை உருண்டது. இவை அனைத்தையுமே 'எதிரிகளின் சதி’ என்று நிராகரித்தார் இந்திரா.
உண்மையை உணர மறுத்த அவரது செயல்பாடுகள் அரசியல் செயல்பாடுகளையும் பாதித்தன. அதில் மிகப் பெரிய சறுக்கலான பஞ்சாப் பிரச்னை, இந்திராவின் உயிரையே காவு வாங்கியது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது இந்திராவுடன் சோனியாதான் இருந்தார். அப்போது ராஜீவ் கொல்கத்தாவில் இருந்து வந்தார்.
ராஜீவை பிரதமராக வேண்டாம் என்று தடுத்த சோனியாவே, ராஜீவ் பதவிக்கு வேட்டு வைக்க காரணமும் ஆனார்!
- Vikatan

No comments:

Post a Comment